Advertisement

அத்தியாயம் –29

 

 

மயங்கி கிடந்தவளை சோபாவில் படுக்க வைத்துவிட்டு அருகிருந்த வாஷ்பேஷினில் தண்ணீர் பிடித்து எடுத்து வந்து தெளித்துப் பார்த்தும் அவள் எழாமலே இருக்கவும் பிரணவிற்கு லேசாய்பதட்டமாகியது.

 

 

உடனே முகுந்தனிற்கு போனில் அழைத்தான். “சொல்லுடா…” என்றான்முகுந்தன்.

 

 

“எங்க இருக்க முகுந்த்??”

 

 

“வீட்டில தான் இருக்கேன்டா சாப்பிட வந்தேன். என்னாச்சுடா பதட்டமா பேசுற மாதிரி இருக்கு??”

 

 

“கொஞ்சம் ரதி வீட்டு வரைக்கும் வாடா ஒரு இன்வெஸ்டிகேஷன்க்காக வந்தேன். ரதி மயக்கமாகிட்டாடா நீ உடனே வீட்டுக்கு வா” என்று அவனிடம் சொல்லிவிட்டு போனை வைத்தவன் மனோவை கையில் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தான்.

 

 

அவனை பார்த்ததும் பரணி வேகமாய் அருகே வந்தான். “என்னாச்சு சார் மேடம்க்கு??” என்றவாறே.

 

 

“மயக்கமாகிட்டா!! கதவை திறந்து விடுங்க டாக்டர்கிட்ட போகலாம்” என்றுஅவன் சொல்லி முடிக்கும் முன்னே  பரணி கதவை திறந்து விட்டிருந்தான். “உள்ள படுக்க வைங்க சார்”

 

 

அதற்குள் அஜியை தூக்கிக்கொண்டு அபிராமியும், முகுந்தனும் வந்தனர். மீராவும் வெளியில் கேட்ட சத்தத்தில் வாசலுக்கு வந்திருந்தாள்.

 

 

“என்னாச்சு அண்ணா நீங்க எப்போ வந்தீங்க??”

 

 

“ஒண்ணுமில்லைம்மா கொஞ்சம் மயக்கமாகிட்டா!!” என்று பதில் கொடுக்கவும் முகுந்தன் அருகே வந்திருந்தான்.

 

 

அஜி அவனை நோக்கி “அப்பா…” என்று கையை நீட்ட பிரணவிற்கு ஒரு கண்கள் லேசாய் கலங்கிப் போனது. குழந்தையை நோக்கி ஒரு நொடி கைகள் உயரத் தான் செய்தது.

 

 

“அப்பாஅம்மாக்கு ஊசி போட்டுட்டு வர்றேன் கண்ணா. நீ பாட்டிகிட்ட இரு, அப்பா சீக்கிரம் வந்திடறேன்” என்று சொல்ல அபராஜித்துக்கு என்ன புரிந்ததோ தலையை ஆட்டினான்.

 

 

“என்னாச்சுடா திடீர்ன்னு, நீ எதுவும் சொன்னியா!!” என்று முகுந்தன் கேட்கவும் ‘அவளா கீழ தடுக்கி விழுந்தா கூட என்னைய தான் எல்லாரும் குத்தம் சொல்லுவீங்க போல’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு “அதெல்லாம் போகும் போது சொல்றேன். நீ வண்டியில ஏறு”

 

 

“அம்மா குழந்தையை பார்த்துக்கோங்க நான் முகுந்த்தை ஆஸ்பிட்டல்க்கு என்னோட அழைச்சுட்டு போறேன்”

 

 

“பரணி வண்டி எடுங்களேன், முகுந்த் ஆஸ்பிட்டல்க்கு வழி சொல்லுவான்” என்றுவிட்டு மனோவின் தலையை தாங்கிப் பிடித்தவாறே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

‘ஏன்டி என்னை படுத்தற, தள்ளியிருந்தாலும் கஷ்டப்படுத்தற. பக்கத்துல வந்தாலும் கஷ்டப்படுத்தற நான் என்ன தான் பண்ணட்டும்’ என்றுஅவளை மனதோடு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

 

 

வண்டி ஓரிடத்தில் நிற்கவும் அவளை மீண்டும் எழுப்ப முயற்சி செய்ய அவளிடம் அசைவே இல்லை.“முகுந்த் உனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்களா இங்க” என்றான் நண்பனிடம் கேள்வியாய்.

