Advertisement

எனக்கானவளே நீதானே…
(வசமிழக்கும் வானம் நான்….)
வீராவின் பயிற்சி, அத்தனை பிடித்தமானதாக இருந்தது அவனுக்கு… கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் கண்ட… அவனின் கொள்கைகளும் கோட்பாடுகளும் இப்போது வேறு உருவம் கொண்டு நின்றன…
இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து.. பல்வேறு தகுதிகளை கொண்டு… ஒரே படிப்பில் சாதனை செய்து வந்த அனைவரையும் பார்க்கும் போது… இது என் நாடு என எண்ணாமல் இருக்க முடியவில்லை… வீராவினால்.
‘இங்கே, தனிமை கிடையாது…. இங்கு தனித்தவர் எவரும் இல்லை என்ற என்ன வந்தது. இந்தியாவின் பெருமைகளையும், அதன் கொள்கைகளையும், அதன் செயல்பாடுகளையும் அடுத்த கட்டத்திற்கு தாங்கி கொண்டு செல்லும் தூண்கள் நாங்கள்’ என பெருமிதமாக உணர்ந்தான் வீரா…
வீராக்கு சுவராசியமாக சென்றது… நமது குடியுரிமையியல் பற்றிய அறிவு… அதன் முரண்பாடுகளை களையும் விதம், அன்றாட பணிகள், அவசர காலங்களில் செய்ய வேண்டிய நடைமுறைகள்… என பல பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படும்…
எனவே வீராக்கு, குடுமத்தினர் நினைவே சற்று மந்தமாகதான் இருந்தது… எப்போதும் அவனின் சிந்தனையிலேயே இருந்தான். இதில் எங்கிருந்த பைரவியின் நினைவு வரும்… அவ்வபோது வீசும் சந்தனகாற்றாய் அவள், மனதில் மணந்தாலும்… இன்னும் வசப்படவில்லை என்பதால்… அப்படியே நாட்களை கடத்தினான்…
சுந்தரத்திற்கு, மாதம் ஒரு முறை வீடியோ காலில் அழைத்து பேசினான்… அப்படியே எல்லோருடனும் பேசுவான்… ஹாலில்தான் அமர்ந்து எல்லோரும் பேசுவர்… ஆனால், பைரவி வெளியே வருவதேயில்லை… அவனும் விசாரிப்பதேயில்லை… ஆனால் ஏதோ ஒரு தாக்கம் இருவருக்குள்ளும் இருக்கும்… மாதங்கள் கடந்தது… இப்படியாக.
ராகவ்வும்… வந்து, ஒருமாதம் குடும்பத்துடன் இருந்து கிளம்பினார்.  குலதெய்வம் கோவில் சென்று… பைரவியின் ஜாதகம் வைத்து வழிபாட்டு வந்தனர்…
சொந்தங்கள் எல்லோரிடமும் சொல்லி வைத்தனர். இந்தமுறை பைரவிக்கு நிறைய மேடை இருந்ததால்… எங்கும் டூர் செல்லவில்லை குடும்பத்தார்… தன் மகள் பேசும் எல்லா இடங்களுக்கும் ராகவ் கூடவே சென்றார்… ப்பா… அவரின் முகத்தில் எத்தனை பெருமை… அவரின் மகள் குறித்து.
ஒன்றும் பெரிதாக மாற்றமில்லாமல் அந்த விடுமுறை சென்றது… சொந்தங்களின் வீட்டுக்கு செல்ல… அதை தொடர்ந்து அவர்கள் வர… என நேரம் சரியாக இருந்தது… ராகவ் கோதை தம்பதிக்கு.
அவ்வபோது பெற்றோரும் பைரவியிடம் கேட்க தொடங்கினர்… “எப்படி மாப்பிள்ளை பார்க்கட்டும்…. உன் விருப்பம் என்ன, எப்படின்னு.. சொல்லு டா…” என ஆவலாக கேட்க தொடங்கினர்… பைரவி நிற்பதேயில்லை இந்த கேள்விக்கு மட்டும்….
