Advertisement

அத்தியாயம் –6

 

 

“ஏன் ரித்திக் எங்களையும் உங்களோட கூட்டிட்டு போங்களேன் என்றாள். அவளுக்கு வீட்டின் அருகில் பேசிய ப்ரியாம்மாவும் தன்னை ஒரு மாதிரி பார்க்கும் அக்கம் பக்கத்தினரின் பார்வையும் வந்து போனது.

 

 

அதனாலேயே அவனிடம் தங்களையும் அழைத்துச் செல்ல சொல்லி கேட்டாள். “ரதி… என் வேலை பத்தி உனக்கு தெரியும்ல… புரிஞ்சுக்கோம்மா…

 

 

“எனக்கே இப்போ தான் அங்க கொஞ்சம் செட் ஆகியிருக்கு. சில முக்கியமான வேலை எல்லாம் இருக்கு. உன்னை என்னோட கூட்டிட்டு போனா எனக்கு கான்ஷன்ட்ரேஷன் மிஸ் ஆகும்டா

 

 

“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ!! அங்க ஓரளவு எல்லாம் சரி பண்ணிட்டு உன்னை கூடவே கூட்டிட்டு போய்டறேன். இல்லன்னா நானும் இங்க மாத்திக்கிட்டு வந்திடறேன் ஓகே தானே…

 

 

“ஹ்ம்ம்… சரி… என்றாள் அரைகுறை மனதுடன்.

 

 

“இப்படி அரைகுறையா எல்லாம் சொல்லாத ரதி…என் கண்ணை பார்த்து சொல்லு என்றவன் அவன் மேல் சாய்ந்திருந்தவளை நிமிர்த்தி அவள் கண்களை நோக்கினான்.

 

 

அவன் எப்போதுமே இப்படி தான் மனம் நினைப்பதை கண்கள் காட்டிக் கொடுத்துவிடும் என்பான். முக்கியமான விஷயமென்றாலும் அவளை பற்றி அறிய வேண்டுமென்றாலும் கண் பார்த்து தான் பேசுவான்.

 

 

அவனின் அச்செயலே அவளுக்கு அவன் மீது பிடித்தம் ஏற்பட ஒரு காரணம். “என்னம்மா நான் கேட்டுகிட்டே இருக்கேன். உன் மனசு இங்க இல்லாம வேற எங்க இருக்கு?? என்றான் அவன் மென்மையாய்.

 

 

“ஒண்ணுமில்லைங்க

 

“சரி சொல்லு நான் உங்களை கூடவே கூட்டிட்டு போகலைன்னு நீ கவலைப்படுறியா!! இதென்ன கேள்வின்னு நினைக்காதே!! உனக்கு கவலை இருக்கும்ன்னு தெரியும்

 

 

“ஆனா நீ என்னை புரிஞ்சுக்குவன்னு தான் இவ்வளோ தூரம் சொல்றேன். எந்த சூழ்நிலையிலையும் நீ தனியா இருக்க கத்துக்கணும் அதுவும் ஒரு காரணம்

 

 

“இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலையா!! என்றவளின் குரலில் லேசாய் ஒரு வலி எட்டிப் பார்த்தது.

 

 

“நீ அப்போ மாதிரி விவரம் தெரியாம எல்லாம் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும் ரதிம்மா. உன் மேல நான் நம்பிக்கை இல்லாம தான் இதை சொல்றேன்னு ஏன் எடுத்துக்கற!!

 

 

“நான் இல்லாம நீ தனியா இத்தனை மாசமா சமாளிச்சிருக்கே!! உனக்குள்ள இப்போ ஒரு நம்பிக்கை வந்திருக்கு ஐ மீன் தன்னம்பிக்கை வந்திருக்கு

 

 

“தனிச்சு உன்னால எதையும் திடமா சமாளிக்க முடியும் சரி தானே!! நான் உன் பக்கத்துல இருந்தாலும் இல்லைன்னாலும் நீ இப்படி தான் இருக்கணும்ன்னு நான் விரும்புறேன் ரதிம்மா என்றான் அவள் கண்களை உற்று நோக்கி.

 

 

அவன் பார்வை தாங்காமல் மீண்டும் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டாள். “ரதிம்மா… ரதி…

 

 

“ஹ்ம்ம்… சொல்லுங்க…

 

 

“ரதி செல்லம்… ரதி டியர்…

 

 

“என்னன்னு சொல்லுங்க எனக்கு கேட்குது

 

 

“நிமிர்ந்து பாரு!!

“பார்க்க மாட்டேன்!! என்று அடம் பிடித்தாள்.

 

 

“அப்போ சொல்ல மாட்டேன்!! என்று பதிலுக்கு அடம் பிடித்தான் அவள் கணவன்.

 

 

“சும்மா பார்த்து பார்த்து கொல்றீங்க!!

