Advertisement

அத்தியாயம் –33

 

 

எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எஸ்ஜி டவர்ஸின் ஐந்தாவது தளத்தில் அமைந்திருந்தது. அதி நவீன வசதிகளுடன் பார்ப்பவர் அசந்து போவதாய் அமைந்திருந்தது அதன் தனிச்சிறப்பு.

 

 

வரவேற்ப்பில் சென்று விசாரித்த பிரணவ் மேனேஜிங் டைரக்டரை சந்திக்க விரும்புவதாக சொல்ல அவர் அப்பாயின்மென்ட் இருக்கிறதா என்று வினவினார்.

 

 

“நான் பிரணவ் வந்திருக்கேன்னு சொல்லுங்க. அவரோட சன்க்கு ரொம்ப தெரிஞ்சவன்னு சொல்லுங்க” என்றான்.

 

 

அவள் யாரிடம் என்ன பேசினாளோ மீண்டும் பிரணவை பார்த்தவள் “சார் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணச் சொன்னார்” என்றாள்.

 

 

“ஓகே” என்றவன் இருக்கையில் அமர கைபேசி அழைத்தது. எடுத்து பார்த்தவன் உள்ளுக்குள் நகைத்துக்கொண்டான்.

 

 

“சொல்லுங்க சார்” என்றான்.

 

 

“யார் நீ??” என்றது எதிர்முனை.

 

 

“உங்க ரிஷப்ஷனிஸ்ட் சொல்லலையா, உங்க மகனோட பிரண்டுன்னு” என்றான் அவன்.

 

 

“ஹேய் யூ அவனோட போன் உன்கிட்ட எப்படி” என்றவர் போனை வைத்துவிட்டு வரவேற்ப்பு பெண்ணிற்கு அடித்திருப்பார் போல “சார் உங்களை கூப்பிடுறார், நேரா போய் செகண்ட் லெப்ட் சார்” என்றாள் அவள்.

 

 

“தேங்க்யூ” என்றுவிட்டு அவன் உள்ளே நுழைந்தான்.

 

 

அந்த அறைக்குள் நுழைந்ததும் எதிரிலிருந்தவர் எழுந்து நின்றிருந்தார். “நீ??” என்று ஆரம்பித்தவர் அவனே சொல்லட்டும் என்று அமர்ந்தவர் அவனை அமருமாறு கூற அவனும் அமர்ந்தான்.

 

 

“யூ” என்றார் மீண்டும்.

 

 

“பிரணவ்… ரதிஸ் ஹஸ்பெண்ட்” என்றான் சேர்த்து. எதிரிலிருந்தவர் முகத்தில் ஈயாடவில்லை.

 

 

“ஷ்யாம் எங்க??”

 

 

“பார்டன் சார்” என்றான் அவன் வேண்டுமென்றே.

 

 

“வேர் இஸ் மை சன் ஷ்யாம் கணேஷ்” என்றார்.

 

 

“இப்போ சரியா சொல்லிட்டீங்க, சரி வாங்க போவோம் உங்க மகன்கிட்ட” என்று சொல்லி எழுந்து நின்றிருந்தான்.

 

 

“எங்க வைச்சிருக்க அவனை?? என்ன பண்ணே அவனை??”

 

 

“எங்க கஸ்டடியில தான் இருக்கார் உங்க மகன் நீங்களும் வந்தா பேச வசதியா இருக்கும். உங்க முக்கிய கூட்டாளிகள் எல்லாரும் இருக்காங்க…”

 

 

“சோ நீங்களும் வந்து என்ன ஏதுன்னு சொன்னா என் வேலையும் முடியும்” என்றான்.

 

 

“நீ யாரு?? என்ன கஸ்டடி??” என்றார் அவர்.

 

 

“ஐ யம் கம்மிங் பிரம் சிபிஐ” என்றான்.

 

 

“நீங்க வர்றீங்களா கிளம்புவோமா!! இல்லை உங்களை அரெஸ்ட் பண்ணி தான் கூட்டிட்டு போகணும்ன்னாலும் ஓகே தான்” என்றான் அவன் அமைதியாய்.

 

____________________

 

 

“சொல்லுங்க கணேஷ், என்ன நடந்திச்சுன்னு சொல்லுங்க” என்று ஆரம்பித்தான் பிரணவ்.

 

 

“என்ன சொல்லணும்??” என்றான் அவன் திமிராய்.

 

 

“என்ன ஷ்யாம் கணேஷ் மறுபடியும் முதல்ல இருந்தா, நீங்களே சொல்லுங்க உங்களுக்கு எந்தெந்த விஷயத்துல என்ன மாதிரியான தொடர்பு” என்றான் அவன் நிதானமாய்.

 

 

பிரணவின் ஷ்யாம் கணேஷ் என்றதிலேயே கணேஷிற்கு விளங்கிவிட்டது அவன் எல்லாமும் தெரிந்து தான் வந்திருக்கிறான் என்று.

 

 

இருந்தும் வாயை திறக்காமல் அமர்ந்திருந்தான். “என்ன கணேஷ் பேசுறதா உத்தேசமே இல்லையா” என்றான் இப்போதும் பொறுமையாகவே.

