Advertisement

அத்தியாயம் 15

 

 

மனோவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. முன்தினம் அதிகாலையில் பழனியில் இருந்து புறப்பட்ட அவள் பெற்றோர் அவளிடம் பேசியது எல்லாம் நினைவில் வந்து அவளை இம்சை செய்தது.

 

 

மகள் வீட்டில் தனியாக இருக்கிறாளே என்று அதிகாலையிலேயே பழனியில் இருந்து கிளம்பிவிட்டார்கள் குமாரசாமியும் ஜானகியும். கிளம்பும் முன் மகளுக்கு அழைத்து சொல்லலாம் என்று எண்ணியவர் தூங்குபவளை தொல்லை செய்யக் கூடாது என்று எண்ணி குறுந்தகவல் அனுப்பினார்.

 

 

அவர் குறுந்தகவல் அனுப்பி அடுத்த ஐந்தாவது நிமிடமே மகள் அழைத்துவிட்டாள் அவருக்கு. “அப்பா கிளம்பிட்டீங்களா!! எத்தனை மணிக்கு இங்க வருவீங்க!!” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டாள்.

 

 

“நாங்க கிளம்பிச்சாச்சுடா எப்படியும் இன்னைக்கு வந்திருவோம். நீ தூங்கலையா பாப்பு. இந்த நேரத்துல போன் பண்ணுற”

 

 

“எனக்கு தூக்கம் வரலைப்பா… என்னை தனியா இப்படி விட்டு நீங்க மட்டும் போயிட்டீங்களே!!” என்று குற்றம் சாட்டினாள்.

 

 

“இனிமே நீ தனியா தான்டா இருக்கணும்”

 

 

“என்னப்பா சொல்றீங்க!!”

 

 

“தனியான்னா தனியா இல்லை உன்னோட புருஷனோட அவர் வீட்டிலடா… அம்மா அப்பா எல்லாம் எப்பவும் உன்னோட வரமுடியுமா என்ன”

 

 

“உங்களுக்கு வேற நினைப்பே இல்லையாப்பா எப்போ பார்த்தாலும் புருஷன் கல்யாணம்ன்னுட்டு” என்று சலித்தாள்.

 

 

“அதெல்லாம் நடந்து தானேடா பாப்பு ஆகணும். உனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கிட்ட இருந்து நல்ல சேதி வரணும்ன்னுட்டு தான் அப்பாவும் அம்மாவும் கோவிலுக்கே வந்தோம்”

 

 

“அது யாருப்பா அப்படி சீமையில இல்லாத மாப்பிள்ளை. சொல்லுங்க அவரை பத்தி நானும் தெரிஞ்சுக்கறேன்”

 

 

“உனக்கு தெரியாம இருக்குமா பாப்பு… நேரம் வரும் போது தெரிஞ்சுட்டு போகுது…”

 

 

“தெரிஞ்சுக்க தான் அப்பா கேக்குறேன் சொல்லுங்க”

 

 

“அவரும் என்னைய போலவே முருகரை இஷ்டமா கும்பிடுறவர்”

 

 

“அப்பா இது ஒரு தகுதியாப்பா… திருப்பதில மொட்டை அடிச்சவன் தான் என் புருஷன்னு சொல்ற மாதிரி இருக்குப்பா” என்று கூற குமாரசாமி வாய்விட்டு நகைத்தார்.

 

 

“பாப்பு எங்க இருந்துடா இப்படி பேச படிச்ச… நீ கேள்வி கேட்டுட்டே இருக்க… நான் சொல்லவா வேணாமா”

 

 

“சரி சரி சொல்லுங்கப்பா…”

 

 

“அப்புறம் அவர் நல்ல வேலையில இருக்கார். நல்ல குணமான மனுஷன் உன்னை நல்லா பார்த்துக்குவார்… அவ்வளவு தான்டா”

 

 

“அப்பா நீங்க இன்னும் அவர் பேரை சொல்லவே இல்லை”

 

 

“அவர் பேரு இப்போவே சொல்லணுமாடா வேண்டாமே… அவங்ககிட்ட இருந்து நல்ல சேதி வரட்டும்டா அப்புறம் சொல்றேன்…”

 

 

“அப்பா ப்ளீஸ் சொல்லுங்கப்பா…”

 

 

“அவர் பேரு இரண்டு பேரா வரும்…”

 

 

“ஏன்ப்பா இப்படி பண்ணுறீங்க ஏதோ quiz நடக்குற மாதிரி எனக்கு க்ளு கொடுத்திட்டு இருக்கேங்க”

 

 

“அதில்லைடா மாப்பிள்ளை பக்கத்துல இருந்து இன்னும் ஒரு தகவலும் வரலை. அதுக்கு முன்னாடி உன்ட்ட பேரை சொல்லி ஆசைய வளர்க்க வேணாம்ன்னு தான்”

 

 

“அடப்போங்கப்பா நீங்க எந்த காலத்துல இருக்கீங்க” என்று மீண்டும் சலிப்பானாள்.