 

 

“என்ன கொல்றனா!! நானா இல்லை நீயா!! என்று சிரித்தான்.

 

 

“கண்ணு பார்த்து பேசணும்ன்னு சொல்லிட்டு ஆளை முழுங்கற மாதிரி பார்க்கறீங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்காதா!! என்று குற்றப்பத்திரிகை வாசித்தாள் அவன் மனைவி.

 

 

“ஹா… ஹா… என்று வாய்விட்டு நகைத்தவன் “என் பொண்டாட்டியை தானே முழுங்கற மாதிரி பார்த்தேன். அதில தப்பொண்ணும் இல்லையே!!

 

 

“அதுக்கெல்லாம் நேரம் காலமே கிடையாதா!! எப்போ பார்த்தாலும் அப்படி தான் பார்க்கறீங்க!! சாதாரணமா பேசலாம்ன்னாலும் நீங்க பார்க்கற பார்வையை எல்லாம் என்னால பேஸ் பண்ண முடியலை சாமி

 

 

“டார்லிங் இப்படியே பேசிட்டே இருந்தா நான் சொல்ல வந்ததை சொல்ல முடியாம போய்டும். ப்ளீஸ் கொஞ்சம் நிமிர்ந்து பாரு என்று அவன் சொல்லவும் நிமிர்ந்து அவன் கண்களை நோக்கினாள்.

 

 

வேண்டுமென்றே அவளை விழுங்கி விடும் பார்வையை அவன் பார்த்து வைக்க மனோவோ சிணுங்கினாள். “இதுக்கு தான் பார்க்க மாட்டேன்னு சொன்னேன்

 

 

“சரி சரி சொல்லிடறேன்… ஐ லவ் யூ ரதிம்மாஎன்றான் அவள் விழியை பார்த்து.

 

 

“எதுக்கு கண்ணை மூடுற!! திறடி நான் பார்க்கணும்

“திறக்க மாட்டியா!! என்றவன் அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கியவன் அவள் இதழில் இதழ் பொருத்தினான்.

 

 

சில நொடிகளில் அவனே அவளை விடுவிக்க இன்னமும் கண்ணை மூடியிருந்தவள் கணவனின் முத்தத்தில் கிறங்கி அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

 

 

எங்கே அவன் சென்று விடுவானோ என்பது போல் அவளின் அணைப்பு இறுகியது. “ரதி என்னடா நான் இங்க தான் இருக்கேன். எப்பவும் உன் கூட தான் இருப்பேன்

 

 

“எங்கயும் ஓடிற மாட்டேன் டியர்!! நீ வீணா மனசை போட்டு குழப்பிக்காதேம்மா!! என்றவன் அவள் தலையில் முத்தம் வைத்தான்.

 

 

அவன் மார்பின் மீது ஈரம் உணர்ந்த போது தான் அவள் அழுகிறாள் என்று உணர்ந்தவன் “ஏன்ம்மா இப்படி பண்ணுற?? எத்தனை முறை சமாதானப்படுத்தினாலும் நீ இப்படி அழுதிட்டே இருக்கே!! என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா!! என்றவனின் பேச்சில் லேசாய் கோபமிருந்ததை உணர்ந்தாள்.

 

 

ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டவள் “நினைப்பு தான் அழறனாமில்லை!! என்று லேசாய் அவன் மார்பில் குத்தினாலும் அவள் கண்ணின் ஈரம் அவனுக்கு தெரியாமலில்லை.

 

 

“சரி உன்கிட்ட நான் கேட்க நினைச்ச விஷயத்தை கேட்டிறேன். எனக்கு ஒழுங்கா பதில் சொல்லணும் என்று பீடிகை போட்டான்.

 

 

“நான் ஏன் போனை உடைச்சேன்னு தானே உங்களுக்கு தெரியணும் என்று அவன் கேட்க வந்ததை அவளே கேள்வியாக்கியானாள்.

 

 

“ஹ்ம்ம்… என்று தலையசைத்தவனை பார்த்து லேசாய் சிரித்தவள் “நீங்க போன்ல கேட்காத போதே நினைச்சேன். நேர்ல கண்டிப்பா கேட்பீங்கன்னு என்றாள்.

 

 

அவன் அமைதியாக இருந்தான் நான் கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை என்பது போல். அவன் அழுத்தம் அறிந்தவள் அவளாகவே கூற ஆரம்பித்தாள்.

 

 

“ரித்திக் என்னை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் கோபப்படாதீங்க!!என்ற பீடிகையுடன் ஆரம்பித்தவள் அன்றைய அவளின் கோபத்தையும் இயலாமையையும் பற்றி கூறினாள்.

