Advertisement

அத்தியாயம் –5

 

 

“ரதி… ரதிம்மா… என்று அழைத்த கிருத்திக்கை திரும்பி பார்த்தாள் பாரதி.

 

 

“நிஜமாவே ரதி மாதிரி தான் இருக்கே நீ… என்றவன் அவளருகே வந்து அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிக்கையை வாசம் பிடித்தான்.

 

 

“ரித்திக் பேசாம இருங்க, எங்க கிளம்பிகிட்டு இருக்கோம்… நீங்க என்ன வேலை பார்க்கறீங்க!! என்று செல்லமாய் அவனை முறைத்தாள்.

 

 

“அதனால தான் நானும் பேசாம இருக்கேன்… என்று பெருமூச்சு விட்டவன் “போகலாமா… என்றான்.

 

 

“ஹ்ம்ம் கிளம்புவோம்… என்றுவிட்டு அறைக்கதவை பூட்டிக் கொண்டு வெளியில் வந்தனர்.

 

 

ஆண்டியின் கோலமுற்று மலைமீது அமர்ந்திருந்த முருகனை தரிசிக்கவே அவர்கள் கிளம்பிச் சென்றனர். மலை ஏறுவதற்கு முன் கீழே இருந்த ஆதிகோவிலுக்கு சென்று முருகனை மனமார தரிசித்துவிட்டு மலையேறினர்.

 

 

காலையில் கிளம்பி மதியம் திண்டுக்கல் வந்திருந்தவர்கள் அங்கிருந்து கார் எடுத்துக்கொண்டு பழனியை வந்தடைய மூன்றரை மணியாகியது. ஒரு ஹோட்டலுக்கு சென்று குளித்து உடைமாற்றி இதோ கோவிலுக்கும் வந்தாயிற்று.

 

 

நாலரை மணியளவில் அடிவாரத்தில் இருந்து படியேற ஆரம்பித்தவர்கள் வழியில் தென்பட்ட சிறு சிறு கோவில்களும் போகர் சன்னதியும் வணங்கிவிட்டு கோவிலுக்கு உள்ளே அவர்கள் நுழையும் போது கிருத்திக்கின் நண்பன் முகுந்தன் அவர்களை வந்து அழைத்து சென்றான்.

 

 

முகுந்தனின் தந்தை கோவில் அறங்காவலர்களில் ஒருவராய் இருந்ததினால் அவர்களை அவன் நேரே கோவிலுக்கு உள்ளே அழைத்து சென்றுவிட்டான். அன்று கிருத்திகை நட்சத்திரம் என்பதால் அப்பெயரை கொண்டிருந்தவனுக்கு அர்ச்சனை செய்தனர்.

 

 

காணக்கிடைக்காத தரிசனம் அன்று அவர்களுக்கு கிடைத்தது. பழனி முருகன் ராஜ அலங்காரத்தில் கொடுத்த தரிசனம் மனதிற்கு பெரும் நிறைவை கொடுத்தது அவர்களுக்கு.

 

 

கடவுளை எவர் நோக்கினாலும் பார்ப்பவர்க்கு அவரின் பார்வை தன் மீதே என்றே தோன்றும். முருகனின் அருட்பார்வை தன் மீதே இருக்கிறது என்பது போல் ரதியின் பார்வை அவருடன் கலந்து தன் மனச்சுமைகளை இறங்கி வைத்து கொண்டிருந்தது.

 

 

கண்களில் தன்னை போல் கண்ணீர் பெருக்க மனமுருகி அவள் பிரார்த்தனை செய்தாள். அருகில் கேட்ட ஒரு குழந்தையின் அழுகுரலில் சுய நினைவிற்கு வந்தவள் கண்ணை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து கிருத்திக்கை பார்த்தாள்போகலாமா என்பது போல்.

 

 

அவனும் தலையை ஆட்ட அவர்கள வெளியில் வந்தார்கள். பிரகாரத்தை சுற்றி வந்து கொடிமரத்தின் கீழ் விழுந்து வணங்கியவர்கள் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்தார்கள்.

 

 

கோவிலுக்குள் அவர்களை அழைத்து சென்றுவிட்டுவிட்டு வெளியில் சென்றிருந்த முகுந்தன் அவர்களை தேடி அங்கு வந்தான்.

