Advertisement

அத்தியாயம் – 2

 

 

மாலை பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் கிளம்பினாள் மனோ. குழந்தை எப்படி இருப்பானோ!! என்ன செய்வானோ!! என்று காலையில் இருந்தே அவளுக்கு ஒரே தவிப்பு தான்.

 

 

அவ்வப்போது காப்பகத்திற்கு போன் செய்து பேசிய போதும் கூட மனம் நிம்மதியாய் இருக்கவில்லை. குழந்தை சாப்பிட்டானா!! தூங்கினானா!! என்று கேள்வி பிறந்து கொண்டே இருந்தது.

 

 

ஸ்கூட்டியின் சாவியை வண்டியில் பொருத்தியவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் காப்பகத்தில் தான் இருந்தாள். பள்ளிக்கு வெகு அருகிலேயே காப்பகம் இருந்தது அவளுக்கு வசதியாய் இருந்தது

 

 

அவள் வீட்டிற்கும் பள்ளிக்கும் காப்பகத்திற்கும் அதிக தூரமில்லை என்பதால் தான் அவள் இந்த பக்கம் வீடு மாற்றி வந்திருந்தாள்.வேறு சில காரணங்களும் கூட அவள் இங்கு வந்ததற்கு உண்டு தான்.

 

 

ஆனால் அதெல்லாம் எப்போது சரியாகுமோ!! என்று எப்போதும் போல் ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டு வெளிக்கேட்டை தள்ளி திறந்து உள்ளே சென்றாள்.

 

 

அங்கு பத்து குழந்தைகளுக்கு மேல் விளையாடிக் கொண்டிருந்தாலும் தன் செல்ல குழந்தையை கண்களாலேயே துழாவியவள் “அஜிம்மா…” என்றழைத்ததும் தான் தாமதம் குழந்தைக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி வேகமாய் தவழ்ந்து அவளை நோக்கி வந்தது.

 

 

அந்த காட்சியை கண்டதும் அவள் கண்களும் மார்புச்சேலையும் ஒன்றாய் நனைந்தது. ஓடிச்சென்று குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டவளை குழந்தை தன் பொக்கை வாய்க்கொண்டு அவள் முகத்தில் எச்சில் படுத்தியது.

 

 

சந்தோசத்துடன் அதை அனுபவித்தவள் சுயவுணர்விற்கு வந்து அங்கிருந்த பெண்ணிடம் குழந்தையின் பொருட்கள் அடங்கிய பையை வாங்கிக்கொண்டு அவர்களிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

 

 

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாய் ரெப்ரெஷ் செய்துவிட்டு வந்து குழந்தைக்கு பால் கொடுத்தாள். பால் குடிக்கும் போதே அஜி உறங்கியிருக்க அவனை தூக்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவள் படுக்கையில் கிடத்தினாள்.

 

 

பின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு உணவு தயாரித்துவிட்டு குழந்தைக்கு கஞ்சியை காய்ச்சி எடுத்து வந்து ஆறவைத்து கொண்டிருந்தாள்.

 

 

பின் குழந்தையை திரும்பி பார்த்தவளுக்கு தங்களுக்கென்று யாருமே இல்லையே என்ற ஏக்கம் மனதில் தோன்றி கண்ணீரை உற்பத்தி செய்தது. எல்லாம் இருந்தும் இல்லாதிருந்த நிலையும் அவளுக்கு பிடிக்கவில்லை.

 

 

இதற்கு முன் வேலை பார்த்த இடத்தில் குழந்தை பிறந்து முதல் மூன்று மாதம் வரை அவளுக்கு விடுப்பு கொடுத்தவர்கள் அடுத்த நான்குமாதத்திற்கு அவள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி கொடுத்திருக்க அவளும் குழந்தையை பார்த்துக்கொண்டு வேலை செய்தாள்.

 

 

ஆனால் அதற்கு மேல் அங்கு தாக்கு பிடிக்க முடியவில்லை அவளால். மீண்டும் அவள் வேலைக்கு சேராமல் ஒரு மாத நோட்டீஸ் கொடுத்துவிட்டு வேலையை விட தீர்மானித்து வேலையை விட்டாள்.

 

 

அங்கு நோட்டீஸ் பீரியடில் இருக்கும் காலத்தில் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் பணிக்கு விண்ணப்பித்து இதோ வேலைக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டாள்.