 

 

பரணிக்கு தான் கணேஷை பார்த்து ஆத்திரம் வந்துக் கொண்டிருந்தது. “என்ன சார் நீங்க என்னமோ புத்தர் மாதிரி இவளோ அமைதியா கேட்கறீங்க”

 

 

“நல்லா நாலு சாத்து சாத்துங்க சார் அப்போ தான் வாயை திறப்பான். பாருங்க எப்படி வேலை பார்த்திட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி உட்கார்ந்திருக்கான்னு” என்றான்.

 

 

“பரணி நான் வெளிய இருக்கேன் நீயே விசாரி” என்றுவிட்டு பிரணவ் எழுந்து செல்ல “சார் நான் ஏதோ சொல்ல நீங்க வேற ஏன் சார் கோவிக்கறீங்க. நீங்க பேசுங்க சார்” என்றுவிட்டு பரணி அமைதியானான்.

 

 

“பரணி நிஜமா தான் சொல்றேன் நீங்க உங்க ஸ்டைல்ல விசாரிங்க” என்றுவிட்டு எழ “ஏய் என்ன என்னை பழிவாங்கறியா??” என்றான் கணேஷ்.

 

 

“இப்போ தான் நீ விஷயத்தை சொல்ல ஆரம்பிச்சிருக்க கணேஷ்” என்றவன் மீண்டும் இருக்கையில் அமர்ந்தான். “சொல்லு கணேஷ் என்னை பழிவாங்க தான் இதெல்லாம் செஞ்சியா”

 

 

“எனக்கு அது மட்டும் காரணமா தெரியலை. உன்னோட எண்ணம் என்ன?? என்ன நடந்திச்சு?? இதுல உங்கப்பா எங்க வந்தார்?? நீங்க தேடினது கிடைச்சுதா??” என்று மொத்த கேள்வியும் ஒன்றாக்கினான்.

 

 

கணேஷ் மீண்டும் அமைதியானான். ‘இவன் என்னை கோபப்படுத்தி உண்மையை வரவைக்கப் பார்க்கிறான் என்பது லேசாய் புரிய வாயை திறப்பேனா என்றிருந்தான்.

 

 

“அப்போ நீ பேச மாட்டே, நீ வாயை திறக்காம உங்கப்பனும் வாயை திறக்க மாட்டான். ஹ்ம்ம் என்ன செய்யலாம்” என்று யோசித்தவன் யோசிக்காமல் அவன் மனைவியை அழைத்தான்.

 

 

போனை ஸ்பீக்கரில் போட்டு “ஹலோ ரதிம்மா” என்றான் வேண்டுமென்றே கொஞ்சலாய்.

 

 

எதிரிலிருந்தவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்ததை அவனால் பார்க்க முடிந்தது. “சொல்லுங்க” என்றாள் அவள்.

 

 

“என்ன பண்ணுற?? அஜி எப்படியிருக்கான்?? உன் வயித்துக்குள்ள இருக்க குட்டி பொண்ணு எப்படியிருக்கா??” என்றான்.

 

 

“உங்களுக்கு இப்போ தான் எங்களை ஞாபகம் வருதா?? ரெண்டு நாள்ல வர்றேன்னு போனவர் ஒரு வாரம் ஆச்சு”

 

 

“என்னையும் உங்களோட கூட்டி போயிருக்கலாம்ல” என்றாள் மனோபாரதி.

 

 

“நான் கேஸ் விஷயமா போனது உனக்கு தெரியாதா??” என்றான்.

 

 

“என்னாச்சுங்க அந்த கேஸ், யாருன்னு தெரிஞ்சுதா?? எங்கப்பா அம்மாவை கொன்ன அந்த கொலைக்காரன் யாருங்க” என்றாள்.

 

 

“ஹ்ம்ம் தெரிஞ்சிடுச்சு… ஆனா அது தெரிஞ்சா நீ இன்னும் ஷாக் ஆகிடுவ” என்று சொல்லவும் கணேஷ் அந்த கைபேசியை தன் காலால் எட்டி உதைத்திருக்க அது தூரப்போய் விழுந்திருந்தது.

 

 

பரணி வேகமாய் வந்தவன் கணேஷை ஓங்கி அறைந்திருந்தான். “பரணி விட்டிரு” என்றான் பிரணவ்.

 

 

“என்னடா என்னை வெறுப்பேத்துறியா!! நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவளை நீ தட்டி பறிச்சுட்டு என்னை வெறுப்பேத்துறியாடா!!” என்று கத்தினான் கணேஷ்.

 

 

“உன்னை அவ என்னைக்கு விரும்பினா கணேஷ்”

 

 

“அவ என்னை தான் விரும்பியிருப்பா, நீ குறுக்க வராம இருந்திருந்தா!! எல்லாமே நீ செஞ்சிட்டு கடைசில நான் தான் குற்றவாளியா!!” என்று உரக்கக் கத்தினான் அவன்.

 

 

“ரதி மட்டும் காரணமில்லை, நானும் அதுக்கு முழு காரணமில்லை. பாதி தான் சொல்லியிருக்க கணேஷ் முழுசா சொல்லு” என்றான் பிரணவ்.

 

 

‘இவன் என்னை கோபப்படுத்தி பேச வைக்கிறான்’ என்று புரிந்தாலும் இப்போது அவனின் கோபம் உச்சத்தை தொட்டிருந்தது.

