Advertisement

அத்தியாயம் –32

 

 

பிரணவ் கிளம்பிச் சென்றதில் இருந்தே மனோவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.

 

 

கண்டுப்பிடிக்கச் சொன்னானே என்று எண்ணியவளின் எண்ணம் முழுதும் அவனை முதல் நாள் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பித்திருந்தது.

 

 

அன்று தான் அவனிடம் நடந்துக் கொண்ட முட்டாள்த்தனத்தை நினைக்கும் போது இன்று அது அவளுக்கு அதிகப்படியாய் தோன்றியது.

 

 

அவனை பற்றிய ஆராய்ச்சியில் அவள் தன்னைக் கண்டுகொள்ளும் படியானது. ஆம்அவனிடம் மட்டுமே உரிமை கொண்டு பேசும் தன் மனம் அதுநாள் வரை அவள் உணரவேயில்லை.

 

 

அன்று மட்டுமல்ல அவள் அவனிடத்தில் சொன்னது போல எல்லா சந்தர்ப்பத்திலும் அவள் அவனிடம் சென்று தான் நின்றிருக்கிறாள்.

 

 

இயற்கையாய் ஓரிரு சந்தர்பங்கள் அமைந்திருந்தாலும் தான் அவனை திட்டிக்கொண்டேனும் அவனுதவியை நாடியிருக்கிறோம், அவன் அருகாமையை விரும்பியிருக்கிறோம் என்பது இப்போது யோசிக்கும் போது அவளுக்கு புரிந்தது.

ஒரு வேளை தன்னை குறித்து பிரணவ் சொன்னது தான் உண்மையோ!! என் மனம் எங்களின் திருமணத்திற்கு முன்பிருந்தே அவனை விரும்பியதோ!! என்றுஎண்ணியதுமே புது ரத்தம் வேகமாய் பாய்ந்து முகத்தை சிவக்கச் செய்திருந்ததை அவள் உணர்ந்திருந்தாள்.

 

 

மனம் அடித்துச் சொன்னது நீ அவனை தான் விரும்பியிருக்கிறாய் என்று.

 

 

ஆனால் தனக்கு ஏன் அப்போது இது புரியவில்லை என்பதை யோசித்தாள். அவன் மேல் கோபம் போல் காட்டியது எல்லாம் தன் மேலே தனக்கு இல்லாத நம்பிக்கை தான் என்பதை இப்போது அவளால் உணர முடிந்தது.

 

 

அவனை பற்றிய ஆராய்ச்சியில் தன்னை உணர்ந்தவளுக்கு உடனே அவனை பார்க்க வேண்டும் போல் தோன்றியது.

 

 

பிரணவ் ஊருக்கு சென்றிருந்த போதும் மனோவால் முகுந்தனின் வீட்டிற்கு சென்று தங்க முடியவில்லை. அவளின் வீட்டில் அவனை பற்றிய நினைவில் இருப்பதே அவளுக்கு பிடித்திருந்தது.

 

 

அபிராமியும் அவளை வற்புறுத்தவில்லை, ஆனால் அபராஜித்தை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் அவர்.

 

அவளுக்கு நேரம் தவறாமல் உணவு, பழச்சாறு என்று அவ்வப்போது கொடுத்து விடுவார் அவர். வீட்டில் குழந்தையும் இல்லை கணவனும் இல்லை தனிமை அவளை அதிகம் யோசிக்கச் செய்தது.

 

 

அப்படி யோசனையில் தான் மனோவிற்கு அவள் தந்தையுடன் கடைசியாக பேசிய பேச்சு ஞாபகத்திற்கு வந்தது.

 

 

அவள் தந்தை அவளுக்காய் பார்த்த மாப்பிள்ளை யாராய் இருப்பார் என்ற யோசனையை அது கொடுத்தது. முன்பு தான் சரவணன் தான் மாப்பிள்ளையாய் இருப்பார் என்று எண்ணியிருந்தோம்.

