அத்தியாயம் 29

சோலைவனத்தில் அவர்கள் தங்கியிருந்த அறையின் கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த சக்தீஸ்வரனின் மார்பில் சாய்ந்து அவனிடையை அணைத்தவாறு அமர்ந்திருந்தாள் இளவஞ்சி.

முற்பிறவியில் நடந்த நிகழ்வுகளைக் காட்சிகளாய் சக்தீஸ்வரன் தியானத்தில் கண்டிருந்ததையும் இளவஞ்சி கனவினில் கண்டிருந்ததையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

படபடவெனத் துடிக்கும் சக்தியின் இதயத்துடிப்பை கேட்டவாறு சாய்ந்திருந்தவளின் இதயமும் வேகமாக துடித்திருந்தது.

இருவருக்கும் இன்னுமே அக்காட்சிகளின் தாக்கத்திலிருந்து நிகழ்விற்கு வர இயலவில்லை.

‘எப்பேர்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் இருவரும்! அனைத்துப் பிறவியிலும் இணைப்பிரியாது காதலுடன் வாழ்வோம் என்பது எத்தகைய வரம்! காதலான வாழ்க்கை என்றால் இது தானா? எனக்காகவே சிவனை வணங்கி என் ஆயுள் கண்டத்தை நீக்கி மணமுடித்த இவளின் காதலுக்கு நான் தலைவணங்கி நின்றதில் தவறே இல்லை! எப்பேர்பட்ட வரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் இருவரும்’ மனதோடு எண்ணியவாறு மார்பில் சாய்ந்திருந்தவளின் தலையை வருடியவன் அதை அப்படியே அவளிடம் வியப்புடன் கூற,

“சிவனடியார்களுக்கு உயிரானவர் சிவபெருமான்! உங்களோட ஈசனுக்கு இணையாக என்னை நீங்க நேசிக்கிறேன் சொல்லும் போதெல்லாம் ஆழ்மனசுல நான் உணரும் அந்த இதத்தைக் கூற வார்த்தைகள் இல்லங்க. என் மேல் நீங்க வச்சிருக்கும் இந்த காதல் போதும் எனக்கு” தலையை நிமிர்த்தி அவனது முகம் பார்த்து உரைத்தாள் இளவஞ்சி.

கனிவுடன் அவளை நோக்கி நெற்றியில் முத்தமிட்டவனுக்கு, இன்னும் அவளால் அந்த ஜென்மத்தில் நடந்த காட்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை என்று புரிந்தது.

கண்களில் முத்தமிட்டவன் கன்னங்களில் இறங்கி இதழில் முற்றுகையிட்டவனாய் அவளுள் மூழ்கி அவளை முழுதாக உணர தொடங்கினான். இருவரின் மனமும் காதலில் உருகி ஓருயிராய் கலந்து இன்பத்தின் எல்லையை உணர்ந்திருக்க, மௌனம் மொழியாகி இனிமையான கூடலாய் உடல்கள் மூலமாக உணர்வுகள் பேசிக் கொண்டன. அவள் நெஞ்சமெனும் மஞ்சத்தில் தலையைச் சாய்த்தவனாய் அதீத மகிழ்வுடன் அவளை அணைத்தவாறு படுத்திருந்தான் சக்தீஸ்வரன்.

தனது நெஞ்சத்தில் சாய்ந்திருந்தவனின் தலையை அவளின் கை கோதியவாறு இருக்க, மார்பில் முத்தமிட்டு, “லவ் யூ டா தங்கப்பொண்ணு” என்றவனாய் உறக்கத்திற்குள் சென்றான். இவளும் அப்படியே உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை மூன்று மணியளவில் புரண்டு படுத்த இளவஞ்சி தனது அருகில் கணவனை அணைக்க கைகளைத் துழாவ, அவன் அங்கிருக்கும் தடயம் இல்லாது போக, கைகளைத் துழாவியவாறே முழித்துப் பார்த்தாள்.

அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்து மடிக்கணினியில் எதையோ தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தான் சக்தீஸ்வரன்.

கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவளாய், “என்னப்பா இவ்வளோ சீக்கிரமா முழிச்சி உட்கார்ந்திருக்கீங்க?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் நேத்து சீக்கிரம் தூங்கிட்டனால காலைலயே விழிப்பு வந்துடுச்சுமா! நம்ம வக்கீல் ராஜா கேஸ் போடுறது பத்தின டீடெயில்ஸை மெயில் செஞ்சிருக்காங்க. அதான் படிச்சிட்டு இருக்கேன்” என்றான்.

