Advertisement

அத்தியாயம் –28

 

 

அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்தவள் குழந்தையை தேட அபிராமி எதிரில் வந்தார். “என்னம்மா யாரை தேடுற குட்டிப்பையனையா!!” என்றார்.

 

 

“ஆமாம்மா அழறான்னு சொன்னீங்களே எங்க போய்ட்டான்!! தூங்கிட்டானா!!” என்றாள் மனோ.

 

 

“இல்லைம்மா இப்போ தான் முகுந்தன் வந்தான்.குழந்தை அழுதிட்டே இருக்கவும் கடைக்கு கூட்டிட்டு போறேன்னு இப்போ தான்ம்மா கூட்டிட்டு போறான்” என்று அபிராமி சொல்லவும் சற்றும் தாமதியாமல் முகுந்தனின் கைபேசிக்கு அழைத்தாள்.

 

 

பிரணவ் தன் மனைவியை சீண்டவே அப்படி சொல்லியிருந்தான். ஆனால் அவள் வீடு வரும் வரை அவளை பின் தொடர்ந்திருந்தான்.

 

 

அவள் அங்குமிங்கும் அலைபாய்வதை காரில் இருந்தவாறே பார்த்துக் கொண்டுதானிருந்தான்.

 

 

என் மேல அந்தளவுக்கு தான் நம்பிக்கையா என்று நினைக்கும்போது நெஞ்சில் லேசாய் ஒரு வலி எழத் தான் செய்தது.

 

 

முகுந்தனுக்கு அழைத்த மனோ குழந்தையை உடனே அழைத்துவருமாறு கூற அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் வீட்டிலிருந்தான்.

 

 

குழந்தையை கண்டதும் கைநீட்டி அவனை தூக்கிக் கொண்டவளுக்கு அப்போது தான் நெஞ்சில் ஒரு நிம்மதி பிறந்தது.

 

 

பிரணவ் தன்னை சீண்டவே அப்படி சொல்லியிருக்க வேண்டும் என்பதும் அப்போது தான் புரிந்தது. அபிராமியிடமும் முகுந்தனிடமும் சொல்லிக்கொண்டு அவள் வீட்டை நோக்கி நடைப்போட்டாள்.

 

 

தான் என்ன நினைக்கிறோம் எதற்காக இப்படி நடக்கிறோம் என்று அவளுக்கே அவள் மேல் கோபம் வந்தது. குழந்தையை அவன் தூக்கினால் தான் என்ன அதிலென்ன தவறிருக்கிறது.

 

 

தகப்பன் குழந்தையை தூக்கக் கூடாது என்று சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது.அன்றுவிமான நிலையத்தில் கூட தான் அவனிடம் அதிகப்படியாய் நடந்துகொண்டோம் என்று வெகு நிதானமாய் மனம் உணர ஆரம்பித்தது.

 

 

தான் அவனை தவறாக கணிக்கிறோம் என்ற குற்றவுணர்வு நெஞ்சில் எழுந்தது. அன்று வெகு நேரம் பிரணவின் நினைவில் உறக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் மனோ.

இன்று மட்டுமல்ல தான் எப்போதுமே அவனிடத்தில் அதிக நம்பிக்கை வைத்ததில்லையோ என்ற எண்ணம் எழுந்தது அவளுக்கு.

 

 

மனோவிற்கு எதையும் எடுத்து சொல்ல ஆளில்லை. இது சரி இது தவறு என்று சுட்டிக்காட்ட இப்போது பெற்றோரும் இல்லை, உடன் பிறந்தோர் என்று யாருமில்லை.

 

 

அவளின் பள்ளி கல்லூரியில் எல்லாம் அவள் பெரிதாய் நட்பை சம்பாதித்திருக்கவும் இல்லை. அவளின் உண்மையான நட்பென்றால் அது ஷாலினி மட்டுமே.

 

 

அவளுமே மனோ ஆஸ்திரேலியாவில் இருந்த போது திருமணமாகி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டாள். அவளோடான தொடர்பு அங்கேயே முடிந்து போயிருந்தது.

 

 

தனக்கு யாருமில்லை என்பதே அவளுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்திருந்தது. பிரணவிடம் அவள் சண்டையிட்டது முட்டாள்தனமாகவும் சிறுபிள்ளைத்தனமாக கூட தோணலாம்.

 

 

ஆனால் அவளை பொறுத்தவரை அது சரியே. அவள் கேள்வி கேட்கவும் உரிமை கொண்டாடவும்தனக்கென்று இருக்கும் இரண்டு உயிர்களில் ஒரு உயிர் அவன் தானே.

 

எழுதியவன் ஏட்டை கெடுத்தான் படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பர் மனோ விஷயத்தில் அவள் வாய் அவள் வாழ்க்கையை கெடுத்திருந்தது.

 

 

பிரணவிடம் தான் நடந்து கொண்ட முறை தவறென்று புரிந்தாலும் அதை சீர் செய்யும் வழி தெரியாது விழித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

 

அவனிடம் பேசினால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. தான் அவனை அந்தளவிற்கு கஷ்டப்படுத்தியிருக்கிறோம் என்று புரிந்தது அவளுக்கு.

 

 

அவனுக்கு உண்மையில் அவள் மேல் வருத்தம் இல்லாதிருந்தால் நிச்சயம் அவளிடம் அவன் பேச முயற்சித்திருப்பான் அல்லது பார்க்க முயற்சி செய்திருப்பான் என்பது அவள் எண்ணம்.