 

 

சரவணனை தன் தந்தை தனக்காய் யோசித்திருக்க மாட்டார் என்று அன்று புரியாதது இன்று புரிந்தது அவளுக்கு.

 

 

சட்டென்று மூளையில் ஒரு மின்னல் வெட்டியது அவளுக்கு.‘அது… அது ஏன் பிரணவாய் இருக்கக்கூடாது’என்று எண்ணவும் ஒரு குதூகலம் தோன்றியது மனதிற்குள்.

 

 

‘ஆனால் எப்படி… எப்படி… அப்பாவிற்கு அது தோன்றியிருக்கும், ச்சே இருக்காது’ என்று முதலில் தோன்றிய எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னையுமறியால் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.

 

பிரணவை தன் தந்தை நேரில் பார்த்திருந்தார், அதை தவிர்த்து பிரணவிடம் தான் நடந்துக் கொண்ட முட்டாள்த்தனத்திற்காய் தன்னை கடிந்து கொண்டதும் ஞாபகத்திற்கு வந்தது.

 

 

பிரணவிற்கு இஷ்ட தெய்வம் முருகன் என்பதை அவளறிவாள்.அவளுக்கு அவளின் தந்தை பார்த்த மாப்பிள்ளை பிரணவாய் தான் இருப்பான் என்று இப்போதுஉறுதியாகவே தோன்ற ஆரம்பித்தது.

 

 

மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி ஊற்று பீரிட்டு எழுந்தது அவளுக்கு. ஒரு வேளை அதனால் தான் பிரணவ் என்னை விரும்பியிருப்பானோ!!

 

 

‘ச்சே இதற்காக எல்லாம் ஒருவனால் விரும்பிவிட முடியுமா என்ன!!’ என்று அந்த எண்ணத்தை விடுத்தாள் அவள்.

 

 

தன் தந்தை சொன்னதிற்காய் எல்லாம் இல்லாமல் அவனுக்கே என்னை பிடித்திருந்தால்!! அப்படிஎண்ணிப்பார்க்க அவளுக்கே அதிகமாய் தான் தோன்றியது.

 

 

ஏனெனில் அவள் அவனிடம் நடந்து கொண்ட முறை அது போலவாயிற்றே!! அதுதான் எப்படி எண்ணினாள். கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. அவன் தன்னை விரும்பியிருப்பான் என்பதை சட்டென்று அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

தான் அவனை அவ்வளவு பேசியிருக்கிறோம் என்பதால் தான் அவள் எண்ணம் அப்படி யோசித்தது.

 

 

எப்போல இருந்து பிடிக்க ஆரம்பிச்சிருக்கும் என்று மேலும் யோசிக்க யோசிக்க லேசாய் தலைவலியே ஆரம்பித்துவிட்டது அவளுக்கு.

 

 

இன்றைக்கு இவ்வளவு யோசனை போதும் என்று அவளே அவளுக்கு சொல்லிக்கொண்டு பிரணவின் கைபேசிக்கு அழைத்தாள் அவனிடம் பேச விருப்பம் கொண்டு.

 

 

அவன் முக்கிய வேலையில் இருந்ததினால் போனை எடுக்காமலே போனான். ‘அப்படி என்ன வேலையாம் இவருக்கு என்கிட்ட பேசுறதை விட’ என்று மனதிற்குள்ளாக அவனை திட்டிக்கொண்டாள்.

 

 

பிரணவின் அன்னைக்கு அழைத்து பேச வேண்டும், தான் கருவுற்ற விஷயம் அவருக்கு சொல்லாமலே விட்டது ஞாபகத்திற்கு வர மாலதிக்கு அழைத்தாள்.

 

 

முதல் அழைப்பில் ஒரே ரிங்கிலேயே போனை எடுத்தவர் “இப்போ தான் உனக்கு என் ஞாபகம் வந்திச்சா” என்றார்.

 

 

“எனக்கு ஞாபகமிருக்கு அத்தை நீங்க தான் என்னை மறந்திட்டீங்க” என்று அவரை திருப்பினாள் அவள்.

