Advertisement

அத்தியாயம் –26

 

 

“நீஇங்க எப்படி??” என்ற கேட்டது வேறு யாருமல்ல அவளின் அத்தை மகன் கார்த்திகேயனே. அவனை கண்டதும் முகம்அப்பட்டமாய் வெறுப்பை உமிழ்ந்தது.

 

 

‘இவனெங்கே இங்கே’ என்று யோசித்தவளுக்கு அவனுக்கும் உடுமலைப்பேட்டை தான் சொந்த ஊர் என்பது தாமதமாய் நினைவு வந்தது.

 

 

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது அவனுக்கு எந்த பதிலும் சொல்லாது முகத்தை திருப்பி அமர்ந்திருந்தாள் பேருந்தில். அப்போது தான் வந்து நின்ற பேருந்தென்பதால் கூட்டமில்லாமல் இருந்தது.

 

 

ஓரிருவர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் அமர்ந்திருந்தனர். கார்த்திகேயன் பேருந்தில் ஏறினான். ‘இவன் எதுக்கு உள்ள வர்றான்’ என்று நினைத்தவள் அஜியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

 

 

கார்த்திகேயன் அருகில் வந்தவன்“என்னகேட்டுட்டேஇருக்கேன். பதிலே சொல்லாம திமிரா இருக்க, அவ்வளவு திமிர் வந்திடுச்சா உனக்கு” என்றான்.

 

 

“உனக்கு என்ன வேணும்” என்றாள் அவள்.

 

 

“நீ தான் வேணும் வர்றியா” என்றான் அவனும். மனோவிற்கு சுற்றி இருப்பவர்கள் தங்களை பார்ப்பது போன்ற உணர்வு எழ இவனிடம் எதற்கு பேச வேண்டும் பேசாமல் காசு போனாலும் பரவாயில்லை என்று ஒரு கார்பேசிக் கொண்டு சென்றுவிட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டே அவனை தள்ளிக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினாள்.

 

 

“ஹேய் என்னடி கேட்டுடே இருக்கேன்நீ பாட்டுக்கு இறங்கி போறே. எங்க போய்ட்டான் உனக்கு தாலிகட்டின புருஷன், அவனை ஆளே காணோம்!! விட்டுட்டுபோயிட்டானா!!”

 

 

“ஹேய் எதாச்சும் பேசினே மரியாதை கெட்டிரும்டா” என்றுவீரல் நீட்டி எச்சரித்தாள்.

 

 

“அட பார்றா!! நான் பக்கத்துல வந்து கையை பிடிச்சப்போலாம் வராத கோபம் எல்லாம் இப்போ வருது. யார் சொல்லிக் கொடுத்தா சகலையா!!”

 

 

இவனிடம் நான் ஏன் நின்று பேச வேண்டும் என்று எண்ணியவள் நடக்க ஆரம்பித்தாள். “ஹேய் என்னடிநீ பாட்டுக்கு நடந்து போயிட்டு இருக்க”

 

 

“எனக்கொரு வழி சொல்லிட்டு போ” என்று கூற மனோ சட்டென்று நின்றாள்.

 

 

“என்ன என்ன வழி சொல்லணும் உனக்கு… ஏன் உனக்கு வழி தெரியாதா நான் வந்து வழி சொல்லணுமா!!” என்று முறைத்தாள்.

 

 

“ஹைய் ஜோக்கு!! ஹா ஹா!! சிரிச்சுட்டேன் போதுமா!!” என்று நக்கலடித்தான்.

 

 

“ஆமா நீ இப்போ எங்க போய்கிட்டு இருக்க!!”

 

 

“அதை பத்தி நான் உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை”

 

 

“நீ தனியா தான் இருக்கேன்னு கேள்விப்பட்டேனே… நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் உன்னைய பார்த்ததா சொன்னாரு.உம் புருஷன் உனக்கு குழந்தையை கொடுத்திட்டு கம்பி நீட்டிட்டான் போல. அதுவும் நல்லதுக்கு தான் உன்னால என் லைப்பும் போச்சு சரி வா நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்” என்று பெருந்தன்மை போல் பேசியவனை எப்போது அறைந்தாள் என்பதை அவளே அறியவில்லை.

 

 

“என்னடா திமிரா உனக்கு!! யாருகிட்ட என்ன பேச்சு பேசிட்டு இருக்க!! உனக்கு பயந்துக்கிட்டு எதுவும் சொல்லாம இருந்த அந்த மனோன்னு நினைச்சியா!!”

 

 

“எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இப்படி பேசுவ நாயே!! உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருவேன் பார்த்துக்கோ” என்றவள் அவனை முறைத்துவிட்டு நகரப் போக குழந்தை அந்த களேபரத்தைக் கண்டு அழ ஆரம்பித்தான்.

 

 

அவள் அடித்ததில் அவனுக்கு வெறி வந்திருந்தது.அஜியை தோளில் போட்டு தட்டியவள் கையில் இருந்த பையை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க கார்த்திகேயன் அவள் கையை பிடித்திருந்தான்.

 

 

கையிலிருந்த பை நழுவி கீழே விழுந்தது. “கையை விடுடா போனா போகுது சொந்தக்காரனாச்சேன்னு தான் பேசாம போறேன். என்ன ஓவரா பண்ணிட்டு இருக்க”

 

 

அதற்குள் அங்கு நடக்கும் களேபரத்தை காண லேசாய் கூட்டம் கூடியது அந்த காலை நேரத்திலும். கார்த்திகேயன் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டம் கொண்டு முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு “என்ன சொந்தக்காரனா!! வீட்டுக்காரனை பார்த்து இப்படி சொல்லலாமா” என்று கூசாமல் புழுகினான்.

 

 

கூடியிருந்தவர்களும் அது கணவன் மனைவி விவகாரம் என்று நினைக்க ‘இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுது, புருஷன் கூப்பிட்டா போக வேண்டியது தானே’ என்பது போன்ற பேச்சுகள் சலசலப்பாய் கேட்டது.

 

 

கார்த்திகேயன் அவளை பார்த்து வெற்றிச்சிரிப்பு சிரித்தான் பார்த்தியா என்பது போல். “என்ன சொன்னே சாவடிச்சிடுவேன்டா உன்னை. நீ என் புருஷனா என்ன பேச்சு பேசற நீ உன்னை…” என்றவள் அவன் பிடியில் இருந்து கையை உதறினாள்.

 

 

சற்றும் தாமதியாமல் மீண்டும்ஓங்கி அவனை ஒரு அறை அறைந்தாள்.கார்த்திகேயனோ முகத்தை பாவமா வைத்துக்கொள்ளசுற்றியுள்ளவர்கள்“என்னம்மா நீ கட்டின புருஷனை போட்டு இப்படி எல்லார் முன்னாடியும் அடிக்கிற என்ன பொம்பளை நீ” என்று கூற “அய்யோஇவன் என் புருஷன் இல்லை” என்றாள் மனோ.

 

 

“கட்டின புருஷன் மேல கோவம் இருக்கலாம் அதுக்குன்னு புருஷனே இல்லைன்னு சொல்லுவியா” என்றனர்.

