Advertisement

அத்தியாயம் –36

 

 

‘இதுஎப்போ நடந்தது’ என்று அவசரமாய் யோசிக்க ஆரம்பித்தது கணேஷின் மனம். பிரணவ்மேற்கொண்டு எதையும் சொன்னானில்லை.

 

 

வழக்கு விசாரணைக்காய் நீதிமன்றத்திற்கு வந்திருக்க மனோபாரதி அங்கு வரவேண்டிய சூழ்நிலை நிலவ பிரணவ் அவளிடம் நடந்ததை கூறி அவளை தயார் செய்திருந்தான்.

 

 

மனோவிற்கு நடந்தவைகளை கேட்டதும் அடக்கமாட்டாமல் அழுகை வந்தது. தன்னை சுற்றி இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது அதைக்கூட உணராமல் தான் இத்தனை நாள் இருந்திருக்கிறோமே!!

 

 

தன்னால் தானே தன்னை பெற்றவர்களுக்கு இந்த நிலை என்று எண்ணி எண்ணி அவள் தேம்ப பிரணவிற்கு அவளுடன் அதிக நேரம் இருக்க முடியாமல் போனதால் அவளை தேற்ற முடியாமல் போனது.

 

 

நல்லவேளையாக மாலதியும் வெங்கடேசனும் மனோவை பார்க்க வந்திருக்க நடந்த விஷயம் கேட்டு மாலதி மருமகளை சமாதானம் செய்தார்.

 

 

யார் செய்த சமாதானமும் அவளுடைய அழுகையை கட்டுப்படுத்தவில்லை. கடைசியாக மாலதிஅவளை மிரட்டியே அழுகையை சற்று மட்டுப்படுத்தினார்.

 

 

இப்படியே அழுதால் வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு என்னாகும் என்று கூறியிருக்க மனோ கொஞ்சம் சமாதானம் ஆக முயற்சி செய்தாள்.

 

 

சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வழக்கின் விசாரணை முடிந்து கணேஷ், ஸ்ரீதரன், கார்த்திக் மற்றும் நளினிக்குதண்டனை என தீர்ப்பு வர காலம்கிட்டத்தட்டஏழெட்டுமாதங்களை விழுங்கியிருந்தது.

 

 

அதற்குள் மனோவிற்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்திருந்தது. தண்டனை நாளன்று கையில் குழந்தையுடன் வந்திருந்த மனோவிற்கு தீர்ப்பை கேட்டு மனதில் ஒரு நிம்மதி எழுந்தது.

 

 

குழந்தையை மாலதியிடம் கொடுத்துவிட்டு நீதிமன்றம் என்றும் பாராமல் ஓடிச்சென்று பிரணவின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதவளை முதுகில் தட்டிக்கொடுத்து தன்னில் இருந்து பிரித்தான் அவன்.

 

 

“ரதிம்மா எனக்கு இங்க கொஞ்சம் பார்மாலிட்டிஸ் எல்லாம் இருக்கு. நீ அம்மாகூட வீட்டுக்கு போ!! சொல்ல சொல்ல கேட்காம குழந்தையை வேற இங்க கூட்டிட்டு வந்திருக்க” என்று மெதுவாய் கடிந்தான்.

 

“நீங்க வீட்டுக்கு போங்க… நான் ஈவினிங் வீட்டுக்கு வந்திடுவேன்” என்று சொல்லி அவளை அங்கிருந்து கிளப்பினான்.

 

 

வண்டியில் ஏறி அமர்ந்த மனோவிற்கு சில மாதங்கள் முன் நிகழ்ந்தவைகள் கண் முன் வந்து போனது…

 

____________________

 

 

வழக்கு விசாரணை ஆரம்பித்த முதல் நாள் நீதிமன்றத்திற்கு வந்தவளுக்குள் அங்கு வந்த கணேஷை கண்டதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

 

 

வேகமாய் அவன் முன் சென்று நின்றவள் “எதுக்குடா இப்படி செஞ்சே?? எங்கப்பா என்ன பண்ணார் உங்களை??”

 

 

“அவரைகொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு… எங்கம்மாவையும் சேர்த்து கொன்னுட்டீங்களே!!” என்று அவன் சட்டையை பிடிக்கும் போதே கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது.

 

 

“ஏம்மா விடும்மா!! விடும்மா!!” என்று சொல்லி அவளை தள்ளி நிறுத்த கணேஷோ“உங்கப்பாவை நான் கொல்லலை.உன்னை நான் விரும்பின பாவத்துக்காக என் விருப்பத்துக்காக அதை எங்கப்பா செஞ்சார். அதில எந்த தப்புமில்லையே”

 

 

“உங்கப்பாவுக்கு இதெல்லாம் வேணும். பிடிக்கலைன்னா என்கிட்ட நேரடியா சொல்லியிருக்கலாம்ல எதுக்கு அவமானப்படுத்தனும். அதுக்கு தான் அவருக்கு இந்த நிலைமை. நான் செய்ய நினைச்சேன்”

 

 

“என்ன எங்கப்பா என்னை முந்திக்கிட்டார், அவர் செய்யலைன்னாலும் கொஞ்ச நாள் கழிச்சு நானே அதை தான் செய்ய நினைச்சேன்” என்று மெதுவாய் அவளுக்கு மட்டும் கேட்குமாறு வன்மமாய் கூறினான் அவன்.

 

 

அவள்வலக்கரம் நீண்டு அவனை அடிக்கப் போக பிரணவ் அவள் கையை பிடித்திருந்தான். “நீ எதுக்கு இவனோட பேசிட்டு இருக்க??”

 

 

“இவன் என்ன சொன்னான் தெரியுமா??” என்றாள் அழுகையோடு.

