சக்தீஸ்வரனின் அறையில் இருந்த ஜன்னலின் வழியாக தனது வீட்டைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் இளவஞ்சி.
மதிய வேளை என்பதால் வீட்டில் யாருமில்லாமல் பூட்டப்பட்டிருந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வசிக்கும் வீடு அது. தந்தையின் நினைவுகளைச் சுமந்திருக்கும் வீடு இன்று தன்னை அந்நியமாக நிறுத்தி வைத்திருப்பதை எண்ணிக் கலங்கியவாறு பார்த்துக் கொண்டிருந்தாள் இளவஞ்சி.
“எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ நான் ஆசைப்பட்டேன் அப்பா! இப்ப எங்கே வந்து நிக்கிறேன். சந்தோஷப்படுற மாதிரி எதுவுமே நடக்கலையே! எப்பவும் போல நீங்க இருந்திருந்தா இந்தக் கஷ்டமெல்லாம் எனக்கு வந்திருக்குமானு நினைக்காம இருக்க முடியலைப்பா!” கண்களில் இருந்து நீர் வழிய பார்த்திருந்தவளின் அருகில் வந்து நின்றான் சக்தீஸ்வரன்.
“எல்லாம் சரி ஆகிடும்! ஈசன் சரி செஞ்சிடுவார்! இறைவன்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லி அவரைச் சரணாகதி அடைஞ்சு நம்ம கஷ்டத்தை அவர் பாதத்தில் நாம சமர்ப்பித்த பிறகு அதை நினைச்சு கவலைப்படக் கூடாது. அப்படிக் கவலைப்பட்டா இறைவனை நாம நம்பலைனு அர்த்தம் ஆகிடும்” என்று சக்தீஸ்வரன் கூறவும், வியப்புடன் அவனைப் பார்த்தாள் இளவஞ்சி.
இது வரை இப்படி ஒரு விளக்கத்தை அவள் கேட்டதே இல்லை. எத்தனை பெரிய விஷயத்தை இத்தனை இலகுவாக உரைத்து விட்டான் என்ற ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்திருந்தாள் இளவஞ்சி.
அவளின் பார்வையை எதிர்கொண்டவனாய் கண் சிமிட்டிச் சிரிக்க, அவனின் சிரிப்பிற்குக் கண் சிமிட்டிக் கண்ணீரை உள்ளிழுத்தவாறு புன்னகைத்தாள் அவள்.
அவனிடம் பேசவும் கேட்கவும் நிறைய விஷயங்கள் இருக்கிறது அவளுக்கு. ஆனால் அதற்கான நேரத்தை வழங்காமல் காலம் அவளை விரைவாக ஓட வைத்திருந்தது.
அவளின் வீட்டை விட்டு வந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிறது.
அன்று தனது வீட்டை விட்டு எதிர் வீட்டிற்கு வந்ததும் சக்தியின் தாய் மகேஸ்வரி அவளை ஏற்றுக் கொண்டதில் ஆசுவாசமாக உணர்ந்தாள் இளவஞ்சி.
முகப்பறையில் இருந்த சோபாவில் அமர வைத்த மகேஸ்வரி இளவஞ்சியிடம் பேசினார்.
“எங்ககிட்ட சொல்லிட்டு தான்மா உன்னை காலேஜ்ல பார்க்க வந்தான். நீ சம்மதம் சொன்னதும் உங்க வீட்டுக்குப் போய் எங்களைப் பொண்ணு கேட்க சொல்லியிருந்தான். நல்ல செய்தியோட வருவான்னு நாங்க காத்துட்டு இருக்கும் போது அவன் கால் உடைஞ்சு ஹாஸ்பிட்டல் இருக்கிறதா போன் வந்தது பெரிய அதிர்ச்சி எங்களுக்கு. அதுவுமில்லாம நீ அவன் மயக்கத்துல இருக்கும் போதே அங்கிருந்து கிளம்பி வந்தது வேற உனக்கு அவன் மேல் விருப்பமில்லையோனு எங்களை நினைக்க வச்சிது. அவன் வீட்டுக்கு வந்த பிறகும் அவனோட உடல்நிலை பத்தி நீ விசாரிக்கலையே! அதனால இனி இதைப் பத்தி பேச வேண்டாம்னு சக்தியே எங்ககிட்ட சொல்லிட்டான்” என்றதும் இளவஞ்சி சக்தீஸ்வரனைப் பார்த்தாள்.
அருகிலிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து எதிரே இருந்த மேஜை மீது கால் நீட்டி அமர்ந்திருந்தவன் ஆமாம் என்று தலையசைத்தான்.