 

 

“என்னோட ஸ்கூல் மேட் இங்க தான் டாக்டரா இருக்கான் நீ மனோவை கூட்டிட்டு வா நான் போய் அவனை பார்த்திட்டு வரேன்” என்று உள்ளே விரைந்து சென்றான்.

 

 

பரணி அருகே வந்து “சார் நான் ஹெல்ப் பண்ணவா” என்றான்.

 

 

“இட்ஸ் ஓகே பரணி நான் பார்த்துக்கறேன்” என்றவன் மனோவை தன்னிரு கைகளாலும் தூக்கிக் கொண்டான்.

 

 

“சார் நான் உள்ளே ஸ்ட்ரெச்சர் கொண்டு வரச் சொல்றேன்” என்று அவன் உள்ளே சென்றவன் ஐந்தே நிமிடத்தில் வந்தான்.

 

 

மனோவை படுக்க வைத்து உள்ளே அழைத்து செல்லவும் முகுந்தன் அவன் நண்பனுடன் வந்து சேர்ந்தான்.

 

 

“டேய் நான் சொன்னேன்ல இவங்க தான்” என்று மனோவை காட்டி மருத்துவரிடம் சொல்ல அவள் உடனே எமர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்டாள்.

 

 

முகுந்தனின் நண்பன் அவளை பரிசோதித்துவிட்டு “எத்தனை மாசம்??” என்று கேட்க பிரணவ்பரிதாபமாய் விழித்தான். முகுந்தனை பார்க்க அவனும் தனக்கு தெரியாது என்பதாய் தலையாட்டினான்.

 

 

‘இது எப்போ நடந்திச்சு!! எனக்குதெரியலையே!!’ என்று ஒரு புறம் குழப்பமான மனநிலையாய் இருந்தாலும் லேசாய் ஒரு சந்தோசம் எட்டிப் பார்க்கவே செய்தது அவனுக்கு.

 

“என்ன சொல்றீங்க டாக்டர் அவ பிரக்னன்ட்டா??”

 

 

“என்ன சார் சொல்றீங்க நீங்க??? உங்க மனைவி பிரக்னன்ட் ஆனது கூட உங்களுக்கு தெரியலையா??” என்றான் முகுந்தனின் மருத்துவ நண்பன்.

 

 

“அருண் அவன் டெல்லில இருந்து இப்போ தான் வந்தான். மனோ எங்க கூட தான் இருந்தா எங்களுக்குமே அவ கன்சீவ் ஆனது தெரியாதுடா” என்று விளக்கம் சொல்லவும் அந்த மருத்துவர் சற்று அமைதியானார்.

 

 

“கொஞ்சம் அனிமிக்கா இருக்காங்க. சரியா சாப்பிடலைன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி நேரத்துல இப்படி இருக்கறது தான்”

 

 

“சோ பார்த்து கவனமா சாப்பிட வைங்க. ரைஸ்இறங்கலைன்னா லிக்விட் கன்டென்ட்டா கொடுங்க. மேபீ இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க இவங்க”

 

 

“நான் போய் லேடி டாக்டரை அனுப்பறேன். அவங்க வந்து செக்கப் பண்ணட்டும்” என்றுவிட்டு நகர்ந்து போனார் அவர்.

 

 

“டேய் என்னடா” என்று முகுந்தன் பிரணவை பார்த்துக் கேட்க அவனோ பரணி வேறு அங்கிருக்கிறானே என்று அவஸ்தையாய் பார்த்தான். அதை புரிந்தவன் போல் பரணியே “சார் நான் வெளிய இருக்கேன்” என்றுவிட்டு நகர்ந்து விட்டான்.

 

 

“உங்களுக்கு முதல்லயே தெரியலையா முகுந்த். இவ அம்மாகிட்ட எதுவும் சொன்னாளான்னு கேளேன்” என்றான் பிரணவ்.

 

 

நண்பன் சொல்வதும் சரியென்று பட “இரு நான் போன் பண்ணிட்டு வரேன்” என்றுவிட்டு அங்கிருந்து அவன் நகரவும் ஒரு லேடி டாக்டர் உள்ளே நுழைந்தார்.

 

 

“நீங்க தான் பேஷன்டோட கணவரா??”

