அத்தியாயம் 21

சோலவனத்தில் அவர்களது அறையில் இருந்தனர் இருவரும்.

அறைக்குள்ளே நடந்தவாறே, “ராஜா கண்டிப்பாக கேஸ் போட்டே ஆகனும். நான் அதுல உறுதியாக இருக்கேன். எப்ப.. எப்படி போடலாம்? அதுக்கு நான் என்ன செய்யனும்னு விசாரிச்சிட்டு சொல்லுங்க” கைப்பேசியில் வழக்கறிஞரிடம் பேசிக் கொண்டிருந்தான் சக்தீஸ்வரன்‌.

அந்தக் கோவிலில் இருந்து கிளம்பிய பொழுதிலிருந்து, தொடர்ந்து கைபேசியில் யாரிடமாவது பேசியபடியே இருந்தான் சக்தீஸ்வரன்.

மிரண்ட பார்வையுடன் அவனை‌ப் பார்த்திருந்தாள் இளவஞ்சி.

இத்தனை நாட்களாக சக்தீஸ்வரனை முரடன் என பிறர் சொல்ல கேட்டிருக்கிறாள். ஆனால் இன்று நேரிலேயே கண்டதில், ‘இவ்ளோ கோபம் வருமா இவருக்கு’ என்று மிரண்டு தான் போனாள் இளவஞ்சி.

கோவிலில் ஈசனின் லிங்கத் திருமேனியைக் காணவில்லை என சத்தமாக இவன் கதறி இருந்ததில், அக்கோவிலில் ஆங்காங்கே நின்றிருந்த மக்களும், கோவில் அலுவலகத்தில் இருந்தவர்களும் அவன் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி வந்து நின்றனர்.

“என்ன தம்பி? என்னாச்சு?” எனக் கேட்டார் அங்குக் கோவில் அலுவலகத்தில் பணிபுரியும் குருமூர்த்தி.

கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவனாய், “இங்கிருந்த சிவலிங்கம் எங்கே?” எனக் கோபமாய் கேட்டான்.

அவனின் கேள்வியில் குருமூர்த்தி அதிர்ந்து அவனை வியப்புடன் பார்த்து விட்டு தன்னை நிலைபடுத்திக் கொண்டவராய், “யார் நீங்க?‌ உங்களுக்குத் தேவையில்லாத கேள்வியெல்லாம் ஏன் கேட்டுட்டு இருக்கீங்க?” எனக் கேட்டார்.

சுற்றிக் குழுமியிருந்த அர்ச்சகர்கள் மற்றும் பிற கோவில் பணியாளர்களும் ஒருவரை ஒருவர் ‘யாரிவன்?’ என்ற கேள்வியுடன் பார்த்துக் கொண்டனர்.

சக்தீஸ்வரனின் முகத்தில் அத்தனை ஆவேசம்.

அவனை ஆசுவாசப்படுத்த இளவஞ்சி சக்தீஸ்வரனின் கையைப் பிடிக்க, அதனை கோபமாக உதறியவனாய் குருமூர்த்தியை நோக்கி காலெடுத்து வைத்தவாறு, “அப்ப இங்கே சிவலிங்கம் இருந்தது உண்மை தானே” கண்களைச் சுருக்கி அவரைக் கூர்ந்து பார்த்தவனாய் கேட்டான்.

‘அப்ப தெரியாம தான் கேட்டிருக்கானா? நாம தான் உளரிட்டோமா?’ என மனதினுள் நினைத்தவராய், “ஆமா உண்மை தான்! முன்னாடி இங்கே சிவலிங்கம் இருந்துச்சு! இப்ப இல்லை! அதுக்கென்ன?” என்று தெனாவட்டாய் குருமூர்த்தி கேட்க,

“என்னப்பனைத் தூக்கி போட நீ யாருடா? யாரு உனக்கு அந்த அதிகாரம் கொடுத்தது” என ஆக்ரோஷமாக கேட்டவாறு அவரின் குரல் வளையைப் பிடித்து உயரமாய் தூக்கியிருந்தான். தரையில் அவரின் பாதம் இரண்டடிக்கு மேல் அந்தரத்தில் தொங்குமளவு அவரை உயரத் தூக்கியிருந்தான் சக்தீஸ்வரன்.