 

 

“நல்ல தரிசனம் பார்த்தீங்களா!! என்று நண்பனை பார்த்து ஆரம்பித்தவன் “உனக்கு திருப்தியாம்மா!! என்றான் பாரதியை பார்த்து.

 

 

“தேங்க்ஸ் அண்ணா நீங்க இல்லன்னா நாங்க சாமியை பார்க்க ரொம்ப நேரம் காத்திட்டு இருந்திருப்போம். மனசு ரொம்ப நிறைஞ்சு இருக்கு என்றாள் உள்ளார்ந்து.

 

 

“என்னடா பிரணவ் நீ எதுவும் சொல்லாம அமைதியா இருக்கே?? என்றான் முகுந்தன் கிருத்திக் பிரணவ்வை பார்த்து.

“நான் என்னடா சொல்ல அதான் ரதியே சொல்லிட்டாளே!! மனசு நிறைஞ்சு போச்சுன்னு எனக்கும் அதே தான்டா முகுந்த்

 

 

“டேய் அன்னைக்கு பேசும் போது அப்படி தானேடா சொன்னே!! ஏம்மா உன் பேரு மனோ தானே… இப்ப என்னமோ ரதின்னு சொல்றான். ஆமா அதென்ன நீ இவனை ஏதோ கிறுக்குன்னு சொல்லி கூப்பிடுற!! என்று புரியாமல் விழித்தான் முகுந்தன்.

 

 

“அச்சோ அண்ணா அவரை நான் ரித்திக்ன்னு தானே கூப்பிட்டேன். நீங்க எல்லாரும் அவரை பிரணவ்ன்னு கூப்பிடுறீங்க. எனக்கு அவர் கிருத்திக் இன்னும் சுருக்கி ரித்திக். அவர் என்னை ரதின்னு சொல்றதால நான் அவரை ரித்திக்குன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்

 

 

“இப்போ நான் ஏன் அவளை ரதின்னு கூப்பிடுறேன்னு தானே உன்னோட அடுத்த கேள்வி அதுக்கு நானே பதில் சொல்லிடுறேன். அவளோட முழு பேரு மனோபாரதி…எனக்கு மட்டும் ரதி ஓகே வா மச்சான் என்று கண்ணடித்தான் பிரணவ்.

 

 

“சரி அஜி உன்னை ரொம்ப தொல்லை பண்ணிட்டானா!!என்றவன் அபராஜித்தை முகுந்தனிடம் இருந்து வாங்கினான்.

 

 

“என்னோட வேல்யூவே இன்னைக்கு தான் மச்சான் எனக்கு தெரிஞ்சுது என்று நிறுத்திய முகுந்தனை இருவரும் என்ன என்பது போல் பார்த்தனர்.

 

 

“என் மருமகன் செம ஸ்மார்ட் தெரியுமா!! இவனால இன்னைக்கு என்னோட செல்பி எடுத்தவங்க மொத்தம் இருபது பேரு. அத்தனையும் பொண்ணுங்க மச்சான்

 

 

“நான் செம குஷி மூட்ல இருக்கேன். சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ணி மருமகனுக்காக ஒரு மகளை பெத்து கொடுக்கலாம்ன்னு எனக்கு ஆசை வந்திருச்சு

 

 

“இவனை பார்த்து ஒருத்தர் விடாம வந்து தூக்க கேட்குறாங்கடா!! குழந்தை கை மாத்தி மாத்தி தூக்கினா துவண்டிருவானோன்னு நான் தான் கொடுக்காம வைச்சிருந்தேன்

 

 

“அப்படியும் ஒண்ணு ரெண்டு பேரு வந்து தூக்கிட்டாங்கன்னு வை…சாமி கும்பிட வந்தவங்க பூரா பேரும் இவனையே பார்த்திட்டு இருந்தாங்க. வீட்டுக்கு போனதும் சுத்தி போட்டிருங்க என் கண்ணும் சேர்ந்து பட்டிருச்சு என்று சிலாகித்து சொன்னான் முகுந்தன்.

 

 

“ஏன்டா மச்சான் தூக்கின ஒண்ணு ரெண்டு பேரும் பொண்ணுங்க தானே என்று நண்பனை பார்த்து கண்ணடித்த பிரணவிடம் “பின்னே வேற யாருக்காச்சும் கொடுப்பேனா நானு!! என்று கெத்தாய் மொழிந்தான் நண்பன்.

