Advertisement

அத்தியாயம் –9

 

 

மனோவிற்கு அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்தது போல் இருந்தது.கொடைக்கானலில் இருந்து கிளம்பியதில் இருந்தே அவளுக்கு அப்படி தான் இருந்தது.

 

 

அவர்கள் வந்த வண்டி கொடைக்கானல் மலையை விட்டு இறங்கி பெரியகுளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. மனோவிற்கு அந்த வழி எதுவும் தெரியாததால் கணவனை நோக்கி “இப்போ நாம எங்க போறோம் என்றாள்.

 

 

“நைட் பிளைட் இருக்கு நான் அங்க இருந்து நேரா டெல்லி தான் போய் சேருவேன். உனக்கு சென்னைக்கு டிக்கெட் போட்டிருக்கேன்ம்மா என்றவன் வெளிப்புறம் வேடிக்கை பார்த்தவாறே பதில் சொன்னான்.

 

 

பிளைட் இருக்குன்னு தெரியுது எங்க இருந்து பிளைட்டு சொல்லவே இல்லையே??

 

 

“மதுரை என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு மீண்டும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் அவன்.

 

 

‘இப்போ ரொம்ப முக்கியமா வெளிய வேடிக்கை பார்க்கறது. இன்னும் கொஞ்சம் நேரம் தான் சேர்ந்திருக்க போறோம். என்னை பார்க்கணும்ன்னு தோணுதா இவருக்கு என்று மனதிற்குள்ளாக குமைந்து கொண்டாள் அவன் மணவாட்டி.

 

 

பிரணவ் சைடு மிரரின் வழியாக தெரிந்த மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டான். பொறுத்து பொறுத்து பார்த்தவள் “என்னங்க என்று அழைத்தே விட்டாள்.

 

 

“என்னம்மா என்றான்.

 

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல ஊருக்கு கிளம்பிடுவீங்க. அதுவரைக்கும் பேசிட்டு வரலாம்ல. வெளிய யாரை பார்த்து சைட் அடிக்கறீங்கஎன்று சொல்லி அவனை வம்பிழுத்தாள்.

 

 

“நான் சைட் தான் அடிக்கறேன்னு கண்டுப்பிடிச்சிட்டியா!! பிரில்லியண்ட் ரதிம்மா நீ!!

 

 

“நான் பக்கத்துல இருக்கேன் நீங்க யாரை… யாரை பார்த்து சைட் அடிக்கறீங்க என்று முறைத்தவாறே அவன் தோளில் இரண்டு அடி வைத்தாள்.

 

 

“அடிக்காதடி டிரைவர் நம்மையே பார்க்குறாரு பாரு என்று குனிந்து மனைவியின் காதில் சொன்னான். “பார்த்தா பார்க்கட்டும்… என்று முகத்தை திருப்பினாள் அவள்.

 

 

“பார்க்கலைன்னா ஏன் பார்க்கலைன்னு கேட்குறது பார்த்தா முகத்தை திருப்பிக்கிறது என்றவனின் கரம் அணைவாய் அவள் தோளை தொட்டது.

 

 

திரும்பி அவன் கண்ணை நோக்கியவள் அவன் மீது சாய்ந்துக் கொண்டாள். “இன்னும் இரண்டு நாள் இருக்க கூடாதா!! என்றவளின் குரலில் லேசாய் ஏக்கமும் வருத்தமும் இருந்ததை உணர்ந்தான்.

 

 

“திரும்பவும் நான் வருவேன்டா… அப்போ இங்கவே ட்ரான்ஸ்பர் ஆகி வருவேன் அதுவரை இப்படி ஒரு நாள் ரெண்டு நாள் விடுப்பு தான்ம்மா… அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றான்.

 

 

மனைவி இன்னமும் கவலையாய் இருந்தது அவனுக்கு புரிந்தே தான் இருந்தது. “சார் வண்டி கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க நான் முன்னாடி வந்திடறேன் என்றவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் மனோ.