 

 

“எது வேணா சொல்லியிருக்கட்டும் அதுக்காக நீ கையை ஓங்கக்கூடாது அது தப்பு. அவனுக்கு சட்டப்படி தண்டனை நிச்சயம் கிடைக்கும், நீ வா” என்றவன் அவளை வேறு புறம் கூட்டிச் சென்றான்.

 

 

மாலதியும் அங்கு வந்திருக்க அவரிடம் சென்றவன் “அம்மா இவளை பார்த்துக்கோங்க…” என்றுவிட்டு அவன் நகர்ந்து சென்றான்.

 

 

மனோவிற்கு நடந்தெல்லாம் இன்னமும் நம்ப முடியவில்லை. ஒரு பெண் மீது வைத்த ஆசைக்காய் என்ன வேண்டுமானாலும் செய்யத் தோன்றுமா!!

 

 

மகனுக்கு பெண்ணாசை!! அப்பனுக்கு மண்ணாசை!! இரண்டுமே இப்போது அவர்களின் உயிர் குடிக்கும் ஓசையாகத் தான் அவளுக்கு தோன்றியது.

 

 

தனக்கே தெரியாமல் தன்னை சுற்றி நடந்த விஷயங்கள் அவளுக்கு அதிர்ச்சி ஊட்டுவதாய் இருந்தது. தன்னைஎதுவும் பாதிக்காதவாறு தனக்கே தெரியாமல் அவளின் தந்தை அவளை பாதுகாத்தது அவளுக்கு வியப்பாய் இருந்தது.

 

 

உடன் அழுகையும் பீறிட்டது. வழக்கின் முதல் நாள் விசாரணை முடிந்து மனோ வீட்டிற்கு சென்றுவிட பிரணவ்வேறு சில வேலைகளாய் வெளியில் அலைந்து கொண்டிருந்தான்.

 

 

ஒரு வழியாய் அவன் வேலைகள் எல்லாம் ஓரளவிற்கு முடிந்து அன்று தான் அவன் வீட்டிலிருந்தான். தொடர்ச்சியாய் நான்கு நாட்கள் அரசாங்க விடுமுறை வேறு.

 

 

அவர்களின் அறையில் கட்டிலில் சாய்ந்துஅமர்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு எதையோ யோசிப்பது போன்ற பாவனையில் அவன் அமர்ந்திருப்பதை எட்டிப்பார்த்தாள் மனோ.

அவனிடம் சென்று எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டே வாயிலில் நின்றிருந்தாள். அவளுக்கு அவனிடம் சொல்லவும் கேட்கவும்நெறைய விஷயங்கள் இருந்தது.

 

 

வெங்கடேசனும் மாலதியும் அஜியை அழைத்துக்கொண்டு திருவாவினன்குடி முருகனை தரிசிக்க சென்றிருந்தனர்.

 

 

பிரணவிற்கு மனோ தயங்கி தயங்கி வெளியில் நிற்பது தெரிந்து தான் இருந்தது. சில நாட்களாகவே அவள் அவனிடம் எதையோ சொல்ல முயற்சி செய்து கொண்டிருப்பது அவனறிந்தே தான் இருந்தான்.

 

 

அவனாய் சென்று அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. எதுவாய் இருந்தாலும் அவளே கேட்கட்டும் என்று பேசாமலே இருந்தான்.

 

 

அறைக்குள் அவள் நுழையும் அரவம் கேட்டது. கட்டிலில்சாய்ந்து அமர்ந்திருந்தவன் கண்ணை திறந்தும் பார்க்கவில்லை.

 

 

அவளாய் பேசுவாளா என்று காதுகளை தீட்டிக் கொண்டு காத்திருந்தான். அவனருகில் சென்று அமர்ந்தவள் மெதுவாய் அவன் கையை தட்டி எழுப்ப முயற்சி செய்தாள்.

 

 

‘ஓமேடம்க்கு வாய் வராதாமா!!’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு கண்ணை திறவாமலே இருந்தான் அவன்.

 

 

“என்னங்க எனக்கு தெரியும் நீங்க சும்மா தான் படுத்திருக்கீங்க!! கொஞ்சம் எழுந்திருங்க எனக்கு உங்ககிட்ட பேசணும்” என்றாள்.

 

 

எதுவும் சொல்லாமல் சட்டென்று எழுந்து நேராய் அமர்ந்திருந்தான் அவன்.

 

 

“என்ன பேசணும்ன்னு கேட்க மாட்டீங்களா??”

 

 

“என்ன பேசணும்ன்னு நீ சொல்ல மாட்டியா??” என்று பதில் கேள்வி வைத்தான்.

 

 

“எப்படி இவ்வளவு நாளாய் என்கிட்ட உங்களால சொல்லாம இருக்க முடிஞ்சுது. இவ்வளவு தானா நீங்க என் மேல வைச்சிருக்க நம்பிக்கை” என்று எப்போதும் போல் அவனையே குற்றம் சாட்டும் விதமாய் தான் ஆரம்பித்தாள்.

 

 

“உன் மேல வைச்சிருக்க நம்பிக்கையை கெடுக்கற மாதிரி என்னைக்கும் நான் நடந்ததா ஞாபகமில்லை. நான் ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அது உன் நல்லதுக்கா மட்டும் தான்இருக்கும்”

 

 

“என்ன நல்லது பெரிய நல்லது எங்கப்பா பார்த்த மாப்பிள்ளை நீங்க தான்னு சொன்னா உங்க மகுடம் இறங்கிடுமா!!” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிய ஆரம்பித்தது.