 

 

“அண்ணா நாளைக்கு காலையில கண்டிப்பா வந்திருங்கண்ணா!! உங்க மருமகனுக்கு உங்க மடியில தான் வைச்சு காது குத்தணும். எனக்குன்னு சொல்லிக்க இவங்க ரெண்டு பேரை தவிர யாருமில்லை

 

 

“இப்போ உங்களை தான் என்னோட அண்ணாவா நினைச்சு கேட்கறேன். இவனுக்கு தாய்மாமனா இருந்து நீங்க தான் செய்யணும். வெறுமே வெளி வார்த்தைக்காக இதை நான் கேட்கலைண்ணா, மனசார கேட்கறேன் என்றாள்.

 

 

“அச்சோ என்னம்மா நீ இப்படி சென்டிமென்ட்டா எல்லாம் பேசற, எனக்கு ஒத்து வராத சேப்டர் ஆச்சே இதெல்லாம். நீ வான்னு சொன்னாலே நான் வந்திருவேன்ம்மா

 

 

“ஆனாலும் நீ கேட்கும் போது மனசே என்னமோ உருகி போன மாதிரி ஒரு பீலிங். ப்ளீஸ்ம்மா எனக்கு இந்த மாதிரி பீல் எல்லாம் ஒத்து வராது. இங்க பாரு உன் புருஷன் வேற என்னை பார்த்து சிரிக்கறான் என்றான் பிரணவ்வை ஓரப்பார்வை பார்த்தவாறே.

 

 

“ரதிம்மா இவன்ட்ட போய் நீ பீலிங்ஸ் பேசுறியேம்மா. பயபுள்ளைக்கு இதெல்லாம் ரொம்ப கஷ்டமான விஷயம். எப்பவும் ஜாலி டைப் தான் அய்யா

“சரி இந்த கதையை விடுங்க. உங்க கதைக்கு வாங்க… நீ ரொம்ப வருஷம் கழிச்சு எனக்கு போன் பண்ணதே பெரிய ஷாக் இதுல கல்யாணம் வேற பண்ணிக்கிட்டேன்னு சொல்லி தங்கச்சியோட வர்றேன் சொன்னது ரெண்டாவது ஷாக்

 

 

“கடைசியா ஒரு ஷாக் வைச்சியே அது தான் ஹைலைட். உங்களுக்கு ஒரு குழந்தை வேற இருக்குன்னு சொன்னது ஷாக்கோ ஷாக்கு. இதுல டிவில வேற ஷாக்கு பத்தலை ஷாக்கு பத்தலைன்னு ஒரு காமெடி வேற ஓடி என்னை ரொம்ப காண்டாக்கிருச்சு மச்சான். என்னாச்சுடா எப்போ நடந்திச்சு உன்னோட கல்யாணம்

 

 

“உங்களை குடும்பமா பார்க்க எனக்கு சந்தோசமா தான் இருக்கு. ஆனாலும் எங்களை எல்லாம் கூப்பிடாம கல்யாணம் முடிச்சிட்டியேன்னு ஒரு சின்ன வருத்தம் மச்சான் அதான் கேட்கறேன் என்றான் முகுந்தன் மனதில் இருந்த கேள்வியை ஆதங்கத்துடன்.

 

 

“அதெல்லாம் இங்க வைச்சே சொல்ற கதை இல்லை முகுந்த். நாம சாவகாசமா ஒரு நாள் பேசுவோமே!! என்றான் மற்றவன் பதிலாய்.

 

 

“டேய் ஆல்ரெடி நான் நேத்தெல்லாம் யோசிச்சு யோசிச்சு தூங்கவேயில்லை. இன்னைக்கும் என் தூக்கத்தை என்னால தொலைக்க முடியாது மச்சான்

 

 

“எப்படி நடந்துச்சுன்னு மட்டும் சொல்லிரு!! இல்லைன்னா எனக்கு மண்டை வெடிச்சிரும்டா!! கடைசியா நாம எல்லாம் சந்திச்சது அந்த RR கல்யாணத்தப்போன்னு நினைக்கிறேன் சரியாடா!!

