Advertisement

பிரணவ் வீட்டிற்கு வந்திருந்தான் மனைவி குழந்தையுடன். பரணிக்கு அழைத்து மறுநாளைக்கு அவனுக்கு விடுப்பு சொன்னவன், அவன்மேலதிகாரிக்கும்தகவல் தெரிவித்தான்.

 

 

வீட்டிற்கு வந்தும் அஜியை தன் தோள்களில் இருந்து அவன் இறக்கவேயில்லை.

 

 

அபிராமியும் முகுந்தனும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர் பிரணவ் மனோவிற்கு தனிமை கொடுத்து.

 

 

கிளம்பும் முன் முகுந்தன் “நைட்க்கு டிபன் கொண்டு வர்றேன்டா?? நீ பாட்டுக்கு எதையாச்சும் வாங்குறேன்னு கடைக்கு கிளம்பிறாத” என்றான்.

 

 

“ஹ்ம்ம் சரிடா” என்றுவிட்டு பிரணவ் உள்ளே சென்றான்.

 

 

“வேற டிரஸ் மாத்திக்கோங்க. உள்ள நம்ம பீரோல உங்க டிரஸ் இருக்கு” என்றாள் மனோ.

 

 

எதுவும் சொல்லாமல் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான். பின் உள்ளே சென்று வேறு உடைக்கு மாறி வந்திருந்தான்.

 

 

அபராஜித் தந்தையையே சுற்றி சுற்றி வந்தான். “அப்பா… அப்பா…” என்று. குழந்தையுடன் விளையாடினாலும் அவ்வப்போது அவன் பார்வை மனைவியின்மீதும் இருந்தது.

 

 

மனோவும் அவன் வந்து பேசுவானா தன்னை பார்ப்பானா என்ற ரீதியில் இருந்தாள். அவள் பார்வை முழுதும் தன் கணவனையே சுற்றி சுற்றி வந்தது.

 

 

அவன் செல்லுமிடமெல்லாம் அவள் கண்கள் அவனை நோக்கிக் கொண்டிருந்தது. பிரணவும் அதை உணராமல் இல்லை.

 

 

இன்றே எல்லாமும் பேசிட அவன் எண்ணவில்லை. இன்றைய பொழுதில் அவள் அதிகம் களைத்திருக்கிறாள் என்பதுணர்ந்தவன் அவள் ஓய்வெடுக்கட்டும் என்று அமைதி காத்தான்.

 

 

மனோவிற்கு அவனாக பேசுவான் என்று தோன்றவில்லை. தன் பெற்றோர் பற்றி அவன் கூறிய விபரம் வேறு மனதை போட்டு அரித்துக் கொண்டிருந்தது.

 

 

பொறுத்து பொறுத்து பார்த்தவள் “என்னங்க” என்று அழைத்தாள்.

 

 

“என்னம்மா?? ஏதாச்சும் வேணுமா??” என்றான்.

“உங்ககிட்ட பேசணும்”

 

 

“இன்னைக்கே பேசணும்ன்னு அவசியமில்லை. நீ ரெஸ்ட் எடு நாளைக்கு நாம பேசலாம்”

 

 

“இல்லை அது… அது வந்து எங்கப்பா அம்மா ஆக்சிடென்ட்” என்று சொல்லும் போதே குரல் கம்ம ஆரம்பித்தது.

 

 

“ரதி ப்ளீஸ் அதை பத்தி இப்போ எதுவும் பேச வேணாம்” என்று முடிக்க நினைத்தான்.

 

 

“எங்கப்பாவை கொல்ற அளவுக்கு யாருக்கு என்ன மோடிவ் இருக்கும்”என்றாள் விசும்பலாய்.

