மறுநாள் காலை கணவனின் செய்கையை எண்ணி சிவந்த கன்னங்களும் மின்னிய கண்களுமாய் கிளம்பிக் கொண்டிருந்த மனைவியைப் பின்னோடு அணைத்த சக்தி, “கண்டிப்பா காலேஜூக்கு போகனுமா?” எனக் கேட்டவாறு அவளின் பின்னங்கழுத்தில் இதழால் வருடினான்.
அவனின் செயலில் ஹ்ம்ம்ம் என்றவளின் குரல் ஹஸ்கியாய் வெளி வர, அவனை நோக்கி திரும்பியவள் அவன் மார்பில் கை வைத்து தள்ளி நிறுத்தினாள்.
அவளை இழுத்து அணைத்து கழுத்தோரத்தில் முத்தமிட்டவன், காதினுள் முத்தமிட்டு அவளை கூசச்செய்தவனாய், “இன்னிக்கு ஒரு நாள் லீவ் போடு பொண்டாட்டி. பிளீஸ்” என்று கண்களைச் சுருக்கிக் கெஞ்சினான்.
கெஞ்சும் கணவனின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சியவளாய், “எதுக்கு? இப்படியே ரூம்குள்ளயே ரெண்டு பேரும் கொஞ்சிட்டு கிடக்கவா?” என்றவள் அவனைத் தள்ளி நிறுத்த, மீண்டும் அவளின் கைப்பிடித்து இழுத்து இடையை வளைத்து நின்றவன், “சரி ஒரே ஒரு கிஸ் கொடு! இன்னிக்கு அதை நினைச்சிட்டே வேலை பார்த்துட்டு வந்துடுறேன்” என்றான்.
தனது கன்னத்தைத் திருப்பி காண்பித்தவள், “சரி நீங்களே கொடுத்துக்கோங்க” என்றாள்.
“தங்கப்பொண்ணே நேத்துலருந்து நான் தான்டா கொடுத்துட்டு இருக்கேன். பொண்டாட்டி முத்தம் கொடுத்தா எப்படி இருக்கும்னு புருஷனுக்கு தெரிய வேண்டாமா? இப்ப நீ தான் கொடுக்கிற” என்று அடமாய் அவன் நிற்க,
சிணுங்கியவாறே அவன் முகத்தைப் பார்த்தவள், கணவனின் கண்களில் தெரிந்த ஆர்வத்தில் மேலும் முரண்டு பிடிக்காமல், தனது கண்களை மூடியவாறு அவனது கன்னத்தில் இதழ் பதிக்க, முகத்தை திருப்பி அந்த முத்தத்தை தனது இதழில் வாங்கியிருந்தான். அவனின் செய்கையில் கண்களைத் திறந்து அதிர்ந்து அவள் பார்க்க, கண்களைச் சிமிட்டி குறும்பு சிரிப்புடன் அவளைப் பார்த்தவாறே அவளின் இதழை தன் வசமாக்கி இருந்தான் சக்தீஸ்வரன்.
“நிஜமாவா? நீயும் கல்யாணமாகி போனதும், அம்மா கஷ்டப்படுவாங்களேனு நினைச்சேன். இறைவனுக்கு தான் நன்றி சொல்லனும்” கைகளைக் கூப்பி ஆத்மார்த்தமாய் இளவஞ்சி கூற,
அவளின் கூப்பிய கைகளைப் பிடித்து அருகில் அமர்ந்திருந்த சக்தியை நோக்கி திருப்பிய மங்கை,
“எல்லாத்துக்கும் காரணம் சக்தி அண்ணா தான். அவங்களுக்குத் தான் நம்ம குடும்பமே நன்றி சொல்லனும்” என்றாள் மங்கை.
“என்னது சக்தியா?” என்று இன்ப அதிர்ச்சியுடன் இளவஞ்சி பார்க்க,
“ஆமா இவ்வளோ சீக்கிரம் கல்யாண தேதி குறிச்சதுக்குக் காரணம் சக்தி அண்ணா தான். தம்பிக்கு சக்தி அண்ணாவோட ஃப்ரண்ட் கம்பெனில தான் வேலை வாங்கி கொடுத்திருக்காங்க” என்றாள்.
