Advertisement

அத்தியாயம் –23

 

 

ஆஸ்திரேலியா பயணம்இருவரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனை பயணமாக அமையும் என்று இருவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.

 

 

பிரணவிற்கு உள்ளுர சற்று குதூகலமே, யாருமில்லா இடத்தில் மனைவி தன்னை சார்ந்து இருப்பாள் தன்னை புரிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அமையும் என்ற எண்ணமே அவனுக்கு.

 

 

முதலில் அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினான். அதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டான் அவன்.

 

 

மனோவிற்கு பாஸ்போர்ட் எல்லாம் முன்னமே இருந்திருந்ததால் விசா எடுப்பதற்கு மட்டும் சற்று அலைய வேண்டி இருந்தது. ஷாலினி மட்டும் பிரியாவிடை கொடுத்தாள்.

 

 

கணேஷிற்கு முகம் இன்னமும் வெந்துக் கொண்டு தானிருந்தது. பிரணவ் தன் வாழ்க்கையை பிடுங்கி அவன் வாழ்வது போல ஒரு எண்ணம் அவனுக்கு.

 

 

வீட்டை காலி செய்து வீட்டில் இருந்தவற்றை எல்லாம் அதே வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்து பாதுகாப்பு செய்தனர்.

 

 

தங்களுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து வாங்கி இருவருமாக அடுக்கி முடித்திருந்தனர். ஒரு வழியாக அவர்கள் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. மனோவிற்கு அது முதல் விமானப் பயணம் உள்ளுக்குள் சற்று பயம் தான் அவளுக்கு.

 

 

குப்புற விழுந்தாலும் மண் ஒட்டாத ரகமாயிற்றே அவள். பயத்தை உள்ளே புதைத்துக்கொண்டு வெளியே சிரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

 

 

பிரணவிற்கு அவளை பார்த்ததுமே புரிந்துவிட்டது. நாமாக போய் ஏன் அவளை கேட்க வேண்டும் எது வேண்டுமானாலும் அவளாகவே வரட்டும் என்று எண்ணி அவன் கண்டுக்கொள்ளாமல் அமைதியாய் இருந்தான்.

 

 

விமானப் பணிப்பெண் வந்து சீட் பெல்ட் போட சொல்லி அறிவுறுத்திவிட்டு செல்ல மனோவிற்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

 

 

ஏதோ அந்தரத்தில் தொங்குவது போன்ற ஒரு உணர்வு. கீழே விழுந்துவிட்டால் என்ற பதைப்பு. பிரணவ் மெதுவாய் திரும்பி அவளை பார்த்தான்.

 

 

“என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கே??” என்று மனம் கேட்காமல் கேட்டுவிட்டான்.

 

 

“பயமாயிருக்கு, இதான் எனக்கு பர்ஸ்ட் டைம் பிளைட்ல”

 

 

“தெரியுது ஆனா இவ்வளவு நேரமும் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே உட்கார்ந்துட்டு இருந்த, எதுக்கு உனக்கு இவ்வளவு பில்டப்… என்கிட்ட கேட்கறதுக்கு என்ன” என்றான்.

 

 

மனோ அவனுக்கு பதில் சொல்லாமல் ஒரு அசடு வழிந்தாள். அவனே அவளுக்கு வேண்டிய உதவி செய்தான். “ரொம்ப பயமாயிருந்த கண்ணை மூடி படுத்துக்கோ” என்றான்.

 

 

“நான் உங்க கையை பிடிச்சுக்கட்டுமா!!” என்றாள் அவள். கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன, “இதை என்கிட்ட கேட்கணுமா!! நான் உன்னோட ஹஸ்பண்டுன்னு கணேஷ்கிட்ட சொல்ல மட்டும் தான் தெரியுமா!! மத்த விஷயத்துக்கு எல்லாம் மறந்திரும் போல” என்றுவிட்டு திரும்பி கொண்டான்.

 

 

‘இவரு இப்போ என்ன சொல்ல வர்றாரு கையை பிடிக்கலாமா!! வேணாமா!! என்னை திட்டுறாரோ!! நான் பிடிப்பேன்’ என்று எண்ணிக்கொண்டு அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

 

 

‘கஷ்டம்டா சாமி கையை பிடிக்கவே பர்மிஷன் கேட்குறா, இவளை எப்படி நம்ம வழிக்கு கொண்டு வரப் போறேனோ தெரியலையே… ஷப்பா முடியலை, இப்போவே எனக்கு கண்ணை கட்டுது’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பிரணவ்.

 

 

ஒரு வழியாக அவர்கள் ஆஸ்திரேலியாவும் வந்து இறங்கிவிட்டனர். மெல்போர்ன் சிட்டியில் தான் அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த அறை இருந்தது.

 

 

விமான நிலையத்திலேயே அவர்களைஅழைத்துச் செல்ல ஆள் வந்திருந்தனர். பிரணவ் முன்னமே வந்திருந்ததால் அவனுக்கு சற்று பழக்கம் போலும்.