 

 

“அய்யோ இவன் நிஜமாவே என் புருஷன் இல்லை. அவர் ஊர்ல இருக்கார்” என்றாள்.

 

 

“ஐயோ மனோ என்னம்மா இப்படி எல்லாம் பேசுற. உனக்கு மூளை குழம்பிருச்சுன்னு தானே ஆஸ்பிட்டல் கூட்டி வந்தேன் வந்த இடத்துல இப்படி எல்லாம் பேசறியேம்மா!!” என்று கூற கூடியிருந்தவர்கள் மனோவை விசித்திரமாய் பார்த்தனர்.

 

 

“தம்பி அந்த பிள்ளையை பார்த்து கூட்டிப் போப்பா!! இப்படி மூளை கலங்கின பிள்ளைய வைச்சுட்டு நீ என்னப்பா செய்வ” என்று கூற கார்த்திகேயனுக்கு இன்னும் வசதியாய் போனது.

 

 

அவளருகே வந்து காதருகில் “நீ தான்டி எனக்கு பொண்டாட்டி… உன்னால தான்டி எனக்கு ஒரு பய பொண்ணு கொடுக்கலை. கல்யாண பொண்ணே வேணாம்ன்னு வேற ஒருத்தனை கட்டிக்கிட்டான்னா இவனுக்கு என்ன குறையோன்னு ஒரு ஒருத்தனும் சொன்னப்பா எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு”

 

 

“எல்லாம் உன்னால தான். உன் புருஷனோட சேர்ந்து என்னையும் ரெண்டாவதா வைச்சுக்கோ” என்று கிசுகிசுக்க வந்த ஆத்திரத்தில் அவன் அடிவயிற்றில் ஒரு குத்துவிட்டாள் கோபத்தில்.

 

 

அவனோ வலியில் வயிற்றை பிடித்தாலும் கோபம் சுர்ரென்று வந்துவிட கொத்தாக அவள் முடியை பிடித்துவிட்டான். “அவ்வளவுகொழுப்பாடி உனக்கு” என்றவாறே.

 

 

அவன் பிடித்ததில் வலியில் மனோவின் பிடி தளர்ந்து அஜியை கீழே போட்டுவிட குழந்தை ஓவென்று அழ ஆரம்பித்த வேளை “யாருடா நீ கையை எடுடா” என்ற கம்பீரமான குரலில் கார்த்திகேயனும் மனோவும் திரும்பி பார்த்தனர்.

 

 

“யாரா இருந்தா உனக்கென்னய்யா உன் வேலையை பார்த்திட்டு போ” என்று அலட்சியமாய் பதில் சொன்னான் கார்த்திகேயன்எதிரில் நின்றவரை பார்த்து.

 

 

அவரோ கொஞ்சமும் யோசிக்காமல் மனோவை பிடித்திருந்த அவன் கரத்தில் ஒரு அடியை ஓங்கி போட அவன் பிடி தளர்ந்தது. “யோவ் அவ என் பொண்டாட்டி நாங்க அடிச்சிக்குவோம் பிடிச்சுக்குவோம் உனக்கென்ன வந்துச்சு” என்று கத்தினான்.

 

 

“பொய் சொன்ன நாயே கொன்னுடுவேன் உன்னை. அந்த பொண்ணு எங்க வீட்டு பொண்ணு. எனக்கு என்ன விஷயம் தெரியாதுன்னு நினைச்சியா!! மரியாதையா ஓடிப்போயிரு இல்லை மரியாதை கெட்டுப் போகும்” உனக்குஎன்றார் அவர்.

 

 

“உங்க வீட்டு பொண்ணா!! அவ என்னோட மாமன் பொண்ணு!!”

 

“ஏம்மா அப்படியா!!” என்றார் முகுந்தனின் தந்தை. ஆம் வந்திருந்தவர் முகுந்தனின் தந்தையே தான். பேருந்து நிலையத்தில் பழக்கடையும் ஜூஸ் கடையும் அவர் வைத்திருந்ததை மனோ அறியமாட்டாள்.

 

 

இந்த பெண் பிரணவின் மனைவியாயிற்றே என்று கடையை விட்டு எழுந்து வந்தவர் நடப்பதை வேடிக்கை பார்க்க கார்த்திகேயன் வரம்பு மீறுவதை கண்டதும் அருகே வந்துவிட்டார்.

 

“ஆமாப்பா என்னோட அத்தை பையன் தான்.என்னை பழிவாங்க என்கிட்ட வந்து கலாட்டா பண்ணுறான்ப்பா” என்றாள்.

 

 

“நீ குழந்தையை தூக்கும்மா அழறான் பாரு” என்றவர்“இங்க பாரு இந்த பிள்ளையோட சொந்தக்காரங்கறதால உன்னை சும்மா விடறேன். இன்னொரு முறை உன்னை இங்க பார்த்தேன் அப்புறம் நீ இருக்க மாட்டே” என்று அவனை எச்சரித்து அனுப்பினார்.

 

 

கார்த்திகேயனோ அவளை முறைத்தவாறே நின்றிருந்தான். “அப்பா அவனை போலீஸ்ல பிடிச்சி கொடுத்திறலாம்” என்றாள் அவனை பார்த்து கோபமாய்.

 

 

“வேண்டாம் விடும்மா சொந்தக்காரன்னு சொல்ற, நாளைக்குஒரு மனக்கசப்பு வேண்டாம் வா” என்றவர் கீழே கிடந்த அவள் பையை எடுத்துக் கொண்டார்.

 

 

“வாம்மா வீட்டுக்கு போகலாம்” என்று கூற அப்போது தான் அவளுக்கு ஊருக்கு செல்ல வேண்டுமேஇவர் வேறு அழைக்கிறாரேஎன்ற எண்ணம் வந்தது.

 

 

“இல்லை அது வந்து நான்… நான் ஊருக்கு போய்க்கிட்டு இருக்கேன்ப்பா”

 

 

“ஊருக்கா எந்த ஊருக்கும்மா” என்றார் முகுந்தனின் தந்தை.

 

“உடுமலைப்பேட்டைக்கு”

 

 

“அங்க எதுக்கும்மா”

 

 

“அது தான் என் சொந்த ஊரு”

 

 

“ஓ!!” என்றவர் என்ன நினைத்தாரோ “ஊருக்கு நாளைக்கு கூட போய்க்கலாம் இப்போ வீட்டுக்கு வந்திட்டு போம்மா. எங்க அம்மாவும் என் பொண்டாட்டியும் உன்னை பார்த்தா சந்தோசப்படுவாங்க”

 

 

“நீங்க வந்து போனதில இருந்தே இந்த குட்டி பையனை பத்தி தான் பேச்சு வீட்டுல. ஒரு எட்டு வந்திட்டு அப்புறம் ஊருக்கு போகலாம் இங்க இருக்க உடுமலைப்பேட்டை தானே பஸ் ஏறினா ஒரு மணி நேரம் இல்லைன்னா முகுந்தனை காரை எடுக்க சொல்றேன்” என்று அவர் கூற அவளால் அவர் பேச்சை மறுக்க முடியவில்லை.

 

 

“சரிப்பா போகலாம்” என்று அவருடன் நடந்தாள்.

