Advertisement

அத்தியாயம் –35

 

 

பிரணவ்ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்ற பின் கணேஷிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

 

 

அவனும் தன்னால் ஆனா முயற்சியாக மனோ செல்வதை தடுத்துப் பார்த்தான்… நியூ ஜாயினி ஆன்சைட்அனுப்புவது வழக்கமில்லை என்பதை வைத்து அவன் புற எதிர்ப்பை தெரிவித்தான்.

 

 

பிரணவ் மானேஜ்மெண்ட்டிடமும் ஆஸ்திரேலியா டீமிடமும்பேசிமனைவியை அங்கு கூட்டிச்செல்ல சிறப்புஅனுமதி வாங்கிவிட கணேஷிற்கு மீண்டும் அவனிடத்தில் தோற்றுவிட்டோம் என்று உள்ளம் மேலும் மேலும் கொதிக்க ஆரம்பித்தது.

 

 

தகுந்த சந்தர்ப்பதிற்காய் காத்திருந்தான். அவனுக்கு எல்லாரிடமும் வெறுப்பு எதற்கும் கோபம் என்று அவன் மொத்த குணமும் மாறிப் போனது.

 

 

அவன் தந்தைக்கும் மேல் தவறுகள் புரிய ஆரம்பித்தான். ஆனாலும் பழைய வேலையை அவன் விட்டுவிடவில்லை.

 

 

பிரணவ், மனோ பற்றிய தகவல்கள் அங்கிருந்தால் தான் பெற முடியும் என்பது அவன் எண்ணமாய் இருந்ததால் அதை மட்டும் அவன் செய்யவில்லை.

 

முழுமூச்சாய் அவன் தந்தைக்கு ஆலோசனை சொல்வது, முடியாத வேலைகள் எல்லாம் முடிப்பது என்று அவன் குறுக்கு வழியில் வெற்றியை சுவைத்துக் கொண்டிருந்தான்.

 

 

வெற்றி ஒன்றும் கடையில் விலைக்கு வாங்கு பலகாரமில்லை என்பது அவனுக்கு புரியவில்லை. எல்லாமே விலைக்கு தான் வாங்கிக் கொண்டிருந்தான்.

 

 

வெற்றி என்பது பல தோல்விகளை உள்ளடக்கியது என்பது அவன் உணரவில்லை. உண்மையான வெற்றியின் ருசியை அவன் உணர்ந்ததேயில்லை.

 

 

என்ன தான் குறுக்கு வழியில் அவன் வெற்றியைசுவைத்திருந்தாலும் அவனால் அதில் முழு திருப்தியை அடைய முடியவில்லை.

 

 

காரணம் பிரணவ்!! அவன் மேல் அவ்வளவு துவேஷம் வந்திருந்தது அவனுக்கு. தன் வாழ்க்கையை பறித்து சென்றுவிட்டான் என்ற கோபம் அது.

 

 

ஆஸ்திரேலியா சென்ற பிரணவ் ஒரு வருடத்திற்குள் மனோவுடன் திரும்பி வந்ததும் மனோ கர்ப்பிணியாய் இருப்பதை பார்த்ததும் அவன் கோபமெல்லாம் கரை காணாமல் சென்றது.

 

 

இருவரும் எவ்வளவு சந்தோசமாக இருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும். தான் மட்டும் இங்கு எந்த சந்தோசமும் இல்லாதிருக்க இவர்கள் சந்தோஷித்திருப்பதா!! என்றுபிரணவின் மீதான கோபம் ஈபிள் டவர் உயரத்திற்கு எழுந்தது.

 

 

பிரணவ் சென்னை திரும்பியதும் சில மாதங்களில் வேலையை விட்டுவிட மனோ மட்டுமே அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் கணேஷிற்கு மனோவை பார்த்து பேச வேண்டும் என்று தோன்றவில்லை.

 

 

அவளை பார்த்தாலே அவனுக்கு பிரணவ் பற்றிய எண்ணம் தான் அதிகம் வந்தது. அதனாலேயே அவளை பார்ப்பதை தவிர்த்து வந்தான்.

 

 

அவள் பிரசவத்தின் பின் வீட்டில் இருந்தே வேலை செய்திருக்க அவளை நேரில் பார்க்க வேண்டிய கட்டாயமில்லை என்ற நிம்மதி அவனுக்கு.

 

 

பிரணவை பற்றி அவன் டீமில் லேசுபாசாய் விசாரிக்க அவன் வேறு வேலை கிடைத்து வெளியூருக்கு சென்றுவிட்டான் என்றறிந்ததும் மனம் வேகமாய் கணக்கு போட ஆரம்பித்தது.

 

 

மனோபாரதி சென்னையில் தனித்திருக்கிறாள் என்றறிந்ததும் அவளை எப்படி நெருங்குவது அந்த இடத்தை எப்படிகைப்பற்றுவது என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.

 

 

ஆனால் மனோ முதலில் இருந்த வீட்டை காலி செய்து இரவோடு இரவாக வேறு இடம் மாறியதால் மீண்டும் ஆரம்ப நிலைக்கே வந்த உணர்வு அவனுக்கு.

 

 

சரியாகஅதே நேரத்தில் அவனுக்கு ஆன்சைட் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட சில மாதங்கள் அவன்அங்கில்லாது போனான்.