 

 

வந்திருந்தவரும் பிரணவும் இயல்பாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்க மனோ தான் ஆவென்று பார்த்திருந்தாள் அவர்களை.

 

 

அவளுக்கும் ஆங்கிலம் தெரியும் தான் ஆனால் இப்படி சுலபமாக எல்லாம் பேச வராது அவளுக்கு. இருவரும் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை அவளுக்கு.

 

 

பட்டிக்காட்டான்மிட்டாய் கடையை பார்த்தது போல பார்த்திருந்தாள் இருவரையும். ஒருவழியாக அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்திருக்க மனோ அப்பாடா என்று நிம்மதியானாள்.

 

 

பிரணவ் அவளை ஓரப்பார்வை பார்த்து சிரித்துக் கொண்டான். வந்தவர் அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த அறையை காண்பித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

 

 

அவர் சென்றதும் “என்ன பேசிட்டு இருந்தீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒண்ணுமே விளங்கலை” என்றாள் அவன் மனைவி.

 

 

“ஏன் நாங்க இங்கிலீஷ்ல தானே பேசிட்டு இருந்தோம். நீ கூட எல்லாம் புரிஞ்ச மாதிரி தலையை ஆட்டிட்டே இருந்த” என்று வேண்டுமென்றே அவளை கிண்டல் செய்தான் பிரணவ்.

 

 

“என்ன இங்கிலிஷோ நீங்க பேசினதே புரியலை. முதல்ல குளிக்கணும்” என்று முணுமுணுத்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

 

 

அவள் குளித்து பிரஷ்அப் ஆகி வெளியில் வரவும் பிரணவும் குளித்து முடித்து வந்திருந்தான் போலும். “எல்லா திங்க்ஸ் இன்னைக்கே எடுத்து வைச்சிடலாமா இல்லை ரெஸ்ட் எடுப்போமா”

 

 

“முதல்ல எல்லாம் முடிச்சிடலாம்… அப்புறம் மொத்தமா ரெஸ்ட் எடுத்துக்கலாமே” என்று மனோ கூற இருவருமாக அவர்கள் கொண்டு வந்த உடைமைகள் வீட்டுக்கு தேவையான சில உபகரணங்கள் எல்லாம்எடுத்து வைத்தனர்.

 

 

எல்லாம் செய்து முடிக்க மாலை ஆகிவிட்டது, மனோவிற்கு லேசாய் பசிப்பதைஅப்போது தான் உணர்ந்தாள். “எனக்கு பசிக்குது” என்றாள் பிரணவிடம்.

 

 

“எனக்கும் தான் போய் சமையல் பண்ணுறியா!!” என்று கிண்டல் செய்தான். மனோ அவனை திரும்பி ஒரு முறை முறைத்தாள்.

 

 

“இங்க இந்தியன் பூட் எல்லாம்பக்கத்துல கிடைக்காது. கொஞ்சம் தூரம் தான் போகணும். இன்னைக்கு ஒரு நாளைக்கு பிட்சா ஆர்டர் பண்ணுறேன். அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கறியா!!” என்றான் அக்கறையாய்.

 

 

“நெஜமாவே… ஆனா எனக்கு பிட்சா பிடிக்காதே… ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு நம்ம ஊர் சாப்பாடே வாங்கி கொடுங்களேன். எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை” என்று கூற பிரணவ் தான் விழித்தான்.

 

 

‘கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் பரவாயில்லை. வேண்டாம் என்று பிடிவாதம் செய்கிறாளே என்ன செய்ய பிரணவ் கிளம்பு உன் பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கி கொடு போ’ என்று மனசாட்சி வேறு அவனிடம் சொல்ல “சரி நான் போய் வாங்கிட்டு வந்திடறேன்”

 

 

“நீ பத்திரமா வீட்டில இரு… நான் வர்றதுக்கு நேரமாகும் சோ பயந்துடாத… பூட் வாங்கினதும் நானே போன் பண்றேன் சரியா”

 

 

“நானும் உங்க கூட வர்றேனே எனக்கு தனியா இருக்க வேணாம் ப்ளீஸ்…” என்று கூறவும் “சரி வா” என்று அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

 

 

இந்திய உணவுகள் கிடைக்கும் கடையை தேடிப்பிடித்து ஒரு வழியாக அவர்கள் சாப்பிட்டு அறைக்கு திரும்ப வெகு நேரமாகியது. வரும் வழியில் காரிலேயே உறங்கிவிட்டாள் மனோபாரதி.

 

 

“ரதி… எழுந்திரு ரூம் வந்திருச்சு” என்று எழுப்ப அவளோ நன்றாக அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள். வேறுவழியில்லாமல் அவனே அவளை இருகைகளாலும் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.

 

 

வீட்டு கதவை முதலிலேயே திறந்து வைத்துவிட்டு தான் அவளை தூக்கியிருந்தான். கட்டிலில் அவளை படுக்க வைத்துவிட்டு அவனும் உடைமாற்றி அவளருகே படுத்துக் கொண்டான்.