 

 

“ஆமாடா ஆமா அது மட்டும் காரணமில்லை. ரதியோட பேர்ல இருக்கற அந்த சொத்து, ரதி, ரதியை தட்டிப்பறிச்ச நீ எல்லாம்!! எல்லாம் தான் காரணம்!! என்னங்கற!! அதுக்கு இப்போ என்னங்கற!!”

 

 

“பரணி இவங்க அப்பாவை கூட்டிட்டு வாங்க” என்று பரணிக்கு சமிக்கை செய்ய அவன் சென்று அழைத்து வந்தான்.

 

 

“சொல்லுங்க சார், உங்க பையன் எல்லாம் சொல்லிட்டார். அதை செயல்படுத்தின நீங்க தான் சொல்லணும் என்ன பண்ணீங்க எப்படி பண்ணீங்கன்னு”

 

 

கணேஷின் அப்பா அவனை பார்க்க அவன் முகம் கோபத்தில் சிவந்திருந்ததை பார்த்ததும் புரிந்து போனது அவருக்கு மகன் ஏதோ உளறியிருக்கிறான் என்று.

 

 

“உங்க பையன் சொல்லலைன்னாலும் நீங்க தான் அப்படிங்கறதுக்கு என்கிட்ட எவிடென்ஸ் இருக்கு சார்”

 

 

“உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா!! நீங்க தேடிகிட்டு இருக்கற அந்த லேண்ட் டாக்குமென்ட் என்கிட்டே தான் இருக்கு” என்றான் அலட்டலே இல்லாமல்.

 

 

கணேஷும் அவன் தந்தை ஸ்ரீதரனும்ஒருவர் முகத்தை ஒருவர் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

“என்னடா அதிர்ச்சியா பார்க்கறீங்க ரெண்டு பேரும். பொண்ணு தான் கிடைக்கலை மண்ணாச்சும் கிடைக்கும்ன்னு வலை வீசி தேடி அதுவும் இல்லாம போயிடுச்சேன்னு இருக்கா”

 

 

“இல்லை டுப்ளிகேட் டாக்குமென்ட் ரெடி பண்ணி உங்களுக்கு நம்பகமானவர் ஒருத்தரை என் மனைவிகிட்ட கையெழுத்து வாங்க அனுப்பி வைச்சீங்களே அதுவும் போச்சுன்னு இருக்கா”

 

 

“இப்போ எப்படி இருக்கு ரெண்டு பேருக்கும்” என்று சொல்லி இருவரையும் நக்கலாய் பார்த்தான் பிரணவ்.

 

 

கணேஷிற்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. கடைசியில் எல்லாம் இவனால் பாழ் முதலில் இருந்தே இவனால் தான் எல்லாம் தடைப்பட்டு கொண்டிருந்தது.

 

 

கணேஷ் ஒரு மிகப்பெரிய பணக்காரனே. ஆனால் ஒரு கணமும் அவன் அதை வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை.

 

 

பிரணவிற்குமே அவனை அந்த பண்பிற்காய் தான் பிடித்து போனது. அவன் பணக்காரன் என்பது மட்டுமே பிரணவ் அப்போது அறிந்திருந்தான்.

 

 

எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரின் மகன் என்று அப்போது அவனுக்குமே தெரியாது.

 

கணேஷிற்கு அவன் தந்தையின் பின்னால் ஒளிந்துகொண்டு அவர் வழியை பின்பற்றி தொழிலை கவனிக்க எப்போதும் விருப்பமில்லை.

 

 

அவன் தந்தை தொழிலில் சற்று முன்னே பின்னே என்று இருப்பவர் என்பதை அவனறிவான். அப்படி இருந்ததால் தான் அவர் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவ முடிந்திருந்தது.

 

 

அவர் புறம் இருந்து பார்த்தால் அதெல்லாம் சரியென்று தோன்றினாலும் கணேஷிற்கு அதில் பெரிதாய் எந்த உடன்பாடும் இல்லாததாலும் அவன் பிசினெஸ் பார்க்க விரும்பாத காரணத்தாலும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

கணேஷிற்கு அம்மா இல்லை… அவன் பதின்பருவத்தில் அவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டிருந்தார். தந்தையும் மகனுமாய் தான் அந்த வீட்டில்.

 

 

ஸ்ரீதரனுக்கு தொழில் தான் எப்போதும் முதல் மனைவி. அவர் மனைவியை கூட அவர் அதிகம் கவனம் கொண்டு பார்க்காமல் விட்டிருந்தார்.

 

 

மனைவி இறந்த பின்னே தான் அவருக்கு இழப்பின் வேதனை புரிய மகனிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.

 

 

கணேஷிற்கு தந்தையின் தொழிலில் எப்போதும் பெரிதாய் நாட்டம் இருந்ததில்லை. அதனாலேயே தனக்கென்ன தனி அடையாளம் கொண்டு நல்ல வேலையிலும் அமர்ந்திருந்தான்.

 

 

இருவர் மட்டுமான வீட்டில் அவர்களின் அன்றாட பொழுதுகளை இருவரும் எப்போதும் பேசிக் கொள்வதுண்டு.