 

 

“ஆமா டாக்டர்”

 

 

“நீங்க கொஞ்சம் வெளிய இருங்க” என்றுவிட்டு அவர் உடன் வந்த நர்சை துணைக்கு வைத்துக்கொண்டு மனோவை பரிசோதனை செய்தார்.

 

 

மனோவிற்கும் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்தது. கண் விழித்தவள் முதலில் கேட்டது “அவர் எங்க??” என்பதைத் தான்.

 

 

அப்பெண் மருத்துவர் நர்சிடம் சொல்லி பிரணவை உள்ளே அழைக்கச் சொன்னார். அவன் உள்ளே வரவும் மருத்துவர் அவளிடம் “எத்தனை நாள்மா ஆச்சு” என்றார். மனோவிற்கு ஒன்றும் புரியவில்லை “என்ன கேட்கறீங்க டாக்டர்” என்றாள்.

 

 

“இப்போ எத்தனாவது மாசம்” எனவும் தான் மனோவிற்கு புரிய பிரணவை திரும்பி பார்த்தாள். அவசரமாய் தனக்குள் கணக்கு போட்டு பார்க்க “ரெ… ரெண்டு மாசம் இருக்கும்ன்னு நினைக்கிறேன் டாக்டர்” என்றாள்.

 

 

“எந்த டாக்டர்கிட்ட செக்கப் பண்றீங்க??”

 

 

அவளுக்கே இப்போது தான் தெரிகிறது. இதில் அவள் எந்த டாக்டரை பார்த்ததாக சொல்வாள். “இ… இல்லை அது வந்து எனக்கே இப்போ தான் தெரியுது”

 

 

“நான்… நான் எங்கயும் பார்க்கலை” என்றாள்.

 

 

“என்னம்மா இவ்வளோ கேர்லெஸ்ஸா இருக்கீங்க. என்ன சார் நீங்க கேட்கறதில்லையா படிச்சிருக்கீங்க இதெல்லாம் சொல்லணுமா!!” என்று பிரணவை பார்த்து கேட்டார்.

 

 

‘இதுக்கும் நான் தான் பழியா!!’ என்று எண்ணியவன் பதில் சொல்லும் முன் “இல்லை டாக்டர் அவர்க்கு தெரியாது. அவர் ஊர்ல இருந்தாரு. நான் தான் கவனிக்காம விட்டுட்டேன் தப்பு என் மேல தான்” என்று மனோ கூறவும் பிரணவ் சற்று ஆச்சரியமாய் தான் அவளை பார்த்தான். ‘இதேதுடா அதிசயமா இருக்கு எனக்கு இவ சப்போர்ட் பண்ணுறாளே’ என்று.

 

 

“சரியா சாப்பிடுற மாதிரியும் தெரியலை. முகம் இப்படி வெளுத்து போயிருக்கு ரொம்ப வீக்கா இருக்கீங்க. எதுக்கும் ஒரு முறை உங்க பிரக்னன்சி டெஸ்ட் எடுத்து பார்த்திருவோம்”

 

 

“அப்புறம் ஸ்கேன் பண்ணி பேபிஹார்ட் பீட் எல்லாம் செக் பண்ணி பார்த்திறலாம். அப்புறம் மெடிசன்ஸ் எல்லாம் எழுதித் தரேன் அதுக்கு பிறகு நீங்க வீட்டுக்கு போங்க” என்றார்.

 

 

பின் நர்சை அழைத்து ஏதோ கூறிவிட்டு அவர் செல்ல நர்சும் வெளியில் சென்றுவிட பிரணவும் மனோவும் மட்டுமே தனித்திருந்தனர்.

 

 

பிரணவிற்கு அவளிடம் என்ன பேச என்றே தெரியவில்லை. மனோவிற்கு இன்று தான் புதிதாய் அவனை பார்ப்பது போன்ற உணர்வு.

 

 

இன்று தான் முதன் முதலாய் கருவுற்றது போலவும் அதை கணவனிடம் சொல்லத் தயங்கும் பெண் போலவும் இருந்தாள்.

 

 

அவளாய் பேசுவாள் போன்று தோன்றாததால் அவனே பேச ஆரம்பிக்க முனைய மனோவே வாயை திறந்தாள்.

 

“இப்படி உட்காருங்களேன்” என்று அவள் கூறவும் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். மனோ மெதுவாய் எழுந்து அமர்ந்திருந்தாள்.