 

 

“போற வழியில ஒரு இடத்துக்கு போகணும்டா நான் வழி சொல்லணும் அதான். நீ முறைக்காதே என்றுவிட்டு வண்டியில் இருந்து இறங்கி முன்னில் ஏறி அமர்ந்தான்.

 

 

“எங்க போகணும் என்கிட்ட எதுவும் சொல்லவேயில்லையே

 

 

“தெரிஞ்ச இடம்டா நமக்கு வேண்டியவங்க தான் அங்க இருக்காங்க என்றவன் அதற்கு மேல் அவளுக்கு எதுவும் சொல்லவில்லை. அவள் புறம் திரும்பவும் இல்லை.

 

 

ஓட்டுனருக்கு வழி சொல்லிக்கொண்டு வந்தான். வண்டி இப்போது பெரியகுளத்தில் இருந்தது. மனோ முன் புறம் பார்த்து “இது என்ன ஊரு என்றாள்.

 

 

“பெரியகுளம்

 

 

“ஓ!! என்றுவிட்டு அவள் அமைதியானாள். மனதிற்குள் ஒரு வேளை இவர் வீட்டுக்கு கூட்டி செல்கிறாரோ வேண்டுதல் பலிக்க போகிறதோ என்ற எண்ணம் மனதில் லேசாய் எழுந்து இனிமையை பரப்ப ஆரம்பித்தது….

 

 

ஓரிரு நாளில் இருவர் பாதையும் வெவ்வேறாகும் என்றறிந்திருந்தால் அவள் மனம் அங்கு செல்ல வேண்டாம் என்று எண்ணியிருக்குமோ!!காலம் பிரித்து வைக்க காத்திருக்கும் போது நடப்பதை எவர் தடுத்திட முடியும்!!

 

____________________

சில வருடங்களுக்கு முன்…

 

 

அந்த ரிஜிஸ்டர் அலுவலகம் முழுக்க பிரணவின் குரலே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. ராவ் பாவப்பட்ட ஜீவன் போல் நின்று பாவனை செய்துக் கொண்டிருக்க பிரணவ் அவனைத் தான் ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

 

அவர்களுடன் ராகவ் திருமணம் முடிக்க இருக்கும் அவன் அன்புக்காதலி கிரண் ராகவ் பிரணவின் உற்ற நண்பன் முகுந்தன் மற்றும் வேறு சில நண்பர்களும் கிரணின் தோழியரும் அங்கிருந்தனர்.

 

 

பிரணவிற்கு எப்போதும் போல் இப்போதும் அதே சந்தேகம் எழ “ஏன் கிரண் நீ எப்படி ராகவ்க்கு ஓகே சொன்னே என்று அவர்கள் காதல் விவகாரம் தெரிந்த நாளில் இருந்து கேட்கும் கேள்வியை மீண்டும் கேட்டு வைத்தான்.

 

 

“அடேய் உனக்கு ஏன்டா இந்த கொலைவெறி. அவளே எனக்கு ஓகே சொல்லிட்டா, நீ வேற கேள்வி கேட்டுட்டு. எத்தனை முறை தான் இதே கேள்வி கேட்ப. அவளை சம்மதிக்க வைக்க படாதாபாடு பட்டவன் நானு என்னைவிட்டு அவளை கேள்வி கேட்குற என்றான் ராகவ்.

 

 

“மச்சி நீ எப்படிடா கிரண் பின்னாடி சுத்தின… சுத்த சாமியார் மாதிரி பேசுனவனாச்சேடா நீ!! காதல் எங்கப்பாக்கு பிடிக்காது ஆட்டுக்குட்டிக்கு பிடிக்காது. எனக்கு பிடிக்கவே பிடிக்காதுன்னு ஓவரா சீன போட்டியே என்று நண்பனை வம்புக்கிழுத்தான் அவன்.

 

 

“கேளுடா நல்லா கேளு எனக்கும் இதே சந்தேகம் தான் பல நாளா!! ஆனா இவன் தான் பதிலே சொல்ல மாட்டேங்கறான் என்று பிரணவிற்கு ஒத்து ஊதினான் முகுந்தன்.