 

 

உரிமையுள்ள குழந்தை உரிமை கோராமல் கோர முடியாமல் இருக்கும் தன்னிலை என்று அவளுக்கு கோபம் கோபமாக வந்தது அவளின் மேல், அவன் மேலும் தான். சொல்ல வேண்டியவனோ சொல்ல முடியாத சூழலில் சிக்கிக்கொண்டிருக்கிறான்.

சொல்ல வேண்டியவன் சொன்னால் தான் தனக்கும் தன் குழந்தைக்கும் அங்கீகாரம் கிடைக்கும். தனக்கு தான் யாருமில்லை என்றாகிவிட்டது தன் குழந்தைக்கும் இப்போது யாருமில்லாமல் இருக்கிறதே என்ற எண்ணம் அவள் மனதை அறுத்தது.

 

 

தான் அவன் விருப்பத்திற்கு எக்காரணம் கொண்டும் ஒத்துக் கொண்டிருக்கவே கூடாது என்று காலம் கடந்த ஞானோதயம் வந்தது அவளுக்கு.

 

 

கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இனிமையாய் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் இப்போதுள்ள நிலை நினைக்க நினைக்க தன் கட்டுப்பாடு தன்னை விட்டு போகிறது என்பதை அவள் உணர்ந்தே தான் இருந்தாள்.

 

 

அந்த நேரத்தில் சரியாக அவள் கைபேசி அழைக்கவும் வந்த கோபத்தை அதன் மேல் காட்டினாள். “நீயும் எனக்கு வேண்டாம்…” என்று சொல்லி அதை தூக்கி எறிய அது உயிரைவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியது.

 

 

தனக்காக கூட அவள் வருந்தவில்லை, குழந்தையை நினைத்தே இவ்வளவு சிந்தனையும் அவளுக்குள். யாரோ அருகில் வந்து அவளிடம் ‘நான் இருக்கிறேன் ஏனிந்த அழுகை’ என்று சொல்வது போல இருந்தது ஒரு கணம்.

 

 

திரும்பி பார்க்க யாருமில்லை அங்கு அஜி அப்போது தான் எழுந்து அவளருகில் வந்தான். “ம்மா… ம்ம்மா…” என்றவாறே.

 

 

“எனக்கு நீ இருக்கடா, அம்மா அதை எப்படி மறப்பேன்…” என்று இருவருக்குமாய் சொல்லிக்கொண்டவள் குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டாள்.

 

 

மறுநாள் எப்போதும் போல் எழுந்தவள் வேலையை பார்த்துக் கொண்டிருக்க அழைப்பு மணியோசை கேட்டது. வெளியில் சென்று கதவை திறக்க அங்கு நின்றிருந்தவனை பார்த்து திகைத்தாள்.

 

 

“உள்ள வாங்க என்ன காலையிலேயே இங்க வந்திருக்கீங்க…” என்றாள் மனோ.

 

 

“போன் என்னாச்சு… நைட் எல்லாம் போன் பண்ணி பார்த்தேன்…” என்றவன் அவள் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தான்.

 

 

தவறு செய்த குழந்தையை போல் விழித்தவள் “இல்லை போன் கைத்தவறி கீழ விழுந்து உடைஞ்சு போச்சு…” என்று திக்கி திக்கி உரைத்தாள்.

 

 

“ஒஹ்…” என்றவன் வேறு எதுவும் பேசவில்லை. “சரி நான் கிளம்பறேன் நானும் மோனாவும் வர்ற ஞாயிற்றுக்கிழமை வர்றோம்” என்றவன் முதல் நாள் அவளுக்கு உதவியாயிருந்த பிரகாஷ்.

 

 

“காபி சாப்பிட்டு போங்க…” என்றவள் விரைவாய் உள்ளே சென்று காபியுடன் வந்தாள்.

 

 

காபி சாப்பிட்டு அவன் கிளம்பி சென்றுவிட்டான். மாலை அவள் வீட்டிற்கு வரும் போது பிரகாஷும் வந்திருந்தான், வாசலிலேயே நின்றிருந்தவன் கையோடு கொண்டு வந்ததை அவளிடம் கொடுத்தான். அவன் கொடுத்ததை மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டாள்.

