Advertisement

அத்தியாயம் – 18

 

 

ஊருக்கு சென்ற பிரணவிற்கு திருமண வேலைகள் வரிசை கட்டி நின்றது. நிச்சயத்தின் போது தான் அவனால் இருக்க முடியவில்லை அதனால் தமக்கையின் திருமணத்தில் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டான்.

 

 

அவ்வப்போது மனோவை குறித்த எண்ணங்கள் வந்தாலும் அதை மனதின் ஓரம் வைத்தவன் நடக்கும் வைபவத்துடன் தன்னையும் அவளையும் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து கொண்டான்.

 

 

அவனால் சரவணன் பற்றி விசாரிக்க அவகாசம் இல்லாமல் போனதில் தனக்கு நம்பிக்கையான ஒருவனை கொண்டு சரவணன் பற்றியும் கார்த்திகேயன் குடும்பம் பற்றியும் விசாரிக்க சொல்லியிருந்தான்.

 

 

“என்ன மாப்பிள்ளை அப்பப்போ கனா காணுற மாதிரி இருக்கு. என்ன பிரணவ் கல்யாண கனவா” என்று கூறியது அவள் தமக்கை ஹேமாவின் கணவன் அர்ஜுனே.

 

 

“கல்யாண கனாவா அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை மாமா…” என்று சிரித்து மழுப்பி நகரப்போனவனை அடுத்து அவர் பேசிய பேச்சு நிறுத்தி வைத்தது.

 

 

“இருந்தாலும் தப்பில்லை மாப்பிள்ளை. உனக்கென்ன பொண்ணு ரெடி முகூர்த்தமும் உனக்காக குறிச்சாச்சு. அடுத்து நீ மாப்பிள்ளை ஆக வேண்டி மணவரையில உட்கார வேண்டியது தான் பாக்கி” என்றார்.

 

 

“என்ன… என்ன சொல்றீங்க மாமா… பொண்ணு ரெடியா முகூர்த்தம் குறிச்சாச்சா!! யாருக்கு எனக்கா!! இருக்காது மாமா”

 

“ஏன் மாப்பிள்ளை உனக்கு தெரியாதா!! பொண்ணு நம்ம இந்துமதி தானே”

 

 

“என்ன இந்துவா!!” என்று அதிர்ந்தான்.

 

 

“ஏன் பிரணவ் உனக்கு கல்யாணத்துலே இஷ்டமில்லையா!! இல்லை இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா!!”

 

 

“எனக்கு இப்போ கல்யாணமே பண்ணிக்க எண்ணமில்லை மாமா”

 

 

“நீ யாராச்சும் விரும்பறியா!!” என்று முகத்துக்கு நேரே கேட்டுவிட்டார் அவர்.

 

 

“ஹ… அது… அப்படிலாம் இல்லை மாமா”

 

 

“இருக்குன்னு என் மனசுக்கு உறுதியா தோணுது. சரி எதுவா இருந்தாலும் யோசிச்சு செய்… இங்க நாக்கு மேல பல்லு போட்டு பேசறவங்க அதிகம், கவனம்” என்று சொல்லி நகரப்போனவர் “வாழ்த்துக்கள்” என்று கூறிவிட்டே சென்றார்.

 

 

திருமண வேலைகள் முடிந்து இரண்டொரு நாளில் அங்கிருந்து கிளம்பியவனுக்கு தேர்வுக்கு படிக்க வேண்டி இருந்தது. SSCயில் சிபிஐ அதிகாரி பணிக்கான தேர்வு தான் நெருங்கியிருந்தது.

 

 

சிறுவயது தொட்டே போலீஸ் பணியில் அமர வேண்டும் என்பது அவன் அவா. கல்லூரி சேரும் போதோ கிரிமினாலாஜி எடுத்து படிக்க ஆர்வம் கொண்டவன் தனியாக இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசமும் முடிந்திருந்தான்.

 

 

மறுநாளைய தேர்வுக்காய் தீவிரமாய் படித்துக் கொண்டிருந்தவனுக்கு வந்த போன் அழைப்பு கொடுத்த தகவல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

 

கார்த்திகேயன் பற்றிய விசாரணை அவனை பெரிதாய் பாதிக்கவில்லை. மனோவிற்காக தான் சரவணனை பற்றி விசாரித்தான். அவன் நல்ல வரனாய் இருப்பின் அவனுக்கே அவளை திருமணம் முடித்து வைக்கவே விரும்பினான் அவன்.

 

 

மனோ தான் சொல்லிவிட்டாளே சரவணன் தான் அப்பா பார்த்த மாப்பிள்ளை என்று அதற்காக தான் அந்த முடிவு. சரவணனை குறித்த தகவல் அவனுக்கு பலத்த அதிர்ச்சியே.