 

 

“எப்படியும் அவரே நேர்ல வருவார்ன்னு தோணுதுடா… இங்க கோவில்ல கூட எல்லாமே நல்ல சங்கதி தான். அர்ச்சனை பண்ண தேங்காய்ல பூ இருந்துச்சு. மனசுல உன் கல்யாணம் பத்தி வேண்டும் போது மணி அடிச்சுது”

 

 

“அப்புறம் அங்க இருந்த ஒரு சாமியார்கிட்டயும் கேட்டோம் அவரும் இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடும்ன்னு சொன்னாங்க”

 

 

“நீ வேணா பாரேன் அப்பா பார்த்த மாப்பிள்ளை ஓகே சொல்லப் போறார். உடனே உனக்கு கல்யாணம் தான்டா” என்றார் அளப்பரிய மகிழ்ச்சியுடன்.

 

 

“அப்படி என்னப்பா உலகத்துல இல்லாத மாப்பிள்ளை அவரு. அவருகிட்ட போய் என் பொண்ணை கட்டிக்கோன்னு நீங்க கெஞ்சினீங்களா… என்கிட்ட நல்ல முருங்கைக்காய் இருக்கு வாங்கிக்கோங்கற போல சொல்லியிருக்கீங்க… அப்படி தானே”

 

 

அவள் சொன்ன உவமை கேட்டு சிரித்தவர் “நான் அப்படி கேட்கலைடா… என்கிட்ட நல்ல கத்திரிக்காய் இருக்கு. அந்த கத்திரிக்காயும் முருங்கைக்காய் சேர்த்து வாழ்க்கைங்கற சாம்பார்ல போட்டா ருசியா இருப்பீங்க யோசிங்கன்னு சொல்லியிருக்கேன்” என்று மகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னார் அவர்.

 

 

“போங்கப்பா…” என்று சிணுங்கிய மகள் “அம்மாகிட்ட போனை கொடுங்க நீங்க என்கிட்ட பேசாதீங்க” என்றாள்.

 

 

“இந்தாம்மா உன் பொண்ணு பேசணுமாம்…” என்றவாறே அவர் போனை மனைவியிடம் கொடுத்தார்.

 

 

“என்னடா குட்டி எப்படியிருக்க?? இப்போ தான் உனக்கு அம்மா ஞாபகம் வந்திச்சா” என்றார்.

 

 

“உங்க ஞாபகம் இருக்கறதுனால தான் தூங்காம இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் ஹாயா ஊர் சுத்திட்டு வர்றீங்க என்னைவிட்டு…”

 

 

“ஹா… ஹா…” என்று சிரித்தவர் “கண்ணம்மா இனி நீ நாங்க இல்லாம தனியா இருக்க படிச்சுக்கணும்டா அதுக்கு தான் உன்னைய தனியா விட்டுட்டு வந்தது”

 

 

“எப்பவும் அம்மாவும் அப்பாவும் உன்னோடவே இருக்க முடியாது கண்ணம்மாசரியா… எப்பவும் கவனமா இருக்கணும்டா கண்ணம்மா… பார்த்து இருந்துக்கோ நாங்க சீக்கிரம் வந்திடறோம்”

 

 

“என்னாச்சு உங்களுக்கு இன்னைக்கு எனக்கு மாத்தி மாத்தி ஏதோ அட்வைஸ் பண்ணுற மாதிரியே பேசிட்டு இருக்கீங்க. நான் என்ன அவ்வளவு பொறுப்பில்லாத பொண்ணாவா இருக்கேன்”

 

 

மகளின் பேச்சை நகைத்தார் அவள் அன்னை. “சரி கண்ணம்மா நீ எவ்வளவு பொறுப்பான பொண்ணுன்னு எனக்கு இப்போவே காட்டு பார்ப்போம்”

 

 

“எப்படின்னு சொல்லுங்க நான் உடனே நிரூபிக்கறேன்” என்று வீண் பெருமை அடித்தாள் மகள்.

