Advertisement

அத்தியாயம் –22

 

 

மனோவிற்கு ஊரில் இருந்த வந்த அன்றிலிருந்து மனமே சரியில்லாமல் போனது. பிரணவை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டோமே பாவம் என்று ஒரு புறம் எண்ணினாலும் மறுபுறமோ அதில் தப்பொன்றுமில்லை என்று மனம் சப்பைக்கட்டு கட்டியது.

 

 

விளையாட்டாய் ஒரு வாரமும் ஓடியிருக்க மனோவின் முகத்தில் இறுக்கம் நிரந்தரமாய் குடி கொண்டது. அஜியை கூட அவளால் சரிவர கவனிக்க முடியவில்லை.

 

 

அன்று விடுமுறை தினம் என்பதால் பொழுதை நெட்டித் தள்ள அவள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்க வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டது.

 

 

‘யாராய் இருக்கும் ஒரு வேலை பிரகாஷ் மாமாவும் மோனா அக்காவும் வந்திருப்பார்களா!!’ என்று எண்ணிக்கொண்டே கதவை திறந்தவள் அதிர்ச்சியாய் நின்றாள்.

 

 

வந்தது சசியும் சரவணனும்… வந்தவர்களை வாவென்று கூட அழைக்க தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள் மனோ. சட்டென்று ஒரு கோபம் மின்னெலென தோன்றியது.

 

 

அதை காட்டாது மறைக்க முகத்தில் இறுக்கத்தை பூசிக் கொண்டாள். அவர்களை அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே அவள் நிற்க “உள்ள வரலாமா” என்றாள் சசி.

 

 

வாயும் தன்னையறிமால் “வாங்க…” என்று கூறி வந்தவர்களுக்கு வழிவிட்டாள்.

 

 

அப்போது அஜி உள்ளிருந்து“அம்மா…” என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்தவன் மனோவின் காலைக்கட்டிக் கொண்டான்.

 

 

சசிக்கு அவனை பார்த்ததுமே அள்ளிக்கொள்ள தோன்றியது. பிரணவின் மறுபிம்பம் போல் இருந்த குழந்தையை நோக்கி வா என்பது போல் கையை நீட்ட குழந்தையும் சற்றும் யோசிக்காமல் அவளிடம் சென்றது.

 

 

சசிக்கு கண்கள் கலங்கியது…. “இந்த அத்தையை தெரியுமா கண்ணா உனக்கு… நான் கூப்பிட்டதும் வந்திட்டியே குட்டி… என் தம்பி மாதிரியே இருக்கடா செல்லம்” என்றவள் அவனை அணைத்து முத்தமிட்டாள்.

 

 

மனோவோ அவள் நின்ற இடத்தில் இருந்து அசையாமல் நின்றாள். வந்த விஷயத்தை சொல்லுங்கள் என்பது போல் நின்றிருந்தாள். மறந்தும் கூட சரவணனின் புறம் பார்வையை செலுத்தவேயில்லை அவள்.

 

 

“குட்டிக்கண்ணா உங்கம்மாகிட்ட பேசணும்… அவங்க எங்ககிட்ட எல்லாம் பேசுவாங்களா!!” என்று குழந்தையை வைத்து ஆரம்பித்தாள் சசி…

 

 

மனோவோ பதிலேதும் சொல்லாமல் அமைதியாய் பார்த்திருந்தாள் இப்போதும். “உங்கம்மாவோட அமைதியை சம்மதமா எடுத்துக்கறேன்டா கண்ணா”

 

 

“உன்னை பார்க்க வந்தது எதுக்காகன்னு உனக்கு குழப்பமா இருக்கலாம். இவர் கொடைக்கானல்ல இருந்து வந்ததுமே என்கிட்ட எல்லாமே சொல்லிட்டார்”

 

 

“அவர் செய்தது சரின்னு நான் சொல்ல வரலை. தப்பு தப்பு தான்நீ மன்னிக்கறியோ இல்லையோ உன்கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்தோம்” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிட்டாள் சசி.

 

 

மனோவிற்கு சற்று ஆச்சரியம் தான் ஒரு கணவன் தன் மனைவியிடம் தான் செய்த தவறை சொல்லி மன்னிப்பு கேட்க கூட்டி வந்திருக்கிறான் என்றால் நிச்சயம் அது பெரிய விஷயம் தானே.

 

 

அவளுக்கும் அது தான் தோன்றியது, இருவருக்குமான புரிந்துணர்வு சற்று அவளை பொறாமை படவும் செய்தது.

அங்கு சுற்றி இங்கு சுற்றி அவள் எண்ணங்கள் பிரணவ் தன்னிடம் இது போல் சொல்லியிருக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் வந்து நின்றது.

 

 

“சசி ஒரு நிமிஷம்” என்று மனைவியை பார்த்து சொன்ன சரவணன் இப்போ எழுந்து நின்றிருந்தான்.