 

 

மெல்ல திரும்பி அவன் மனையாளை பார்த்தவன் “என்ன ரதிம்மா எலிக்குட்டி மாதிரி இருந்துட்டு இவ்வளவு கனம் கனக்குற!!” என்று மெதுவாய் முணுமுணுத்தான். உறங்கிக் கொண்டிருந்தவளின் நெற்றில் மெதுவாய் இதழ் பதித்து அவனும் உறங்கிப் போனான்.

 

 

மெல்ல மறுநாளைய பொழுதும் விடிய இருவருமே அசந்து உறங்கிக் கொண்டிருந்தனர். மனோவிற்கு தான் முதலில் விழிப்பு வந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தவள் அவளுக்கு வெகு அருகில் பிரணவை கண்டதும் முதலில் திகைத்து பின் ஆசுவாசமானாள்.

 

 

அவனை திருமணம் முடித்த நாளில் இருந்தே அவளுக்கு தினமும் இது போன்ற உணர்வு தான். காலையில் விழிக்கும் போது அருகில் படுத்து இருப்பவனை கண்டு திகைப்பதும் பின் நடப்பு உணர்ந்து தன் இயல்புக்கு திரும்புவதும் என்று.

 

 

எழுந்து குளித்து முடித்தவளுக்கு காபி வேண்டும் போல் இருந்தது. வீட்டில் இருந்த பிரிட்ஜில் ஏதேதோ பொருட்கள் இருந்த ஞாபகம் வர வேகமாய் சென்று அதை திறந்து பார்க்க அதில் நெறைய பாக்கெட்டுகள் இருந்தன.

அவளுக்கு என்ன தெரியும் அங்கு பால் பாக்கெட் எல்லாம் இல்லை, எல்லாமே பவுடர் தான் என்று. அதையும் இதையும் உருட்டிக் கொண்டிருந்தவளுக்கு காலை காபி அருந்தாமல் தலை வலிக்க ஆரம்பித்தது.

 

 

இவள் உருட்டும் ஒலி கேட்டு பிரணவ் எழுந்திருந்தான். அவன்தன் வேலைகள் முடித்து குளித்து சமையலறையை எட்டிப் பார்த்தான்.

 

 

“என்னாச்சு ரதி என்ன தேடுற??”

 

 

“எனக்கு காபி வேணும்… பால் இல்லையே போய் வாங்கிட்டு வர்றீங்களா!!” என்று கேட்டவளை பார்த்து சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு “இங்க அதெல்லாம் கிடையாது”

 

 

“நீ நகரு நான் காபி போட்டு தரேன்” என்றவன் பிரிட்ஜை திறந்து பால் பவுடரை எடுத்தான். வேகமாய் அதை கலக்கி காபி பொடியை கலந்து அவளிடம் ஒன்றை கொடுத்து அவனும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

 

 

“இவ்வளவு தானா காபி… பால் எல்லாம் இல்லையா இங்க”

 

 

“அதெல்லாம் கிடையாது, இங்க எல்லாம் பவுடர் பால் தான்… அப்புறமா எப்படி போடுறதுன்னு சொல்லி தரேன்”

 

 

“இப்போ காலை டிபன் என்ன செய்யலாம், எனி ஐடியா” என்றான்.

 

 

“நாம வாங்கிட்டு வந்ததுல ரவை, சேமியா எல்லாம் இருக்கு. காய்கறி கிடைச்சா நானே உப்புமா செஞ்சிடறேன். என்னால வெளிய சாப்பிட முடியாது. எவ்வளவு காசு ஆகுது”

 

 

“ஆமா கேட்க மறந்திட்டேன். நேத்து நீங்க தான் என்னை உள்ள கூட்டிட்டு வந்து படுக்க வைச்சீங்களா!! நான் கார்லேயே தூங்கிட்டேன் தானே!!”

 

 

“ஹ்ம்ம் ஆமா நான் தான் உள்ள படுக்க வைச்சேன். ஆனா கூட்டிட்டு வரலை தூக்கிட்டு வந்தேன்” என்று திருத்தினான்.

 

 

“என்ன தூக்கிட்டு வந்தீங்களா!! எப்படி!!” என்றவளின் முகம் சிவந்து ‘அச்சோ எப்படி தூக்கிட்டு வந்திருப்பான்’ என்று யோசிக்க ஆரம்பித்தது.

 

 

“கப்பை அந்த டேபிள்ல வை” என்று அவன் கூறவும் அதை வைத்தாள் அவள். அவளை தொடர்ந்து அவனும் அவன் கையில் இருந்த கோப்பையை வைத்துவிட்டு சட்டென்று அவளை இருகைகளாலும் தூக்கிக் கொண்டான்.

 

 

“இப்படி தான் தூக்கிட்டு வந்தேன்” என்று செய்தே காண்பித்துவிட மனோவிற்கு வெட்கமாகி போனது.