இவள் இரு கைகளையும் விரித்து அவனை அருகே அழைக்க, மென்னகை புரிந்தவனாய் மடிக்கணினியை மேஜை மீது வைத்து விட்டு கட்டிலில் சென்று அமர, அவன் மடி மீது தலை வைத்து இடையைக் கட்டிக் கொண்டாள் இளவஞ்சி.

“என்னடா” என்றவனாய் அவளின் தலையைக் கோத, “நொடிப்பொழுதும் உங்களை விட்டு பிரியாம கைக்குள்ளயே வச்சிக்கனும்னு தோணுதுப்பா” என்றவளாய் அவன் வயிற்றில் முகத்தினைப் புதைத்தாள்.

‘இன்னுமா பழைய ஜென்மத்தின் தாக்கத்தில் இருந்து வெளி வராமல் இருக்கிறாள்’ என்றெண்ணியவனாய் அவளின் உடலை வருடியவாறு இருந்தான்.

“சும்மா பக்கத்துல படுத்துக்கோங்களேன். உங்களைக் கட்டிக்கிட்டே அப்படியே தூங்கிடுவேன்” என்றாள் இளவஞ்சி.

உடனே கட்டிலில் சாய்ந்து படுத்தவனின் மார்பில் தலை வைத்து அணைத்தவாறு படுத்தவளைத் தானும் அணைத்தவனாய், “என்ன வஞ்சி மா! என்னாச்சு? உடம்புக்கு எதுவும் செய்யுதா” எனக் கேட்டான்.

இல்லையெனத் தலையசைத்தவள், “அந்த ஜென்மத்துல நீங்க தானே என்னை விட்டு முதல்ல இறந்தீங்க! அதுக்கு பிறகு…” எனச் சொல்ல முடியாமல் தேம்பி அழுதாள் இளவஞ்சி.

“என்னது நான் தான் முதல்ல இறந்தேனா? எனக்கு நம்ம கல்யாணம் வரைக்கும் தான் தெரிஞ்சது வஞ்சி” என்றான்.

“நாம அணு அணுவாக ரசிச்சு வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தேன் நான். நான் இல்லாமல் உங்களால் இருக்க முடியாதுனு நான் தான் ஈசன்கிட்ட வேண்டி நீங்க முதல்ல சிவபதம் அடைஞ்சிடுங்கனு சொன்னேன். ஆனால் நீங்க போன பிறகு நான் வாழ்ந்த அந்த பத்து நாள் வாழ்வு கொடும் நரகம் சக்தி” என்றவளாய் அவனை நெருக்கி எலும்பு உடையுமளவு இறுக்கி அணைத்தாள்.

அவளின் உணர்வுகளைப் புரிந்தவனாய் அவளின் உச்சியில் முத்தமிட்டு அவள் உடலில் கிடைத்த இடமெல்லாம் முத்தமிட்டு அவளது உடலின் இறுக்கத்தினைத் தளர்த்தி தன்னை அவளுக்கு உணர்த்தி அவளை இயல்புக்கு கொண்டு வர முனைந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்தவள், ‘உன்னை யாருக்கும் தர மாட்டேன்’ என்று சிறுப்பிள்ளை பொம்மையை அணைத்திருப்பது போல் இவனை அணைத்தவளாய் உறங்கிப் போனாள்.

*****

காலை ஆறு மணியளவில் முழித்தவன் அருகில் படுத்திருந்த மனைவியை நெருங்கியவனாய் அவளின் இதழை தனது இதழால் உரச, அவளின் உடல் சிலிர்த்து உணர்வுகள் கொந்தளிக்க, அவனது முகத்தைத் தள்ளி விட்டவளாய்,

“ம்ப்ச் என்னப்பா! தூங்கனும் போங்க” என்றவாறு மறுபக்கமாய் திரும்பி படுத்துக் கொண்டாள்.

‘ஹப்பாடா மை பொண்டாட்டி இஸ் பேக்! இவகிட்ட ஒரு முத்தத்துக்கே ஓராயிரம் முறை கெஞ்சனுமே! இன்னிக்கு இப்படி நம்ம கூட இழைஞ்சிட்டு கிடக்கிறாளே அதிசயமா இருக்கேன்னு நேத்து நினைச்சது எவ்ளோ சரின்னு நிரூபிக்கிறா! முத்தரசியா மாறியிருந்தவ இன்னிக்கு வஞ்சி ஆகிட்டாளோ’ என வேடிக்கையாக நினைத்துச் சிரித்துக் கொண்டவனாய் ஓய்வறைக்குச் சென்றான்.