 

 

போகலாம் என்று முடிவேடுத்துவிட்டாலே தவிர அங்கு முகுந்தனை எப்படி சந்திப்பது என்று ஒரே குழப்பம். பிரணவும் முகுந்தனும் நண்பர்கள் எப்படியும் அவனுக்கு தன்னை பற்றி தெரிந்திருக்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை அவளுக்கு.

 

 

முகுந்தனின் தந்தை சிவமுருகன்அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் அவளை ஏற்றி பின்பு தானும் ஏறிக்கொண்டார். இதோ வீடும் வந்தாயிற்று.

 

 

வந்தவர்கள் அவளை நலம் விசாரித்தார்களே தவிர்த்து யாரும் அவளை வேறு எதுவும் கேட்கவேயில்லை. அதுவே அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

 

 

அஜிக்கு முகுந்தனின் பாட்டியை மிகவும் பிடித்துவிட்டது. அவரின் தண்டட்டியை தொட்டு தொட்டு விளையாடிக் கொண்டிருந்தான். முகுந்தனின் அன்னையும் அவளுக்கு குடிக்க பழச்சாறு கொடுத்தவர் அவளை இளைப்பாறச் சொன்னார்.

 

 

“நீங்க பேசிக்கிட்டு இருங்க… நான்பஸ் ஸ்டான்ட்க்கு போயிட்டு வர்றேன்ம்மா வண்டி லோடு வந்திரும்… கடையில ஒரு ஆளை மட்டும் தான் விட்டுட்டு வந்திருக்கேன்” என்றவர்“அபிராமி அவங்களுக்கு பலகாரம் சாப்பிட வை”

 

 

“நான் வந்து சாப்பிடுறேன், முகுந்தன் தோட்டத்துக்கு போனவன் இன்னுமா வரலை. போனா போன இடம் வந்தா வந்த இடம்ன்னுட்டு இதுல இவனை நம்பி ஒரு பொண்ணு வேற வர்ற போறா. எங்க போனாலும் மசமசன்னுட்டு” என்று சொல்லிக்கொண்டே அவர் வெளியில் கிளம்பிவிட்டார்.

 

 

அபிராமி அவளிடம் பொதுப்படையாகவே பேசிக் கொண்டிருந்தார்.“மீரா எங்கம்மா??” என்றாள்மனோ.

 

 

“அவ அவங்க வீட்டில இருப்பாம்மா!! தட்டு கைமாத்திட்டோம்ல அதான் இந்த பக்கம் வராம இருக்கா… கல்யாணம் முடியற வரைக்கும் இங்க வரவேணாம்ன்னு எங்க அண்ணி தான் அவளை அனுப்பாம வைச்சிருக்காங்க. இல்லைன்னா அவளாவது இங்க வராம இருக்கறதாவது” என்றார் அபிராமி சிரிப்புடன்.

 

 

சிவமுருகன் வெளியில் சென்றவர் முதல் வேலையாக மகனுக்கு போன் செய்தார். தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவன் கைபேசியின் சத்தம் கேட்டு பார்த்துக் கொண்டிருந்த வேலையை அருகில் நின்றிருந்தவரிடம் கொடுத்துவிட்டு பொத்தானை அழுத்தி காதில் வைத்தான். “சொல்லுங்கப்பா” என்றான்.

 

 

“முகுந்தாஉன் பிரண்டு பிரணவ் பொண்டாட்டியை இன்னைக்கு பழனி பஸ் ஸ்டான்ட்ல பார்த்தேன். அந்த பிள்ளை முகமே சரியில்லை மாதிரி இருந்துச்சு. இதுல அங்க அவ சொந்தக்கார பய ஒருத்தன் வேற அந்த பொண்ணுகிட்ட ஏதோ வம்பு பண்ணிக்கிட்டு இருந்தான்”

 

 

“என்னமோ ஏதோ சரியில்லைன்னு தோணிச்சு. அந்த பயலை மிரட்டி விரட்டிவிட்டுட்டேன். அந்த பொண்ணு அது சொந்த ஊருக்கு போறேன்னு சொல்லிச்சு”

 

 

“நான் தான் நைஸா பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டேன். நான் எதுவும் விசாரிச்சுக்கலை. அம்மாவும் பாட்டியும் எதுவும் கேட்க வேணாம்ன்னு சொல்லிட்டேன். உனக்கு விஷயம் தெரியும்ன்னா நீ வந்து என்ன ஏதுன்னு கேளு” என்றார்.

 

 

“ஹ்ம்ம் சரிப்பா நான் பார்த்துக்கறேன். ஆனா பிரணவ் என்கிட்ட எதுவும் இதை பத்தி சொல்லலைப்பா. நான் அந்த பொண்ணுகிட்டவே கேட்கிறேன். இப்போவே வீட்டுக்கு வர்றேன்ப்பா” என்றவன் அடித்துபிடித்து வீடு வந்து சேர்ந்தான்.

 

 

“எப்போம்மா வந்தே இப்போ தான் அப்பா சொன்னாரு. அதான் நேரா தோட்டத்துல இருந்து இங்க வரேன். எல்லாரும் சௌக்கியமாம்மா” என்றவனின் கேள்விக்கு தலையை மட்டுமே உருட்டி வைத்தாள் மனோ.

 

 

“டேய் முகுந்தா முத அந்த பிள்ளை சாப்பிடட்டும் அப்புறம் நம்ம தோட்டத்துக்கு கூட்டிட்டு போயி சுத்தி காமி” என்று சூசகமாக பேச அவனும் அமைதியானான்.

 

 

அவனும் சாப்பிட்டு முடித்து வாசலில் இருந்த திண்ணையில் சென்று அமர்ந்தான். ராகவிடம் பேசும் போதே ஏதோ சிக்கல் இருப்பதாக தான் தோன்றியது அவனுக்கு.

 

 

இந்த பிரணவ் ஏன் யாருக்கும் சொல்லாமலே கல்யாணம் முடித்தான் அதுவும் கூடவே இருக்கும் ராகவிடம் கூட சொல்லவில்லை என்றால் என்ன பிரச்சனையாக இருக்கும் என்று எண்ணி யோசனையிலிருந்தான்.

 

 

“என்னடா இங்க வந்து உட்கார்ந்திருக்க தோட்டத்துக்கு போயிட்டு வரச் சொன்னேன்ல” என்று அங்கு வந்து நின்றார் அபிராமி. அவருடனே எழுந்து உள்ளே வந்தான் முகுந்தன்.

 

 

“ஏம்மா மனோ குழந்தையை கூட்டிட்டு வாம்மா அப்படியே நம்ம தோட்டத்துக்கு போயிட்டு வருவோம்” என்று அழைத்தான் அவன்.

 

 

“இல்லைஅண்ணே நீங்க போயிட்டு வாங்க. நான் வீட்டில இருக்கேன்” என்று சோர்வாக பதில் சொன்னவளை அபிராமி தான் “சும்மா போயிட்டு வாம்மா போன வட்டம் நீங்க வந்தப்பவே கூட்டிட்டு போக சொன்னேன் இவனை”

 

 

“நீங்க தங்காம போயிட்டீங்க, அதே வருத்தந்தான் எங்களுக்கு. போயிட்டு வாம்மா உனக்கு பொழுது போகும்ல” என்றார்.