 

 

தான் எங்கு தவறவிட்டோம் என்ற யோசனையே பெரும் யோசனையாய் இருக்க அவன் கவனம் கலைய ஆரம்பித்தது. மீண்டும் அழைத்த அழைப்பு மணியில் தன்னை மீட்டவன் அவனுக்கு அழைப்பு விடுத்த அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தான்.

 

 

அவர் மகனின் படிப்பை விசாரிக்கவும் தான் அவனுக்கு படிக்க வேண்டும் என்றே தோன்றியது. இன்றொரு நாள் கவனத்தை எதிலும் சிதறவிடக் கூடாது என்று முயன்று தன்னை படிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தான்.

 

 

அவ்வப்போது அவன் எண்ணங்களை மனோபாரதியின் முகம் வந்து கலைக்கத் தான் செய்தது. ஏதோ தோன்ற சரவணன் பற்றி தகவலை மனோவின் ஈமெயிலுக்கு அனுப்பி வைத்தான்.

 

 

கைபேசியை அணைத்து வைத்துவிட்டான். அதன் பின்னே தான் அவனால் முழு மனதாய் படிக்க முடிந்தது. தேர்வு முடிந்த பின்னே தான் மனம் நிம்மதியாய் உணர அவன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

கைபேசியின் நினைவு அப்போது தான் எழ அறையில் அணைத்து வைத்திருந்த அவன் கைபேசியை உயிர்ப்பித்தான். அவனுக்கு ஷாலினியிடம் இருந்து நெறைய மெசெஜ் வந்திருந்தது.

 

 

மிஸ்டு கால் அலெர்ட்டும் வந்திருந்தது. உடனே ஷாலினிக்கு அழைத்தான். அவள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் நேரமென்பதால் உடனே அழைப்பை ஏற்காதவள் அவனுக்கு பத்து நிமிடத்தில் போன் செய்வதாக மெசெஜ் செய்தாள்.

 

 

சொன்னது போலவே அடுத்த பத்தாவது நிமிடம் அவளிடம் இருந்து அழைப்பு வந்தது அவனுக்கு. “என்ன பிரணவ் என்னாச்சு உங்களுக்கு ஊருக்கு போனவர்கிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லாம என்ன பண்ணன்னே தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்”

 

 

“என்னாச்சு ஷாலினி?? எதுவும் பிரச்சனையா??” என்றவனின் குரலில் பதட்டம் சட்டென்று குடி கொண்டது.

 

 

“பிரச்சனை தான் நாளைன்னைக்கு காலையில அவளுக்கு கல்யாணம்” என்ற குண்டை தூக்கி போட்டாள்.

 

 

“யா… யாரோட ஷாலினி” என்று கேட்டு வைத்தான் அவன்.

 

 

“அவங்க அத்தை பையன் கார்த்திகேயனோட தான். ஆமா எதுக்கு பிரணவ் இப்படி கேட்கறீங்க??”

 

 

“இல்லை சரவணன்…” என்று இழுத்தான்.

 

 

“பாரதி அவருக்கு மெசெஜ் பண்ணியிருக்கேன் சொன்னா… அவர் கண்டிப்பா வந்திடுறதா இருக்கறதா சொன்னா… ஆனா எனக்கு தான் என்னமோ மனசே சரியில்லை. நீங்க சரவணன் பத்தி விசாரிச்சு சொல்றேன்னு சொன்னீங்களே”

 

பிரணவ் அதற்கு பதில் சொல்லாமல் அமைதி காத்தான். “என்னாச்சு விசாரிச்சீங்களா” என்றவளுக்கு “ஹ்ம்ம் விசாரிச்சாச்சு… அவர்க்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்றான்.

 

 

“என்ன ஏற்கனவே அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா… அப்புறம் எப்படி அவன் பாரதிகிட்ட கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கான்” என்று கோபமாய் பேசினாள் அவள்.

 

 

பிரணவிற்கும் அதற்கு தான் காரணம் புரியவில்லை. ஒரு வேளை அவனும் அவளின் சொத்துக்காக தான் இப்படி செய்திருப்பானோ என்று எண்ணம் அப்போது தான் வந்தது. ஆனாலும் ஏன் என்ற கேள்வி அவனுக்கு எழாமலில்லை.

 

 

“சரி அவனை விடுங்க பிரணவ். இப்போ நாம என்ன பண்ணலாம் இன்னும் ஒரு நாள் தான் ஊடையில இருக்கு. கார்த்திகேயனோ இல்லை சரவணனோ அவ கழுத்துல தாலி கட்டுறதை தடுக்கணும்”

 

 

“சரவணன் பத்தி நான் அவளுக்கு எப்படியாச்சும் மெசெஜ் கன்வே பண்ண பார்க்குறேன். ஆனா இந்த கார்த்திகேயன் இருக்கானே என்ன செய்ய” என்று அவள் தன் போக்கில் பேசிக் கொண்டே போனாள்.