 

 

அதன் பொருட்டு எப்போதாவது தந்தைக்கு அவர் தொழிலில் அவன் அட்வைஸ் செய்வதுண்டு. முதலில் சாதரணமாய் அட்வைஸ் செய்ததில் ஆரம்பித்தது தான்.

 

 

அவன் ஆலோசனைகள் எல்லாம் பெரும்பாலும் அவன் தந்தைக்கு பெரிய அளவில் உதவி புரிந்ததாய் சொல்லி அவர் பாராட்ட அதுவே அவனுக்கு போதையேற்றி இருந்தது.

 

 

புகழ்ச்சிக்கு மயங்காதோர் அதிகமில்லையே!! அதிலிருந்து அவன் தந்தை மகனிடத்தில் கேட்பதும் கணேஷ் அவருக்கு ஆலோசனை சொல்வதும் தொடர்ந்தது. கணேஷுக்கும்அந்த விஷயத்தில் அப்படி ஒரு பெருமை.

 

 

தந்தையின் தொழிலில் நேரடியாய் பங்கு கொள்ளாமல் இப்படி மறைமுக உதவிகள் புரிய ஆரம்பித்திருந்த நேரம் தான் அவன் முதன் முதலாய் குமாரசாமியை சந்திக்க நேர்ந்தது.

அவர் மனோபாரதியின் தந்தை என்பதையறியாமலே தான் தந்தைக்கு ஆலோசனை வழங்கினான்.

 

 

சென்னையை அடுத்திருந்த திருமழிசையில் மனோவின் தந்தை சில மனைகளை மொத்தமாய் வாங்கியிருந்தார்.

 

 

எப்போதும் கைமாற்றி விடும் அவர் அந்த முறை ஊரில் இருந்த தன் சொத்துக்கள் சிலவற்றை வித்தும் மனைவியின் நகைகளை விற்றும் வங்கியில் கடன் வாங்கியும் அந்த இடத்தை வாங்கியிருந்தார்.

 

 

அந்த இடத்தில் ஒரு கமெர்ஷியல் பில்டிங் மற்றும் தொழில் சார்ந்த நிறுவனங்கள் வருவதற்காக சாத்தியகூறுகள் அதிகமிருந்ததாலேயே அவர் தன்னையும் மீறி ரிஸ்க் எடுத்திருந்தார்.

 

 

அவர் எண்ணியது போலவே அந்த இடமும் நல்ல விலைக்கு தான் போனது. அங்கிருந்த மொத்த மனையையும் எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன் மொத்தமாய் வாங்க அவரிடம் பேசியது.

 

 

அவர் சொன்ன விலை அவர்களுக்கு அதிகப்படியாய் தோன்றியது. அவர்களுக்கு தெரியாது அது அவர் சொந்தமாய் வாங்கிய இடமென்று.

 

 

இவர் இடைத்தரகர் தானே விற்பவரிடம் நேரிடையாய் பேசிக்கொள்வோம் விலை சற்று படியும் என்று எண்ணினர் அவர்.

 

 

அதை பற்றிய விஷயங்களை தந்தையும் மகனும் பேச்சுவாக்கில் ஆலோசனை செய்ய கணேஷ் தன் நண்பன் ஒருவனின் மூலம் சரவணனை வைத்து குமாரசாமியிடம் அந்த இடத்தை சற்று குறைவான விலைக்கு பேசி முடித்தனர்.

 

 

குமாரசாமி எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன் பற்றி அறிவார். அதனாலேயே முதலில் அவர்கள் கேட்டதிற்கு விலையை சற்று அதிகமாய் கூறியிருந்தவர், தற்போது தான் வளர்ந்து கொண்டிருக்கும் சரவணன் கேட்ட போது அவருக்கு படிந்த விலையில் சற்று குறைவான விலையை நிர்ணயம் செய்திருந்தார்.

 

 

தொழிலில் முன் பின் இருப்பது தானே அதை தான் அவரும் செய்தார். இதில் அவர் உண்மையிலேயே அறியாத விஷயம் என்னவென்றால் சரவணனை வைத்து எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன் தான் அந்த இடத்தை விலை பேசியிருக்கிறது என்பது.

 

 

கிட்டத்தட்ட ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் முடிந்து இடமும் கை மாறியிருந்த நேரம் அது.

 

 

எல்லாம் முடிந்து அவர் வங்கியில் வாங்கிய கடன் எல்லாம் அடைத்தது போக மற்றவற்றை மகளின் பெயரில் டெபாசிட் செய்ய எண்ணியிருந்தார்.

 

 

அந்நேரம்அதே பகுதில் அவர் விற்ற மனைக்கு அடுத்த மனையும் விலைக்கு வந்திருந்தது.

 

 

எதுவோ மனதில் தோன்ற அந்த இடத்தை மகளுக்கு சீராக்க விரும்பி அவள் பெயரிலேயே மனையை பதிவு செய்தார்.

 

 

இதெல்லாம் நடந்து ஓரிரு நாள் கழித்து தான் அவர்முதலில்விற்ற மனையை வாங்கியிருப்பது எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன் என்பதை அவர் அறிந்தார்.

 

 

அந்த இடத்தில் அவர்களின் பெயரை தாங்கிய பலகையை கண்டதும் தான்அவருக்கு ஏமாற்றப்பட்ட உணர்வு லேசாய் எழுந்திருந்தது.