 

 

அவளை தன் புறம் இழுத்து இறுக அணைத்தவன் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். “இனிமே இப்படி பண்ணாதே ரதிம்மா!! உன் கோவத்தை போன்கிட்ட காட்டினா அதுக்கு தெரியுமா!!

 

 

“எதுவா இருந்தாலும் என்கிட்ட காட்டு ஓகே வா!!

 

 

“உங்களை பார்த்தா எனக்கு எங்க கோவம் வருது. அதெல்லாம் கோவம் உங்க மேல இல்லை. என் மேலயே எனக்கு கோவம். அதான் இப்படி எல்லாம், இனி இப்படி நடக்காது என்று விளக்கம் கொடுத்தாள்.

 

 

“சரி தூங்குவோமா நாளைக்கு காலையில சீக்கிரம் எழணுமே என்றான்.

 

 

அவளும் தலையசைத்து கட்டிலில் படுத்துக்கொள்ள அவன் கரம் அவள் இடையை அணைத்துக் கொண்டது. மனோ குழந்தையின் மீது கையை அணைவாக போட்டுக் கொண்டாள்.

 

 

மறுநாளைய பொழுது எழுந்து குளித்து கரும்பச்சை நிற சில்க் காட்டன் புடவை அணிந்தவள் தலைமுடியை வாரி பின்னலிட்டாள். குழந்தையை குளிப்பாட்டி கூட்டி வர பிரணவ் குழந்தையை தயார் படுத்தினான்.

 

 

அவன் அஜியை தயார் செய்யும் அழகை கண்டு ரசித்தவள் குழந்தைக்கு தேவையான பொருட்களை ஒரு பையில் எடுத்து அடக்கினாள். பின் கணவனை பார்க்க அப்பாவும் பிள்ளையும் தயாராகி முடித்திருந்தார்கள்.

 

“போகலாமா ரதி!! என்றான்.

 

 

ஹ்ம்ம் என்று தலையசைத்தவளின் தோளில் கையை போட்டுக்கொண்டவன் அவளை அணைத்தவாறே வெளியில் வந்து அறைக்கதவை பூட்டினான்.

 

 

அபராஜித் வெகு சமர்த்தாக தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு போவோர் வருவோரை அவன் சிறு குறும்பு சேஷ்டையால் வசீகரித்துக் கொண்டிருந்தான்.

 

 

அங்கிருந்த அனைவரின் பார்வையுமே குழந்தையை தொட்டுச் சென்றது. ஓரிருவர் அருகில் வந்து அவன் கன்னம் தடவிச் சென்றனர். மனோவுக்கு தான் சற்று சங்கடமாக இருந்தது.

 

 

“என்ன ரதி?? என்ன யோசனை??

 

 

“இல்லை குழந்தை… என்று இழுத்தாள்.

 

 

“குழந்தைன்னா அப்படி தான் எல்லாருக்குமே பிடிக்கும். அதுவும் நம்ம அஜி ரொம்ப ஸ்வீட் அதான் அப்படி என்று குழந்தையை கொஞ்சிக் கொண்டே மனைவிக்கு பதில் கொடுத்தான்.

 

 

அவர்கள் வாயிலுக்கு வந்து சேரவும் முகுந்தன் அவன் பெற்றோருடன் அங்கு வந்து சேர்ந்தான். அவர்கள் பேசிக்கொண்டே மலையேறினர். நடந்து செல்லும் வலி ஒன்றும் அவர்களுக்கு தெரியவேயில்லை.

 

 

மலைக்கு வந்து அவர்கள் சேரவும் மொட்டை அடிக்கும் பகுதிக்கு சென்றனர். குழந்தைக்கு காது குத்தவும் மொட்டை அடிக்கவும் ஏற்கனவே தெரிந்த ஒருவரை முகுந்தனின் தந்தை ஏற்பாடு செய்திருந்தார்.

 

 

அவர்கள் அங்கு செல்லவும் முகுந்தன் மடி மீது குழந்தையை அமர்த்தினர். அபராஜித் எந்தவித தொல்லையும் செய்யாமல் சமத்தாக மொட்டை அடித்துக் கொண்டான்.

 

பாதி மொட்டை அடிக்கும் போதே குழந்தைக்கு உறக்கம் வந்திருக்க முகுந்தன் அபராஜித்தின் தலையை பிடித்துக்கொண்டான். காது குத்தும் போது தான் அபராஜித்தின் அழுகையை சமாதானம் செய்ய முடியவில்லை.

 

 

ஒருவாறு குழந்தையை அவர்கள் சமாதானம் செய்து குளிக்க வைத்து வேறு உடைமாற்றி வரவும் முகுந்தன் அங்கிருந்த யாரையோ பார்த்து அரண்டவாறே அவன் அன்னையின் அருகில் வந்து நின்றான்.

 

 

“என்னடா எதுக்கு இப்படி இங்க வந்து இடிச்சுகிட்டு நிக்கற என்றார் அவன் அன்னை.