 

 

“சரி உனக்கு தூக்கம் வரலைன்னு தானே நீ சொன்ன… அப்போ நீ ஒரு வேலை செய், அம்மா ஊருக்கு கிளம்பும் போது வீட்டை எல்லாம் ஒதுங்க வைக்காம அப்படியே போட்டுட்டு வந்திட்டேன்”

 

 

“உனக்கோ தூக்கம் வரலை அதனால வீட்டை எல்லாம் ஒதுங்க வைச்சுடு… நாளைக்கு வீட்டுக்கு ஆளுங்க எல்லாம் வந்தா அப்போ பார்க்க நீட்டா இருக்க வேண்டாமா”

 

 

“அம்மா யாரு வீட்டுக்கு வருவாங்கன்னு நினைக்கறீங்க நீங்க…”

 

 

“வேற யாரு உன்னை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்க அதை தான் சொன்னேன்”

 

 

“அம்மா… நீங்களுமா போங்கம்மா…” என்று சிணுங்கினாள்.

 

 

“நீ வேணா பாரு மாப்பிள்ளையே நேரா வந்து நிக்க போறாரு… நீ வீட்டை குப்பையா வைச்சிருக்க போற…” என்று கிண்டல் செய்தவர் “சரி வீட்டை சுத்தம் பண்ணிருவ தானே…”

 

 

“அம்மா எனக்கு தூக்கம் தூக்கமா வருது… ஹாவ்…” என்று வேண்டுமென்றே கொட்டாவி விட்டாள்.

 

 

“உங்க பொண்ணுக்கு குசும்பை பாருங்க…” என்று கணவரிடத்தில் சொல்ல மனைவியிடத்தில் இருந்து போனை வாங்கி அவர் மகளிடம் பேசினார்.

 

 

“பாப்பு நீ தூங்குடா அம்மா சொன்ன வேலை எல்லாம் செய்யாத… அப்புறம் நீ டயர்ட் ஆகிடுவ” என்று கூற “உங்க பொண்ணை ஒண்ணுமே செய்ய விடமாட்டீங்களே” என்று இடித்தார் மனைவி.

 

 

“சரி பாப்பு நீ தூங்கு நாங்க வந்திடுவோம்… பத்திரம்டா கவனமா இரு…” இது தான் அவர்கள் கடைசியாக அவளிடம் பேசிய பேச்சுகள்…

 

 

அதையெல்லாம் நினைக்க நினைக்க கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. அடக்க மாட்டாமல் அவள் அழுக பெரும் கேவலாய் அது வெடித்தது.

 

 

அன்று அவளுடனே இருந்த ஷாலினி தான் அவளை சமாதானம் செய்தாள். வந்திருந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொருவராய் கிளம்பிவிட வீட்டில் மனோவின் தந்தைக்கு தூரத்து உறவில் தங்கை முறையில் இருந்த அவளின் அத்தையும் அவர் மகனுமே துணையாய் இருந்தனர்.

 

 

காரியம் முடிந்து அனைவரும் கிளம்பும் வரையில் எல்லாமே சாதாரணமாய் தான் சென்றுக் கொண்டிருந்தது அவளுக்கு. அதன் பின்னே தான் அவளின் அத்தை நளினியின் சுயரூபம் அவளுக்கு தெரிய ஆரம்பித்தது.

 

 

அவள் அத்தையின் எண்ணம் மனோவை தன் மகனுக்கே கட்டிவைத்து சொத்தை தன் வசப்படுத்துவதே. அதனாலேயே அவள் மகனை மனோவின் பின்னே சுற்ற வைத்தாள்.

 

 

“மனோ எனக்கு கொஞ்சம் காபி போட்டு கொடும்மா…” என்று அவளை சமையலறைக்கு அனுப்பியவர் அந்த புறம் சென்று மகன் கார்த்திகேயனிடம் பேசச் சென்றுவிட்டார்.

 

 

“மனோ அப்படியே குக்கர்ல பருப்பு வைச்சிருக்கேன் சாம்பார் வைச்சுடு…” என்று மீண்டும் குரல் கொடுக்க மனோவிற்கு ஆவென்றிருந்தது.

