எங்கிலும் பனிப்புகையாகச் சூழ்ந்திருக்க, புகை விலகி வண்ண மலர்கள் நிறைந்த தோட்டத்தில் சிவநேசனும் முத்தரசியும் இணைந்து நின்று சிரித்துப் பேசியவாறு மலர்களைப் பறிக்கும் காட்சி அவனது மனக்கண்ணில் ஊர்வலமாகப் போக, சட்டெனத் தியானத்தில் இருந்து விழித்தவனின் முன்பு அமர்ந்திருந்த முத்தரசியைக் கண்டு அதிர்ந்து போனான் சிவநேசன்.
‘இக்காட்சியின் மூலம் ஈசன் குறிப்புணர்த்தும் செய்தி யாது?’ மனதோடு கேட்டுக் கொண்டவனாய் அவளையே பார்த்திருக்க, தன்னை யாரோ உற்று நோக்கும் உணர்வில் கண் விழித்த முத்தரசி, சிவநேசன் கண் விழித்திருப்பதைக் கண்டவளாய்,
“தங்களுக்காக தான் காத்திருக்கிறேன் ஐயனே” என்றாள்.
“எனக்காகவா? காரணம் யாது?” சுருங்கிய புருவங்களுடன் கேள்வியாய் அவன் வினவ,
“யாவுமாகிய ஈசனிடத்தில் மன்னிப்பு வேண்டிய பிறகு நான் யார் தங்களை மன்னிக்க?” என்றான் சிவநேசன்.
“ஆனால் ஈசன் என் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாரா என்று தெரியவில்லையே! தாங்கள் தங்களின் திருவாயினால் மன்னித்து விட்டதாக கூறினால் என் மனம் அமைதிக் கொள்ளும் ஐயனே” என்றாள்.
“தாயுமானவன் எம் ஈசன்! அறியா பிழைக்கு எடுத்துரைத்துப் புத்தி புகட்டுவானே தவிர தண்டிக்க மாட்டான்! தாங்கள் அமைதிக் கொள்ளுங்கள்” என்றவாறு அவன் எழுந்து நிற்க,
இவளும் எழுந்தவளாய் அவன் பாதம் பணிய போக, “தேவி” என்று சற்றுச் சத்தமாய் உரைத்துப் பாதங்களைப் பின்னோக்கி இழுத்தப் பின்பே, தான் கூறிய சொல்லை உணர்ந்து, “சிவ சிவா” என்று கண்களை மூடிக் கொண்டான் சிவநேசன்.
சிவனடியாராய் சங்கல்பம் செய்து கொண்ட நாளிலிருந்து பெண்கள் அனைவரையும் தாயே என்றே விளிப்பவன் முதல் முறையாக ஒரு பெண்ணை தேவி என்று தன்னையும் மீறி அழைத்ததில் திடுக்கிட்டுப் போனான்.
‘என்னையும் மீறி ஏன் தான் இப்பெண்ணை தேவி என்று அழைத்தோம்? ஈசனே இது உமது திருவிளையாடல் எனில் இதன் நோக்கம் யாது?’ மனதோடு சிவனிடம் பேசியவனாய் கண்களைத் திறக்க, தன் முன்னே கைகளைக் கூப்பியவாறு மன்னிப்பை யாசித்து நிற்பவளைக் கண்டவன் இதனை மேலும் தொடர விருப்பமில்லாது, “மன்னித்தோம்” என்றவனாய் அங்கிருந்து நகர்ந்தான்.
நிம்மதியுற்றவளாய் முத்தரசி சிவலிங்கத்தின் முன் அப்படியே அமர்ந்து விட, அந்நேரம் அங்கு வந்து நின்றாள் நிறைமதி.