எல்லாம் ஓரளவுக்கு சரி செய்து… ராகவ், கிளம்பும் நாளும் வந்தது அன்று மீண்டும் ராகவ் “ரவிம்மா… இன்னும் எனக்கு பதில் சொல்லல…. 
பார்க்கிறேன்.. எப்போ என்கிட்டே பேசறேன்னு” என்றார் ஆற்றாமையாய்.
பைரவி “ப்பா…. ப்ளீஸ்… படிப்பு முடியட்டும்” என சமாளித்து அவரை வழியனுப்பினாள்.
இயல்பான முறையில் வாழ்க்கை செல்ல… வரன்களும் ஒன்றிரண்டு வர தொடங்கியது பைரவிக்கு…. எனவே, மீண்டும் பெற்றோர் இருவரும் இந்த அதே கேள்வியை கேட்க தொடங்கினர்… “எப்படி மாப்பிள்ளை பார்க்கட்டும்…. உன் விருப்பம் என்ன, எப்படின்னு சொல்லு டா… அதன்படி பார்க்கலாம்….
வெளிநாடு வரன் நிறைய வருது… உங்க அம்மாதான் யோசிக்கிறா…
உனக்கு ஓகே ன்னா… சொல்லுடா…” என பலவிதமாக… கேட்டும் பைரவி வாய் திறக்கவில்லை… 
அவள் மொழிந்ததெல்லாம் “ப்பா… ப்ரிபர் பன்னனுப்பா…. “ என்பாள்.. இல்லை, “இப்போதான் வந்தேன்…. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்” என்பாள்… ஆக எப்படியோ தப்பித்தாள்… நாட்கள் சென்றது.
அன்று விடுமுறை தினம் எல்லோரும் உணவு உண்டு அப்போதுதான் வந்து அமர்ந்தனர்… ராகவ்வும் சென்று ஐந்து மாதம் ஆகியிருந்தது… எனவே இன்று தாத்தா பிடித்துக் கொண்டார்… மகனின் வேதனை புரியவும் மெல்ல பைரவியிடம் பேசினார்… “என்ன டாம்மா… இப்படியே அமைதியாகவே இருந்திடலாம்ன்னு நினைக்கிறியா…. சொல்லுடா உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்…. ” என்றார்… சிரித்தபடியே…
இன்று தப்பிக்க முடியாது என தோன்றியது… அவளுக்கு. என்ன சொல்லுவது என தெரியவில்லை… சிறிது நேரம் அமைதி… 
மீண்டும் தாத்தாவே “நீ இன்னும் சின்ன பெண்ணில்லையே ம்மா… எப்படி இருந்தாலும் கல்யாணம் செய்துதானே ஆகவேண்டும்… உன்னோட ஆசைய சொல்லுடா…  அதுக்கு தக்க பார்க்கலாம்….” என்றார், அவளின் தலை கோதி…
கோதை, அவளின் எதிரில் அமர்ந்திருந்தார்… லேபில் அவளின் பதிலுக்காக காத்திருந்தார் ராகவ். ஐஸ் டிவியில் கண்ணும்… இங்கு காதும் வைத்திருந்தாள்…. பைரவி மண்ணில் விழுந்த பாதரசமாக… தனியே நெளிந்தாள்… 
ராகவ்வும் “சொல்லுடா” என்றார்… அப்போதுதான் வீடியோ காலில் வந்திருந்தார் அவர்…
பைரவிக்கு, அன்று முதல் முதலாக மக்கள் மத்தியில பேசும் போது… கைகட்டி நின்று கேட்ட… ‘வீரா’ கண்முன் வந்தான்… நான் கலெக்டர் ஆகிடுவெனா என கேட்டது முதல்… பைரவி அவனை கொஞ்சம் நினைக்க தொடங்கியிருந்தாள்…. ஆனால், அதன் பின்தான், வீரா இவளின் கண்ணில் படவேயில்லை… எனவே, மனம் அழுத்தமாக, கண்கள் கரித்துவிடுமோ என்றானது……… 