 

 

அங்கு குடியிருந்த ஓரிருவர் அவளை வித்தியாசமாய் பார்த்து சென்றதை கவனிக்காதவள் உள்ளே சென்றாள். அதை பிரிக்காமலே அவளால் உணர முடிந்தது அது ஒரு கைபேசி என்று.

 

 

எவ்வளவு தான் கோபத்தை அவன் மேல் இழுத்து பிடித்து வைத்தாலும் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அவள் மீதான அவனின் அக்கறையை வெளிப்படுத்திதன்னை பலமிழக்க செய்கிறான் என்று அதற்கும் அவன் மேல் கோபம் வந்தது அவளுக்கு.

 

 

இப்படியாக ஓரிரு மாதம் தன்னை போல் கடந்து சென்றிருக்க அவள் வீட்டு காம்பவுண்ட்க்குள் நுழையும் போது கௌசல்யா யாரிடமோ காட்டமாக பேசிக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

 

இவளை பார்த்ததும் அப்பெண்ணை அனுப்பியவள் மனோவை பார்த்து சிநேகமாய் சிரித்தாள். “என்னக்கா கோவமா இருக்க மாதிரி இருக்கீங்க, எதுவும் பிரச்சனையா??” என்றாள் மனோ.

 

 

“ஒண்ணுமில்லை மனோ ஏதோ வம்பு பேசினா அதான் திட்டிவிட்டேன். இப்போ தான் வர்றியா??” என்ற கௌசல்யா அபராஜித்தை கிள்ளி முத்தம் வைத்தாள்.

 

 

“ஆமா அக்கா… நான் கிளம்பறேன்” என்றுவிட்டு அவள் குடியிருப்பை நோக்கிச் சென்றாள் மனோ.

 

 

கௌசல்யாவுக்கு மனமே கேட்கவில்லை அவளை பார்த்து. சற்று முன் அவர்கள் வீட்டு மாடியில் இருந்த ரஞ்சனியம்மா மனோவை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி சென்றிருந்தாள்.

 

 

அவர் சொன்ன விஷயம் இது தான். மனோ வீட்டிற்கு வரும் அந்த  ஆண்மகனுக்கும் மனோவுக்கும் கள்ளத்தொடர்பாம்; அவனுடன் வரும் பெண் அவனுடைய மனைவியாம்;

 

 

அந்த குழந்தை அவனின் குழந்தையாம்; அவனுடன் வரும் பெண்ணும் மனோவும் உடன்பிறந்தவர்களாம்; உடன்பிறந்த அக்காவுக்கு அவள் துரோகம் செய்துவிட்டாளாம்.

 

 

தங்கையை ஏதும் சொல்ல முடியாமலும் கணவனை ஒன்றும் சொல்ல முடியாமலும் தான் மனோவை தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார்கள் என்று பேசவும் கௌசல்யாவிற்கு வந்ததே கோவம் ரஞ்சனியம்மாவை நன்றாக திட்டி விட்டாள்.

 

 

நரம்பில்லா நாக்கு எதை வேண்டுமானாலும் பேசுமா என்ற ஆயாசம் இருந்தது கௌசல்யாவிற்கு. மனோவை பார்த்தால் அப்படிப்பட்ட பெண்ணாக அவளால் நினைக்கவே முடியவில்லை.

 

 

குனிந்த தலை நிமிராமல் செல்லும் பெண்ணவள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவள் அவள். அவள் அந்த குடியிருப்பில் அதிகப்பட்சமாய் பேசியிருப்பது தன்னிடம் மட்டும் தான் என்பதை கௌசல்யா அறிவாள்.

 

 

தன்னை இப்படி பேசுகிறார்கள் என்று தெரிந்தால் எவ்வளவு துவண்டு போவாள் என்று எண்ணிக்கொண்டு தன் வேலையை பார்க்க சென்றாள் கௌசல்யா.

 

____________________

 

 

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ ….

 

என்ற பாடல் கைபேசியில் ஒலிக்க பாய்ந்து சென்று போனை எடுத்தான் ராகவ். அவன் எடுத்தது அவன் கைபேசியை அல்ல பிரணவின் கைபேசியை.

 

 

“டேய் நூடுல்ஸ் மண்டையா என் போனை நீ ஏன்டா எடுக்கற?? என்று முறைத்தவாறே வந்தான் பிரணவ்.