 

“நீங்க ரெண்டு பேரும் கிரண்கிட்ட எனக்கு அடிவாங்கி கொடுக்காம இருக்க மாட்டீங்க போல. சரி உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லிடுறேன்

 

 

“இனிமே இந்த கேள்வி நீங்க என்கிட்ட கேட்கவே கூடாது ஓகேவா என்று டீல் பேசிவிட்டுதொடர்ந்தான் ராகவ்.

 

 

“கிரண் மாதிரி ஒரு பொண்ணை பார்த்தா காதலிக்காம இருக்க முடியுமா!! அதான் அவளை மிஸ் பண்ணக் கூடாதுன்னு உடனே லவ் பண்ணிட்டேன் என்று அசடு வழிந்தான் அவன்.

 

 

“இந்த கதை எங்களுக்கும் தெரியும் நீ ஓவரா கிரண்க்கு ஐஸ் வைக்காத. டேய் நீ லவ் பண்ணது தப்புன்னு சொல்லலை ஆனா பிடிக்காது பிடிக்காதுன்னு சொல்லிட்டு செஞ்சியே அதான் ஜீரணிக்க முடியலை

 

 

“முடியாதுடா பிரணவ் உனக்கு ஜீரணிக்க முடியாது. ஏன் முகுந்த் லவ் பண்ணலை என்று முகுந்தனை வம்புக்கிழுத்தான் ராகவ்.

 

 

“அடேய் மீரா என் மாமன் பொண்ணு நான் லவ் பண்றேன்னு எப்போ சொன்னேன். இல்லை லவ் பண்ண மாட்டேன்னு தான் எப்போ சொன்னேன். எனக்கு அவளை பிடிக்கும் கட்டினா அவளை கட்டணும் ஆசை அவ்வளோ தான்

 

 

“உன்னை மாதிரி சாமியார் வேஷம் எல்லாம் நான் போடலை சாமி என்று முகுந்தன் பதில் கொடுத்தான்.

 

 

“ஏன்டா உனக்கெல்லாம் லவ் வரவே வராதா!! நீ எப்படி கல்யாணம் முடிக்க போறேன்னு நான் பார்க்க தானே போறேன். உனக்கு லவ் மேரேஜ் தான் ஆகப் போகுது பாரு என்று சபித்தானா அல்லது வாழ்த்தினானா என்றறியாதவாறு பேசினான் ராகவ்.

“நான் என்ன எனக்கு லவ் வராதுன்னா சொன்னேன். இப்போ வரைக்கும் எனக்கு லவ் வரலை வந்தா பாப்போம் என்றான் பிரணவ்.

 

 

“கிரண் நீ என்ன இவ்வளவு அமைதியா இருக்க, பயமாயிருக்கா!! என்ற பிரணவை நிமிர்ந்து பார்த்தாள் கிரண்.

 

 

“ஹ்ம்ம் கொஞ்சோ பயம் இருக்கு என்றவளின் முகத்தில் கலவரம் தெரிந்தது. அவளின் கலக்கம் போக்க தான் நண்பர்கள் கலாட்டாவே செய்ய ஆரம்பித்தார்கள் ஆனாலும் அவள் கலக்கம் குறையாமல் நின்றிருந்தாள்.

 

 

“எதுக்கும் பயமோ கவலையோ வேண்டாம்… சீயர் அப் கிரண் என்றவன் அவளின் தோளை ஆறுதலாய் பற்றினான். அப்போது யாரோ அவனை பார்ப்பது போல் பிரணவிற்கு தோன்றியது.

 

 

“ஓகே… இப்போ பயம் போச்சு என்றாள் கிரண் கொச்சை தமிழில்.

 

 

“என் கூட இவ்வளோ நாள் பழகுற, உனக்கு தமிழ் இன்னும் ஒழுங்கா பேச வரலையே கிரண் என்று அங்கலாய்த்தான் ராகவ்.

 

 

“அதே நானும் கேட்குது என் கூட நீ பழகி நீ ஒன் டைமாச்சும் ஹிந்தி பேசுச்சா!! என்றாள்

 

 

“இந்த அவமானம் உனக்கு தேவையா அய்யாசாமி என்று ராகவை கலாய்த்தான் பிரணவ்.