 

 

திரும்பி வந்ததுமே அவனுக்கு நெருகியவர்கள் சிலரிடம் விசாரித்து அவள் புதுவீட்டு முகவரி கண்டுப்பிடித்து செல்ல மேலும் ஓரிரு மாதம் கடந்திருந்தது.

 

 

ஒருவழியாய் அங்கு சென்றால்அவள் மீண்டும் வீட்டை காலி செய்திருந்தாள். அது மனோவிற்கும் பிரணவிற்கும் பிணக்கு ஏற்பட்டு அவள்ஊரோடு சென்றிருந்த தருணம் அது…

 

 

மீண்டும் ஒரு முறை அவளைப் பற்றி தகவல்களை அவன் சேகரிக்க வேண்டியதாயிற்று.இந்த முறை அவன் தெரிந்தஆட்கள் யாரையும் வைத்து விசாரிக்கவில்லை, டிடெக்டிவ் மூலமாகவே அவளிருப்பிடம் விசாரித்தறிந்தான்.

 

அங்கிருந்து வீட்டை காலி செய்திருந்தவள் பழனிக்கு சென்றிருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனுக்கு கார்த்திக்கின் ஞாபகம் தான் வந்தது.

 

 

மனோவின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை என்பதாய் அவனுக்கு ஞாபகம்.கார்த்திக் அங்கிருப்பது அவனுக்கு தெரியும்.

 

 

ஏனென்றால் மனோ திருமணம் முடிந்த விஷயம் அறிந்ததும் கணேஷின் கோபம் கார்த்திக்கின் புறம் திரும்பியிருந்தது.

 

 

நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான், இது பற்றி எதுவும் தன்னிடம் பகிராது விட்ட அவனை ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

 

 

கார்த்திக்கை தேடி கண்டுப்பிடித்து உடுமலைப்பேட்டைக்கே சென்று அவனை ஒரு வழியாக்கிவிட்டுத் தான் வந்திருந்தான்.

 

 

கார்த்திக்கும் தான் லேசுப்பட்டவன் அல்ல என்பதை நிருப்பித்திருந்தான். கணேஷ் அவன் மட்டுமே அலுவலகத்தில் விடுப்பை எடுத்துக்கொண்டு நேராக உடுமலைப்பேட்டைக்கு சென்றான்.

 

 

அவன் தந்தையிடம் தட்டிவிட்டு வரச் சொன்னால் அவர் வெட்டிவிட்டு வருபவராயிற்றே அதனால் அவர் உதவியை அவன் நாடவில்லை. ஏனேனில் கார்த்திக்கின் உதவி எப்போதாவதுதனக்கு தேவைப்படும் என்பது அவன் எண்ணம்.

 

 

அதனால் அவனே நேராக சென்று கார்த்திக்கை எச்சரிக்கை செய்ய நினைத்தான். அப்படியே சென்று எச்சரித்தும் வந்திருந்தான்.

 

 

இப்போது மனோ பழனியில் என்றதும் அவனுக்கு கார்த்திக்கின் நினைவு தான் வந்தது. அவனுக்கு ஒரு வேளை தெரிந்திருக்குமா என்ற எண்ணம்!!

 

 

கார்த்திக்கின்கைபேசிஎண் அவன் அறிந்ததே!! யோசிக்காமல் உடனே அவனுக்கு போன் செய்தான். முதல் அழைப்பிலேயே எடுத்துவிட்டவன் “ஹலோ” என்றான்.

 

 

“நான் கணேஷ் பேசறேன்”

 

 

“பேசிக்கோ!!”

 

 

“ஹலோ!! என்னை மறந்து போச்சா உனக்கு!!”

 

 

“ஹலோ யார் நீ?? என்ன வேணும் உனக்கு இப்போ??”

 

 

“ஏன்டா மறுபடியும் அடிவாங்கினா தான் உனக்கு என்னை ஞாபகம் வருமா!! உன்னை தேடி வந்து நான் அடிச்சது பத்தலையா!!” என்று நக்கல் குரலில் கணேஷ் கேட்க அதன்பின் தான் கார்த்திக்கிற்கு பேசுவது எந்த கணேஷ் என்று புரிந்தது.

 

 

கார்த்திக் சில மாதங்களுக்கு முன் தான் அவன் போனை தொலைத்திருந்தான். அவனுடைய பழைய எண்ணை வாங்கியிருந்தாலும் அந்த காண்டக்ட்ஸ் எல்லாம்இப்போது அவனிடத்தில் இல்லை.

 

 

கணேஷ் என்று தெரிந்ததும் முன்னைவிட எகத்தாளமாகவே பதில் சொன்னான். “என்ன மிரட்டுறியா??”

 

 

“அப்படி சொன்னாத்தானே உனக்கு தெரியுது அதான்!!” என்றான் கணேஷ்.

 

 

“என்ன விஷயம்??”

 

 

கணேஷும் அதற்கு மேல் தாமதிக்கவில்லை தான் அவனுக்கு எதற்கு போன் செய்தோம் என்று சொல்லி முடித்தான்.

 

 

“இதுக்கு தான் என்னை கூப்பிட்டியா?? நான் அவ இங்க வந்த அன்னைக்கே பார்த்திட்டேன். வந்ததுமே தகராறு தான்” என்றவன் அவளை பார்த்த நிகழ்வை கூறினான்.

