அத்தியாயம் 11

அந்தப் பூஞ்சோலை வனத்தில் பூக்களைப் பறித்தவாறு நின்றிருந்தவளின் பின்னே வந்து நின்றான் அவன்‌.

“அடடே என்னைத் தேடியும் வந்து விட்டீர்களே! வியப்பாக உள்ளது” என்று முகத்தில் எவ்வித பாவனைகளையும் வெளிப்படுத்தாமல் உரைத்த பாவையின் கைகளோ பூக்களைப் பறித்து கூடையில் போட்ட வண்ணம் இருந்தன.

“திரும்பி பாராமலேயே என்னை அறிந்து கொண்ட தங்களின் நுண்ணறிவு தான் என்னை வியக்க வைக்கிறது தேவி” அவளின் தோள் மீது கை வைத்து உரைத்திருந்தான் அவன்.

தலையை மட்டும் திருப்பியவாறு அவனைத் திரும்பிப் பார்த்தவள், “அது அறிவு அல்ல சுவாமி உணர்வு! தங்களின் நிழலைக் கூட நானறிவேன்” என்றவாறு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

முறுவலித்தவனாய் அவளின் பின்னேயே சென்ற இவனின் நிழல் அவள் முன்னே சென்று விழுந்தது.

“என் மீதென்ன மனத்தாங்கல் தங்களுக்கு?” என்றவாறே அவளின் பின்னே சென்றான்.

“ஓ தங்கள் மீது நான் கோபமுற்று இருப்பதும் தங்களுக்குப் புரிந்ததோ! ஆச்சரியம் தான்” பரிகாசமான குரலில் உரைத்தாள்.

அவளின் முன்னே சென்று முகத்தைப் பார்த்தவன் அவளின் வாடிய வதனத்தை கண்டு, “தாங்கள் வருந்துமளவிற்கு நான் என்ன செய்தேன் தேவி?” அவளின் தாடைப் பற்றி முகத்தை நிமிர்த்தியவாறு கேட்டான்.

“என்னைக் காணாது ஈசனே தஞ்சமென இருந்து விட்டீர்களே! என்னைத் தாங்கள் மறந்தாலே நான் மறித்து விட மாட்டேனா சுவாமி” உரைக்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.

“நான் தங்களை மறப்பதா? சிவ சிவா” எனக் காதுகளை மூடியவாறு உரைத்தவன்,

“மன்னித்து விடுங்கள்! இத்தகைய எண்ணம் தங்களுக்கு வருமளவிற்கு நான் நடந்து கொண்டதற்கு மன்னிக்கவும் தேவி” யாசித்து நிற்க, நில்லாமல் பூவை நோக்கிச் சென்றாள் பாவை.

“மன்னிக்க மனமில்லையோ தங்களுக்கு?” அவள் பின்னேயே நடந்தவனாய் அவன் கேட்க,

“தங்களை மன்னிக்க நான்‌ யார்?” என்றாள் அவள்.

“மணாளனை வதைக்கும் சொல் இது தேவி” வருந்தும் குரலில் உரைத்தான்.

“ஓஹோ நான் தங்களது மனையாள் என்ற நினைவும் இருக்கிறதா சுவாமி?” அதே பரிகாசமான குரலில் தொடர்ந்தாள் அவள்.

எவ்வகையில் அவளைச் சமாதானம் செய்வது எனப் புரியாது தவித்தவன் பாவையின் பாதை வழியே சென்றான்.

இருவரின் நாசியையும் நறுமணம் தீண்ட, “என்னே ஓர் அற்புத மணம்!” என்றவாறே அந்த பூவைப் பறித்து அவளின் கூந்தலில் சூடினான்.

அப்பூவின் வாசனைக் காற்றோடு கலந்து ஒரு ரம்மியமான சூழலை உருவாக்கியது. அதனை சுவாசிப்பவர்கள் தம்மை மெய்மறக்கச் செய்யும் மணம் அது.

இருவரும் ஒருவித மோன நிலையில் இருக்க, பின்னே நின்று அவளின் கூந்தலில் அந்த மலரை அவன் சூட்டிய நொடி, தனது தலையை அவனது மார்பினில் சாய்த்திருந்தாள் அவள்‌.

அவனின் கைகள் தன்னிச்சையாய் அவளின் இடையைச் சுற்றி வளைத்தது.

காற்றோடு கலந்த நறுமணத்தைச் சுவாசித்தவாறு ரம்மியமான அச்சூழலில் கண்களை மூடியவாறு மோன நிலையில் அந்நொடியை தங்களவர்களின் அண்மையை ரசித்தவாறு இருவருமிருக்க,

“எனது கோபத்தை மடை மாற்றுகிறீர்களா சுவாமி?” கண்களை மூடிய அந்த மோன நிலையிலேயே கேட்டிருந்தாள் அவள்.