 

 

மனோ தன்னை பற்றியும் தன் கணவன் பற்றியும் முழுதாய் இப்போது தான் உணர ஆரம்பித்திருந்தாள். காலம் கடந்த ஞானோதயம் வந்து என்ன புண்ணியம், எப்படி நடந்ததை சரி செய்வது என்று தெரியவில்லை அவளுக்கு.

 

 

இவ்வளவு நாட்களாய் வராத எண்ணங்கள் எல்லாம் முட்டி மோதிக் கொண்டு அவள் ஆழ்மனதில் இருந்து வெளி வந்துக் கொண்டிருந்தது.

 

அவனை பிரிந்த இத்தனை நாட்களில் தனக்கு வராத எண்ணங்கள் எல்லாம் இன்று மட்டும் ஏன் வெளிப்படுகிறது. அவனை பார்த்த பின்னே தான், தான் எதை இத்தனை நாளாய் இழந்திருக்கிறோம் என்பதே அவளுக்கு புரிந்தது.

 

 

அது நாள் வரை ஒரு ஜடம் போல் தினசரி வாழ்வை கழித்தவளுக்கு அவனை கண்டப்பின்னே தான், தான் தொலைத்தது எது என்பதே உணர ஆரம்பித்திருந்தாள்.

 

 

இதற்கு முன்பும் கூட அவனில்லாமல் அவள் இருந்திருக்கிறாள் தான் ஆனால்அப்போது அவன் மேல் எந்த கோபமும் இருந்ததில்லை. தினமும் ஒரு முறையாவது அவன் குரலை கேட்க முடிந்தது.

 

 

அவனை ஸ்கைப்பில் பார்க்க முடிந்தது. கடந்த இரண்டு மாதங்களாய் அடியோடு எந்த தொடர்பும் இல்லாதிருந்ததில்தன்னையே அவள் உணரும் சந்தர்ப்பமாய் அமைந்தது இன்று அவனை பார்த்தது.

 

 

அவனைப் பார்த்ததும் ஓடிச்சென்று அவனை கட்டிக்கொள்ள வேண்டும் என்று தான்முதலில் அவளுக்கு தோன்றியிருந்தது. அதையெல்லாம் நினைக்க நினைக்க அவன் மேல் தனக்கிருந்த நேசத்தை அன்பை காதலை உணர்ந்தாள்.

 

 

தனக்குள் இருந்த உயிர்ப்பு அவனை கண்டதும் தான் உணர்ந்திருந்தாள் அவள்.ஏதேதோ எண்ணங்கள் வந்து அவளுக்குள் குழப்பத்தை தான் அதிகம் விளைவித்தது. எப்போது உறங்கினாள் என்பதே அவளறியவில்லை.

 

 

விடிந்து வெகு நேரம் கழித்தே எழுந்திருந்தாள். அஜி அதற்குள் எழுந்திருந்தான் போலும். குழந்தை முதலில் எழுந்துவிட்டால் அந்த அறையையே சுற்றி சுற்றி வந்து விளையாடுவான் எப்போதும்.

 

 

அன்றும் அது போலவே விளையாடிக்கொண்டிருந்தவன் மனோவின் அருகே வந்து“அம்மா… அம்மா… ப்பா ப்பா…” என்று சொல்லி கன்னத்தை தட்ட பதறிக் கொண்டு எழுந்து அமர்ந்தவள் சுற்று முற்றும் பார்த்தாள்.

 

 

“என்ன கண்ணா அப்பாவா எங்க?? அப்பா எங்க??” என்று கேட்க “அப்பா வா… அப்பா வா…” என்று வாசலை நோக்கி தன் உள்ளங்கையை விரித்து விரித்து அழைத்ததை பார்த்தும் மனோவிற்கு கண்ணீரே வந்துவிட்டது.

 

 

மனோ வேகமாய் எழுந்து கதவை திறக்க அங்கு யாருமில்லை. குழந்தை பிரணவை தேடுகிறான் என்று புரிந்தது.

 

 

குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குஅடக்கமாட்டாமல் அழுகை வந்தது. ‘நான்எங்கப்பாவை மிஸ் பண்ற மாதிரி தானே இவனுக்கும் இருக்கும்’

‘சின்ன குழந்தை வாய்விட்டு சொல்லத் தெரியலை ஆனா எவ்வளவு தேடுறான்’ என்று நினைக்கும் போது அவளால் தாங்கவே முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தன் முன் கோபமும் யோசிக்காமல் பேசுவதுமே காரணம் என்பதை உணர்ந்தே தான் இருந்தாள்.

 

 

‘எத்தனை முறை சொல்லியிருப்பான் அவசரப்படாதே நிதானமாய் இரு என்று ஆத்திரம் வந்தால் என் புத்தி மழுங்கி விடுகிறதே. கோபம் கண்ணை மறைத்து விடுகிறதே’ என்று தன்னையே எண்ணி நொந்து கொண்டிருந்தாள்.

 

 

‘நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன், அன்னைக்கு குழந்தையை அவர்கிட்ட கூட கொடுக்காம அவரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்’ என்ற நினைக்க நினைக்க மனதில் அழுத்தமும் பாரமும் அதிகமாகியது.

 

 

அன்று விடுமுறை தினமாகி போனதால் அவளின் எண்ணம் முழுதும் பிரணவே ஆக்கிரமித்துக் கொண்டான்.

