அத்தியாயம் 27

தனது அன்றாட வழமைப் போல் அதிகாலை ஆலயத்திற்குச் சென்று மாதவப் பெருமாளுக்கு மாலை அளித்து விட்டு சிவலிங்கத்தின் முன் வந்தமர்ந்த முத்தரசி தியானத்தில் அமர முற்பட்ட வேளையில், “யாரது முத்தரசியா?” என்றவாறு அவளருகில் வந்தமர்ந்தார் மூதாட்டி ஒருவர்.

அவளது வசிப்பிடம் இருக்கும் வீதியினில் வசிக்கும் மூதாட்டியெனத் தெரியுமாதலால் அவரிடம் இயல்பாக நலம் விசாரித்துப் பேசினாள் முத்தரசி.

“கேட்டாயா செய்தி முத்தரசி! நம் மன்னருக்குக் கடந்த ஒரு மாதமாகக் கடும் வயிற்று வலியாம்! அவர் ஆணை பிறப்பிக்க உத்தேசித்தயன்று தான் இந்த வயிறு வலி உண்டானதாம்! எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் மன்னருக்குக் கொடும் வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறதாம் இந்த வயிற்று வலி! மன்னரின் வயிற்று வலிக்கான தீர்வைக் கண்டறியவே சிவனடியாரை அழைத்து வரச்சொல்லி சிவநேசரை அனுப்பி வைத்திருக்கிறாராம் மகாராணியார்‌! அந்த அடியவர் இன்று அரண்மனைக்கு வந்துவிடுவாரெனப் பறை அடித்து அரச செய்தியாக அறிவித்திருந்தனர்” என்று அந்த மூதாட்டி பேசிக் கொண்டே போக,

“அதை தான் ஒரு வாரத்திற்கு முன்பே பறை அறிவித்தல் மூலம் தண்டோரா அடித்துச் செய்தியை அறிவித்து விட்டனரே! அதனை ஏன் நீர் இப்பொழுது தண்டோரா அடித்துக் கூறிக் கொண்டிருக்கிறாய் அம்மா! ஊர்கதை பேச ஆள் கிடைத்தால் போதுமே உனக்கு” என்றவளாய் அந்த மூதாட்டியின் மகள் வந்து அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.

‘இந்த மூதாட்டி கூறிய செய்தியைத் தானே நேற்று நிறைமதி நாட்டின் நிலவரமாகத் தன்னிடம் உரைத்தாள். தண்டோரா போட்டு அறிவித்ததைக் கேட்டு தான் அந்த அடியாரைக் காண இவள் கணவருடன் வந்திருக்கிறாளா? தண்டோரா செய்தியைக் கூடவா அறியாமல் என்னவரின் நினைவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன் நான்!’ பெருமூச்சு அவளிடம்.

ஆனால் நேற்று புரியாது விடுபட்ட ஒரு விடயம் இன்று புரிந்தது முத்தரசிக்கு‌.

‘தனது தந்தையும் சுவாமியும் (சிவநேசனும்) தூர தேசப் பயணத்தை தொடங்கிய அன்று மன்னரின் உடல் நலமாக தான் இருந்திருக்கிறது. மறுநாள் மன்னர் ஆணைப் பிறப்பிக்க போன சமயத்தில் தான் அவருக்கு வயிற்று வலி வந்திருக்கிறது. வயிற்று வலி வருவதற்கு முன்பே எப்படி மகாராணியார் இதற்கான தீர்வைத் தேடி இவர்களை அனுப்பி வைத்தார்? ஆக மன்னருக்கு ஏற்பட்ட இந்த வயிற்று வலிக்குப் பின் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ அல்லது இது ஈசனின் திருவிளையாடலோ!’ என்று சில நிமிடங்கள் யோசித்தாள்.