 

 

“எனக்கு எப்படி ஆரம்பிக்கறதுன்னு நிஜமாவே தெரியலைம்மா…”

 

 

“நான் ஒரு சராசரி பிசினெஸ்மேன் தான்… தொழில்ல முன்ன பின்ன இருக்கவன் தான்… அப்படி தான் உங்கப்பா வாங்கி வைச்சிருந்த அந்த இடத்தையும் நான் கேட்டேன்…”

 

 

“நீங்க வைச்சிருக்க அந்த இடத்தை சுத்தி கிட்டத்தட்ட எல்லா இடமும் நான் விலைபேசி வைச்சிட்டேன்… அங்க பெரிய பிளாட் கட்டி விற்கணுங்கறது தான் என்னோட பிளான்”

 

 

“உங்கப்பா ரியல் எஸ்டேட் பண்றவர் தானே அப்படிங்கற எண்ணத்துல தான் அந்த இடத்தை கேட்டேன். ஆனா அவர் அதை தனக்காக வாங்கியிருப்பார்ன்னு தெரியாது”

 

 

“அப்பவும்நான் எவ்வளவோ பேசிப்பார்த்தும் உங்கப்பா கொடுக்கவே இல்லை. அன்னைக்கு திரும்பவும் கடைசியா ஒரு முறை பேசிப்பார்க்கலாம்ன்னு தான் உங்க வீட்டுக்கே வந்தேன்”

 

 

“வர்ற வழியில தான் தெரியும் அவர் தவறிட்டார்ன்னு… சரி வீட்டில இருக்கவங்ககிட்ட பேசலாம்ன்னு வந்தேன்… அதுக்கு அப்புறம் தான் உனக்கே தெரியுமேம்மா”

 

 

“நீஅப்படி கேட்டதும் கொஞ்சம் ஷாக் தான் உன் பிரச்சனை என்னன்னு எனக்கு அப்போ முழுசா தெரியாது. நீ ஏதோ சிறுபிள்ளைத்தனமா பேசுறேன்னு நினைச்சேன்”

 

 

“உன்னை ஈசியா ஏமாத்தி அந்த இடத்தை வாங்கிடலாம்ன்னு தான் நினைச்சேன். அதுனால தான் நான் உனக்கு பெரிசா எந்த ஹோப்பும் கொடுக்கலை கல்யாணம் பத்தி… என்னோட கவனம் எல்லாம் அந்த இடத்தை பத்தி மட்டும் தான் இருந்திச்சு”

 

 

“நான் திரும்ப திரும்ப அதை பத்தி மட்டும் தான் உன்கிட்ட பேசியிருப்பேன். நீயோசிச்சு பார்த்தா உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்…”

 

 

“ஆனா கொடைக்கானல்ல நான் உன்கிட்ட நடந்துகிட்ட முறை ரொம்பவே தப்பு தான்மா… பிரணவ் வந்து அந்த போலீஸ்கிட்ட சொல்லி என்னை கூட்டிட்டு போகும் போது தான் எனக்கே தெரியும்…”

 

 

“நீ பிரணவோட மனைவின்னு, தங்கை முறையில இருக்க பொண்ணுகிட்ட தப்பா பிகேவ் பண்ணிட்டேன்னு எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருந்துச்சு”

 

 

“நீ வேற மாதிரி பொண்ணுன்னு நினைச்சு தான் அப்படி பிகேவ் பண்ணிட்டேன். அப்பவும் கூட எனக்கு அந்த இடத்தை பத்தி தான் ஞாபகம். எப்படி அந்த பேச்சு ஆரம்பிக்கலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கும் போது தான் பேச்சு திசை மாறிடுச்சு”

 

 

“உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவும் நான் தயார் தான்மா… சத்தியமா சொல்றேன் நான் தப்பா எந்த நோக்கத்தோடவும் உன்னை நெருங்கலை”

 

 

“அந்த நேரத்துல நீ பேசினதுக்கு பதில் பேசணும்ன்னு பேசினது தான்ம்மா… அப்போவே பிரணவ்கிட்ட சொன்னேன்வந்து மன்னிப்பு கேட்கறேன்னு. ஆனா அவன் தான் இப்போ வேண்டாம் நீ கோவமா இருப்பேன்னு சொன்னான்”

 

 

“எனக்கு மனசு கேட்கலை அதனால தான் ஊருக்கு வந்ததும் சசிகிட்ட உண்மையை எல்லாம் சொல்லி இங்க கூட்டிட்டு வந்திட்டேன்… காலையில தான் பிரகாஷ்கிட்ட இந்த வீட்டு அட்ரஸ் வாங்கினோம்”

 

 

மனோபாரதி இப்போதும் அசையாமலே நின்றிருந்தாள். “உனக்கு என் பேச்சுல நம்பிக்கை இல்லை மாதிரி தெரியுதும்மா”

“எங்களுக்கு பிறக்க போற குழந்தை மேல சாட்சியா சொல்றேன்ம்மா… நான் பண்ணது தப்பு தான், இப்போ நான் சொன்னது தான் நிஜம்…” என்றவனின் சசியின் வயிற்றின் மீது கை வைத்திருக்க “என்ன முட்டாள்த்தனம் பண்றீங்க”

 

 

“கையை எடுங்க முதல்ல” என்று பாரதியும் “என்னங்க ஏன் இப்படி எல்லாம்” என்று சசியும் ஒருங்கே கூறினர்.

 

 

“வெளிய ஒரு ஆள்கிட்ட பிரச்சனைன்னா நான் தூக்கி போட்டு போய்டுவேன்… இது நம்ப குடும்பம் இங்க எந்த பிரச்சனையும் வர்றது என்னால தாங்கிக்க முடியாது”

 

 

“அதுவும் நடந்த நடக்கற பிரச்சனைக்கு நான் தான் காரணம் அப்படிங்கறது எனக்கு முள்ளா உறுத்திட்டு இருக்கு… அதுக்காக தான் வந்தேன்” என்றான்.