“இதென்ன அதிசயம்? ஈசனிருக்கும் திசை நோக்கி கூட செல்லாதவள் அவரின் சன்னதியில் அமர்ந்திருக்கிறாளே” ஆச்சரியமாக நிறைமதி கேட்க,
அவளருகில் அமர்ந்தவளாய், “நல்ல காரியம் செய்தாய் அரசி! அவர் எவ்வாறு சிவனடியாரானார் என்ற கதையை நேற்று எனது தாய் கூறக் கேட்டு புல்லரித்துப் போனது எனக்கு” என்றாள் நிறைமதி.
“அப்படியா? அப்படி என்ன வியக்க வைக்கும் கதை அது?” எனக் கேட்டாள் முத்தரசி.
“உனது தந்தையார் கணித்துக் கூறயதின் பேரில் சிவநேசரை திருவளர்ச்சோலை எனும் ஊரில் அவரது பெரிய தந்தையிடம் அதாவது சிவநேசரின் தந்தையின் தமையனிடம் வளர்க்கக் கூறி விட்டு வந்தார்களாம் அவரது பெற்றோர்!
ஒரு நாள் சித்திரைத் திருவிழா அன்று திருவளர்ச்சோலைக் காவிரிக் கரையில் கூட்டத்தின் இடையில் சிறுவனாய் நின்று கொண்டிருந்த சிவநேசரை உற்று நோக்கியவாறு இருந்தாராம் ஓர் அடியவர்.
“ஈசனின் கட்டளைப்படியே இங்கு வந்திருக்கிறேன். அவரின் விருப்பப்படியே உனக்கு தீட்சை தருவதோடு பஞ்சாட்சர உபதேசமும் செய்து வைக்கப் போகிறேன்” என்றாராம் அந்த அடியவர்.
அவ்விதம் சிவநேசரிடம் கூறிய அந்த அடியவரின் கனவில் தோன்றிய ஈசன், “திருவளர்ச்சோலைச் சென்று, அங்கே ஆலயத்தில் பெரிய தந்தையுடனும் அடியார்களுடனும் சிறுவன் ஒருவன் இருப்பான். அவனுக்குத் தீட்சையும் பஞ்சாட்சர உபதேசமும் செய்து வா” என்று அருளியிருந்தாராம்.
“அவனுக்குப் பூஜை முறைகளைச் சொல்லிக் கொடுத்து, நாற்பத்தெட்டு நாட்களாவது அவனுடன் இரு!” என்றும் ஆணையிட்டிருந்தாராம்.
சிவன் ஆணையை நிறைவேற்றவே அடியார் வந்திருந்து, சிறுவனைத் திருக்குளத்தில் நீராடச் செய்து, விபூதி, ருத்திராட்சங்கள் அணியச் செய்து, கோயிலுக்குள் சிவ சந்நிதியில் பஞ்சாட்சர மந்திரம் உபதேசித்தாராம். அச்சமயம் சிந்தை நிறைந்திருக்கும் சிவனைப் பாடி வழிபடும் ஞானத்தை சிவநேசருக்கு ஈசனே அசரீரியாக ஒலித்து அருளினாராம்.
சிவநேசரின் ஞானப் பயணம் தொடங்கியது இப்படித்தான். அரன் அருளால் அவர் வாக்கிலிருந்து அற்புதமான பாடல்கள் பலவும் வெளிவந்தனவாம்”
நெஞ்சம் நெகிழ இக்கதையினைக் கூறி முடித்த நிறைமதி, “மெய்சிலிர்த்து போனேனடி அரசி! இத்தகைய பேறு பெற்ற அடியவரைத் தரிசிக்கவே நாம் என்ன பேறு பெற்றிருக்க வேண்டுமென மனம் நெகிழ்ந்து போனேனடி” என்றாள்.
இதனை சிலிர்ப்புடன் கேட்டிருந்த முத்தரசியின் மனமோ, ‘இத்தகைய அடியவரை மணாளனாய் அடைய நான் என்ன பேறு பெற்றிருக்க வேண்டும்’ அதன் போக்கில் தன்னிச்சையாக எண்ணியவாறு இருக்க, திடுக்கிட்டுப் போனாள் முத்தரசி.