 

 

முகுந்தன் இருவரும் தனியே பேசுவதை வெளியே இருந்து கண்டவன் நாகரீகம் கருதி வெளியே நின்றுவிட்டான்.

 

 

“எப்படி மறந்து போனே??” என்றான் ஆதங்கமாய். எதையும் கேட்கக்கூடாது என்று நினைத்தாலும் மனது கேட்கவில்லை அவனுக்கு.

 

 

“எப்படி மறந்தேன்னு தெரியலைங்க.ஏதோ நினைப்புல நான் அதெல்லாம் கவனிக்கவே இல்லைங்க. தப்பு என்னோடது தான் சாரி” என்றவள் அவன் வலக்கையை பற்றி தன்னுள் அடக்கிக்கொண்டாள்.

 

 

பிரணவிற்கு உள்ளே உருகிய போதும் அதை வெளிக்காட்டாது நிச்சலனமாகவே அவளை பார்த்தான்.

 

 

“குழந்தை எங்க??” என்றாள் அவளாகவே.

 

 

“வீட்டில முகுந்த் அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருக்கோம்” என்றான்.

 

 

“அவன் உங்களை ரொம்ப தேடினான். அன்னைக்கு கூட அப்பா வா… வான்னு தூங்கி எழுந்ததும் என்கிட்ட கேட்டான்” என்று சொல்லிவிட்டு அவனையே பார்த்தாள் ஏதாவது சொல்வான் என்று.

 

 

“ஹ்ம்ம்…” என்றதிற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை.

 

 

மனோவிற்கு அவன் பேசும் தோரணை புரியாமலில்லை. தன்னால் தான் அவன் இப்படி உள்ளுக்குள் உடைந்து போயிருக்கிறான் என்று புரிந்தது.

 

 

என்ன யோசித்தாளோ உடனே“முகுந்த் அண்ணாக்கு ஒரு போன் பண்ணுங்களேன்” என்றாள்.

 

 

“அதுக்கெல்லாம் அவசியமில்லைம்மா நான் இங்க தான் இருக்கேன்” என்றவன் உள்ளே நுழைந்தான்.

 

 

முகுந்தன் வந்ததும் பிரணவ் அவள் கையில் இருந்து தன் கையை விடுவித்து எழுந்து நின்றிருந்தான். அவனின் அச்செயல் மனோவிற்கு கஷ்டமாக இருந்தாலும் தன்னால் தான் என்பது நன்றாக புரிந்தது.

 

 

அவள் விழிகள் இரண்டும் குளம் கட்டி நின்றது. “எதுக்கும்மா கூப்பிட்ட??”

 

 

“அம்மாக்கு போன் பண்ணி வரச் சொல்லுங்களேன்” என்றாள்.

 

“நான் அப்போவே சொல்லிட்டேன்ம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க குட்டிப்பையனை கூட்டிட்டு” என்றான்.

 

 

“சரி முகுந்த் அப்போ நான் கிளம்பறேன். பரணி எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார், கிளம்பறேன்” என்று முகுந்திடம் ஆரம்பித்து மனோவின் முகம் பாராமல் அவளை நோக்கி சொல்லிவிட்டு வெளியே நடக்க ஆரம்பித்தான்.

 

 

“டேய் என்ன நினைச்சுட்டு இருக்க??” என்றவாறே முகுந்த் அவன் பின்னே செல்ல மனோ இருகைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

 

 

“டேய் நில்லுடா?? எதுக்குடா இப்படி பண்ற?? அந்தபொண்ணை தனியா விட்டு நீ பாட்டுக்கு கிளம்புறேன்னு சொல்ற?? உனக்கு மனசாட்சியே இல்லையா??” என்று கோபமாய் நண்பனை பார்த்து கேள்விகேட்டான் முகுந்தன்.

 

 

“நானா அவளை தனியா விடணும்ன்னு நினைச்சேன். அவ தான் என்கிட்ட சொல்லாம கொள்ளாம தனியா வந்து இருந்திருக்கா. உனக்குஎல்லாம்தெரிஞ்சும் நீயும் என்கிட்ட சொல்லலை”

 

 

“நான் யாரு உங்களுக்கு எல்லாம். நான் முக்கியம் இல்லைன்னு நினைச்சு தானே எல்லாரும் சேர்ந்து இப்படி பண்றீங்க. இப்போ கூட நான் பக்கத்துல இருக்கேன் அம்மாவை வரச்சொல்லி சொல்றா. எனக்கு யாருமில்லை யாருமில்லைன்னு சொல்லுவா, உண்மையாவே எனக்குன்னு தான் யாருமேயில்லைடா” என்றவனின் குரலில் அதீத வருத்தமிருந்தது.