 

 

“எனக்கு இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை… இந்த நிமிஷம் என் மனசுல இந்த விஷயத்தை பத்தி எந்த கருத்தும் இல்லை… இதை இங்கவே இப்படியே விட்டிடலாம்”

 

 

“இதுக்கு மேல இதை பத்தி வாதிக்கவோ விவாதிக்கவோ செய்ய வேண்டாமே” என்று மனோ கூற சசியும் சரவணனும் அவளை நன்றி பார்வை பார்த்தனர்.

 

 

“பிரணவ் வீட்டில இல்லையா!! எங்க மேல கோவமா இருக்கானா!!” என்றாள் சசி.

 

 

“அவர் ஊர்ல இருக்கார்”

 

 

“ஊர்லயா!!”

 

 

“ஹ்ம்ம் டெல்லில வேலையா போயிருக்கார்” என்று சமாளித்தாள்.

 

 

“அவன் வந்தா நாங்க வந்திட்டு போனோம்ன்னு சொல்லும்மா. அப்போ நாங்க கிளம்புறோம்” என்று அவள் எழுந்து நிற்க சரவணனும் அவளுடன் கிளம்பினான்.

 

 

“ஒரு நிமிஷம், முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்கீங்க… எதுவும்ஸ் சாப்பிடாம போனா எப்படி!! உட்காருங்க இதோ வந்திடறேன்” என்றவள் சமையலறை புகுந்திருந்தாள்.

 

 

சசி அஜியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் பழச்சாறுடன் வந்திருந்தாள் மனோ. “உங்களுக்கு இப்போ எத்தனை மாசம்”

 

 

“நாலு…” என்ற சசியிடம் “இதான் பர்ஸ்ட்டா பேபியா” என்றாள்.

 

 

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தாள் சசி. ஒருவழியாக சசியும் சரவணனும் கிளம்பிச் செல்ல மனோவிற்கு மனதில் இன்னமும் பாரம் கூடிப் போயிற்று.

 

 

சரவணனிடம் கூட தான் யார் என்று சொல்லியிருக்கிறான் ஆனால் என்னிடம் ஒரு முறை கூட சரவணன் பற்றி சொல்லவேயில்லையே என்று ஆதங்கம் அவளுள் கனலாய் மாறி அவன் மேல் இருந்த கோபத்தை அது அதிகப்படுத்தியது.

 

 

தவறு அவன் மேல் இருக்கிறதோ இல்லையோ தன்னிடம் அவன் ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்க வேண்டும் என்பது அவளின் எண்ணமாய். என்ன தான் யோசித்தும் அவள் மனம் அவனை மன்னிக்க தயாராய் இல்லை.

 

 

எந்த வேலையிலும் மனம் லயிக்கவில்லை. இந்த ஊரைவிட்டு வேறு எங்காவது சென்றுவிடலாமா என்று தோன்றியது. அவளின் சொந்த ஊருக்கு செல்லலாமா இல்லை வேறு எங்காவது செல்லலாமா என்று தீவிரமாய் யோசிக்கத் தொடங்கினாள்…

 

____________________

 

 

“டேய் என்னடா ஆச்சு. ஊர்ல இருந்து வந்ததுல இருந்து வாயே திறக்க மாட்டேங்குற!! இப்ப மெமோ வேற வந்திருக்குடா… ஏன்டா இப்படி இருக்க??”

 

 

“என்ன தான்டா உன் பிரச்சனை… உனக்கு கல்யாணம் ஆனா விஷயத்தை கூட என்கிட்ட மறைச்சுட்ட, உனக்கு ஒரு குழந்தை வேற ஒரு வயசுல இருக்கு அதையும் மறைச்சுட்ட”

 

 

“இப்போ ஊருக்கு போனவன் இப்படி எதையோ பறிக்கொடுத்தவன் மாதிரி திரும்பி வந்து நிக்குற… ஏன்டா என்கிட்ட மறைக்கற அளவுக்கு அப்படி என்னடா உனக்கு பிரச்சனை”

 

 

பிரணவ் பதிலே சொல்லாமல் அமைதியாய் இருந்தான். “என்னடா நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன்… அமைதியா இருந்து என்ன தான்டா சாதிக்க போறே” என்று கொஞ்சம் சத்தமாய் தான் கேட்டான் ராகவ்.

 

 

“தப்பு தான்டா ஆனா ராகவ் என்னை மன்னிப்பியாடா… உன்கிட்ட சொல்லாம இருந்தது தப்பு தான்… மன்னிச்சிரு” என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தேன்.

 

 

“டேய் எனக்கு நீ சொல்லலைன்னு வருத்தம் தான்டா… ஆனா அதுக்கெல்லாம் எதாச்சும் காரணம் இருக்கும்ன்னு எனக்கு புரியுதுடா… என்கிட்ட எதுக்கு நீ மன்னிப்பு எல்லாம் கேட்குற, விடுடா”

 

 

“நிஜமாவே காரணம் இருக்கும்ன்னு நீ நம்புறியாடா… என்னை நீ நம்பறியா… தேங்க்ஸ்டா என்னை புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டா…”

 

 

“சரி சொல்லு என்னாச்சு, ஏன் இப்படி இருக்க??”