 

 

“அம்மா அங்க பாரேன் யாரு வர்றாங்கன்னு இவ எதுக்கும்மா இங்க வர்றா என்று கையை நீட்டி காட்ட அவன் அன்னை திரும்பி பார்த்தார்.

 

 

“அவ சாமி கும்பிட வந்திருப்பாடா!! அதுக்கு நீ ஏன் பதறுற!! என்றவர் மனோவிடம் சென்றார்.

 

 

முகுந்தன் அருகில் நின்றிருந்த நண்பனிடம் சென்றான். “டேய் மச்சான் அந்த பக்கம் பாருடா சாத்தான் வருது!! என்று கண்ணை காட்டினான்.

 

 

“யாரைடா சொல்ற!! என்று அசுவாரசியமாய் திரும்பிய பிரணவ் “ஹாய் மீரா!! இங்க இருக்கோம்!! என்று கையை ஆட்ட ‘துரோகி!!கூடவே இருந்து கோர்த்துவிட்டுட்டியேடா!!’ என்ற ரீதியில் நண்பனை பார்த்தான் முகுந்தன்.

 

 

அவர்கள் அருகில் வந்த மீரா “என்ன பிரதர்!! எங்க நினைப்பெல்லாம் உங்களுக்கு இருக்கா!! என்றவளின் பேச்சு தான் பிரணவிடம் இருந்ததே தவிர பார்வை முழுதும் முகுந்தனிடமே இருந்தது.

 

 

‘பார்க்குறா!! பார்க்குறா!! வில்லங்கத்தை இப்படி எவனாச்சும் கூப்பிடுவானா!! இவளை கூப்பிடுவேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் அப்படியே எஸ்கேப் ஆகியிருப்பேனே!! என்று மனதிற்குள்ளாக பேசிக்கொண்டிருந்தான் முகுந்தன்.

 

“ஹ்க்கும்… என்று கனைத்தாள் மீரா.

 

 

முகுந்தன் அவளை சிடுசிடுவென்று பார்த்தான். பிரணவ் நண்பனின் தோளில் இடித்தான். “அவளை கொஞ்சம் நல்லா தான் பாரேன் என்றவனை முகுந்தன் முறைத்தான்.

 

 

“இவளை எதுக்கு இங்க கூப்பிட்ட!! ஏன் என்கிட்ட நீ சொல்லவேயில்லை?? என்றான் நண்பனை பார்த்து.

 

 

“உன்னை மாதிரி அவளும் எனக்கொரு பிரண்டுடா!!

 

 

“என்னது அவ உனக்கு பிரண்டா!! எப்படி?? நீங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜா?? இல்லை ஒரே ஸ்கூலா?? இல்லை ஒரே ஆபீஸா?? நான் சொல்லி தானே இவளை உனக்கு தெரியும்

 

 

“எப்படி தெரிஞ்சா என்னடா!! நீ ரதிக்கு எப்படி அண்ணனோ அவ எனக்கு தங்கைடா

 

 

“ப்பா…இவரு விஜயகுமாரு இந்தம்மா ராதிகா ரொம்ப தான் அண்ணன் தங்கச்சி பாசப்பயிரை வளர்க்காதீங்கடா என்று இடித்தான் முகுந்தன்.

 

 

“உனக்கு என்ன பிரச்சனைடா அவளோட!! அவளை தான் உனக்கு ரொம்ப பிடிக்குமே அப்புறம் ஏன் கல்யாணம் வேணாம்ன்னு தள்ளி போட்டுக்கிட்டே இருக்கே!! என்றான் பிரணவ்.

 

 

“பிரச்சனை எனக்கென்ன பிரச்சனை இவளோட!! இவளுக்கு தான் பிரச்சனை இருக்கு. ஆளும் மூஞ்சியும் பாரேன் எப்படி நிக்கறான்னு!! என்று அவளை பார்த்து முறைத்தான்.

 

 

“டேய் என்ன பிரச்சனைன்னு கேட்டா பதில் சொல்லுறியா!! அதைவிட்டு முறைச்சுகிட்டே இருக்க!!

 

 

“இவளுக்கெல்லாம் யாருடா மீரான்னு பேருவைச்சது!! மென்டல்ன்னு வைச்சிருக்கணும். எப்போ பார்த்தாலும் மனசாட்சியோட பேசறேன்னு உயிரை எடுக்கறா!! பொண்ணு பார்க்க போனா எல்லாரும் எவ்வளவு சந்தோசமா போவாங்க!!