 

 

“ஏன்?? ஏன்?? இப்படி செஞ்சீங்க?? எப்படி இவ்வளவு நாளா உங்களால என்கிட்ட சொல்லாம இருக்க முடிஞ்சது” என்றுஅவள் கைகளால் அவன் நெஞ்சில் குத்த பிரணவ் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

 

 

அவன் இன்னமும் அவன் தான் அவளின் அப்பா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை என்று யாரிடமும் கூறியிருக்கவில்லையே!!

 

 

கணேஷிடம் கூட முழுசாய் சொல்லாமல் மேலோட்டமாய் தானே சொல்லியிருந்தான். முதலில் அவன் மனைவி அதை தான் கேட்கிறாள் என்று எண்ணவில்லை அவன்.

 

 

கணேஷ் பற்றித்தான் சொல்லாமல் மறைத்ததாய் கேட்பாள் என்று எண்ணியிருக்க அவள் இதை சொன்னதும் உள்ளுக்குள் ஒரு சந்தோசம் அவனுக்கு உண்டாகியிருந்தது.

 

 

அவன் சொல்லாமல் அவளே தெரிந்து கொண்டாளே தன் மனம் அவளுக்கு தான் சொல்லாமலே புரிந்த சந்தோசம் அவனுக்கு.

“நான் கேட்டுட்டே இருக்கேன்… பதில்சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்” என்றவள் தலையால் அவன் மார்பில் முட்டினாள்.

 

 

“பதில் சொல்ல முடியாம சந்தோசத்துல திக்குமுக்காடி போயிருக்கேன் ரதிம்மா” என்றான் அவன்.

 

 

“என் துக்கம் உங்களுக்கு சந்தோசமா!!” என்றவள் நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

 

 

“என்ன என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு துக்கமா!!”

 

 

“நான் ஒண்ணும் அதை சொல்லலை நான் அழுதிட்டு இருக்கேன். அதை பார்த்திட்டு சந்தோசமா இருக்கேன்னு சொன்னா என்ன அர்த்தம்”

 

 

“சரி சரி சொல்றேன்”

 

 

“எங்கப்பாவை எப்போ பார்த்தீங்க!! கடைசியா அவர் என்ன சொன்னார் உங்ககிட்ட!!” என்று கேட்டவளின் குரல் மீண்டும் உடையத் தயாராய் இருந்ததை அவனால் உணர முடிந்தது.

 

 

“உங்கப்பாவை நான் கடைசியா நேர்ல பார்த்து பேசினது அன்னைக்கு உன்னை கூட்டிட்டு போக அவர் ஆபீஸ் வந்தாரே அன்னைக்கு தான்….”

“பொறு!! பொறு!! நானே சொல்றேன்… அவர் என்கிட்ட கடைசியா பேசினதுஅவர் பழனிக்கு போறதுக்கு முதல் நாள்” என்றவன் அன்றைய நாளை நினைவு கூர்ந்தான்…

 

____________________

 

 

பிரணவ் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து சேர எட்டு மணிக்கு மேல் ஆனது.

 

 

வந்ததும் எப்போதும் போல் ஒரு குளியலை போட்டுவிட்டு பூஜையறை சென்று சாமி கும்பிட்டு வந்து அவன் அறைக்கு செல்ல ஹேமா அவனையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

“என்னக்கா பார்த்திட்டு இருக்க??”

 

 

ஹேமாவுக்கோ அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனை. எப்படியும் அப்பெண்ணின் தந்தை வந்ததை அவனிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்.

 

 

அவர் வந்து சென்றதை பற்றி அவள் வீட்டினர் யாரிடமும் மூச்சு கூட விடவில்லை.தன் யோசனையிலேயே அவள் நின்றிருக்க பிரணவ் அவள் அருகே வந்து உலுக்கினான்.

 

 

“என்னக்கா மாமா பத்தி யோசிச்சுட்டு இருக்கியா!! ஒரு போன் போட்டு பேச வேண்டியது தானே” என்றான்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. உன்னை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்”

 

 

“என்னைப்பத்தியா!! என்னை பத்தி அப்படி என்ன யோசனை உனக்கு??”

 

 

“அது… அதை சொல்றேன் நீ சாப்பிட்டியா!! உனக்கு டிபன் எடுத்து வைக்கவா” என்றாள்.

 

 

“அதை அப்புறம் பார்த்துக்கலாம் நீ என்ன யோசனை பண்ணேன்னு சொல்லு”

 

 

“சரி வா உன் ரூம்ல போய் பேசலாம்” என்றவள் தம்பியுடன் அவனறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்.

 

 

‘என்ன இந்தக்கா புதுசு புதுசா ஏதோ பண்ணுது’ என்று யோசித்துக் கொண்டே “எதுக்குக்கா இப்போ கதவை அடைக்கிற??”

 

 

“இல்ல இந்த சசி வேற பொசுக்கு பொசுக்குன்னு உள்ள வந்திருவா!! அதுக்கு தான்” என்றவள்“உட்காருடா” என்றாள்.

 

 

“எதுக்கு இவ்வளவு பீடிகையாம்??” என்றான்

 

 

“இன்னைக்குஉன்னைத் தேடி ஒரு பொண்ணோட அப்பா வந்திருந்தார்டா!!”

 

 

“சரி யார் அவர்ன்னு கேட்டியா??”

 

 

“அதிருக்கட்டும்நீ முதல்ல இதை சொல்லு. நீபத்தாவது படிக்கும் போது செஞ்ச மாதிரி எந்த பொண்ணுக்கும் லவ் லெட்டர் கொடுத்து அவங்க வீட்டு ஆளுங்க வந்த மாதிரி கதை இல்லையே இது” என்று ஹேமா கேட்கவும் பிரணவிற்கு சங்கடமாய் போனது.