 

 

“நான் நாளைக்கு காலையில் இங்க இருந்து கிளம்பறேன் ஷாலினி நைட் ஊருக்கு வந்திடுவேன். என்ன பண்ணுறதுன்னு நான் பார்த்துக்கறேன்” என்றான்.

 

 

“பிரணவ் எனக்கொரு யோசனை சொல்லவா!!” என்றாள்.

 

 

“ஹ்ம்ம் சொல்லு ஷாலினி”

 

“நீங்க பாரதியை மேரேஜ் பண்ணிகோங்களேன்” என்று மனதில் தோன்றிய எண்ணத்தை கேட்டுவிட்டாள்.

 

 

“ஷாலினி!!” என்றான் அதிர்ச்சியாய். அவனுக்கு அடுத்து பேச்சே வரவில்லை. ‘இவள் எதற்கு இப்படி சொன்னாள். எனக்கு ரதியை பிடித்திருக்கிறது என்பது தெரிந்துவிட்டதா இவளுக்கு’

 

 

‘அப்படி இருக்க வாய்ப்பில்லையே’ என்று அவனாகவே எண்ணிக்கொண்டான். “ஷாலினி… நீ என்ன பேசறேன்னு…”

 

 

“புரிஞ்சு தான் பேசினேன் பிரணவ்… தெரிஞ்சு தான் சொன்னேன்… ஐ மீன் எல்லாம் தெரிஞ்சு தான் சொன்னேன். உங்களுக்கு இதுல இஷ்டமேயில்லைன்னு சொல்லிடுவீங்களா நீங்க”

 

 

“அதாவது பாரதியை நீங்க வேணாம்ன்னு சொல்லிடுவீங்களா!!” என்று நெற்றிப்பொட்டில் அறைந்தது போல் கேட்டாள்.

 

 

மீண்டும் பேச்சிழந்து போனது பிரணவ் தான். “அது அதெல்லாம் சரியா வராது… மனோவுக்கு நல்ல லைப் இருக்கு என்னை என்னை போய்… ஏன் ஷாலினி இப்படி குழப்பற” என்று கேட்டவன் தான் குழம்பி நின்றான்.

 

 

“நேராவே கேட்கிறேன் பிரணவ். பாரதிக்கு ஒரு பிரச்சனை உங்க மனோபாரதிக்கு ஒரு பிரச்சனை. அவளை நீங்க காப்பாத்த மாட்டீங்களா”

 

 

“உங்க மனசுல அவ இல்லையா… அவளை நீங்க விரும்பவேயில்லைன்னு சொல்றீங்களா…” என்று அடுக்கினாள் அவள்.

 

 

“ஷாலினி!!!”

 

“அன்னைக்கு பாரதி ஆபீஸ் வந்தப்போ கவனிச்சேன். உங்களை எனக்கு நல்லா தெரியும் பிரணவ். நீங்க கடந்து போகாத பொண்ணுங்க இல்லை”

 

 

“எல்லார்கிட்டயும் எப்படி பழகுவீங்கன்னு எனக்கு ஓரளவுக்கு தெரியும். பாரதிகிட்ட உங்களோட அக்கறை எனக்கு புதுசா தெரிஞ்சுது”

 

 

“நீங்களே ஏன் அவளை கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு அன்னைக்கு நான் நினைச்சேன்… அதை தான் இப்போ உங்ககிட்ட கேட்டுட்டேன்”

 

 

‘எப்படியோ என்னை மோப்பம் பிடித்திருக்கிறாளே… அப்படி தெரிவது போலவா நடந்து கொண்டோம்’ என்று எண்ணிக்கொண்டான்.

 

 

“என்ன பிரணவ் அப்பப்போ அமைதியாகிடுறீங்க. பதில் சொல்ல மாட்டீங்களா”

 

 

“நான் நல்லவன்னு நீ நம்புறியா… அவளுக்கு நான் தகுதியானவனில்லை”

 

 

“சரவணனைவிட நீங்க தகுதியானவர் தான்”

 

 

“சரவணனைவிட தகுதியானவனா இருக்கலாம், நான் நெறைய பொய் சொல்றவனா இருக்கலாம் கெட்டவனாவும் இருக்கலாம் ஷாலினி. உங்ககிட்ட எல்லாம் நான் நடிக்கிறேன்னு வைச்சுக்கோங்களேன்” என்று அவன் சொல்லவும் வாய்விட்டு நகைத்தாள் அவள்.