 

 

“ரதி அதை விசாரிக்க தான் நான் வந்திருக்கேன். எனக்கும் உன்கிட்ட அதைபத்தி கொஞ்சம் விவரம் வேணும்”

 

 

“ஆனா நாம இப்போ அதைப்பத்தி பேச வேணாம். நாளைக்கு பேசலாம். சொல்றதை கேளு இன்னைக்கு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்று கொஞ்சம் குரலுயர்த்தி சொல்லவும் அமைதியானாள்.

 

 

அவளுக்கு தெரியும் இதற்கு மேல் கேட்டால் அவனிடத்தில் இருந்து எந்த பதிலும் வராது என.இப்போது தான் கொஞ்சம் நன்றானது தானாய் பேசி எதுவும் கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.

 

 

வாசலில் அழைப்பு மணி ஒலிக்க வேகமாய் எழுந்து சென்றான் பிரணவ். முகுந்தன் தான் நின்றிருந்தான் கையில் இரவு உணவுடன்.

 

 

முதலில் மனோவிற்கு உணவை பரிமாறியவன் குழந்தைக்கும் ஊட்டினான். முகுந்தன் பிரணவை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

எப்போதும் யாரையாவது வேலை வாங்கி கொண்டிருக்கும் பிரணவ் பொறுப்பாய் மனைவி குழந்தையை கவனிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

 

 

அவன் வீட்டில் கூட அவனை அதை செய் இதை செய் என்று யாரும் வற்புறுத்தியதில்லைஎன்பதை முகுந்தன் அறிவான்.

 

 

‘நாம இதெல்லாம் செய்ய மாட்டோமே இந்த மீரா செமத்தியா அடிப்பாளோ. சும்மாவே பேசு பேசுன்னு பேசுவா,கூடமாட உதவி செய்யலைன்னா திட்டுவாளோ’ என்று தன் யோசனைக்குள் செல்ல ஆரம்பித்தவனை தட்டி எழுப்பினான் பிரணவ்.

 

 

‘சதிகாரா வழக்கம் போல என் கனவை யாராச்சும் கலைச்சு விடுங்கடா’ என்று மனதிற்குள் சபித்தவன் “என்னடா சாப்பிட்டியா??” என்ற கேள்வியை நண்பனிடம் தொடுத்தான்.

 

 

“சாப்பிட்டேன் எல்லாம் வாஷ் பண்ணிட்டேன். நீ என்ன ட்ரீம்க்கு போய்ட்ட மாதிரி இருக்கு”

 

 

“எங்க போகவிட்ட அதான் தட்டி எழுப்பிவிட்டுட்டியே”

 

 

“மனோக்கு மாத்திரை எல்லாம் கொடுத்திட்டியா??”

 

 

“ஹ்ம்ம் ஆச்சு…” என்று முகுந்தனிடம் சொன்னவன் “ரதி நீ தூங்கு. அஜியை நான் கீழ படுக்க வைச்சிருக்கேன். எனக்கு முகுந்தன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு நண்பனுடன் வெளியில் வந்தான்.

 

 

“என்னடா என்ன பேசப்போறே??” என்றான் முகுந்தன்.

 

 

“எங்கம்மா அப்பா எப்போ இங்க வந்தாங்க??”

 

 

“அதுக்கு தான் அவசரமா என்னை கூப்பிட்டயா??”

 

 

“சொல்லுடா??” என்றான் பிரணவ் சலிப்பாய்.

 

____________________

சசி போனில் பிரணவின் குழந்தையை பற்றியும் அவன் மனைவி பற்றியும் சொல்லிய நாளில் இருந்தே மாலதிக்கு இருப்பு கொள்ளவில்லை.

 

 

உடனே அவர்களை பார்க்க வேண்டும் போல ஒரு உந்துதல் அவருக்கு. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடியது அவருக்கு.

 

 

என்ன தான் மகனின் இருப்பிடம் அறிந்து இந்து சொன்னதை எல்லாம் கேட்டிருந்தாலும் மனோவை பற்றியோ அவன் குழந்தை பற்றி அவரால் அதிகம் அறிந்திருக்க முடியவில்லை.