இளவஞ்சியின் கண்களுக்கு சக்தீஸ்வரன் அவள் கனவினில் கண்ட சிவநேசனாய் தெரிந்தான்.

நெற்றியில் திருநீறு பட்டையுடன் குங்குமம் வைத்து கம்பீரமாக முதன் முதலாக இவள் சக்தீஸ்வரனைப் பார்த்த போது அவன் நெற்றியில் இருந்த அதே திலகத்தோடு பார்த்தாள் இன்று.

இத்தனை நாட்களாக சக்தீஸ்வரனை முரடன் என பிறர் கூறி தான் கேட்டிருக்கிறாள். ஆனால் இன்று நேரிலேயே கண்டு உள்ளம் நடுங்க நின்றிருந்தாள் இளவஞ்சி.

சுற்றியிருந்த அனைவரும் சக்தீஸ்வரனின் கைப்பிடித்து குருமூர்த்தியைக் கீழே இறங்க வைத்து சக்தியைத் திட்ட தொடங்கினர். அவனும் விடாது ஆவேசமாகப் பேச, சூழ்நிலையின் வீரியம் அதிகரிப்பதை உணர்ந்த இளவஞ்சி, “சார்! சாரி சார்! இங்க நடந்த எல்லாத்துக்கும் நான் சாரி சொல்லிக்கிறேன்! எங்களை மன்னிச்சிடுங்க” என்றவளாய் சக்தியின் கரம் பற்றி தன்னால் இயன்ற மட்டும் பலம் கொடுத்து இழுத்து, “பயமாயிருக்கு! வாங்க சக்தி போய்டலாம்” என அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

அவளின் பயமாயிருக்கு என்ற வார்த்தையில் தான் சற்று அடங்கியவனாக அவளுடன் சென்றான்.

வண்டிக்குள் அவனை அமரச் செய்தவள், “சீக்கிரம் வண்டியை எடுங்க சார்” என்று வெளியே இவர்கள் பின்னோடேயே திட்டிக் கொண்டு வந்தவர்களைப் பார்த்தவாறு ஓட்டுனரிடம் உரைத்தாள்.

சக்தியின் முகத்தில் ரௌத்திரம் குறையவே இல்லை. விட்டால் அனைவரையும் அடித்து விடும் வேகத்தோடு இருந்தான்.

வண்டி அந்த ஊரைக் கடக்கும் வரை எவரும் எதுவும் பேசவே இல்லை.

ஊரின் எல்லையில் இருந்த பெயர்ப் பலகையில் ஊரின்‌ பெயரைப் பார்த்த சக்தீஸ்வரன், “இது எந்த ஊரு வஞ்சி?” அழுத்தமான பார்வையுடன் கேட்டான்.

ஏற்கனவே பயந்திருந்தவள் அவனின் இந்த கறாரான குரலில் உள்ளம் நடுங்க, “ஆத்மநல்லூர்” உள்ளே போன குரலில் உரைத்தாள்.

“ஓ அப்ப நீ நிஜமா ஹனிமூனுக்காக பிளான் பண்ணலை. எப்படியாவது இந்த ஊருக்கு என்னைக் கூட்டிட்டு வந்துடனும்னு பிளான் செஞ்சி ஏமாத்திருக்க! அப்படித் தானே” கோபத்தோடு அவளை முறைத்தவாறு கேட்டான்.

“அய்யோ இல்ல சக்தி! ஏமாத்திட்டேன்னு பெரிய வார்த்தைலாம் ஏன் சொல்றீங்க? நான் உங்க நல்லதுக்கு தான்…” என்று அவள் முடிக்கும் முன்னமே,

“எது நல்லது? கூட ஒரு பொண்ணு இருக்கிறதையே மறந்து அங்கே சண்டை போட போயிருக்கேன். அங்க கைக்கலப்பு ஆகி உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என் நிலைமையை யோசிச்சு பார்த்தியா? எல்லாமே உன் முடிவு தான்னு நான் விட்டது எவ்ளோ தப்புன்னு இப்ப தோணுது” கண்களில் கோபத்துடன் அடிக்குரலில் பேசியவனைக் கண்டு உள்ளம் நடுங்க கண்களில் நீருடன் பார்த்திருந்தாள் இளவஞ்சி‌‌.