 

 

“RR ஆ!! என்று கேட்டுக்கொண்டு பிரணவை பார்த்தாள் மனோ.

 

 

“ரம்பம் ராகவை தான் அப்படி சுருக்கி சொல்லுவோம் ரதி. நான் தான் உன்கிட்ட சொல்லியிருக்கேன்ல அவன் கல்யாண கதை எல்லாம். அப்போ தான் நாங்க எல்லாம் கொஞ்ச நாளைக்கு பார்த்துக்க வேணாம்ன்னு அவங்கவங்க ஊர் பக்கம் போனது

 

 

“அதுக்கு அப்புறம் இப்போ தான் பார்க்கறோம். அதான் இவன் என்ன விஷயம்ன்னு கேட்கறான்

 

 

“எங்களை பத்தி எல்லாம் இவன் சொல்லியிருக்கானாம்மா உன்கிட்ட, பயபுள்ளை உன்னைய பத்தி எங்கட்ட சொல்லவேயில்லையே. டேய் மச்சான் என்னன்னு சொல்லுடா

 

 

“டேய் முகுந்த் அந்த கதை எல்லாம் இன்னொரு நாள் பேசிக்கலாம். இப்போவே இருட்ட ஆரம்பிச்சுட்டு. அஜிக்கு சாப்பாடு கொடுக்கற நேரமாச்சுடா நாம கீழ இறங்க சரியா இருக்கும் என்று எழுந்துவிட்டான் பிரணவ்.

 

 

“என்னங்க அண்ணா கேட்டுட்டு இருக்காங்க நீங்க பாட்டுக்கு கிளம்புறீங்க என்றாள் அவன் மனைவி.

 

 

“அப்போ நீயே சொல்லும்மா நம்ம கதையை இப்போ ஆரம்பிச்சா அது எப்படியும் போகும் ஒரு பத்து இருபது அத்தியாயம்… என்று கூறியவனின் தோளில் இடித்தாள் அவனின் செல்ல ரதி.

 

 

“சும்மா இருங்க கிண்டல் பண்ணிக்கிட்டு… என்றவள் “அண்ணா அவரே சொல்லுவாருண்ணா, நாம கிளம்புவோம் அஜிக்கு சாப்பாடு கொடுக்கணும் என்றாள் மனோ இப்போது கணவனை பின்தொடர்ந்து.

 

 

“நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி, ரெண்டு பேருமா சேர்ந்து இன்னைக்கு சொல்றதில்லைன்னு முடிவு பண்ணிட்டீங்கபோல. என்னமோ பண்ணுங்க போங்க

 

 

“ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிடுங்களேன். அதுவாச்சும் தெரியலைன்னா எனக்கு தூக்கமே வராது இன்னைக்கு என்று பரிதாபமாக இருவரையும் பார்த்தான் அவன்.

 

 

“என்னடா??

 

 

“இது லவ் மேரேஜா!! இல்லை அரேன்ஜ் மேரேஜா!!

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு கோரசாக “தெரியலையேப்பா என்று சொல்லி முகுந்தனை காய வைத்தனர்.

 

 

“எப்படியோ போங்க!! இன்னைக்கு எனக்கு தூக்கம் கட்!! சரி அதை அப்புறம் பேசுவோம். இப்போ கீழ போனதும் நேரா எங்கவீட்டுக்கு தான் போறோம். அங்க தான் இன்னைக்கு உங்களுக்கு நைட் சாப்பாடு. நான் அம்மாகிட்ட சொன்னதுமே அவங்க உங்களை இன்னைக்கு கூட்டிட்டு வரச் சொல்லிட்டாங்க

 

 

“நீங்க வீட்டுக்கு வந்து தங்கலைன்னு அவங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். நீ தான் ஏதேதோ சொல்லி மறுத்திட்ட, சோ கண்டிப்பா சாப்பிட வீட்டுக்கு வரணும்

 

 

“மனோம்மா அண்ணன் வீட்டுக்கு எல்லாம் உனக்கு தனியா அழைப்பு கிடையாதும்மா. அது உன் வீடுன்னு நினைச்சுக்கோ சோ வர்றீங்க என்றான் உறுதியாய்.