 

 

“ஒண்ணுமில்லைடா…”

 

 

“டேய் அந்த அக்தர் கேஸ்ல உன்னோட கான்சன்ட்ரேஷன் மிஸ் ஆகி இப்போ உனக்கு மெமோ வந்திருக்குடா… என்னாச்சுன்னுஎனக்கு சொல்லுடா, என்ன பண்ணலாம்ன்னு பார்க்கலாம்”

 

 

“ஒண்ணுமில்லைடா” என்று விரக்தியாய் சொன்னவன் நிச்சயமாய் புதிதாய் தான் தெரிந்தான் ராகவுக்கு.

 

 

எப்போதும் கலகலப்புடனே இருப்பவன் எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக பார்த்தவனை இப்படி பார்க்க ராகவுக்கு நிச்சயம் கஷ்டமாக தான் இருந்தது. முகுந்தனிடம் கேட்டால் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை.

 

 

ஊருக்கு வந்த போது பிரணவ் மிகுந்த சந்தோசத்துடன் இருந்ததாகவே அவன் சொன்னான். அதற்கு பிறகு தான் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று ராகவிற்கு புரிந்தது.

 

 

தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு. பிரணவாக வாயை திறப்பான் என்று தோன்றவில்லை. அவனை பேச வைக்காமல் எதையும் சரி செய்ய முடியாது என்ன செய்வது என்று யோசித்த அந்த நண்பன் மறுநாள் நண்பனை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

 

 

“எங்கடா போறோம்??”

 

 

“சொன்னேன்ல ஒரு கேஸ் விஷயமா ஒருத்தரை பார்க்க போறோம்” என்றான் ராகவ்.

 

 

“நான் எதுக்குடா வரணும்?? நீ வேணா போய்ட்டுவா!!”

 

 

“நீ தான் வரணும் உன்னோட கேஸ் பத்தி தான் வா!!”

 

 

“எனக்கு இப்போ மூட் இல்லைடா இன்னைக்கு லீவ் தானே!! எதுனாலும் நாளைக்கு பார்த்துக்கலாமே!!” என்றவனை பைக்கின் கண்ணாடி வழியாக பார்த்தான்.

 

‘என்ன தான் ஆச்சு இவனுக்கு!! ஞாயிற்றுக்கிழமை கூட விழுந்து விழுந்து வேலை பார்க்கறவன் இப்படி என்னமோ போல பேசுறானே!!’ என்று எண்ணிக்கொண்டு எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினான்.

 

 

வண்டி ஓரிடத்தில் நிற்கவும் “ஹ்ம்ம் இறங்கு பிரணவ்” என்றான் ராகவ்.

 

 

“இங்க எதுக்குடா!! டாக்டர் பார்த்து என்ன விசாரணை அதான் நமக்கு போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்ஸ் எல்லாம் வந்தாச்சே!! எதுவும் ரீஇன்வெஸ்டிகேஷனா!!” என்றான்.

 

 

“என்னை நீ தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு சொல்லவா!! இப்போ இங்க வந்தது இன்வெஸ்டிகேஷன்க்கு இல்லை. உனக்காக தான் தேடி கண்டுப்பிடிச்சிருக்கேன் இந்த சைக்கியாட்ரிஸ்ட்டை”

 

 

“என்ன!!”

 

 

“ஆமா பிரணவ்… ப்ளீஸ்டா என்னை தப்பா நினைக்காத, நீ என்கிட்ட சொல்லலைன்னா கூட பரவாயில்லை. இப்படி மனசுலலேயே வைச்சுட்டு இருக்காதடா…”

 

 

“இந்த டாக்டர்க்கு தமிழ் தெரியும்… அதான் இங்க கூட்டிட்டு வந்தேன், நீ மனசுவிட்டு பேசுடா அது போதும்… மனசுல பாரத்தை வைச்சுட்டு நீ இப்படி இருக்கறது நல்லாயில்லை”

 

 

“அதுக்கு தான் உன்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்தேன். என் மேல கோபப்படாம உள்ள வாடா ப்ளீஸ்” என்ற ராகவை கண்டு நெகிழ்ந்து தான் போனான் பிரணவ்.

 

 

‘ச்சே நாம அவ்வளவு மோசமாவா ஆகிட்டோம்…’ என்று எண்ணியவனுக்கு மனதின் பாரம் இறக்கி வைத்தால் கொஞ்சம் லேசாகும் என்று தோன்ற “சரி வா போகலாம்” என்று நண்பனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தான்.

 

 

மருத்துவர் ராகவை வெளியே இருக்கச் சொல்ல “பரவாயில்லை டாக்டர் அவனுக்கு தெரியட்டும். அவனும் இருக்கட்டும்” என்று பிரணவ் சொல்லிவிட ராகவ் அங்கு அமர வைக்கப்பட்டான்”

 

____________________

 

 

அன்று

————-

 

 

“ரதிம்மாநைட் கொஞ்சம் ஏர்போர்ட் வரை போக வேண்டி இருக்கு. நீ வீட்டில தனியா இருக்க வேண்டாம். என்னோட வர்றியா” என்ற பிரணவை நிமிர்ந்து நோக்கினாள் மனோ.

 

 

“இனிமே நான் தனியா இருக்கவே மாட்டேன்… நீங்க எங்க போனாலும் நானும் வர்றேன்… போறதா இருந்தா சேர்ந்தே போவோம்” என்று இருபொருள் பட கூறியவளின் குரல் சற்று உடைந்திருந்ததை உணர்ந்தான் பிரணவ்.