அவளின் மீதான அக்கறையில் வந்திருக்கும் கோபம் இது என்று புரிந்தாலும் முதல் முறையாக தன்னிடம் கோபத்தைக் காண்பிக்கும் கணவனின் செயலில் உள்ளம் வலிக்க, கண்களில் நீர் கரைப் புரண்டோட சட்டெனத் துடைத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி வெளியே பார்வையைத் திருப்பினாள்.

அவளின் கண்ணீரைப் பார்த்தும் பார்க்காதவனாய் கைபேசியை எடுத்தவன், ஒருவருக்கு அழைத்து, “அண்ணா சக்தி பேசுறேன்!” என்றான்.

மறுபுறம் கேட்ட கேள்வியில், “நம்மூருல தான் இருக்கேன். எனக்கு சில விஷயங்கள் தெரியனும்” என்றவன் கோவில் பற்றிய பேச்சில் இறங்கினான்.

“நீ எதுக்கு சொல்லாம கொள்ளாம இங்க வந்திருக்க? இப்ப எதுக்கு அந்தக் கோவிலை பத்தி கேட்குற? இந்தச் சொத்தும் வேண்டாம் சொந்தமும் வேண்டாம்னு போனவங்க எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க?” மறுபுறம் பேசியவரின் குரலில் கடுப்புத் தான் பிரதானமாக இருந்தது.

அவரின் பேச்சில் கோபமுற்றவனாய், “இந்த சொத்தைப் புடுங்க நாங்க வரலை சரியா! நீங்களே அந்த பரம்பரை வீட்டை ஆண்டு அனுபவிங்க. நீங்க கால்ல விழுந்து கூப்பிட்டா கூட இந்த ஊருக்கு வரக் கூடாதுனு தான் இருந்தோம். ஆனா வர வேண்டியதாகிப் போச்சு” என்றவாறு மனைவியை முறைத்தவன்,

“வெறுப்பேத்தாம நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்றீங்களா?” என்றான்.

அவனின் பேச்சில் அமைதியடைந்தவராய், அவன் கேட்டதற்குப் பதிலளித்தார்.

அவரிடம் பேசி முடித்து விட்டு தனது தந்தையிடம் பேசியவன், இப்பொழுது அறைக்கு வந்து சில மணி நேரங்கள் ஆகியும் தொடர்ந்து எவரிடமாவது பேசிய வண்ணமே தான் இருக்கிறான்.

கைப்பேசியில் வழக்கறிஞரிடம் பேசி விட்டு தலையில் கை வைத்தவாறு சோபாவில் அமர்ந்த சக்தீஸ்வரனின் பார்வை மெத்தையில் அமர்ந்து அழுத விழிகளுடன் தன்னையே பார்த்திருந்த மனைவியிடம் தாவியது.

அவளருகில் சென்று நின்றவன், அவளின் தலையில் கை வைத்தவனாய், “சாரி கோபம் வந்துடுச்சு! உன் சேஃப்டியை யோசிக்காம நான் பாட்டுக்குச் சண்டைப் போட்டுட்டேன்! சாரி தங்கப்பொண்ணு” என்றான்.

நிமிர்ந்து அவன்‌ முகம் பார்த்தவளின் கண்ணீர் பெருக, “அவங்க எங்க உங்களை அடிச்சிருவாங்களோனு ரொம்பப் பயந்துட்டேன்ங்க” எனக் கூறியவாறு அவனிடையைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

குனிந்து அவளின் தலையில் முத்தமிட்டவனாய், “நீ கூட இருக்கும் போது என்னை யாரும் எதுவும் செய்ய முடியாதுடா தங்கப்பொண்ணு” என்று அவளின் முகத்தை நிமிர்த்தி கண்களைத் துடைத்து விட்டான்.