மன்னரின் இந்த வயிற்று வலி செய்தி தான் ஓலையில் இருந்தது. இல்லாத வயிற்று வலியைக் கூறி எதற்கு சிவனடியாரை வர வைக்க வேண்டுமென எண்ணியே ஓலையைப் படித்து விட்டு அதிர்ந்து பார்த்தான் சிவநேசன்‌. இந்த சமய மாற்று ஆணையைத் தடுத்து நிறுத்த வர வேண்டும் என்று கூறி அடியாரை பகிரங்கமாக அழைத்து வர இயலாத காரணத்தினால் மகாராணியாரின் கனவில், இச்செய்தியை உரைத்து அந்த சிவனடியாரை அழைத்து வா என்று ஈசன் அளித்த உபாயத்தைப் பற்றிக் கொண்டு பின்பற்றினார் மகாராணியார்‌. அதன் மூலம் தனது திருவிளையாடலை அரங்கேற்றினார் சிவபெருமான்.

‘எது எப்படியோ! இந்த வயிற்று வலி, மன்னரின் ஆணையிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்ட முத்தரசி, அரியும் அரனுமாக இணைந்து இந்நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென வேண்டிக் கொண்டாள்.

****

அன்றைய தினம் பின் மாலை பொழுதில் சிவநேசன் மற்றும் மதுரகவிராயருடன் அரண்மனையை அடைந்திருந்தார் அச்சிவனடியார்.

காவி உடை உடுத்தி ருத்ராட்சம் அணிந்து வயதான முதியவராக ஓர் அடியார் வருவாரென எண்ணி அனைவரும் அரண்மனை வாயிலில் காத்திருக்க, முருகப்பெருமானின் வடிவாய் அழகனாய் வந்து நின்றார் அச்சிவனடியார்.

அனைவரின் கண்களும் அதிசயமாய் அவரைப் பார்த்திருந்தன.

‘எம் கனவில் ஈசன், சிவனடியாரின் பெயரை சிவஞான சந்திரர் என்று விளித்ததற்கேற்றவாறு ஞான ஒளி பொருந்தியவராய் இருக்கிறாரே இந்த அடியார்’ என்று மனதோடு எண்ணியவாறு புரவியில் வந்து நின்ற அந்த அடியவரைப் பார்த்திருந்தார் மகாராணியார்.

சரிகைக் கரை போடப்பட்டுள்ள வெண்பட்டு உடுத்தி, காதுகளிலே வைரக் கடுக்கன்கள் அணிந்து, மணமிக்க சந்தனக் கலவையை மார்பிலே பூசி, அத்திருமார்பில் ஒளிமிகுந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலன்களோடு, நறுமலர் மாலைகளையும் அணிந்திருந்தார் எம்பெருமான் ஈசனால் சந்திரர் என்று அழைக்கப்பட்ட அச்சிவனடியார்.

சந்திரரை எல்லையிலேயே தூப, தீப பாலிகை ஏந்தி வரவேற்றனர் அந்நாட்டு மக்கள். வழி எங்கும் நறுமணப் பொடியையும், நறுமலரையும் வீசி, பன்னீர் தெளித்து வரவேற்றனர். வானத்துப் பேரொளி வையத்தில் வந்து இறங்கினாற் போல் ஒளிமயத்தோடு புரவி மீது வந்து கொண்டிருந்த சந்திரர் அரண்மனைக்குள் எழுந்தருளினார்.

மகாராணியாருடன் பேசியவாறே மன்னரின் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார் சிவஞான சந்திரர்.

மேனியிலே பிரகாசமும், முகத்திலே தெய்வ ஒளியும் தோன்ற அறைக்குள்ளே பிரவேசித்த சந்திரரைப் படுக்கையில் இருந்து பார்த்த மன்னர் இளஞ்சித்திரனுக்கு எம்பெருமான் ஈசனே நாராயண பரம்பொருளாய் உருவெடுத்து வந்தது போன்ற தோற்றத்தை அளித்தது. அவரின் உடலெல்லாம் புல்லரித்து, கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

இத்தனை நாட்களாகக் கொடும் வலியினைத் தாங்க இயலாதவராய் படுக்கையை விட்டு எழுந்திராத மன்னருக்கு, சந்திரரின் ஒளி பொருந்திய முகம், தெய்வத்தை நேரிலே கண்டது போன்ற ஆனந்தத்தை அவரின் மனதினுள் விதைத்துப் பூரிப்பை அளிக்க, “சங்கர நாராயணா” என்றவராய் படுக்கையை விட்டெழுந்து சந்திரரின் பாதத்தில் அடிபணிந்தார் அரசர்.