 

 

அவர்களை நேரிலேயே பார்த்து கேட்டுவிடுவதென அங்கு சென்று கணேஷின் தந்தையை பார்க்க நினைத்தார்…

 

 

அதற்கு முன் கணேஷின் தந்தை அவரை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் உருவாகியிருந்தது.

 

____________________

 

திருமழிசையில் கணேஷின் தந்தை வாங்கிய இடத்தில் கமெர்ஷியல் பில்டிங் கட்டுவதற்கு ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்க அவருக்கு அருகிருந்த காலி மனை கண்ணை உறுத்தியது.

 

 

அந்த இடத்தை வாங்கிசர்வீஸ் அபார்ட்மெண்ட் போன்று கட்டினால் நன்றாக இருக்குமென்பது அவர் உத்தேசமாயிருக்க அந்த இடத்தை வாங்குவதற்கு முயற்சி செய்யும் போது தான் அது குமாரசாமி அவர் மகளின் பெயரில் பதிந்திருப்பதை அறிந்தார்.

 

 

அதை மீண்டும் சரவணனை வைத்தே அவர் கேட்க முயல குமாரசாமி சரவணனை நன்றாக திட்டி திருப்பி அனுப்பிவிட்டார்.

 

 

சரவணன் அந்த இடத்தை மீண்டும் எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷனுக்காக தான் கேட்கிறான் என்பதை உணர்ந்தே தான் அவனை திருப்பி அனுப்பியிருந்தார்.

 

 

தான் ஒன்று கேட்டு அது கிடைக்காமல் போவதா என்று வானத்திற்கும் பூமிக்குமாய் குதித்தார் கணேஷின் தந்தை. அவர் குணமே அப்படித்தான் அவர் வேண்டிய ஒன்றை அடையாமல் அவர் விட்டதில்லை.

 

 

அதற்கு என்ன வழி என்று ஆராய்ந்த போது தான் மகனிடம் ஆலோசனை கேட்க அவன் குமாரசாமியை கூப்பிட்டு முதலில் பேசிப் பார்க்குமாறு கூறினான்.

 

அவரை கூப்பிட்டு பேச குமாரசாமியை தன் இடத்திற்கு அழைத்திருந்தார் கணேஷின் தந்தை.

 

 

அந்த கட்டிடத்தின் உள்ளே நுழைந்த குமாரசாமி தான் வந்த விஷயத்தை கூற உடனே அவரை உள்ளே அனுமதித்தினர்.

 

 

“வாங்க குமாரசாமி… உள்ள வாங்க…” என்றுஅழைத்து அவரை எதிரில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னார் கணேஷின் தந்தை.

 

 

“என்ன விஷயம்??” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் குமாரசாமி.

 

 

“எல்லாம் அந்த லேண்ட் பத்தி தான்!! சரவணன் வந்து உங்ககிட்ட பேசி இருப்பானே!! உங்களோட நோக்கம் எப்படின்னு சொல்லுங்க, நீங்க எதிர்பார்க்கறதை விட அதிகமாவே முடிச்சிறலாம்” என்று அவரும் நேரடியாக பேரத்திற்கு வந்திருந்தார்.

 

 

“மன்னிக்கணும் அந்த இடத்தை நான் யாருக்கும் கொடுக்கறதா இல்லை. அது என் பொண்ணுக்கு சீதனமா கொடுக்க முடிவு பண்ணியிருக்கேன்” என்று சொல்லி இடைநிறுத்தினார்.

 

 

பின்னர்“அப்போ என்னை ஏமாத்தி சரவணன் மூலமா அந்த லேண்ட் வாங்கினது நீங்க தான் இல்லையா!!” என்று குமாரசாமி கேட்க ஆம் என்பதாய் தலையசைத்தார் ஸ்ரீதரன்.

 

 

“உங்களை ஏமாத்தி வாங்கணும்ங்கறது எங்க எண்ணமில்லை!! நீங்க தான் இடத்தோட ஓனர்ன்னு எங்களுக்கு முதல்ல தெரியாது”

 

 

“நீங்க கைமாத்தி தானே விடறீங்க, நேரா ஓனர்கிட்ட பேசிக்கலாமேன்னு நினைச்சு தான் என் பையனுக்கு தெரிஞ்சவர் மூலமா சரவணனை விட்டு பேசச் சொன்னோம்”

 

 

“நாங்க நினைச்ச மாதிரி நீங்க கம்மி விலைக்கு கொடுத்தீங்க. நாங்க வாங்கிட்டோம், பிசினெஸ்ல இதெல்லாம் சகஜம் தானே!!”

 

 

“எங்க லாபத்தை தானே நாங்க பார்ப்போம்!!” என்று அவர் சேர்த்து சொல்ல குமாரசாமிக்கு கோபம் சுருசுருவென்று வந்தது.

 

 

“உங்களுக்கு மட்டும் தான் பிசினெஸ்ன்னா அப்போ நாங்கலாம் என்ன பண்றோம்… ஒருத்தரை ஏமாத்தி பிழைக்கறதுக்கு பேரு தான் பிசினெஸா” என்று பட்டென்று கேட்டார் குமாரசாமி.

 

 

“ஹலோ என்ன வார்த்தை ரொம்ப நீளுது!! எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா!!” என்றார் ஸ்ரீதரன் குரலுயர்த்தி.