 

 

மதிய உணவு சமைக்கக் கூட தோன்றாமல் அப்படியே நிச்சராந்தியாய் அமர்ந்திருந்தாள். அஜிஅருகே வந்து “ம்மா…” என்று அழைக்கவும் தான் மதிய உணவு பற்றியஎண்ணம் வந்து சமைக்கவே சென்றாள்.

 

 

சற்று நேரத்தில் முகுந்தன் கதவை தட்டினான். “வாங்கண்ணா” என்று அழைத்தவளின் குரலில் என்ன இருந்தது என்பது அவனுக்கு புரியவில்லை.

 

 

சட்டென்று நினைவு வந்தவளாய் “அண்ணா நான் இங்க இருக்கறது அவருக்கு தெரியுமா?? நீங்க அவர்கிட்ட சொல்லிட்டீங்களா??” என்றாள்.

 

 

“சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு நான் எப்படிம்மா சொல்லுவேன்…” என்றான் முகுந்தன்.

 

 

“அண்ணா நீங்க நிஜமா தான் சொல்றீங்களா??”

 

 

“அதிலென்னம்மா உனக்கு சந்தேகம்” என்றவன் அப்போது அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த மீராவின் தலை மேல் அடித்து “என் டார்லிங் மேல சத்தியமா சொல்றேன்ம்மா” என்றான்.

 

 

“மாமா எதுக்கு சத்தியம் பண்ணீங்க நீங்க இப்போ??” என்று விழித்தாள் மீரா.

 

 

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன் நீ கிளம்பு” என்று அவளை விரட்டினான்.

 

 

“எப்போ பார்த்தாலும் என்னை விரட்டிட்டே இருங்க. இதுக்கெல்லாம் நீங்க பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க” என்றுவிட்டு முறைத்துக் கொண்டே சென்றாள் அவள்.

 

 

“சரி சரி அப்போ பார்த்துக்கலாம்” என்றுவிட்டு முகுந்தன் மனோவை பார்த்தான்.

 

 

“என்னாச்சு மனோ?? நீ இவ்வளவு தூரம் கேட்கிறதை பார்த்தா என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையாம்மா??” என்றான்.

 

 

“இல்லை அது வந்து நான்… நான் நேத்து அவரை பார்த்தேன்” என்றாள்.

 

 

“எங்கம்மா இங்கயா??”

 

 

“ஹ்ம்ம் ஆமாம் அண்ணா. என்னோட வேலை பார்க்கற ரம்யா ஏதோ கேஸ் விஷயமா ஆபீசர் ஒருத்தர் வரச் சொன்னாருன்னு என்னையும் துணைக்கு கூப்பிட்டா, அங்க போய் பார்த்தா இவர் அங்க இருக்காரு”

 

 

“என்ன பிரணவ் இவ்வளவு தூரம் வந்திருக்கானா?? வந்தவன் ஏன் என்னை பார்க்க வரலை. எனக்கு ஒரு போன் கூட பண்ணவேயில்லை” என்றவனுக்கு லேசாய் கோபம் எட்டிப்பார்த்தது.

 

 

“நிஜமாவே அவர் உங்களுக்கு போன் பண்ணலையாண்ணா” என்று மீண்டும் மனோ நம்பாத தன்மையாய் கேட்கவும் முகுந்தனுக்கு சற்றே எரிச்சல் கூட வந்தது என்ன பெண்ணிவள் இப்படி கூட ஒருத்தி நம்பாமல் பேசுவாளா என்றிருந்தது அவனுக்கு.

 

 

“தப்பா நினைக்காதீங்கண்ணா நான் திரும்ப திரும்ப கேட்குறேன்னு. நேத்து அவர் வீட்டுக்கு வர்றதா வேற சொன்னாரு. அதனால தான் நீங்க அவர்கிட்ட என்னை பத்தி சொல்லியிருப்பீங்களோன்னு கேட்டேன்”

 

 

‘ஓ அது தான் காரணமா!! அதனால் தான் நேற்று அவ்வளவு பதட்டமா!!’ என்று எண்ணிய முகுந்தன் ‘இவளை இப்படியே விடக்கூடாது கொஞ்சம் வேப்பிலை அடிச்சா தான் சரியா வருவா’ என்று நினைத்துக் கொண்டு மெதுவாய் அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

 

 

“அனேகமா அவனுக்கு நீ இங்க இருக்கறது இதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்ம்மா. அப்படி பார்க்காதம்மா”

 

 

“நான் சொல்லி அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. நீ தான் சொன்னியே அவன் சிபிஐன்னு, மே பே அவன் அதிகாரத்தை பயன்படுத்திக் கூட கண்டுப்பிடிச்சிருக்கலாமேம்மா”

 

 

‘அப்படியும் இருக்குமோ’ என்ற எண்ணத்தில் அப்போது தான் யோசிக்க ஆரம்பித்தாள் மனோபாரதி.

 

 

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத மனோ. நீ கொஞ்சம் ரொம்ப அவசரப்படுறம்மா எல்லா விஷயத்திலையும்”

 

 

“இங்க பாரு இதை நான் சொல்றேன்னு உனக்கு வருத்தமா இருக்கலாம். உனக்கு எடுத்து சொல்ல யாருமில்லைங்கறதுனால உன்னோடஅண்ணனாஇருந்து நான் இதை சொல்றதா நினைச்சுக்கோ”

 

 

“என்னோட தங்கை தப்பு செஞ்சா அதை எடுத்து சொல்ல வேண்டிய கடமை எனக்கிருன்னு நினைக்கிறேன்” என்றவன் சற்று இடைவெளிவிட்டான்.