 

 

“இவ்வளவு உண்மை சொல்லியிருக்கீங்க நீங்க எப்படி கெட்டவரா இருக்க முடியும் பிரணவ். நீங்க தான் இப்போ அவளுக்கு கூடவே இருக்க வேண்டிய துணை…”

 

 

“அவளுக்கு வேண்டியது துணை தான் ஆனா அது நானா இருக்கணும்ன்னு அவசியமில்லை ஷாலினி”

 

 

“நீங்க தான் அவளுக்கு துணையா இருக்க முடியும் பிரணவ். உங்களோட தயக்கம் என்னன்னு எனக்கு புரியுது. நான் ஒண்ணு சொல்றேன் அப்போவாச்சும் உங்களுக்கு தயக்கம் போகுதான்னு பார்ப்போம்”

 

 

‘என்ன சொல்லப் போகிறாள்’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு “சொல்லு ஷாலினி” என்றான்.

 

 

“எனக்கு ஒரு மாசம் பழகியிருந்தாலும் பாரதியை நல்லா தெரியும். எந்த ஒரு பொண்ணும் சட்டுன்னு ஒரு ஆணோட நெருங்கி பழகிட மாட்டா”

 

 

“அப்படியே பழகினாலும் தொட்டு பேசுறது கொஞ்சம் கஷ்டம். அப்படியே தொட்டு பேசுறது சகஜம் தான் அப்படின்னாலும் பாரதிக்கு அது சகஜமான விஷயமில்லை” என்றுவிட்டு நிறுத்தினாள்.

 

 

ஷாலினி என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்கு ஓரளவு புரிந்தது. “அவ இப்போ சென்னையில இருந்தாலும் இன்னமும் பழமை மாறாத கிராமத்து பொண்ணு தான்”

 

 

“அவளுக்கு உங்க மேல இருக்கறது விருப்பம்ன்னு அவளே உணராம இருக்கா… அவளை தப்பு சொல்ல முடியாது அதுக்கு அவளுக்கு சந்தர்ப்பம் இல்லை அவளோட பிரச்சனைகள் அப்படி…”

“ப்ளீஸ் பிரணவ் புரிஞ்சுக்கோங்க… எனக்கும் புரியுது நான் இப்படி சட்டுன்னு சொல்லியிருக்க கூடாது. உங்களோட பேமிலி பத்தி யோசிக்காம நான் கேட்டிருக்க கூடாது தான்”

 

 

“ஆனாலும் எனக்கு மனசு கேட்கலை, இந்த சந்தர்ப்பம் விட்டா வேற வாய்ப்பு கிடைக்குமா நீங்க சேர்றதுக்குன்னு எனக்கு தெரியலை. அவளோட லைப் எப்படியாச்சும் சேவ் பண்ணிகொடுங்க” என்றாள்

 

 

“அவளை சுத்தி அன்னைக்கு இருந்த கூட்டம் மொத்தமும் பணம்திண்ணி கூட்டம் தான்… இதுக்கு மேல நான் பேசினா அது உங்களை கட்டாயப்படுத்துறது போல ஆகும்… இனி நீங்களே முடிவெடுங்க…” என்றாள்.

 

 

“போனை வைக்கட்டுமா” என்றாள்.

 

 

“ஷாலினி ஐ யம் ப்ரவுட் ஆப் யூ… ரதி லக்கி ஒரு மாசம் பழகியிருந்தாலும் நல்ல நட்பை பெற்றிருக்கா… நான் யோசிக்கணும் நாளைக்கு காலையில கூப்பிடுறேன் ஷாலினி. தேங்க்ஸ்… தேங்க்ஸ் மச்…” என்றுவிட்டு போனை வைத்தான்.

 

 

இரவு முழுதும் பொட்டு தூக்கமில்லை அவனுக்கு. ஷாலினி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அசைப்போட்டுக் கொண்டிருந்தான். விடியும் முன்னே ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

 

 

ஷாலினிக்கு அழைத்து விபரம் சொல்ல அவள் மகிழ்ந்து போனாள். “ரொம்ப சந்தோசமாயிருக்கு பிரணவ் நீங்க சம்மதம் சொன்னதுல”

 

 

“சந்தோசம் எல்லாம் அப்புறம் ஷாலினி… எனக்கு உங்க உதவி தேவை” என்று சொல்லி அவளிடம் சிலவற்றை கூறி செய்து தரச்சொன்னான்.

 

 

“கண்டிப்பா வாங்கி வைக்கிறேன்…”

 

 

“ஷாலினி நீ கல்யாணத்துக்கு வந்திடு” என்றான்.

 

 

“இல்லை பிரணவ் நான் அங்க வந்தா அவங்க அத்தைக்கு சந்தேகம் வந்திடும். நான் அவளோட வீட்டுக்கு போனாலே என்னை விரோதி மாதிரி பார்க்குது அந்தம்மா”

 

 

“போன்னு சொல்லாத குறையா அடிச்சு விரட்டுது. நான் வந்தா தேவையில்லாத டவுட்டு வரும் அவங்களுக்கு. நானே உங்க கல்யாணத்துக்கு தடையா வந்திட கூடாது”

 

 

“நான் வராம இருந்தா தான் அவங்களுக்கு எந்த சந்தேகமும் வராது”

 

 

“ஹ்ம்ம் அதுவும் சரி தான்… ஆனா…”

 

 

“நீங்க போட்டோ எடுத்துட்டு வாங்க நான் பார்த்துக்குவேன்… நான் ஈவினிங் வந்து பார்க்கறேன் இல்லைன்னா காலையில வர்றேன்” என்றாள்.