 

 

“கீழ… கீழ இறங்கி விடுங்க… ஒரு மாதிரியா இருக்கு” என்றவளின் குரல் இறங்கி போனது. பிரணவும் அவளை கீழே இறக்கிவிட்டு சிவந்து நின்றவளின் முகத்தையே ரசனையாய் பார்த்திருந்தான்.

 

 

பின் இயல்புக்கு வந்து “சரி வா இங்க பக்கத்துல சூப்பர் மார்கெட் இருக்கு. போய் தேவையானது வாங்கிட்டு வந்திடலாம்” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான்.

 

 

அன்றைய பொழுதும் எப்படியோ கடந்து போனது அவர்களுக்கு. மறுநாளில் இருந்து அவர்கள் வேலையில் சேர வேண்டும். அதற்காக தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.

 

 

பிரணவ் அங்கு முன்னமே வந்திருந்ததால் ஒவ்வொன்றாய் அவளுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்தான். “இனிமே நீ எதுவும் சமைக்க வேண்டாம். என் பிரண்டுகிட்ட கேட்டு ஒரு ஆள் பிடிச்சிருக்கேன்”

 

 

“அவங்க நல்லா சமைப்பாங்களாம் நம்ம தமிழ்நாடு தானாம் அவங்களுக்கு. இனிமே அவங்களையே சாப்பாடு கொடுக்க சொல்லிடறேன் சரியா. உனக்கு இனி சமைக்கிற வேலை இல்லை”

 

 

“ஏங்க நான் செஞ்ச உப்புமா நல்லாயில்லையா!!”

 

 

‘அந்த கொடுமையை என் வாயால வேற நான் சொல்லணுமா’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு “நீ நல்லா சமைக்க கொஞ்ச நாள் ஆகும், அதுவரைக்கும் இப்படி சாப்பிட்டுக்குவோமே ப்ளீஸ்” என்றான்.

 

 

“ஹ்ம்ம் சரி… ஆனா நான் சீக்கிரம் சமைக்க கத்துக்கறேன், என் கையால உங்களுக்கு சமைச்சுக் கொடுக்கறேன். எனக்கே தெரியும் இன்னைக்கு உப்புமா சுமார் தான்”

 

 

“எனக்கு இதெல்லாம் தேவை தான் எங்கம்மாவோட அருமையான சாப்பாட்டை குறை சொல்லி சாப்பிடுவேன்ல. நானே செய்யும் போது தான் தெரியுது எவ்வளவு கஷ்டம்ன்னு” என்று மீண்டும் பெற்றோரின் ஞாபகத்திலேயே வந்து நின்றாள்.

 

 

தினமும் ஒரு முறையாவது அவளால் அவர்களை பற்றி நினைக்காமல் இருக்கவே முடிவதில்லை. அவர்கள் எண்ணம் வந்ததுமே கண்கள் தானாய் கலங்க ஆரம்பித்துவிடும்.

 

 

“சரி அதெல்லாம் விடும்மா… எல்லாம் சரியாகிடும் நீ இப்போ தானே செய்ய ஸ்டார்ட் பண்ணுற பார்த்துக்கலாம் விடு” என்று சமாதானம் செய்தான் பிரணவ்.

 

 

“இன்னைக்குநேரமா படுப்போம் நாளைக்கு நாம ஆபீஸ்க்கு போகணும். காலையில பிளாரன்ஸ் வந்திடறேன்னு சொல்லியிருக்கார்”

 

 

“பிளாரன்ஸ்ஆ யார் அவர்??”

 

 

“நம்மை ஏர்போர்ட்ல பிக்கப் பண்ணார்ல அவர் தான் பிளாரன்ஸ். அன்னைக்கு அவர் பேரை சொன்னப்போ நீ கவனிக்கலையா”

 

 

“சாரி கவனிக்கலை அதுவும் ஏதோ இங்கிலீஷ் வார்த்தைன்னு நினைச்சுட்டேன்” என்று அசடு வழிந்தாள் அவள்.

 

 

மறுநாளில் இருந்து அவர்களின் வேலை தொடங்கியது.பிரணவ் சொன்னது போலவே மதியஉணவிற்கு சொல்லியிருந்த உணவு எல்லாம் அவளுக்கு பிடித்தமானதாகவே இருந்தது.

 

 

இப்படியாக அவர்கள் வாழ்க்கை எந்தவித புது முன்னேற்றமும் இல்லாமல் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் அங்கு வந்து தன்னைப்போல ஒரு மாதம் ஓடியிருந்தது.

 

 

அந்த வார இறுதி அவர்களுக்கு லாங் வீக் எண்டாக இருந்தது. பிரணவ் அவளை அழைத்துக்கொண்டு சிட்னி சென்று வர பிளான் செய்திருந்தான்.

 

 

“நாளைக்கு காலையில நாம சிட்னி கிளம்பலாம் ரதி. இரண்டு நாளைக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைச்சுக்கலாம்” என்றான்.