 

 

“நானும் உன்னைவிட்டு எங்கயும் போக மாட்டேன் புரியுதா!!” என்றவன் அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

 

 

தனக்கான ஆறுதல் அவனிடத்தில் தான் என்பதை உணர்ந்தும் உணராதவளாய் அவன் மீது சாய்ந்திருந்தாள் அவள்.

 

 

இரவு எட்டு மணி போல வீட்டில் இருந்து கிளம்பியவர்கள் வரும் வழியில் உணவு உண்டுவிட்டு விமான நிலையத்திற்கு ஒன்பதரை மணி வாக்கில் வந்து இறங்கினர்.

 

 

“ஆமா நாம பார்க்க போறது உங்க பிரண்டா!!”

 

 

“என்ன நாமளா!!” என்று யோசித்தவன் அப்போது தான் அதை வாய்விட்டு சொன்னதை எண்ணி “இல்லை ரதி நான் போய் அவரை பார்த்திட்டு வரேன்”

 

 

“நீ இங்க விசிட்டர்ஸ் பிளேஸ்ல உட்கார்ந்திரு… நான் ஒரு அரைமணி நேரத்துல வந்திடறேன் சரியா!! தனியா இருந்துக்குவியா!!”

 

 

“நான் அவரை பார்க்க வேணாமா!!”

 

 

“வேணாம்டா அவரைநீ இன்னொரு நாள் பார்க்கலாம்… நீ வெயிட் பண்ணு நான் சீக்கிரம் வந்திடறேன்” என்றுவிட்டு அவளை விட்டு நகர்ந்தவன் அர்ஜுனுக்கு போன் செய்தான்.

 

 

அர்ஜுன் அவன் இருப்பிடத்தை சொல்ல அவனை நோக்கி நடந்தான். மனோ அமர்ந்திருந்த இருக்கைக்கு சற்று தள்ளி பின்னே தான் அர்ஜுன் அமர்ந்திருந்தான்.

 

 

“என்ன பிரணவ் தனியாவா வந்தே!! அந்த பொண்ணு!!” என்று இழுத்தான் அர்ஜுன்.

 

 

“கூட்டிட்டு வந்திருக்கேன் மாமா!! அங்க உட்கார்ந்திருக்கா!!”

 

“ஏன் பிரணவ் எனக்கு அறிமுகப்படுத்தி எல்லாம் வைக்க மாட்டியா!!”

 

 

“இப்போ வேணாம் மாமா… வீட்டில எல்லாரையும் எப்போ பார்க்கறமோ அப்போவே பார்க்கட்டும்”

 

 

“ஹ்ம்ம் அதும் ஒரு வகையில சரி தான். தூரத்துல கூட காட்ட மாட்டியா!!”

 

 

“அச்சோ அப்படி எல்லாம் இல்லை மாமா” என்றவன் மனோவை சுட்டிக்காட்டினான்.

 

 

“சரி சொல்லு பிரணவ் என்ன பிரச்சனை!! நீ தப்பா ஒரு விஷயம் பண்ண மாட்டேன்னு தெரியும்… ஆனாலும் தப்பாகி போயிருச்சு, என்ன காரணம்ன்னு நீ சொன்னாதான் பிரணவ் தெரியும்”

 

 

“என் மேல உங்களுக்கு நிஜமாவே நம்பிக்கை இருக்கா மாமா!! நான் தப்பா எதுவும் செய்ய மாட்டேன்னு நீங்க நம்பறீங்களா!!”

 

 

“நீ வீட்டில எல்லாரும் நடந்துகிட்டது வைச்சு பீல் பண்ணுறன்னு நினைக்கறேன்… நீ அவங்களை புரிஞ்சுக்கணும் பிரணவ், அவங்க எல்லாம் எமோஷனல் ஆகிட்டாங்க”

 

 

“அவங்க ரியாக்சன் அப்படி தான் இருக்கும்… நான் அப்படி எல்லாம் எமோஷனல் ஆகுற ஆளில்லைன்னு உனக்கு தெரியும். உன்னை நான் இன்னைக்கு நேத்திக்கு பார்க்கலை”

 

 

“உங்க அக்காவை கைப்பிடிச்ச நாள்ல இருந்து உன்னை பார்க்கறேன். உன்னை என்னால புரிஞ்சுக்க முடியுது பிரணவ். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. என்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சன்னா சொல்லு” என்று கூற பிரணவ் சரவணன் தவிர்த்து மற்ற எல்லாமே அவனிடம் கூறினான்.

 

 

“அப்போ நீ விரும்பின பொண்ணு இவ தானா!!” என்ற அர்ஜுனுக்கு ஆம் என்பதாய் தலையசைத்தான் அவன்.

 

 

“நீ என்கிட்ட முழுசா உண்மையை சொன்ன மாதிரி எனக்கு தோணலை… இன்னும் மனசுக்குள்ள வேற என்னமோ வைச்சிருக்கே சரியா!!” என்று கணித்து கேட்ட அர்ஜுனை வியப்பாய் நோக்கினான் பிரணவ்.

 

 

“ஹ்ம்ம் சரி தான் மாமா!! ஆனா வேணாம் மாமா!! சிலது எல்லாம் சொல்ற மாதிரி இல்லை… விட்டிருவோம்”

 

 

“சரி விட்டிருவோம் நீ வேணாம்ன்னு சொன்னா அதுல விஷயமிருக்கும். நீ எதுக்கும் வருத்தப்படாதே!! அந்த பொண்ணை நல்லா பார்த்துக்கோ!! இப்போ தான் பெரிய இழப்புகளை சந்திச்சு இருக்கா!!”