 

 

“நீ எப்பவுமே உன்னோட கண்ணோட்டத்துலையே எல்லா விஷயத்தையும் பார்க்கற!! பிரணவ் பக்கமும் எதாச்சும் நியாமான காரணம் இருக்கும் இல்லை இருக்கலாம்னு உனக்கு தோணவேயில்லையாம்மா”

 

 

“அப்படி தோணாம எல்லாம் இல்லைண்ணா. அவர் என்கிட்ட கல்யாணத்துக்கு அப்புறமாச்சும் சொல்லியிருக்கலாங்கறது தான் என்னோட ஆதங்கம்”

 

 

“இப்போயோசிச்சு பார்த்தா எனக்கு அவர் மேல பெரிசா எந்த கோபமும் இல்லைன்னு தோணுது. ஆனாலும் ஏதோ ஒண்ணு மனசை போட்டு இன்னமும் வருத்திக்கிட்டு இருக்கற உணர்வு இருக்கு” என்று மனதை மறைக்காமல் சொன்னாள்.

 

“என்கிட்ட எதுவா இருந்தாலும் சொல்லியிருக்கலாம் தானே அண்ணா. எனக்கு அவர் தானே எல்லாம்ன்னு நினைச்சேன்”

 

 

“நடந்ததுல என் தப்பு என்ன இருக்குண்ணா. நான் பேசினது தப்பு தான் அதெல்லாம் என்னோட ஆதங்கத்தோட வெளிப்பாடு தானே அதைக் கூட நான் காட்டக் கூடாதா”

 

 

“நான் அவரை ரொம்பவே கஷ்டப்படுத்தியிருக்கேன்னு எனக்கே தெரியுது!! ஆனா அதை எப்படி நேர்ப்படுத்துறதுன்னு எனக்கு புரியவே இல்லை அண்ணா!! எனக்கு இதை எடுத்து சொல்ல ஆளில்லை”

 

 

“எங்கப்பாம்மாவுக்கு அப்புறம் எனக்கு நல்லது கெட்டது எல்லாம் அவர் தான் சொல்வாருண்ணா. ஆனா அதையெல்லாம் அவர் மேல இருந்த கோவத்துல காத்தோட விட்டுட்டேன்”

 

 

“ஹ்ம்ம்சரிஅதெல்லாம் விடும்மா!!” என்றவன்“கடைசியா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். புரிஞ்சுக்க முயற்சி பண்ணும்மா”

 

 

“உனக்கு யாருமேயில்லை சரி, ஆனா அவனுக்கு எல்லா உறவுகள் இருந்தும் உன்னைஅவன் விட்டுக்கொடுக்கவும் இல்லை எங்கயும் விட்டுப் போகவும் இல்லை”

 

“எப்பவும்உன்னோடவே தானே இருந்தான். அது ஏன் உனக்கு தோணவேயில்லை” முகுந்தன் சொல்லிய வார்த்தையின் அஸ்திரம் நேரே சென்று அவள் இதயத்தை தைத்து கண்களில்கண்ணீரை வரவழைத்தது.

 

 

ஏற்கனவே தன் மீதிருந்த தவறை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டிருந்தவளுக்கு அவன் சொல்லியது வலியை கொடுத்தது.

 

 

“நேரமாச்சு மனோ உன்கிட்ட நாளைக்கு புடவை எடுக்க போகலாம்ன்னு அம்மா சொல்லிட்டு வரச்சொன்னாங்க. அதுக்கு தான் வந்தேன். நான் கிளம்பறேன்” என்று பேச்சை மாற்றி அவளை யோசிக்கவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் முகுந்தன்.

 

____________________

 

 

பிரணவ் அவன் வேலையில் முழ்கியிருந்தான்.அவனுக்கு மெயிலில் வந்திருந்தகோப்புகளில் பார்வையை பதித்திருந்தவனுக்கு அவன் எடுத்திருக்கும் வழக்கின் நுனி பிடிப்பட்டது.

 

 

ஆனால் அதில் சம்மந்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை பார்த்தவனால் சிலவற்றை நம்ப முடியவில்லை.

 

 

அதை பற்றிய விசாரணையை சம்மந்தப்பட்டவர்களிடம் சென்று கேட்டறிந்தால் மட்டுமே ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று தோன்ற அன்றிலிருந்து தினம் ஒருவராய் விசாரணைக்கு அழைத்து விபரங்களை கேட்டறிந்தான்.

 

 

இரண்டு வாரங்களாய் அவனை இந்த வழக்கு முழுவதுமாக தின்றுக் கொண்டிருந்தது. உறங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் அதை பற்றிய சிந்தனையே அவனை சுற்றி சுற்றி வந்தது.

 

 

கிட்டத்தட்ட அனைவரையும் விசாரித்து முடித்து ஒருவர் மட்டுமே பாக்கியிருந்த நிலையில் பிரணவ் முகுந்தனை அழைத்தான்.

____________________

 

 

முகுந்தன்பேசிவிட்டு சென்ற அன்றிலிருந்தே அவள் அவளாயில்லை. எப்போதும் யோசனையும் குழப்பமுமாகவே இருந்தாள். அவனை பிரிந்ததில் இருந்து மனம் அவனையே தேடிக் கொண்டிருந்தது.