 

 

“எனக்கு உன்னால ஒரு உதவி ஆகணும்” என்றான் கணேஷ் அதிகார குரலிலேயே.

 

 

அதைக்கேட்டதும் கார்த்திக்கிற்கு அவ்வளவு கடுப்பு, ‘உதவியை கூட இவர் தன்மையாய் கேட்க மாட்டாராமா!! அதிலென்ன கவுரவம் வேண்டிக்கிடக்கு’ என்று எண்ணிக் கொண்டவன் ‘என்ன’ என்று கூட கேட்கவில்லை.

 

 

“ஹலோ நான் கேட்டது உன் காதுல விழுந்திச்சா!! இல்லையா!!”

 

 

“விழுந்து நான் என்ன பண்ணணும் அய்யா அப்படின்னு நான் உன்கிட்ட கேட்கணும்ன்னு நினைச்சியா!!” என்றான் கார்த்திக்.

 

 

“ஹேய் என்ன எல்லாம் மறந்திடுச்சா உனக்கு. உன் மேல ஏற்கனவே நெறைய கேஸ் இருக்கு… அதெல்லாம் இன்னும் ஸ்ட்ராங் பண்ணி உன்னை உள்ளத் தள்ளணுமா!!”

 

 

“என்னால பண்ண முடியாதுன்னு நினைக்காத, எங்கப்பாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும் எல்லாம் முடிஞ்சிடும்”

 

 

“என்னபயமுறுத்தறீங்களா!! ஆளாளுக்கு கேஸ்பத்தியே சொல்றீங்க!! அந்த வீணா போன பிரணவும் அப்படி தான் சொல்றான் நீயும் அப்படி தான் சொல்றே!! என்னங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க”

 

 

“இங்க பாரு இப்போ உனக்கு பெஸ்ட் ஆபர் கொடுக்கறேன். அதுக்கு பிறகு எனக்கு உதவி செய்யலாமா!! வேணாமான்னு நீயே யோசிச்சுக்கோ!!”

 

 

“என்ன சொல்லவா??”

 

 

“சொல்லாம நீ விடப்போறியா என்ன?? சொல்லு” என்றான் கார்த்திக்.

 

 

“எனக்கு நீ உதவி பண்ணா உனக்கு கிடைக்க போறது ரெண்டு விஷயம். ஒண்ணு உன் மேல இருக்கற எல்லா கேசும் இல்லாம பண்ணிடுறேன்”

 

 

“ரெண்டாவது அந்த காரியம் நல்லப்படியா முடிஞ்சா உனக்கு பணமும் கொடுக்கறேன். இந்த முறை அஞ்சு பத்துன்னு ஆயிரத்துல இல்லை லட்சத்துல” என்று ஆசைக்காட்டினான் கார்த்திக்கிற்கு.

 

 

கார்த்திக்கிற்கு இந்த இரண்டுமே இப்போது தேவையாய் இருந்தது. அவன் மேல் கேஸ் இருப்பதனால் ஊரில் யாரும் அவனுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள்.

 

 

பணமாவது இருந்தால் அதைப்பார்த்தாவது வருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தவன் அதற்கு தகுந்த வழியை யோசித்துக் கொண்டிருந்தான். இதோ அந்த வழி அவனுக்கு கிடைத்துவிட்டது.

 

 

ஒரேகல்லில் இரண்டு மாங்காய் கிடைக்கப் போகிறது அதை மறுக்க அவன் என்ன முட்டாளா!! ஓரிரு நிமிடங்கள் தான் அதைப்பற்றி யோசித்தான்.

 

 

பின்னர்“சரி செய்யறேன், ஆனா நீ சொன்னது எல்லாம் செஞ்சிடணும்” என்றான் அவன்.

 

 

“நான் சொன்னதை கண்டிப்பா செய்யறேன்… உனக்கு நம்பிக்கை வரணும்ன்னா இப்போவே உனக்கு அட்வான்ஸ்ஆ ரெண்டு லட்சம் கொடுக்கறேன்”

 

 

“வேலை முடிஞ்சதும் மூணு லட்சம் பணம் கொடுக்கறது மட்டுமில்லாம அந்த கேஸ் எல்லாம் இல்லாம பண்ணுறதும் என்னோட வேலை ஓகேவா!!” என்றான் கணேஷ்.

 

 

“ஹ்ம்ம் எனக்கு ஓகே தான்” என்ற கார்த்திக் இப்போதே கனவு காண ஆரம்பித்துவிட்டான்.

 

 

“ஆமா நான் என்ன பண்ணணும்ன்னு நீ இன்னும் சொல்லவேயில்லையே” என்றான் அவன் தொடர்ந்தவாறே.

 

 

“பாரதிகிட்ட ஒரு கையெழுத்து வாங்கணும்”

“என்ன கையெழுத்து??” என்று விபரம் கேட்டான் அவன்.

 

 

“அதெல்லாம் உனக்கெதுக்கு??”

 

 

“விபரம் சொன்னா வேலையை முடிக்கறேன். இல்லன்னா விட்டிரு”

 

 

“அப்போ உனக்கு பணம் வேணாமா!! கேஸ் இல்லாம போக வேண்டாமா!!”