“அங்க என்ன இருக்கு”

 

 

“இந்த வாரம் நமக்கு லாங் வீக் எண்டு இல்லையா அதான் உனக்கு ஊர் சுத்திக்காட்டலாம்ன்னு பார்த்தேன். நீ என்னடான்னா அங்க என்ன இருக்குன்னு கேட்குற”

 

 

“தெரிஞ்சுக்க தானே கேட்டேன்”

 

 

“அதை தெரிஞ்சுக்க தான் உன்னை கூட்டி போறேன்னு சொன்னேன்”

 

 

சிட்னியில்ஒப்ரா ஹவுஸ், ஹார்பர், பீச் என்று இரண்டு நாட்களாய் அவர்கள் பொழுது நன்றாய் கழிந்தது. முதலில் தயக்கமாய் அவனுடன் வந்தவள் எப்போதும் அவன் கையுடன் தன் கையை பிணைத்தே சென்றாள்.

 

 

பிரணவிற்கு தான் நடப்பது கனவா நனவா என்றே புரியவில்லை. சீக்கிரம் மாறிருவாளா என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே அவளின் அருகாமையை ரசிக்க ஆரம்பித்தான்.

 

 

இரண்டு நாட்கள் கழிந்து அவர்கள் மீண்டும் மெல்போர்னுக்கு திரும்பி வந்திருந்தனர். இருவரையும் தன்னையும் மீறிய ஒரு மயக்க நிலை ஆட்க்கொண்டிருந்தது.

 

 

வாய்விட்டு இருவரும் சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் இருவராலும்மனதால் உணர முடிந்தது. மனோவின் மனம் தன் புறம் மெல்ல சாய்ந்திருப்பதை பிரணவ் உணர்ந்தே தானிருந்தான்.

 

 

மனோவுக்கும் முன் போல உறங்கி எழும் போது வேறாய் தோன்றும் எண்ணம் எல்லாம் இப்போது இல்லை. மாறாக அவன் அருகாமையை மனம் பெரிதும் விரும்பத் தொடங்கியது. முன்போல் அவனுடன் வார்த்தைக்கு வார்த்தை பேச இப்போதெல்லாம் அவளுக்கு கூச்சமாய் இருந்தது.

 

 

அவள் பேசத் தயார் தான் ஆனால் பிரணவ் தான் அவளை பார்த்தாலே விழுங்கி விடும் பார்வை பார்க்கிறானே எங்கே அவளால் பேச முடியும். வாயை திறந்தாலே வார்த்தை தந்தியடிக்க தொடங்கியது.

 

 

அன்று வீட்டிற்கு ஒரு புது விருந்தினர் வந்திருந்தனர். அழைப்பு மணியின் ஓசையில் கதவை திறந்த மனோ வெளியில் நின்றிருந்தவரை பார்த்து விழித்தாள்.

 

 

“நான் லதா… லதா நவநீத்” என்ற அப்பெண் தமிழில் பேச மனோவிற்கு அவ்வளவு உற்சாகம்.

 

 

“வாங்க வாங்க உள்ள வாங்க” என்று அவளை உள்ளே அழைத்து அமரச் செய்தாள். அப்பெண் லதாவுடன் ஒன்றரை வயது பெண் குழந்தையும் வந்திருந்தது.

 

 

பார்ப்பதற்கு அவள் தாயை உரித்து வைத்தது போலிருந்த அக்குழந்தையை பார்த்தால் லட்டு போல இருந்தது மனோவிற்கு. “உங்க குழந்தையா பேரு என்ன??”

 

 

“மயூரி” என்றாள் லதா.

 

 

மனோவிற்கு வந்தவள் யாரென்று விசாரிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. வந்தவள் தமிழில் பேசியதே அவ்வளவு நிறைவு அவளுக்கு. இங்கு வந்த இத்தனை நாட்களில் பிரணவ் தவிர வேறு யாரிடமும் தமிழில் பேச முடியவில்லை அந்த கவலை தான் அவளுக்கு.

 

“ரதி யாரு வந்திருக்காங்க… காலிங்பெல் சத்தம் கேட்டுச்சே” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான்.

 

 

மனோ அவன் கேள்வி கேட்கவும் விழித்தாள். பின் சுதாரித்துக்கொண்டு “லதாவும் லட்டுவும் வந்திருக்காங்க” என்றாள்.

 

 

“என்ன லட்டுவா” என்றாள் அப்பெண் லதா.

 

 

“ஹ்ம்ம் ஆமா பாப்பா பார்க்க லட்டு மாதிரி இருக்கா அதான் அப்படி சொன்னேன்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பிரணவ் அங்கு வந்து சேர்ந்தான்.

 

 

“ஹலோ மேடம் இப்போ தான் உங்களை நேர்ல பார்க்கறேன். எப்பவும் சார் தான் வந்து லஞ்ச் கொடுப்பார். அப்புறம் சார் எப்படி இருக்கார். அவர் வரலையா மேடம்”

 

 

“அவர்க்கு இன்னைக்கு கீமோ அதான் அவர் வரலை. எங்கஅப்பாவையும்பையனையும் துணைக்கு வைச்சுட்டு நான் இங்க வந்திருக்கேன்” என்றாள் சற்றும் அலட்டாமல்.