 

 

இதில்அவனை நேரில் பார்த்ததும் முகுந்தன் பேசியதும் உடன் சேர்ந்து கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக தன் வசமிழந்துக் கொண்டிருந்தாள் மனோ.

 

 

பிரணவை பார்த்த பின்பு வந்த நாட்களில் தினமும் ஒரு முறையாவது அவனை மீண்டும் பார்க்கக் மாட்டோமா என்று போகும் போதும் வரும் போதும் சுற்றுமுற்றும் அவள் தேடாத நாளில்லை.

 

 

இரண்டு வாரங்களாய் தினமும் தொடர்கதையாய் அவனை தேடி ஓய்ந்தவளின் கண்கள்ஸ்டாப் ரூமில் அமர்ந்தவாறு சோர்வாய் மூடிக் கொண்டிருந்தது.

 

 

ஏதோவொரு உள்ளுணர்வு உறுத்த கண்களை சட்டென்று மலர்த்தி பார்த்தாள். அந்த அறையின் வாயிலில் பிரணவ் நின்றிருந்தான்.

 

 

ஒரு கணம் காண்பது கனவோ என்ற எண்ணத்தில் கண்ணை கசக்கி மீண்டும் பார்க்க அவனே தான் நின்றிருந்தான்.

 

 

தன்னையுமறியாமல் அவள் முகம் மலர்ந்து மலர்ச்சியை காட்டியது. தன்னைத் தான் காண வந்திருக்கிறான் என்ற எண்ணமே பெரும் உவகையாய் இருந்தது அவளுக்கு.

 

 

“என்ன சார் இங்க நின்னுட்டு இருக்கீங்க??” என்ற ரம்யாவின் குரல் கேட்கும் வரை மனோவிற்கு எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த உணர்வு சட்டென்று வடிந்தது போலானது.

 

 

“உங்களை தான் பார்க்க வந்தேன்” என்றவனின் கண்கள் ரம்யாவை விடுத்து அமர்ந்திருந்த மனோபாரதியின் மேலேயே இருந்தது.

 

 

ரம்யாவின் குரல் கேட்டதுமே மனோ தலை தொங்கிப் போனது. சற்றே நிமிர்ந்து அவள் பிரணவை பார்த்திருந்தால் அவனை புரிந்திருக்கும்.

 

 

எப்போதும் போல் இப்போதும் அவள் கண்ணை கோபம் மறைத்ததுவோ!! அல்லது ஏமாற்றம் மறைத்ததுவோ!!

 

 

“சொல்லுங்க சார்!! அன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்ச எல்லா விஷயமும் சொல்லிட்டனே” என்றாள் அவள்.

 

 

“கொஞ்சம் அந்த பக்கம் போய் பேசலாமா!!” என்றான்.

 

 

“ஹ்ம்ம் வாங்க சார்” என்றவள் அவனை அழைத்துக் கொண்டு நிழலாயிருந்த மரத்தினடியில் சென்று நின்றாள்.

 

 

மனோவிற்கு உள்ளூர பயங்கர புகைச்சலாக இருந்தது. அவன் தன்னை பார்க்க வரவில்லை என்றாலும் கூட அவளுக்கு இப்படி இருந்திருக்காதோ!! என்னவோ!! இருவரும் பேசிக் கொண்டிருந்ததை ஸ்டாப் ரூமில் அமர்ந்தவாறே நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

 

 

கையில் இருப்பதை எல்லாம் தூக்கி விசிறியடிக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு. அது மட்டும் வீடாக இருந்திருந்தால் செய்திருப்பாள்.

 

 

சென்றவர்கள்பத்து நிமிடத்திற்கும் மேலாக அவள் பொறுமையை சோதித்துவிட்டு பின் ரம்யா மட்டும் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

“என்னவாம்அவர்க்கு!!” என்றாள் மனோ மொட்டையாய்.

 

 

“யாரை கேட்கற மனோ??”

 

 

“உன்னை தான் கேட்டேன் வேற யாரை கேட்டன்னு நினைச்ச, அன்னைக்கு இவரை தானே பார்க்க போனோம். இப்போ என்ன திடிர்னு வந்து நிக்கறாரு” என்றாள்.

 

 

“அதுவா அவருக்கு என்னை பிடிச்சிருக்காம் அதை என்கிட்ட சொல்லிட்டு என்னோட விருப்பத்தை கேட்டுட்டு போறாரு” என்றாள் ரம்யா.

 

 

“என்ன?? என்ன சொன்னே?? அவ… அவர் அப்படி சொன்னாரா?? அப்படில்லாம் சொல்லியிருக்க மாட்டார்?? நீ பொய் சொல்ற?? அவர் அப்படி சொல்ல மாட்டார்??”

 

 

“நான் ஏம்மா பொய் சொல்லப்போறேன். அவர் தான்மா சொன்னாரு இதெல்லாம். அன்னைக்கு கூட நீ பார்த்தல்ல உன் முன்னாடி தான் அழகாயிருக்கேன்னு சொன்னாரு” என்ற ரம்யா மனோவையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

“உனக்கு ஏன்டி இப்படி புத்தி போகுது கல்யாணம் ஆனவரை பத்தி எதுக்கு தப்பு தப்பா சொல்ற… அவர் வேற யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டாரு… அன்னைக்கு சும்மா வெறுப்பேத்தணும்ன்னு அப்படி சொன்னார்”

 

 

“உடனே நீ உன்னை சொன்னதா நினைச்சுக்குவியா!! உனக்கு மூளையே இல்லையா!!” என்று படபடவென்று பொரிந்து கொண்டிருந்தாள் மனோ. நல்லவேளையாக ஸ்டாப் ரூமில் அவர்கள் இருவரை தவிர வேறு யாருமில்லை.

