அத்தியாயம் 1

ஆதி சிவன் தாள் பணிந்து

அருள் பெறுவோமே – எங்கள்

ஆதி சக்தி நாயகியின்

துணை பெறுவோமே

இப்பாடல் ஒலித்தவாறு கைப்பேசி அலற, கவனித்தும் கவனியாதது போல் அந்த அழைப்பைப் புறம் தள்ளியவளாய் அமர்ந்திருந்தவளின் கரம் ஒரு தாளில் கை போன போக்கில் குட்டிக் குட்டியாய் பல சிவலிங்கங்களைக் கிறுக்கலாய் வரைந்த வண்ணம் இருந்தன. நெஞ்சத்தின் பெரும் குமுறலை அடக்கும் வடிகாலாய் தீவிரமாய் வரைந்து கொண்டிருந்தாள் இளவஞ்சி.

அச்சமயம் கைப்பேசி விடாது ஒலிப்பதையும், அதனைக் கவனியாது தாளில் வரைந்து கொண்டிருக்கும் தனது தோழியையும் பார்த்தவாறு அப்பணியாளர் அறைக்குள் (staff room) நுழைந்தாள் ஜானகி.

“எந்தக் கோவிலுக்கும் போக மாட்ட! எந்தச் சாமியையும் கையெடுத்துக் கும்பிட மாட்ட! ஆனா பாட்டும் கைவண்ணமும் எப்பவும் சிவமயமா தான் இருக்கும். அதெப்படி வஞ்சி இத்தனை முரணா இருக்க நீ?” கேலிச் செய்த தோழியை முறைத்தாள் இளவஞ்சி.

“அந்த அடிக்கிற போனை எடுத்துப் பேசினா தான் என்னவாம்?” கேட்டவளாய் இளவஞ்சியின் அருகினில் இருந்த தனது இருக்கையில் அமர்ந்தாள் ஜானகி.

“அடிச்சி அடங்கட்டும்! யாருக்கிட்டயும் நான் பேசுற மாதிரி இல்லை. என்னை மனுஷியாவே மதிக்காதவங்ககிட்ட எனக்கென்ன பேச்சு?” கோபமாய் உரைத்திருந்தாள் இளவஞ்சி‌.

“என்னடி? என்னாச்சு? காலைலயே ஏன் இவ்ளோ டென்ஷனாகுற?” ஜானகி ஆதுரமாய்க் கேட்க,

வரைவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அமர்ந்தவளாய், “இன்னிக்குச் சாயங்காலம் என்னைப் பொண்ணு பார்க்க வராங்களாம் ஜானு. நேத்துலருந்து வீட்டுல இதைப் பத்தி தான் பேச்சு. அதைப் பத்தி பேச தான் இப்பவும் தம்பி போன் செய்றான்” என்றாள் இளவஞ்சி.

“சூப்பர்டி! நல்ல விஷயம் தானே! அதுக்கு ஏன் இப்படி மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு இருக்க?” எனக் கேட்டாள் ஜானகி.

ஜானகியை முறைத்தவாறு மீண்டுமாய்ச் சிவலிங்கத்தைக் கிறுக்கலாய் வரைவதைத் தொடர்ந்தாள் இளவஞ்சி.

“ஏன் வஞ்சி? எத்தனை நாள் தான் இப்படியே இருந்திட முடியும் சொல்லு? எப்படியும் கல்யாணம் செஞ்சிக்கத் தானே போற! அதை இப்பவே செஞ்சிக்கிட்டா தான் என்ன?” எனக் கேட்டாள் ஜானகி.