‘அப்ப இன்னிக்கு காலைல நான் சக்திக்கிட்ட பேசாம இருந்திருந்தா இப்ப வந்து அவர் என்னைக் கூட்டிட்டு வந்திருக்க மாட்டார் தானே! அந்தக் கனவு தான் இன்னிக்கு என்னை அவர்கிட்ட பேச வச்சிது! அப்ப கனவு தான் எங்களைச் சேர்த்து வச்சிருக்கு! கண்டிப்பா இது ஈசனோட அருள் தான்’ எண்ணியவாறு அவனைப் பார்த்தவள்,
“சக்தியைப் பார்த்தே பத்து நாள் தான் ஆகுதும்மா! எனக்கு எல்லாமே ரொம்ப சீக்கிரமா நடக்குற மாதிரி தோணுச்சு. பயமாவும் இருந்துச்சு. அதான் என் மனசை நானே புரிஞ்சிக்க கொஞ்ச நாள் விலகி இருக்கலாம்னு நினைச்சேன்” என்று மகேஸ்வரியைப் பார்த்தவாறு உரைத்தவளின் மீது தான் இருந்தது அவனின் பார்வையும்.
இது வரை மகேஸ்வரியின் கண்களை நோக்கியவாறு உரைத்தவள் தலையைத் தாழ்த்தியவளாய், “எனக்கு சக்தி பத்தி விசாரிக்க வேண்டியது இருந்துச்சுமா! எப்படி எடுத்ததும் ஒருத்தரை நம்பி வாழ்க்கையை ஒப்படைக்கிறதுனு நிறைய குழப்பம். அதான் சக்தியைப் பத்தி வெளில விசாரிச்சிட்டு முடிவுக்கு வரலாம்னு பேசாம இருந்தேன்” வழமைப்போல் விரல்களைத் துழாவியவாறு உரைத்தாள்.
இளவஞ்சியின் கைகளைப் பற்றிய மகேஸ்வரி, “நீ நினைச்சது தப்பில்லைமா! நாங்க தான் உனக்கு எங்க பையனை பிடிக்கலை போலன்னு தப்பா நினைச்சிட்டோம்” என்று கூறிக் கொண்டிருந்த நேரம அங்கு வந்தாள் மங்கை.
இளவஞ்சியின் உடைமைகளை அவளிடம் அளித்து விட்டு தங்கையை அணைத்தவள், “அம்மா இப்ப கோபத்துல பேசுறாங்க. நீ கவலைப்படாத, எல்லாம் சரியாகிடும்” என்று ஆறுதல் உரைத்தாள்.
“நான் ஏதாவது ஹாஸ்ட்டல்ல ரூம் பார்த்து போய்டுறேன்க்கா? நான் இங்கே இருக்கிறது சரி வராது” என்று மங்கையிடம் உரைத்தவள் கெஞ்சுதலாய் மகேஸ்வரியையும் சக்தியையும் பார்த்தாள்.
“உன்னை தனியா விடறதுக்கு நான் இங்கே கூட்டிட்டு வரலை வஞ்சி” கோபமாக உரைத்திருந்தான் சக்தி.
“உன்னோட அக்கா இருக்கும் போதே இதை பேசிடலாம் வஞ்சி. எப்படியும் என் மகனைத் தானே கட்டிக்கப் போறமா! அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை வச்சிக்கலாமா? நீ என்னமா சொல்ற மங்கை?” வஞ்சியிடம் ஆரம்பித்து மங்கையிடம் வந்து கேள்வியை நிறுத்தியிருந்தார் மகேஸ்வரி.
மங்கையின் முகம் மகிழ்வில் மின்ன, “எனக்கு ஓகே ஆன்ட்டி! உங்களுக்கு எப்படி செய்யனும்னு தோணுதோ செய்யுங்க. ஆனா எங்க வீட்டுல இருந்து யாரும் வர மாட்டோம் ஆன்டி! இப்பவே அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு தான் இங்கே வந்தேன். இனி இப்படி வந்து நான் பேசவும் முடியாது. தப்பா எடுத்துக்காதீங்க” என்றவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, மங்கை என்ற வசந்தாவின் அழைப்பு கேட்க,
“நீங்க சொன்ன மாதிரியே கல்யாணத்தை வச்சிக்கோங்க ஆன்டி! நான் வரேன்” என்றவள், “ஹேப்பி ஃபார் யூ டா” தங்கையை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவளாய் அங்கிருந்து செல்ல, இளவஞ்சியின் கண்களில் நீர் கோர்த்தது.
அவளது பெற்றோரும் உடன் பிறந்தோரும் இல்லாத திருமணம்!