சிறிது நேரத்தில் சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் குளித்து முடித்து தயாராகி வெளியே வர, இவர்களின் ஓட்டுனர் இன்னுமே அவரது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

தானே வண்டியை ஓட்டுவதாய் உரைத்து வண்டியை எடுக்க அவனருகில் அமர்ந்து கொண்டாள் இளவஞ்சி. எங்குச் செல்கிறோமென அவளும் கேட்கவில்லை‌. அவனும் கூறவில்லை.

சாம்பல் அருவியின் நீரோடைக்கு அருகில் வண்டியை நிறுத்தியவன் அவளின் கைப்பற்றியவனாய் அந்த நீரோடைக்கு அழைத்துச் சென்றான்.

முன் ஜென்மத்தில் திருமணத்திற்குப் பின்பு பல பொழுதுகள் முத்தரசி சிவநேசன் இருவரும் இந்த நீரோடைக்கு வந்திருக்கின்றனர். அந்நினைவுகளில் மூழ்கியவர்களாய் இளவஞ்சியும் சக்தீஸ்வரனும் நீரோடையில் கால்களை வைத்தவாறு அமர்ந்திருந்தனர். சக்தியின் தோளில் சாய்ந்திருந்தாள் இளவஞ்சி.

“சக்தி” என்றாள்.

“ஹ்ம்ம்” என்றவனாய் அவளின் கைகளுக்குள் தனது கையைக் கோர்த்துக் கொண்டான்.

“அந்த பிறவில எனக்கு அப்பாவா இருந்தவர் தான் இந்த ஜென்மத்துலயும் எனக்கு அப்பாவா இருந்தாங்க” சொல்லும் போதே அவளின் கண்கள் கலங்கின.

“என்னது? மதுரகவிராயர் தான் இப்பவும் உனக்கு அப்பாவா இருந்தாங்களா?” ஆச்சரியத்துடன் அவன் கேட்க, ஆமெனத் தலையசைத்தவளாய் நிமிர்ந்து அமர்ந்தவள், “திரும்பவும் அவர் கூட வாழ்ந்துட்டு வந்த மாதிரி இருந்துச்சு” கண்களைத் துடைத்தவாறு உரைத்தாள்.

அவளின் முதுகைத் தட்டிக் கொடுத்தவனாய், “ஆனா என்னோட அப்பா அம்மாலாம் வேற வேற ஆளா இருந்தாங்களே!” என்றவன் ஏதோ சிந்தித்தவனாய், “ஹே நிறைமதியும் சொக்கேசனும் உன்னோட ஃப்ரண்ட் ஜானகியும் அவங்களோட கணவரும் தானே” எனக் கேட்டான்.

மென்னகை புரிந்தவளாய் ஆமெனத் தலையசைத்தவள், “அந்த ஜென்மத்துல இருந்த மாதிரி தான் இப்பவும் இவளுக்கு பக்தியாலாம் சாமி கும்பிட பிடிக்காது. ஆனா அவளோட கணவருக்கு இறை பக்தி அதிகம். அவளோட நல்ல குணத்துக்காகவே அதே அன்பான கணவர் அமைஞ்சிருக்காரு” தோழியின் நினைவில் இதமான புன்னகையுடன் உரைத்தாள்.

“அப்புறம் அந்த செழியன், என்னைப் பொண்ணு பார்க்க வந்த மணிகண்டன் அவரு!” என்றதும்,

“ஆமா யாரந்த செழியன்?” எனக் கேட்டான் சக்தீஸ்வரன்.

“அந்த ஜென்மத்துல என்னோட அத்தை மகன். என்னை விரும்பி பெண் கேட்டாரு! நான் உங்களை விரும்பினதால அவரை வேண்டாம்னு சொல்லிட்டேன்! இப்பவும் அதே மாதிரி அவரோட நடக்கயிருந்த நிச்சயத்தைக் கூட உங்களை விரும்புறதா சொல்லி நிறுத்தியிருக்கேன் பாருங்க” என்று இளவஞ்சி கூறியதும்,

“அடப்பாவி அப்ப ஜென்ம ஜென்மமா என் மனைவியை ஒன் சைட் லவ் செஞ்சிட்டு இருக்கானா இவன்” சற்றுப் பொறாமை தொனியிலேயே சக்தீஸ்வரன் கூற,

“ஹா ஹா ஹா. அது லவ் இல்ல! ஜஸ்ட் அட்ராக்ஷன்” என்றவளாய் வாய்விட்டு சிரித்தாள் இவள்.