 

 

“நீங்கோ நெக்ஸ்ட் டைம் என்னை பாக்கும்போது நான் பேசுறது பார்த்து நீங்க ஹாப்பி ஆவீங்கோ பாருங்கோ. அப்போ கூட உங்க பிரண்ட் ஹிந்தி கத்துக்காது என்றாள் கிரண்.

 

கிரண் வடஇந்திய பெண் சென்னையில் அவளின் தந்தை தன் தொழிலை விரிவுபடுத்தியிருந்ததால் ராஜஸ்தானில் இருந்த அவர் குடும்பத்தை மொத்தமாய் சில வருடங்களுக்கு முன் சென்னையில் குடியமர்த்தினார்.

 

 

அவர்கள் சென்னை வந்த இத்தனை நாளில் அவள் இந்தளவிற்கு பேசிய தமிழே அதிகம் தான் என்றாலும் ராகவ் எப்போதும் அவளை கேலி செய்துக் கொண்டே இருப்பான்.

 

 

பிரணவிற்கு யாரோ தன்னை பார்ப்பது போன்ற உணர்வு இன்னமும் போகவில்லை. மெதுவாய் திரும்பி சுற்று முற்றும் பார்த்தான்.

 

 

அங்கு ஒரு பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையில் அவ்வளவு வெறுப்பு இருந்தது. ‘இவ எதுக்கு என்னை இப்படி பார்க்குறா!! என்று யோசித்துக் கொண்டிருந்தவன் கிரணின் தோளில் இருந்த கையை இன்னமும் எடுத்திருக்கவில்லை.

 

 

“உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?? என்ற பெண் குரல் கேட்டு திரும்பினான் பிரணவ்.

 

 

“யாரும்மா நீ?? என்றான் அப்பெண்ணை பார்த்து.

 

 

“ஷி இஸ் மை பிரண்ட் என்றாள் கிரண்.

 

 

அப்பெண்ணை ஏற இறங்க பார்த்தவன் “ஹ்ம்ம் என்ன கேட்கணும்?? என்றான்.

 

 

“லவ் வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க?? என்றாள்

 

‘இதென்ன கேள்வி என்பதாய் அவளை பார்த்தவன் “லவ் வந்தா என்ன பண்ணுவேன் லவ் பண்ணுவேன்

 

 

“அந்த பொண்ணு உங்களை லவ் பண்ணலைன்னா அப்போ என்ன செய்வீங்க என்றாள் அப்பெண் விடாமல் கேள்வியோடு.

 

 

“அந்த பொண்ணை எப்படியாச்சும் என்னை லவ் பண்ண வைப்பேன்

 

 

“அந்த பொண்ணு அப்பவும் உங்களை லவ் பண்ணலைன்னா, ஒரு வேளை அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணிட்டு இருந்தா என்று சொல்லி வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றினாள்.

 

 

“உனக்கு ஏன்மா இப்படி எல்லாம் குதர்க்கமா தோணுது என்றவன் கிரணை பார்த்து “ஏன் கிரண் இந்த பொண்ணோட எல்லாம் பிரண்ட்ஷிப் வைச்சிருக்க என்றான் பிரணவ்.

 

 

“ஹேய் வாஹினி சுப் கரோ என்று தோழியிடம் சொன்ன கிரண் “அது ஒண்ணும் இல்லே, இவளுக்கு உங்க மேல கொஞ்சம் இது அதான் இப்படி பாகல் மாதிரி பேசுது என்று விளக்கம் கொடுத்தாள்.

 

 

“ஹேய் நான் லூசா உனக்கு. இவரு பெரிய இவரு லவ் பண்ணுறாங்க. சும்மா கேட்டேன் பதில் சொல்ல முடியாம ஓடுறாரு இதுல அவரு உங்களை எல்லாம் கிண்டல் பண்றாரு என்றாள் அப்பெண் வாஹினி.