 

 

பிரணவ் யோசனையாய் பார்க்க “என்ன யோசனை பண்றீங்க?? போகலாம் வாங்க. நாளைக்கு அவங்களையும் கோவிலுக்கு வரச்சொல்லி நேர்ல பார்த்து சொல்லிட்டு வருவோம் ப்ளீஸ் எனக்காக என்றாள்.

 

 

“நீ சும்மா கேட்டாலே சரின்னு சொல்லுவேன். ப்ளீஸ் போட்டா என் தலை தானா ஆடுது பாரு என்று தலையை ஆட்டி காட்டினான்.

 

 

“போதும் போதும் ரொம்ப தான்… வாங்க போவோம் என்றவாறே முகுந்தனுடன் அவர்கள் சென்றனர்.

 

 

முகுந்தனின் வீட்டினர் மிகுந்த அன்போடு அவர்களை வரவேற்றனர். முகுந்தனின் அன்னை அபராஜித்தை கண்டு சட்டென்று கையை நீட்ட தன் பொக்கைவாய் சிரிப்பை காட்டி தவ்விக்கொண்டு அவரிடம் சென்றான் அவன்.

 

 

முகுந்தனின் பாட்டியும் அங்கிருக்க “பேராண்டி என்ட வராமாட்டியாய்யா… என்று அவர் பொக்கை வாய் திறந்து கேட்டவாறே கையை நீட்ட அபராஜித் அவர் காதில் தொங்கிய தண்டட்டியை பாய்ந்து பிடித்தான்.

 

 

“ஏய்யா உங்களுக்கு பாட்டி தண்டட்டி வேணுமாய்யா!! எடுத்துக்கய்யா எடுத்துக்கய்யா உனக்கில்லாததாய்யா என்று சிரித்தார் பாட்டி.

 

 

“ஏன் கிழவி உனக்கு எம்புட்டு குசும்பிருக்கும். நான் எம்புட்டு தரம் உன் தண்டட்டியை கேட்டிருப்பேன் எப்பமாச்சும் கொடுத்திருக்கியா!! உன்னைய மாதிரி பொக்கைவாய் காரனை பார்த்ததும் எடுத்துக்க சொல்றியா ரொம்ப தான் பாட்டி உனக்கு

 

 

“இரு இரு நீ தூங்கும் போது ஒரு நாள் அதை கழட்டிட்டு போய் விக்கறனா இல்லையான்னு பாரு என்று மிரட்டினான் முகுந்தன்.

 

 

“எப்படி எடுத்துரு பாப்போம் நீ அம்புட்டு பெரிய சண்டியனா இருந்தா என்னைக்கோ கழட்டிட்டு போயிருப்பியே. பேராண்டி பார்த்தல்ல வந்ததும் பாட்டி தண்டட்டி தானே பிடிச்சு இழுத்தாங்க எங்கய்யா. அந்த தைரியம் உனக்கில்லையே

 

 

“உனக்கு எப்பவும் போல பேச்சு மட்டும் தாம்லே. போய் வந்தவுகளை கவனி. நான் எங்கய்யா கூட விளையாடுதேன். உங்களுக்கொரு கண்ணாலம் ஆகியிருந்தா இந்நேரம் இப்படி தேன் முத்து கணக்கா ஒரு பேரன் இருந்திருப்பாக என்று நொடித்தார் அந்த பாட்டி.

 

 

“கிழவிக்கு ரொம்ப வாய் கூடி போச்சு… என்று முணுமுணுத்த முகுந்தன் “நீங்க வாங்க உள்ள, அதொண்ணுமில்லை அபி கண்ணா நல்லா கலரா இருக்கான்ல அதான் கிழவி பிள்ளையை தூக்கி கொஞ்ச ஆரம்பிச்சுட்டு என்று இருவருக்குமாய் சொன்னவன் அவர்களை உள்ளே அழைத்து சென்றான்.

 

 

அங்கிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மனோவிற்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. வெகு நாட்கள் கழித்து குடும்பத்துடன் இருந்த உணர்வு அவளை ஆட்கொண்டது.

அங்கிருந்து கிளம்பவே அவளுக்கு மனமில்லால் போனது. அபராஜித் அவள் மடியிலேயே உறங்க ஆரம்பித்துவிட்டான். அவனை பார்த்ததும் தான் நினைவு வந்தவனாக பிரணவும் கிளம்பலாம் என்று எழுந்துவிட்டான்.