 

 

“அதுல இருந்து அவ வெளிய வர்றதுக்கு கொஞ்சம் காலம் ஆகும். நீ ஆறுதலாய் இருந்து மாத்து. வீட்டை பத்தி யோசிக்காத, உங்கக்காகிட்ட நான் பேசறேன்”

“மாமா நீங்க எல்லாத்தையும் அவங்ககிட்ட சொல்லணும்ன்னு இல்லை…”

 

 

“ஹ்ம்ம்…கவுரவம்…”

 

 

“அப்படி எல்லாம் ஒண்ணும்மில்லை மாமா… அவங்களுக்குஎன்னைக்கு என்கிட்ட பேசணும்ன்னு தோணுதோ பேசட்டும். அப்போ நானே அவங்ககிட்ட சொல்லிக்கறேன்”

 

 

“நீங்க சொன்னா அது எனக்கு சப்போர்ட் பண்ணுற மாதிரி ஆகும்… எப்படி உங்களுக்கு என்கிட்ட கேட்கணும்ன்னு தோணிச்சோ அது போல அவங்களுக்கும் தோணும் மாமா… அதுவரைக்கும் நான் காத்திட்டு இருப்பேன்”

 

 

“என்னை விட சின்ன பையன் தான் ஆனா ரொம்ப தெளிவா யோசிக்கற… சரி பத்திரம் நான் கிளம்பறேன்… ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க… என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்கு சொல்லு பிரணவ்”

 

 

“நேரமாச்சு நீ கிளம்பு அந்த பொண்ணு ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கு” என்றுவிட்டு அர்ஜுன் கிளம்பவும் பிரணவ் மனோபாரதியை நோக்கிச் சென்றான்.

 

 

“கிளம்பலாமா”

 

 

“ஹ்ம்ம்…”

 

 

இரவு பதினோருமணி வாக்கில் இருவரும் வீட்டை வந்தடைந்தனர். பிரணவிற்கோ எப்போதடா படுப்போம் என்றிருந்தது. படுக்கும் முன் “ரதி நாளையில இருந்து நாம ஆபீஸ் போறோம்” என்றான்.

 

 

“என்ன… நா… நானுமா…”

 

 

“அதென்ன நீயுமான்னு கேட்கிற!! நீயும் தான்!! அதிலென்ன சந்தேகம் உனக்கு”

 

 

“ஒண்ணும் பிரச்சனையில்லையே!!”

 

 

“நான் தான் உனக்கு டீம் லீடர் அது மறந்து போச்சா உனக்கு!! ஹ்ம்ம் அப்புறம் ஒரு விஷயம் கணேஷ் எதாச்சும் பேசினா கண்டுக்காத!! நான் சொல்றது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்” என்று அவன் சொன்னது தான் தாமதம் வேதாளம் இல்லையில்லை ரதி முருங்கை மரம் ஏறினாள்.

 

 

“ஏன்?? என்ன?? அவர் என்ன பேசுவார்?? அவர் பேசினா நான் ஏன் கண்டுக்காம போகணும்” என்று முறைத்தாள் பிரணவை.

 

 

“சரி உன்னிஷ்டம்” என்றவன் பெரிதாய் அவளிடம் வாதாடாமல் போனதே அவளுக்கு ஒரு மாதிரியாகி போனது.

 

 

‘நம் நல்லதிற்கு தான் சொல்கிறாரோ… அதை கேட்டால் தான் என்ன!!’ என்று தோன்ற அவளும் அமைதியாய் உறங்க ஆரம்பித்தாள்.

 

 

மறுநாள் காலை இருவருமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஏதோ நினைவு வந்தவளாக “நான் சமைக்கவே இல்லை என்ன செய்ய!!” என்று முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு கேட்டவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது பிரணவுக்கு.

 

 

“அம்மா சொல்லிக்கொடுக்கும் போது நான் தான் கவனிக்காம விட்டுட்டேன்… என் தப்பு தான்…” என்றுசேர்த்து சொன்னதை பார்த்ததும் சத்தமாகவே சிரித்தான்.

 

 

“எதுக்கு சிரிக்கறீங்க??”

 

 

“சொல்லிக் கொடுத்தா கத்துக்கற ஆளா நீ!! செய்யாதன்னு சொல்றதை தான் நீ செய்வ!! செய்ன்னு சொல்றதை தான் செய்ய மாட்டே!!” என்றுகூறிவிட்டுஅவன் அந்தப்புறம் நகர“நான் அப்படியா செய்யறேன்” என்றவள் அவன் சட்டையை பிடித்து இழுத்திருந்தாள்.

 

 

பிரணவ் நிதானமாய் அவளை ஏறிட்டான், பின் அவள் பிடித்திருந்ததை பார்த்தான். அயர்ன் செய்திருந்த சட்டை கசங்கியிருந்தது. அவன் பார்வை போகும் திக்கை கண்டவளுக்கு திக்கென்றிருந்தது.

 

 

“சாரி”

 

 

“சரி கிளம்பலாம்…”

 

 

“இன்னைக்கு வெளிய சாப்பிட்டுக்கலாம்… சமைக்கறதுக்கு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்”

 

 

“உங்களுக்கு சமைக்க தெரியுமா!!”