“எம்மை மன்னித்து விடுங்கள்!” அரசரின் கண்ணீர் அவரின் பாதத்தினில் விழுந்த நொடி, “எழும்புங்கள் அரசே! என்ன காரியம் செய்கிறீர்கள்?” என்றவாறு அரசரைத் தூக்கி படுக்கையில் அமர வைத்தார் சந்திரர். அரசரின் கண்ணீரைக் கண்டு மகாராணியாரின் கண்களும் குளமாகின.

“நாம் அனைவருமே இறைவனின் அடியவர்கள் தாம்! அவரிட்டப் பணியைச் செய்ய இப்பூலோகத்தில் பிறப்பெடுத்தவர்கள்! நாம் பணிய வேண்டியது தாய் தந்தையையும் முக்கண்ணனான ஈசனையுமே அன்றி மனிதனை என்றுமே அடி பணிய கூடாது அரசே” என்றவாறு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் சந்திரர்.

அவரின் அருகில் கைகளைக் கட்டியவாறு பணிந்து நின்றான் சிவநேசன். சிவஞான சந்திரரைக் கண்ட நொடியிலிருந்து பூரிப்புடன் அவருக்கான பணிவிடைகளைச் செய்து கொண்டிருக்கிறான் சிவநேசன்.

மகாராணியாரும் மதுரகவிராயரும் இருக்கையில் அமர்ந்திருக்க, மந்திரிகளும் அமைச்சர்களும் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

“எத்தகைய சக்தி வாய்ந்த பலம் பொருந்திய கருணை மிக்க இறைவனை விடுத்து வேற்று சமயத்திற்கு மாறியிருந்திருக்கிறேன்! மூடன் நான் ஐயனே! இத்தனை நாட்களாக என்னை வாட்டி வதைத்த கடும் வயிற்று வலி, சமண சாக்கிய சமய துறவிகள் எவராலும் தீர்க்க முடியாத இந்த கடும் வயிற்று வலி தங்களின் கருணைப் பொருந்திய ஒளிமிக்க இந்த முகத்தைக் கண்ட நொடியினில் தீர்ந்து போனது ஐயனே! எத்தகைய தவறான ஆணையைப் பிறப்பிக்க இருந்தேன் நான்! மன்னவன் என்பவன் நாட்டு மக்களுக்குச் சரியான பாதையைக் காட்டுபவனாகத் தானே இருக்க வேண்டும்! என் அரச கடமையிலிருந்து தவற இருந்தேனே நான்” என்று கதறி அழுதார் அரசர்.

“அமைதி கொள்ளுங்கள் அரசே! இன்னும் எதுவும் கை மீறி போய் விட வில்லை. இத்தகைய சிவபக்தையான மணவாட்டியைப் பெற்ற தாங்கள் என்றும் வாழ்வில் தவறிவிட முடியாது! அரசியாரின் தெய்வப் பக்தியும் கற்பு நெறியும் தங்களை என்றும் தவறு செய்ய விடாது காக்கும் அரசே! ஆயினும் நாட்டின் மன்னவர் பிறரின் மூளை சலவைக்கு ஒத்துழைத்துச் சென்றால் இந்த நாடே அடிமையாகி விடாதா! இனியாவது சூதனமாக நடந்து கொள்ளுங்கள்” என்றவாறு மன்னரின் நெற்றியில் ஈசனை வணங்கி திருநீறை பூசி ஆசி வழங்கியவராய் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார் சந்திரர்.

காலம் காலமாய் நம் முன்னோர்களால் வழிபடப்பட்டு தழைத்தோங்கி நிற்கும் சைவ வைணவ சமயத்தை அழித்து, தனது சமயத்தை வளர்க்க, தாங்கள் சார்ந்து வாழ்ந்திருந்த சமயத்திலிருந்து மக்களை மாற்று சமயத்துக்கு மூளை சலவை செய்து மாற்ற முனைந்த சாக்கிய சமண துறவிகளுக்குத் தண்டனை அளிக்க முடிவு செய்தார் அரசர்.