 

 

வேறுவழியில்லாமல் மனோவும் அவனுடன் எழுந்து நின்றாள். “அஜியை கொடு என்றவன் குழந்தையை வாங்கி தோளில் போட்டுக்கொண்டான்.

 

 

“நாங்க கிளம்பறோம்மா நாளைக்கு கண்டிப்பா நீங்க வரணும்மா. அப்பா அம்மா இல்லை எனக்கு நீங்க அண்ணா எல்லாரும் வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன் எனும் போது கண்கள் கலங்கியது அவளுக்கு.

 

 

தான் எவ்வளவு தான் அவளுக்கு அன்பு கொடுத்தாலும் தனக்கென்று யாருமில்லை என்ற வருத்தம் அவளுக்கு இன்னமும் ஒட்டியிருக்கிறது என்பதை உணர்ந்தே தான் இருந்தான் பிரணவ்.

 

 

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளை தன்னுடன் அழைத்து சென்றுவிட வேண்டும் என்று மனதிற்குள் உறுதி கொண்டான்.

 

 

அவன் வீட்டினரை எண்ணி ஒரு கணம் யோசித்தாலும் யாராலும் எதையும் தடுக்க முடியாது வருவது வரட்டும் என்று எண்ணிக்கொண்டான்.

 

 

அபராஜித்தை பார்த்தால் ஒரு வேளை அவர்கள் மனம் மாறினாலும் மாறும் என்றும் தோன்றியது. முகுந்தன் வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

 

 

கிளம்பும் முன் முகுந்தனின் அருகில் வந்த பிரணவ் “இன்னைக்கு தூங்குறதுக்காக ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன்டா… நாங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோமா இல்லை அரேன்ஜ் மேரேஜ் பண்ணிக்கிட்டோமான்னு மட்டும் நீ கண்டுப்பிடிச்சு சொல்லு

 

 

“நான் மொத்த கதையும் உன்கிட்ட சொல்றேன் என்று எதுவுமே சொல்லாமல் கிளம்பினான் பிரணவ்.

 

 

“அடேய் நான் பாட்டுக்கு தேமேன்னு தானேடா இருந்தேன். ஏன்டா மறுபடியும் ஆரம்பிக்குற என்றான் முகுந்தன் பாவமாய்.

 

 

“சரி சரி விடுடா மச்சான் நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே!! நாளைக்கு நாங்க ஊருக்கு போறதுக்குள்ள சொல்லிரு ஓகேவா!! என்று விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் அவர்கள்.

 

 

அவர்கள் அறைக்கு வந்து குழந்தைக்கு வேறு உடை மாற்றியவள் குழந்தையை கட்டிலில் கிடத்தினாள். குளியலறை சென்று குளித்து வேறு உடை மாற்றி வரவும் பிரணவ் இரவு உடைக்கு மாறியிருந்தான்.

 

 

மனோவிற்கு சென்ற வாரம் நடந்தது ஞாபகத்திற்கு வந்தது. அன்று  அவனை அழைத்த போது கூட வேலையிருக்கிறது வரமுடியாது என்று சொன்னவன் இரண்டு நாளிலேயே பழனிக்கு சென்று குழந்தைக்கு மொட்டை அடிப்போம் என்று சொல்லுவான் என்பதை அவள் எதிர்ப்பார்க்கவேயில்லை.

 

 

அவன் வருவேன் என்று சொன்னதே அவளுக்கு இனிய அதிர்ச்சி தான். அவன் டெல்லியில் இருந்து நேரே திருச்சிக்கு பதினோரு மணி வாக்கில் வந்தவன் சென்னையில் இருந்து மனோ வரும் அதே ரயிலில் ஏறி மதியம் ஒரு மணிக்கு ஏறியவன் அவர்களுடன் திண்டுக்கல்லில் இறங்கினான்.

 

 

இதோ அவர்கள் குடும்பமாக பழனிக்கும் வந்தாயிற்று. ஓரிரு நாளில் வரும் குழந்தையின் முதல் பிறந்தநாள் வரை அவளுடன் இருப்பதாக சொல்லியிருந்தான் அவள் கணவன்.