அவளின் மனமோ ‘என்ன சொல்ல போற..’ என்க, ஒன்றும் புரியவில்லை அவளுக்கு… ‘ஆறுமாதமாக கேட்கின்றனர் வீட்டில்… என்ன சொல்ல…’ கோவமாக வந்தது… தன் மீதே. எதுவும் புரியாத கோவம்…
‘என்ன சொல்லுவ’ அவள் மனம் கேட்க…. மூளை… ‘என்ன சொல்லுவ… வீராவ பிடிக்குதுன்னு சொல்லுவியா… அவன் உன்கிட்ட சொன்னனா… இல்ல, நல்லா பேசினியா… எந்த நம்பிக்கையில் சொல்லுவா…’ என மூளை இடித்து இடித்து கேட்க…. மனமோ அமைதியாய்… நின்றது…
மீண்டும் மூளை… “ஆமா முதல்ல… உன்னை, அவனுக்கு பிடிக்குமான்னாவது தெரியுமா…
இல்ல, நீதான் ஏதாவது அவன்கிட்ட சொல்லியிருக்கியா… இப்போ எந்த நம்பிக்கையில்.. என்ன சொல்லுவ” என மூளை கேள்வி கேட்க…  ஏதுமே புரியாத… குழம்பிய நிலையில் பைரவி…
கோதை “ரவி… என்ன.. சொல்லு” என்றார்… கொஞ்சம் அதட்டலாக… எவ்வளவுநாள் கேட்பது… எப்படி பொறுமை இருக்கும் பெற்றோருக்கும். இவள் வேறு யாரையும் நினைத்திருக்கிறாளோ… என அன்னையாக மனம் பதை பதைக்க… கொஞ்சம் அதட்டலாக கேட்டார்…
பைரவிக்கு அந்த அதட்டலே போதுமானதாக இருந்தது போல, தன்னுள்ளிருந்து வெளியே வந்தாள்… ‘அவனுக்கு என் நினைவு இல்லை…. அப்படி சொல்ல கூடாது… என்னை, அவன் அப்படி நினைக்கல… இத்தனை நாட்களில் நான் வேண்டுமென்றால்… பேசியிருப்பான்தானே… அப்போ, நான் தேவையில்லை…. அவனுக்கு. அவ்வளோதான்… நான் மட்டும் ஏன் நினைக்கணும்…. எ… எனக்கென்ன… இவன் இல்லன்னா… வேற யாரும் கிடைக்க மாட்டாங்களா” என அறிவு சொல்ல… 
மனமும் தூபம் போட்டது… ‘ஆமாம்.. பெரிய கலெக்டர்… இவர காணோம்னு தேடறாங்க… போ… போடா….’ என ஏதோ ஒரு கோவம்… ஆனால், ‘அவன்’ தாக்கத்தால் வந்த கோவம்தான் என புரியவில்லை அவளுக்கு. ஒருவழியாக… அறிவும், மனமும் ஒன்று சேர…. பைரவி “எனக்கு வெளிநாட்டு வரன் வேண்டாம்… இ…இங்கைய பாருங்க…” என்றாள்… சின்ன குரலில்… எல்லாம்.. துடைத்து விட்டு, சொல்லியே விட்டாள்… இனி பின்வாங்க கூடாது என எண்ணி சொல்லிவிட்டாள்…
“போ உறவே…
எனை மறந்து…  
உன் கனவுகள் துரத்தியே….
போ உறவே….
சிறகணிந்து நீ உந்தன்….  
கனங்களை… உதறியே….
போ…. உறவே….
எனை மறந்து… 
உன் கனவுகள் துரத்தியே….
போ உறவே….”
அருகில் வந்தார் கோதை “என்ன டா…” என்றார்.. வாஞ்சையாக.