 

 

அவள் வீட்டு வேலை அதுவும் சமையல் வேலை எல்லாம் செய்தே பழக்கமில்லை அவளுக்கு. காபி போடுவது வரை கொஞ்சம் படித்திருந்தாள் அவ்வளவுதான்.

 

 

நமக்கு உதவி செய்ய வந்திருக்கிறார்கள் அவர்கள் மனம் நோகக்கூடாது தெரிந்ததை செய்வோம் என்று எண்ணி அவளும் பருப்பை இறக்கிவிட்டு வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்தாள்.

 

 

“என்ன மனோ என்ன செய்யற” என்று பின்னால் கேட்டக்குரலில் அவள் திடுக்கிட்டு திரும்ப கார்த்திகேயன் அங்கு நின்றிருந்தான். வேகமாய் திரும்பியவள் அவனை இடித்துக்கொண்டு தான் நிற்க வேண்டி இருந்தது.

 

 

“சா… சாம்பார் வைக்க போறேன்… உங்களுக்கு என்ன வேணும்” என்றவள் தள்ளி நிற்க முயல அவனோ அவளின் இருபுறமும் கையை நீட்டி இரு நான் செய்யறேன் என்று ஒரு கையால் பாத்திரத்தின் கைப்பிடியை பிடித்துக்கொண்டு மறுகையால் அகப்பை கொண்டு கிளறுவது போல் பாவனை செய்தான்.

 

 

மனோவிற்கு முள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது. “என… எனக்கு தெரியும் நான் பார்த்துக்கறேன் நீங்க போங்க ப்ளீஸ்…” என்று அவள் கூற அவனோ நின்று நிதானமாகவே அவளிடத்தில் இருந்து விலகினான்.

 

 

இதற்கு முன்னும் இது போல் அவன் அவ்வப்போது அவளை இடித்துக் கொண்டு வந்தது எல்லாம் சாதாரண நிகழ்வு போல் அவளுக்கு அக்கணம் தோன்றவில்லை. அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று தோன்ற அத்தையிடம் பேசவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

 

 

ஆனால் அவளின் அத்தை அதற்கு முன்னே அவளிடம் வேறு சொல்ல மனோவிற்கு அப்போது தான் அவர்களின் நோக்கமே புரிய ஆரம்பித்தது.

 

 

“மனோ உனக்கும் கார்த்திக்கும் இன்னும் பத்து நாள்ல கல்யாணம். ஊர்ல எல்லாம் போட்டது போட்டபடி வந்தாச்சு. உன்னைய தனியா விட்டு போக எனக்கு மனசில்லை”

 

 

“அதான் உன்னைய கார்த்திக்கு கல்யாணம் பண்ணி வைச்சு கையோட கூட்டிட்டு போகலாம்ன்னு இருக்கேன்” என்று ஒரு பயங்கர குண்டை தூக்கி போட்டார் அவளின் அத்தை…

 

 

“என்ன அத்தை சொல்றீங்க எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம். எங்க அப்பா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்திருக்கார் அவர் பார்த்த மாப்பிள்ளை தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்”

 

 

“நீங்க உங்க பிள்ளைக்கு வேற பொண்ணை வேணா பாருங்க அத்தை. இங்க நான் தனியா இருந்துக்குவேன் இல்லன்னா ஹாஸ்டல்ல தங்கிக்கறேன் அத்தை” என்றாள்.

 

 

“என்னடி கொழுப்பா உனக்கு. அப்படியே உங்கப்பன் புத்தி வந்திருக்கு பாரு உனக்கு. உங்கப்பன் இருக்கும் போதே என் புள்ளைக்கு கட்டி வைக்க நினைச்சேன் உங்கப்பன் தான் தரமுடியாதுன்னு சொல்லிட்டான்”

 

 

“இப்போ உன்னை கேக்க எவனுமில்லை. இப்போ அப்படியே விட்டு போவேன்னு நினைச்சியா… மரியாதையா என் புள்ளைய கட்டுற இல்லை நடக்குறதே வேற…” என்றவளின் முகத்தில் இருந்த குரூரம் மனோவிற்கு புதிதாய் பயமாய்.

 

 

மனோ உரிமை உள்ளவர்களிடம் மிஞ்சி பேசுவாள் ஆனால் பிரச்சனை என்றால் அதை எதிர்க்கும் துணிவோ அனுபவமோ அவளுக்கு இல்லை. அவள் தந்தை அவளுக்கு எப்போதும் அரணாய் இருந்ததில் அவளுக்கு இதுவரையிலும் எந்த கவலையும் இருந்ததில்லை.