நன்றி பெருக்கோடு இளவஞ்சி சக்தியை பார்க்க, “நமக்குள்ள என்ன இது” என்று அவளின் கையைப் பிடித்து இறக்கினான்.
அந்நேரம் அங்கு வந்த நல்லசிவம், மங்கையிடம் அவளின் குடும்பத்தினரைப் பற்றி வினவினவராய், “நானே உன்னை வர சொல்லனும்னு நினைச்சேன்மா. வஞ்சி சக்திக்கு வரவேற்பு நிகழ்ச்சி வைக்கலாம்னு நினைக்கிறேன். உங்க வீட்டுல பேசிட்டு சொல்றியாமா?” எனக் கேட்டார்.
“எனக்கு இன்னும் மூனு மாசத்துல கல்யாணம் அங்கிள். அதுக்கு முன்னாடினா அம்மா தம்பி எல்லாரையும் கன்வின்ஸ் செஞ்சி வர வைக்க பார்ப்பேன்” என்றாள் மங்கை.
“நல்லதுமா. கேட்கவே சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா உன்னோட கல்யாணத்துக்கு முன்னாடியே வச்சிக்கலாம்” என்ற நல்லசிவம், “நீ என்னப்பா சொல்ற?” என்று சக்தியைப் பார்த்தார்.
சக்தி வஞ்சியைப் பார்க்க, அவளின் நெற்றி யோசனையில் சுருங்கியது.
“என்னமா வஞ்சி? நீ என்ன சொல்ற?” என்று நல்லசிவம் கேட்க, அனைவருக்கும் தேநீர் அளித்தவாறு வந்து அமர்ந்த மகேஸ்வரி, “கல்யாணத்துக்கு கூட நீ இவ்வளோ யோசிக்கலைமா” என்று கேலிச் செய்து சிரித்தார்.
“என்னது குலதெய்வக் கோவிலுக்கா? ஆத்மநல்லூருக்கா? உனக்கு எப்படிமா எங்க குலதெய்வ கோவில் பத்தி தெரிஞ்சிது? சக்தி சொன்னானா?” எனக் கேட்டார்.
“இல்ல மாமா! இந்த ஊர் பெயர் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குனு சக்திகிட்ட ஊர் பேரைச் சொன்னேன். அப்ப தான் அது உங்க சொந்த ஊருனு சொன்னாங்க” என்றாள்.
“ஆமாமா அம்மா அப்பா இருக்கிற வரைக்கும் ஒத்துமையா இருந்த குடும்பம், அவங்க இறந்த பிறகு சொத்து பிரச்சனை வந்து சண்டையாகிப் போச்சு. எங்களுக்கு உங்க காசும் வேண்டாம் சொத்தும் வேண்டாம்னு அதுக்கு பிறகு நாங்க ஊர் பக்கமே போகலை” என்றார் நல்லசிவம்.
“குலதெய்வம் நம்ம வீட்டு குழந்தை மாதிரி! அதுக்கிட்ட நாம எப்படி இருக்கோமோ அந்த மாதிரியே அது நடந்துக்கும். குழந்தையைப் பட்டினி போட்டுட்டு நாம மட்டும் சாப்பிட்டா அது பாவம் தானேனு அப்பா சொல்லுவாங்க மாமா. இவ்வளோ கஷ்டத்திலும் நாங்க குலதெய்வக் கோவிலுக்கு வருஷத்துக்கு ஒரு தடவை கண்டிப்பாக போய்ட்டு வந்துடுவோம். அதனால் தான் சாப்பாட்டுக்குக் கஷ்டபடாம நாங்க யாராவது ஒருத்தர் சம்பாதிச்சிட்டு இருந்தோம்னு நான் அடிக்கடி நினைச்சிப்பேன் மாமா” என்றாள் இளவஞ்சி.
“இப்ப நாம அங்க போனா தங்க வீடு கூட இல்லைமா. எங்களோட பரம்பரை வீட்டுல என் அண்ணன் இறந்த பிறகு அவங்க பசங்க தான் இருக்காங்க. நாம ஊருக்குள்ள வர்றோம்னு தெரிஞ்சாலே அவங்க சொத்தைப் பிடுங்க வரோம்னு சண்டைக்கு நிப்பாங்க” என்று யோசனையாக உரைத்தவர், “நம்ம ரிசப்ஷன் முடிச்சிட்டு போவோமே” என்றார்.