“ம்கூம்..” என மகள் கண்சிமிட்டி தலையசைத்து… அன்னையின் தோள் சாய்ந்தாள்… ஆக கோதைக்கு திக்கு என்றானது…
எப்போதும் சட்டென உடைபவள் இல்லை… இன்று ஏனோ அப்படிதான் இருந்தாள் ரவி… அந்த நிமிடத்தில் முகத்தில் ஏதோ… ஒரு தோற்றம்… என்னமோ சரியில்லை என உணர தொடங்கினார்… அன்னை. தோளில் சாய்ந்தவளை அதரவாக தலை கோதினார்…
ராகவ் “பாத்திடலாம்… உன் விருப்படியே செய்திடலாம்….. ரவிம்மா….” என்றார் உற்சாகமாக. அதற்குள்,
ஐஸ் “ப்பா… எனக்கு IAS, இல்ல IPS… வீராண்ணா… மாதிரி… பார்த்திடுங்க…” என்றாள் கள்ளமில்லாமல்… சத்தமான குரலில், ஆரவாரமாக சொன்னாள்.
தாத்தா… முதற்கொண்டு எல்லோரும் சிரித்தனர்… “என்னது வீராண்ணாவா… “ என ராகவ் சிரித்தபடியே கேட்க…
ரவி, தன் அன்னை தோளிலிருந்து எழுந்தாள்… அத்தனை இறுக்கத்திலும் அவர்களை புரிந்தவளாக…. ”அது ஒரு லூசும்மா… ஜெனிலிய கேரெக்டர்… எப்போ, என்ன பேசனும்ன்னு தெரியாது” என யாருக்கு சொன்னாள் என தெரியவில்லை… சின்ன குரலில் சொன்னாள்.
கோதை “அடி ஏய்… அறிவே இல்லையா…. உங்க அக்காக்குதான் பார்க்கிறோம்… உனக்கு பார்க்கும் போது, கேட்போம் அப்போ சொல்லு
எப்போ, என்ன… பேசறதுன்னுன்னே இன்னும் இவளுக்கு தெரியமாட்டேங்குது….
யாராவது வரும்போது உளற போறா…” என்று, புலம்பல் பாதி, கோவம் மீதியாக ஐஸுவை திட்டினார் கோதை.
ஐஸ் “ச்சு…. அப்போ நீங்க கேட்க மறந்துட்டா என்ன பண்றது… அதான்” என்றாள் சிரித்தபடியே… கோதை தலையில் அடித்துக் கொண்டார்… ரவிக்கு தோன்றியது அசல் ஜெனிலியாதான் என….
கோதை “பேசாதடி… நீ இப்படி பேசறத வீரா, கேட்டாலே உன்ன திட்டுவான்… இந்த பேச்சு தப்பு டா….” என சொல்ல… ஐஸ்சுவின் முகம் வாடியது…
“ம்மா… நான் என்ன தப்பா சொன்னேன்” என அழுகாத குறையாக கேட்க…
கோதை விளக்கினார் மெல்லிய குரலில் “நீ வீராவ கல்யாணம் செய்துக்க நினைக்கிறேன்னு சொல்லுவாங்கடா…. இது.. “ என என்னமோ சொல்ல வர…
ஐஸ் “ம்மா……..” என பல்லை கடித்தாள். ” நீ ஏன் ம்மா இப்படி யோசிக்கற….  எனக்கு அப்பா மாதிரி… ஹப்பி வேன்னும்ன்னு சொன்னா… என்ன சொல்லுவ” என்றாள் தெளிவாய்…
கோதை சிரித்தார் “எல்லா பொண்ணுங்களும் அப்படிதான் ஆசை படுவாங்க… அப்பா மாதிரி வேண்டும்… தாங்கனும்ன்னு நினைப்பாங்க டா… இது சரி… ஆனா, இப்படி நீ வீரா வை பத்தி சொல்ல கூடாது” என சொல்ல…