 

 

“தேவையில்லை” என்றான் அவனும் அசட்டையாக.

 

 

‘இவனை என்ன செய்ய’ என்று எதிர்புறம் பல்லைக்கடித்த கணேஷ் வேறு வழியில்லாமல் அந்த இடத்தை பற்றி சொன்னான்.

 

 

‘என்னமனோ பேர்ல இடமிருக்கா!! அவளுக்கு ஏற்கனவே சொத்து இருக்குன்னு தெரியும். இதென்ன புது சொத்து நமக்கு இவ்வளவு நாளா தெரியாம போச்சே’

 

 

‘அந்த இடம் எவ்வளவு மதிப்பு இருந்தா இவன் அதுக்கு இப்படி அலைவான். சும்மாநாய்க்கு எலும்பு துண்டு தூக்கி போடுற மாதிரி எனக்கு ஐஞ்சு லட்சம் தரேன் கேஸ் இல்லாம பண்ணறேன்னு சீன் போடுறானா’ என்று எண்ணிக்கொண்டவன் மனதிற்குள்ளாக ஒரு கணக்கை போட்டான்.

“என்ன கணக்கு எல்லாம் போட்டு முடிச்சிட்டியா!! இதுக்கு தான் உன்கிட்ட சொல்ல யோசிச்சேன்”

 

 

“ஏன் கணக்கு போட்டா என்ன தப்பு!! நீ என்னை ஏமாத்த பார்க்கலாமா!! பார்க்கப் போனா அவ என் மாமா பொண்ணு அந்த சொத்து மேல உன்னை விட எனக்கு அதிக உரிமை இருக்கு”

 

 

“இங்க பாரு நான் சொத்துக்காக எல்லாம் இதை செய்யலை”

 

 

“ஓ!! அப்போ எதுக்காக செய்யறியாம்!!” என்றான் அவன் கிண்டல் குரலில்.

 

 

“அது என் கவுரவ பிரச்சனை, எனக்கு பாரதி தான் கிடைக்கலை. அந்த இடம் எனக்கும் என் அப்பாவுக்கும் கண்டிப்பா வேணும்” என்றான் ஒருமாதிரிக் குரலில்.

 

 

“அப்போ அது எனக்கும் வேணும்” என்றான் கார்த்திக்.

 

 

“இங்க பாரு உனக்குகேஸ் பிரச்சனை இருக்கக் கூடாது அதை எல்லாம் சரி பண்ணி உனக்கு பணமும் தர்றேன். அதுக்கு அப்புறமும் உனக்கு ஏன் இந்த மண்ணாசை” என்றான் கணேஷ்.

 

 

“அதை நீ சொல்றியா!! எனக்காச்சும் மண்ணாசை மட்டும் தான். உனக்குமுத பொண்ணாசை இப்போ மண்ணாசையா!!” என்று கார்த்திக் திருப்பிக்கொடுக்க கணேஷிற்கு கோபம் வந்தது.

 

 

“போதும் நிறுத்து!! எனக்கு எந்த ஆசையும் இல்லை இப்போ!! வெறி!! வெறிமட்டும் தான் அந்த பிரணவை எதாவது ஒரு வழியில ஜெயிச்ச திருப்தி எனக்கு வரும்”

 

 

“அதுக்கு தான் இதெல்லாம்… என்னை ஏமாத்த நினைச்ச அந்தாளு உங்க மாமாவோட கணக்கு தப்பா போகணும். சோ எனக்கு அந்த இடமாச்சும் வேணும்”

 

 

“வேணும்ன்னா உங்க மாமாவோட மத்த எல்லா சொத்தும் நீயே எடுத்துக்கோ அதுக்கான டாக்குமென்ட்ஸ் எல்லாம் நீயே ரெடி பண்ணி அதுலயும் அவகிட்ட கையெழுத்து வாங்கிக்கோ”

 

 

“எனக்கு வேண்டியது இந்த ஒரு இடம் மட்டும் தான்… சோ நீ எனக்கு அதுக்கு மட்டும் உதவி செஞ்சா போதும்” என்றதும் இப்போது கார்த்திக் யோசிக்க ஆரம்பித்தான்.

 

 

மனோவின் ஊரில் உள்ள மற்ற சொத்துகள் அவன் வசம் வந்தாலும் போதுமே அவன் முன்பு போல அந்த ஊரை ஒரு ஆட்டு ஆட்டி வைத்துவிடுவானே!!

 

 

எல்லாம் யோசித்து பார்த்தவன் “சரி பண்றேன்” என்று மனதார ஒத்துக்கொண்டான் கணேஷிடம்.

 

 

கணேஷ் அந்த இடத்திற்கு ஒரு டுப்ளிகேட் பத்திரம் தயார் செய்து கார்த்திக்கிடம் கொடுத்திருந்தான்.

 

 

கார்த்திக் இந்த இடத்தில் தான் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்து பெரிதாய் சொதப்பினான்.

 

 

அவன் திருந்தியதாக நடித்தால் மனோ நம்பமாட்டாள் என்று அவளை சரியாக கணித்திருந்தவன்அவனின் அன்னை நளினியிடம் சாதுர்யமாக பேசி அவரை தயார் செய்திருந்தான்.