 

 

பிரணவ்மனோவை அழைத்துக்கொண்டுஆஸ்திரேலியா சென்றது வரை அவருக்கு தெரியும். அந்நேரம் அவர் ஹேமாவின் குழந்தை பிறப்பிற்காக அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது.

 

 

குழந்தைபிறந்து ஆறு மாதம் வரை உடனிருந்தவர் மீண்டும் திரும்பி வந்திருந்த வேளை பிரணவும்ஓராண்டுக்குள்ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்திருந்த விபரம் அறிந்திருந்தார்.

 

 

அந்நேரத்தில் தான் அவர் ஹேமாவின் குழந்தைக்கு உடல் நலமின்மையால் வந்த ஒரே மாதத்திலேயே மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது.

 

 

அதனால் மற்ற எண்ணங்களை ஒதுக்கி மகளுக்காக அவளுடன் சென்றார்தன் கணவரையும் அழைத்துக்கொண்டு.

 

 

ஹேமாவின் குழந்தைக்கு ஏனோ பிறந்ததில்இருந்து உடல் நிலை சீராய் இல்லாமல் போயிருந்ததில் அவர் அங்கிருந்து கிளம்பும் எண்ணம் விடுத்து குழந்தையை கவனிக்கலானார்.

 

 

பிரணவ் அரசாங்க உத்தியோகத்திற்காக தேர்வுகள் எழுதிக் கொண்டிருந்ததை அவர் அறிவார். ஏனோ மகன் அந்த பழைய வேலையை பார்த்திருப்பான் என்று அவருக்கு தோன்றவில்லை.

 

 

அந்த சந்தேகத்தில் இருந்தவரிடம் ஒரு நாள் ஹேமா வாய்தவறி உண்மையை உரைத்துவிட்டாள். ஆம் பிரணவிற்கு மீண்டும் தேர்வுக்காய் வந்திருந்த கடித உறை பற்றி பிரணவிடம் தெரிவித்தது அவளே.

 

 

மற்ற எல்லாருடனும் தொடர்பை துண்டித்திருந்த பிரணவ் அர்ஜுனிடம் மட்டும் தொடர்பிலிருந்தான்.அர்ஜுன் அவனை தொடர்பிலிருக்க செய்திருந்தான்.

 

 

ஹேமாவும்தம்பியை பற்றிய விபரத்தை அர்ஜுனின் மூலம் அறிந்திருந்தவள் அவனுடன் சமயம் கிடைக்கும் போது பேசுவாள்.

 

உடன் அன்னையை வைத்துக்கொண்டு அவளால் அவனுடன் அதிகம் பேச முடியாவிட்டாலும் எப்போதாவது அவனுடன் சாட் செய்வாள் அர்ஜுன் அருகில் இருக்கும் போது.

 

 

பிரணவ்ஆஸ்திரேலியா செல்லும் முன் அவனின் லட்சிய தேர்வுக்காய்இரண்டாம் முறை பதிவு செய்த போது ஹேமாவின் கணவர் கேட்டுஅர்ஜுனின் அன்னை வீட்டு முகவரியை கொடுத்திருந்தான்.

 

 

ஹேமாவிடமும் அர்ஜுனிடமும் அதைப்பற்றிதெரிவித்திருந்தான்.பிரணவின் தேர்வை பற்றி வந்திருந்த கடிதத்தை அர்ஜுன் வீட்டினர் ஸ்கேன் செய்து அனுப்பியிருக்க ஹேமா அதை பிரணவிற்கு அனுப்பி வைத்திருந்தாள்.

 

 

ஒரு நாள் தெரியாமல் அவள் அன்னையிடம் அதைப்பற்றி மறந்து போய் உளறியிருக்க மாலதி உடனே இந்துவிடம் பேசி பிரணவை கண்காணிக்க ஏற்பாடு செய்தார்.