 

 

அவளிடம் பேசி வைத்தவன் அடுத்து அழைத்தது பிரகாஷுக்கு. பிரணவ் சொன்னதை கேட்டு பிரகாஷ் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

 

 

“டேய் அண்ணா உன்னை நம்பி கேட்குறேன் இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்”

“டேய் நீ தெரிஞ்சு தான் பண்ணுறியா?? எனக்கே பயமாயிருக்குடா”

 

 

“உனக்கு எதுக்குண்ணா பயம்”

 

 

“வீட்டை பத்தி யோசிக்கவே மாட்டியா??”

 

 

“அதை பத்தி எனக்கும் தெரியும், நான் யோசிக்காம இருப்பேன்னு நீ நினைக்கறியா!!”

 

 

“சொந்தக்காரங்க எல்லாரும் ரொம்ப தப்பா பேசுவாங்கடா”

 

 

“என்னைக்கு தான் அவங்களாம் பேசாம இருந்தாங்க… முதல்ல ஹேமாக்கா அப்புறம் சசிக்கா இப்போ நானுன்னு நினைச்சுட்டு போறேன் விடு” என்று கூலாக பதில் சொன்னான் அவன்.

 

 

“அப்போ உறுதியா தான் இருக்கியா??”

 

 

“ஆமாம் உறுதியா தான் இருக்கேன். நீ கல்யாணத்துக்கு அவளுக்கு புடவை வாங்கி வைச்சுடு. தாலி ரெடி பண்ணிடு… புடவையோட ஜாக்கெட் எல்லாம் ஷாலினிகிட்ட சொல்லி தைக்க கொடுத்திரு”

 

 

“ஷாலினி நம்பர் உனக்கு மெசெஜ் பண்ணுறேன்… அவளுக்கு உன் நம்பரும் அண்ணி நம்பரும் கொடுத்திட்டேன் பேசிக்கோங்க.. கடைக்கு ஷாலினியும் அழைச்சுட்டு போங்க…”

 

 

“அண்ணியும் நீயும் வெள்ளிக்கிழமை காலையில நேரா கோவிலுக்கு வந்திடுங்க… நான் நாளைக்கு நைட் ஊருக்கு வந்திடுவேன் வந்து கொஞ்சம் வேலையிருக்கு அதெல்லாம் முடிச்சுட்டு நான் முடிஞ்சா வீட்டுக்கு வரப் பார்க்கறேன்”

“டேய் அப்போ வீட்டுக்கு சொல்லாம தான் பண்ணப்போறியா” என்று மீண்டும் ஆரம்பித்தான் பிரகாஷ்.

 

 

“இப்போ சொன்னா எல்லாரும் ஆஹா வாப்பா நாங்களே கல்யாணம் பண்ணி வைக்கறோம்ன்னு பண்ணப் போறாங்களா என்ன!! முதல்ல இப்போ அதுக்கு எனக்கு அவகாசம் இல்லைண்ணா!! அதை புரிஞ்சுக்கோ”

 

 

“அவளை இப்போ காப்பாத்த வேண்டிய சூழ்நிலை எனக்கு, ப்ளீஸ்” என்றான்.

 

 

“சரி நாங்க வந்திடறோம்” என்று உறுதி கூறினான் அவன்.

 

 

இதோ திருமணமும் முடிந்துவிட்டது. மனதிற்கு பிடித்தவள் மனைவியாய் தன்னருகில் என்ற எண்ணம் நிறைவை கொடுக்க அருகில் படுத்திருந்தவளின் உச்சியை லேசாய் வருடினான்.

 

 

நல்ல உறக்கத்தில் இருந்தவள் “அம்மா…” என்றுவிட்டு அவன் உள்ளங்கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.

 

 

சிரிப்புடனே அவளை பார்த்துகொண்டிருந்தான். கை தானாய் அவள் கன்னம் தடவ அந்த ஸ்பரிசத்தில் அவள் உறக்கம் லேசாய் களைவது கண்ணில் பட கையை எடுக்க முற்பட்டான்.

 

 

எங்கே அவன் மனைவி அதற்கு விட்டால் தானே நன்றாக பற்றிக்கொண்டு மீண்டும் துயில ஆரம்பித்தாள். அவனுக்குமே உறக்கம் தழுவ ஆரம்பித்தது.