 

 

ஆம் நளினி மனோவை ஒரு நாள் நேரிலேயே காணச் சென்றிருந்தாள். மனோவின் நல்ல நேரமோ இல்லை கார்த்திக்கின் கெட்ட நேரமோ முகுந்தன் சரியான நேரத்திற்கு வந்து நடக்க இருந்ததை கெடுத்திருந்தான்.

 

 

நளினி வீட்டிற்கு வந்தது கார்த்திக்கின் மீது மனோவின் அப்பா கொடுத்த கம்பிளைன்ட்டை வாபஸ் பெறச்சொல்லி தான்.

 

 

மனோவிடம் இதுவரை அவர்கள் செய்ததிற்காய் மன்னிப்பு கேட்டு அழுது மாய்மாலம் செய்தார் அவர். மனோவின் காலிலேயே அவர் விழப்போக மனோவிற்கு லேசாய் ஒரு இளகல் தோன்றியது.

 

 

அதை சட்டென்று பற்றிக்கொண்டவர் அதையே சாக்காய் வைத்து அவள் மனதை மேலும் இளகச் செய்யும் விதமாய் பேசினார்.

 

 

அவள் பழனிக்கு வந்த அன்று கார்த்திக்அவளிடம் வம்பு செய்ததிற்காய் அவளிடம் மன்னிப்பு கோரினார்.

 

 

பின் நேரே விஷயத்திற்கு வந்தார்.மனோவின் அப்பா கொடுத்த புகாரில் ஆரம்பித்து தான் யாரும் அவனுக்கு பெண் கொடுப்பதில்லை என்றவர்

 

 

கார்த்திக்கின் திருமணம் இதனால் தடைபடுவதாகவும் அந்த புகாரை திரும்ப வாங்கினால் மற்ற புகாரெல்லாம் இல்லாமல் செய்துவிடலாம் என்றும் சொல்லி கண்ணை கசக்கினார்.

 

 

மனோவும் தனக்கென்று இப்போதைக்கு இருக்கும் அப்பாவின் சொந்தம் இவர் தான். இவரை ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்ற புகாரை வாபஸ் வாங்க சம்மதித்தாள்.

 

 

“இதை படிச்சு பாரும்மா!! இதுல நீ வாபஸ் வாங்குறதா எழுதியிருக்கு!! நீயே படிச்சுட்டு ஒரு கையெழுத்து போட்டு கொடுத்தா நான் ஆகவேண்டியதை பார்ப்பேன் என்று சொல்ல மனோவும் அந்த பேப்பரை கையில் வாங்கினாள்.

 

 

“நான் நேர்ல வந்து சொன்னா தானே விடுவாங்க. வாபஸ் வாங்குறேன்னு கையெழுத்து போட்டா செல்லுமா!!” என்றாள்.

 

 

‘இவ படிச்சவன்னு அப்பப்போ நிருப்பிக்கறாளே’ என்று எண்ணிக்கொண்ட நளினியோ “முதல்ல நான் இதை கொண்டு போய் கொடுக்கறேன்ம்மா!!”

 

 

“அவங்க எப்படியும் உன்னை நேர்ல வரச் சொல்லுவாங்க. அன்னைக்கு நான் உனக்கு போன் பண்ணுறேன் நீ வாம்மா”

 

 

“அதில்லை அத்தை அன்னைக்கு நான் வரும் போது நேர்ல அங்க வைச்சு கையெழுத்து போடுறேன்” என்றாள் மனோ மீண்டும்.

 

 

‘எமகாதகி எப்படி வளைச்சு வளைச்சு யோசிக்கறா!! இப்போ இவளை வேணாம்ன்னும் சொல்ல முடியாது!! கையெழுத்தும் இன்னைக்கே வாங்கியாகணும், என்ன செய்ய’ என்று யோசித்தாள் நளினி.

 

 

பின்னே நளினி கையெழுத்து வாங்காமல் போனால் கார்த்திக் நளினியை ஒருவழியாக்கி விட மாட்டானா!!

 

 

ஏற்கனவே மனோவை அடைய இருந்த அவன் எண்ணத்தில் நளினி மண்ணை போட்டிருந்ததால் அவள் கிடைக்காமல் போன அன்று நளினியை அவன் தாளித்து எடுத்துவிட்டிருந்தானே!! இப்போதுஇந்த வேலையை முடிக்காமல் போனால் அவ்வளவு தான்!!

 

 

“மனோம்மா அந்த போலீஸ் நமக்குதெரிஞ்சவரு தான். நீ இதுல கையெழுத்து போட்டு கொடுத்தா கூட போதும்ன்னு தான் சொன்னார்”

 

 

“தேவைப்பட்டா அவரே உனக்கு போன் பண்ணுறதா சொன்னாரும்மா. நீ போன்ல ஒரு வார்த்தை சொன்னா கூட போதும்”

 

 

“நான் வேணா அந்த போலீஸ்காரர்க்கு ஒரு போன் போட்டு கொடுக்கவா” என்று சொல்லி நளினி மனோவை நம்ப வைக்க பிரம்மபிரயத்தனப்பட்டாள்.