ஐஸ் “எனக்கு வீராண்ணா… அப்படிதான் ம்மா… சும்மா… ஏதாவது சொன்னா… ஏதாவது புரிஞ்சிக்க வேண்டியது….” என சத்தமாக சொன்னவள்…
‘இதுல… நம்மதான் ஜெனிலியா மாதிரி லூசா பேசறேன்னு சொல்ல வேண்டியது’ என தன் அக்காவை ஒரு முறை, முறைத்து.. சென்றாள் உள்ளே. இதுபோல பிள்ளைகள் பாவம்… சூதுவாது தெரியாது… ஏதாவது சொல்லி.. எங்கையாவது மாட்டிக் கொள்ளும்…
அப்படியே ஐஸுவின் பேச்சுகள் ஓய்ந்து, ரவியின் பேச்சு தொடர்ந்தது… கோதை “இங்க… “ என ஏதோ ஒரு சொந்தம் சொல்லி அவர்களின் மகன்… “வெளிநாட்டில் இருக்கானாம்… அப்போவே உன்ன கேட்டாங்க… நான்தான்… வேண்டாம்னுட்டன்…” என பைரவிக்கு வந்த வரன்கள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்…
ராகவ் “விடு… இப்போ… யாராவது உள்ளூரில் சொன்னா பார்க்கலாம்…” என சொல்ல… கோதை அமைதியாகிவிட்டார்… இப்படியாக பேசி ராகவ் வீடியோ காலை கட் செய்தார்.
இவர்களின் நிலைக்கு தக்கபடி… எல்லா வரனும்… வெளிமாநிலம், வெளிநாடு என வர, கோதைக்கே… சற்று தயக்கம்…. தான்தான்… கணவன், தள்ளி இருக்க… வாழ்ந்துவிட்டேன்… எதற்கும் கணவன் அருகில் இல்லை… ஏன் பிள்ளைகள் பிறந்தது கூட இரண்டுநாள் கழித்துதான் தகவலே அவருக்கு தெரியும்… என் மகளுக்கும் அப்படியே வரனா… என எண்ண தொடங்கினார்… அதனாலேயே அவர்களுமே வெளிநாட்டு வரனை தட்டி கழித்தனர்…
தாத்தா “இப்போவெல்லாம்… உன்னோட வேலைக்கு… வெளிநாட்டில்தான் மதிப்பு நிறைய இருக்கு… பார்க்கலாமே டா…” என்றார்…
கோதை “ஏன் மாமா…. “ என்றார் பாவமாக… மருமகளின் நிலை புரிந்த மாமனாரும்… “சரிதான்…. நல்லபடியா அமையட்டும்” என பேச்சை முடித்துக் கொண்டு… உள்ளே சென்றார்.
பைரவி எங்கும் செல்லவில்லை…. அழுத்தமாக அமர்ந்திருந்தாள்… ‘ஏனோ தன்னை மனதிலேயே நினைக்கதவனை… நான் நினைத்து விட்டேனோ..’ என எண்ணம்… எங்கோ ஏமாந்த உணர்வு… அடிவாங்கிய உணர்வு… எல்லாம், ஆசை கொண்ட மனதின் காயங்கள்… அவள் மனதிலும். தாளவே முடியவில்லை… எழவும் தெம்பில்லாதவள் போல் அமர்ந்திருந்தாள்… 
நீண்ட நேரம்… ‘அவன் ஏதும் என்னிடம் நின்று பேசியது கூட இல்லை… எப்படி இந்த ஈர்ப்பு… ஐயோ….’ என தோன்றியது அவளுக்கு. இந்த இரண்டுமணி நேரம் கொஞ்சமும் குறையாமல் வீரா என்றவன் மட்டுமே… அவளின் எண்ணத்தில்.. 