 

 

‘ஐயோ அப்பா அம்மா என்னை இப்படி தனியா விட்டு போயிட்டீங்களே… இவங்ககிட்ட எல்லாம் இருந்து தப்பிக்க தான் நம்ம ஊரை விட்டு இங்க வந்தீங்களாப்பா…’

 

 

‘ஏன்ப்பா என்னை விட்டு தனியா நீங்க மட்டும் போனீங்க’ என்று தனிமையில் அழ ஆரம்பித்தாள். மனோ என்று அவள் அத்தையை எதிர்க்க ஆரம்பித்தாளோ அன்றிலிருந்து கார்த்திகேயனும் அவள் அத்தை நளினியும் அவளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

 

 

அவளின் கைபேசி கூட அவர்களின் வசம் சென்றது. மனோ வேலைக்கு போக வேண்டும் என்று சொல்ல வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லி அவளை வீட்டிலேயே இருக்க வைத்தனர்.

 

 

மனோவிற்கு அவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்றே புரியவில்லை. அப்போது தான் சரவணன் அங்கு வந்தான். அவன் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு பெற்றோர் இருந்த அறையை அவள் சுத்தம் செய்யும் போது சரவணனின் புகைப்படம் ஒரு கோப்பில் இருந்து வெளியில் விழுந்தது.

 

 

முதலில் அதை எடுத்து அசுவாரசியமாய் பார்த்தவள் தந்தை எதற்கோ வைத்திருப்பார் என்று எண்ணி கீழே விழுந்த புகைப்படத்தை எடுத்து செல்பில் வைத்தாள்.

அந்த புகைப்படம் எங்கிருந்து விழுந்தது என்பதை அவள் கவனித்திருக்கலாம்!!

 

 

சரவணனை கண்டவளுக்கு எதிலிருந்தோ தப்பித்த உணர்வு வந்தது. அவள் அப்போது அறியவில்லை வாணலிக்கு பயந்து தான் அடுப்பில் விழப் பார்க்கிறோம் என்று…

 

 

சரவணனும் அவள் தந்தை பார்த்த மாப்பிள்ளை தான் தான்என்று கூற அவனை உள்ளே அழைத்தாள். நல்ல வேளையாக அப்போது கார்த்திகேயன் வீட்டில் இல்லை.

 

 

நளினியும் அவளும் மட்டுமே வீட்டில் இருந்தனர். வாசலில் அரவம் கேட்டு நளினி உள்ளிருந்து வந்துக் கொண்டிருந்தாள்.

 

 

“எங்க அத்தை வர்றாங்க ப்ளீஸ் ப்ளீஸ் நீங்க யாருன்னு அவங்ககிட்ட சொல்லிடாதீங்க…” அவசரமாய் அவனுக்கு சொல்லிவிட்டு அவள் அத்தையை நோக்கினாள்.

 

 

“யாருங்க நீங்க??” என்றவாறே நளினி அங்கு வந்து சேர்ந்தாள்.

 

 

“சரவணன்…” என்றான்.

 

 

“அ… அத்தை இவர் சரவணக்குமார் அப்பா… அப்பா இறந்த விஷயம் இப்போ தான் கேள்விப்பட்டிருப்பார் போல. அதான் விசாரிச்சுட்டு போக வந்திருக்கார்”

 

 

“அப்பாவுக்கும் இவருக்கும் தொழில் ரீதியா பழக்கம் அத்தை” என்றாள். சரவணனுக்கும் அவள் தந்தைக்கும் தொழில் ரீதியான பழக்கம் என்பது உண்மை என்று அப்போது அவளுக்கு தெரியாது.

 

 

வீட்டினருக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிய வேண்டாம், அவசியமில்லை என்று நாம் ஒதுக்கும் சில விஷயங்கள் தான் பின்னால் பூதாகரமாய் வெடிக்கும் என்பதை ஏனோ பலர் அறிவதில்லை.

 

 

மனோவின் தந்தை வேண்டாம் என்றெண்ணி வீட்டில் மறைத்த விஷயம் மகளுக்கு பெரிய வினையை வைக்கும் என்று அவர் எண்ணியிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ!!