“அக்காக்கு கல்யாணம் ஆகாம எனக்குச் செஞ்சிக்கிறதுல முதல்ல எனக்கு விருப்பம் இல்லாம தான் இருந்துச்சு ஜானு” என்றவள் நிறுத்தவும்,

“உன் அக்கா தான் லவ் பண்ணவனைத் தான் கட்டிப்பேன்னு அடமா இருக்காங்களே! அஞ்சு வருஷமா அந்தப் பையன் வீட்டுல பேசிப் பார்த்தும் ஒத்துக்காம இருக்காங்க. இதுக்கு ஏதாவது ஒரு முடிவு உன் அக்கா தான் எடுக்கனும். வயசு என்ன வருதா போகுதா! அவங்களுக்கு முப்பது ஆகுது உனக்கு இருபத்து எட்டு ஆகுது! இன்னும் அக்காக்குப் பிறகு செஞ்சிக்கிறேன்னு இருந்தீனா உன் வாழ்க்கையைப் பார்த்துக்க வேண்டாமா? அவங்க பாட்டுக்கு அந்தப் பையன் கூட வாழ போய்டுவாங்க. அப்புறம் நீ தான் கட்டிக்கப் பையன் கிடைக்காம அல்லாடனும். ஒழுங்கா கல்யாணம் செஞ்சிக்கிற வழியைப் பாரு வஞ்சி” ஆதங்கத்துடன் ஆரம்பித்துப் பொரிந்து தள்ளியவளாய் கெஞ்சலுடன் முடித்தாள் ஜானகி‌.

“இப்ப கல்யாணம் செஞ்சிக்கிறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ஜானு. அக்கா அவளோட வாழ்க்கைல திடமா இருக்கும் போது நான் என்னோட வாழ்க்கையைப் பார்த்துக்கிடனும்னு அம்மாவும் அட்வைஸ் செஞ்சாங்க. அதனால எனக்கு மாப்பிள்ளை பார்க்க நான் ஓகே சொன்னேன். அக்கா மாதிரி நான் யாரையும் லவ் பண்ணலைங்கிறதுக்காக அவங்க யாரைச் சொன்னாலும் நான் கட்டிக்கனும்னு நினைக்கிறது எந்தவிதத்துலடி நியாயம்” நெஞ்சம் குமுறிக் கொண்டு வந்தது இளவஞ்சிக்கு.

“ஏன் வஞ்சி, அவங்க பார்த்திருக்க மாப்பிள்ளை உனக்குப் பிடிக்கலையா?” ஆதுரமாய் வினவினாள் ஜானகி.

“என்னை அடமானம் வச்சி அவங்க ஆயுளுக்கும் சுகமா வாழலாம்னு பார்க்கிறாங்க ஜானு‌. நாங்க இருக்க வீட்டோட ஓனர் பையன் தான் என்னைப் பொண்ணு கேட்டுருக்கான்” பொங்கிய கண்ணீரை அடக்கியவாறு வஞ்சி உரைக்க,

“சரி இது நல்ல விஷயம் தானே! பெரிய பணக்கார வீட்டு பையன் உன்னைப் பிடிச்சு கேட்டிருப்பானா இருக்கும். இதுல அடமானம் வைக்க என்ன இருக்கு?” எனக் கேட்டாள் ஜானகி.

“என்னை இரண்டாம் தாரமா கட்டி வைக்கப் பார்க்கிறாங்க ஜானு” கண் கலங்கியவாறு இளவஞ்சி வெடிக்க, அதிர்ந்து போனாள் ஜானகி.

‘என்னது செகண்ட் மேரேஜா? இரண்டாம் தாரமா வாழ்க்கைப்படுற அளவுக்கு இவக்கிட்ட என்ன குறைஞ்சி போச்சு’ பொங்கிக் கொண்டு வந்தது ஜானகிக்கு‌.

மனதால் கூட இம்மியளவேனும் எவரையும் நினைத்ததில்லையே இந்தப் பெண். கல்லூரியில் எவரையும் ஆர்வமாய்க் கூடப் பாராதவளைப் பார்த்துக் கேட்டிருக்கிறாள் ஜானகி.

“ஏன்டி நிஜமாவே இது வரைக்கும் நீ யாரையும் சைட்னு கூடப் பார்த்ததில்லையா? அழகா இருக்காங்கன்னு கூட நினைச்சதில்லையா?” ஆச்சரியமாகக் கேட்டிருந்த ஜானகியிடம்,

கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்கனு பத்து வருஷமா திருவெம்பாவை படிச்சி சிவனை வணங்கினவடி நானு. இப்ப எந்தச் சாமியையும் கும்பிடலைனாலும் பருவ வயசுல மனசுல பதிஞ்சு போனது. கட்டினவரை தவிர யாரையும் லேசா நினைக்கவோ பார்க்கவோ கூட மனசு ஒப்பாதுடி” என்பாள் இளவஞ்சி.

(கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க! – திருவெம்பாவை.

விளக்கம்: இரவும் பகலும் எங்கள் கண்கள் நின்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக)

“அழகை ரசிக்கிறதுல என்னடி தப்பு?” ஜானகி கேட்டிருக்க,

“தப்புன்னு நான் எங்கே சொன்னேன்? நான் இப்படி வளர்ந்தனால அதுலலாம் மனசும் மைண்ட்டும் போறதில்லைனு சொன்னேன். ஆறடி உயரம் அழகிய உருவம், ஆப்பிள் போலே இருப்பானேனு நீ அழகை ரசிச்சு துதி பாடு கொண்டாடு நான் வேண்டாம்னு சொல்லலையே” என்று கேலிச் செய்வாள் இளவஞ்சி‌.

‘இப்படியாக வளர்ந்த தாமே நல்ல புரிதலான கணவருடன் இன்பமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, கணவனைத் தவிர வேறு எவரையும் சிந்தையால் கூடச் சீண்ட மாட்டேனென வாழும் இத்தகைய பெண்ணிற்கா இரண்டாம் திருமணம் செய்ய விழைகிறார்கள்’ ஜீரணிக்கவே முடியவில்லை ஜானகிக்கு.

“உங்கம்மாக்கு என்ன பைத்தியம் பிடிச்சு போச்சா?” கோபமாய்க் கேட்டிருந்தாள் ஜானகி.

“ஆமா பணப் பைத்தியம்” எனும் போதே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது‌.

“உனக்கே தெரியும்ல நாங்க இருக்கிறது தனி வீடு. ஓனர் வீடு வேற எங்கேயோ இருக்குனு தெரியும்ல. நாங்க இருக்க வீட்டை எங்க அம்மா பேருக்கு மாத்துறேன்னு சொல்லி என்னைப் பொண்ணு கேட்டிருக்காங்க. வரதட்சணையே வேண்டாம்னு சொல்லிருக்காங்க. என் தம்பி வேலை தேடி அலைஞ்சிட்டு இருக்கான்ல. அவனுக்கு அவங்க கம்பெனில நல்ல வேலைக்கு எடுத்துக்கிறதா சொல்லிருக்காங்க. இது எல்லாத்துக்கும் பணயமாக என்னைக் கேட்டிருக்காங்க. இவங்களும் அதுக்குத் தயாராக இருக்காங்க” கண்களைத் துடைத்துக் கொண்டவள் மேலும் தொடர்ந்தவளாய்,

“அப்பா இறந்ததிலருந்து எனக்குனு நான் என்னிக்கும் வாழ்ந்ததில்லை ஜானு. உனக்கே தெரியும்ல ஸ்காலர்ஷிப்ல தான் காலேஜ் படிச்சேன். அப்பவும் டியூசன் எடுத்து என்னாலான உதவியை வீட்டுக்குச் செஞ்சேன். அம்மா பூக்கடை வச்சி கஷ்டப்படுறாங்களேனு கண்டிப்பாக வேலைக்குப் போய் அவங்களை நல்லா வச்சி பார்த்துக்கனும்னு வைராக்கியமா படிச்சி இந்த வேலைக்குச் சேர்ந்தேன். அப்பவும் என் சம்பாத்தியம் எல்லாம் தம்பி படிப்புக்கும் வீட்டு செலவுக்கும் தானே கொடுத்துட்டு இருக்கேன். இவ்வளவு செஞ்ச பிறகும் என் வாழ்க்கையே பணயம் வைக்க நினைச்சா நான் என்ன செய்றது?

சரி எங்க வீட்டு வறுமைக்கு அவங்க சொல்றதை ஒத்துக்கிட்டுக் கல்யாணம் செய்றதுக்கு அந்தப் பையனுக்கு நல்ல குணமும் நடத்தையும் இருக்கனும் தானே. நான் கேள்விப்பட்ட வரை எதுவும் சரியா இல்லை. அப்புறம் எப்படி நான் சம்மதிப்பேன். என்னைத் தான் வீட்டுல எல்லாரும் கன்வின்ஸ் செய்யப் பார்க்கிறாங்க. நீங்கலாம் இவ்வளோ தானானு நேத்தே மனசு விட்டுப் போச்சு ஜானு” கண்ணீருடன் விரக்தி குரலில் கூறிய இளவஞ்சி,

“இன்னிக்கு நைட் மட்டும் என்னை எங்கேயாவது கடத்திட்டு போய்டுடி ஜானு” என்று கண் கலங்கினாள்.