 

 

“நான் இப்பவும் அப்படியேவா இருக்கேன்க்கா!! அது விபரம் புரியாத வயசு!! அந்த வயசு கோளாறுல செஞ்ச தப்பு அது!! பெரியப்பா பேச்சை கேட்டு நான் மாறியிருக்கறதை நீ நம்பலையா!!”

 

 

“உன்னை நம்பாம நான் இதை கேட்கலை பிரணவ். அந்த பொண்ணை நீ விரும்பினா கூட அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்”

 

 

“ஆனா அவங்கப்பா வீட்டுக்கு வர்றது எல்லாம் மனசுக்கு ஒரு மாதிரியா இருக்குல… அதனால தான்டா கேட்டேன்” என்று இயல்பாய் அவள் மனதில் தோன்றியதை கேட்டாள்.

 

 

“அக்கா நீ இன்னும் யார் வந்து போனாங்கன்னு சொல்லவே இல்லை”

“அவரோட பேரு என்னமோ சொன்னாரு எனக்கு அது சரியா ஞாபகமில்லை. ஹான் அந்த பொண்ணோட பேரு பாரதி… அவர் பாரதியோட அப்பான்னு சொன்னாருடா”

 

 

“என்ன பாரதியோட அப்பாவா!!” என்று தம்பி யோசிக்கவும் “என்னடா எதுவும் பிரச்சனையா??” என்றாள் தமக்கை கேள்வியாய்.

 

 

“பிரச்சனையா என்னன்னு எனக்கே தெரியாது. நானே அவரை ஒரே ஒரு முறை தான் பார்த்திருக்கேன். போனவாரம் கம்பெனி கெட்டுகெதர் நடந்துச்சுல அப்போ அந்த பொண்ணை கூட்டிட்டு போய் சேபா விட்டு வந்தேன்”

 

 

“அப்போ தான் அவங்கப்பாவை பார்த்தேன். ஆனா அவர் எதுக்கு என்னை பார்க்க வந்தார், அதுவும்நான் வீட்டில இல்லாத நேரமா ஏன் வந்தார்” என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

 

“அவர் கூட நீ ஆபீஸ்ல இருப்பேங்கறதை மறந்திட்டார் போல…” என்றவள் அவர் வந்த போது நடந்ததை தம்பியிடம் கூறினாள்.

 

 

“ஹ்ம்ம் அவர் நம்பர் கூட என்கிட்ட இல்லையே… என்ன விஷயத்துக்காக வந்தார்ன்னு தெரியலையே!! நாளைக்கு அந்த பொண்ணுகிட்டவே கேட்டுக்கறேன்” என்றான் அவன்.

“சரி பார்த்துக்கோடா எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. எதையும் மறைக்காதேடா” என்றவள் எழுந்திருந்தாள்.

 

 

“உன்கிட்ட நான் என்னைக்கும் எதையும் மறைச்சதில்லைக்கா!! நீ கவலையேப்படாதே!!” என்றான்.

 

 

“சரி வந்து சாப்பிடு” என்று அவள் அழைத்துவிட்டு போக “நீ போக்கா நான் அப்புறம் வந்து சாப்பிடுறேன்” என்று தமக்கையை அனுப்பிவிட்டு அவன் கட்டிலில் அமர்ந்தான்.

 

 

‘எதுக்காக வந்திருப்பாரு!! என்ன விஷயமாயிருக்கும்!!’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் அவனுக்கு ஒன்று ஞாபகம் வந்தது.

 

 

‘அவர்கிட்ட தான் என்னோட போன் நம்பர் இருக்கே… பார்ப்போம் எதுவா இருந்தாலும் அவரே கூப்பிடுவாரு’ என்று அவன் எண்ணி முடிக்கவில்லை அவன் கைபேசி அழைத்து தான் இருப்பதை காண்பித்தது.

 

 

புது எண்ணாக இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டே போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தான் “ஹலோ”என்றவாறே.

 

 

“ஹலோ நான் குமாரசாமி பேசறேன்” என்றதும் அவனுக்கு புரியவில்லை.

 

 

“சொல்லுங்க!! என்ன விஷயம்??” என்றான்

 

 

“என்னை தெரியுதா உங்களுக்கு!! நா… நான் பாரதியோட அப்பா” என்றதும் சட்டென்று புரிந்து போனது அவனுக்கு.

 

 

“சொல்லுங்க அங்கிள்”

 

 

“எப்படியிருக்கீங்க தம்பி??”

 

 

“நான் நல்லாயிருக்கேன் அங்கிள்… நீங்க எப்படி இருக்கீங்க??”

 

 

“ஹ்ம்ம் இருக்கேன்ப்பா…”

 

 

“ரதிக்கு எதுவும் பிரச்சனையா அங்கிள்??” என்று நேரடியாய் விஷயத்தை ஆரம்பிக்கப் பார்த்தான் அவன்.

 

 

அவனின் ரதி என்றதிலேயே அவர் மனம் அகமகிழ்ந்து போனது. பிரணவுமே முதல் முறையாய் அவளை அப்படி செல்லச் சுருக்கமாய் சொல்லியிருக்கிறோம் என்றெல்லாம் உணரவேயில்லை.

 

 

“நான் இன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தேன்”

“அக்கா சொன்னாங்க அங்கிள்… என்ன பிரச்சனை அங்கிள்?? நான் உங்களுக்கு எதுவும் உதவி பண்ணணுமா??”

 

 

“உதவின்னு சொல்ல முடியாது. என்னோட விருப்பம் ஒண்ணு…” என்றவர் எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினார். சட்டென்று கேட்க வாய் வரவில்லை.