 

 

“இல்லைம்மா நான் ஊருக்கு போகணும் கிளம்பறேனே!!” என்று இழுத்தாள் அவள்.

 

 

அதற்கு மேல் முகுந்தன் தாமதிக்கவில்லை. “எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா என்னை நம்பி வா. நான் உனக்கு அண்ணன்னு நினைச்சேனா என்னோட வா அப்புறம் உன்னிஷ்டம்” என்றான்.

 

 

“அண்ணாஎதுனாலும் இங்கவே கேளுங்க நான் சொல்றேன்” என்றாள்.

 

 

“நீங்கபேசிக்கிட்டு இருங்க எனக்கு உள்ள மதிய சாப்பாடு ஆக்கணும் நான் அந்த சோலியை போய் பார்க்கறேன்” என்று விட்டு அபிராமி நாசுக்காக உள்ளே சென்றுவிட்டார்.

 

 

“என்னம்மா பிரச்சனை உங்களுக்குள்ள??” என்று நேரடியாகவே கேட்டுவிட்டான் முகுந்தன்.

 

 

“ஏன் அண்ணா அவர் உங்ககிட்ட எதுவுமே சொல்லவேயில்லையா!!” என்று பதில் சொல்லாமல் வேறு கேள்வி கேட்டாள் அவள்.

 

 

“உங்களுக்கு கல்யாணம் ஆனா விஷயமே எனக்கு இப்போ தான் தெரியும். இதுல அவன் என்கிட்ட எல்லாமே சொல்லுவான்னு நீ நினைக்கிறியாம்மா”

 

 

“ஏன் அண்ணா அப்படி இருக்கார் அவரு. எதையுமே சொல்லாம உள்ளவே வைச்சுகிட்டா நாம என்ன அவரு மாதிரி சிபிஐயா கண்டுபிடிக்க” என்றாள்.

 

“என்ன பிரணவ் சிபிஐ ஆ….??” என்றான் முகுந்தன்.

 

 

‘ச்சே உளறிட்டமோ யாருகிட்டயும் சொல்ல வேணாம்ன்னு சொன்னாரே’ என்று எண்ணியவள் ‘சொல்லியாச்சு இனி ஒண்ணும் பண்ண முடியாது. இனிமே யாருகிட்டயும் உளறாம இருக்கணும்’ என்று எண்ணிக்கொண்டாள்.

 

 

“ஹ்ம்ம் ஆமாண்ணா”

 

 

“இதுவே நீ சொல்லி தான்ம்மா எனக்கு தெரியும்”

 

 

“அப்போ ராகவும் சிபிஐ தானா?? எல்லாவனும் என்கிட்ட எதுவுமே சொல்லாம விட்டுட்டானுங்களே” என்று லேசாய் வருத்தம் எழுந்தது முகுந்தனுக்கு.

 

 

“சரி நீ சொல்லும்மா” என்று மேற்கொண்டு அவளை பேசச் சொன்னான்.

 

 

“உங்க பிரண்டு யார்கிட்ட தான் மனசு திறந்து பேசுவாரு அண்ணா. எல்லாத்தையுமே மூடி மூடி மறைச்சு கடைசில என்னை இங்க கொண்டு வந்து நிறுத்திட்டாரே” என்றவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.

 

 

“நான் ஒண்ணு சொல்றேன் தப்பா நினைக்காதம்மா. பிரணவ் என் பிரண்டு அப்படிங்கறதுக்காக நான் இதை சொல்லலை. நெறைய விஷயத்துல அவன் வேகமா இருந்தாலும். அவன் விவேகமா ஒரு விஷயம் செய்யறான்னா அதுல எதுவும் காரணமிருக்கும்மா”

 

 

“இது நான் அனுபவத்துல உணர்ந்து தான் சொல்றேன். அவனை காலேஜ் டைம்ல நான் பார்த்திருக்கேன். ரொம்ப துருதுருப்பு அவன் யோசிக்காம எதையும் செய்வான்”

 

 

“ஆனா அவன் ஒண்ணை யோசிச்சு நிதானமா ஒண்ணை செஞ்சா அது நம்மோட நல்லதுக்கா தான் இருக்கும். இது பிரணவ் பத்தி என்னோட கருத்து மட்டும் தான். என்னோட கருத்தை உன்கிட்ட திணிக்கறேன்னு நீ நினைக்க வேண்டாம். அவனை பத்தி சொல்லணும் தோணிச்சு சொன்னேன்”

 

 

“நீ இன்னும் என்ன நடந்திச்சின்னு சொல்லவே இல்லைம்மா” என்றான். மனோ அதற்கு மேல் தாமதிக்கவில்லை இருவரின் திருமணம் நடந்தது முதல் சரவணன் நிகழ்வு வரையும் ஒன்றையும் மூச்சுவிடாமல் சொல்லி முடித்து மடிந்து அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

 

 

சமையலறையில் வேலையில் இருந்தாலும் வெளியில் பேசிக் கொண்டிருந்தது அபிராமியின் காதில் விழத்தான் செய்தது. மனோ அழவும் மனம் பொறுக்காமல் வெளியில் விரைந்து வந்தார் அவர்.

 

 

“எதுக்கும்மா இப்போ அழற?? அழாதம்மா தூங்கிக்கிட்டு இருக்க குழந்தை எழுந்திட போறான்” என்று சொல்லி அவளை அமைதி படுத்த முனைந்தார்.

 

 

“அம்மா… அம்மா…” என்றுஅவரின் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தவளை தடுக்கவே முடியவில்லை.

 

 

“எனக்கு யாரும்மா இருக்கா?? இப்போ அவர் தானே எனக்கு எல்லாம். என்கிட்ட இதுவரை சொல்லாம இருந்தது கூட ஓகே, ஆனா கல்யாணத்துக்கு பிறகாச்சும் என்கிட்ட சொல்லியிருக்கலாம்லம்மா”

 

 

“நான் அவரை கேட்டது தப்பாம்மா… நான் அவர்கிட்ட கேட்காம வேற யார்கிட்டம்மா கேட்பேன். எனக்குன்னு சொல்லிக்கற மாதிரி எந்த உறவும் இப்போ இல்லைம்மா”

 

 

“என்னை தனியா விட்டுட்டு எங்க அம்மா அப்பா ஒண்ணா போய்ட்டாங்க. என்னையும் கூட்டிட்டு போயிருந்தா நான் இப்படி எங்க போகறதுன்னு கூட தெரியாம அநாதை மாதிரி திரிஞ்சிருக்க மாட்டேன்லம்மா”

 

 

“எனக்கு மட்டும் ஏம்மா இப்படி நடக்குது. எனக்கு நம்பிக்கையானவரே என்கிட்ட எதுவும் சொல்லாம மறைச்சா நான் யாரைம்மா நம்புறது” என்றவளை சமாதானம் செய்ய வெகு நேரம் பிடித்தது.

 

அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு அம்மாவும் பிள்ளையும் அங்கிருந்து நகர்ந்தனர்.அசதியிலும் அழுததிலும் களைத்துப் போனவள் உறங்கிப்போனாள்.