‘நாராயணா! என்ன அபத்தமான எண்ணம் இது’ மனதோடு எண்ணியவளாய் நிறைமதியைப் பார்த்திருந்தாள்.
சிவலிங்கத்தின் மீதிருந்த மாலையைக் கண்ட நிறைமதி, “நீ சூட்டிய மாலையா இது அரசி? மிக அழகாக இருக்கிறது” என்றாள்.
அவளின் சொல்லில் களைந்தவளாய், “ஆம் மதி! இனி தினமும் அரியுடன் சேர்ந்து அரனுக்கும் மாலை கோர்க்க உறுதி பூண்டிருக்கிறேன்” என்றாள்.
“உத்தமமான முடிவு அரசி” என்றாள் நிறைமதி.
இருவரும் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு அவரவரின் இல்லத்திற்குச் சென்றனர்.
*****
முத்தரசி தனது இல்லத்தினுள் நுழையும் பொழுது, வீட்டிலிருந்து வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர் சிவநேசரின் பெற்றோரும் இவளின் தந்தையும்.
எதிர்ப்பட்டவர்களைக் கண்டதும், “வாருங்கள் ஐயா! ஆசிர்வதிக்க வேண்டும்” என்று திருநீலகண்ட ஐயாவின் பாதத்திலும் அவரது மனையாளின் பாதத்திலும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றாள் முத்தரசி.
அனைவரின் முகங்களும் வேதனையில் கசங்கியிருப்பதைக் கண்டவள் பொதுவான நலவிசாரிப்புகளைக் கேட்டு உபசரித்து அங்கிருந்து நகர்ந்தாள்.
அவர்களை வழியனுப்பி விட்டு திண்ணையில் அமர்ந்த மதுரகவிராயருக்கு அருந்த நீரளித்தவள்,
“வந்திருந்தவர்களின் முகத்தினில் வாட்டம் தெரிந்ததே? சிவநேசரின் பெற்றோர் தங்களைக் காண வந்ததன் நோக்கம் என்ன தந்தையே?” என வினவினாள்.
“சிவநேசனின் திருமணத்தைக் குறித்துக் கணித்திடவே வந்திருந்தனர் இருவரும். ஆனால்..” என்று தயங்கி அவர் நிறுத்த,
அவரின் தயக்கத்தில் பயம் கொண்டவளாய், “ஆனால் என்னவாயிற்று தந்தையே! சிவனடியாராக இருப்பினும் மணம் முடிப்பது இயல்பு தானே!” எனக் கேட்டாள்.
ஏன் தனது மனம் இவ்வாறு வினோதமாக உணர்கிறது என்று புரியாத உணர்வில் அவரிடம் கேட்டிருந்தாள்.
“ஆம் இல்லாளுடன் இணைந்து சிவத்தொண்டு புரிந்தால் அவர்களின் தொண்டு பூரணத்துவம் பெறும். இல்லற தர்மத்துடன் இக பர சுகங்களை அனுபவித்து இன்புற்று வாழ்ந்து இறைவனை ஆழ்மன பக்தியுடன் வணங்கி அடியவர்களுக்கு தொண்டு புரியும் பொழுது தான் அத்தொண்டுக்கான பலனை முழுதாக அடைய முடியும். ஆனால் சிவநேசனின் தலையெழுத்து வேறு விதமாக இருக்கிறதேயம்மா” வருத்தக் குரலில் உரைத்தார் மதுரகவிராயர்.
“ஏன் அவருக்குத் திருமணம் செய்யும் கிரகநிலை இல்லையா?” என வினவினாள்.
“மணம் செய்து கொள்ள ஆயுள் இருக்க வேண்டுமே அம்மா” என்றவர் சொன்னதும்,
“தந்தையே” என பதறியே விட்டாள் முத்தரசி.