“எனக்குனு யாருமே இல்லை ஜானு!” என்று தேம்பியவள், “யாரும் வேண்டவே வேண்டாம். என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன். நாளைக்கு வேற எங்கேயாவது பிஜி மாதிரி பார்த்துட்டு போய்டுறேன்” என்றாள்.

தோழியின்‌ நிலை எண்ணி வருத்தப்பட்டு ஆழ்ந்த பெருமூச்செறிந்தவளாய்,

“கடத்திட்டு போய்ட்டா மட்டும் பிரச்சனை சரியாகிடுமா என்ன? எந்தப் பிரச்சனையுமே நாம ஓட ஓட தான் நம்மளை துரத்திக்கிட்டே இருக்கும். நாம எதிர்த்து நிற்கும் போது அந்தப் பிரச்சனை தூரமா ஓடிடும்” அவளின் தலையை ஆதுரமாகத் தடவியவாறு கூறினாள் ஜானகி.

சில நிமிடங்கள் சிந்தித்தவளாய், “இன்னிக்கு அந்தாளு என்னைப் பொண்ணு பார்க்க வரும் போது நான் அங்க இருக்கக் கூடாது. அதுக்கு மட்டும் ஒரு ஐடியா கொடு! அதுக்குப் பிறகு வீட்டுக்குப் போய் நான் பிரச்சனையைப் பேஸ் செஞ்சிக்கிறேன்” திடமாக உரைத்தாள் இளவஞ்சி‌.

‘இத்தனை வருஷமா இருக்க இவளோட வைராக்கியத்தை உடைச்சு இவளைக் கொண்டு போய் அவர்கிட்ட ஒப்படைக்கிறதுக்கு இது தான் சரியான நேரம்’ மனதோடு எண்ணிக் கொண்ட ஜானகி, “சரி சாயங்காலம் காலேஜ் முடிஞ்சதும் என் கூட வந்துடு! நைட் ஒன்பது மணிக்கு மேல உங்க வீட்டுக்கு போ” என்றாள்.

இதனை கேட்ட மறுநொடி உற்சாகமானவளாய், “நல்ல ஐடியா ஜானு! தேங்க்யூ ஜானு” என அவளின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிக் கொண்டாள்.

வஞ்சியின் செய்கையைக் கண்டு சிரித்தவளாய் அவள் கிறுக்கிக் கொண்டிருந்த தாளைக் கண்டவள், “அதென்னடி சாமி கும்பிட மாட்ட! கோவிலுக்குப் போக மாட்ட! ஆனா கை மட்டும் தானா எப்பவும் சிவலிங்கத்தை வரைய ஆரம்பிச்சிடுது” எப்பொழுதும் அவளை ஆச்சரியப்படுத்தும் அவளின் செய்கையைப் பற்றிக் கேட்டாள்.

“அது அப்பா கூட இருந்தப்ப வந்த பழக்கம் ஜானு! அவர் மட்டும் இப்ப இருந்திருந்தாருனா நான் ஏன் இப்படிப் புலம்பிட்டு இருக்கப் போறேன்” என்று பெருமூச்சு விட்டாள்‌.

மணி அடிக்கும் சத்தம் கேட்க, “நெக்ஸ்ட் பீரியட் ஆரம்பிச்சிடுச்சு வஞ்சி! உனக்கு இன்னிக்குக் கிளாஸ் எதுவும் இல்லையா என்ன?” எனக் கேட்டவாறு தனது மேஜையில் இருந்த புத்தகத்தை எடுத்தவாறு கிளம்பினாள் ஜானகி.

“எனக்கும் கிளாஸ் இருக்கு ஜானு” என்றவளாய் அவளும் பரபரப்பாய் அங்கிருந்து கிளம்பினாள்.