எச்சமயத்தவரானாலும் துறவிகளைக் கொல்வது பாவமென்ற தர்மத்தைக் கடைப்பிடிக்கும் அரசர், தனக்குத் தவறான போதனைச் செய்த சாக்கிய சமண சமய குருமார்களையும் அடியார்களையும் இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஆணையிட்டு தண்டித்தார்.

மேலும் ஒரு வாரம் தங்கியிருந்து நாட்டு மக்களுக்கு அருள் புரிந்து விட்டு விடைபெறுமாறு மகாராணியார் சந்திரரை வேண்டி பணிக்க, அடியாரான தாம் அரண்மனையில் வசிப்பதில்லை என்றார் சந்திரர்.

ஆத்மநல்லூரின் அழகிய மாதவப் பெருமாள் கோவிலில் அடியவர் ஒரு வாரம் தங்கியிருந்து மக்களுக்கு அருளாசி வழங்க வேண்டுமென மகாராணியார் சார்பில் சிவநேசன் வேண்டிக் கேட்டுக் கொள்ள சம்மதித்தார் சந்திரர்.

இந்நிகழ்வு தண்டோரா மூலம் நாடெங்கிலும் தெரிவிக்கப்பட, மன்னர் உடல் நலம் பெற்று நாட்டின் நிலைமை சீரானதில் மக்கள் அனைவரும் குதூகலித்து மகிழ்ந்தனர்.

இச்செய்தி ஆத்மநல்லூரில் அறிவிக்கப்பட்ட சமயம் முத்தரசியின் இல்லத்தில் இருந்தாள் நிறைமதி.

தனது சுவாமியான சிவநேசனையும் தந்தையையும் காணும் மகிழ்வில் முத்தரசி திளைத்திருக்க, “அரசி! சிவஞான சந்திரர் பெருமானரை ஆத்மநல்லூரிலேயே நாம் தரிசிக்கலாம்” என்று கூறி மகிழ்ந்தாள் நிறைமதி.

அவளின் மகிழ்வைக் கண்டு சிரித்தவளாய், “வைணவரான உனக்கு எப்படி சைவ சிவனடியாரான சந்திரரைப் பற்றி தெரிந்தது? நீ இவ்வாறு பூரிக்குமளவு அவர் செய்த செயலென்ன?” எனக் கேட்டாள் முத்தரசி.

“என் மணவாளர் சைவர் என்பதை மறந்தாயா முத்தரசி! உன்னவரை போன்றே அவரும் தீவிர சிவபக்தர்! எம்பெருமான் ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, ஈசனுக்கு தோழனாக வாழ்ந்து வரும் சந்திரரை காண்பதே தனது வாழ்நாள் லட்சியமாக வாழ்ந்து வருபவர் என் கணவர்! சிவஞான சந்திரரின் பெயரில் பல தர்ம காரியங்களையும் செய்து வருகிறார் என் மன்னவர்” என்றாள் நிறைமதி.

“என்னது எம்பெருமான் ஈசனுக்கு நண்பனாக இருக்கிறாரா? அதென்ன தடுத்தாட்கொள்ளப்படுதல்?” என வினவினாள் முத்தரசி.

“ஆமாம் அரசி! இங்கு சிவனடியாராக இருக்கும் அனைவருமே அவரவரின் ஆசைக்கிணங்க எம்பெருமான் மீது பற்றுக் கொண்டு சிவனடியாராக மாறியவர்கள்! ஆனால் சந்திரர் தனது அடியவராக வேண்டும் என சிவபெருமானே விருப்பப்பட்டு, முதியோராக உருமாறி நேரில் சென்று இவரின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி தன்னைப் புகழ்ந்து பாடும் ஞானமளித்துத் திருவருள் புரிந்தாராம். அதனை தான் சைவத்தில் தடுத்தாட்கொள்ளுதல் என்கின்றனர்” என்றாள் நிறைமதி.