“சிவநேசனுக்கு ஆயுள் கண்டம் உள்ளது. திருமணம் செய்தால் அவனது உயிர் பறிப்போகும் கண்டம் உள்ளதம்மா! அவன் ஆயுளுக்கும் ஈசனின் அடியவராக தான் இருக்க வேண்டும்” என்றவர் பெருமூச்செறிந்தவராய்,
“நான் அரண்மனைக்குச் சென்று வருகிறேன் மகளே! மதியம் உணவு உண்ண வந்திடுவேன்” என்றவராய் கிளம்பிச் சென்றார்.
தந்தையின் சொல்லில் உள்ளம் நடுங்க நின்றிருந்தவள், தனது மன உணர்வுகளைத் தந்தையிடம் வெளி காட்டாதவளாய் தலையசைத்து அவரை வழியனுப்பி விட்டு திண்ணையில் அப்படியே அமர்ந்து விட்டாள்.
‘ஏன் தனது மனம் இவ்வாறு பதைபதைக்கிறது! அவர் திருமணம் செய்யாவிட்டால் எனக்கு என்ன வந்தது? அவரின் விதி அது!’ தனக்குத் தானே கூறிக் கொண்டு தன்னை இயல்பாக்க அவள் பலவாறு முயற்சி செய்த பொழுதும் அன்றைய நாள் முழுவதும் எதையோ பறிகொடுத்த நிலையில் மனம் பரிதவிப்பதைத் தடுக்கவே இயலவில்லை அவளால்.
மனத்தின் போராட்டத்தினைத் தாங்க இயலாதவளாய் மாலை அழகிய மாதவப் பெருமாளை நோக்கிச் சென்றவள் அவரின் பாதமே தஞ்சமென மூலஸ்தானத்தின் முன்பு கண்ணீர் மல்க அமர்ந்து விட்டாள்.
‘பரிதவிக்கும் என் மனத்திற்கு அமைதியைத் தாருங்கள் மாதவா’ என்று நாராயண மந்திரத்தை விடாது உச்சரித்தவளின் காதினில்,
‘அமைதிக் கொள் முத்தரசி! சிவநேசனே உனது மணாளனாவான்! உன்னை மணந்தால் மட்டுமே அவனது ஆயுள் கண்டம் நீங்கப்பெறும்! ஆதர்ச தம்பதிகளாய் நீடூழி வாழ்வீர்கள் இருவரும்’ என்று காதினுள் கேட்ட அசரீரி குரலில் அதிர்ந்து முழித்தாள் முத்தரசி. அச்சமயம் அர்ச்சகர் அவளின் கரத்தினில் பூவை வழங்கிவிட்டு பெருமாளுக்கு பூஜை செய்ய தொடங்கினார்.
‘அமைதிக் கொள்’ என்ற பெருமாளின் கூற்றில் மேலும் குழம்பிப் போன முத்தரசியின் மனதில் பரிதவிப்பு நீங்கி, மனம் அமைதியாகி இருந்ததை விந்தையாக உணர்ந்தாள்.
‘சிவநேசனின் ஆயுள் கண்டத்தை என்னால் சரி செய்ய இயலும் என்பதனால் வந்த அமைதி உணர்வா இது? அவருக்காக என் மனம் ஏன் இத்தனை வினோதமாக செயல்படுகிறது? மாதவன் கூறியது போல் நாங்கள் இணைய வேண்டும் என்பது தான் விதியோ?’
சிந்தித்தவாறே இல்லத்தை நோக்கி நடந்து வந்திருந்தவள், ‘நடப்பது அனைத்தும் நாராயணன் செயல்’ என மனத்தினைத் திடப்படுத்தியவளாய், இதனை மனதினோரம் ஒதுக்கி வைத்து விட்டு தனது அன்றாட பணியில் ஈடுபடலானாள்.
வழமைப்போல் மறுநாள் மாதவப் பெருமாளுக்கு மாலை சாற்றி விட்டு சிவலிங்கத்திற்கும் மாலை அணிவித்து தியானத்தில் இருந்த சிவநேசன் முன்பு அமர்ந்தாள்.