 

 

“சரி கொடுங்க அத்தை நீங்க இவ்வளவு சொல்றீங்க!! அதுக்கு மேல என்ன இருக்கு” என்று மனோ சொல்ல “இல்லைம்மா நீ அந்த போலீஸ்கிட்ட பேசிரு” என்றுவிட்டு அதுவரை அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கைபேசி வழியாக மகனுக்கு தெரிய வைத்திருந்தவர் போனை அணைத்துவிட்டு மகனின் வேறு ஒரு எண்ணுக்கு அழைத்தார்.

 

 

“சார் நான் சொன்னேன்ல என் அண்ணன் பொண்ணு அந்த புகார் வாபஸ் வாங்குறேன்னு ஒத்துக்கிச்சு சார். என் புள்ளை மேல இருக்க மத்த கேஸ் எல்லாம் பார்த்து சரி பண்ணி கொடுங்க சார்”

 

“அந்த பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை பேசிடுங்க சார். எங்க அண்ணன் இறந்து போய் இரண்டு வருஷம் ஆகுதுங்க சார்”

 

 

“அதான் அந்த பொண்ணுகிட்ட கேட்க வந்தேன் சார்” என்று வாய்க்கு வந்ததெல்லாம் பேசி மனோவிடம் கொடுக்க கார்த்திக் அவன் நண்பன் ஒருவனை போலீஸ் போல பேச செய்து அவளை நம்ப வைத்தான்.

 

 

“எதுக்கு அத்தை அந்த போலீஸ்க்கு போன் எல்லாம் போட்டீங்க. நான் தான் கையெழுத்து போடுறேன்னு சொன்னேன்ல”

 

 

“அதில்லைம்மா நீ ஏதோ நம்பாத போல இருந்துச்சு… நீ அப்படி நினைக்கறதுலயும் தப்பில்லையே அதான் உன் சந்தேகத்தை நிவர்த்தி பண்ணேன்” என்று போலியாய் அவளிடம் கூறிக் கொண்டிருந்தார்.

 

 

மனோவிற்கு இப்போது உண்மையாகவே நம்பிக்கை கொஞ்சம் வந்திருந்தது. அதனாலேயே அந்த கடிதத்தில் எழுதியிருந்ததை படிக்கவில்லை அவள்.

 

 

அவள் கையெழுத்து போட தயாராக சரியாக அந்நேரம் உள்ளே நுழைந்தான் முகுந்தன். நளினியை கேள்வியாக பார்த்தவன் “என்னமா மனோ யாரு இவங்க” என்றான் நளினியை துச்சமாய் ஒரு பார்வை பார்த்து.

 

 

“என்னோட அத்தை தான் அண்ணா”

 

 

“ஓ!!” என்றவன்“எதுக்கு வந்திருக்காங்க??” என்றான் அடுத்து.

 

 

மனோ அவர் வந்த விஷயத்தை சொல்ல “எந்த ஸ்டேஷன்ல இவர் பையன் மேல கம்பிளைன்ட் இருக்கு??” என்றான்.

 

 

நளினி இவன் யார் நடுவில் குறுக்கே வந்து குட்டையை குழப்புகிறானே என்று யோசித்தவள் வாய்க்கு வந்த ஸ்டேஷன் பெயரை சொல்ல “அதுவாஅங்க ரங்கராஜ் தானே இன்ஸ்பெக்டர்”

 

 

“மனோம்மா கவலையேப்படாதே நான் ஒரு வார்த்தை சொன்னா போதும் கேஸ் எல்லாம் இல்லாம பண்ணிடுவார் அவர்”

 

 

“இரும்மா நான் அவர்க்கு போன் பண்ணுறேன்” என்று கைபேசியை எடுக்க நளினி சுதாரித்துக் கொண்டார்.

 

 

“தம்பி!! தம்பி!! நீங்க பாட்டுக்கு அவர்க்கு போன் போட்டிறாதீங்க. அவர் ரொம்ப கோபக்காரர், எதுக்கு சிபாரிசு பிடிக்கறீங்கன்னு கத்துவார்”

 

 

“நான் ஊருக்கு போயி அங்க இருந்து உங்களுக்குபோன் போடுறேன் அப்போ நீங்க அவர்கிட்ட பேசினா போதும் தம்பி” என்று நளினி அங்கிருந்து தப்பித்து செல்ல எதையோ உளறினார்.

 

 

பின்னே இதற்கு மேல் பேசினால் இவன் பாட்டிற்கு அந்த இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து வைத்து அவர் எதையாவது சொல்ல மாட்டினால் இவளிடமும் திரும்ப வர முடியாது.

 

 

போலீசும் சும்மா விடாது என்று எண்ணி ஒரு வழியாக தப்பித்து அங்கிருந்து ஓடாத குறையாய் சென்றுவிட்டார் நளினி.

 

 

முகுந்தனுக்கு நளினியை பார்த்ததும் ஏதோ பெரிதாய் சந்தேகம் வந்திருக்க பிரணவிடம் அதைப்பற்றி கூறியிருந்தான்.

 

 

இதற்கு நடுவில் கணேஷும் கார்த்திக்கும் வேறு திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வேளையில் தான் பிரணவ் திரும்பி வந்திருந்தான்.

 

 

பிரணவ் வந்த விஷயம் அறிந்திருந்தவர்கள் அவன் என்ன வேலையாய் வந்திருக்கிறான்என்பதை அறியாமல் போயினர், தெரிந்திருந்தால் சற்று உஷாராகியிருப்பர்.