 

 

“நானும் அதே போல சந்தோசத்தோட போனேன்டா இவளை பொண்ணு பார்க்க!! தனியா பேசணும்ன்னு சொன்னேன்!! மகராசி வந்தா பிடிச்சிருக்கான்னு கேட்டா பதிலே சொல்லலை நான் என்னனு நினைக்கிறது

 

 

“அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம்ன்னு வெயிட் பண்ணி பார்த்தேன். பதிலையே காணோம் சரி தான் போடின்னு கிளம்பி வந்துட்டேன்

 

 

“ஏன் பேசலைன்னு கேட்க வேண்டியது தானே அதை விட்டு கிளம்பி வந்தா ஆச்சா!! என்றான் பிரணவ்.

 

 

“ஏதோ நாம தான் கோவமா கிளம்பி வந்துட்டோம் போல நம்மளை பார்த்து வெக்கப்பட்டுக்கிட்டு சொல்லாம இருந்திருப்பாளோன்னு நினைச்சு என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்ன்னு இவளை தேடி தோப்பு பக்கம் போனேன் என்றவன் சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு மீராவை பார்த்து மீண்டும் முறைத்தான்.

 

 

‘இவன் வேற அப்பப்போ முறைச்சுட்டு என்று மனதிற்குள் நினைத்தவன் “டேய் விஷயத்தை சொல்லுடா

 

 

“நான் அவமானப்பட்டதை கேட்க உனக்கு அவ்வளவு அவசரமாடா என்ற முகுந்தன் தொடர்ந்தான்.

 

 

“தோப்புல இவ அவளோட பாயம்மா பிரண்டு பாத்திமா கூட பேசிட்டு இருந்தா!! பக்கத்துல போனா ரெண்டு பேரும் என்னைய பத்தி பேசுற மாதிரி இருந்துச்சு என்னன்னு பக்கத்துல போய் அவங்களுக்கு தெரியாம கொஞ்சம் மறைஞ்சு நின்னு கேட்டேன்

 

 

“எதுக்குடா இவ்வளவு பில்டப்பு சட்டு புட்டுன்னு சொல்லி முடியேன்டா!! என்றான் பிரணவ்.

 

“இந்தம்மா மனசோட சொன்னாங்களாம் என்னைய பிடிச்சிருக்குன்னு என் மக்கு மாமாக்கு தான் அது புரியலை!! இப்படி புரியாத மனுஷனை கட்டி நான் என்ன செய்ய!! என்னைக்கு என் மாமாக்கு என் மனசு புரியுதோ அன்னைக்கு தான் கல்யாணம் சொன்னா!!

 

 

“அங்கவே வைச்சு ஓங்கி ஒரு அப்பு அப்பிருப்பேன். அவ்வளவு கோபம் எனக்கு!! இவ என்ன என் கூட பேசாதவளா என்னமோ புதுசா மனசோட பேசறேன்… ம… என்று ஆரம்பித்து நிறுத்திவிட்டான்.

 

 

“இவளோட எனக்கு இனிமே கல்யாணமே வேண்டாம் சாமி. ஆமா நீ எப்படி இவளை கூப்பிட்ட!! இவ எப்படி இங்க வந்தா!! என்று மீண்டும் பிரணவை பார்த்தான் முகுந்தன்.

 

 

“எனக்கு தான் மீராவோட நம்பர் தெரியும் அதான் போன் பண்ணி கூப்பிட்டேன்

 

 

“மீராவோட நம்பர் உனக்கு எப்படி தெரியும்ன்னு தான் கேட்கிறேன்

 

 

“மீராக்கு மெயில் அனுப்பி வாங்கினேன். லூசு மடையா உன் நம்பர் மட்டும் எனக்கு எப்படி தெரியுமாம். உன்னோட நம்பரே நான் மீராகிட்ட தான் வாங்கினேன்

 

 

“அட ஆமாம் என் நம்பர் உனக்கு தெரியாதில்லை. நாம RR கல்யாணத்துக்கு அப்புறம் நம்பர் எல்லாம் மாத்திட்டோமே!! நான் கூட இதை யோசிக்கவே இல்லையே… ஆமா உனக்கு எப்படி மீராவோட மெயில் ஐடி தெரியும் என்று அடுத்த கேள்வியை கேட்டான்.

 

 

“டேய் நாம உங்க ஊருக்கு சுத்தி பார்க்க வந்தப்போ நீ மீராவை அறிமுகப்படுத்தி வைச்சது எல்லாம் மறந்திருச்சா உனக்கு. அவளுக்கு எங்கக்காவோட கைடன்ஸ் நோட்ஸ் எல்லாம் வேணும்ன்னு சொல்லிட்டு அவளோட ஈமெயில் ஐடி எல்லாம் நீ தானே கிரியேட் பண்ணி கொடுத்த

 

 

“அதை தான் அவ இப்பவும் யூஸ் பண்ணிட்டு இருக்கா!! உன்னை பத்தி நான் மீராகிட்ட தான் விசாரிச்சேன்

“ரெண்டு வாரம் முன்னாடி மீராக்கு மெயில் அனுப்பி உன்னோட போன் நம்பர் வாங்கினேன் போதுமா என்று சொல்லி முடித்தான் பிரணவ்.