 

 

“நான் ஒண்ணும் பதில் சொல்லாம ஓடலை

 

 

“அப்போ பதில் சொல்லுங்க

 

“நீ லூசு மாதிரி கேட்குற கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது என்றவன் அவளை முறைத்தான். இன்னமும் தூரத்தில் பார்த்த பெண் அவனை முறைப்பதை அவனால் திரும்பி பார்க்காமலே உணரஎ முடிந்தது.

 

 

“அப்போ நீங்க ஒரு டம்மி பீசா அதுக்கா இவ்வளவு பில்டப் பண்ண கிரண் என்று கிண்டல் செய்தாள் அவள்.

 

 

பிரணவிற்கு லேசாய் கோபம் எட்டி பார்த்தது. “இப்போ என்ன தெரியணும் உனக்கு என்றான்.

 

 

“அந்த பொண்ணு வேற யாரையும் லவ் பண்ணியிருந்தா என்ன செய்வீங்கன்னு கேட்டேன் என்று கேள்வியை மீண்டும் கேட்டாள் அவள்.

 

 

“அப்படி ஒண்ணு அவ செஞ்சிருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் அவ அதெல்லாம் மறந்திருவா. என்னை மட்டும் நினைக்க வைக்க எனக்கு தெரியும் போதுமா

 

 

“அந்த பொண்ணு தான் உங்களை திரும்பியே பார்க்க மாட்டாளே. அப்புறம் எப்படி கல்யாணம் எல்லாம்

 

 

“அதெல்லாம் ஏதாச்சும் பண்ணி அவளை கல்யாணம் பண்ணிக்குவேன். அந்த பொண்ணு எனக்குன்னு இருந்தா யார் தடுத்தாலும் அவ எனக்கு தான் கிடைப்பா. இல்லைன்னா அது தான் என் விதின்னு நான் இருப்பேன் போதுமா என்றான்.

 

 

பிரணவ் வாஹினியின் வாயை அடைக்க சொன்ன பதில் எல்லாம் அவனை நோக்கி ஏவுகணையாய் திரும்பி வரும் என்றறியாமல் பேசினான் அவன். முன்னமே அறிந்திருந்தால் பேசாமல் இருந்திருப்பானோ!! என்னவோ!!

 

“அப்போ எனக்கொரு சான்ஸ் இருக்கு என்றாள் வாஹினி நமுட்டு சிரிப்புடன்.

 

 

“உயிரே போனாலும் உனக்கெல்லாம் சான்ஸ் தரவே மாட்டேன் நானு என்று சிலிர்த்தான் அவன்.

 

 

“அச்சோ போதுமே நிறுத்துங்களேன், நீ ஏன் வாஹினி அவனை வெறுப்பேத்துற!! அவன் பார்க்க ஜாலி ஆளுன்னு நினைக்காத ரொம்ப டெரர் பீஸ் அவன் என்று எச்சரிக்கை கொடுத்தான் ராகவ்.

 

 

“நல்லா சொல்லி வைடா அவளுக்கு என்றவனின் கோபம் இன்னமும் அடங்கவேயில்லை. ஒரு வழியாய் தன்னை நிதானத்துக்கு கொண்டு வந்த பின்னே கிரணை பார்த்தான்.

 

 

அவன் அதை உணரவும் இல்லை. “டேய் நேரமாச்சு அடுத்து நாம தான் வாங்க என்று உள்ளே விசாரிக்க சென்றிருந்த முகுந்தன் திரும்பி வந்து சொல்ல அந்த குரலில் கலைந்தான் பிரணவ்.

 

 

“ஹ்ம்ம் வாங்க எல்லாரும் உள்ள போகலாம் என்றவாறே அவர்கள் உள்ளே நுழைந்தனர்.