கண்கள் அவன் மீதே இருக்க, காதினுள் முந்தைய நாள் கேட்ட அசரீரி குரலே ரீங்காரமிட்டது.
‘இவர் என்னவர் எனில் இவரின் உயிரைக் காக்க யான் என்ன செய்ய வேண்டும் எம்பெருமானே’ எண்ணியவளாய் அவனைப் பார்த்திருக்க, கண் விழித்தவனோ அவளைக் கண்டு திடுக்கிட்டான்.
இன்றும் இவ்வாறு அவள் வந்து அமர்ந்திருப்பாளென நினையாதவனுக்கு ஆச்சரிய அதிர்ச்சியாக இருந்தது.
அவளைக் கண்டு கொள்ளாது வழமையான தனது செயலாய் மண்டியிட்டு சிவலிங்கத்தைத் தழுவி ஆவுடையார் மீது தலை வைத்தவன் கண் மூடி வணங்கியவனாய் எழுந்து நிற்க, அவனின் பாதம் முன்பு மண்டியிட்டு கைக்கூப்பி அமர்ந்தாள் முத்தரசி.
“என்ன காரியம் செய்கிறீர்கள் தேவி?”
இப்பெண்ணை மட்டும் தான் ஏன் தேவி என்று அழைக்கிறோம் என நேற்றை போலவே இன்றும் எண்ணியவாறு பாதத்தைப் பின்னோக்கி எடுத்து வைத்தவனாய் பதட்டத்துடன் அவன் கேட்க,
“எனது ஐயத்தைத் தீர்த்தருள வேண்டும் ஐயனே” கைகளைக் குவித்தவாறு தலை கவிழ்த்தி பணிவுடன் கேட்டவளை நொடி நேரம் பார்த்தவன்,
“தங்களின் ஐயம் என்னவோ?” என வினவினான்.
“தனக்கானதை அடையவும் அதனைத் தன்னுடன் ஆயுளுக்கும் தக்க வைத்துக் கொள்ளவும் இறையருள் வேண்டும் ஐயனே! அதற்கான மார்க்கத்தை வேண்டுகிறேன்” என்றவள் பணிவாய் உரைக்க,
“இறையருள் வேண்டி இறைவனிடம் தானே பணிய வேண்டும். என்னிடம் தாங்கள் வேண்டி நிற்கும் காரணம் என்னவோ?” எனக் கேட்டான்.
“இறையடிவர்களே இறைவனை அடையும் மார்க்கத்தை உரைக்க வல்லவர்கள்” என்றாள் முத்தரசி.
“பிரதிபலன் பாராத உண்மையான பக்தி மட்டுமே இறைவன் வேண்டுவது தேவி!
எல்லாம்வல்ல பரம்பொருள் தூய்மையான அன்போடு தன்னை வணங்கும் மனிதனை நோக்கி ஓடிவரும். அவனை மனதால் கொண்டாடும். அவன் அருகேதான் நிற்கும். அவன் மனத்தை கண்டு மகிழும். மனிதனால் தான் அதை உணரமுடியாதே தவிர, மனத்தால் தேடி உயிரால் குரல் கொடுத்தால் சிவம் ஓடிவரும்” என்றவனாய் அங்கிருந்து நகர்ந்தான்.
அன்றைய நாள் முழுவதும் அவன் கூறிய இவ்வார்த்தைகளை மனதினுள் உருப்போட்டவளாய் அன்றாடப் பணியில் உழன்றிருந்தவள், சிவநேசனை அடைய இறையருள் பெறும் மார்க்கத்தைக் கண்டறிந்த நொடி, “நாராயணா! மாதவா! ஈசனே! எம்பெருமானே” மகிழ்வுடன் நெஞ்சம் நெகிழ நன்றி நவில்தவளாய் மறுநாளே அதற்கான செயலில் ஈடுபடலானாள்.