 

____________________

 

 

“என்ன மிஸ்டர். ஸ்ரீதரன் நான் சொன்னது எல்லாம் சரி தானே!!” என்று பிரணவ் சொல்ல ஸ்ரீதரன் மகனை பார்த்தார் இப்போது.

 

 

தந்தையும் மகனும் பாதி விஷயத்தை ஒருவருக்கு மற்றவர் தெரியாமல் செய்திருந்தனர். கணேஷ் மனோவிடம் கையெழுத்து வாங்க முற்பட்ட செய்தி ஸ்ரீதரனுக்கு புதிது.

 

 

மகன் இனி எந்த விஷயத்திலும் தலையிடக் கூடாது என்றுவிட அதனாலேயே அவன் விஷயத்தில் அவர் அதிகம் தலையீடு செய்யவில்லை.

 

 

இருவருமே எதுவும் பேசவில்லை வாய் மூடி மௌனம் சாதித்தனர். கணேஷ் தான் திமிராய் பேச ஆரம்பித்தான் மீண்டும்.

 

 

“இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு… நீயா ஒரு கதையை நல்லாவே பின்னுறியே எங்க இருந்துடா கதை சொல்ல கத்துக்கிட்ட” என்று நக்கல் குரலில் கேட்டான் கணேஷ்.

 

 

“உன்கிட்ட இருந்து தான் கணேஷ்!! உன்னோட பழகின எனக்கு உன்னளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு கதை சொல்ல வரும் தானே”

 

 

“என்ன நான் சொன்னதெல்லாம் உண்மை கதை. அதுக்கெல்லாம் ஆதாரம் இல்லைன்னு தான் நீ இவ்வளவு தூரம் ஆடினியா!! எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு!!”

 

 

கணேஷுக்கு சற்று அதிர்ச்சி தான் ஆனாலும் என்ன பெரிய ஆதாரம் இருக்கும் என்ற மிதப்பு நிச்சயம் இருந்தது.

 

 

ஸ்ரீதரனுக்குமே அந்த மிதப்பு இருக்கத்தான் செய்தது. பின்னே அவர் எதிலுமே நேரடியாக சம்மந்தப்படவில்லை தானே கணேஷும் அப்படி தானே!! என்று எண்ணிக்கொண்டவர் அமைதியாய் இருந்தார்.

 

 

“போலியா நீ உருவாக்கி இருப்ப, அதையெல்லாம் எப்படி உடைக்கணும்ன்னு எங்களுக்கு தெரியும்” என்றார் கணேஷின் தந்தை ஸ்ரீதரன்.

 

 

“ஓகே அப்போ நீங்களே உடைச்சுக்கோங்க” என்ற பிரணவ் எழுந்து வெளியே செல்லப் போக “டேய் அது என்ன ஆதாரம்ன்னு சொல்லிட்டு போடா” என்றார் ஸ்ரீதரன்.

 

 

“ஆதாரம் என்னன்னு தெரியாமலா அதை உடைக்க போறேன்னு சொன்னீங்க… அச்சச்சோ அது உங்களுக்கு தெரியும்ன்னு நினைச்சனே!!” என்றான் பிரணவ் கிண்டல் குரலில்.

 

அவசரப்பட்டு தான் வாயை விட்டுவிட்டோம் என்று புரிய ஸ்ரீதரன் இப்போது அமைதி காத்தார். “என்ன சார் அமைதியாகிட்டீங்க”

 

 

“யாருன்னு தெரிய வேணாமா!! நான் இங்க எப்படி வந்தேன்னு உங்க யாருக்கும் தெரிய வேண்டாமா” என்ற பிரணவ் பரணியை நோக்கி திரும்பி கண்ஜாடை காட்ட ஒரு தலையசைப்புடன் அவன் வெளியில் சென்றுவிட்டான்.

 

 

“இந்தஆக்சிடென்ட் நடந்துமுழுசா ரெண்டு வருஷம் மேல சில மாதங்கள் ஆகுது சரியா!! இப்போ போய் நான் வந்திருக்கேனே ஏன்னு நீங்க யோசிக்கலையா!!”

 

 

“எதுவுமே இல்லாமலா நான் வந்திருப்பேன்னு நினைக்கறீங்க!!” என்றவன் சொல்ல ஆரம்பித்தான்.

 

 

“உங்க மேல முதல்ல சந்தேகம் வர ஆரம்பிச்சதுக்கு முதல் காரணம் சரவணன்…”

 

 

“சரவணன்!!” என்று கோரசாக ஒலித்தது தந்தை மகனின் குரல்.