“என்னே ஓர் அதிசயம்? நாம் வாழும் இக்காலத்திலேயே இத்தகைய அதிசயம் நிகழ்ந்ததா?” ஆச்சரியத்தில் கண்கள் விரிய முத்தரசி கேட்க,

“இதுக்கே வியந்து பார்க்கிறாயே! இவருக்காக இறைவன் இறங்கி வந்து செய்த செயல்கள் எண்ணற்றவை! ஈசனின் மனங்கவர்ந்த பக்தர் இவர்! முன்னர் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி தடுத்தாட்கொண்டார் அல்லவா பின்னர் சந்திர பெருமானார் மனங்கவர்ந்த பெண்ணைத் தனக்கு மணமுடித்து வைக்க கோரி ஈசனிடம் வேண்ட, ஈசனே அப்பெண்ணின் தந்தையாரின் கனவில் இவருக்காகப் பெண் கேட்டுச் சென்று இவரின் தோழனாய் நின்று அத்திருமணத்தை நடத்தி வைத்தாராம்” என்றாள் நிறைமதி.

உள்ளம் நெகிழ நிறைமதி கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்தரசியின் கரங்கள் தம்மையும் மீறி தானாக உயர்ந்து வணங்க, “இத்தகைய இறையருள் பெற்ற அடியாரைக் காண்பதே இறைவனைக் காண்பதற்கு சமமாகும் மதி!” என்று உள்ளப்பெருக்குடன் மொழிந்தாள்.

“இவரின் வருகை உனக்கு நல்வாழ்வை அமைத்து தருமென்று தோன்றுகிறது அரசி” தோழியின் கரத்தினைப் பற்றிக் கொண்டவளாய் உரைத்தாள் நிறைமதி.

******

மறுநாள் புலராத காலை பொழுதினில் வீட்டினுள் தந்தையைக் கண்டு கண்ணீர் பொழிய வரவேற்ற முத்தரசி அவரின் பயணத்தைப் பற்றியும் அரண்மனையின் நிகழ்வினையும் கேட்டறிந்து கொண்டாள்.

“சந்திரருக்கு அமுது படைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறோமம்மா! அடுத்து வரும் ஏழு நாட்களும் அடியாருக்கேற்ற வகையில் சமைத்து ஆலயத்திற்கு உணவை எடுத்து வா மகளே” என்றுவிட்டு அவசரமாக ஆலயத்திற்குக் கிளம்பிச் சென்றார் மதுரகவிராயர்.

இதனை கேள்விப்பட்ட நிறைமதி சமையலில் முத்தரசிக்கு உதவி புரிவதாக உரைத்தாள்.

“கரையோரம் இருக்கும் ஊர் ஆதலால் அனைத்து வகையான தொழில் செய்யும் மக்களும் இங்கே இருக்கின்றனர் ஐயனே” வைகறைப் பொழுதில் ஆற்றங்கரையில் குளித்து முடித்து ஆத்மநல்லூரைப் பற்றி சந்திரரிடம் கூறியவாறு நடந்து வந்து கொண்டிருந்தான் சிவநேசன்.

அச்சமயம் அவன்‌ முன்னே எதிர்ப்பட்டாள் முத்தரசி.

இருவரது கண்களும் சந்திக்க, உள்ளங்கள் உறவாட துடித்திட இருவரும் மெய் மறந்து ஒருவரையொருவர் நேருக்கு நேர் நோக்கியவாறு நின்று விட்டனர். முத்தரசியின் கண்கள் பிரிவின் வலியை கண்ணீரால் உணர்த்தின.

நெஞ்சில் காதல் கசிந்துருக, தளிர்கால்கள் தளிர் நடை பயில, ஏக்கமான பார்வையுடன் இருவரும் மற்றவரைப் பார்வையில் தழுவிய வண்ணம் மெல்ல நடையிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

இவர்களின் பார்வையின் பொருளை உணர்ந்தவராய் மென்னகை புரிந்தார் சிவஞான சந்திர பெருமானார்.