 

 

பிரணவிற்கு அவளை குறித்த ஆச்சரியம் இன்னும் விலகவில்லை. அதை வெளியே காட்டிக் கொள்ளாதவனாக “நீங்க சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே மேடம், நீங்க இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டியாய்தில்லையே” என்றான்.

 

 

“இட்ஸ் ஓகே பிரணவ், எனக்கு ஒண்ணும் இஸ்யூஸ் இல்லை”

 

 

“ரதிஇவங்க தான் நமக்கு தினமும் சாப்பாடு கொடுக்கறவங்க” என்று மனைவிக்கு அறிமுகம் செய்தான்.

 

 

“அக்கா… நான் உங்களை அப்படி கூப்பிடலாமா” என்று கூப்பிட்ட பின் கேள்வி கேட்டாள் மனோ.

 

 

“தாராளமா கூப்பிடும்மா”

 

 

“எனக்கு நீங்க சமைக்க கத்துக் கொடுக்கறீங்களா!!” என்று அவள் லதாவிடம் கேட்டதும் பிரணவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது. ‘ஆத்தி இவ மறுபடியும் சமைக்க போறாளா’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான்.

 

 

“ஒரேஒரு நாள் தான் அக்கா நான் உப்புமா செஞ்சேன்… மனுஷன்மறுநாளே உங்ககிட்ட சாப்பாட்டுக்கு சொல்லிட்டார்”

 

 

“கொஞ்சம் கொடுமையா தான் செஞ்சிட்டேன்… நான் என்ன செய்வேன் எனக்கு நிஜமாவே சரியா சமைக்க தெரியாது. அதனால தான் கத்துக்கலாம்ன்னு”

 

 

“ஒரு நாளாச்சும் நானா சமைச்சு இவருக்கு போடலாம்ன்னு ஒரு ஆசை. உங்களுக்கு போட்டியா எல்லாம் நான் வந்திட மாட்டேன் அக்கா நீங்க பயப்பட வேண்டாம்” என்று சொன்னவளை பார்த்து பிரணவிற்கு சிரிப்பு வந்தது.

 

 

‘இந்தம்மாக்கு போட்டிக்கு போற எண்ணம் வேற இருக்கா, ரொம்ப தான்டி உனக்கு’ என்று நினைத்துக் கொண்டான்.

 

 

மனோ பேசியதை பார்த்து லதாவிற்கு லேசாய் சிரிப்பு எட்டிப் பார்த்தது. “கண்டிப்பா சொல்லி தரேன், சமையல்ஈசி தான். கண்ணுபார்த்து கை செஞ்சா போதும், தன்னை போல வந்திரும்”

 

 

“அப்போ நான் வீக்எண்டுல உங்க வீட்டுக்கு வந்திடறேன், நீங்க எனக்கு சமைக்க கத்துக் கொடுங்க ஓகே வா, ஏன்னா எனக்கு வீக் எண்டுல தான் லீவு இருக்கும். மத்த நாள்ல நான் ஆபீஸ் போய்டுவேன்” என்றாள் குதூகலமாய்.

 

 

‘அடிப்பாவி நாம ரெண்டு பேரு சேர்ந்து ஒண்ணா வீட்டில இருக்கறதே அந்த ரெண்டு நாள்ல தான் அதும் உனக்கு பிடிக்கலையா’ என்று மனதிற்குள் தான் மறுபடியும் பேசிக் கொண்டான் பிரணவ்.

 

 

“சரி கண்டிப்பா சொல்லி தரேன். நான் கிளம்பட்டுமா” என்று எழுந்து நின்றாள் லதா.

 

 

“ஏன் அக்கா நீங்க வேலை பார்க்கும் போது பாப்பாவை பார்த்துக்க உங்களுக்கு சிரமமா இருக்காதா. நான் வேணும்ன்னா பாப்பாவை பார்த்துக்கட்டுமா, வீக் எண்டு டேஸ்ல தான்”

 

 

“அது சரி நீங்க வீக் எண்டுல சமைக்க கத்துக்க போறீங்களா இல்லை பாப்பா பார்த்துக்க போறீங்களா”

 

 

“ரெண்டும் தான் அக்கா, சமைச்சுட்டு பாப்பாவை பார்த்துக்கறேன் ஓகே தானே” என்றாள் மனோபாரதி.

 

 

“வர்றேன் பிரணவ், வர்றேன்ம்மா” என்றுவிட்டு அவள் மயூரியை தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.