 

 

“நானும் மனுஷன் தானேடா, எவ்வளவு தான் பொறுத்து பொறுத்து போறது. அஜி என்கிட்ட வரணும்ன்னு கையை நீட்டி கூட நான் தூக்கலை ஏன் தெரியுமா”

 

 

“ஏர்போர்ட்ல வைச்சு குழந்தையை என்னை தூக்கவிடாம செஞ்சிட்டா, நான் தூக்கினா செத்துருவேன்னு மிரட்டுறா!!”

 

 

“கொஞ்சம் கொஞ்சமா நான் தான் செத்துகிட்டு இருக்கேன்யாரையும் மறக்க முடியாம!! நான் நல்லதே செஞ்சாலும் எனக்கு கெட்ட பேரு தான்”

 

 

“கெட்டவனா கூட வாழ்ந்திடலாம் போல. யாருக்கும் நல்லவனா மட்டும் இருக்கவே கூடாதுடா” என்றான் சலிப்பாய்.

 

 

பிரணவ் இப்படி மனோவை தனியே விட்டு போகிறானே அதுவும் இம்மாதிரி நேரத்தில் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்க நண்பனோ அவன் உள்ளத்து வலிகளை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தான். முகுந்தனுக்குமேநண்பனை பார்த்து வருத்தமே.

 

 

“டேய் நான் உன்கிட்ட சொல்லாம இருந்தது தப்பு தான்டா… ஆனா கொஞ்சம் யோசிச்சு பாரு எனக்கு உன்னை தானே முதல்ல தெரியும். உனக்காக மட்டுமே தானே அவங்க இங்க இருந்திருக்க முடியும்”

 

 

“எனக்கு எல்லாம் புரியுதுடா. நான் ஒண்ணும் முட்டாளில்லை. வேணாம் இது ஆஸ்பிட்டல் இங்க நின்னு பேச எனக்கு விருப்பமில்லை”

 

 

“நான் கிளம்பறேன்” என்று அவன் நகரவும் அந்த பெண் மருத்துவர் “மிஸ்டர் பிரணவ்” என்று அழைக்கவும் சரியாக இருந்தது.

 

 

“எங்க கிளம்பிட்டீங்க?? உங்க வைப் எதுவும் திட்டினீங்களா அழுதிட்டு இருக்காங்க!! என்ன சார் பண்றீங்க நீங்கலாம்” என்று அவனை முறைக்க பிரணவ் முகுந்தனை பார்த்தான்.

 

 

“டேய் ப்ளீஸ் உள்ள வாடா. இந்த மாதிரி நேரத்துல அவளை எதுவும் சொல்லாதடா உனக்கு தெரியாதது இல்லை வாடா” என்றவன்பிரணவை உள்ளே இழுத்துச் சென்றான்.

 

 

“ஏம்மா இப்படி அழுதிட்டே இருந்தா உடம்பு என்னாகுறது. ஏற்கனவே அனிமிக்கா இருக்கீங்க. நீங்கஅழுது மேல எதுவும் இழுத்து வைக்காதீங்க” என்று நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

“சார் பார்த்துக்கோங்க அவங்களை. டாக்டரம்மா வேற ரொம்ப கோவக்காரங்க. அப்புறம் யாரு என்னன்னு பார்க்க மாட்டாங்க திட்டிவிட்டிருவாங்க” என்றுவிட்டு அவள் வெளியேறினாள்.

 

 

பிரணவிற்கு அவள் அழுவது ஒரு புறம் கஷ்டமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் அவனையே காரணம் காட்டி மற்றவர்கள் பேசுவது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.

 

 

எதுவும்பேசாமல் அருகிலிருந்த இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான். “மனோ நீங்க பேசிட்டு இருங்க அம்மா வந்திருக்காங்களான்னு பார்த்திட்டு வரேன்” என்றுவிட்டு முகுந்தன் வெளியே சென்றான்.

 

 

மனோ இன்னமும் குலுங்கி குலுங்கி அழுது கொண்டுதானிருந்தாள்.அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்று தோன்றினாலும் அவனாலும் எதுவும் பேச முடியவில்லை.