 

 

மாலை ஆகிப்போயிற்று அவள் கண் விழிக்கும் போது அடித்து பிடித்து எழுந்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே முதலில் விளங்கவில்லை. சற்று யோசிக்கவும் நடந்தது ஞாபகம் வர எழுந்து சென்று முகம் கழுவி வந்தாள்.

 

 

ஒரு முடிவுடன் அவர்களை தேடிச் சென்றாள். சமையலறைக்குள் அவளை பார்த்ததும் “வாம்மா இப்போ தான் நினைச்சேன் உன்னை எழுப்பலாம்ன்னு இந்தம்மா காபி” என்று அவள் கையில் கொடுத்தார்.

 

 

“அம்மா நான் ஊருக்கு கிளம்பறேம்மா, இப்போ கிளம்பினா தான் நான் நேரமா ஊருக்கு போயிருவேன்” என்றாள் மனோ.

 

 

“எந்த ஊருக்கும்மா??” என்றார் அபிராமி.

 

 

“எங்க சொந்த ஊருக்கும்மா உடுமலைப்பேட்டை”

 

 

“நீ எங்கயும் போக வேண்டாம் இங்கவே இரும்மா. இங்க பாரும்மா உனக்கு அம்மா அப்பா இல்லைன்னு எல்லாம் நீ இனிமே நினைக்க வேண்டாம். உனக்கு நாங்க இருக்கோம், எங்களுக்கு பொம்பிளை பிள்ளை இல்லை. நீ எங்களுக்கு பிள்ளையா இங்கவே இரு” என்றார் அபிராமி.

 

 

“நீங்க சொன்னதே போதும்மா நான் இங்க இருக்கறது சரியா வராது. நான்எங்க ஊருக்குபோகணும்மா, எங்கம்மா அப்பா வாழ்ந்த ஊரு நான் பிறந்த ஊரு அங்கவே போய்டறேனே” என்றாள் மனோ.

 

 

வராந்தாவில் இருந்து அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த முகுந்தன் எழுந்து வந்தான்.“ஏன்ம்மா மனோ உன்னோட அத்தை பையன் அந்த ஊரு தானே” என்றான்.

 

 

“ஹ்ம்ம் ஆமாண்ணே”

 

 

“ஏம்மா அவன் பஸ் ஸ்டான்ட்ல உன்கிட்ட வந்து வம்பு பண்ணிட்டு போயிருக்கான். நீ அங்க போனா இன்னும் என்னலாம் பண்ண மாட்டான் சொல்லு”

 

 

“உனக்கு இங்க இருக்க பிடிக்கலையா. இல்லை நான் பிரணவ்கிட்ட எதுவும் சொல்லிருவேன்னு நினைக்கறியா. நீயும் பிரணவும் சேர்ந்து இருக்கணும் அது தான் எனக்கு சந்தோசம் ஒத்துக்கறேன்”

 

 

“அது உன் விருப்பமில்லாம எல்லாம் நான் எதுவுமே செய்ய மாட்டேன்ம்மா. நானா பிரணவ்கிட்ட உன்னை பத்தி சொல்ல மாட்டேன்ம்மா நீ என்னை நம்பலாம்”

 

“இல்ல… அது வந்து அது சரியா வராது… அம்மா நீங்க சொல்லுங்களேன்” என்று அபிராமியை துணைக்கழைத்தாள்.

 

 

“எனக்கு முகுந்தன் சொல்றது தான் சரின்னு தோணுதும்மா. நீ உங்க ஊருக்கு போறது எனக்கும் சரியா படலை. உனக்கு எங்களோட இருக்க கஷ்டமா இருந்தா நீ மாடியில இருக்கற ரூம்ல இருந்துக்கோ”

 

 

“இல்லை மீரா வீட்டு பக்கத்துல ஒரு வீடு காலியாயிருக்கு அங்க வேணாலும் இருந்துக்கோம்மா. ஆனா எங்க கண்ணு பார்வையிலேயே நீ இரும்மா”

 

 

“ஏற்கனவே நீ தனியா நெறைய பிரச்சனையில மாட்டிகிட்டு தவிச்சிருக்க. பக்கத்துல உன் புருஷன் இருந்தாலும் பரவாயில்லை அவரும் இல்லாம நீ எங்கவாச்சும் போயி ஒண்ணு கடக்க ஒண்ணுன்னா மனசுக்கு கஷ்டமா போகும்மா”

 

 

“நாங்க சொல்றதை கேளும்மா இங்கவே இரு. நீ முத பார்த்திட்டு இருந்த மாதிரி இந்த ஊருல உனக்கு ஒரு வேலை தேடிக்கோ நீ தனியா வேணா இருந்துக்கோ” என்று அவள் ஒத்துக்கொள்ளும் விதமாக பேசினார் அபிராமி.

 

 

‘முகுந்தனோ இந்தம்மா ஏன் இப்படி குழப்புறாங்க. நான் இங்க இருக்க சொல்லிட்டு இருக்கேன் இவங்க பக்கத்து வீட்டில இரு மாடி வீட்டுல இருன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க’ என்று மனதிற்குள்ளாக பேசிக் கொண்டான்.

 

 

மனோவும் கண்ணை மூடி யோசிக்க அவளுக்கும் அதுவே சரியென தோன்றியது. அவர்களுக்கு பாரமாய் தானே இருக்கக் கூடாது இதே ஊரில் வேறு வீட்டில் இருந்தால் தப்பொன்றும் இல்லை என்று தோன்றியது.

 

 

“ஹ்ம்ம் சரிம்மா நீங்க சொன்ன மாதிரியே நான் இந்த ஊர்ல இருக்கேன். நீங்கசொன்ன அந்த வீடை பாருங்க, நான் நாளைக்கே அங்க போயிடறேன்” என்று சம்மதம் சொன்னாள்.

 

 

இப்போது அபிராமி மகனை அர்த்தத்துடன் பார்த்தார். மறுநாளே மீராவின் வீட்டருகில் அவள் குடியமர்த்தப்பட்டாள். அன்றைய இரவில் கட்டிலில் மகனை அருகே படுக்க வைத்து பின் படுத்தவளுக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது.

 

 

எதற்காக இத்தனை சிக்கல்கள் குழப்பங்கள் தன் வாழ்வில் என்று நினைக்க நினைக்க அவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை. முதல் நாள் கார்த்திகேயன் தன்னிடத்தில் நடந்து கொண்டதைநினைத்து பார்த்தாள்.

 

 

நேற்று போல் இதற்கு முன்பும் நான் அவனிடத்தில் கடுமை காட்டி எதிர்ப்பை தெரிவித்திருந்தால் தன் வாழ்வு என்றோ சீராகி இருக்குமோ என்று எண்ணினாள்.

 

 

தனக்குள் எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று யோசித்தாள். தனக்குள் தைரியம் விதைத்தது கூட அவன் தானே. எல்லாம் செய்துவிட்டு என்னை வேறாக எண்ணிவிட்டானே என்று மனம் மீண்டும் சோர்ந்து போனது.

 

 

எங்கு சுற்றினாலும் அவள் உள்ளம் அவனையே தேடியது, அவனையே அதிகம் நினைத்தது.தன்னுடைய மாற்றத்திற்கு காரணமானவனையும் அதை தொடர்ந்த நிகழ்வுகளையும் மனம் அசைப்போட்டது.