அது அவள் கனவிலும் நினையாதது. வீட்டை விட்டு வந்த அதிர்ச்சியையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்க, இதில் உடனே திருமணத்தை பற்றி அவர் பேசியதில், இப்பொழுது உடனே வேண்டாம் என தான் கூற நினைத்தாள் இளவஞ்சி. ஆனால் அவளின் அக்கா உரைத்த பின்பு இவள் வேண்டாமெனக் கூறுவது சக்திக்கு ஏமாற்றமளிக்கும் அதோடு அவனது வீட்டினரையும் கவலைக்குள் ஆழ்த்தும் எனச் சிந்தித்தவளாய் இருக்க,
“நீ என்னம்மா நினைக்கிற? உன் விருப்பமில்லாம இங்கே எதுவும் நடக்காது! உனக்குத் தோணுவதை வெளிப்படையா நீ சொல்லலாம்மா” இளவஞ்சியின் மனதை அறிய முற்பட்டார் மகேஸ்வரி.
தனது தாயைப் போல் அல்லாது மகேஸ்வரி தனது விருப்பத்தைக் கேட்டு முடிவெடுக்க முனைந்ததில் நிம்மதியுற்றவளாய், “அவரோட கால் சரியாகட்டுமேமா! இப்படியே எதுக்கு உடனே கல்யாணம் வச்சிக்கனும்” கோபம் கொள்வாரோ எனப் பயந்தவளாய் திக்கித் திணறியவாறே உரைத்தாள்.
அவள் நினைத்ததுப் போலவே சக்தி அவளை முறைத்தான்.
“என் கால் தான் உனக்குப் பிரச்சனைனா அதைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம் வஞ்சி. இந்த காலோடவே உன்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறதுல எனக்குச் சம்மதம் தான். கல்யாணம்ங்கிறதே கால் கட்டு தானே! இந்த கட்டோடவே உன்னைக் கட்டிட்டு போறேன்! இதுல என்ன இருக்கு” என்று கண் சிமிட்டிச் சிரித்தான்.
அவள் புன்னகை புரிந்தாலும் யோசித்தவாறு இருக்க, அவளின் அலைபேசி அலறியது.
ஒரு நிமிஷம் என்றவள் எடுத்து பேசினாள்.
“போனை எதுக்குடி வச்சிருக்க நீ? ஒன்னும் சொல்லாம காலேஜூக்கும் வரலை. போனும் எடுக்கலைனா நான் என்னனு நினைக்கிறது? என்னை எப்பவும் இப்படிப் பதட்டப்பட வைக்கிறதே உனக்கு வேலையா போச்சு! இங்கே பிரின்ஸி வேற என்னைக் கேள்வி கேட்டு ஒரு வழியாக்கிட்டு இருக்காரு” ஜானகி பொரிந்து தள்ள, இருவரும் அருகில் அமர்ந்திருக்க இயல்பாய் பேச முடியாமல் திருதிருத்த வண்ணம் இளவஞ்சி முழிக்க,
“நீ மாடிக்கு போய் பேசு வஞ்சி! பேசிட்டு வந்து உன் முடிவைச் சொல்லு” என்றான் சக்தீஸ்வரன்.
நன்றியோடு அவனைப் பார்த்தவள் மாடி அறையினுள் சென்று மெத்தையில் அமர்ந்தாள்.
கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி வழிய காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளை ஜானகியிடம் உரைத்தவள், மகேஸ்வரியும் சக்தியும் திருமணத்தைப் பற்றி பேசியதை உரைத்தாள்.
“என்னடி இது சினிமால நடக்கிற மாதிரியே இருக்கு!” ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக கேட்ட ஜானகி,
“ஆண்டவனா பார்த்து உனக்கேத்த புகுந்த வீட்டுல உன்னை சேர்த்திருக்கான். இதுக்கு மேலயும் என்ன யோசனை உனக்கு? ஒழுங்கா அவரைக் கல்யாணம் செஞ்சிக்கிற வழியைப் பாரு! அதுவுமில்லாம கல்யாணம் செஞ்சிக்காம நீ அந்த வீட்டுல இருக்கிறதும் நல்லா இருக்காது தானே வஞ்சி” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றவாறு அவள் அமைதியாக இருக்க,
“இன்னும் என்ன உன் மண்டைக்குள்ள குடைஞ்சிட்டு இருக்கு” தோழியை அறிந்தவளாய் ஜானகி கேட்க,
“அவரைப் பத்தி எதுவுமே தெரியாதேடி! ராஜா அண்ணா விசாரிச்சு நல்லவங்கனு சொன்னாங்க தான். ஆனா வேற என்ன தெரியும் எனக்கு? பார்த்து பத்து நாள் ஆகாத ஆளுக்காக வீட்டை விட்டு வந்திருக்கேனேனு எனக்கே என்னை நினைச்சு ஆச்சரியமும் பயமுமா இருக்கு ஜானு. இதுல உடனே கல்யாணம்னு சொன்னா பின்னால தப்பான முடிவு எடுத்துட்டேன்னு வருந்திடக் கூடாதேனு பதைபதைப்பா இருக்கு ஜானு” என்றாள்.