 

 

‘அப்படி வழிக்கு வாடி என் ராஜாத்தி!!’ என்று மனதிற்குள் தனக்காக ஒரு சபாஷ் போட்டுக்கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள் ரம்யா.

 

 

“அவர் கல்யாணம் ஆனவருன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று கொக்கி வைத்தாள் அவள்.

 

 

“தெ… தெரியும்…”

 

 

“அவர்க்கு கல்யாணமே ஆகலைன்னு இப்போ தான் சொன்னாரு. நாளைக்கு எங்க வீட்டில வந்து பேசறேன்னு சொல்லியிருக்கார்” என்று வேண்டுமென்றே வெட்கம் போல் காட்டினாள் ரம்யா.

 

 

“ரம்யா போதும் நிறுத்து என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. என் புருஷனை பத்தி நீ இதுக்கு மேல தப்பா பேசின பல்லை பேத்துருவேன் பார்த்துக்கோ” என்று எழுந்து நின்றே விட்டாள் மனோ.

 

 

ரம்யா கொஞ்சம் கூட சலனமில்லாமல்எதிரில் நின்றிருந்தவளை பார்த்தாள். “அவர் உன் புருஷன்னு சொல்றதுக்கு உன்னை இவ்வளோ நாள் வந்து எது தடுத்துது மனோ”

 

 

“அன்னைக்குஉன் போன்ல இருந்து கால் பண்ணிக்கட்டும்மான்னு கேட்டேன்ஞாபகமிருக்கா!! அப்போ போன் பேசிட்டு வைச்சதும் தெரியாம கைப்பட்டு கேலரி ஓபன் ஆகிடுச்சு”

 

 

“அதுல தான் உங்க போட்டோஸ் எல்லாம் பார்த்தேன். செமகோபம் அன்னைக்கு எனக்கு. அப்போவேகேட்கலாம்ன்னு தான் நினைச்சேன்”

 

 

“நீ வேற டல்லா இருந்தியா ஏதோ பிரச்சனை போல இருக்குன்னு பேசாம இருந்திட்டேன். இன்னைக்கு சார் வந்ததும் சும்மா தான் உன்னை போட்டு வாங்கினேன்”

 

“அம்மிணி பொங்கிட்டீங்க போங்க!! சார்கிட்ட கேட்டா அவர் உனக்கு மேல இருப்பாரு போல!! அவர்கிட்ட வார்த்தை வாங்குறதுக்குள்ள தலையால தண்ணி குடிக்கணும் போல!!”

 

 

“நல்ல அழுத்தம்டா சாமி புருஷனும் பொண்டாட்டியும்!! ஜாடிக்கு ஏத்த மூடி தான் போங்க!!” என்று கிண்டலடித்தாள் ரம்யா.

 

 

மனோ வேகமாய் ரம்யாவின் அருகில் வந்தால் கையிலிருந்த நோட்டு புத்தகத்தால் தோழியை நன்றாக நாலு அடி போட்டாள்.

 

 

“மனோ எதுக்கு அடிக்கிற, சொல்லிட்டு அடி வலிக்குது!!” என்றாள் ரம்யா.

 

 

“பக்கி அறிவிருக்கா உனக்கு கொஞ்ச நேரத்துல எவ்வளோ டென்ஷன் பண்ணிட்ட!! எதுல விளையாடுறதுன்னு இல்லை”

 

 

“இன்னும் எதாச்சும் பேசியிருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் உனக்கு என்னை பத்தி”

 

 

“என்ன பண்ணியிருப்ப மனோ??”

 

 

“இப்போ சும்மா தான் லேசா அடிச்சேன். வேற எதுவும் அதிகமா பேசியிருந்த செம மாத்து வாங்கியிருப்ப நீ என்கிட்ட!! தப்பிச்சிட்ட” என்றவள் “ஆமா அவர் எதுக்கு இங்க வந்தாராம்!!” என்றாள் தொடர்ந்து.

 

 

“என்னை பார்க்க தான் வந்திருந்தாரு”

 

 

“போதும் போதும் என்னை வெறுப்பேத்தினது!! என்னன்னு சொல்லு!!”

 

 

“முதல்ல நீ உன் கதையை சொல்லு நான் அப்புறம் சொல்றேன்” என்றுஇழுத்தடித்தாள் அவள்.

 

 

“உனக்குஅப்புறம் சொல்றேன் ரம்யா ப்ளீஸ் சொல்லு!! இப்போ அவர் எதுக்கு வந்தாரு??”

 

 

“அந்த கேஸ் பத்தி அவருக்கு இன்னும் டவுட்ஸ் இருக்கும் போல அதை விசாரிக்க தான் வந்தேன்னு சொன்னாரு”

 

 

“அவ்வளோ தானா!!” என்ற மனோவிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.

 

 

“அன்னைக்கு கேட்டதையே மனுஷன் திருப்பி திருப்பி கேட்குறாரு. எனக்கென்னவோ… எனக்கென்னவோ…” என்று இழுத்தாள்.