 

____________________

 

 

அந்த வாரம் முழுதுமே பிரணவிற்கு அதிக வேலை என்பதால்மனோவை அவள் வேலை முடிந்ததுமே வீட்டிற்கு கிளம்பச் சொல்லியிருந்தான்.

 

 

அன்று வேலை முடிந்து பிரணவ்வீட்டிற்கு வர எப்போதும் அவன் வரும் முன்னே இரவு உணவை தயாரித்து வைத்துவிட்டு அவனுக்காக சோபாவில் அமர்ந்திருப்பவள்அங்கில்லை என்றதும் அவளை தேடி உள்ளே சென்றான்.

 

 

அவர்களின் அறையில் அவளில்லை. ‘என்னாச்சு எங்க போய்ட்டா’ என்று யோசித்துக்கொண்டே அவளின் அறைக்கதவை தள்ள கட்டிலில்கண்ணைக் கசக்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் அருகே சென்று அமர்ந்தான்.

 

 

“என்னாச்சு ரதிம்மா மாமா அத்தை ஞாபகமா” என்றவன் அவள் தலைகோத “ஒண்ணுமில்லை” என்றவள் எழுந்து நின்றாள்.

 

 

“என்னாச்சுன்னு சொன்னா தானே தெரியும். ஏன் ஒரு மாதிரி இருக்கே, நேத்து கூட ஏதோ உம்முன்னு தான் இருந்த மாதிரி இருக்கு. இன்னைக்கு ஆபீஸ்லையும் அப்படி தான் இருந்தே… என்னன்னு சொல்லு ரதி” என்றான்.

 

 

“இல்லை அது… அது பஸ்ல வந்து… ஒண்ணுமில்லை” என்றவள் வெளியேறப் போக அவள் கைப்பிடித்து தடுத்தான்.

 

 

“பஸ்ல என்னாச்சு… யாராச்சும்உன்கிட்ட வம்பு பண்ணாங்களா… ஒரு வேளைஅந்த கார்த்திகேயன் வந்திருந்தானா உன்கிட்ட கலாட்டா பண்ணானா” என்றான்.

 

 

“இல்லைஅவன் வரலை. பஸ்ல ஒருத்தன் இந்த ரெண்டு மூணு நாளா தான் அவனை பார்க்கறேன். தினமும் வர்றான் கூட்டத்துல வைச்சு ரொம்ப கலாட்டா பண்றான்…”

 

“கலாட்டான்னா” என்று கேட்டதும் முகம் சிவந்து போயிருந்தது அவளுக்கு. அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாயிருந்தாள். அவள் சொல்லாமலே அவனுக்கு புரிந்தது.

 

 

“சரி அவன் கலாட்டா பண்ணான்னு நீ வந்து அழுதா எல்லாம் சரியா போகுமா!!”

 

 

“நான் என்ன பண்ண முடியும். ஏன் இப்படி இருக்காங்க சில ஆளுங்க. நாங்க எப்போ தான் நிம்மதியா நடமாடுறது. எங்க போனாலும் இப்படி ஆளுங்க வந்து நிக்கறாங்க”

 

 

“எங்கப்பா இருந்த வரைக்கும் அவர் தான் தினமும் என்னை ஆபீஸ்க்கு கூட்டிட்டு போவார். இந்த மாதிரி தொல்லை எல்லாம் நான் சந்திச்சதே இல்லை”

 

 

“ஸ்கூல் காலேஜ்ன்னு எப்பவும் அவர் எனக்கு துணையாயிருப்பார். பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க இப்படி நடக்குது அப்படி நடக்குதுன்னு அப்போலாம் எதுவுமே தெரியாம இருந்திட்டேன்”

 

 

“எங்கப்பா என்னை விட்டு போனதுக்கு பிறகு தான் எல்லா பிரச்சனையுமே எனக்கு வருது. நான் அவங்களோடவே போயிருந்தா இதெல்லாம் நடந்திருக்காதுல” என்று சொன்னதும் சுள்ளென்று கோபம் வந்தது பிரணவிற்கு.

 

“நீ பேசுறது முட்டாள்த்தனமா இருக்குன்னு உனக்கு புரியலையா!! இருந்தாலும்உங்கப்பா உனக்கு இவ்வளவு செல்லம் கொடுத்திருக்க கூடாது”

 

 

“எங்கப்பாவை பத்தி பேசாதீங்க” என்று கோபமாய் முறைத்தாள் பிரணவை பார்த்து.

 

 

“என்னை பார்த்து மட்டும் முறை… வெளிய எதுவும் காட்டிறாத!! யாராச்சும் வம்பு பண்ணா அவங்களுக்கு சரியா பதில் கொடுக்க தெரிய வேணாமா”

 

 

“நானா!! நான் என்ன பண்ண முடியும்”

 

 

“ஹான் நீ என்ன பண்ண முடியும். என்னை பார்த்து முறைக்க முடியும் என்னை கேள்வி கேட்க மட்டும் தான் உனக்கு முடியும்” என்று கிண்டல் செய்தான்.

 

 

“எதுக்கு இப்படி சொல்றீங்க. நான் என்ன பண்ணேன் உங்களை”

 

 

“என் கதை விடு இப்போ அந்த பஸ் பிரச்சனைக்கு வருவோம். யாராச்சும் உன்கிட்ட வம்பு பண்ணா முதல்ல பயப்படுறதை நிறுத்து. பயமாவே இருந்தாலும் அதை காட்டிக்காம இருக்க ட்ரை பண்ணு”

 

 

“அப்படி பண்ணா போதுமா”

 

“கொஞ்சம் எனை முழுசா பேச விடு” என்று அவன் கூறவும் “ஹ்ம்ம் சொல்லுங்க” என்றாள்.

 

 

“உன் பயத்தை வெளிய காட்டாம திரும்பி முதல்ல அவனை முறைச்சு பாரு. பார்த்தா போதுமான்னு அடுத்த கேள்வி கேட்டு வைக்காத”

 

 

“நீ முறைக்கறதை பார்த்தும் கண்டுக்காம அவன் திரும்பவும் வம்பு பண்ணா, கொஞ்சம் தள்ளி நில்லுங்கன்னு சொல்லிப்பாரு. அப்படியும் கேட்கலைன்னா கொஞ்சம் கூட யோசிக்காத பட்டுன்னு அடிச்சிரு” என்றான்.

 

 

“என்ன அடிக்கிறதா நானா அவன் என்னை திருப்பி அடிச்சிற மாட்டான்” என்று பயந்தாள்.

 

 

“அவன் உன்கிட்ட மட்டும் வம்பு பண்ணியிருப்பான்னு நீ நினைக்கிறியா!! உனக்கு அந்த பயமெல்லாம் வேண்டாம் ஒரு முறை அடிச்சு பாரு உனக்கு மத்த எல்லாருமே தன்னால சப்போர்ட்டுக்கு வருவாங்க”

 

 

“நிஜமாவா!!”