 

 

“உட்காருங்க…” என்று முகமன் உரைத்த நளினி “நான் போய் காபி கொண்டு வரேன். என்ன ஏதுன்னு கேட்டு வை…” என்று மனோவிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

 

 

“என்னாச்சு…” என்று சரவணன் கேட்க மனோ அதிமுட்டாளாய் நடந்து கொண்ட நிமிடம் அந்த நிமிடமாக மட்டுமே இருக்க முடியும்.

 

 

“என்னை உடனே கல்யாணம் பண்ணி உங்களோட கூட்டிட்டு போயிடுங்களேன் ப்ளீஸ்…” என்றாள்.

 

 

அவள் சொன்னதில் திகைத்தவன் பின் தன்னை சுதாரித்துக் கொண்டு “என்னாச்சுன்னு கேட்டேன் இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லை” என்றான் சரவணன்.

 

 

மனோ அவசரமாகவும் சுருக்கமாகவும் கார்த்திகேயனுக்கும் அவளுக்கும் அவசரமாய் நடக்கப் போகும் திருமணத்தை பற்றி அவனிடம் உரைத்தாள்.

 

 

“நீ பயப்பட வேண்டாம் நான் பார்த்துக்கறேன் எல்லாம். ஹ்ம்ம் அப்புறம் ஒரு விஷயம் உங்கப்பா ஒரு லேன்ட் பத்திரம் உங்க பேருல இருக்குன்னு சொன்னாரு. அது இப்போ எங்க இருக்கு??” என்றான்.

 

 

மனோவிற்கு ஏதோ பொறி தட்டியது போல் “அதை எதுக்கு கேட்கறீங்க??” என்றாள்.

 

 

“இல்லை அது இப்போ இங்க இருக்கறது சேப் இல்லை அதுனால உங்களுக்கு எதுவும் பிரச்சனை ஆக வாய்ப்பிருக்குன்னு உங்கப்பா சொன்னாரு. அதான் கேட்டேன்”

 

 

“ஓ சாரி நீங்க என் நல்லதுக்கு தான் கேட்டீங்க… நான் தான் தப்பா நினைச்சுட்டேன் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க… ஆனா அந்த பத்திரம் எங்க இருக்குன்னு எனக்கு தெரியலை”

“நான் தேடிப்பார்க்கறேன்…” என்றாள்.

 

 

“இங்க தான் இருக்கும் தேடி எடுத்து வைங்க… அப்புறம் என்னைக்கு அவனோட கல்யாணம்ன்னு சொன்னீங்க…”

 

 

“இன்னும் பத்து நாள்ல வர்ற நாலாம் தேதி…”

 

 

“ஹ்ம்ம் சரி நான் பார்த்துக்கறேன்…” என்று யோசனைக்கு தாவினான் அவன்.

 

 

“சாரி நான் உடனே கல்யாணம் பத்தி பேசினேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க வீட்டை பத்தி கூட நான் யோசிக்காம கேட்டுட்டேன். இங்க என்னோட பிரச்சனை அப்படி”

 

 

“எனக்கு இங்க இருந்து தப்பிச்சா போதும்ன்னு இருக்கு. நீங்க யோசிச்சு எதுவும் செய்ங்க… இப்போதைக்கு என்னை ஹாஸ்டல்ல சேர்த்தா கூட போதும்” என்று தயங்கி தயங்கி பேசினாள்.

 

 

“அப்போ கல்யாணம் வேணாமா??” என்றான் அவன் ஒருமாதிரி குரலில்.

 

 

“அ… அது அது நான் தான் சொன்னேன்ல என் பிரச்சனை அப்படி அதான் சட்டுன்னு யோசிக்காம கேட்டுட்டேன். உங்க வசதி எப்படின்னு யோசிக்கலை…”

 

 

“பண்ணிக்கலாம்… எஸ் கல்யாணம் பண்ணிக்கலாம் நான் அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்றேன். ஹ்ம்ம்… நீயும் நான் சொன்ன அந்த பத்திரத்தை தேடிப்பார்”

 

 

“அது உங்கப்பாவோட கனவு… பத்திரம் ரொம்பவும் பத்திரம்… அது அந்த பத்திரம் கிடைச்சதும் எனக்கு போன் பண்ணு… இது என்னோட நம்பர்…” என்று அவன் எண்ணை அவளிடம் பகிர்ந்தான்.

 

 

“ஹ்ம்ம் சரி கண்டிப்பா தேடிப்பார்த்து எடுத்து வைக்கறேன்”

 

“உன்னோட சொத்து பத்தி உங்க அத்தைக்கு எதுவும் தெரியுமா??”