 

 

நாளை குழந்தைக்கு மொட்டை அடித்த பின் அவர்கள் அடுத்து கொடைக்கானலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இரண்டு நாட்கள் அங்கு தங்கி குழந்தையின் பிறந்தநாளை அங்கு கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

 

 

ஏதோ யோசனையுடன் நின்றிருந்த மனோவை கண்டவன் “இங்க வா ரதி என்று கை நீட்டி அழைக்க மறுக்காமல் அவன் கை மீது தன் கையை வைத்தவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

 

 

“என்னம்மா இன்னைக்கு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டியா!!

 

 

“ஹ்ம்ம் ஆமாங்க!! எங்கம்மா ஞாபகம் வந்திடுச்சு!! என்றவளின் கண்கள் பளபளக்க அவளை தன் புறம் திருப்பினான்.

 

 

“நான் இருக்கேன்ல உனக்கு!! அப்புறமும் நீ ஏன் உனக்கு யாருமில்லைன்னு நினைக்கிற!! எத்தனை முறை சொல்லியிருக்கேன் உனக்கு!! என்றவன் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

 

 

“உனக்கு நானும் அஜியும் இருக்கோம். எப்பவும் இருப்போம், உனக்காக மட்டும் தான் ரதிம்மா புரிஞ்சுக்கோ

 

 

“சாரிங்க உங்களை புரிஞ்சுக்காம எல்லாம் நான் அப்படி சொல்லலை. என்னமோ ஞாபகம் வந்திடுச்சு ப்ளீஸ் மன்னிச்சிருங்க

 

 

“உன் மேல உனக்கு எப்பவும் பச்சாதாபமே வரக்கூடாது. அது ரொம்பவும் டேஞ்சரஸ் ரதிம்மா. நீ தனியா இருக்கே யாராச்சும் எதாச்சும் சொன்னாலும் சட்டுன்னு உடைஞ்சு போற அளவுக்கு சுயபச்சாதாபம் நம்ம மனசை பலவீனமாக்கிடும்

 

 

‘இவர் என்ன ப்ரியாம்மா பேசியதை கேட்டது போலவே பேசுகிறார். ஒரு வேளை இவருக்கு தெரிந்திருக்குமா!! என்னை கண்காணித்து கொண்டு தான் இருக்கிறாரா!! என்று அவளுக்கு தோன்றியது.

 

 

எதுவாய் இருந்தாலும் எப்போதும் போல் தன் நலம் மட்டுமே யோசித்து செய்யும் அவன் பேச்சை கேட்கவே செய்தாள். தன்னை முழுவதுமாய் செதுக்கியது அவன் தானே.

 

 

எங்கேயோ எப்படியோ போயிருக்க வேண்டியவள் இன்று நிமிர்வுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்க காரணம் அவன் தானே என்ற எண்ணம் தோன்றவும் அவன் மீதான சலுகை அதிகரித்து அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டாள் இது என்னிடம் என்பது போல்.

 

 

“என்னடா நீயா வந்து சாஞ்சுக்கற நல்ல மூட்ல இருக்கியா!! என்றவனின் கரங்கள் அவள் இடையில் உரிமையுடன் தவழ்ந்தது.

 

 

இடையில் இருந்த அவன் கரத்தை தட்டிவிட்டவள் “நாம கோவிலுக்கு வந்திருக்கோம். ஞாபகம் இருக்கட்டும் என்றாள்.

 

 

“ஏன்டி இப்படி உசுப்பேத்திவிட்டு கையை தட்டி விடுற… நாளைக்கு தானே கோவில்க்கு போக போறோம். இன்னைக்கு என்ன!! என்னை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு!!

 

 

“உன்னை பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது ரதி. பட்டினி போட்டிறாதடி என்னை என்று பாவமாய் கெஞ்சியவனை பார்த்து அவள் மனம் இளகத்தான் செய்தது.

 

 

‘இப்படி கெஞ்சுவதேன்பது இவன் அகராதியிலேயே கிடையாது. தானே இவனை எத்தனை முறை அகராதி பிடித்தவன் என்று திட்டியிருக்கிறோம் என்று நினைவு வந்தது அவளுக்கு.

 

 

எதுவாக இருந்தாலும் கோவில் வேலையை முடித்துவிட்டு தான் என்பதில் அவள் உறுதியாய் இருந்தாள். “ப்ளீஸ் ரித்திக் வேணாமே!!என்றாள்…..

Advertisement