“நைசா பிளேட்டை திருப்பி போடுறியா நீ??” என்றார் அவர்.

 

 

“ஹா ஹா அதெல்லாம் இல்லை அத்தை” என்றாள்.

 

 

“அவன் இன்னும் கோவமா இருக்கானா” என்றார்.

 

 

“உங்கபிள்ளை தானே உங்க கோபத்துல கொஞ்சம் இருக்கக்கூடாதா என்ன” என்றாள் அவள் பதிலுக்கு.

 

 

“நான் பண்ணது தப்பு தான் ஆனா என் பிள்ளையை நினைச்சு தானேம்மா அப்படி செஞ்சேன். போன்ல எங்ககிட்ட பேசக் கூட அவனுக்கு பிடிக்கலை” என்றார் மாலதி இப்போது வருத்தமாய்.

 

____________________

 

 

மனோ மருத்துவமனையில் இருந்து வந்த அன்று இரவு அவள் உறங்கிய பின் அவள் கைபேசி அழைக்க பிரணவ் எங்கே சத்தம் கேட்டு அஜியும் மனோவும் எழுந்துவிடப் போகிறார்கள் என்று எண்ணி யாரென்று கூட பார்க்காமல் பொத்தானை அழுத்தி காதில் வைத்தான்.

 

 

“ஹலோ”

 

 

“ஹலோ”

“ஹலோ… ஹலோ…” என்று அவன் நான்காம் முறை அழைக்கவும் தான் மாலதிக்கு தன்னுணர்வு வந்தது.

 

 

நீண்ட நாளைக்கு பின்னான மகனின் குரல், இப்போது தான் கேட்கிறார். மனோவின் கைபேசி பிரணவிடம் என்றால் பிரணவ் வந்திருக்கிறானா!! என்று எண்ணி உள்ளம் பரபரத்தது அவருக்கு.

 

 

“ஹலோ” என்று அவர் மறுமொழி கொடுத்ததுமே பிரணவுக்கு புரிந்து போனது அழைத்தது அவன் அன்னை என்று.

 

 

அதை உறுதிப்படுத்த காதில் இருந்த கைபேசியை எடுத்து திரையில் ஒளிர்ந்த எழுத்துக்களை பார்த்தான். அத்தை என்று மனோ பதிந்து வைத்திருந்ததை அதுஉறுதிப்படுத்தியது.

 

 

பிரணவ் இப்போது ஒன்றும் பேசவில்லை. எதிர்முனையோ“பிரணவ் நீ எப்போப்பா வந்தே??” என்றார்.

 

 

அவனோ பதில் பேசுவேனா என்பது போல் அமைதியாய் இருந்தான். “உனக்கு என் மேல என்ன கோபம் பிரணவ், பார்க்கப்போனா நாங்க தானே கோபமா இருக்கணும்”

 

 

“எங்க கோபம் கூட ஒண்ணுமேயில்லைன்னு உன் பொண்டாட்டி புரிய வைச்சுட்டா!! உனக்கு என்னப்பா கோபம் ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்கே. நீ எங்க மேல கோபப்படுறதுல என்ன நியாயம்??” என்றார்.

 

 

“ஹோ நான் எதுக்கு கோபமா இருக்கேன்னு உங்களுக்கு தெரியலை அப்படி தானே!! உங்க கோபத்தில நியாயம் இருந்துச்சு எப்போ வரைன்னு தெரியுமா!!” என்று நிறுத்தினான்.

 

 

மாலதி இவன் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்டிருந்தார் எதிர்முனையில். “நீங்க என்னை உளவு பார்க்க ஆரம்பிக்கற வரை” என்றான்.

 

 

“ஏன் பிரணவ் உன்னை பத்தி தெரிஞ்சுக்க நினைச்சது தப்புன்னு சொல்றியா” என்றார்.