 

 

“உனக்கு இன்னுமா மீரா மேல கோவமிருக்கு!! ஏன்டா இப்படி காக்க வைக்குற அவளை!!

 

 

“வைக்குறாங்க அவளை காக்க!! யாரு அப்படி சொன்னாங்க உங்கிட்ட!! இந்த குந்தாணி சொன்னாளா!!

 

 

“ஹோ அப்போ நீ வேற பொண்ணை பார்த்து கல்யாணம் முடிக்க வேண்டியது தானே!! எதுக்கு தினமும் மீரா கோலம் போடு போது வாசல்லயே நிக்கறயாம்!!

 

 

“யார் அது?? யார் அந்த எட்டப்பன்?? என்னைய பத்தி போட்டு கொடுத்த எட்டப்பன் யாருடா?? என்றவனை பார்த்து களுக்கென்று சிரித்த பிரணவ் “டேய் அம்மாவை போய் எட்டப்பன்னு சொல்லிட்டியேடா என்றான்.

 

 

“மோவ் நீ தான் அந்த எட்டப்பி வேலை பார்த்ததா என்று அவனின் அன்னையை அழைத்தான் முகுந்தன்.

 

 

“டேய் சத்தமா பேசாதடா உங்கப்பா காதுல விழுக போகுது. நான் எட்டப்பின்னா உங்கப்பா தான்டா எட்டப்பன். அவர் தான் உன்னைய நோட்டம் விட்டு என்டயும் உங்க அப்பத்தாட்டயும் சொன்னது என்றுவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்.

 

 

“ஹோவ் மாமா!! என்ற குரலில் சட்டென்று விழித்தான் முகுந்தான். அருகில் திரும்பினால் பிரணவும் அங்கில்லை.

 

 

“மங்குனி மாமா அறிவிருக்கா உனக்கு!! எப்போ பார்த்தாலும் என்னைய சொல்லுற!! உனக்கு என்னைய பார்த்தா லூசு மாதிரி தெரியுதா!! நீ தான்யா லூசு என்றாள் மீரா.

 

 

“எவனாச்சும் தான் விரும்புற புள்ளைக்கிட்ட வந்து என்னைய பிடிச்சிருக்கான்னு கேட்பானாய்யா!! நான் பேசுற வரைக்கும் நீ வாயே திறக்க கூடாது. பேசாம நான் சொல்றதை மட்டும் கேளு. நான் தான் உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தனே

 

 

“எல்லாம் தெரிஞ்சு தானே பொண்ணு பார்க்க வந்த… என்ட பேசணும்னு சொன்ன வரை நீ ஒழுங்கா தான் இருந்த… அப்புறம் தான் கிறுக்கனாட்டமா பிடிச்சிருக்கான்னு கேட்குற

 

 

“உன்னைய பிடிக்காம தான் நாங்க அலங்காரம் பண்ணிட்டு வந்து நின்னமாக்கும். நீ பிடிச்சிருக்கான்னு கேட்டதும் எனக்கு செம கடுப்பா இருந்துச்சு… அங்கேயே வைச்சு உன்னை பொளக்கலாம்ன்னுபார்த்தேன்

 

 

“குடும்பத்தோட வந்திருக்கன்னு தான் பேசாம விட்டேன். நீ தானே மாமா எப்போ பாரு நான் பேசுறேன் பேசுறேன்னு சொல்லி அத்தைகிட்ட கம்பிளைன்ட் பண்ணியாம்

 

 

“பேசாம அமைதியா அடக்க ஒடுக்கமான பிள்ளையா இருந்தா உனக்கு பிடிக்கலைல!! அப்புறம் எதுக்கு நான் போகும் போது வரும் போதெல்லாம் திருமூர்த்தி அருவி கணக்கா வாயை திறந்து தண்ணி விட்டுக்கிட்டு இருந்த!!

 

 

“நீயா வந்து பேசுவ பேசுவன்னு பார்த்தா நான் பாத்தி கூட பேசினதை அரைகுறையா கேட்டுட்டு நீ பாட்டுக்கு உன்னிஷ்டத்துக்கு முடிவு பண்ணிக்கிட்டியா!!

 

 

“நான் வாய் திறந்து பேசினாலும் உனக்கு பிடிக்காது. மனசுக்குள்ள பேசினாலும் உனக்கு கேட்காது அப்புறம் நீ என்னைய கட்டி என்ன செய்ய போறே!! இப்போ சொல்றேன் மாமா எனக்கு நீ வேணாம்

 

 

“என் மனசு புரியாத உன்னைய நான் கட்டிக்கிட மாட்டேன் என்று முகத்தை திருப்பியவளை பார்த்து முகுந்தனுக்கு ஆயாசமாக இருந்தது.