அவளருகில் மெத்தையில் அவன் அமர, அவன் தோளில் சாய்ந்தவளாய், “நான் உங்களை ஏமாத்தலை” என்றாள்.

கூறும் போதே அவளின் கண்கள் குளமாக, “சோ சாரிடா தங்கப்பொண்ணு. ஏதோ கோபத்துல..” என்று அவன் முடிக்கும் முன்,

“நான் உங்களுக்காக தான் உங்களை இங்கே கூட்டிட்டு வந்தேன். உங்களை ஏமாத்த கூட்டிட்டு வரலை” என்றாள்.

அவளின் கன்னம் பிடித்து கண்ணீரைத் துடைத்து நெற்றியில் முத்தமிட்டவனாய், “என்னை திட்டுறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. என்னை எப்படி நீங்க இப்படி ஏமாத்த கூட்டிட்டு வந்தேன்னு சொல்லலாம்னு என் சட்டையைப் பிடிச்சி கூட கேள்வி கேளுடா ஆனா இப்படி அழாதடா! ரொம்ப கில்டியா ஃபீல் ஆகுது” என்றவன் கண்களில் குற்றயுணர்வு பொங்க அவளை இறுக அணைத்திருந்தான்.

அவன் மன்னிப்புக் கேட்ட விதத்திலேயே கரைந்தவளாய் அவனது மார்பில் கோழி குஞ்சாய் சுருண்டவள், “லவ் யூ” என்று உதட்டை அசைத்து அழுத்தமாய் முத்தமிட்டாள்.

அவளின் முகத்தை நிமிர்த்தி, “என் பொண்டாட்டியா லவ் யூ சொல்றது” என்று ஆச்சரியத்துடன் அவன்‌ பார்க்க, கூச்சம் கொண்டவளாய், அவன் மார்போடு ஒட்டியவாறு முகத்தை மறைத்துக் கொண்டாள்.

அவளின் செய்கையில் வாய்விட்டு சிரித்தவனாய், “லவ் யூ டா தங்கப்பொண்ணு” என அணைத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் மோன நிலையில் இருந்த இருவரும் விலகி அமர, அவனை விட்டு தள்ளி அமர்ந்தவள், “எனக்கு கனவு வந்துச்சு! உங்களை இங்கே கூட்டிட்டு வரச் சொல்லி கனவுல ஒரு அசரீரி குரல் கேட்டுச்சு” என்றாள்.

“என்னது? கனவு வந்துச்சா?” அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஆமா ஒரு தடவை இல்லை மூனு தடவை! உங்களை உடனே ஆத்மநல்லூருக்கு கூட்டிட்டு வரச் சொல்லி சொன்னாங்க. அதுவும் உங்க உயிருக்கு ஏதோ பிரச்சனைனு சொல்லி உடனே ஆத்மநல்லூருக்கு கூட்டிட்டுப் போகனும்னு சொன்னாங்க. இதை நான் வீட்டுல சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்கனு தான் சொல்லாம கூட்டிட்டு வந்தேன். அதான் ஜோசியர்கிட்ட உங்க ஆயுள் பலத்தைப் பத்திக் கேட்டேன். நம்ம கல்யாணத்துலயே உங்க ஆயுள் கண்டம் சரியாகிடுச்சுனு தெரிஞ்ச பிறகு, எதுக்கு உங்களை இங்கே கூட்டிட்டு வரச் சொல்றாங்கனு சந்தேகம் இருந்துச்சு. உங்க குலதெய்வத்துக்கு நீங்க எதுவுமே செய்யாம இருக்கிறது அப்ப தெரிஞ்சிது. அதான் உங்க குலதெய்வத்தைப் பார்த்து பொங்கல் வச்சி கும்பிட்டுட்டு வந்துட்டா, உங்களுக்கு எதுவும் கொஞ்ச நஞ்ச ஆயுள் பிரச்சனை இருந்தாலும் சரியாகிடும்னு நம்பி தான் இங்கே கூட்டிட்டு வந்தேன். ஆனா இப்படி ஒரு கோவில் போவோம் அங்க இப்படிலாம் நடக்கும்னு எனக்குத் தெரியாது சக்தி. நான் கனவுல பார்த்த கோவில் இப்படி என் கண் முன்னால் வந்து நிக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கலை சக்தி” என்றவள் தனக்கு வந்த கனவுகளைக் காட்சிகளுடன் அப்படியே அவனிடம் தெரிவித்தாள்.