 

 

சிறிது நேரத்தில் ராகவ் கிரணின் திருமணம் முடிந்து அவர்கள் வெளியில் வந்தனர். “அண்ணா ரொம்ப தேங்க்ஸ் உங்க எல்லாருக்கும்… என்றவளின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

 

 

“கிரண் எதுவும் பீல் பண்ண வேண்டாம். ராகவ் நாம பேசின மாதிரி நீங்க கிளம்புங்க. கொஞ்ச நாளைக்கு நமக்குள்ள எந்த தொடர்பும் வேணாம். எங்க எல்லார் நம்பரும் நாங்க மாத்திடுவோம். நீங்களும் நம்பர் மாத்திடுங்க. அதுக்கு முன்னாடி உங்க வீட்டுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிடுங்க

 

“முகுந்த் நீ இப்படியே ஊருக்கு கிளம்பு சொன்ன மாதிரி நம்பர் மாத்திடு. உன்னை பார்த்தே ஆகணும்ன்னா நானே எப்படியாச்சும் உன்னை கண்டு பிடிச்சு கால் பண்ணுறேன். ராகவ் உனக்கும் தான் என்று பிரணவ் நீளமாய் பேசி முடித்து திரும்பி பார்க்க இன்னமும் அப்பெண் இவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

நேரே அவளிடம் சென்று ‘உனக்கென்ன பிரச்சனை எதுக்கு முறைக்கிற என்று கேட்டுவிடலாமா என்று அவனுக்கு தோன்றியது.

 

 

அப்போது தான் அந்த பெண் பேசும் குரல் கேட்டது. “அப்பா இப்போவே எதுக்குப்பா இதெல்லாம் செய்யறீங்க. இந்த இடம் என் பேருல இருந்தாகணும்ன்னு என்ன கட்டாயம்

 

 

“உங்க பேருலயோ இல்லை அம்மா பேருலயோ இருக்கட்டுமே!! என்ற அப்பெண்ணின் கேள்விக்கு அருகில் நின்றிருந்தவர் “அதில்லைடா பாப்பு இதை எப்பவோ உன் பேருல எழுதணும் தோணிச்சு

 

 

“என்னமோ இப்போ தான் அதுக்கு நேரம் வாச்சிருக்கு. அப்பா எப்பவும் இப்படியே இருக்க மாட்டேன்டா. நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வந்து கடன்க்கு எல்லாமே போனா கூட இந்த இடம் மட்டும் உன்னை விட்டு போகக் கூடாதுடா

 

 

“உங்கம்மாகிட்டையும் நான் இதை சொல்லி வைச்சிருக்கேன். பார்த்து இருந்துக்கணும் இந்த சொத்துநம்ம பூர்வீகமா வந்ததுடா… அது நியாயப்படி உனக்கு தான் சேரணும் அதான் இப்போவே அதை மாத்தி விட்டிறேன்டா என்றார்.

 

 

“ஏன்பா இப்படி எல்லாம் பேசறீங்க?? நீங்க எப்பவும் எங்க கூட இருப்பீங்க நமக்கு கடன் எல்லாம் இருந்தா கூட அதை நான் அடைச்சுக்கறேன்ப்பா

 

“நான் தான் இப்போ வேலைக்கு போகப் போறேனே. உங்க சுமை எல்லாம் நான் பார்த்துக்கறேன்ப்பா என்றாள் அப்பெண்.

 

 

“நீ சொன்னதே போதும்டா வா இதுல கையெழுத்து போடு வேலை முடிஞ்சிரும் என்றவர் அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

 

 

பிரணவ், ராகவ், கிரண் மற்றும் முகுந்தன் மட்டும் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து தனியே பேசிக் கொண்டிருந்தனர்.

 

 

பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பவும் பிரணவ் அப்பெண்ணை மீண்டும் சந்திக்கவும் சரியாக இருந்தது. “திமிர் பிடிச்சவன் என்று அப்பெண் வாய்க்குள் முனகுவது புரிய பதிலுக்கு பிரணவின் உதடுகள் “ஆமாம் அதுக்கென்ன இப்போ என்று சத்தமில்லாமல் முணுமுணுத்தது….

 

 

“பாரதிம்மா அங்க என்னடா பார்த்திட்டு இருக்க?? என்ற குரலில் கலைந்த அப்பெண் பிரணவை கடுமையாக முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

‘பாரதியா இவ பேரு… பெரிய ரதி இவ… இவ முறைச்சா நான் பொசுங்கிருவோமா போடி போ போ… என்று மனதிற்குள்ளாக பேசிக் கொண்டு நண்பர்கள் பிரிந்தனர் அவரவர் வழியில்…..

Advertisement