 

 

“ஓ!! அவர் யாருன்னு உங்களுக்கு தெரியாதுல்ல என்னோட அக்காவோட கணவர் எனக்கு மாமா முறையாகுது”

 

 

“அவர் சொல்லி தான் நான் இந்த கேசை துருவ ஆரம்பிச்சேன். திருச்சியில இருக்கற என்னோட பிரண்ட் ஒருத்தனை வைச்சு விசாரிக்க ஆரம்பிச்சப்ப தான் நெறைய விஷயம் மூடி மறைக்கப்பட்டது தெரிஞ்சது”

 

 

“நீங்க பண்ணதுலயே பெரிய தப்பு என்ன தெரியுமா!! அந்த ஆக்சிடென்ட் ஸ்பாட்ல இறந்தது மொத்தம் நாலு பேரு!! ஆனா மூணு பேருன்னு சொல்லி நாலாவது இருந்த ஆளைப்பற்றி விபரத்தை மூடி மறைச்சது தான்”

 

 

“என்னோட மாமா குமாரசாமி தற்செயலா அந்த அல்லிராஜன் ஐஎப்எஸ் அதிகாரியான அவருக்கு லிப்ட் கொடுத்த விஷயம் நீங்க தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை”

 

 

“சாரி… சாரி… உங்களுக்கு அந்த நாலாவது ஆள் அல்லிராஜன்னு கொஞ்ச நாள் கழிச்சு தெரியும். அதனால தானே செத்தது மூணு பேருன்னு மாத்தி எழுத வைச்சீங்க”

 

 

“இதெல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு நீங்க நினைச்சுட்டீங்க. ஆனா அந்த அல்லிராஜன் கார்ல ஏறின பத்தாவது நிமிஷம் அவங்க வீட்டில உள்ளவங்களுக்கு போன் பண்ணி பேசியிருக்கார்”

 

 

“வீட்டுக்கு வர்றேன்னு சொன்ன மனுஷன் இன்னும் வரலைன்னு அவங்க போலீஸ்ல கம்பிளைன்ட் பண்ண விசாரிக்க வந்த ஆர்டிஓ உண்மையை கண்டுப்பிடிக்க அப்புறம் நீங்க அவருக்கு வைச்சீங்க ஒரு செக்”

“ஐ மீன் அடுத்ததா அவரையும் போட்டு தள்ளிட்டீங்க!! அதையும் ஆக்சிடென்ட் போல செட்டப் பண்ணிட்டீங்க. ஆனா அன்னைக்கு அந்த வண்டியில அந்த ஆர்டிஓ ஆபீசர் கூட இருந்த அவரோட தங்கச்சி பொண்ணு ரம்யா வண்டியை விட்டு தற்செயலா கீழ இறங்கி இருக்கா”

 

 

“அது உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. சோ ஆர்டிஓ கொலையில உங்களுக்கு இருந்த பங்கு ரம்யா மூலமா வெளிய வந்திடுச்சு.ரம்யா அவர் வண்டியை இடிச்ச வண்டி டிரைவரை அடையாளம் காட்டிட்டாங்க”

 

 

“இப்படியே அங்க தொட்டு இங்க தொட்டுன்னு கடைசியில நளினி கார்த்திக்கும் எங்ககிட்ட சிக்கியாச்சு. இப்போ நீங்களும் போதுமா!! எப்படி நீங்க சிக்குனீங்க தெரிஞ்சுதா!!”

 

 

“ஓ மறந்திட்டேன் நான் எப்படி வந்தேன்னு இன்னும் சொல்லவே இல்லைல!! உங்க மேல ஒரு புள்ளியா சந்தேகம் வந்ததுமே நான் ட்ரான்ஸ்பர்க்கு அப்பிளை பண்ணேன்”

 

 

“சென்னைக்கு வந்ததும் கிடைச்ச தகவல்கள் வைச்சு நானே இதை விசாரிக்க ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கினேன். செத்ததுல ஒரு ஐஎப்எஸ் ஆபிசரும் அடக்கம் அப்படிங்கறதால உடனே எனக்கு அனுமதி கிடைச்சுது”

 

 

“பெரிய ஹீரோவாடா நீ!! இதை வைச்சே இந்த கேசை நான் உடைக்கிறேன்டா!! செத்தவருக்கு சொந்தக்காரன் எப்படிடா இந்த கேசை எடுக்கலாம். பார்க்கலாம்டா நீயா!! நானான்னு!!” என்று இப்போதும் திமிர் குறையாமலே பேசினான் கணேஷ்.

 

 

“நான் ஹீரோன்னு நான் சொல்லிக்கவே இல்லையே. அவர் எனக்கு சொந்தக்காரரா இல்லாம இருந்திருந்தாலும் இதை நான் செஞ்சிருப்பேன்”

 

 

“அதாவதுரதி என்னை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தாலும் கூட!! அதுவும் இல்லாம நான் இந்த போஸ்ட்க்கு வருவேன்னு அந்த மனுஷனுக்கு தெரியுமா என்ன!! அப்போ எனக்கே இது தெரியாது”

 

 

“என்னை பத்தி முழுசா தெரியாமலே என்னை நம்பின அந்த மனுஷனோட இறப்புக்கு நான் நியாயம் செய்யணும்ன்னு நினைச்சேன், செஞ்சிட்டேன். என்னோட கடமையை தான் நான் செஞ்சிருக்கேன்”

 

 

“என்ன அவர் உன்னை நம்பினாரா!! என்ன உளறல்” என்றான் கணேஷ்.

 

 

“அதெல்லாம் நான் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை தான். ஆனாலும் கேட்டுக்கோ அவர் என்னை நம்பி ரெண்டு விஷயத்தை ஒப்படைச்சார். ஒண்ணுஅவர் பொண்ணு இன்னொண்ணு அந்த இடத்தோட டாக்குமென்ட்ஸ்….”

Advertisement