“சரி நான் ஜோசியர் கிட்ட போய் ரிசப்ஷன் தேதி குறிச்சிட்டு வரேன்” என்று நல்லசிவம் கூறியவாறு எழுந்து நிற்க,
‘ஐடியா’ என்று மூளையில் பல்ப் எறிந்தவளாய், “மாமா நானும் உங்க கூட ஜோசியரை பார்க்க வரவா?” எனக் கேட்டாள்.
“உனக்கு காலேஜ் இல்லையா? நீ எதுக்கு ஜோசியரைப் பார்க்க போற?” என்று கேள்வியோடு அவளை சக்தீஸ்வரன் பார்க்க,
“நீங்களும் வாங்க. எனக்கு ஜோசியர்கிட்ட சில விஷயங்கள் கேட்டு தெரிஞ்சிக்கனும்” என்றாள் இளவஞ்சி.
“சரிமா உன் விருப்பம் போல செஞ்சிடலாம். நான் கம்பெனிக்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரேன். நீங்க இரண்டு பேரும் கிளம்பி இருங்க” என்றவாறு கிளம்பிச் சென்றார் நல்லசிவம்.
வரவேற்பு தேதியை முடிவு செய்தவுடன் தன்னிடம் உரைக்குமாறு கூறிவிட்டு கிளம்பினாள் மங்கை.
*******
ஜோதிடர் முன்பு அமர்ந்திருந்தனர் மூவரும்.
“நான் தான் உங்க கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்த்து கல்யாண தேதிலாம் குறிச்சி கொடுத்தேன்மா” என்று பெருமையாக உரைத்த ஜோசியர், வரவேற்பு தேதியை குறிக்க பஞ்சாங்கத்தைப் பார்த்து கொண்டிருந்தார்.
“சார் அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கேள்வி” என்று தயங்கியவாறு தொடங்கிய வஞ்சி, “இவரோட ஜாதகத்துல ஆயுள் கண்டம் இருக்கா?” எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் ஒரே நேரத்தில் ஜோசியர், சக்தி, நல்லசிவம் என அனைவரின் பார்வையும் அவள் மேல் விழுந்தது.
“ஏன்மா அப்படிக் கேட்குற?” எனப் பதறியவாறு நல்லசிவம் கேட்க,
“இல்ல மாமா! நேத்து அந்த பசங்க குத்த வந்தாங்க. அதுக்கு முன்னாடி கால்ல அடிப்பட்டுச்சு. அதான் இப்ப இவரோட கிரக பலன் எப்படி இருக்குனு பார்க்கலாம்னு கேட்டேன் மாமா” என்றாள்.
தன்மீதான மனைவியின் அக்கறையில் சக்தியின் இதழில் குறுநகை குடிக்கொள்ள மென்மையாய் அவளைப் பார்த்திருந்தான்.
“கல்யாணத்துக்கு முன்னாடி நான் கணிச்சது எவ்ளோ சரியா இருக்குனு உங்க மருமக நிரூபிக்கிறாங்க சார்” இதழ் வளைய சிரித்தவாறு உரைத்தார் ஜோசியர்.
“அப்படி என்ன கணிச்சீங்க?” சக்தி கேட்க,
“உங்க மருமக கேட்ட மாதிரி உங்க மகனுக்கு இப்ப நடக்குற தசாபுத்தி அவ்ளோ சரியில்ல. ஆயுள் கண்டம் உண்டு தான். ஆனால் சரியா இந்த நேரத்துல சத்யவானை காத்த சாவித்ரியா உங்க மருமகளோட ஜாதகம் வந்துச்சு. அதனால் தான் உடனே கல்யாணத்தை வச்சிக்கோங்கனு இரண்டு நாளுக்குள்ள கல்யாணம் நடக்குற மாதிரி தேதியைக் குறிச்சி கொடுத்தேன். உங்க மருமகளின் கணவனுக்குப் பூரண ஆயுள் உண்டு. உங்க மருமகளின் பத்தினி தர்மம் உங்க மகனைக் காப்பாத்தும். அதனால் அதை பத்தி யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்றவர் வரவேற்பிற்கு இவர்கள் கேட்டது போலவே இரண்டு மாதங்கள் கழித்து ஒரு தேதியை குறித்துக் கொடுத்தார்.