“ஹ்ம்ம் வீட்டை விட்டு வந்த பிறகு இதெல்லாம் யோசிக்கிற பார்த்தியா? அறிவாளிடி நீ” வஞ்சப்புகழ்ச்சியாக ஜானகி கூற,
“சரி சரி அழுது வடியாத! உன் வாழ்க்கைக்கு அந்த ஈசன் தான் பொறுப்புனு அவர் மேல பாரத்தைப் போட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ!”
“ஜானு” என மீண்டுமாய் அவள் ஆரம்பிக்க,
“உதை வாங்குவடி நீ! ஒருத்தரை மனசுல வச்சிட்டு இன்னொருத்தர் முன்னாடி கூட நிக்க முடியாதுனு தானே வீட்டை விட்டு வந்த! அப்புறம் கல்யாணம் செய்றதுல மட்டும் என்ன இவ்வளோ யோசனை உனக்கு! இவர் தான் உன் கணவர்னு முடிவு செஞ்சிட்டல! இனி அவரோட நல்லது கெட்டது எல்லாத்தையும் நீ ஏத்துக்கிட்டு தான் ஆகனும். இது தான் சக்திக்கும். கல்யாண வாழ்க்கைங்கிறது பார்ட்னரோட நல்லதை மட்டும் எடுத்துக்கிட்டு கெட்டதை வச்சி சண்டைப் போடுறதுக்கு இல்ல. இரண்டு பேருக்கிட்டயும் இருக்க நல்லது கெட்டது தெரிஞ்சி அட்ஜ்ஸட் செஞ்சிக்கிட்டு அதை ஏத்துக்கிட்டு சக உயிராய் மதிச்சு அன்போட வாழுறதுக்குப் பேர் தான் கல்யாண வாழ்க்கை. இதுக்கு மேலயும் யோசிச்ச மவளே நேர்ல வந்து மூஞ்சிலேயே குத்துவேன்! ஒழுங்கா போய் கல்யாணத் தேதியை குறிக்கச் சொல்லு! நான் பிரின்சிக்கிட்ட நீ இரண்டு நாளைக்கு லீவுனு சொல்றேன்” இது தான் முடிவு என்பது போல் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்தாள் ஜானகி.
ஜானகியுடன் பேசியதில் இளவஞ்சியின் மனம் சற்று தெளிவுற, அவளுடன் பேசியதில் ஏற்பட்ட புன்னகையுடனே கீழே சென்றவள், “நீங்க தேதி குறிச்சு சொல்லுங்கமா! எனக்கு சம்மதம் தான்” என்றாள்.
மகிழ்வில் முகம் பொலிவுற இதழ் விரிய சிரித்திருந்தான் சக்தீஸ்வரன்.
சம்மதம் தெரிவித்தாலும் சக்தியைக் குறித்து அடியாழ மனத்தில் ஒரு விதமான பயம் இருந்து கொண்டே இருந்தது இளவஞ்சிக்கு.
இது கண்டதும் காதல் போலல்லவா நிகழ்ந்து விட்டது. அதுவே அவளுக்கு தான் சரியான முடிவை தான் எடுத்திருக்கிறோமா என்கின்ற சந்தேகத்தை அளித்து பயங்கொள்ள செய்தது.
சக்தியின் தந்தை நல்லசிவத்திற்கு கைபேசியில் அழைத்துப் பேசிய மகேஸ்வரி உடனே முகூர்த்த தேதியைக் குறித்து விட்டு வரச் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து இருந்த முகூர்த்தத் தேதியில் திருமணம் வைத்து கொள்ளலாமென சக்தியின் வீட்டில் அனைவரும் கூற, இத்தனை விரைவாக காரியங்கள் நிகழ்வதில் மேலும் பயமாகியது இளவஞ்சிக்கு.
தேதி முடிவு செய்த பிறகு மேனகாவிடம் தெரிவிக்க மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவள், அது வரை இளவஞ்சி தன்னுடன் இருக்கட்டுமென அவளது இருப்பிடமான திருவேற்காட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாள். அடுத்த இரண்டு வாரத்திற்குக் கல்லூரிக்கு விடுப்பு கூறி விட்டாள் இளவஞ்சி. அந்த இரண்டு நாட்களும் திருமணத்திற்கான வேலைகளிலேயே சென்று விட சக்தியிடம் பேசவும் நேரமில்லை அவளுக்கு.
திருமண நாளிற்கு முந்தைய நாளான இன்று முகூர்த்த உடையை மேனகாவுடன் சென்று எடுத்து வந்தவள், சக்தியிடம் காண்பிப்பதற்காக இதோ வந்து இப்படி நிற்கிறாள்.