 

 

“என்னைப்பத்தி தெரிஞ்சுக்க நினைச்சதுல தப்பில்லை.அது என்கிட்ட கேட்டிருந்தா, அட்லீஸ்ட் என்னை சுத்தி உள்ளவங்ககிட்ட கேட்டிருந்தா கூட ஓகே தான்”

 

 

“அந்த பொண்ணு இந்துகிட்ட சொல்லி என்னை நீங்க வேவு பார்த்தது எந்தவிதத்துல சரின்னு நீங்க சொல்ல வர்றீங்க. உங்களுக்கு அதெல்லாம் சரின்னு தோணலாம். எனக்கு தோணலை”

 

 

“என்மனசுக்கு இன்னும் எதுவும் ஒப்பலை. அதுவா மாறுற வரைக்கும் என்னால இயல்பா உங்ககிட்ட பேச முடியாது”

 

“நான் அப்பாவை வந்து பார்க்கலைன்னு நீங்க சொன்னீங்களாமே!! உங்களுக்கு என்ன தெரியும் என்னை பத்தி எப்பவும் போல என்னை புரிஞ்சுக்காமலே இருக்கறீங்க”

 

 

“அவரை நான் வந்து பார்க்காம இருந்திருக்கலாம். அவரை பத்தி தெரியாம எல்லாம் நானில்லை” என்றான்.

 

 

“அப்போ நீயும் வேவு பார்த்தியா” என்றார் மாலதி ஒரு மாதிரி குரலில்.

 

 

“எனக்கு அந்த பழக்கம் இல்லை. அப்பாவை பத்தி நான் ஹேமாக்காகிட்ட தான் எப்பவும் விசாரிக்கறது, சந்தேகமா இருந்தா அக்காகிட்ட கேட்டுக்கோங்க” என்றான்.

 

 

“அப்போ நீ பேசமாட்டியா!! எங்களை வந்து பார்க்க மாட்டியா!!” என்றார் ஆதங்கமாய்.

 

 

“உங்க மருமககிட்ட நீங்க பேச ஆரம்பிச்சு எவ்வளோ நாள் ஆகியிருக்கும். ஒரு முறை கூட உங்களுக்கு என்கிட்ட பேசணும்ன்னு தோணினதே இல்லையா”

 

 

“நீயும் கூட தான் ஒரு போன் கூட பேசலை” என்றுஅவனுக்கு மேல பிடிவாதமாய் பேசினார் அவர் தன் தப்பை ஒத்துக்கொள்ளாமல்.

 

“நான் என்ன பேச வர்றேன்னு கூட கேட்காம விரட்டி அடிச்சீங்க. நான் போன பிறகு தலையில தண்ணி எடுத்து ஊத்திக்கிட்டு எனக்கு பிள்ளையே இல்லைன்னு சொன்னீங்களாமே!!”

 

 

“அப்புறம் எப்படி இப்படி கேட்கறீங்க!!” என்று குத்திக்காட்டினான்.

 

 

“ஒஹ் அப்போ எனக்கு கோபமே இருந்திருக்க கூடாதுன்னு சொல்ல வரியா”

 

 

“நான் அப்படி சொல்லவேயில்லை. உங்ககிட்ட அன்னைக்கு நான் பேச வந்ததை தான் கேட்காம போனீங்க சரி. என்னை உளவு பார்க்க ஆரம்பிச்சீங்களே அதையாச்சும் ஒழுங்கா செஞ்சீங்களா” என்றான்.

 

 

‘இதென்னடா புதுசா கேட்குறான். நான் என்ன தப்பு பண்ணேன்’ என்று யோசித்தார் அவர்.

 

 

“என்ன பண்ணீங்கன்னு தெரியலைல உங்களுக்கு. என்னை பத்தி தெரிஞ்சுக்க விசாரிச்சீங்களே, அப்படியே எங்க கல்யாணம் எப்படி நடந்திச்சுன்னு விசாரிக்காம ஏன் விட்டீங்க”

 

 

“அப்படி செஞ்சிருந்தா என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்”

 

 

“நான் ஒண்ணும் டிடெக்டிவ் எல்லாம் வைச்சு பார்க்கலை. இந்துக்கு தெரிஞ்சவங்க மூலமா விசாரிச்சேன்” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் அவர்.