 

 

“என்னன்னு சொல்லித் தொலைடி எதுக்கு இந்த இழு இழுக்கற!!”

 

 

“அவர் உன்னைய பார்க்க வந்த மாதிரி தான் தோணுது. நான் பதில் சொன்னதை கவனிச்சாரோ இல்லையோ ஸ்டாப் ரூமையே பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த தினுசுல ஆன்னு ஜொள்ளு வடிய பார்த்திட்டு இருந்தாரு”

 

 

மனோவிற்கு தோழிகள் என்று யாரும் அதிகமாய் இருந்ததில்லை. சென்னையில் இருந்தவரை ஷாலினி மட்டுமே உற்ற தோழியாக இருந்தாள்.

 

 

அவளுமே திருமணம் முடிந்து வெளிநாட்டிற்கு சென்றுவிட தனக்கென்று எந்த நட்பும் இல்லாமல்இருந்தவளுக்கு இப்போது ரம்யா தான் உற்ற தோழியாய் இருந்தாள்.

 

 

ஏனோ ரம்யாவை பார்த்ததும் அவளுக்கு ஷாலினியிடம் பழகும் போது உண்டாகும் உணர்வு ஏற்பட இருவரும் நல்ல நட்புகளாகி போனர்.

 

 

மனோ கிளம்பும் முன் ரம்யாவிடம் அவளைப்பற்றி அனைத்தும் கூறிய பின்னே தான் ரம்யா அவளை விட்டாள்.

 

 

தோழியிடம் சில பல அடிகள்திட்டுகள் அறிவுரைகள்என்று வாங்கிய பின்னேமனம் வெகு நாளைக்கு பின் லேசான உணர்வு. மனதில் இத்தனை நாளாய் அழுத்திக் கொண்டிருந்த பாரம் பகிர்ந்ததில் லேசானது போன்ற உணர்வு.

 

 

ரம்யாவின் பேச்சை கேட்டதும் உள்ளுக்குள் ஜிவ்வென்று பறப்பது போன்ற உணர்வு அவளுக்கு. தனக்கு அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் எங்கு போனது என்று அவளை அவளே கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

உடனே அவனை பார்க்க வேண்டும் போல தோன்றியது. போன் செய்தாவது அவனிடம் பேச வேண்டும். எனக்கு கோபமில்லை என்றாவது அவனிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

 

 

ஆனாலும் இன்னமும் மனதிற்குள் ஏதோவொரு தயக்கம் இருப்பதை அவளால் உணர முடிந்தது. அன்றைய பொழுது சந்தோசமான பொழுதாக இருந்தது அவளுக்கு.

 

 

அதே சந்தோசத்துடன் அவள் வீட்டிற்கு வர பிரணவ் அவள் வீட்டு வாயிலில் நின்றிருந்தான். “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவாறே.

 

 

அவள் இன்னமும் அபராஜித்தை வேறு அழைத்து வரவில்லை இவர் வேறு ஏதோ பேச வேண்டும் என்கிறாரே என்று யோசித்துக் கொண்டே “வாங்க” என்றுவிட்டு கதவை திறந்து உள்ளே சென்றாள்.

 

 

அப்போது தான் கவனித்தாள் அவனுடன் வேறு ஒருவரும் வந்திருப்பதை. ‘யார் இவரு எதுக்காக என்னை பார்க்க வந்திருக்காங்க’ என்று பல கேள்விகள் மூளையை போட்டு குடைய அவனே சொல்லட்டும் என்று எண்ணி அவர்களை அமரச் சொன்னாள்.

 

 

“உங்க அப்பாவைபத்தி கொஞ்சம் விசாரிக்கணும் அதுக்கு தான் வந்திருக்கோம்” என்றான் பிரணவ்.

 

 

மனோவை ஒரு வார்த்தை உசுப்பும் என்றால் அந்த வார்த்தை அப்பா என்பதாகத் தான் இருக்கும். பிரணவ் அப்பா பற்றி என்றதுமே உள்ளே சுறுசுறுவென்று வந்தது அவளுக்கு.

 

 

அவளின் நல்ல மனநிலை எங்கோ காணாமல் போயிருந்தது. ‘என் அப்பாவை பற்றி விசாரிக்க என்ன இருக்கிறது??’

 

 

‘உயிருடன் இல்லாதவரை பற்றி விசாரிக்க என்ன அவசியம்?? அதுவும் உடன் இன்னொருவரையும் அழைத்துக்கொண்டு என்ன பெரிய விசாரணை??’

 

 

“அவரைப்பத்தி என்ன விசாரிக்கணும்??” என்றுஒரு மாதிரிக்குரலில் கேட்டாள்.

 

“கொஞ்சம் உட்காருங்க ப்ளீஸ்”

 

 

“என்னன்னு சொல்லுங்க??” என்றாள் வெடுக்கென்று.

 

 

“கொஞ்சம் உட்காருங்க, சில விஷயம் பேசணும். நான் கேட்டதுக்கு தெரிஞ்ச வரையில் பதில்பதிலை சொல்லுங்க” என்றான்.

 

 

“என்னன்னு நீங்க இன்னும் சொல்லவேயில்லை??” என்றாள் சிடுசிடுப்பாய்.