 

 

“தெரியாது”

 

 

“அப்புறம் எப்படி ஹெல்ப் பண்ணுவீங்க??”

 

 

“கொஞ்சம் கொஞ்சம் நான் எங்க வீட்டில ஹெல்ப் பண்ணியிருக்கேன். இனிமே கத்துக்க வேண்டியது தான்” என்று சொன்னவன் ‘பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கைமரம் ஏறி தானே ஆகணும்’ என்று மனதிற்குள் மட்டும் தான் சொல்லிக்கொண்டான்.

 

 

வெளியே சொல்லிவிட்டால் அவன் மனைவி அவனை சும்மா விட்டுவிடுவாளா!! என்ன!!

 

 

இருவருமாக அலுவலகம் வந்து இறங்க அங்கிருந்த அனைவருமே அவர்களை பார்ப்பது போல் தோன்றியது அவளுக்கு. பிரணவ் அவர்கள் பார்வை எல்லாம் கண்டுகொள்ளாதவனாக அவள் கைப்பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

 

 

முதலில் எச்ஆரிடம் ரிபோர்ட் செய்துவிட்டு அடுத்து கணேஷின் அறைக்கு சென்றான் அவன்.

 

 

மனோவும் பிரணவும் ஒன்றாக அவன் அறைக்குள் நுழைவதை பார்த்த கணேஷிற்கு உள்ளுக்குள் புகைந்தது. மனோவின் கழுத்தில் மின்னிய புதுத்தாலியும் அவள் கையை பிடித்திருந்த பிரணவும் புதிதாய் சேதி சொன்னதை உணர்ந்தான்.

 

 

‘என்ன’ என்பதாய் இருவரையும்ஒரு பார்வை பார்த்தான். “ரதி இன்னைக்கு ரிபோர்ட் பண்ணுறாங்க. அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தோம்”

 

 

“ஏன் அதை அவங்க சொல்ல மாட்டாங்களா” என்று கணேஷ் இடக்காக கேட்க மனோவிற்கு சுருசுருவென்றிருந்தது. “சாரி சார் உங்களுக்கு சரியா காது கேட்காதுன்னு எனக்கு தெரியாது”

 

 

“அதான் எனக்கு பதில் என்னோட ஹஸ்பண்ட் பதில் சொல்லிட்டார்” என்று அவள் போட்ட போடில் கணேஷ் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

 

 

‘கடைசியில் என்னை ஏமாற்றிவிட்டு இருவருமாக திருமணம் செய்து கொண்டார்களா… என்னிடம் ஏன் பொய் சொல்ல வேண்டும்’ என்ற கோபக்கனல்அவனுக்குள்வீசிக் கொண்டிருந்தது. பிரணவை துரோகி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

 

 

“என்ன ஹஸ்பண்டா??” என்று கேட்டும் வைத்தான்.

 

 

“ஹ்ம்ம் ஆமா எங்க மேரேஜ் முடிஞ்சு போர் டேஸ் ஆச்சு” என்றாள். பிரணவ் அவளை பார்த்து கண்ணைக் காட்ட அவள் எங்கே அவனை பார்த்தாள். தன் போக்கில் கணேஷிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.

 

 

“சந்தோசம் வாழ்த்துக்கள் உங்க ரெண்டு பேருக்கும்” என்றவனின் பேச்சில் மருந்துக்கும் சிரிப்பில்லை, கைக்கொடுத்தும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. வாய் மட்டும் மரியாதைக்காக அந்த வார்த்தையை முணுமுணுத்தது.

 

 

“தேங்க்யூ சார்…” என்றவள் பிரணவை பார்த்து “போகலாமாங்க…” என்றாள்.

 

 

“ஓகே கணேஷ் வில் ஸ்டார்ட் அவர் வொர்க்” என்றுவிட்டு மனோபாரதியுடன் அவனும் நகர்ந்தான். பிரணவிற்கு திரும்பி பார்க்காமலே தெரிந்தது கணேஷ் முறைத்துக் கொண்டிருப்பது.

 

 

கண்டுக்கொள்ளாமல் அவன் இருப்பிடத்திற்கு சென்றான். பிரணவ் அவன் இருப்பிடத்திற்கும் மனோபாரதி அவளிருப்பிடதிற்கும் செல்ல ஷாலினி அப்போது தான் வந்திருந்தாள் அலுவலகத்திற்கு.

 

 

மனோ அவளை கண்டும் காணாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். “பாரதி என்னடி நான் பேசிட்டே இருக்கேன் நீ எங்கயோ பார்த்திட்டு இருக்க, உனக்கு காது கேட்கலையா” என்றாள் ஷாலினி.

 

 

“கேட்குது கேட்குது நான் உன் மேல செம கோவத்துல இருக்கேன் எதுவும் பேசாத”

 

 

“எதுக்குடி கோவம்”

 

 

“ஹ்ம்ம் எதுக்குன்னு உனக்கு தெரியாதா??”

 

 

“தெரியலையே”

 

 

“நீ ஏன் கல்யாணத்துக்கு வரலை!!”