 

 

இந்துவும் பிரணவை போல் அரசாங்க உத்தியோகத்திற்காக தேர்வுகள் எழுதுவது அவர் அறிந்ததே. இந்துவின் குடும்பம் சற்று பின் தங்கிய குடும்பம்.

 

 

தன்னாலான உதவியை மாலதி எப்போதும் அந்த குடும்பத்திற்கு செய்வார். இந்துவின் படிப்பு முழுதும் மாலதியின் செலவே. அதனால்இந்துவும் மாலதி கேட்டதிற்கு ஒப்புக்கொண்டிருந்தாள்.

 

 

மாலதி அமெரிக்காவில் இருந்த போது சசி தன் கணவருடன் பிரணவின் மனைவி குழந்தை பார்த்து வந்திருந்த விபரம் சொல்லியிருக்க அன்றிலிருந்தே அவருக்குள் ஒரு ஆசை.

 

 

எப்படியோ மகளிடம் சொல்லிக்கொண்டு கணவரை அழைத்துக்கொண்டு இந்தியா வந்து சேர்ந்தார்.இந்தியா வந்தவுடனே எல்லாம் அவர் மனோவை தேடிப் போகவில்லை.

 

 

போகலாமா வேண்டாமா என்ற குழப்பம் இன்னமும் அவருக்கு இருக்கத் தான் செய்தது. சசியிடம் முகவரி வாங்கியிருந்தாலும் தான் முதலில் சென்று பார்ப்பதா என்ற அவரின் ஈகோ சட்டென்று அதற்கு அடிபணியவில்லை.

 

 

வெங்கடேசனுக்கு குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமிருந்ததை அவர் பார்வையில் உணர்ந்திருந்தார் மாலதி.

 

 

மாலதிக்கும் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. போய் பார்த்தால் தான் என்ன என்ற எண்ணத்தில் பிரணவின் வீட்டிற்கு செல்ல அங்கு பெருத்த ஏமாற்றம் அவருக்கு.

 

மனோ அப்போது தான் வீடு காலி செய்து வேறு எங்கோ போய்விட்டாள் என்ற தகவலறிந்தார். மனம் விட்டு போனது அவருக்கு.

 

 

தன் உயிராய் வளர்த்த மகன் பிரிந்ததில் இருந்து அவருக்கு வருத்தம் தான். அவரின்வருத்தம் மனோவின் மேல் கோபமாய் மாறியிருந்ததும் உண்மை தான்.

 

 

காலம் கனிந்திருந்ததில் அவர்மனமும் சற்று இளகியிருந்தது உண்மையே. மகனுக்காய் உள்ளே துடிக்க ஆரம்பித்திருந்தது. அவன் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது.

 

 

அருகிருந்த போது துடிக்காத மனம் இல்லாத போது அதிகமாய் துடித்தது. போகலாமா வேண்டாமா என்று பல முறை யோசித்தவருக்கு சென்று பார்த்து இல்லை என்றதும் உண்டான ஏமாற்றத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

 

அந்த ஏமாற்றமே அவருக்குள் பெரும் ஆவலை தூண்டியது. மனம் அவர்களை காண தவியாய் தவித்தது.

 

 

பூஜையறையில் வெகு நேரமாய் மகனை நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தவரின் கண் முன்னே பழனிக்கு சென்ற முறை சென்று வந்திருந்த பிரணவ் ஹேமா கருவுற்றதும் மீண்டும் ஒரு காணிக்கை முடிந்து வைத்திருந்தது கண்ணில்ப்பட்டது.

 

 

அவள் குழந்தை பிறந்த பின்னே காணிக்கை செலுத்த வேண்டும் என்று எண்ணி அன்று அவன் முடிந்து வைத்திருந்தது.

 

 

மாலதிக்குஅந்த காணிக்கை கண்ணில் பட ஹேமாவின் குழந்தைக்கும் அவ்வப்போது உடல் நலமில்லாமல் இருந்ததில் தெய்வக்குத்தமாயிருக்குமோ என்று எண்ணினார்.