 

 

பரணிக்கு அழைத்து அவனைவீட்டிற்குகிளம்பச் சொன்னான்.உள்ளேபார்க்க வருகிறேன் என்றவனிடம் மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார் என்றுவிட்டான்.

 

 

மனோ ஒரு துளி கண்ணீர் விட்டாலுமே பிரணவிற்கு தாங்காது. அவளை அணைத்து ஆறுதல்சொல்லுவான், அல்லதுஅவள் அழாமல் பார்த்துக் கொள்வான்.

இன்றோ அவளை அழவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குமே அது கஷ்டமாகத் தானிருந்தது.

 

 

“எதுக்கு இப்படி அழுது உடம்பை கெடுத்துக்கற. போதும் விடு” என்றான். அவன் தன் மீது அக்கறையாய் பேசுகிறான் என்று தெரிந்தாலும் அதில் ஒட்டாததன்மை இருப்பதை அவளால் உணர முடிந்தது.

 

 

அவளால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. “ப்ளீஸ் ரதி போதும்… நீ இப்படி அழறது எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும். அப்புறம் உன்னிஷ்டம்” என்று அவன் சொல்லவும் தான் அழுகை லேசாய் மட்டுப்பட்டது அவளுக்கு.

 

 

ஆனாலும் விசும்பல் இன்னமும் நின்றபாடில்லை. அப்போது முகுந்தனும் அவன் அன்னை அபிராமியும்அஜியை தூக்கிக்கொண்டு உள்ளே வந்தனர்.

 

 

“என்னம்மா என்னாச்சு என்கிட்ட கூட நீ எதுவுமே சொல்லவேயில்லை. அத்தை கூட உன் முகத்தை பார்த்து அப்போவே சந்தேகமா தான் சொன்னாங்க”

 

 

“நான் தான் மட்டி மாதிரி என்னன்னு விசாரிக்காம இருந்திட்டேன். உனக்கு எப்போமா தெரியும் ஏன் என்கிட்ட சொல்லலை” என்று அவர் வாஞ்சையாய் கேட்கவும் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“இந்த மாதிரி நேரத்துல எதுக்கும்மா அழற, பாரு குழந்தை உன்னை பார்த்து அவனும் அழறான்” என்று அஜியை சுட்டிக்காட்ட நிமிர்ந்து அபராஜித்தை பார்த்தாள்.

 

 

அவனை நோக்கி கையை நீட்ட சட்டென்று அவன் அன்னையிடம் தவ்வினான் அவன்.

 

 

அபராஜித்தை வாங்கியவள் பிரணவை நோக்கி குழந்தையைநீட்டினாள். பிரணவ் ஒன்றும் புரியாமல் விழிக்க “குழந்தையை பிடிங்க” என்றாள். அவனோ குழந்தையை வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

“அம்மாகிட்ட இருந்து எப்படி குழந்தையை பிரிக்கக் கூடாதோ அது மாதிரி தான் அப்பாகிட்ட இருந்தும் பிரிக்க கூடாதுன்னு எனக்கு புரிஞ்சுடுங்க. அவனை வாங்குங்க”

 

 

“அவன் அப்பா அப்பான்னு தேடும் போதெல்லாம் நான் எங்கப்பாவை எவ்வளவு மிஸ் பண்ணேன்ங்கறது தான் எனக்கு ஞாபகம் வந்துது”

 

 

“அன்னைக்கு ஏர்போர்ட்ல வைச்சு உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். ப்ளீஸ் நம்ம குழந்தையை முதல்ல கைல வாங்குங்க”

 

 

“நீங்க என்னை மன்னிக்கலைன்னா கூட பரவாயில்லை. அவனை வாங்கிக்கோங்க” என்று அழுதவாறே சொல்லியவள் மாறியிருக்கிறாள் என்று புரிந்தது.

 

 

அதற்கு மேலும் அவளை கஷ்டப்படுத்த எண்ணாதவன் அஜியை கையில் வாங்கி இறுக அணைத்துக் கொண்டான்.

 

 

அபராஜித்தும் அவன் தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தை எச்சில் படுத்திக் கொண்டிருந்தான்.

 

 

அந்த காட்சியை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தாள் மனோ. பின்னர் நர்ஸ் வந்து அவளை டெஸ்டிற்கு அழைத்துச் செல்ல உடன் அபிராமி சென்றார்.