அவள் கூறிய அனைத்தையும் கேட்டுத் தலையே சுற்றியது சக்தீஸ்வரனுக்கு.

அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவன், “உனக்கு என்னிக்கு அந்த கனவு வந்துச்சு? என்னை ஆத்மநல்லூருக்கு கூட்டிட்டு போக சொல்லி முதல் தடவையாக உன்கிட்ட சொன்ன கனவு எந்த தேதில வந்துச்சுனு கொஞ்சம் யோசிச்சு சொல்ல முடியுமா?” எனக் கேட்டான்.

கைபேசியில் நாட்காட்டியை எடுத்து வைத்து ஏதோ கணக்கிட்டவளாய் அந்தத் தேதியைக் கூற, “வஞ்சி! அந்த தேதிலருந்து இரண்டாவது நாள் தான் இங்க சிவலிங்கத்தைத் தோண்டி எடுத்திருக்காங்க. அப்படினா இதை தடுத்து நிறுத்த தான் அவர் நம்மளை உடனே இங்கே வரச் சொல்லிருப்பாருனு தோணுது வஞ்சி” என்றான்.

“அப்படியா?” என்றவள் வியப்புடன் கேட்க,

“ஆமா வஞ்சி! ஆத்மநல்லூர்ல இருக்க என் பெரியப்பா பையனுக்கு போன் செஞ்சி கேட்டேன். அவர் தான் என்னிக்கு இதை சொஞ்சாங்கனு சொன்னாரு. ஆனா காரணம் அவருக்கும் தெரியலை. உனக்கு முதல் முறை கனவுல ஆத்மநல்லூருக்கு செல்னு தானே சொன்னாங்க. அப்ப என் ஆயுளை பத்திலாம் சொல்லலையே. நீ அதுக்கான முயற்சி எடுக்கலைனதும் தான் என் ஆயுளுக்கு பிரச்சனைனு சொல்லிப் போகச் சொல்லிருக்காங்கப் போல! அப்ப தான் நீ பயந்து கூட்டிட்டு வருவனு இப்படிச் சொல்லிருப்பாங்களா இருக்கும்” என்றான் சக்தீஸ்வரன்.

“ஆனா நிஜமாவே அந்தக் கோவில்ல கணவனோட ஆயுளுக்கு ஸ்பெஷலா பூஜை செய்வாங்கனு சொன்னாங்களே. அப்படினா உங்க ஆயுள் பிரச்சனைக்கான தீர்வும் அந்தக் கோவில்ல இருக்கு கூடவே சிவலிங்கப் பிரச்சனையும் இருக்குனு காண்பிக்க இங்கே வர வச்சிருப்பாங்களோ” எனக் கேட்டாள்.

“அவங்களை சும்மா விடக் கூடாது வஞ்சி. இரண்டாயிரம் வருஷத்துக்கு மேல பழமையான சிவலிங்கத்தை எப்படி இவங்க இப்படி இருந்த இடமே தெரியாத அளவுக்கு தூரோட தூக்கிப் போட்டிருக்காங்க! இதை சும்மா விடக் கூடாது” கண்களில் வேதனையும் முகத்தில் ரௌத்திரத்தையும் கொண்டவனாய் அவன் உரைக்க,

“ஆமா அங்க சிவலிங்கம் இருந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டாள்.