 

 

“கண்டிப்பா வருவாங்க. இனிமே இப்படி எல்லாத்துக்கும் அழுத்திட்டு வந்து நிக்காத, நீயே எல்லாத்தையும் துணிஞ்சு எதிர்த்துநிக்க பழகு”

 

 

“உங்கப்பா உன் கூடவே இத்தனை நாள் வந்திட்டு இருந்தார். இனி நானும் அப்படி வருவேன் வரணும்ன்னு நீ நினைச்சா சாரி. நான் அதுக்கு ஆளில்லை”

 

 

“முதல்லஉன்னை காப்பாத்திக்க உனக்கு தெரிஞ்சிருக்கணும். உனக்கு சப்போர்ட்டா நான் எப்பவும் இருப்பேன். ஆனா உனக்கு முதல் துணையா நீ தான் இருக்கணும் புரியுதா, இல்லன்னா அந்த கார்த்திகேயன் மாதிரி எவனாவது வந்துகுட்டையை குழப்புவான்”

 

 

‘ரொம்ப தான் பண்ணுற போடா… எங்கப்பா மாதிரி யாருமே வர மாட்டாங்க… நீ எங்கப்பாவாக மாட்டே!!’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டாள்.

 

 

அன்று அவன் கொடுத்த தைரியம் தானோ என்னவோ இன்று கார்த்திகேயனை எதிர்க்க துணிந்தது. அது மட்டுமா அன்று தவறாக பேசிய அந்த பிரியாம்மா போன்றோருக்கு தக்க பதிலடி கொடுத்ததும் அதே தைரியத்தால் தானே!!அவனால் தானே!!

 

பலம் கொடுத்து

பலம் இழக்க

செய்கிறாயடா

உன் அன்பில்!!

 

____________________

 

 

இரண்டு மாதங்கள் விளையாட்டு போல சென்றுவிட்டது. பிரணவிற்கு அவனின் ரதியின் நினைவும் அஜியின் நினைவும் தான் எப்போதும்.

 

 

வார்னிங் வாங்கியிருந்த அந்த கேசை விரைந்து முடித்து கொடுத்ததில் அவனுக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தது.

 

 

அவன் கேட்டிருந்த ட்ரான்ஸ்பரையும் கவனிப்பதாக அவன் மேலதிகாரி கூறியிருக்க அவனும் ட்ரான்ஸ்பருக்காக காத்திருந்தான்.

 

 

அவன்வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து வெளியில் வரவும் இந்து எதிரில் வந்தாள். அவளை கடந்து செல்ல முற்பட அவன் கையை பிடித்தாள்.

 

 

“ஒரு நிமிஷம் நில்லுங்க”

 

 

“என்ன??” என்றான் சிடுசிடுப்பாய்.

 

 

“ப்ளீஸ் ஏன் இப்படி பண்றீங்க?? நாம என்ன விரோதிகளா இப்படி பேசாமலே போனா என்ன அர்த்தம்”

 

 

“எனக்கு பேச விருப்பமில்லைன்னு அர்த்தம்”

 

 

“நான் என்ன தப்பு பண்ணேன்”

 

 

“நீ எதுவும் பண்ணலை, தப்பு நான் தான் பண்ணேன் அதான் விலகி போகச் சொல்லிட்டாங்கல அப்புறம் எதுக்கு உன்னை வேற அனுப்பி நான் என்ன பண்றேன் ஏது பண்றேன்னு தெரிஞ்சுக்க விரும்பறாங்க உங்க அத்தை” என்றான்.

 

 

இந்துவிற்குஅவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சி தான், இது எப்படி இவருக்கு தெரியும் என்று. “அ… அது எப்படி உங்களுக்கு தெரியும்”

 

 

“உனக்குஅவங்க அத்தை ஆனா எனக்கு அம்மா… உங்க அத்தை பத்தி உனக்கு வேணா சரியா தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்லை”

 

 

“அதுவும் இல்லாம அம்மாக்கே இவ்வளவு தோணும் போது அவங்க பையன் நான் எனக்கு தோணாதா என்ன” என்றான்.

 

 

“எல்லாம் தெரிஞ்சும் என்கிட்ட தெரியாத மாதிரியே எப்படி பிரணவ் உங்களால நடந்துக்க முடிஞ்சுது”

 

 

“நீ கூட தான் என்கிட்ட எதுவும் தெரியாத மாதிரி நடந்துகிட்ட நானும் அதே தான் திருப்பி செஞ்சேன். என்கிட்ட யாரு எப்படி நடந்துக்கறாங்களோ நானும் அப்படியே தானே நடந்துக்க முடியும்”

 

“அத்தை இப்போ ரொம்ப பீல் பண்ணுறாங்க பிரணவ் ப்ளீஸ். அவங்களை நீங்களும் புரிஞ்சுக்கலாமே!!”

 

 

“புரிஞ்சுக்காம எல்லாம் இல்லை இந்து”

 

 

“அப்போ அவங்ககிட்ட நீங்க பேச முயற்சி பண்ணியிருக்கலாமே!!”

 

 

“என்ன பேசணும்??”

 

 

“இப்படி கேட்டா நான் என்ன சொல்றது பிரணவ். நீங்க உங்க மனைவி குழந்தையோட போய் அவங்களை பார்த்திருக்கலாமே!!”

 

 

“எதுக்கு??”

 

 

“ஏன் இப்படி கேட்கறீங்க பிரணவ்??”

 

 

“கண்டிப்பா போய் பார்த்திருப்பேன் இந்து.அவங்க என் மேல கோவமாவே இருந்திருந்தா கூட நான் திரும்ப போய் பார்த்திருப்பேன்”

 

 

“அவங்க எப்போ என்னை கண்காணிக்க ஆரம்பிச்சாங்களோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் நானா வந்து பார்க்கறதில்லைன்னு”

 

 

“அவங்க பிள்ளை எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க நினைச்சது தப்புன்னு சொல்றீங்களா!!”

 

 

“நிச்சயமா இல்லை இந்து… அதை அவங்க தெரிஞ்சுக்க நினைச்ச முறை தான் தப்புன்னு எனக்கு படுது… அவங்க சொன்னாங்கன்னு நீயும் இங்க வந்து வேலை பார்க்கறியே இது சரின்னு நினைக்கறியா”

 

 

“உண்மையான ஈடுபாடு இல்லாம லட்சியம் இல்லாம நீ அவங்க சொன்னாங்கன்னு இங்க வந்து வேலை பார்க்கறியே உனக்குன்னு ஒரு லட்சியம் இல்லையா இந்து”

 

 

“நீஏன் இப்படி பண்ணே?? உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றான் பிரணவ் உண்மையான வருத்தத்துடன்.

 

 

“யார் சொன்னாங்க பிரணவ் எனக்கு லட்சியம் இல்லைன்னு. சின்ன வயசுல இருந்து நான் உங்களை பார்த்தே வளர்ந்திருக்கேன்”

 

 

“நீங்க எதுக்காக கிரிமினாலாஜி எடுத்து படிச்சீங்கன்னு மத்தவங்களுக்கு தெரியாம இருக்கலாம். எனக்கு தெரியாதுன்னு நீங்க நினைச்சீங்களா”

 

 

“உங்கம்மாக்கு நீங்க இங்க வேலை பார்க்கறீங்கன்னு எப்படி தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கறீங்க. ஆப்கோர்ஸ் நான் தான் சொன்னேன். அவங்களுக்காக மட்டும்நான்இங்க வேலைக்கு வரலை”

 

 

“எனக்காகவும் தான் எனக்கு பிடிச்ச வேலையை பார்க்க தான் வந்தேன். அது அத்தைக்காகன்னு அவங்க நினைச்சுட்டு இருக்காங்க அவ்வளோ தான் வித்தியாசம்”

 

 

“ஹ்ம்ம் அப்போ உன்னோட லட்சியத்துக்காக தான் இங்க வந்தேன்னு சொல்ற!!”