 

 

“என்னன்னு சொல்லுங்க அங்கிள் என்னால முடிஞ்சதை செய்யறேன்” என்று அவன் சொன்னதும் நம்பிக்கை வரப்பெற்றவர் அடுத்து சொன்னதை கேட்டு அவன் மனம் எப்படி உணர்ந்தது என்று அவனுக்கே தெரியவில்லை.

 

 

“என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறீங்களா??” என்று கேட்டே விட்டார்.

 

 

பிரணவிற்கு சட்டென்று ஒன்றுமே விளங்கவில்லை. அவர் கேட்டது மனதிற்கு இதமளித்ததை அவனால் உணர முடிந்தது.

 

 

அவர் சொன்ன விஷயம் மூளையை சென்று அடைந்த போது தான் அதன் வீரியம் புரிய “எ… என்ன சொல்றீங்க அங்கிள்??” என்றான்.

 

 

“அதான் கேட்டேனே… என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறீங்களான்னு…”

 

“எனக்கு புரியலை அங்கிள்… நீங்க ஏன் என்கிட்ட அப்படி கேட்கறீங்க?? எனக்கு என்ன தகுதி இருக்குன்னு நினைச்சு நீங்க கேட்கறீங்கன்னு எனக்கு புரியலை அங்கிள்??” என்றவன் இன்னமும் அவர் சொன்னதை நம்ப முடியாமல் தான் இருந்தான்.

 

 

“அந்த தகுதி உங்களுக்கு இருக்குன்னு நினைச்சதால மட்டும் தான் கேட்டேன்… ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பா இருக்கவன் பாதுக்காப்பா அவளை உணர வைக்கிறவன் நல்ல கணவனா இருக்க முடியும் தானே”

 

 

“அதெல்லாம் ஒரு காரணம்ன்னு நீங்க நினைக்கறீங்களா!! என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் அங்கிள். என்னை நீங்க ஒரே ஒரு முறை தான் நேர்ல பார்த்திருக்கீங்க”

 

 

“அதை வைச்சு எந்த முடிவும் நீங்க எடுக்கறது எனக்கு சரியா தோணலை”

 

 

“உங்களை நான் நேர்ல பார்த்தது ஒரு முறையா இருக்கலாம். ஆனா உங்களை பத்தி தினமும் நான் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்”

 

 

“என் பொண்ணு சொல்லி” என்று சேர்த்து சொன்னார்.

 

 

“நிச்சயம் நல்லவிதமா அவங்க என்னைப்பத்தி சொல்லியிருக்க மாட்டாங்க… அப்புறமும் ஏன் அங்கிள் இப்படி யோசிக்கறீங்க… இப்போ இதுக்கெல்லாம் என்ன அவசரம்ன்னு எனக்கு புரியலை”

 

 

“சரி அதெல்லாம் விடுங்க நான் ஒண்ணு கேட்கறேன் அதுக்கு மறைக்காம பதில் சொல்லுங்க”

 

 

“கேளுங்க அங்கிள்”

 

 

“என் பொண்ணை உங்களுக்கு பிடிச்சிருக்கா??”

 

 

“அங்கிள் பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு சொல்றதுல என்ன தெரிய போகுது அங்கிள்” என்றான் அவரின் கேள்விக்கு நேரடியாய் பதில் சொல்லாமல்

 

 

“நீங்க ஆமா இல்லைன்னு ஒரு வார்த்தையில கூட பதில் சொல்லலாம்”

 

 

“என்ன சொல்றதுன்னு தெரியலை அங்கிள்”

 

 

“இன்னும் நீங்க பதில் சொல்லலை”

 

 

“நீங்களும் இன்னும் எனக்கு பதில் சொல்லலை அங்கிள்… எதுக்காக இதெல்லாம் கேட்கறீங்கன்னு” என்று இப்போதும் அவருக்கு பதில் சொல்லாமல் வேறு கேட்டு வைத்தான்.

 

 

“சரி சொல்றேன்… எனக்கு இந்த ஜாதகம் ஜோசியத்துல எல்லாம் கொஞ்சம் நம்பிக்கை உண்டு… பாரதியோட இருபது வயசுக்கு மேல அவளோட நாங்க இருக்க மாட்டோம் அப்படிங்கறது தான் அவளோட ஜாதகம்”

 

 

“அங்கிள் இதெல்லாம் முட்டாள்த்தனம்”

 

 

“எப்படி வேணாலும் இருக்கட்டும் ஆனா ஒரு அப்பனா நான் அவளுக்கு ஒரு நல்லதை செய்யணும்ன்னு நினைக்கிறேன். நான் இருக்கும் போதே அதை செய்யணும்ன்னு நினைக்கிறேன் தப்பில்லையே”

 

 

“அங்கிள் நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க உங்க பொண்ணு கூடவே நீங்க இருக்க போறீங்க பாருங்க. இதுக்காக எல்லாம் இப்படி சட்டுன்னு அவசர முடிவு எடுக்காதீங்க அங்கிள்”

 

 

“அவசரப்படலை ஆனா அவசியம்ன்னு நினைக்கிறேன். நெருப்புன்னா வாய் வெந்திட போறதில்லைப்பா… அது மாதிரி தான் நான் இருந்தாலும் இல்லைன்னாலும் என் பொண்ணுக்கு நான் செய்ய வேண்டியதை தானே செய்ய நினைக்கிறேன்”

 

 

“அதுல ஒண்ணும் தப்பில்லையே… என்ன கொஞ்சம் சீக்கிரமே செய்ய நினைக்கிறேன் அவ்வளவு தான்… நான் உங்களை கட்டாயப்படுத்துறதா நினைக்க வேண்டாம்… நீங்க யோசிச்சு உங்க பதிலை சொல்லுங்க” என்றார் அவர்.