 

 

இரண்டு நாட்களாய் சரியாக உறங்காத உறக்கம் அவனை ஆட்டுவிக்க மெதுவாய் கண்ணயர்ந்தான். காலையில் கண்விழித்த மனோ மெதுவாய் கண்ணை மூடியவாறே எழுந்து அமர்ந்தாள். இரு கையையும் தேய்த்துக்கொண்டு உள்ளங்கையை பார்த்து கண் விழித்தாள்.

 

 

அவளருகில் யாரோ படுத்திருக்க பயந்து கத்தப் போனவள் திரும்பி படுத்தவனின் முகம் பார்த்த பின்னே தான் முன்தினம் நடந்த நிகழ்வுகள் கண்ணில் விரிந்தது.

 

 

பின்னர் எழுந்து குளித்து முடித்து வெளியில் வந்தவள் அவளறைக்கு சென்று பீரோவில் இருந்த அவள் பெற்றோரின் புகைப்படம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

‘என்னென்னமோ நடந்திருச்சுப்பா… யாரு என் கழுத்துல தாலி கட்டப் போறாங்கன்னு கடைசி நிமிஷம் வரை தெரியாம ஒரு பொண்ணு இருந்தா அது நானா தான்ப்பா இருந்திருப்பேன்’

 

 

‘நீங்க நினைச்ச மாப்பிள்ளை கெட்டவராம்ப்பா… எனக்கு பிரணவ்வோட தான் வாழ்க்கைன்னு எழுதியிருக்குப்பா… உங்களுக்கு தான் அவரை பிடிக்குமேப்பா’

 

 

‘நான் இந்த வாழ்க்கையில என்னை பொருத்திக்க முயற்சி பண்ணுறேன்ப்பா. நீங்க விரும்பின மாதிரி தைரியமா வாழ்க்கையை எதிர்க்கொள்ள பழகிக்கறேன்ப்பா’ என்று மனதில் தோன்றியதெல்லாம் அவள் அன்னை தந்தை புகைப்படம் பார்த்து கூறியவள் அழைப்புமணி சத்தம் கேட்டு வெளியில் வந்தாள்.

 

 

அவள் இருந்த வீட்டின் உரிமையாளர் பெண்மணி வந்திருந்தார். “வாங்கம்மா” என்று அழைப்பு விடுத்தாள். அவர்கள் இருந்த வீட்டின் உரிமையாளர் அடுத்த தெருவில் இருந்த அவர்களின் மற்றொரு வீட்டில் வசித்து வந்தனர்.

 

 

“பரவாயில்லை இருக்கட்டும்” என்றவரின் முகத்தில் லேசாய் கடுமை தெரிந்தது.

“ஆமா யாரவன்??” என்றார் எடுத்த எடுப்பிலே சத்தமாகவும் அதே சமயம் முகத்தில் அதீத வெறுப்பை காண்பித்தும் பேசியவரை சற்றே அதிர்ச்சியுடனே பார்த்தார் அவர்.

 

 

மனோவிற்கு ஏதோ புரிய ஆரம்பித்தது அவள் அத்தை சும்மாயில்லாமல் உரிமையாளருக்கு வேப்பிலை அடித்து சென்றிருக்கிறார் என்று.

 

 

“என்னோட புருஷன்” என்று நேருக்கு நேராய் பார்த்து மொழிந்தவளின் பேச்சில் அந்தம்மா சற்று வாயடைத்து தான் போனது.

 

 

“எப்போ இருந்து??” என்று நக்கலடித்தார் அப்பெண்மணி.

 

 

அசராத மனோவோ “நேத்து காலையில இருந்து” என்று பதில் கொடுத்தாள்.

 

 

“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா… கேக்குறேன் எதாச்சும் அறிவிருக்கா” சற்றேறிய குரலில் கூற அக்கம்பக்கத்தில் ஓரிருவர் என்னவென்பது போல் எட்டிப் பார்த்தனர்.

 

 

அப்பார்வையில் சற்றே கூசித்தான் போயிற்று அவளுக்கு.

 

 

“உங்கப்பாம்மா இறந்து முழுசா ரெண்டு மாசம் கூட முடியலை அதுக்குள்ள இப்படி பண்ணிட்டு வந்து நிக்கறியே… இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் அவங்க போய் சேர்ந்திட்டாங்க போல” என்று வாரியிறைத்தார் வார்த்தைகளை.