 

 

லதாவை வாசல் வரை வந்து வழியனுப்பிய பிரணவ் “மேடம் தப்பா எடுத்துக்காதீங்க அவ ரொம்ப பேசிட்டு இருக்காளேன்னு. பேசுறதுக்கு ஆளில்லாம ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தா. உங்களை பார்த்ததும் ரொம்ப சந்தோசம் அவளுக்கு அதான் பேசி தீர்த்திட்டா”

 

 

“ச்சே ச்சே நான் தப்பா எடுத்துக்கலை பிரணவ்”

“இங்க வந்த புதுசுல எனக்கும் இதே பீல் தான்… கொஞ்ச நாள் ஆச்சு எனக்கு எல்லாம் பழக அவங்களுக்கும் அது கொஞ்சம் கொஞ்சமா பழகிடும்” என்றுவிட்டு அவள் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

 

 

அவள் சென்றதும் வீட்டிற்குள் வந்த பிரணவ் மனோவின் அருகில் சென்று அமர்ந்தான். பிரணவ் அருகே அமர்ந்ததும் உடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்த உணர்வு அவளுக்கு. சட்டென்று எழ பார்த்தவளின் கையை பிடித்து அருகே அமர்த்தினான் பிரணவ்.

 

 

“எங்கே போறே?? உட்கார் உன்கிட்ட பேசணும்” என்றான்.

 

 

‘ஓ!! என்கிட்ட பேச கூட செய்வீங்களா நீங்க!! இப்போலாம் பார்க்கறது மட்டும் தானே வேலையா வைச்சிருக்கீங்க’ என்று நினைத்துக் கொண்டு அவனை பார்க்க பிரணவ் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

“பே… பேசணும்ன்னு சொன்னீங்க” என்றாள்.

 

 

“அவங்களை பத்தி நீ என்ன நினைக்கிற”

 

 

“யா… யாரு… யாரை பத்தி சொல்றீங்க”

 

 

“இப்போ வந்திட்டு போனாங்களே லதா அவங்களை பத்தி” என்றான்.

 

 

“அவங்களை பத்தி என்ன!! நல்ல மனுஷங்களா தெரியறாங்க” என்றாள் பதிலுக்கு.

 

 

“அவங்க ஹஸ்பன்ட் பத்தி நாங்க பேசினோமே எதுவும் புரிஞ்சுதா உனக்கு”

“ஆமா பேசினீங்கல!! என்னாச்சு அவருக்கு!! எதோ கீமான்னு சொன்னீங்களே!!”

 

 

“அது கீமா இல்லை கீமோ!! அதைஎதுக்காக பண்ணுவாங்கன்னு தெரியுமா”

 

 

தெரியாது என்பது போல் தலையை உருட்டினாள் மனோ.

 

 

“கேன்சர் பேஷண்ட்ஸ்க்கு தான் கீமோ கொடுப்பாங்க… அவங்களோட கணவர்க்கு பித்தப்பைல கேன்சர் ஸ்டார்டிங் ஸ்டேஜ்”

 

 

“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்”

 

 

“என்னோட பிரண்ட் தான் இவங்களை ரெபர் பண்ணான். அவன் தான் சொன்னான். எனக்கு இவங்களை பார்த்தா ரொம்ப ஆச்சரியம் தெரியுமா”

 

 

“இவங்களோட ப்ரோப்ளம்ஸ்க்கு முன்னால நம்மோடது எல்லாம் ஒண்ணுமேயில்லைன்னு தோணும் எனக்கு. இவங்க ஹஸ்பன்ட்க்கு வேலைக்காக தான் அவங்க இந்த ஊருக்கு வந்திருக்காங்க”

 

 

“அவரும் வேலைக்கு போக ஆரம்பிச்சு ஒரு ரெண்டு மூணு நாள்லயே அவருக்கு இந்த ப்ரோப்ளம் இருக்கறது தெரிஞ்சுது”

 

 

“கையில காசு இல்லை அவர் வேலைக்கு போனா தான் அவங்களுக்கு சம்பாத்தியம் இந்த நிலையில அவங்க என்ன பண்ணியிருப்பாங்க யோசிக்க கூட முடியலைல நம்மால”

 

 

“ஆனா இவங்க ஒத்தை ஆளு அவரை ஆஸ்பிட்டல்ல சேர்த்து எப்படி எப்படியோ சமாளிச்சு அவங்களுக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கிட்டு அவங்களுக்கு வருமானத்துக்கும் வழி பண்ணிக்கிட்டாங்க”

 

 

“இத்தனைக்கும் இந்த ஊருல அவங்களுக்கு யாரையுமே தெரியாது. அவங்க இங்க வந்து கூடி போனா ஒரு நாலு மாசம் தான் இருக்கும்”

 

 

“ஒரு ஒன்றரை வயசு குழந்தை பன்னிரண்டு வயசு பையன் உடம்பு சரியில்லாத கணவர் அத்தனையும் ஒரு சேர சமாளிக்கறாங்க”

 

 

“இந்த கதையை நான் உனக்கு ஏன் சொல்றேன்னு உனக்கு யோசனையா இருக்கும். நீ எப்பவுமே யாரையுமே சார்ந்து இருக்கக் கூடாது”

 

 

“உனக்காக தேவையை நீ தான் பார்க்கணும். இந்த உலகத்தை தைரியமா எதிர்கொள்ற திறமையை நீ வளர்த்துக்கணும். உன்னோட அம்மா அப்பா இல்லை அது தான் நிதர்சனம்”

 

 