 

 

‘ஆஹா இவ நம்ம மேல இம்புட்டு பாசம் வைச்சிருக்கான்னு தெரியாம இம்புட்டு நாளை வேஸ்ட் பண்ணிட்டமே. முகுந்தா கொஞ்சமும் யோசிக்காத சட்டுன்னு கால்ல விழுந்திரு

 

 

‘போறாளே போறாளே என்ன செய்ய என்று யோசித்தவன் “நில்லுடி நீ சொன்னது எல்லாம் நிஜம் தானா!! கொஞ்சம் நான் சொல்றதும் கேட்டுட்டு போ!! என்ற அவன் குரலுக்கு செவிமடுத்து மீரா அங்கேயே நின்றாள்.

 

 

“நான் உன்கிட்ட பேசலாம்ன்னு அன்னைக்கு ஆசையா வந்தேன். என்ன கேட்குறதுன்னு தெரியாம பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டேன். நீ பதில் சொல்லியிருக்கலாம்ல, அட்லீஸ்ட் என்னை திட்டியிருக்கலாம்ல இப்படி மனசுக்குள்ள பதில் சொல்லுவன்னு நான் என்ன ஜோசியமா கண்டேன்

 

 

“அதுக்காக மாமான்னு மரியாதை இல்லாம யோவ்ன்னா கூப்பிடுவாங்க. கொஞ்சம் எனக்கு மரியாதை கொடேன் என் பிரண்டு முன்னாடி மானத்தை வாங்காதே மீரு!!

 

 

“மீரு மோருன்னு எல்லாம் கூப்பிட வேணாம். என் பேருல இருக்கறதே ரெண்டெழுத்து அதுல என்ன சுருக்கம் வேண்டி கிடக்கு ஒழுங்கா மீரான்னு கூப்பிடுங்க இல்லன்னா MMன்னு கூப்பிடுங்க

 

 

“MM ஆ!!அப்படின்னா என்ன??

 

 

“மங்குனி மாமாவோட சுருக்கம்!! ஆளை பாரு லூசு மாமா. மீரா முகுந்தனை தான் சுருக்கி சொன்னேன் என்று கலாட்டாவாக ஆரம்பித்தவளின் குரல் முடிக்கும் போது உள்ளே சென்றுவிட்டது.

 

 

மீராவின் அந்த தோற்றம் முகுந்தனுக்கு புதிது. எப்போதும் வளவளவென்று பேசும் மீராவிற்கு இவ்வளவு மெதுவாகவும் பேச வரும் என்பதே அவன் இப்போது தான் அறிவான். அதுவும் அவனை பார்த்து முகம் சிவந்து வேறு போகிறாளே!!

 

 

மீரா அமைதியாய் அவன் முகம் பார்த்தாள். ஆத்தி இவ இப்போ ஏதோ டூயட் பாட்டு மைன்ட்ல ஓட்டுறா போலவே!! என்று பீதியாய் அவளை பார்த்தான். அவனை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது மீராவின் மைன்ட் வாய்ஸ் அவனுக்கும் கொஞ்சம் புரிய ஆரம்பித்துவிட்டதே அதனால் தான்.

 

 

தன்னை தானே அவன் பாராட்டிக்கொள்ள மீரா மனதில் ஓடிய மைன்ட் வாய்ஸில் டூயட் பாடல் ஓடியது.

 

 

நன்றிசொல்லஉனக்குவார்த்தைஇல்லைஎனக்கு(சைகையிலேசொல்லு)

 

நான்தான்மயங்குறேன்(மயக்கம்தலைசுத்தல்இருக்கா)

 

காலமுள்ளவரைக்கும்காலடியில்கிடக்க(தள்ளிஉக்காரு.. விழுந்துடுவேன்)

 

நான்தான்விரும்பறேன்(எதை…. நான்விழுகிறதையா…)

 

நெடுங்காலம்நான்புரிஞ்சதவத்தாலநீகிடைச்சே(ஐயோ.. கிழவனையிருப்பாயே)

 

பசும்பொன்னபித்தளையாதவறாகநான்நெனச்சேன்(உன்தப்பு)

 

நேரில்வந்தஆண்டவனே…. (oh .. god  bless  me also )

 

ஊரறியஉனக்குமாலையிட்டபிறகுஏன்மாசஞ்சலம்(அதுதேன்சங்கடம்)

 

உன்னுடையமனசும்என்னுடையமனசும்ஒன்றாய்சங்கமம்(திரிவேணிசங்கமமா)

 

செவ்விளனிநான்குடிக்கசீவியதைநீகொடுக்க(வழுக்கையாவா .. இல்லதண்ணியாவா )

 

சிந்தியதுரத்தமல்லஎந்தன்உயிர்தான்(இளநீர்லரத்தமாஉள்ளபூச்சிபொட்டுஇருக்கபோகுது கடிச்சிருக்குமா இருக்கும்)

 

 

மீரா மனதிற்குள்ளாக பாடி முடித்து சிரிக்க “முடிச்சிட்டியா!! என்றான் முகுந்தன். “என்ன முடிச்சிட்டியா!! என்றாள் அவள்.