 

 

“நீ என்ன லூசாடி!! உங்க அத்தைக்காரிக்கு என்னை கண்டாலே ஆகாது இதுல என்னைய நீ முதல் ஆளா வர சொல்ற”

 

 

“கோவிக்காத பாரதி உங்க அத்தை நான் கடைசியா உங்க வீட்டுக்கு வரும் போதே இனி உன்னை பார்க்கவே கூடாதுன்னு கிட்டத்தட்ட மிரட்டினாங்க தெரியுமா”

 

 

“அப்போ நீ அவங்க மிரட்டலுக்கு பயந்துட்ட அப்படி தானே”

 

 

“நன் ஒண்ணும் அதுக்கெல்லாம் பயப்படலை… சர்தான் போடின்னு உன்னை எவ பார்ப்பான்னு சொல்லிட்டு தான் வந்தேன்”

 

 

“கல்யாணத்தன்னைக்கு நான் வந்திருந்த அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும் பாரதி. அதான் பிரணவ் கேட்டப்போ கூட நான் வரலைன்னு சொல்லிட்டேன்”

 

 

“அதுக்கப்புறம் கூட நீ வீட்டுக்கு வந்திருக்கலாமே”

 

 

“வந்திருக்கலாம்… ஆனா புதுசா கல்யாணம் ஆனவங்க அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு தான் வரலை” என்றாள் ஷாலினி தயங்கிக் கொண்டே.

 

 

“ஆமா நாங்க அப்படியே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம் பாரு… பேசுறா பெரிசா இவ வந்தா நாங்க டிஸ்டர்ப் ஆகிடுவோம்ன்னு போடி… நீ வராததுக்கு சாக்கு சொல்றியா” என்று முறைத்தாள் மனோபாரதி.

 

 

ஷாலினி உண்மையாகவே இருவருக்கும் தனிமை கொடுக்கும் எண்ணத்துடன் தான் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. மனோ பேசுவதை பார்த்தால் பிரணவ் இவளை விரும்பிய விஷயத்தை இன்னும் இவளிடம் சொல்லவில்லை போல் இருக்கிறதே’

 

 

‘ஆனால் ஏன் சொல்லவில்லை’ என்று தனக்குள்ளாக யோசிக்க அதற்குள் மனோ அவளின் முதுகில் இரண்டு அடி போட்டிருந்தாள். “எதுக்குடி அடிக்கற”

 

 

“சாரி டியர் மன்னிச்சுடு நான் உங்க வீட்டுக்கு வராம இருந்தது தப்பு தான்” என்று சட்டென்று மன்னிப்பு கேட்ட ஷாலினி “வேணுமின்னா உன் கால்ல வேணா விழவா” என்றாள்.

 

 

“இந்தா…” என்று கால்களை அவளை நோக்கி நீட்டினாள் மனோ.

 

“ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே நீட்டிருவியே… சரி நீ வேலை பாரு நான் போய் பிரணவ் பார்த்திட்டு வரேன்” என்று எழுந்தாள் ஷாலினி.

 

 

பிரணவின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். “ஹாய் ஷாலினி”

 

 

“ஹாய் பிரணவ்” என்றாள் அவளும் சம்பிரதாயமாக.

 

 

“சொல்லு ஷாலினி”

 

 

“என்னாச்சு பிரணவ் நீங்க லவ் பண்றதை பாரதிகிட்ட சொல்லவேயில்லையா நீங்க” என்று நேரடியாக விஷயத்திற்கே வந்துவிட்டாள் அவள்.

 

 

“என்ன சொல்றீங்க”

 

 

“நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா”

 

 

“புரியுது ஆனா இப்போ அதை சொல்ல எல்லாம் எனக்கு அவகாசம் இல்லை ஷாலினி. அவ அதை புரிஞ்சுக்குவாளான்னும் எனக்கு தெரியலை”

 

 

“இப்படியே போகட்டும் ஷாலினி, அவளுக்கா என்னை புரியும் என்னோட அன்பு புரியும். கண்டிப்பா அவ அதை உணருவா எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றான்.

 

 

“முட்டாள்த்தனமா இருக்கு நீங்க பேசுறது… சொல்லாம இருக்கறது எப்பவும் நல்லதில்லை”

“இப்போ சொல்றதும் சரின்னு எனக்கு தோணலை ஷாலினி. விட்டிருங்க பார்த்துக்கலாம்” என்றான்.

 

 

“என்னமோ போங்க… நீங்க பண்றது சரின்னுஎனக்கு தோணலை” என்றுவிட்டு அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

 

 

பிரணவிற்கும் அதே யோசனை தான் இது அவன் அன்பை சொல்ல சரியான தருணம் இல்லை என்பது தான் அது. ஏற்கனவே ஏகப்பட்ட குழப்பத்திலும் மனஉளைச்சலிலும் உள்ளவளிடம் தன் காதலை சொன்னால் அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள் என்று யோசனையாய் இருந்தான்.

 

 

அலுவலகத்தில் பத்து பதினைந்து நாட்கள் கடந்திருந்த வேளையில் பிரணவிற்கு ஆன்சைட் போக வேண்டி ஈமெயில் வந்திருந்தது. ஒரு வருடம் அங்கிருந்து பணியாற்ற அவனுக்கு அழைப்பு வந்திருந்தது.

 

 

உண்மையிலேயே அது அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆனால் அவனுக்கு தான் போக தயக்கம், மனோவை தனியே விட்டுச் செல்ல முடியாது என்று.

 

 

என்ன செய்வது என்று யோசனையாய் இருந்தவன் ஒரு முடிவெடுத்து அவன் அலுவலகத்தில் பேச மனோவும் அவனுமாக அடுத்த பத்து நாளில் ஆஸ்திரேலியாவிற்கு பயணப்பட்டனர்…

Advertisement