“நாம பேசிட்டே அந்தப் பிரகாரத்தைச் சுத்தி வரும் போது என் கண்ணுக்கு அங்க சிவலிங்கம் இருந்தது தெரிஞ்சிது வஞ்சி. எனக்கு ரொம்பப் பழக்கப்பட்ட சிவலிங்கமாக அது தெரிஞ்சிது‌. அப்படியே அந்த சிவலிங்கத்தை ஆர தழுவிக்கனும்னு தோணுச்சு. நாம அந்த சிவலிங்கத்துக்கு கிட்ட போக போக அப்படியே அது மறைஞ்சி போச்சு‌. அதுக்கு பிறகு அந்த ஆளுக்கிட்ட கேட்டதுலாம் என்னையும் மீறி வந்த வார்த்தைகள்! அவரோட பார்வையும் பதிலையும் வச்சி தான் நிஜமாவே அங்க சிவலிங்கம் இருந்திருக்கு இவங்க தூக்கிட்டாங்கனு எனக்குப் புரிஞ்சிது. எப்படி அப்படி ஒரு கோவம் வந்துச்சுனே தெரியலை வஞ்சி. என் சிவனைத் தூக்கி போட்டுட்டியானு அவரை தூக்கித் தூர போடுற அளவுக்கு கோபம்” கைகளை இறுக மூடியவாறு கோபத்தை அடக்கி கொண்டு உரைத்தான் சக்தீஸ்வரன்.

அமைதியாக அவன் கூறியதைக் கேட்டிருந்தவள், “நாம இங்க வர வைக்கப்பட்டதுக்கான காரணம் இது தான் போல சக்தி” என்றாள்.

“ஆனா ஏன்‌ நம்ம இரண்டு பேரை இந்த வேலைக்கு இங்கே கூட்டிட்டு வரனும்” எனக் கேட்டான் சக்தி.

தெரியாது என உதட்டைப் பிதுக்கி தலை அசைத்தவள் அவனை அணைத்தவளாய், “நாம இங்கிருந்து போய்டலாமா சக்தி? உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு” என்றாள்.

“இல்ல வஞ்சி! இப்ப தான் களத்துல குதிச்சிருக்கோம். அதுக்குள்ள கிளம்பனும்னு சொல்றியே! நான்‌ போட போற குண்டு அங்கே எப்படி வெடிக்குதுனு பார்த்துட்டுக் கிளம்பலாம்” ஆக்ரோஷமான பார்வையுடன் உரைத்தவன், அவளின் நெற்றியில் முத்தமிட்டவனாய், “நீ ரெஸ்ட் எடு! நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்” என்றான்.

“இங்க எங்கே வெளில போவீங்க? நானும் வரேன்” என்று அவள் அடம்பிடிக்க, “நீ ஏற்கனவே ரொம்ப டயர்ட்டா இருக்க! நான் பக்கத்துல சிவன் கோவிலுக்கு தான் போகப் போறேன். நீ படுத்துத் தூங்கு. நான் வந்துடுறேன்” என்றவனாய் கிளம்பிச் சென்றான்.

இளவஞ்சியின் உள்ளம் பயத்தில் பதற, “ஏன் எங்களை இங்கே வர வச்சீங்க ஈஸ்வரா? எங்களுக்கும் இந்த கோவிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சிவனிடம் மனதோடு வருந்தி கேட்டவாறே படுத்திருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

சோலைவனம் சிவன் கோவிலில் கண் மூடி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்த சக்தீஸ்வரன், “நான் யாரு? எனக்கும் ஆத்மநல்லூர் ஈசனுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கும் வஞ்சிக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல எங்களுக்கும் ஆத்மநல்லூர் ஈசனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? நாங்க ஏன் இங்கே வர வைக்கப்பட்டோம்?” இதற்கான விடையைத் தியானத்தில் இருந்து அறிய முற்பட்டான்.

இவர்களின் கேள்விகளுக்கான விடையாய் இளவஞ்சி சக்தீஸ்வரன் முத்தரசி சிவநேசனாய் வாழ்ந்த அந்தக் காலத்தினை இவர்களுக்குப் படமாகக் காட்டினார் எம்பெருமான் ஈசன்.