 

 

“புது பாட்டு கேட்கலாம்ன்னு வந்தேன் மச்சி. அதெப்படிடா தினமும் ஒரு ரிங்க்டோன் வைக்குற. எங்க இருந்து தான் பிடிப்பியோ பாட்டெல்லாம் என்று அங்கலாய்த்தான் ராகவ்.

 

 

சட்டென்று ஞாபகம் வந்தவனாய் “ஆமா நாம பேசிகிட்டு இருக்கும் போது நீ என்னைய எதுவும் சொன்னியா?? என்றான் ராகவ். தலைவருக்கு அப்போது தான் நூடுல்ஸ் மண்டையன் என்று பிரணவ் சொன்னது ஞாபகம் வந்தது.

 

 

“அதுவா பேச்சுல ஒரு ப்ளோல எதாச்சும் சொல்லியிருப்பேன்டா இப்பிஸ் தலையா என்று இம்முறை அழுத்தமாய் சொன்னான் பிரணவ்.

 

 

“டேய் என்னைய பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது. என் மண்டை உனக்கு நூடுல்ஸ் மண்டையா!! அப்புறம் அதென்ன இப்பிஸ் தலையா!! ஏன்டா?? அப்படி சொல்லுற என்று பல்லைக் கடித்தான் அவன்.

 

 

“அது வந்துடா உனக்கு கர்லி முடி இல்லையா அதான் அப்படி சொன்னேன். நூடுல்ஸ் எப்படி இருக்கும் கர்லி முடி மாதிரி தானே இருக்கும், அதான் சொன்னேன்

 

 

“டேய் ஏன்டா அப்படி சொன்னே?? இனி நூடுல்ஸ் சாப்பிட்டா நீ சொன்னது தானேடா எனக்கு ஞாபகம் வரும். ஏன்டா இப்படி பண்ணுற, சமைக்க தெரியாத என் பொண்டாட்டிக்கு அதிகப்பட்சமா தெரிஞ்சது இந்த நூடுல்ஸ் தான் அதுக்கும் இனி ஆப்பா… போடா என்றான் ராகவ்.

 

 

“சரிடா நீ சொன்னதை நான் கேட்கறேன், போயிட்டு வர்றேன் என்று நகரப்போனான் பிரணவ்.

 

 

“டேய் ஒரு நிமிஷம் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும் இரு ஓடிடாதே

 

 

“என்னடா கேட்க போறே புதுசா… நீ என்ன கேட்க போறேன்னு நான் சொல்லவா?? என்றான் பிரணவ்.

 

 

“எப்படி எப்படி சொல்லு பார்ப்போம்

 

 

“நீ ஏன்டா இப்படி தினமும் லவ்ஸ் பாட்டா வைச்சு கொல்லுற?? இதுக்கு நீ பேசாம ஊருக்கு போக வேண்டியது தானே!! இல்லைன்னா வீட்டில பேசி சட்டுபுட்டுன்னு வேலையை முடிச்சு உன் ஆளை இங்க கூட்டிட்டு வந்து வைச்சுக்கறது தானேன்னு தானே கேட்க போறே?? என்றான்.

 

 

“அட ஆமாப்பா ஆமா… எப்படிடா கண்டுப்பிடிச்ச என் ராசா என்றான் ராகவ்.

 

 

“நேத்து உன் பொண்டாட்டி இதெல்லாம் என்கிட்ட கேட்டாச்சு. எப்படியும் அதை நீ என்கிட்ட மறு ஒலிபரப்புசெய்வேன்னு நினைச்சேன். செஞ்சுட்டா…

 

“சரியான தாளம்டா நீ… என்று செல்லமாய் வைதான் பிரணவ் தன் நண்பனை.

 

 

“யாருக்கு??

 

 

“வேற யாருக்கு உன் பொண்டாட்டிக்கு தான்…

 

 

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை

 

 

“அதான் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டனே!!