பிரணவிற்கு அவரிடம் சட்டென்று ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை, வேண்டாமென்று மறுக்கவும் இயலவில்லை. சற்று அமைதி காத்தான்.

 

 

“தம்பி இருக்கீங்களா??” என்றதும் தன்னுணர்வு பெற்றவன் “சாரி அங்கிள் ஏதோ யோசனை”

 

 

“அங்கிள் திரும்ப திரும்ப கேட்கிறேன்னு நினைக்காதீங்க… நீங்க இதை யோசிச்சு தான் கேட்டீங்களா!! நான் நல்லவனா கெட்டவனா கூட உங்களுக்கு தெரியாது”

 

 

அவர் ஏதோ இடைமறிப்பது போல் ஆரம்பிக்க “இருங்கஅங்கிள் நான் பேசிடறேன்…” என்றவன் தொடர்ந்தான்.

 

 

“எங்க வீட்டிலையும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க… என்னோட பெரியக்காக்கு கல்யாணம் ஆகிடுச்சு, சின்னக்காக்கு இப்போ தான் நிச்சயம் முடிஞ்சது”

 

 

“நாங்க மாப்பிள்ளை பார்க்கும் போது எவ்வளவு விசாரிச்சோம்ன்னு எனக்கும் தெரியும் அங்கிள்… அது ஒண்ணும் லேசான விஷயமில்லை”

 

 

“நீங்க என்கிட்ட அப்படி கேட்டதும் எனக்கு உண்மையாவே ஷாக்கா இருக்கு அங்கிள்… நான் ஒண்ணும் அவ்வளவு நல்ல பையன் எல்லாம் இல்லை அங்கிள், என்கிட்டயும் நெறைய குறைகள் இருக்கத்தான் செய்யுது”

 

 

“எங்க வீட்டு பொண்ணுங்க மாதிரி தானே உங்க பொண்ணும். எதையும் சட்டுன்னு முடிவெடுக்காம கொஞ்சம் யோசிங்க அங்கிள்… உங்க பொண்ணுக்கு பிடிச்ச மாதிரியான பையனா பாருங்க” என்று நீளமாய் கூறி முடித்தான்.

 

 

“நான் யோசிக்காம இதை கேட்டிருப்பேன்னு நினைக்கறீங்களா!!”

 

 

“உங்க பொண்ணுக்கிட்ட கேட்டிருப்பீங்கன்னு நான் நினைக்கலை அங்கிள்” என்று மடக்கினான் அவன்.

 

 

“சரி என் பொண்ணு யாரையாச்சும் லவ் பண்ணுவாளா என்ன??”

 

 

“ரதி அப்படி பண்ண மாட்டாங்க அங்கிள்… அவங்க நீங்க யாரை சொன்னாலும் கட்டிப்பேன்னு தான் சொன்னாங்க” என்று அவன் வாயாலே ஒத்துக்கொண்டான்.

 

 

“அப்போ நான் பார்க்கற உங்களை என் பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லுவான்னு நினைக்கறீங்களா” என்றதும் பிரணவ் வாயடைத்து போனான்.

 

 

‘இவர் என்ன ஒரு முடிவோட தான் இருக்கார் போல… என்ன சொல்ல’ என்று அவனுக்கு புரியவில்லை.

 

 

“அங்கிள்…” என்று இழுத்தான்.

 

 

“சொல்லுங்க தம்பி… மறுபடியும் சொல்றேன் நான் உங்களை கட்டாயப்படுத்தலை. நீங்களா இருந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்” என்றார் அவர் இப்போது.

 

 

கண்ணை மூடி ஒரு கணம் நின்றவன் “சரிஅங்கிள்நான் என்னோட பதிலை இப்போவே சொல்றேன்… நீங்க இவ்வளவு தூரம் என்கிட்ட பேசியும் நான் பதில் சொல்லாம இருந்தா நல்லா இருக்காது”

 

 

“உங்க பொண்ணை கட்டிக்க சொல்லி நீங்க கேட்டது நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோசம் அங்கிள்…”

 

 

“ஒரு வேளை எங்க வீட்டில எனக்கு பொண்ணு பார்க்கறதா இருந்தா நான் நிச்சயம் உங்ககிட்ட வந்து இதை பத்தி பேசியிருப்பேன்னு நினைக்கிறேன்” என்று மறைமுகமாய் அவன் விருப்பத்தை கோடிட்டு காட்டினான்.

 

 

“நாம கல்யாணத்தை பத்தி இப்போவே பேச வேணாம் அங்கிள். இது அதுக்கான நேரமில்லை, எனக்கு மட்டுமில்லை, ரதிக்கும் சேர்த்து தான் சொல்றேன். கல்யாணம் அவங்க விருப்பம் இல்லாம மட்டும் நடக்காது”

 

 

“அவங்க சரின்னு சொன்னா தான்,அவங்களுக்குபிடிச்சா மட்டும் தான், பிடிச்சவரோட மட்டும் தான் அது நடக்கும், நடக்கணும்… அதுக்கு என்னால என்ன முடியுமோ அதை செய்யறேன்” என்றான் அவன்.

 

 

“எனக்கு பிடிச்சவர் என் பொண்ணுக்கும் பிடிச்சவரா நிச்சயம் இருப்பார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. என் பொண்ணுக்கும் உங்களை பிடிக்கும்ன்னு நான் நம்புறேன்…”

 

 

“கல்யாணம் இப்போவே நடக்கணும்ன்னு நான் சொல்லலை. எவ்வளவு சீக்கிரம் நடக்குதோ அது நல்லதுன்னு நினைக்கிறேன். ஏன்னா அவளை சுத்தி சில பிரச்சனைகள் இருக்கு”

 

 

“என்னன்னு சொல்லுங்க அங்கிள்??”