 

 

“டேய் என்னடா அவளை இப்படி அழவிட்டு வேடிக்கை பார்க்கிற. எனக்கே மனசுக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு தெரியுமா” என்றான்முகுந்தன்.

 

 

“எனக்கு மட்டுமென்ன அவளை அழ வைக்கணும்ன்னு வரமா என்ன?? அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் ஒதுங்கி போனேன். அஜியை நான் தூக்குறது கூட அவளுக்கு கஷ்டமா இருக்குன்னு தானே பேசாம இருந்தேன்”

 

“அவளுக்கு இப்போ தான் என்னை புரிய ஆரம்பிச்சிருக்கு. அவளுக்கு இந்த இடைப்பட்ட காலம் என்னை புரிய வைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.கொஞ்சம் மாறியிருக்கா பார்ப்போம்” என்றான்.

 

 

“ஏன்டா இன்னும் நம்பிக்கை இல்லாத மாதிரியே பேசுற. உன் மேல அவளுக்கு பிரியம் இல்லாம எல்லாம் இல்லை. உங்கம்மாவும் அப்பாவும் இங்க வந்திருந்தப்போ அவங்ககூடவே வந்து இருக்கச் சொன்னாங்க”

 

 

“நீ இல்லாம வர மாட்டேன்னு சொல்லிட்டா தெரியுமா!! அன்னைக்குஅவங்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா தெரியுமா!!”

 

 

“என்ன?? என்ன சொன்னே?? எங்கம்மா இங்க வந்தாங்களா?? எப்போ வந்தாங்க?? என்கிட்ட யாருமே சொல்லலை??என்ன சொன்னாங்க நீயாச்சும் சொல்லுடா இப்போ…” என்றான் பிரணவ்.

 

 

அதற்குள் நர்ஸ் வந்து பிரணவை அழைக்க அவன் உடன் சென்றான். மருத்துவரின் எதிரில் கணவன் மனைவி இருவரும் அமர்ந்திருக்க அவர் சில பல அறிவுரையை இலவசமாக பிரணவிற்கு வழங்கினார்.

 

 

அதில் முக்கியமாய் பிரணவ் மனைவியை அழவைக்க கூடாதாம். சண்டை போடக் கூடாதாம். உடல் நலமில்லாதவளை அக்கறையாய் பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகள் அவனுக்கு வழங்கப்பட்டது.

 

 

பிரணவ் ஒன்றும் சொல்லாமல் எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டினான். “டாக்டர் எனக்கு முதல் பிரசவத்துக்கே அவர் தான் எல்லாம் பார்த்தார்” என்றாள் மனோ இடையிட்டு.

 

 

“அதுக்காக ரெண்டாவது பிரசவத்துக்கு பார்க்கக் கூடாதுன்னு இருக்கா என்ன… நீ சும்மா இரும்மா பிள்ளை பெத்துக்கறவங்களுக்கு தான் வலி என்னன்னு தெரியும்”

 

 

“உன் நல்லதுக்கு தான் இதெல்லாம் அவருக்கு சொல்றேன். என்ன மிஸ்டர் பிரணவ் நான் சொல்றது எல்லாம் புரியுது தானே” என்றார் மருத்துவர்.

 

 

“நான் பார்த்துக்கறேன் டாக்டர். இவ்வளோ நாளா வேற வெளியூர்ல இருந்தேன் இப்போ தான் ட்ரான்ஸ்பர் ஆச்சு. இனிமே எங்கயும் போக மாட்டேன். ஐ வில் டேக் கேர் ஆப் ஹர்”

 

 

“பேபிதுடிப்பு எல்லாம் நல்லாயிருக்கு. இவங்க தான் ரொம்ப அனிமிக். இவங்க வேலைக்கு போறதா சொன்னாங்க.வேலையை விட்டு பேசாம வீட்டில இருக்கச் சொல்லுங்க. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் நல்லா சாப்பிடட்டும். அது தான் இப்போ முக்கியம்”

 

“வெளிய நிக்கறாங்களே அவங்க தான் உங்கம்மாவாமா அவங்களை கொஞ்சம் வரச் சொல்லுங்க” என்றவர் அபிராமியை வேறு அழைத்து சில பல அறிவுரைகள் கொடுத்தார்.