ஆச்சரியம் தான் அவனுக்கு.

தனது செயலின் காரண காரியங்களை இத்தனை துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறாளே தனது மனையாள் என்ற ஆச்சரியம் அவனுக்கு.

“ஆம் கோபத்திலிருந்து காதலுக்கு மடை மாற்ற முயற்சிக்கிறேன்! தன்னவளின் துயரத்தைப் போக்குவது மணாளனின் கடமையல்லவா! சமாதானம் செய்ய முயல்வதும் காதல் தானே தேவி” அவள் கழுத்தில் புதைந்தன அவன் இதழ்கள்.

புன்முறுவல் அவளிதழில்!

“வாய் பேச்சில் வல்லவர் தான் தாங்கள்” சிரித்தவாறு அவள் உரைக்க,

“வேறெதில் என் வல்லமை குறைந்து விட்டதாம்?” அவன் கேட்ட நொடி, பட்டெனக் கண்களைத் திறந்து சட்டென அவனை திரும்பிப் பார்த்தாள்.

குறும்புப் பார்வையும் குமிழ் சிரிப்புமாய் அவளை அவன் பார்த்து வைக்க, “தாங்கள் கூறியதின் பொருள் யாது?” எனக் கேட்டு நாணத்தோடு அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் அவள்.

“பொருளறியாப் பேதை ஏன் நாணத்தோடு முகம் மறைக்கிறாளோ?” என்று குறும்பாய் அவன் கேட்க,

அவன் மார்பில் சாய்ந்தவாறே, “குறும்புப் பேச்சிலும் தாங்கள் வல்லவர் தான்” செந்நிறமான வதனத்துடன் அவள் கூற,

“பேச்சில் மட்டும் தானா?” அதே குறும்புப் பார்வையுடன் அவன் கேட்க,

“ஹ்ம்ம் செயலிலும் தான்” நாணங்கொண்டு முகத்தைப் புதைந்திருந்த மார்பிலிருந்து உதடுகளை மட்டும் அவள் அசைக்க, அதன் பொருள் புரிந்தவனின் சிரிப்பொலி அவளின் காதை நிறைத்திருந்தது.

 செவ்வானமாய் முகம் சிவந்திருக்க அக்கனவின் தாக்கத்துடனேயே பூரிப்புடன் மோன நிலையில் இருந்த மனத்தைக் கலைக்க விரும்பாது மென்னகையுடன் எழுந்து அமர்ந்தாள் இளவஞ்சி.

 இருகால்களையும் மடித்து முட்டியில் கன்னத்தைத் தாங்கியவளாய் கண்களை மட்டும் மலர்த்தி நேரத்தை பார்த்தாள்.

விடியற்காலை நான்கு மணியெனக் காண்பிக்க, ஜன்னல் வழியாக எதிர் வீட்டு மாடியினைப் பார்த்தாள்.

இவளின் செவியை எட்டாத வகையில் மெல்லிய ஓசையுடன் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

எழுந்து சென்று அந்த ஜன்னல் கம்பிகளைப் பற்றியவாறு எதிர் வீட்டு பால்கனியைப் பார்த்தாள்.

‘மனசே ஒரு விஷயத்தை நினைச்சு ஆசைப்பட்டாலும் மூளையால் சிந்திச்சு அந்த விஷயம் நமக்கு நல்லதா இல்லையானு ஆராய்ச்சி செஞ்சி தான்‌ மனசோட ஆசையை நிறைவேத்தனும்’ அப்பாவின் வார்த்தைகள் நினைவிலாடியது அவளுக்கு.

மனம் எங்கிலும் அவன் வாசம் புரிந்தாலும் உணர்ச்சியின் பிடியில் முடிவெடுக்க விரும்பாதவளாய் அவனைப் பற்றி அலசி ஆராய நேரமெடுத்துக் கொண்டாள் இளவஞ்சி.

அவனை மருத்துவமனையில் அனுமதித்து வந்ததிலிருந்து இன்றுடன் ஒரு வாரம் கடந்திருந்தது.

அன்று அந்தப் பரிசைக் கண்டவளின் மனமோ பெரும் அதிர்ச்சிக்குள்ளாக, ‘தன்னைப் போன்றே இவருக்கும் கனவுகள் வருகிறதா? அவ்வாறு வருவதினால் தான் தன்னைப் பின்தொடர்ந்து வருகிறாரா? அவரும் தன் மீது மையல் கொண்டிருக்கிறாரா? கேள்வி எழுப்பியது.