 

 

“நல்லா தெரியுது!! ஏமாத்தி அடுத்தவன் சொத்தை பிடுங்கறவன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்னு நல்லா தெரியுது!!” என்று பதில் கொடுத்தார் குமாரசாமியும்.

 

 

“வெளிய போடா!! என் இடத்துல வந்து என்னையே எதிர்த்து பேசறியா!!” என்ற ஸ்ரீதரன் தன் நிதானத்தை விட்டு கத்த ஆரம்பித்தார்.

 

 

உள்ளே பேசிய சத்தம் வெளியே இருப்பவர்களுக்கும் கேட்டதோ என்னவோ ஓரிருவர் எட்டிப்பார்த்து சென்றது போல் இருந்தது.

 

 

“நீ என்ன என்னை வெளிய போன்னு சொல்றது. நானே கிளம்பத் தான் போறேன். உன் இடத்துக்கு நானா ஒண்ணும் வரலை…”

 

 

“நீயா தான் பேச என்னை கூப்பிட்டு விட்டிருந்த… அதை முதல்ல ஞாபகம் வை” என்று அமைதியாகவே மொழிந்து விட்டு குமாரசாமி வெளியேறினார்.

 

 

“போடா அந்த இடத்தை எப்படி வாங்கணும்ன்னு எனக்கு தெரியும்” என்று ஸ்ரீதரனும் சவால் விடுவது போல பேச குமாரசாமி வெளியே செல்லும் முன் நின்று ஒரு முறை அவரை திரும்பி பார்த்து பின் வெளியேறினார்.

 

 

அன்று இரவே மகனிடம் இதைப்பற்றி பேச சற்று நேரம் சிந்தனை வயப்பட்டவன் பின் “ஏன்ப்பா அவர்பேமிலி பத்தி கொஞ்சம் விசாரிங்க…”

 

 

“அவர் அந்த இடத்தை அவர் பொண்ணுக்கு தானே சீதனமா கொடுக்க போறார்… அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளையை நம்மாளுல ஒருத்தனா பார்த்திடுவோமே” என்று சுலபமாய் ஒரு வழி கூற ஸ்ரீதரன் அகமகிழ்ந்து போனார்.

 

 

பின்னே குமாரசாமியிடம் சவால் வேறு விட்டிருக்கிறாரே, இடத்தை வாங்கிக் காட்டுகிறேன் என்று. இப்படி ஒரு வழியை அவர் யோசிக்கவே இல்லை.

 

 

உடனே வேலையில் இறங்கிவிட்டார் அவர். மறுநாளேகுமாரசாமி பற்றிய தகவல்கள் அவருக்கு வந்து சேர மகனுக்கு ஈமெயிலில் விபரம் அனுப்பிவிட்டு அவன் கைபேசிக்கு அழைத்தார்.

 

 

“ஷ்யாம் அப்பா பேசறேன், இப்போ ப்ரீயா இருக்கியாப்பா?? பேசலாமா??” என்றார்.

 

 

“அப்பா நான் ஒரு கிளையன்ட் மீட்டிங் ப்ரெசென்ட்டேஷன் ரெடி பண்ணிட்டு இருக்கேன். வேலை முடிச்சிட்டு நானே கூப்பிடுறேன்” என்று வைத்தவன் வேலை முடிந்ததும் தந்தைக்கு அழைத்து பேசினான்.

 

 

அவர்பைல் அனுப்பிய விபரத்தை பற்றி சொல்லிவிட்டு “அந்த பொண்ணு கூட உன்னோட ஆபீஸ்ல தான் ஷ்யாம் வேலை பார்க்குது போல… நீயே என்ன ஏதுன்னு பாரேன்” என்று சொல்லிவிட்டு அவர் வைக்க கணேஷிற்கு பரபரவென்றிருந்தது.

 

 

‘ஒரு வேளை அப்பெண் பாரதியாக இருப்பாளோ’ என்று… இதயம் லேசாய் படபடவென அடித்துக் கொள்ள அவன் பர்சனல் மெயிலை திறந்து பார்த்தான்.

 

 

அந்த கோப்பை திறந்து ஸ்க்ரோல் செய்து அவசரமாய் பார்க்க அப்பெண் மனோபாரதி என்றறிந்ததும் தான் எப்படி உணர்கிறோம் என்று அறியாமல் ஓரிரு நிமிடம் செல்ல அடுத்த நிமிடம் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

 

 

பின்னேஓரிரு நாள் முன்னர் தானே அவளிடம் நேரடியாய் காதலை சொல்ல முயற்சி செய்ததும் இடையில் பிரணவ் வந்ததும் அதன் பின் பிரணவ் அவனிடத்தில் பேசியதும் எல்லாம் நடந்து முடிந்திருந்தது.

 

 

‘பாரதியோட அப்பாக்கு ஓகேன்னா பாரதி என்னை கல்யாணம் பண்ணிப்பா தானே’ என்ற எண்ணம் இப்போது கணேஷிற்கு வந்தது.

 

 

மனதிற்குள் சிறு கணக்கை போட்டு முடித்திருந்தவன் தந்தையை அழைத்து பேசினான். அவருக்கு மகனின் விருப்பத்தில் துளியும் மகிழ்ச்சியில்லை என்ற போதும் அவன் விருப்பத்திற்காய் அமைதியாய் இருந்தார்.