 

 

“இல்லை அதை போன்ல சொல்ல முடியாது… நான் உங்களை நேர்ல பார்த்து பேசறேன்”

 

 

“ஹ்ம்ம் சரி அங்கிள்”

 

 

“எனக்கு கடைசியா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுங்க அது போதும்” என்றார் குமாரசாமி.

“சொல்லுங்க அங்கிள்”

 

 

“உங்களுக்கு என் பொண்ணு பாரதியை பிடிச்சிருக்கா??”

 

 

“ஏன் அங்கிள் இப்படி கேட்கறீங்க?? நான் சொன்னதுல உங்களுக்கு எதுவும் நம்பிக்கை இல்லையா!!”

 

 

“நீங்க இன்னும் என்னோட கேள்வி எதுக்குமே நேரடியா பதில் சொல்லலையே… நீங்க சொன்ன விஷயத்தை எனக்கு புரிஞ்ச அளவுல நான் ஏத்துக்கறேன்…”

 

 

“ஆனாஇதுக்கு மட்டும் நேரடியாநீங்க பதில் சொன்னா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்” என்றார் அவர் அவனிடம் பதில் வாங்கிடும் நோக்குடன்.

 

 

பிரணவ் அதற்கு மேல் தாமதிக்கவில்லை “பிடிச்சிருக்கு அங்கிள்” என்றான். குமாரசாமிக்கு மனம் அப்போது தான் சமனப்பட்டது.

 

 

மகளை குறித்த பயமும் கவலையும் சற்று நீங்கினார் போன்று உணர்ந்தார். “ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க இப்படி சொன்னது”

 

 

“உங்களை ரொம்ப கட்டாயப்படுத்தறனோன்னு ஒரு குற்றவுணர்வு எனக்கு”

 

 

“இப்போ எனக்கு முழுநம்பிக்கை இருக்கு… என் பொண்ணோட வாழ்க்கைக்கு நீங்க பொறுப்பா இருப்பீங்கன்னு… நீங்க அவளோட சந்தோசத்துக்கு பொறுப்புன்னு சொல்ல வந்தேன்”

 

 

“அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை நீங்க கண்டிப்பா ஏற்படுத்திக் கொடுப்பீங்கன்னு நான் நம்புறேன்”

 

 

“அங்கிள் இப்படி எல்லாம் பேசாதீங்க… நீங்கதான் உங்க பொண்ணோட கல்யாணத்தையே நடத்தப் போறீங்க”

 

 

“கண்டிப்பா நான் அவளோட இருப்பேன்…” என்றவர் மேலும் சில நிமிடங்கள் அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தார்.

 

 

தன்னுடன் அவ்வளவு தூரம் பேசிய அந்த மனிதரை அடுத்து உயிற்றவராக பார்ப்போம் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

 

 

மனோவின் கைபேசியில் அந்த தகவலை கேட்டதும் அவனால் தாங்க முடியவில்லை. அதிகம் அவருடன் பழகியிராத அவனுக்கே அவ்வளவு வருத்தமென்றால் அவன் ரதிக்கு எப்படி இருக்கும் என்று அவனால் உணர முடிந்தது.

 

 

எல்லாம் முன்னமே அறிந்தவர் போல் மகளின் வாழக்கைக்காய் தன்னிடம் பேசிய அந்த மனிதரை நினைத்து அவனுக்கு இன்னமும் வியப்பு தான்.

 

 

ரதி இனி என் பொறுப்பு, அவள் வாழ்க்கை அவளுக்கு பிடித்த மாதிரி அமைத்து கொடுக்க வேண்டியது என் பொறுப்பு என்று தனக்குள் ஆயிரம் முறை சொல்லிக்கொண்டான்.

 

 

தப்பித் தவறிக்கூட அவளை தானே திருமணம் செய்ய வேண்டும் என்று அவன் எண்ணவில்லை.

 

 

ரதி சரவணன் தான் என் தந்தை பார்த்த மாப்பிள்ளை என்று வந்து நிற்கும் வரை பிரணவ் வேறு எதையும் நினைக்கவில்லை.

 

 

முதலில் அதை கேட்டதும் அவனுக்கு திகைப்பு தான்… அவளின் அந்த பேச்சை கேட்டு அவனுக்கு கண்மண் தெரியாத கோபமும் வந்தது. இப்படியும் ஒருத்தி இருப்பாளா என்று!!

 

 

குமாரசாமி அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று அறிந்திருந்தாலும் ஒரு வேளை அவளுக்கு பிடித்திருக்கிறதோ அவனை என்ற கோணத்திலும் யோசித்தான்.

 

 

முதலில் அவள் பேச்சைக் கேட்டு கோபம் வந்தாலும் அவளுக்கு பிடித்திருந்தால் திருமணத்தை முடித்து வைப்பது என முடிவும் செய்துவிட்டான்.

 

 

பலவித குழப்ப மனநிலையுடனே அவன் வீட்டிற்கு வந்து சேர ஹேமா அவனை தேடி வந்தாள். ஹேமாவிற்கு மட்டுமே அவனை பற்றி முழுதாய் தெரியும்.

 

 

அவனிடம் குமாரசாமி பேசியது வரை அத்துனையும் பகிர்ந்திருந்தான் அவன்.

 

 

“என்னடா ஒரு மாதிரியா இருக்கே??”