ஜோதிடர் கூறியதைக் கேட்டு நல்லசிவமும் சக்தீஸ்வரனும், “ஈஸ்வரா என்னே உன் கருணை” என இறைவனுக்கு நன்றி உரைக்க, இளவஞ்சியின் இதயமோ தடதடவென இரயில் தண்டவாளமாய் துடித்துக் கொண்டிருந்தது.
‘இவர் கூற வருவதின் பொருள் என்ன? நிஜமாவே இவரோட உயிருக்கு ஆபத்து இருக்கா? சத்தியவானைக் காப்பாற்றிய சாவித்திரி போல் இவரின் உயிருக்காக நான் போராட வேண்டுமா?’ மனதோடு யோசனையில் உழன்றாள்.
‘முதல்ல சக்தியை ஆத்ம நல்லூருக்கு கூட்டிட்டு போகனும். ஆனா எப்படி ஒத்துக்க வைக்கிறது? உண்மையை சொன்னா எல்லாரும் பயப்படுவாங்களே!’
வெளிரிப்போன முகத்துடன் மகிழுந்தில் தன்னுடன் வந்த இளவஞ்சியைப் பார்த்த சக்தீஸ்வரன்,
“என்ன வஞ்சி? என்ன யோசனை? இன்னும் எனக்கு எதுவும் பிரச்சனை வரும்னு நினைச்சு பயப்படுறியா? நீ கூட இருந்தா எனக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொல்லிட்டாரே! அதனால நீ கவலைபப்ட தேவையில்ல” என்று மனைவிக்கு ஆறுதல் உரைத்தான்.
சக்தியின் பேச்சை கேட்ட நல்லசிவமும் மருமகளின் பயத்தைப் போக்க பேசினார்.
அன்று அரை நாள் விடுப்பு எடுத்திருந்த இளவஞ்சி, மதியத்திற்கு மேல் கல்லூரிக்குச் சென்றிருந்தாள்.
இரண்டு வகுப்புகளை முடித்து விட்டு அறைக்கு வந்து அமர்ந்த இளவஞ்சியின் கரங்கள் தானாக அங்கிருந்த வெள்ளை தாளில் சிவலிங்கங்களை வரைந்த வண்ணம் இருந்தன.
‘எம்பெருமானே! எனக்கு ஏதாவது வழியை காட்டுங்க. அவருக்கு எதுவும் ஆக கூடாது. நீங்க கண்டிப்பாக அவருக்கு எதுவும் ஆக விட மாட்டீங்கனு நம்பிக்கை இருக்கு. ஆனா எப்படி நான் அவரை அங்க கூட்டிட்டு போறது? உண்மையை சொன்னா யாரும் தாங்க மாட்டாங்க’ தனக்குள்ளாகவே இறைவனோடு பேசியவளாய் கைகள் தானாக லிங்கத்தை வரைந்து கொண்டிருக்க,
“ஹே புதுப்பொண்ணே! திடீர்னு லீவ்னு சொன்னதும் புருஷன் கூட ஒன் டே ஹனுமூன் மாதிரி எங்கேயாவது போய்ருப்பனு பார்த்தா இப்படி சின்சியர் சிகாமணியா ஹாஃப் டேல வந்து உட்கார்ந்திருக்க” எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தாள் ஜானகி.
ஜானகியின் பேச்சில் ஐடியா கிடைக்க பெற்றவளாய், “ஜானு தேங்க்யூ சோ மச்” என அவளை அணைத்து குதித்தவள்,
‘யெஸ் ஆத்மநல்லூருக்கு அவரை நான் ஹனிமூனுக்கு கூட்டிட்டு போக போறேன்’ தனக்குள்ளாகவே கூறிக் கொண்டு சிரித்தவளை பார்த்த ஜானகி,
“இதுக்கு தான் புதுசா கல்யாணம் ஆனவங்க கூட ஃப்ரண்ட்ஷிப்பை வச்சிக்க கூடாதுனு சொல்றது. நம்மளையும் கிறுக்காகிடுவாங்க” என்று தலையில் அடித்துக் கொண்டவளாய் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள்.