“அதை நீ புரிஞ்சுக்கணும் எப்பவும் அவங்களை நினைச்சு நீ அழக்கூடாது. நீ அழறதை அவங்க விரும்ப மாட்டாங்க. நீ தைரியமான பொண்ணா எதையும் எதிர்கொள்ற ஒரு பெண்ணா தான் உன்னை பார்க்க அவங்க விரும்புவாங்க”

 

 

“இந்த லதா மேடம்க்கு இந்த ஊருல யாரையுமே தெரியாது. சம்பாதிக்கற புருஷனும் ஆஸ்பிட்டல்ல எப்படி அழகா வாழ்க்கையில எதிர்நீச்சல் போட பழகிட்டாங்க பார்த்தியா”

 

 

“இந்த துணிவும் தைரியமும் தான் பெண்களுக்கு வேணும். அய்யோ இப்படி ஆகிப்போச்சே அப்படி ஆகிப்போச்சேன்னு புலம்பறதுல எதையுமே சாதிக்க முடியாது, நான் சொல்றது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்”

 

 

“இதுக்கு மேல நான் பேசி உன்னை கன்பியூஸ் பண்ண விரும்பலை ரதிம்மா” என்று அவளுக்கு நீளமாய் விளக்கம் கொடுத்து அறிவுரை செய்து போனான் அவள் கணவன்.

 

 

மனோவிற்கும் லதாவை குறித்து இப்போது ஆச்சரியம் தான். தான் மட்டும் தொட்டார்சிணுங்கியாய் தன் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள கூட அடுத்தவரின் உதவியை நாடி நின்றோமே என்று தன்னைக் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினாள்.

 

 

இப்படியாக நாட்கள் கடந்து செல்ல லதாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக சமையலை கற்றுக்கொண்டாள் மனோ. குழந்தை மயூரியும் மனோவிடம் சேர்ந்து கொள்ள அவ்வப்போது குழந்தையை தன்னுடன் தூக்கி வந்துவிடுவாள் அவள்.

 

 

அப்படி ஒரு நாள் அவள் தூக்கி வந்திருந்த வேலை அவள் குழந்தையை கொஞ்சுவதை பார்த்த பிரணவ் இருவரையும் கண்கொட்டாமல் பார்த்திருந்தான்.

 

 

மயூரியை அவள் லட்டு என்றே அழைப்பாள். “லட்டும்மா உங்க அங்கிள் எதுக்கு நம்மையே லுக் விட்டுக்கிட்டு இருக்கார்” என்று ஓரக்கண்ணால் கணவனை பார்த்தவாறே மயூரியிடம் பேசினாள் அவள்.

 

 

“உங்கஆன்ட்டியை தான் பார்த்து சைட் அடிக்கறேன்னு சொல்லுடா மயூரி” என்று திருப்பிக் கொடுத்தான் பிரணவ்.

 

 

‘அடப்பாவி மனுஷா அப்படியே பேசி வைக்கிறாரே’ என்று நினைத்துக்கொண்டவளின் முகம் லேசாய் சிவந்து தான் போனது.

“என்னடா குட்டி உங்க ஆன்ட்டிக்கு பேச்சே வரலை. இதுக்கெல்லாம் அவங்க பதில் பேச மாட்டாங்களே!!” என்றவன் பெருமூச்சுவிட்டான்.

 

 

“எதுக்கு இப்போ பெருமூச்சு”

 

 

“சொன்னா மட்டும் எதுவும் நடக்கப் போகுதா என்ன” என்றான்அவன் ஏக்கமாய்.

 

 

“சொல்லுங்க என்னன்னு கேட்போம்”

 

 

“மயூரிக்கு கிடைச்சது எனக்கும் கிடைக்குமான்னு பார்த்தேன்”

 

 

“என்னது மயூரிக்கு கிடைச்சது புரியலையே” என்றாள்.

 

 

சட்டென்று எழுந்தவன் அவள் கன்னத்தில் பச்சக்கென்று ஒரு முத்தம் வைத்துவிட்டு தன் போக்கில் உள்ளே சென்றுவிட்டான். மனோ தான் சிலையாய் உறைந்து நின்றாள்.

 

 

இப்போதெல்லாம் அவ்வப்போது இப்படியான விஷயங்கள் அவர்களுக்குள் நடந்து கொண்டு தானிருக்கிறது. ஆனாலும் முழுதாய் இருவரும் தங்களின் மனதை பரிமாறிக் கொள்ளவில்லை.

 

 

இப்படி சென்று கொண்டிருந்த ஒருநாளில் மனோ சாதாரணமாய் ஒன்றை சொல்லிச் சென்றாள் பிரணவிடம்.

 

 

அன்றும் மயூரியை அவள் அழைத்து வந்திருந்தாள். சட்டென்று ஏதோ தோன்ற கொஞ்சமும் யோசிக்காமல் கணவனிடம் “நமக்கும் இப்படி ஒரு லட்டு வேணுங்க” என்று கேட்டுவிட்டாள்…..

Advertisement