அப்படியே நேரம் செல்ல.. மாலையில் ‘காபி’ என கோதை தர… அப்போதுதான் இருந்த இடத்திலிருந்து எழுந்து, முகம் கழுவி வந்தாள்… கையில் காபியுடன் அமர்ந்தாள்… இன்னும் விடாத சாரலாய் அவன் தூவிக் கொண்டிருந்தான் உள்ளே… மெல்ல பேச்சு சென்றது…
ஆறுமணி போல, வீரா… அழைத்தான் வீடியோ காலில். ஹாலில் அமர்ந்துதான் எல்லோரும் பேசினர்… மாதத்திற்கு ஒருமுறை இதே போல் பேசுவான்… இன்றும் அழைத்திருந்தான்…
வீராக்கு, தெரியும் பைரவிக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயம்… கூடவே அவள் இன்னமும் பதில் சொல்லாமல் இருப்பதும் தெரியும்… அதுவே அவனுக்கு ஏதோ நம்பிக்கையை தர கொஞ்சம் மிதப்பாக இருந்துவிட்டான் போல… 
இன்று வீராவின் குரல் அருகிலேயே கேட்டது பைரவிக்கு… எழுந்து போ என அறிவு அலற தொடங்கியது…. ஆனால், மனமென்ற ஒன்று இருக்கிறது தானே…. விட்டுவிடுமா அவளை… அவன் நினைவையும்தான். கண்கள் கரிக்க தொடங்கியது… ரவி தன்னிலை இழக்க தொடங்கினாள்…
வீரா, எப்போதும் போலான ஆர்பாட்டமாக பேசினான். அதுவும் பைரவி அங்கேயே அமர்ந்திருக்கவும்… இன்னும் குரல் சத்தமாக வந்தது, அவளை ஈர்க்க…
தாத்தா… ஐஸு என ஒருவர் மாற்றி ஒருவர்… பேச… கோதை பேச்சு வாக்கில்… ராகவ்.. பேச்சு வர… மதியம் பேசியதை லேசாக சொல்லிவிட்டார்… ‘என் பொண்ணு இங்கேயே மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்லிட்டா…’ என சொல்லி இயல்பாய் பேச தொடங்கினார்…
அதன்பின் வீரா ஏதும் பேசவில்லை மற்ற எல்லோரும் பேசினர்… இவன் பதில் பேசினான். ’சொல்லிட்டாளா..’ எனதான் முதலில் தோன்றியது… ‘தெரியாத அவளுக்கு…’ என மனம் கேட்க… 
இவனின் அறிவும் அதே கேட்டது ‘என்ன தெரியும் அவளுக்கு…. நீ ஏதாவது சொன்னியா… இல்ல அவள் ஏதாவது சொன்னாளா… எப்படி… தெரியும்… போடா…’ என சொல்ல… அமைதியாகிவிட்டான்…
கோதை எழுந்து செல்ல… ஐஸ்.. மீண்டும், கதை கதையாக பேச தொடங்கினாள்… எப்படி போகுது ட்ரைனிங்…’ என பேசிக் கொண்டே இருந்தாள்…
சற்று நேரம் கழித்து.. பைரவி… அவன் முகம் பார்க்காமல் டிவி போட்டு அமர்ந்து கொண்டாள்… சவுண்ட் அதிகமாக வைத்தால்… என்னவோ பொறுக்க முடியவில்லை அவளால்… அவன், சந்தோஷமா இருக்கான்… நான் தான் அவனை நினைத்து கஷ்ட்டபடுகிறேன் என ஏதோ ஒரு தோற்றம்… வர… சத்தம் அதிகமாக வந்தது டிவியிலிருந்து…
ஐஸ் “க்கா… கம்மி பன்னுக்கா… ப்ளீஸ்… கொஞ்ச நேரம்….” என சொல்ல…
இன்னும் அதிகமானது சத்தம்… ஏதோ புரிந்த வீரா “உங்க அக்கா வ கூப்பிடு…” என்றான்.. ஐஸுவிடம்.