“ஏதோ பாடினியே அதை தான் பாடி முடிச்சிட்டியான்னு கேட்டேன் என்றான்.

 

 

“மாமா நெசமாவே உனக்கு நான் பாடினது தெரிஞ்சிருச்சா என்று கண்கள் மின்ன கேட்டவளின் வலக்கரம் பற்றினான். “கையை விடு மாமா!! பிரணவ் அண்ணா வர்றாங்க என்றவள் அவன் கரத்தை விலக்க முற்படவில்லை.

 

முகுந்தனும் சிரித்தானே தவிர அவள் கரத்தை தன் கரத்தினில் கோர்த்துக் கொண்டு ஒரு அழுத்தம் கொடுத்தான்.

 

 

பிரணவும் மனோவும் அவர்களை நோக்கி வந்தனர். “என்ன அண்ணா!! அண்ணிகிட்ட பேசிட்டீங்களா!! அடுத்த மாசம் ஏதோ முகூர்த்தம் இருக்குன்னு அம்மா சொன்னாங்க தேதி வைச்சிருவோமா என்று முகுந்தனை பார்த்து சொன்ன மனோவின் கரங்கள் மீராவை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டது.

 

 

“அடுத்த மாசமா!! ஏன் அடுத்த மாசம்மா மனோ. அடுத்த வாரம் கூட ஒரு முகூர்த்தம் இருக்கே. அதுலயே வைச்சுக்கலாமே கல்யாணத்தை என்றான்.

 

 

“டேய் மச்சான் ரொம்ப ஓவரா வழியுது. டேம் க்ளோஸ் பண்ணு என்று கிண்டலடித்தான் பிரணவ்.

 

 

ஒருவழியாக அங்கு எல்லாம் முடிந்து பிரணவும் மனோவும் காரில் கொடைக்கானலுக்கு தங்கள் பயணத்தை துவக்கினர். கிளம்பும் முன் முகுந்தனின் குடும்பம் மொத்தமும் அவர்களை கண்டிப்பாக திருமணத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

 

 

மீரா வேறு பிரணவிடமும் மனோவிடமும் தனியாக அழைப்பு விடுத்தாள். அப்போது தான் ஞாபகம் வந்த முகுந்தன் காரில் அமர்ந்திருந்த பிரணவிடம் குனிந்து “டேய் மச்சான் இப்போவாச்சும் சொல்லுடா உனக்கு எப்படிடா கல்யாணம் ஆச்சு என்றான்.

 

 

“நேத்து என்ன சொன்னேன் உன்கிட்ட அதை நீ முதல்ல கண்டுபிடிச்சிட்டியா?? என்றான் கேள்வியாய்.

 

 

“லவ் மேரேஜ் மாதிரி தோணுது… என்று இழுத்தான்.

 

 

“கரெக்ட்டா சொல்லு ஆமாவா இல்லையா!!

 

 

“ஹ்ம்ம்… என்று யோசித்தவன் “அப்படியே லாக் பண்ணிக்கோங்க கம்ப்யூட்டர்ஜி என்றான்.

 

 

“உங்க பதில்ல கம்ப்யூட்டர்க்கு திருப்தியா இல்லையாம்!! உங்களுக்கு ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு சொல்லிருச்சு என்று நக்கலடித்தான் பிரணவ்.

 

 

“அடேய் நீ சொல்லப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்ட, எப்படி கேட்டாலும் எதாச்சும் குண்டக்க மண்டக்க தான் சொல்ல போறே!! நீ எதுவும் சொல்ல வேணாம்டா சாமி!! அந்த RR நம்பர் கொடு

 

 

“நீங்க ரெண்டு பேரும் தான் நகமும் சதையுமாச்சே!! நீ அவன்கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்ப!! நான் அவன்கிட்டவே கேட்டுக்கறேன் என்றவனை பார்த்து பிரணவ் கிண்டலாக சிரித்தான்.

 

 

“எதுக்குடா இப்படி எல்லாத்துக்கும் சிரிக்கிற… அந்த பய மட்டும் உண்மையை சொல்லாம இருக்கட்டும் அவன மண்டையிலேயே ஒரு போடு போடுறேன் என்றுவிட்டு ராகவின் எண்ணை பிரணவிடம் வாங்கிக் கொண்டு நகர்ந்தான் முகுந்தன்….

Advertisement