 

 

“ஒண்ணுமில்லைக்கா!! ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகம் அதான் யோசிச்சுட்டு இருந்தேன்”

 

 

“டேய் சொல்ல மறந்திட்டேன், உனக்கு ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்துச்சுன்னு பக்கத்துவீட்டு அக்கா சொன்னாங்கடா”

 

 

“நாங்க கோவிலுக்கு போயிருந்தோம் அதான் எங்களுக்கு தெரியலை… போன வாரம் கூட ஒரு போஸ்ட் வந்துச்சு… அம்மா உன்கிட்ட சொல்ல மறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்”

 

 

“ரிஜிஸ்டர் போஸ்ட்ன்னால நீ தான் கையெழுத்து போட்டு வாங்கணும்ன்னு சொல்லிட்டாங்க… அந்த போஸ்ட்மேன் நமக்கு தெரிஞ்ச ஆளுங்கறதால திரும்பவும் வந்திருப்பார் போல”

 

 

“நம்ம வீட்டில யாரும் இல்லைங்கவும் பக்கத்து வீட்டில சொல்லிட்டு போயிருக்காங்கடா… நாளைக்கு முத வேலையா அது என்னன்னு பாரு…”

 

 

“ஒரு வேளை உன்னோட ஹால்டிக்கெட் எதுவும் வந்திருக்க போகுது” என்று போகிற போக்கில் அவள் சொல்லிவிட்டு போக பிரணவ் மறுநாள் காலை நேரே அந்த போஸ்ட் ஆபீசிற்கு சென்றான்.

 

 

அவர் இரண்டு ரிஜிஸ்டர் தபாலை அவனிடம் கொடுத்தார். ஒன்று அவன் எதிர்பார்த்தது போல அவனின் தேர்வுக்கான நுழைவுசீட்டே தான் மற்றொன்று அதிக கனமாய் இருந்தது போன்ற உணர்வு.

 

 

என்னாவாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டே வெளியில் வந்து அதை திறந்து பார்க்க அது கவரின் மேல் கவர் என்று ஐந்து கவரை உள்ளடக்கி இருந்தது.

 

 

யாருடா அது இவ்வளவு பாதுக்காப்பா நமக்கு என்னத்தை அனுப்பியிருக்காங்க என்று எண்ணிக்கொண்டே அந்த கடைசி கவரை கிழிக்க உள்ளிருந்தது ஒரு பத்திரம்.

 

படித்து பார்க்க அது மனோபாரதியின் பெயரில் இருக்கும் ஒரு சொத்துப்பத்திரம் என்று புரிந்தது அவனுக்கு. இதை நிச்சயம் குமாரசாமி தான் அனுப்பியிருப்பார் என்று அவனுக்கு உறுதியாய் தோன்றியது.

 

 

அவர் இறந்த வீட்டில் கூட ஏதோ சொத்து பற்றிய பேச்சு வந்தது அவனுக்கு ஞாபகம் இருந்தது. அதை பாதுக்காக்க தான் என் பொறுப்பில் இதை விட்டிருக்கிறாரா என்று எண்ணியவனுக்கு கண்ணில் லேசாய் நீர் துளிர்த்தது.

 

 

‘என் மேல் அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு’ என்று மனதார பேசினான் காற்றில் கலந்திருந்தவரிடம். லேசாய் வீசிய காற்று ஆமென்பது போல் இருக்க வேறு குறிப்பு எதுவும் இருக்கிறதா என்று தேடினான்.

 

 

அவன் எண்ணியது போலவே அதில் ஒரு கடிதமிருந்தது. ஒரு குறிப்பை போல் மட்டுமே அதை அவர் எழுதியிருந்தார்.

 

 

இந்த பத்திரம் பத்திரமாய் உங்களிடமே இருக்கட்டும்… நான் வந்து கேட்டாலோ அல்லது பாரதிக்கு இதனால் பாதிப்பிருக்காது என்று இருக்கும் பட்சத்திலோ இதை உரியவரிடம் சேர்ப்பியுங்கள்”

 

 

இவ்வளவு தான் அவர் எழுதியிருந்தது!! ஏதோ பிரச்சனை என்று கூட சொன்னாரே!! இதனால்மகளுக்கு பிரச்சனை வரும் என்று நினைத்து தான் இதை தன்னிடம் சேர்ப்பித்திருப்பாரோ!! என்று எண்ணினான் அவன்.

 

 

அவளுக்கு ஒரு நல்வாழ்வு அமைந்து அவள் உரியவனிடம் சேர்ந்ததும் இதை அவளிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான்.

 

 

பின் நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அவன் சொல்ல சொல்ல அவள் கேட்டு முடித்திருந்தாள்.

 

____________________

 

 

“ஓ!! எப்படி எப்படி!! எனக்கு வேற ஒருத்தர் கூட!! எப்படி உங்களால அப்படி நினைக்க முடிஞ்சது… என்னைவிட்டு அப்படியே போய்டலாம்ன்னு நினைச்சிருந்தீங்களோ!!” என்றுஉரிமையாய் பொறிந்த மனைவியை பார்த்து கோபமே வரவில்லை அவனுக்கு.

 

 

அவளை இன்னும் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டுதானிருந்தான். “ஹ்ம்ம் அப்படி நான் யோசித்தது அன்னைக்கு என்னோட மனநிலை ரதிம்மா”

 

 

“சொல்லுங்க நீங்க தான் எங்கப்பா பார்த்த மாப்பிள்ளைன்னு ஏன் என்கிட்ட நீங்க சொல்லலை… நான் கேட்ட அந்த கேள்விக்கு இன்னும் உங்ககிட்ட இருந்து பதில் வரலை” என்றாள்…

Advertisement