 

 

“நான் இவ்வளவு தூரம் யாருக்கும் சொன்னதில்லை. டாக்டர் அருண்க்கு நீங்க வேண்டியவங்க அப்படிங்கறதால தான் இவ்வளவு சொல்லிட்டு இருக்கேன்”

 

 

“அடுத்த மாசம் நான் எழுதி இருக்கற தேதில செக்கப்க்கு வந்திடுங்க. இந்த மெடிசன்ஸ் எல்லாம் கண்டினியூ பண்ணுங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

 

 

பிரணவிற்கு இப்போது அடுத்த குழப்பம் எங்கு போவது என்று. ஏர்போர்ட்டில் நின்று தவித்தது போல் தவித்தான்.

 

 

அவனே திருச்சியில் ஹோட்டலில் தான் தங்கியிருக்கிறான். அங்கு அழைத்துச் செல்ல முடியாது. இங்கு தனியே விட்டுச் செல்லவும் அவனுக்கு மனமில்லை.

 

 

“என்ன பிரணவ் யோசனை பண்ணிட்டு இருக்க. மனோவை எங்க கூட்டிட்டு போறதுன்னு யோசனை பண்றியா??” என்றார் அவன் முகம் பார்த்த அபிராமி.

 

ஆமென்பதாய் தலையசைத்தான் பிரணவ். “இல்லை நான் திருச்சில ஹோட்டல்ல தான் தங்கிருக்கேன். இங்க தனியா விட்டு போக முடியாது. அதான் யோசிக்கறேன்” என்றான்.

 

 

“ஏன்பா இங்க நாங்க எதுக்கு இருக்கோம். நீ எதுக்கு அங்க ஹோட்டல்ல தங்கிக்கிட்டுஇங்கவே தங்கிடேன்ப்பா”

 

 

“இல்லம்மா எனக்கு அங்க வேலை அதிகம். நான் இங்க வந்து போகவே தினம் மூணு மணி நேரம் ஆகுது” என்றான் தவிப்பாய்.

 

 

“மனோ எங்க  வீட்டில இருக்கட்டும். நீஉனக்கு நேரம் கிடைக்கும் போது வந்து பாரு. டாக்டரம்மா சொன்னதை தான் நீயும் கேட்டல்ல. அலைச்சல் வேணாம் அவளுக்கு”

 

 

“எனக்கு ஒரு பொண்ணு இருந்து நான் பார்த்திருந்தா எப்படி பார்த்திருப்பேனோ நான் அப்படி பார்த்துக்கறேன்ப்பா நீ கவலைப்படாதே” என்றார் அபிராமி.

 

 

“டேய் பிரணவ் அம்மா சொல்றதும் சரி தான்டா. ஆனா உனக்கு என்ன வசதின்னு நீயும் யோசிச்சுக்கோ” என்று நண்பனை புரிந்தவனாய் சொன்னான் முகுந்தன்.

 

 

“சரிம்மா அவ இங்க இருக்கட்டும். நான் டைம் கிடைக்கும் போதெல்லாம் இங்க வர்றேன். லீவு நாள்ல நான் இங்கவே தங்கிக்கறேன்”

 

 

“வீடு காலி பண்ணவேண்டாம் நா… நான்…” என்றுவிட்டு மனோபாரதியை பார்த்தான். அவனுக்கு மீண்டும் குழப்பமே அவனால் சட்டென்று எதையும் மறக்க முடியவில்லை.

 

 

அவள் உடன் இல்லாத நாட்களில் பார்க்கவும் பேசவும் தோன்றிய எண்ணமெல்லாம் அவளருகில் இருக்கும் போது அவளை பார்க்கும் போது அவள் பேசியதை மட்டுமே ஞாபகப்படுத்தியது.

 

 

வீட்டிற்கு போவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் நின்றவனை மனோவால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. எல்லாம் தன்னால் தான் என்று எண்ணியவளுக்கு மீண்டும் கண்கள் கலங்கியது.

 

 

“அவர்வீட்டுக்கு வருவார்ம்மா நான் வீடு காலி பண்ணலை. தினமும் நைட் அங்க போய் படுத்துக்கறேன்ம்மா. பகல்ல நம்ம வீட்டில இருக்கேன் ஓகே தானேம்மா” என்றாள் மனோ.

 

 

பிரணவின் கையுடன் தன் கையை சேர்த்துக் கொண்டு ‘ப்ளீஸ் மன்னிச்சிருங்க’ என்று கண்களால் மன்னிப்பை யாசித்தாள்…. இனி…

Advertisement