அவள் அழைக்கவும்தான் பைரவி, இவன் முகத்தையே பார்த்தாள்.. அத்தனை ஏமாற்றம் அந்த முகத்தில், ஆனால் அது வீராக்கு தெரியவில்லை… “கன்க்ராட்ஸ் பைரவி…” என்றான். தன் உதடுகளை மறைத்தபடியே… அவளின் ஏமாற்றத்திற்கு, சற்றும் குறைவில்லாதா ஏமாற்றமான குரலில்.. நேர் பார்வையாக அவளை பார்த்தபடியே….
பைரவிக்கு, கோவம்.. எங்கும், எதுவும் சொல்ல முடியா கோவம்… கையில் வைத்திருந்த ரிமோட்டை… தூக்கி எறிந்தாள்… அப்போது ஐசு மட்டும் அங்கிருக்க… “பேசாம இருக்க சொல்லுடி… உங்க அண்ணன” என்றாள் பல்லை கடித்தபடியே…
அதற்குள் தாத்தா அங்கு வந்தார்… ரிமொர்ட் உடைந்து கிடந்தது “எழும் போது விழுந்திடுச்சி” என்றாள்… ஏதோ மாதிரியான குரலில்… பின் மாடிக்கு சென்றுவிட்டாள்…
வீரா “என்ன பிரச்சனை உங்க அக்கா” என்றான் ஐஸுவிடம்… அது மீண்டும் கள்ளமில்லாமல் பெ… பெவென.. விழிக்க தொடங்கியது… வீரா பேசி வைத்தான் போனை…. 
இவனுக்கு, நான் சொல்லனுமா… இப்போ எதுக்கு சரின்னு சொன்னா… என கோவம்… அவளுக்கு, அவன் சொல்லமாட்டனா, தெரியாதா… என கோவம்..
வீராக்கு புரிந்தும், புரியாத நிலை… அழகான ஈகோ… இருவரிடமும்… அன்புடன் விளையாடியது… ஆனால் இது புரியவில்லை இருவருக்கும். 
நாட்கள் கடந்தது… எப்போதும் போல… பைரவிக்கு, படிப்பில் சென்றது அவளின் கவனம். அழகாக MA முடித்தாள்… அதே கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தாள்…
இப்போதெல்லாம் விழாக்கால பட்டிமன்றம், பேச்சுகளில் இவள் முகம் தென்பட தொடங்கியது… அதே போல், கம்பன் கழகம்… செம்மொழி அரங்கம் எல்லாவற்றிலும்.. இவள் பேச்சு ஒலிக்க தொடங்கியது.
இவளின் குரலும்.. நேர் பார்வையும்… தனி மதிப்பை பெற்று தந்தது. சில அரசு விழாக்களில் இவளின் குரல் மேடையில் மொழிய தொடங்கியது… இந்த ஆறுமாதம் பைரவியின் வளர்ச்சி… சற்று அதிகம்தானோ…
ஏன் ஓடுகிறோம், எதற்கு ஓடுகிறோம் என தெரியாமேல் பரந்து கொண்டிருந்தாள் தன் துறையில்.. தாத்தாக்கு, இப்போதெல்லாம்… அவளிற்கு குறிப்பெடுத்து கொடுக்கவே நேரம் சரியாக இருந்தது…
கோதைக்கும் ராகவ்க்கும் பயம் ‘இதென்ன… திருமணம் செய்யும் நேரத்தில் இப்படி பறக்கிறாள்’ எனதான். ஆக பைரவியின் அருகில் நெருங்க சின்ன பயம் வந்தது வீட்டாருக்கு..
நம் பெண்தான் ஆனால், வீட்டில் ஆட்கள் வர போக இருந்தனர்… ஏதேதோ கழகம்.. பேச அழைத்தனர்… தாத்தாதான்… எந்த நாள் என பார்த்து… ப்ரீயா… வேறு நிகழ்ச்சி இருக்கிறதா என அவர்களுக்கு பதில் சொல்லி… உபசரித்து அனுப்பினார்.

Advertisement