 

 

“இந்துவாச்சும் நம்ம வீட்டு பொண்ணு சரி, அவளுக்கு தெரிஞ்சவங்கன்னா அவங்க மூணாவது மனுஷங்க. சோ நம்ம வீட்டு விஷயம் இந்துவையும் தாண்டி யார்யாருக்கோ ஏன் கிட்டத்தட்ட  எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு அப்படி தானே” என்று இன்னமும் உஷ்ணமானான் அவன்.

 

 

ஆனைக்கும் அடி சறுக்கும் என்ற கதை தான் ஆனது மாலதியின் விஷயத்தில்.

 

 

எதையும் சரியாய் யோசித்து சரியாய் கணிக்கும் அவர் மகனின் விஷயத்தில் மிகப்பெரிய முட்டாள்த்தனம் செய்ததை அவரால் உணரமுடிந்தது. ஆனாலும் என்ன சொல்லி மகனை சமாதானம் செய்வது என்று அவருக்கு தெரியவில்லை.

 

 

தவறிழைத்த சிறு குழந்தை போல் அவன் அடுத்து என்ன சொல்லுவானோ என்பது போல் கேட்டிருந்தார். “பிரணவ்” என்றவரின் குரல் இப்போ இறங்கி கரகரப்பாய் ஒலித்தது.

 

 

“வேண்டாம்மா எதுவும் சொல்லாதீங்க. ஏற்கனவே நெறைய ரணப்பட்டிருக்கேன், இதுல நீங்க வேற காயப்படுத்திட்டீங்க. எனக்கு எதுவும் பேசத் தோணலை.நான் பேச மாட்டேன்னு சொல்லலை”

 

 

“நீங்க பண்ண சில விஷயங்கள் எனக்கு ஏத்துக்கற மாதிரி இல்லை. சோ கொஞ்சம் என்னை பீரியா விடுங்க.கொஞ்ச நாள் ஆனா நான் இயல்பாகிடுவேன்” என்றான்.

 

 

அவன் பேச்சைக் கேட்ட மாலதிபெருமூச்சு ஒன்றை வெளியேற்றினார். “மனோ இல்லையா!!” என்றார்.

 

 

“தூங்குறா!! நாளைக்கு அவகிட்ட பேசிக்கோங்க!!” என்றுவிட்டு போனை துண்டித்துவிட்டான். மாலதிக்கு வருத்தமாய் போய்விட்டது. போனை வைத்ததும் ஒரு மூச்சு அழுது தீர்த்தார்.

 

____________________

 

 

“அத்தைஇருக்கீங்களா!! உங்க மகன் பேசினதே நினைச்சுட்டு இருக்கீங்களா விடுங்க அத்தை” என்றாள்.

 

 

“ஒரு முறை நேர்ல வந்து பாருங்க, அப்புறம் அவரே சட்டுன்னு உங்க கால்ல விழுந்திருவாரு பாருங்களேன். அவர்க்கு கோபத்தை இழுத்து பிடிச்சு வைக்க தெரியாது அத்தை”

 

 

“அவருக்கு கோபம் இருக்காது வருத்தம் தான் இருக்கும். இப்படி பண்ணிட்டாங்களேன்னு” என்று மாமியாரை சமாதானம் செய்தாள் பிரணவ் தன்னிடம் பேசியதை வைத்து.

 

 

“ஹேமாவுக்கு ரொம்ப மசக்கையாய் இருந்துச்சும்மா!! அதான் உடனே கிளம்பி வர முடியலை. இன்னைக்கு தான் அவ மாமியார் மாமனார் ஊர்ல இருந்து வந்திருக்காங்க…”

 

 

“இனி நான் நாளைக்கே ஓடி வந்திட மாட்டேன் உங்களை பார்க்க” என்றார்.