‘அப்ப ஜானு சொல்ற மாதிரி இது ஈசனின் வேலை தானா? நாங்க சேரனும்னு அவர் விரும்புறாரா?’ அவளுக்கே தனது கேள்வி அபத்தமானதாகத் தோன்றினாலும், தான் காணும் கனவுகளுக்கான காரண காரியங்களை அறிந்திட விரும்பினாள் இளவஞ்சி. ஈசனையே அதற்கு காரணமாய் எண்ணிட மனம் விழைந்தாலும், அதை மட்டும் வைத்தே சக்தியைத் தனது கணவனாக்கிக் கொள்ள விரும்பவில்லை அவள்‌.

மருத்துவமனையில் அந்த வரைப்படத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்த வஞ்சியிடம் வந்த ஜானகி, “எப்படியோ அவரோட அப்பாக்கு கால் செஞ்சி விஷயத்தைச் சொல்லிட்டேன் வஞ்சி” என்றதும், “சரி வா ஜானு கிளம்பலாம்” என்று அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானாள் இளவஞ்சி‌.

“என்னடி உன் ஆளை இப்படியே விட்டுட்டு போகலாம்னு சொல்ற” என்று கேட்டு ஜானகி அவளின் கையினில் இடிக்க, ஆஆஆஆ என்று லேசாக அலறினாள் வஞ்சி. அப்பொழுது தான் அவளின் கையினில் தார்ச்சாலை ஏற்படுத்தியிருந்த சிராய்ப்புகளை கண்டனர் இருவரும்.

“என்னடி காயம் இது? நீயும் அவர் கூட சேர்ந்து விழுந்திட்டியா என்ன?” காயத்தைப் பார்த்தவாறே ஜானகி கேட்க,

“இல்லடி! அவர் விழுந்ததும் தூக்கி விட ஓடி போனப்ப விழுந்துட்டேன்” என்றாள்.

“ஆமா அவர் எதுக்கு உன்னைப் பார்க்க வந்தாரு?” ஜானகி கேட்க,

“தெரியலை ஜானு” என்றவள், “வா இங்கிருந்து கிளம்பலாம் முதல்ல! அவர் எதுக்கு காலேஜுக்கு வந்தாருனு தான் அவங்க அப்பா அம்மா கேட்பாங்க. இரண்டு வீட்டுக்கும் எங்க விஷயம் பத்தி தெரியாம இருக்கணும்னா நாம இங்கிருந்து முதல்ல கிளம்பனும்” என்றவள் சக்தியைப் பார்த்தவாறு மனமே இல்லாமல் ஜானகியின் கையைப் பிடித்திழுத்து வெளியே வந்தாள்.

“உன் கைக்கு ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு போலாம் வஞ்சி” என்று ஜானகி கூறியதையும் கேட்கவில்லை அவள்.

அங்கிருந்த ஆட்டோ ஓட்டினரிடம் சக்தியின் தந்தை அலைபேசி எண்ணை அளித்து விட்டு, சக்தியைக் கவனித்துக் கொள்ளுமாறு உரைத்து விட்டு கிளம்பி விட்டனர்.

கையிலிருக்கும் காயத்திற்கான காரணத்தை வீட்டினரிடம் ஏதோ கூறி சமாளித்திருந்தாள் இளவஞ்சி‌.

மறுநாளே ஜானகியிடம் சக்தியைப் பற்றி விசாரிக்கக் கூறினாள்.

“எங்க வீட்டுல இப்ப யார்கிட்டேயும் நான் சக்தி பத்தி பேச முடியாது! எங்க அக்காகிட்ட சொன்னா கூட எப்படியாவது என் அம்மாவுக்கும் தம்பிக்கும் தெரிய வாய்ப்பிருக்கு! அதனால நீ சக்தியைப் பத்தி விசாரிச்சு சொல்றியா ஜானு” எனக் கேட்டாள் இளவஞ்சி.

“ஹே வஞ்சி! நிஜமா சக்தியைக் கல்யாணம் செஞ்சிக்கிறதுல சம்மதமா உனக்கு?” மகிழ்வுடன் ஜானகி கேட்க,

“ஆமா ஜானு! என் மனசு அவரை ரொம்பவே விரும்புதுனு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அவரைப் பத்தி எதுவும் தெரிஞ்சிக்காம ஏத்துக்கிறதுல எனக்கு விருப்பமில்லை” என்றாள் இளவஞ்சி‌.

“சப்போஸ் அவரை பத்தி ஏதாவது தவறான விஷயத்தைக் கேள்விப்பட்டா கல்யாணம் செஞ்சிக்க மாட்டியா வஞ்சி?” ஜானகி கேட்க,