 

 

“உனக்கு ஏன்மா புத்தி இப்படி எல்லாம் போகுது… நல்ல குடும்பம்ன்னு நினைச்சேன்… உன்னை நல்ல குடும்பத்து பொண்ணுன்னு நினைச்சா இப்படி பண்ணிட்டு வந்து நிக்கறியே”

 

“ரொம்ப சரியா சொன்னீங்கம்மா. நான் படுற கஷ்டம் பார்க்க கூடாதுன்னு தான் போய்ட்டாங்க போல. இத்தனை நாள் எங்கத்தை எனக்கு பண்ண கொடுமை பார்க்காம போய் சேர்ந்திட்டாங்க”

 

 

“எங்க அத்தை பையன் எனக்கு கொடுத்த தொல்லை பார்க்காம அவங்க நிம்மதியா போய் சேர்ந்திட்டாங்க. எங்கத்தை என் விருப்பமில்லாம அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ணிக்க வைக்க கோவிலுக்கு கூட்டிட்டு போன கொடுமை பார்க்காம அவங்க போய் சேர்ந்திட்டாங்க” என்றவளுக்கு கண்ணில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது.

 

 

அவள் கண்ணீர் கண்டதும் அவருக்கு சட்டென்று மனம் இளகி போனது. “என்னம்மா சொல்ற நீ?? உங்கத்தை வேற மாதிரி ஏதோ சொல்றாங்க நீ இவரை விரும்பி ஓடிப்போய் கல்யாணம் அது இதுன்னு” என்றவர் பேசிக்கொண்டே உள்ளே வந்திருந்தார்.

 

 

“என்னாச்சும்மா ஏன் எங்களுக்கு எல்லாம் சொல்லலை. நான் அடுத்த தெருவில தானே இருக்கேன் என்கிட்ட சொல்லியிருக்க கூடாதா” என்றவர் உள்ளே வந்திருந்தார்.

 

 

மனோ நடந்ததை சுருங்க அவரிடம் கூற “உனக்கு ஏன்மா இப்படி நடக்கணும். ஏதோ கடவுள் போல தான் இவரு உன்னை கட்டிக்கிட்டார் போல”

 

 

“இவரு நல்லவரு தானேம்மா ஒண்ணும் பிரச்சனையில்லையே”

 

 

“ரொம்ப நல்லவரும்மா!!” என்றவளின் முகத்தில் தன்னையறியாமல் வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

 

 

அதை பார்த்தும் பார்க்காதவர் “அப்போ சந்தோசம்மா… எதுனாலும் எனக்கு கூப்பிடு, யாரும் இல்லைன்னு நினைக்க வேண்டாம். உங்கப்பாம்மா இறந்த அன்னைக்கு உனக்கு அவ்வளவு சொந்தம் இருக்காங்களேன்னு தான் நான் எதுவும் சொல்லாம போனேன்”

 

 

“அவங்க இப்படி தெரிஞ்சிருந்தா… ஹ்ம்ம் தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன பண்ண முடியும் நடக்கணும்ன்னு இருக்கு நடந்திருச்சு. சரிம்மா நீ பாரு நான் கிளம்பறேன். ஆமா அவர் உள்ள தான் இருக்காரா”

 

 

“யாரும்மா??” என்று கேட்டு வைத்தாள் மனோ.

 

 

“யாரா?? உன்னோட வீட்டுக்காரர் தான்”

 

 

“இருக்காரும்மா தூங்குறார்…”

 

 

“போ… போய் அவரை கவனி. இனி உன் வாழ்க்கை அவரை சுற்றி தான் நல்லாபடியா இரும்மா… உன்னோட அம்மா ஸ்தானத்தில இருந்து சொல்றேன்… அவரை அனுசரிச்சு வாழு, விட்டுக்கொடுத்து வாழவும் பழகணும்”

 

 

“நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்” என்று அவர் வாழ்த்த “அம்மா ஒரு நிமிஷம்” என்றவள் அவர் காலில் விழுந்து வணங்கினாள். மனமார அவளை வாழ்த்தி அவர் அங்கிருந்து கிளம்பிச் செல்லவும் பிரணவ் எழுந்து வெளியே வந்தான்.

 

 

“வாரே வாவ்…” என்ற குரல் கேட்டு திரும்பினாள் மனோபாரதி.

 

 

“என்னாச்சு” என்றாள் குழப்பமான பார்வையுடன்.

 

 

“என் பொண்டாட்டிக்கு கொஞ்சம் தைரியம் கம்மின்னு நினைச்சுட்டு இருந்தேன்… பரவாயில்லையே சிக்ஸர் அடிச்சுட்ட, இதே போல எப்பவும் வாழ்க்கையை எதிர்க்கொள்ள பழக்கிக்கோ ரதிம்மா”

 

 

“எதும்மா முறைக்கிற??”

 

 

“அதில்லை மகனே… உங்களுக்கு காபி வேணுமா மகனே… இல்லை டீ வேணுமா மகனே” என்று அவள் அடிக்கொரு மகனே போடவும் தான் அவன் அம்மா என்று சொன்னதை கேட்டு முறைக்கிறாள் என்பது உரைத்தது அவனுக்கு.