 

 

“அது தான் உண்மை. அந்த பேச்சை விடுங்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ன்னு தான் வந்தேன். அத்தை ஊர்ல இருந்து வந்திட்டாங்க”

 

 

“சென்னையில தான் இருக்காங்க, வந்ததும் உங்க வைப் குழந்தையை தான் பார்க்க போயிருக்காங்க. ஆனா அவங்க வீட்டை காலி பண்ணிட்டு போய்ட்ட தான் சொல்லிட்டாங்களாம்”

 

 

“எதுக்காக அவங்களை பார்க்க போனாங்களாம்??”

 

 

“இது என்ன கேள்வி பிரணவ், சரவணன் அண்ணனும் சசி அண்ணியும் உங்க வீட்டுக்கு போய்ட்டு வந்து குழந்தையை பத்தி சொன்னதுல இருந்து அத்தைக்கும் மாமாக்கும் அவங்களை பார்க்க ஆசை அதான்”

 

 

சரவணனும் சசி சென்று மனோவை பார்த்த சேதி பிரணவிற்கு புதிது. எதுக்காக போயிருப்பாங்க என்று மண்டைக்குள் வண்டு குடைந்தது. இந்துவிற்கு அதற்கான காரணம் முழுதாய் தெரியவில்லை.

 

 

“இப்போ அவங்க எங்க இருக்காங்க பிரணவ்” என்றாள் மெதுவாய்.

 

 

“சொல்ல முடியாது” என்றுஅலட்சியமாய் பதில் சொன்னான்.

 

 

“நான் இவ்வளவு தூரம் பேசியும் உங்களுக்கு புரியலையா பிரணவ்” என்றாள் வருத்தமாய்.

 

 

“சரி நான் கிளம்பறேன் எனக்கு நேரமாச்சு” என்றுவிட்டு அவன் தன் போக்கில் சென்றுவிட்டான்.

 

 

இரண்டு நாட்கள் கடந்திருக்கும் அன்று விடுமுறை தினம். பிரணவ் வீட்டில் தனித்திருந்தான். விழி மூடி கைபேசியில் ஒலித்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தான்.

 

காதலின் தீபம் ஒன்று,
ஏற்றினாளே என் நெஞ்சகாதலின் தீபம் ஒன்று,
ஏற்றினாளே என் நெஞ்சில்.
ஊடலில் வந்த சொந்தம்,

கூடலில் கண்ட இன்பம்.
மயக்கம் என்ன,காதல் வாழ்க

என்னை நான் தேடி தேடி,
உன்னிடம் கண்டுக் கொண்டேன்.
பொன்னிலே பூவை அள்ளும்,
புன்னகை மின்னுதே.
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே.
அன்பே இன்பம் சொல்ல வா.

 

 

இவனுக்குன்னே இளையராஜா பாட்டு போட்டு விட்டிருப்பாரோ எங்க இருந்துதேன் பாட்டெல்லாம் பிடிக்கிறானோ என்று எண்ணிக்கொண்டே உள்ளே நுழைந்தான் ராகவ்.

 

 

“என்னடா என்ன யோசனை பண்ணிட்டு இருக்க??என்றவாறே பிரணவின் தோளில் கை வைத்தான். கண்களை மூடியிருந்த பிரணவ் நிமிர்ந்து பார்த்தான்.

 

 

“முகுந்த் கல்யாண பத்திரிக்கை அனுப்பியிருக்கான். அதான்யோசிச்சுட்டு இருக்கேன். நீ மெயில் பார்க்கலையா??”

 

 

“பார்த்தேன்டா அதான் அதை பத்தி உன்கிட்ட பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன். இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்டா!!நம்ம செட்ல இவன் தான் கடைசி கல்யாணம்லடா!! பத்து நாள் லீவு போட்டு ஊருக்கு போய் என்ஜாய் பண்ணணும்டா… ஊருக்கு போயே நாளாச்சு…”

 

 

“ஹ்ம்ம் போயிட்டு வாடா நல்லா என்ஜாய் பண்ணு” என்ற பிரணவை வித்தியாசமாய் பார்த்தான்.

 

 

“என்ன சொன்னே இப்போ?? ஊருக்கு போயிட்டு வரணுமா?? சார்க்கு அப்படி என்ன முக்கியமான வேலை வரமுடியாத அளவுக்கு” என்றான்.

 

 

“நான் வந்தா ரதிக்கு தான் அன்கம்பர்டபிளா இருக்கும்” என்றதும் ராகவ் திருதிருவென்று விழித்தான்.

 

 

ராகவிற்கு மனோபாரதிபழனியில் இருக்கும் விபரம் முகுந்தனின் மூலம் தெரியும். பிரணவிற்கு தெரிய வேண்டாம் என்று அவன் சொல்லியிருந்ததால் அவனும் சொல்லியிருக்கவில்லை.

 

 

‘ஆனா பயபுள்ளைக்கு சொல்லாமலே தெரிஞ்சிருக்கே’ என்ற ஆச்சரியம் தான் அவனுக்கு.“என்ன?? என்னடா சொல்ற??” என்றான் ராகவ்.

 

 

“உண்மையை தானே சொன்னேன். அவ இப்போ அங்க தான் இருக்கா” என்றான் நிதானமாய்.

 

 

“அப்போ போய் பார்க்க வேண்டியது தானேடா”

 

 

“நானா போய் பார்க்க மாட்டேன்னு சொன்னேன்லடா”

 

 

“முட்டாள் மாதிரி உளறாதடா. இவரு போய் பார்க்க மாட்டாராம்ல சரி நீயா போய் பார்க்க வேண்டாம். முகுந்த் கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்கான்ல அதை சாக்கா வைச்சு போகலாம்ல”

 

 

“இதான் சாக்குன்னு நான் வந்ததா ரதி நினைப்பாடா”

 

 

“அதுக்காக இப்படியே இருக்க போறீங்களாடா!! அப்போ நீ முகுந்த் கல்யாணத்துக்கும்வரமாட்டே!! அவங்களையும் போய் பார்க்க மாட்டே!!”

 

 

“என்ன பிடிவாதம்டா உனக்கு!! யாராச்சும் விட்டுக்கொடுத்தா தான்டா குடும்ப வாழ்க்கையே ஓடும். ரெண்டு பேரும் வீம்பு பிடிச்சா எப்படிடா!!”

 

 

“இதென்னடா பதில்”

 

 

“அடுத்த வாரம் எனக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. அதுக்கு அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு”

 

“நீ பண்றது ஒண்ணும் சரியில்லை சொல்லிட்டேன்” என்றுராகவ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரணவின் கைபேசி பாடலுடன் ஒலிக்க ஆரம்பித்ததுகாதலின் தீபம் ஒன்று என்று.

Advertisement