“அந்த ஜென்மத்துல எனக்கு சின்ன வயசுல தீட்சை கொடுத்த அந்த சிவனடியார் தான், இப்ப எனக்கு ஓதுவாரா இருந்து சிவனை வழிபடுறதையும் சிவனோட பதிகங்கள் பாடல்களெல்லாம் பாடுறதையும் சொல்லிக் கொடுத்திருக்காரு வஞ்சி” என்றான் சக்தீஸ்வரன்.

“ஓ அப்படியா!” ஆச்சரியமாகக் கேட்டவள், “அப்ப உங்களுக்கு வந்த முன்ஜென்ம காட்சியும் எனக்கு வந்த முன்ஜென்ம காட்சியும் அவரவரின் வாழ்வை வைத்து அதற்கேற்ப வந்திருக்கு!” என்று இளவஞ்சி கூற,

“காட்சி வேறு வேறா இருந்தாலும் நம்ம காதலும் இறை பக்தியும் ஒரே உணர்வை தான் கொடுத்திருக்கு இரண்டு பேருக்கும். எம்பெருமான் ஈசனின் அந்த சிவலிங்கத்தைக் காப்பாத்த நான் பிறக்கனும்றதும், நான் பிறக்கும் போதெல்லாம் நீயும் பிறக்கனும்றதும் விதி!” என்றான் சக்தீஸ்வரன்.

இருவரும் அங்கிருந்து கிளம்பி சாம்பல் அருவியின் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்றனர்.

முன் ஜென்மத்தில் பலமுறை இருவரும் ஒன்றாக வந்து தரிசித்துச் சென்ற சிவன் கோவில்.

மூலஸ்தானத்தில் தனியாளாய் நெடுஉயரமாய் அமர்ந்திருந்த எம்பெருமானைத் தரிசிக்க நெஞ்சம் நெகிழ்ந்தது இருவருக்கும்.

எம்பெருமானைத் தாண்டி பார்வை எங்கும் செல்லவில்லை இருவருக்கும். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமெனத் தோன்றியது.

“ஓம் நமசிவாய சிவாய நம ஓம்” என்று அவன் தனது கணீர் குரலில் உரைக்க, அவன் பின்னே இவளும் இம்மந்திரத்தை உச்சரித்தாள்.

கண்களை மூடி இருவரும் இறைவனை எண்ணியவாறு இருக்க,

காதலாகிக் கசிந்து
கண்ணீர்மல்கி
ஓதுவார்தமை
நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே.

ஞானசம்பந்தர் அருளிய இப்பதிகத்தினை உள்ளார்ந்த அன்போடு ஆழ்ந்த பக்தியுடன் பாடினான் சக்தீஸ்வரன்.

இதனை பார்த்திருந்த இளவஞ்சியின் கண்களுக்கு சக்தீஸ்வரன் சிவநேசனாய் காட்சியளித்தான்.

எத்தகைய ஆளுமையான தோரணையும் குரலும் பெற்றவர் என்னவர் என்று மனதினுள் எண்ணியவளாய் தன்னை மறந்து அவனை ரசித்துப் பார்த்திருந்தாள்.

இருவரும் இறைவனை வணங்கி விட்டு சுற்றுப் பிரகாரத்தில் சென்று அமர, சட்டென அவன் கன்னத்தில் இதழ் பதித்து விலகியவள் அவன் எதிரில் அமர்ந்தாள்.

கண்ணிமைக்கும் பொழுதில் செய்த அவளின் செயலில் அதிர்ந்து குறுஞ்சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.

“நேத்துலருந்து என் பொண்டாட்டி ரொமேன்ஸ் மூட்லயே இருக்காளே! காரணம் என்னவோ” அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்தவனாய் புருவத்தை உயர்த்தியவாறு கேட்டான்.