 

 

“ஆனா அத்தை நீங்க கொஞ்சம் பாவம் தான்” என்று நிறுத்தினாள் மனோ.

 

 

“என்னம்மா என்னாச்சு??” என்றார் அவர் கேள்வியாய்.

 

 

“உங்களுக்குமசக்கையா இருக்கவங்களை பார்க்கறதே வேலையா போச்சு” என்றுவிட்டு சிரித்தாள்.

 

 

மாலதிக்கு முதலில் அவள் என்ன பேசுகிறாள் என்று எதுவும் புரியவில்லை. லேசாய் புரிந்ததும் “என்னம்மா மனோ சொல்ற??” என்றார்.

 

 

“இப்போ இரண்டு மாசம் அத்தை” என்றாள் அமைதியாய்.

 

 

மாலதி அந்த கணம் வெகு சந்தோசமாய் உணர்ந்தார். “நான் இன்னைக்கே கிளம்பி வர்றேன், இப்போவே கிளம்புறேன். நைட் அங்க இருக்கற மாதிரி வந்திடறேன்ம்மா” என்று அவர் தொடர்ந்து பேசியதே அவரின் சந்தோசத்தை அவளால் உணர முடிந்தது.

 

 

“அத்தை அவசரமில்லை நீங்க நிதானமா நாளைக்கே கிளம்புங்க சரியா” என்றவள் மேலும் சற்று நேரம் அவரிடம் பேசிவிட்டு போனை வைத்தாள்.

 

 

மனதில் ஏதோவொரு அமைதி அவளுக்கு. மீண்டும் பிரணவிற்கு முயற்சிக்க இம்முறை போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

____________________

 

 

அந்த அலுவலகத்திற்குள் பிரணவ் நுழையும் போது மணி பதினொன்று இருக்கும். காலை நேரத்திற்கே உரிய பரபரப்புடன் தான் இருந்தது அலுவலகம்.

 

 

வரவேற்ப்பில் சென்று அவன் பார்க்க வேண்டியவரின் பெயரை சொன்னான். “சார் இஸ் ஆன் மீட்டிங், குட் யூ ப்ளீஸ் வெயிட் பார் சம் டைம்” என்றாள் அப்பெண் சிரித்த முகத்தோடு.

 

 

“மேடம் இட்ஸ் குவைட் அர்ஜென்ட், ப்ளீஸ் கால் ஹிம்”

 

 

“சார்ப்ளீஸ் அண்டர்ஸ்டான்ட்” என்றாள் இன்முகமாகவே.

 

 

“சார் நீங்க எதுக்கு அவங்ககிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க. அவனை நாமே உள்ள போய் தூக்கிட்டு வருவோம்” என்றான் பரணி சற்றே காட்டமாய்.

 

 

“பரணி” என்ற பிரணவ் அவனை பார்வையாலே அடக்கினான். வரவேற்பு பெண் பரணியின் பேச்சுத் தொனியில் சற்றே கலவரமானாள்.

 

 

“ஆர் யூ திரெட்னிங் மீ” என்றாள்அப்பெண்முகத்தை கொஞ்சம் சரியாக்கி.

 

 

“மேடம்வீ ஆர் நான் திரெட்னிங் யூ… வீ நீட் யூவர் கோஆப்ரேஷன். வீ ஆர் ப்ரம் சிபிஐ. ப்ளீஸ் டோன்ட் டெல் எனிபடி”

 

 

“இட்ஸ்சீக்ரெட், ப்ளீஸ்” என்று அவளை பார்க்கவும் இம்முறை அப்பெண்ணின் பார்வையில் கூடுதல் மரியாதையும் பயமும் கலந்து தெரிந்தது.

 

 

போனை எடுத்து யாருக்கோ அழைத்தாள். வரிசையாக இரண்டு மூன்று பேரிடம் பேசியவள் போனை வைத்துவிட்டு “ஹி இஸ் கம்மிங், ப்ளீஸ்பீ சீட்டட் சார், ஆர் யூ ஈட் பார்எனிதிங்சார்” என்றாள்.