 

 

“அவகிட்ட என்ன சொல்லி சமாளிச்சன்னு கேட்கலை. எனக்கு ஒழுங்கா பதில் சொல்லு. இதுவரைக்கும் நான் அந்த பொண்ணுகூட பேசினது கூட இல்லை. நீ ஒரு முறை கூட எங்களுக்கு அவங்களை அறிமுகப்படுத்தி வைக்கலை

 

 

“அப்படி மட்டும் செஞ்சிருந்தா பேசாம நானே அந்த பொண்ணுக்கு போன் பண்ணி கேட்டிருப்பேன். பல முறை உன் போன்ல இருந்து பேசலாமான்னு கூட தோணிச்சு

 

 

“ஆனா நீயே ஒரு துரும்பை கூட கிள்ளிவைக்காம நாங்க பேசி என்னாக போகுதுன்னு தான் விட்டுட்டேன். சொல்லு என்ன பிரச்சனை உனக்கு

 

 

“ஒரு பிரச்சனையுமில்லை என்று கூலாக பதில் சொன்னான்.

 

 

“என்னை பார்த்தா எப்படிடா தெரியுது உனக்கு?? என்றான் ராகவ்.

 

 

“அதான் என்னோட அபிப்பிராயத்தை அப்போவே சொல்லிட்டேனேடா இப்பிஸ் தலையா!!

 

 

“டேய் போதும் என்னைய வைச்சு காமெடி பண்ணதெல்லாம். ஒழுங்கா பதில் சொல்லுடா. ஒரு இரண்டு மூணு வருஷம் உன் கூட நான் இல்லை அதுக்குள்ளே நீ ரணகளம் பண்ணி வைச்சிருக்க!! எனக்கு நீ தானே கல்யாணம் பண்ணி வைச்ச, உனக்கு நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்டா வீட்டில ஒத்துக்கலைன்னா என்ன!! என்றான் ராகவ்.

 

 

“உன் கல்யாணமே உன்னால தைரியமா பண்ண முடியலை இதுல என்னோட கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிறியே. உனக்கே இது காமெடியா தெரியலை என்றான் பிரணவ்.

 

 

“என்னைய பார்த்தா உனக்கு காமெடியா தான்டா இருக்கும். பேச்சை மாத்துறதுல உன்னை மிஞ்ச ஆளில்லைன்னு ஒத்துக்கறேன். ஆனா எனக்கு பதில் தெரிஞ்சே ஆகணும்

 

 

“என்ன வேணும் உனக்கு என்ற பிரணவை நெருங்கி வந்து நின்றான் ராகவ்.

 

 

“சொல்லுங்க நீங்க யாரு இந்த மூணு வருஷமா நீங்க பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க. நீங்க யாரை காதலிக்கறீங்க

 

 

“நீங்க போன்ல போடுற பாட்டை கேட்டு நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் பிரமிச்சு போய் நிக்கறாங்க. நாடி நரம்பு புத்தி சதை எல்லாத்துலயும் காதல் வெறி ஊறி போன ஒருத்தனால தான் இப்படி இருக்க முடியும்ன்னு சொல்றாங்க

 

 

“சொல்லுங்க… சொல்லுங்க… சொல்லுங்க உங்களுக்கு இப்படி காதல் வெறி ஊறிப்போக என்ன காரணம்?? சொல்லுங்க… சொல்லுங்க… பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று ஒரு பாட்சா படத்தை ஓட்டியவனை பார்த்து வாய்விட்டு சிரித்தான் பிரணவ்.

 

 

“மச்சி போதும்டா காலையிலேயே வந்து சிரிக்க வைச்சு வயிறு புண்ணாக்குற!! எப்பவும் நீ பேசி என் காது தான் புண்ணாகும் இன்னைக்கு என் வயிறும் புண்ணாகுது!! என்ற பிரணவ் இன்னமும் சிரித்து முடிக்கவில்லை.

 

 

“டேய் நான் சீரியஸா கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குறான், காமெடி பண்ணாலும் கண்டுக்க மாட்டேங்குறான். ஊர் உலகத்துல லவ் பண்றவனுக்கு எல்லாம் பிரண்டு இல்லாமலா இருக்கான்

 

 

“ஆனா இவன் லவ் கதையே தெரியாம இருக்க ஒரே பிரண்டு நானா தான் இருப்பேன்… தெரியும் ஆனா தெரியாதுன்னு இருக்கே என் நிலைமை. ராகவா இவன் உன்னை காமெடி பீசாக்குறான்டா என்று அவனே அவனை கலாய்த்துக் கொண்டான்.

 

 

 

Advertisement