“உங்களை நினைச்சு நினைச்சு மனசு பூரிச்சு கிடக்குப்பா! சிவனைக் கும்பிடுறவரை கல்யாணம் செஞ்சிக்கனும்னு ஆசையோடு இருந்த எனக்கு ஒரு சிவனடியாரையே பொக்கிஷமாக இறைவன் கொடுத்திருக்காரேனு சிவநேசனோட இறை பக்தியையும் சிவ தொண்டையும் நினைக்கும் போதெல்லாம் நெஞ்சுருகி போய்டுது” என்று உணர்வுபூர்வமாக உரைத்தாள் இளவஞ்சி.

“இப்படி ஒரு பொண்ணு எனக்காக காத்திருக்கானு தான் யார் மேலயும் எனக்கு காதலோ ஆசையோ வராம, கட்டிக்கிற பொண்ணை மட்டும் தான் காதலிக்கனும்ன்ற கொள்கையை இந்த ஓதுவார் மூலமாக எனக்குள்ள புகுத்தினார் போல சிவபெருமான்” என்று சிரித்தான் சக்தீஸ்வரன்.

“எனக்குமே அது தான் தோணுச்சுப்பா! கட்டிக்கப் போறவரை தவிர வேற யாரையும் சைட்னு ரசிச்சு கூடப் பார்க்க கூடாதுனு நான் மனக்கட்டுப்பாட்டோட வாழ்ந்ததுக்கு காரணம், காலம் காலமா உங்களை மட்டுமே கணவனாக அடையனும்ற என்னோட வரத்தினால தான் போல” என்றாள்.

“ஆனா எனக்கு ஒன்னு தான் புரியல! எனக்கு மட்டும் ஏன் கனவு வந்துச்சு? உங்களுக்கு ஏன் வரலை?” எனக் கேட்டாள் இளவஞ்சி.

“சிவநேசன் முத்தரசியோட தாம்பத்திய வாழ்க்கைல, நாம எப்பவும் ஒன்னா சந்தோஷமா வாழனும்னு இறைவன்கிட்ட வேண்டிக்கிட்டது யாரு?” எனக் கேட்டான் சக்தீஸ்வரன்.

“அது நான் தான்! உங்க நினைப்பு எப்பவுமே எம்பெருமானைச் சுற்றியே தானே இருக்கும்‌. நான் அடம்பிடிச்சி நீங்க தான் வேணும்னு வேண்டிக்கிட்டு இருக்கலைனா நீங்க என்னைக் கட்டியிருப்பீங்களா? கல்யாணத்துக்குப் பிறகும் சிவபெருமானை நோக்கி தவத்துல உட்கார்ந்துட்டீங்கனா உங்களுக்கு இந்த உலகமே மறந்துடும். நம்ம குடும்பத்துக்காகனு நீங்க எப்பவுமே சிவன் கிட்ட வேண்டிக்கிட்டது இல்ல. எல்லாம் நான் தான் வேண்டிக்கிட்டு உங்களுக்கும் எனக்கும் நம்ம பிள்ளைங்களுக்கும்னு வரமா கேட்டு வாங்குறது” என்றாள்.

“தினமும் சாமியைக் கும்பிட்டாலும் நாம கேட்காம சாமி வரம் தர மாட்டாரு! நாம கேட்காம எந்தச் சாமியும் நம்ம பிரச்சனைகளைத் தீர்க்க மாட்டாங்க வஞ்சி! இதுவும் அப்படித் தான் வஞ்சி! எப்படியாவது எனக்குக் கல்யாணம் செஞ்சி வச்சிடுங்கனு கேட்காம, உனக்குனு பிறந்தவனைத் தான் கட்டிக்கனும் அவங்க தான் உனக்கு கணவனாக வரனும்னு தானே நீ கடவுள்கிட்ட வேண்டிக்கிட்ட! அதான் உனக்கு நம்ம முன் ஜென்மத்து நிகழ்வுலாம் கனவுல வந்துச்சு. நான்லாம் எனக்கு நல்ல பொண்னு மனைவியா வேணும்னு மட்டும் தான் வேண்டிக்கிட்டேன். பொண்ணு பார்க்க ஆரம்பிச்ச புதுசுல நான் கட்டிக்கிற பொண்ணு எப்படி இருப்பானு தெரிஞ்சிக்கனும்ன்ற ஆர்வத்துல தொடர்ந்து கேட்டனால அந்த கல்யாணக் காட்சியை கனவுல காமிச்சாரு. அதை சொல்லி பெயிண்ட் செஞ்சி வாங்கி வச்சேன். அதுக்கு பிறகும் இந்தப் பொண்ணை எப்படித் தேடி கண்டுபிடிக்கிறது எங்க இருப்பானுலாம் நான் வேண்டிக் கேட்டுக்கலை. வேலைல பிசி ஆகிட்டேன்‌. ஒரு வேளை அப்படி கேட்டிருந்தா எனக்கும் உனக்கு வந்த மாதிரி கனவுலாம் வந்திருக்குமா இருக்கும்” என்றான் சக்தீஸ்வரன்.