 

 

“அப்பா இன்னைக்கு ஈவினிங் நானே அவரை நேர்ல போய் பார்க்கறேன்ப்பா… பார்த்து பேசிட்டு நல்ல முடிவோட வர்றேன்” என்று சொல்ல “அவங்க நம்ம லெவல்க்கு வரமாட்டாங்க ஷ்யாம்”

 

 

“ஆனாலும் உன் விருப்பத்துக்கு நான் எப்பவும் தடையா இருந்ததில்லை, அதனால உன்னிஷ்டம். குமாரசாமிக்கிட்ட ரொம்பவும் எல்லாம் பணிஞ்சு போய் பேச வேணாம்”

 

 

“அவன் முடியாதுன்னு சொன்னா என்கிட்ட சொல்லு… அந்த பொண்ணை தூக்கிட்டு வந்திடலாம்…” என்றார் அவன் தந்தையை போல் பேசாமல் அடியாளை போல்.

கணேஷ் அவர் பேசியதெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. அவனின் எண்ணம் முழுதும் இப்போது பாரதியே ஆக்கிரமித்திருந்தாள்.

 

 

அலுவலகத்தில்அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு அவன் முடிக்க வேண்டிய வேலைகளை பிரணவிடம் ஒப்படைத்துவிட்டு அவனிடம் கூட தான் எங்கு செல்லப் போகிறோம் என்று சொல்லாமல் கிளம்பிவிட்டான்.

 

 

விருகம்பாக்கத்தில் அமைந்திருந்த குமாரசாமியின் அலுவலகத்திற்கு அவன் சென்று சேரும் போது மணி மாலை நான்காகியிருந்தது.

 

 

குமாரசாமி சிறிய அளவிலேயே அவர் அலுவலகத்தை வைத்திருந்தார். அவரைத் தவிர மேலும் இருவர் மட்டுமே அங்கு பணியில்.

 

 

இவன் வந்த நேரத்தில் அவர் மட்டுமேயாக அங்கிருந்தார். உள்ளே நுழைந்தவனை யோசனையாய் ஏறிட்டார் அவர்.

 

 

“நீங்க??” என்று அவர் கேள்வியாய் நோக்கவும் “ஷ்யாம்… ஷ்யாம் கணேஷ்” என்று தன் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டவன் “உட்காரலாமா அங்கிள்” என்று உரிமையாய் கேட்கவும் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டி வைத்தார் அவர்.

 

 

“தேங்க்ஸ் அங்கிள்”

 

 

“என்னை உங்களுக்கு தெரிஞ்சிருக்காது, மே பீ எங்கப்பாவை உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்…” என்று சொல்லி நிறுத்தினான்.

 

 

குமாரசாமியோ இன்னமும் அவனை அளவிடுவது போலவே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

“எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஸ்ரீதரனோட பையன்…” என்றதும்குமாரசாமி சற்றே நிமிர்ந்து அமர்ந்திருந்தார்.

 

 

“அதான் உங்கப்பாகிட்டயே சொல்லிட்டனே அந்த இடத்தை தரமுடியாதுன்னு… இப்போ உங்களைவிட்டு பேசச் சொல்லி அனுப்பி இருக்காரா அவர்” என்றவரை பார்த்து மெதுவாய் புன்னகைத்தான்.

 

 

“நான் அந்த விஷயத்தை பத்தி பேசவே வரலை அங்கிள். ஆனா அந்த விஷயத்துக்காக ரொம்ப சாரி அங்கிள்… அப்பா உங்ககிட்ட நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு தான்”

 

 

“நீங்க முடியாதுன்னு சொல்லியும் அப்பா கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டார்… மன்னிச்சுடுங்க அங்கிள்” என்றவனின் பேச்சில் அப்படியொரு அடக்கம் இருந்தது.

 

 

குமாரசாமியின் எண்ணமெல்லாம் ‘இவன் பேச்சு தேன் தடவியது போல தான் இருக்கிறது, ஆனால் இது கத்தியில் தடவிய தேன் போல இருக்கிறதே’ என்று தான் தோன்றியது அவருக்கு.

 

 

என்ன இருந்தாலும் தந்தையின் குணம் கொஞ்சமாவது மகனுக்கு இருக்கும் தானே என்பது அவரின் எண்ணம்.

அவரின் எண்ணம் உண்மை என்பதை கணேஷுமேஉணர்ந்திருக்கவில்லை. குமாரசாமியும் அதை உணரும் முன்பே உலகை விட்டு நீங்கியிருந்தார்.

 

 

“நான் வேற ஒரு விஷயம் பேசத்தான் இப்போ வந்தேன். பேசலாமா அங்கிள்!! நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை!!” என்று தயக்கமாய் ஆரம்பித்தான்.

 

 

“சொல்லுங்க… நீங்க அந்த லேண்ட் பத்தி கேட்க வரலைன்னு தெரியுது… வேற என்ன விஷயம்ன்னு நீங்க சொன்னா தானே எனக்கு தெரியும்” என்று குமாரசாமியும் ஊக்க தான் வந்த விஷயத்தை ஆரம்பித்தான் அவன்.