 

 

“மேடம் சார்எவ்வளவு பொறுமையா பேசுறாரு நீங்க எதுக்கு இவ்வளவு ஹார்ஷா பேசறீங்க. எதுக்கு அவசரப்படுறீங்க!! அவர் சொல்ல வர்றதை கொஞ்சம் பொறுமையா தான் கேளுங்களேன்” என்றான் பிரணவின் உடன் வந்தான்.

 

 

“பரணி ப்ளீஸ் காம் டவுன் ஐ வில் ஹாண்டில் திஸ்”

 

 

அவர்கள் பேசுவதை பார்த்து மனோவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் எதற்காக இந்த விசாரணை என்ற யோசிக்க யோசிக்க அடிவயிற்றில் ஏதோ பிசைவதாய்.

 

 

“உட்காரலாமே!!” என்று இப்போது பிரணவ் சொன்னதுமே தொய்ந்திருந்த கால்கள்உட்காரு என்று கூற அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“உங்கப்பாவும் அம்மாவும் போன கார் ஆக்சிடென்ட் ஆனது சாதாரணமானது இல்லை. அதாவதுதிட்டமிட்டு நடத்தப்பட்டதுன்னு நாங்க சந்தேகப்படுறோம். ஐ மீன் கொலைப்பண்ணப்பட்டிருக்காங்கன்னு”

 

 

“என்ன சொல்றீங்க நீங்க??” என்றவளுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை.

 

 

“எஸ் கொலை தான் அதைபத்தி விசாரிக்கத்தான் நான் இங்க வந்திருக்கேன்” என்றதும் அவள் கைகள் நடுங்க ஆரம்பித்தது.

 

 

அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க வேகமாய் எழுந்து வந்தவள் அவன் சட்டையை பிடித்துக்கொண்டாள்.

 

 

“என்ன சொல்றீங்க நீங்க?? அவங்களை கொல்ல யாருக்கு என்ன அவசியம்?? ஏன் கொன்னாங்க??” என்றவள் அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டிருப்பது அவள் கை நடுக்கத்திலேயே அவனால் உணர முடிந்தது.

 

 

“சொல்லுங்க யாரு அவங்களை கொன்னாங்க?? எதுக்குன்னு சொல்லுங்க??” என்றவள்அவன் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

 

 

அருகில் புதிதாய் ஒருவன் இருப்பதெல்லாம் அவள் எண்ணத்தில் இல்லவே இல்லை. பிரணவ் விசாரிக்க வந்த அதிகாரியாக கூட அவளால் உணர முடியவில்லை.

 

 

எல்லாமே அவனுக்கு தான் தெரியும் என்பது போல் அவனை போட்டு உலுக்கிக் கொண்டிருந்தாள்.

 

 

பிரணவ் அருகிலிருந்தவனை அவசரமாய் பார்க்கும் முன்பே அவன் “மேடம்என்ன பண்றீங்க நீங்க!! கையை எடுங்க!!” என்று கூற அவளோ அதெல்லாம் கண்டுக்கொள்ளவேயில்லை.

 

 

“பரணி நீங்க கார்ல இருங்க நான் பார்த்துக்கறேன்” என்று கூற மற்றவனோ மேலதிகாரி சொல்லும் போது என்ன செய்ய முடியும் என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகரப்போனான்.

 

 

‘சார்நல்லவருன்னு நினைச்சோமே இப்படி கல்யாணம் ஆனா பொண்ணை எல்லாம் பார்க்கறாரு’ என்று யோசித்துக் கொண்டே வெளியில் செல்ல செல்பில் அவர்கள் சேர்ந்திருந்த புகைப்படத்தை பார்த்தான்.

 

 

‘ஆத்தி ஒரு செகன்ட்ல சாரை தப்பா நினைச்சுட்டோமே!! அவரு பொண்டாட்டி அவரு சட்டையை பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன!!’ என்று எண்ணிக் கொண்டு சரேலென்று வெளியேறினான்.

 

 

“ரதி ப்ளீஸ் கொஞ்சம் நிதானமா இரு. நான் சொல்றதை கொஞ்சம் கேளு” என்று கூற அவள் காதில் எதுவும் விழுந்தால் தானே அவன் மீதே சாய்ந்து கொண்டு அழுதவளை என்ன செய்ய என்பது போல் பார்த்தான்.

 

 

“இங்க பாரு ரதி நான் ஆன் டியூட்டில இருக்கேன். என்னோடஅசிஸ்டெண்ட் வேற வந்திருக்காரு. கொஞ்சம் கோவப்படாம எனக்கு கோஆப்பரேட் பண்ணு”

 

 

“முதல்ல உட்காரு” என்றவன் அவளை விலக்க முயற்சி செய்ய அவளோ இன்னமும் அதிகமாய் அவன் மீது ஒண்டினாள்.

 

 

“ரதி… ப்ளீஸ் நான் உன்கிட்ட பேசணும்”

 

 

“ஏன் இப்படி ஆச்சு?? என்னையும் கொன்னுடுவாங்களா?? உங்களுக்கும் எதாச்சும் ஆகிடுமா??” என்றவள் கதறியதை அவனால் தடுக்க முடியவில்லை. ‘இவகிட்ட இப்போ பேசியிருக்க வேண்டாமோ’ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது அவனுக்கு.

 

 

“அப்போ அஜி… அஜி… அ…” என்று இழுக்க சில நாட்களாய் ஒழுங்காக சாப்பிடாமல் தூங்காமல் இருந்ததின் பலன் அவளை மயக்கத்திற்கு கொண்டு சென்றது….

 

Advertisement