 

 

காணிக்கையை செலுத்திவிட்டு வந்தால் மனதிற்கு நிம்மதியாய் இருக்கும் போல தோன்றியது அவருக்கு. சற்றும் தாமதியாமல் மறுநாள் இரவு ரயிலுக்கு பழனிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தார்.

 

____________________

 

 

பிரணவை பிரிந்து கிட்டதட்ட ஒரு மாதமாகிருந்தது. மனோவிற்குள் அவன் நினைவுகளின் தாக்கம் அதிகமாய் இருந்தது.

 

 

ஒரு புறம் அவனின் பேச்சை கேட்டிருக்க வேண்டும் என்றும் மறுபுறம் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்றும் அவள் மனம் இருவேறு விதமாய் யோசித்து அவளை குழப்பிக் கொண்டிருந்தது.

 

 

கணவனின் மேல் இது நாள் வரை அவள் உணர்ந்திராத நேசத்தை அடி மனது உணர ஆரம்பித்ததை வெகு தாமதமாய் உணர்ந்தாள்.

 

 

ஒவ்வொரு நாளும் அவனை நினைக்காமல் அவளால் கடத்த முடிந்ததில்லை.

 

 

மனம் லேசாய் அவன் புறம் சரிவதும் பின்னர் நடந்த நிகழ்வுகளை கண் முன் நிறுத்தி அவன் பால் இருந்த வருத்தத்தை அந்நினைவுகளே அதிகப்படுத்துவதுமாய் அவள் பொழுது கடந்தது.

 

 

கணவனின் நினைவில் தான் குழந்தையை கூட சரிவர கவனிப்பத்தில்லை என்பதை மனம் உணர்ந்தே தான் இருந்தது. கண் முன்னே இங்குமங்கும் ஓடிய குழந்தையை அள்ளி இறுக அணைத்துக் கொண்டாள்.

 

 

குழந்தையின் முகத்தில் அவள் பிரணவை கண்டாள். பிரணவைஅணைத்திருப்பது போன்ற ஒரு உணர்வு ஒரு நிம்மதி லேசாய் எழுந்தது.

 

 

அப்போது கதவு லேசாய் தட்டப்படும் சத்தம் கேட்ட மனோ திரும்பி பார்க்க மீரா உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள்.“உள்ள வாங்க” என்றழைத்தாள் மனோ.

 

 

“அத்தை உங்களை கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போக சொன்னாங்க. போய் என்னன்னு பார்த்திட்டு வந்திடுங்க. குழந்தையும் கூட்டிட்டு போவீங்களாம்” என்றாள்மீரா.

 

 

“சரி மீரா நான் கிரைண்டர் போட்டிருக்கேன் மாவு வழிச்சு வைச்சுட்டு போய் பார்க்கறேன்” என்றாள் மனோ.

 

 

சொன்னது போல வேலையை முடித்து வீட்டை பூட்டி அபிராமியின் வீட்டை நோக்கி எட்டி நடைப்போட்டாள். வாயிலில் இருந்த காலணிகளை கவனிக்காதவள் நேரே உள்ளே செல்ல அப்போது தான் அவர்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்திருப்பதை உணர்ந்தாள்.

 

 

அவர்கள் வீட்டிற்கு உள்ளே நுழையும் முன்னே அபாரஜித் அவளிடம் இருந்து தன்னை விடுவித்து இறங்கி உள்ளே ஓடினான்.

 

 

“கண்ணா ஓடாதே நில்லுப்பா” என்றவாறே பின்னே வந்த மனோ அங்கிருந்தவர்களை கண்டு ஒரு கணம் தயங்கியவள் அபிராமியை காண நேரே உள்ளே சென்றுவிட்டாள்.

 

 

“அம்மா கூப்பிட்டீங்களாம் மீரா சொன்னாங்க என்னம்மா” என்றாள்.

 

Advertisement