“உண்மை தான் சக்தி! கடவுளுக்குத் தெரியும் அவர் பார்த்துப்பாருனு விட்டுட்டா அவர் பார்த்துட்டு மட்டும் தான் இருப்பார். நமக்கானதை அடைய நாம தான் முயற்சி செஞ்சி போராடனும். அவர்கிட்ட கேட்கனும். அப்ப தான் அதை அடைய இருக்கும் பிரச்சனைகளைத் தடங்கலை இறைவன் காண்பிப்பாரு. நாம கேட்காம இறைவன் எதுவும் கொடுக்கிறதில்லைனு இதெல்லாம் அப்பா தான் எனக்குச் சொல்லி கொடுத்தாரு” என்றாள்.

“அப்புறம் சக்தி எனக்கு ஒரு சந்தேகம்! நேத்து அந்த பூக்காரம்மா மாதவப் பெருமாள் கோவில்ல கணவனோட ஆயுளுக்காக மனைவிங்க வேண்டிப்பாங்கனு சொன்னாங்கல! அது நம்ம ஜென்மத்துக்கு முன்னாடிலருந்தே அந்த கோவிலுக்கு அப்படி ஒரு விசேஷம் இருந்துச்சா என்ன?” எனக் கேட்டாள்.

“தெரியலையே” என்று அவன் உதட்டைப் பிதுக்க, பிதுங்கிய உதட்டைப் பிடித்து இழுத்தாள் இவள்.

கண்களை விரித்தவனாய், “கோவில்ல இருக்கோம்! என்னை ரொம்ப டெம்ப்ட் செய்ற நீ” என்று முறைத்து வைத்தான்.

அவனது முறைப்பில் சிரித்தவளாய், “அந்த கோவில் தல வரலாற்றைப் படிச்சுப் பார்ப்போம்” என்று கைபேசியை எடுத்தாள்.

“ஆத்மநல்லூர் அழகிய மாதவப் பெருமாள் கோவில் தல வரலாறு” என்று கூகுள் செய்தாள்.

அதில் வந்த கோவிலின் தல வரலாற்றைப் படித்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தன.

“சக்தி இங்க பாருங்களேன்” என்றதும் இளவஞ்சியின்‌ அருகில் அமர்ந்தவனாய் அவளின் கைபேசியில் தானும் பார்வையைப் பதித்து அந்த வரலாற்றை வாசித்தான்.

“என்ன இது வஞ்சி! நம்ம கதையை இதுல போட்டு வச்சிருக்காங்க” என்று கேட்டான்.

“அது தாங்க எனக்கும் ஆச்சரியமா இருக்கு! முத்தரசி சிவநேசனுக்காக ஈசன்கிட்ட கணவனின் ஆயுள் கண்டம் நீங்கனும் விரதமிருந்து வேண்டிக்கிட்டதில் ஈசனே மனங்குளிர்ந்து அசரீரியாக வரமளித்தார். அதனால் இங்கு கணவனின் ஆயுளுக்காக மனைவி விரதமிருந்து வேண்டிக்கிட்டா அவங்களோட வேண்டுதல் பலிக்கும்னு போட்டிருக்காங்க. அதோடு இந்த நிகழ்வு மன்னர் இளஞ்சித்திரன் அவர்களால் கல்வெட்டுல பொறிக்கப்பட்டிருக்குனும் போட்டிருக்காங்க”

இதனை சொல்ல சொல்ல இளவஞ்சியின் நெஞ்சம் அதீத ஆச்சரியத்தில் அதிகமாகத் துடித்தது.

சக்தீஸ்வரனின் கண்கள் விரிய, “அப்ப அந்த கோவில்ல அப்படியொரு விசேஷம் இருக்கிறதுக்கான காரணமே நாம தானா! ஓ மை ஈஸ்வரா!” என்று கண்களை மூடி இறைவனை வணங்கினான் சக்தீஸ்வரன்.