 

 

“நோ தேங்க்ஸ்” என்றுவிட்டு அவன் இருக்கையில் அமர்ந்திருந்தான். அலுவலகத்தை சுற்றி பார்வையை சுழலவிட்டான்.

 

 

முன்பு இருந்ததிற்கு இப்போது நிறைய மாறிவிட்டது என்பதை தான் பார்த்திருந்தான். ஆம் அந்த அலுவலகம் அவனுக்கு முதலிலேயே தெரிந்தது தான்.

 

 

அவன் பார்க்க வந்த நபரும் அவனுக்கு பரிட்சயமான நபர் தான். முன்பு நண்பனாய் இருந்து பின்னாளில் விலகிப் போன கணேஷை தான் பார்க்க வந்திருந்தான் பிரணவ்.

 

 

அவன் விசாரித்த வழக்கில் இப்படியெல்லாம் திருப்புமுனை அமையும் என்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை.

 

 

வழக்கில் முதல் இரு நபரை கைது செய்த போது அதிர்ந்திருந்தவன் இப்போது பார்க்க வந்திருப்பவனும் வழக்கில் சம்மந்தப்பட்டவன் என்று அறிந்த போது சற்று அதிர்ச்சி தான் அவனுக்கு.

 

 

ஆனால் காரணம் தான் அவனால் முழுதாய் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருந்தது.

 

 

அதை அவன் வாயாலே கேட்கும் பொருட்டும் அவனை கைது செய்யும் பொருட்டும் தான் அதிகாலையிலேயே பரணியும் அவனுமாக கிளம்பிஅங்கு வந்து சேர்ந்திருந்தனர்.

 

 

ஆக்செஸ் டோரை திறந்துக்கொண்டு வெளியில் வந்தவன் பிரணவை அங்கு சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவனின் முகக்கடுப்பே உணர்த்தியிருந்தது.

 

 

வந்தவன் பிரணவை நோக்கிச் செல்லாமல் பிரணவின் மேல் வெறுப்பான பார்வை ஒன்றை வீசிவிட்டு வரவேற்பு பெண்ணை பார்த்து முறைத்தான்.

 

 

“வை ஆர் யூ காலிங் மீ கண்டினியஸ்லி” என்றான் காட்டமாய்.

 

 

“சார் மிஸ்டர் பிரணவ் வான்ட் டூ சீ யூ, போத் ஆப்தெம் ஹிஸ் வைடிங் பார் யூ” என்றாள்பிரணவையும் பரணியையும் சுட்டிக்காட்டி.

 

 

‘என்ன வேணும்’ என்பது போல் இருவரையும் முறைத்து பார்த்தான் கணேஷ்.

 

 

பரணி கணேஷின் முகத்தை பார்த்து கடுப்பானவன் வேகமாய் எழுந்து அவனருகில் வர முயல பிரணவோ “பரணி” என்று அழுத்தமாய் அழைத்து ஒரு பார்வை பார்க்க அவன் பின் தங்கினான்.

 

 

“இங்க பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன். லீவ் சொல்லிட்டு வாங்க போகலாம்” என்றான் பிரணவ்.

 

 

“எதுக்கு லீவ் சொல்லணும்?? உன்கிட்ட பேச எனக்கு எதுவுமில்லை. நீ போகலாம்??” என்று மரியாதைவிட்டு பேசினான் கணேஷ்.

 

 

“ஹலோ மிஸ்டர் கொஞ்சம் மரியாதையோட பேசுங்க. லீவ் போட சொன்னா போடுங்க அது தான் உங்களுக்கு நல்லது. நாங்கவிசாரணை, அரெஸ்ட்ன்னு கூட்டிட்டு போனா அது இன்னும் அசிங்கம் உங்களுக்கு”

 

 

“வாட்??” என்றான் கணேஷ் இம்முறை அதிர்ச்சியாக.