 

 

“சாரி ரதி ஒரு ப்ளோல வந்திருச்சு… இதுக்கு எதுக்கு நீ காளியாத்தா கணக்கா முறைக்கிற, சொன்னா திருத்திக்க போறேன்” என்றான்.

 

 

“காபி டீ எதுன்னு சொல்லவே இல்லையே”

 

 

“காபி தான்”

 

 

“எடுத்திட்டு வர்றேன்” என்று சமையலறை புகுந்த மனைவின் பின்னே சென்று கட்டிக்கொள்ள துடித்த மனதை அடக்கி குளியலறை புகுந்தான் பிரணவ்.

 

 

“டிபன் வாங்கிட்டு வரேன்…” என்று அவன் எழவும் “நானே செஞ்சிட்டேன்”

 

 

“உ… உனக்கு சமைக்க தெரியுமா!!”

 

 

“தெரியாது… அப்புறம் எப்படி??”

 

 

“தோசை சூட தெரியும்… சட்டினி மட்டும் தானே அரைச்சிட்டேன்… முதல் தரம் செய்யறேன் வந்து சாப்பிட்டு பாருங்க” என்று அழைத்தவளை மறுக்காமல் சென்று சாப்பிட்டான்.

 

 

“நல்லாயிருக்கா??” என்று ஒரு ஒரு வாய்க்கும் கேட்டு வைத்தாள் அவள். அவனும் சலிக்காமல் அவளுக்கு பதில் சொல்லிவிட்டு வெளியில் செல்ல கிளம்பி வந்தான். “வெளிய போறோமா??” என்றாள்.

 

 

“நான் போயிட்டு வர்றேன்… நீ வீட்டில இரு, மதியம் நீ சமைக்க வேண்டாம் நான் வாங்கிட்டு வந்திடறேன்…” மனோ எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள். “என்கிட்ட எதுவும் கேட்கணுமா!!” என்றான்.

 

 

“ஹ்ம்ம்… ஆனா கேட்கக் கூடாதே… எங்கம்மா அப்படி கேட்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க”

 

 

“என்னன்னு??”

 

 

“வெளிய கிளம்புறவங்ககிட்ட எங்க போறீங்கன்னு கேட்க கூடாதாம்… அவங்களே சொன்னா தான் கேட்டுக்கணுமாம்!!” என்று அவள் சொல்லவும் “இதுக்கு நீ எங்க போறேன்னு கேட்டிருக்கலாம்”

 

 

“நீங்களே சொல்லியிருக்கலாம்” என்றாள்.

 

 

“எங்க வீட்டுக்கு” என்றான் ஒரு பெருமூச்சுடன். “என்னையும் கூட்டிட்டு போக மாட்டீங்களா!!”

 

 

“இப்போ வேணாம்… முதல்ல நான் போய் விஷயத்தை சொல்லுறேன்… அப்புறம் நாம ரெண்டு பேரும் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்ன்னு தான் சொல்லப் போறேன். உன்னோட இக்கட்டான சூழல் உடனே பண்ணிக்கிட்டேன்னுதான் சொல்லப் போறேன்”

 

 

“விரும்பியா…”

 

 

“இனிமே விரும்பலாம் ஓகே வா!!” என்று சொல்லி லேசாய் கண் சிமிட்டினான்.

 

 

அவன் சொன்னது கேட்டதும் ஆவென்று வாய் பிளந்தவள் சுதாரித்துக்கொண்டு “ஏத்துக்குவாங்களா!!” என்று ஏக்கமாய் கேட்டாள்.

 

 

“நான் தான் சொன்னேன்ல அது உடனே நடக்காதுன்னு… முதல்ல விஷயத்தை சொல்லிடுவோம்… உடனே ஏத்துக்கிட்டா ரொம்ப சந்தோசம்…”

 

 

“இல்லைன்னா அவங்க ஏத்துக்கற வரை நாம காத்திட்டு இருப்போம் சரியா… கண்டதும் நினைச்சு குழப்பிக்காம ரிலாக்ஸ்டா இரு… நான் போயிட்டு சீக்கிரம் வந்திடறேன்” என்றுவிட்டு கிளம்பிச் சென்றான்.

 

 

அவர்கள் வீட்டில் விஷயம் சொன்னதும் பெரிதாய் வரவேற்க மாட்டார்கள் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அங்கு நடந்ததோ வேறு.

 

 

பிரணவ் வீட்டிற்குள் நுழையும் போதே வித்தியாசம் உணர்ந்தான். வீட்டில் பேச்சு சத்தம் அதிகமாக இருந்தது. சொந்தக்காரர்கள் இன்னமும் கிளம்பவில்லையோ என்று எண்ணிக்கொண்டே செருப்பை கழற்றிவிட்டு உள்ளே காலை எடுத்து வைக்க “வெளிய போடா” என்ற குரல் மட்டும் தான் கேட்டது…….

 

Advertisement