 

 

“உங்க பொண்ணும் நானும் ஒண்ணா தான் வேலை செய்யறோம்” என்றதும்“என்ன?? இருக்காதே அவ வேலை பார்க்கறது ஒரு ஐடி கம்பெனில உங்க கம்பெனில இல்லையே!!”

 

 

“அங்கிள் நான் எங்க அப்பாவோட கம்பெனில இல்லை… நானும் ஐடில தான் இருக்கேன்… உங்க பொண்ணு எனக்கு கீழ தான் வேலை பார்க்கறாங்க”

 

 

“நான் அவங்களோட ப்ராஜெக்ட் ஹெட்” என்றான். குமாரசாமியோ இவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்ற ரீதியில் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“நான் என்ன சொல்லப் போறேனோன்னு யோசிக்கறீங்களா அங்கிள்… நானா நேரடியாவே விஷயத்துக்கு வந்திடறேன், எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள்”

 

 

“அவங்களை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா!!” என்றுகேட்டேவிட்டான்.

 

 

குமாரசாமிக்கு சற்று திகைப்பு தான் அவர் மனம் ஒரு கணம் குளிர்ந்து போனாலும், ஏனோ அவருக்கு இதையெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய மனமில்லை.

 

 

“என் பொண்ணுக்கு….” என்று அவர் வேண்டுமென்றே இழுத்தார். அவருக்கு தெரியும் மனோ அப்படி யாரிடமும் வீழ்ந்திருக்க மாட்டாள் என்று ஆனாலும் கேட்டார் அவனிடம்.

 

 

“இல்லை அங்கிள், பாரதி என்னை விரும்பலை. நான் தான் அவங்களை விரும்பறேன்”

 

 

“ஒரு தப்பான டைம்ல என்னோட விருப்பத்தை அவங்ககிட்ட சொல்லிட்டேன். தப்பு தான் அங்கிள் ஆனா அன்னைக்கு அவங்ககிட்ட நேரா சொல்ல ஒரு தயக்கம் அதான்…” என்றவன் அன்றைய நிகழ்வை கூற குமாரசாமிக்கு லேசாய் புரிந்தது.

 

 

அதனால் தான் மகள் அன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிட்டாளா!! நல்ல வேளை அந்த புண்ணியவான் உடன் வந்து விட்டுச் சென்றான் என்று பிரணவை பற்றி அவர் எண்ணி முடிக்கவில்லை கணேஷும் பிரணவ் பற்றிய பேச்சை எடுத்திருந்தான்.

 

 

“அப்புறம் பிரணவ் தான் உங்க பொண்ணுக்கிட்ட கேட்டிருப்பான் போல. அவங்க அப்பா பார்க்கிற பையனை தான் கட்டுக்குவேன்னு சொல்லிட்டாங்களாம்”

 

 

“நான் மறுநாளே உங்க பொண்ணுக்கிட்ட சாரி கேட்டுட்டேன்… ஆனாலும் அவங்களை என்னால மறக்கவே முடியலை அங்கிள்”

 

 

“எனக்கு அம்மா கிடையாது… அம்மாக்கு பிறகு எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருந்துதுன்னா அது உங்க பொண்ணு தான் அங்கிள்”

 

 

“நான் உங்களை கட்டாயப்படுத்தலை… நீங்க பொறுமையா யோசிச்சு வீட்டுலயும் பேசிட்டு சொல்லுங்க…”

 

 

“எங்கப்பாவை வைச்சு எந்த முடிவும் எடுக்காதீங்க அங்கிள் ப்ளீஸ். அப்புறம் நான் அன்னைக்கு தண்ணி அடிச்சேன்னு நீங்க என்னை குடிக்காரன்னு நினைக்க வேண்டாம்”

 

“அது தான் நான் முதல் முறையா செஞ்ச தப்பு அங்கிள்…” என்றான்.

 

 

குமாரசாமியோ அவன் பேசியதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டார். அவனுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ எதையும் அவர் சொல்லவில்லை.

 

 

ஆனால் ஏனோ அவர் மனம் பிரணவுடன் அவனை ஒப்பிட்டு பார்த்தது. கணேஷ் மனதில் இருந்து தான் எல்லாம் பேசுபவன் போல் அவருக்கு தோன்றவில்லை.

 

 

இத்தனை வருடமாக தொழில் பார்ப்பவராயிற்றே, ஒருவரை எடை போடும் அளவுக்கு அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

 

 

தான் ஏன் கணேஷை பிரணவுடன் ஒப்பிடுகிறோம் என்று தோன்றவில்லை அவருக்கு, ஆனாலும் அதை செய்தார்.

 

 

தன்னிடம் போன் செய்து பேசி அனுமதி வாங்கி தன் மகளை அவன் கூட்டி வந்ததாகட்டும், மகள் அவ்வளவு பேசியும் அதை எல்லாம் பெரிது படுத்தாமல் அவளுக்கு உதவி புரிந்ததாகட்டும் எல்லாம் அவர் எண்ணத்தில் வந்து போனது.

 

 

பிரணவிடம் இயல்பாய் தெரிந்த அந்த நேர்மை கணேஷிடம் முயன்று வரவைத்ததாய் தெரிந்தது….

Advertisement