 

 

“உங்க வாட்டுக்கு எல்லாம் அங்க வந்து பதில் சொல்றோம், கிளம்பறீங்களா!!” என்றான் பரணி.

 

 

“இவன் என்ன சொல்றான்??” என்று பரணியை கைக்காட்டி பிரணவிடம் கேட்டான் கணேஷ்.

 

 

“ஹேய் என்ன மரியாதை இல்லாம பேசிட்டே போறே” என்று நெருங்கி வந்தான் பரணி.

 

 

“கணேஷ் சொல்றதை கேளு, எங்களோட வா. வீ ஆர் ப்ரம் சிபிஐ. இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்.இப்போ நாங்க எதுக்கு வந்திருப்போம்ன்னு உன்னால யூகிக்க முடிச்சிருக்கலாம்”

“சோ சீக்கிரம் ஆபீஸ்ல சொல்லிட்டு வா போகலாம். இங்க அனாவசியமா ஒரு சீன் கிரியேட் பண்ண நான் விரும்பலை” என்றான் பிரணவ். கணேஷிற்கு நடப்பதை நம்ப முடியவில்லை.

 

 

பிரணவ் எப்போது சிபிஐ அதிகாரியானான். அவன் ஏதோ அரசாங்க உத்தியோகத்திற்காய் எழுதியது அவனறிவான். ஆனால் அது சிபிஐக்கான தேர்வாய் இருக்கும் என்பதை அவனறியவில்லை.

 

 

‘எதுக்காக வந்திருப்பான் எப்பவோ நடந்ததுக்காகவா இருக்கவே முடியாதே!! இவனை பத்தி எனக்கு ஏன் எந்த தகவலும் வரலை’

 

 

‘என்ன நடக்குது எனக்கு தெரியாம!! இது வெறும் விசாரணையா இல்லை கைதா!!’ என்ற கேள்விகள் மளமளவென்று அவன் மனதில் தோன்ற ஆரம்பித்தது.

 

 

“என்ன விசாரணைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா??” என்றான்.

 

 

“கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம், அதை இங்க வைச்சு சத்தமா சொல்லணுமா இல்லை கீழே போய் பேசலாமா!!” என்றவாறே கணேஷின் கண்களை ஊடுருவினான்.

 

 

கணேஷை பிரணவ் நன்கறிவான். அவனுடன் பழகிய நாட்களில் அவன் கண்களில் இவ்வளவு பொய்மை தெரிந்ததில்லை அவனுக்கு.

 

 

இன்று கணேஷின் கண்களில் பொய் தெரிந்ததை உணர்ந்தான் பிரணவ். கணேஷ் உள்ளே சென்று அவனுக்கு விடுப்பு சொல்லி அங்கிருந்து கிளம்பினான் அவர்களுடன்.

 

 

வெளி வாயிலுக்கு வந்த பின்னே“இப்போ சொல்லுங்க” என்று பரபரத்தான் கணேஷ்.

 

 

“மிஸ்டர். அல்லிராஜன் ஐஎப்எஸ் அதிகாரி ஞாபகமிருக்கா!! அது ஞாபகம் வரலைன்னா மிஸ்டர். குமாரசாமி அவரை ஞாபகமிருக்கா!!” என்றான் பிரணவ்.

 

 

சட்டென்று கணேஷின் முகம் இருண்டு பின் தன்னை சுதாரிப்பதை அந்த ஓரிரு நிமிடங்களில் கண்டுகொண்டான் அவன்.

 

 

“ஒரு வேளை இப்படி சொன்னா தெரியுமா இருக்கும், ரதி… பாரதியோட அப்பா குமாரசாமி தெரியும்ல… கண்டிப்பா மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்”

 

 

“சரி ஓகே கிளம்பலாம்” என்றுவிட்டு கணேஷை அவர்கள் அழைத்து சென்றனர்….

 

Advertisement