“ஊர்ல இருக்கற நிலபுலன் பத்தி அவங்களுக்கு தெரியும்… இங்க உள்ள அந்த இடம் அவங்களுக்கு தெரியாது…”

 

 

“அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கோ… எந்த பத்திரத்திலயும் எக்காரணம் கொண்டு கையெழுத்து மட்டும் போட வேண்டாம். அவங்க ரொம்ப டார்சர் பண்ணா எனக்கு உடனே போன் பண்ணு…”

 

 

“உன்னோட நம்பர்…” என்று கேட்டு அதையும் வாங்கிக்கொண்டு காபியை குடித்துவிட்டு அவளிடமும் நளினியிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

____________________

 

 

 

திருமணம் பத்து நாளில் என்று நளினி சொல்லியிருந்தாலும் அதற்கான ஏற்பாடுகள் கவனிக்க கோவிலில் திருமணத்திற்கு பதிய என்று அது மேலும் சில நாட்களை விழுங்க மனோவின் திருமணத்தேதி இன்னமும் பத்து நாட்கள் தள்ளி போயிருந்தது.

 

 

அதுவும் நல்லதிற்கே என்று தான் எண்ணிக்கொண்டாள் மனோ. அந்த இடைப்பட்ட நேரத்தை தனக்கு சாதகமாக எப்படி மாற்றிக் கொள்வது என யோசித்தாள்.

 

 

இதோ இன்னும் அவர்கள் கோவிலுக்கும் வந்தாயிற்று ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கார்த்திகேயன் பட்டுவேட்டி சட்டையில் அவளருகே நின்றிருந்தான்.

 

 

இனி இது தானா தனக்கு விதித்தது. தன்னை அந்த கடவுள் கூட கைவிட்டுவிட்டானா என்று எண்ணி மனதிற்குள்ளாக அவள் குமைந்துக் கொண்டிருந்தாள்.

 

 

கண்கள் குளம்கட்டி கண்ணீர் மணிகள் அவ்வப்போது கீழே சிந்திக்கொண்டே தான் இருந்தது. விதியை மாற்ற முடியாது என்று எண்ணி கலங்கியவள் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள முனைந்தாள்.

 

 

எவ்வளவு முயன்றும் அவள் மனம் அதற்கு ஒப்பாமல் ஓவென்று கதறத்தான் செய்தது. இனியும் அவன் வரமாட்டான் என்று நன்றாக அவள் உணர ஆரம்பித்த நேரம் நளினி அவளிடம் புடவையை கொடுத்து மாற்றி வரச் சொன்னாள்.

 

 

உடன் யார் வருகிறார் என்று கூட உணராமல் அதை வாங்கிக்கொண்டு அவளும் நகர்ந்தாள். அருகில் ஏதோ பழக்கப்பட்ட குரலை அவள் உணர சுற்றுமுற்றும் பார்த்தாள்.

 

 

“பாரதி நான் இங்க இருக்கேன்…” என்ற பிரணவின் குரல் நிச்சயம் அவளுக்கு கடவுளின் குரலாகவேப்பட்டது.

 

 

கண்கள் கண்ணீர் தாரையை பெருக ஈரம் முழுதும் கண்ணை மறைத்தது. “இங்க பாரு இப்போ எதுக்கு அழற, நேத்தே ஷாலினி சொன்னாங்க. அதான் இங்க வந்தேன்…”

 

 

“என்னை பாரும்மா… உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்… உனக்கு ஓகேன்னா தான் நான் மேற்கொண்டு எதையும் செய்ய முடியும்” என்று நிறுத்தினான்.

 

 

கண்ணீர் தற்காலிகமாய் நின்று அவனை ஏறிட்டு பார்த்தாள். “என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா??” என்றான்.

 

 

அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து விழித்தாள் அவள். “எனக்கு தெரியும் இது சம்மதம் கேட்க வேண்டிய நேரமோ சம்மதம் சொல்ல வேண்டிய நேரமோ இல்லை. நமக்கு அதிக கால அவகாசம் கூட இல்லை”

 

 

“ஆனாலும் கேக்குறேன் உனக்கு விருப்பமில்லைன்னா வேற தான் யோசிக்கணும். ஆனா உங்க அத்தை உன்னை அப்படியே விடுவாங்களான்னு எனக்கு தெரியலை…”

 

 

“இவங்க என்னோட அண்ணி தான் நீ அவங்களோட போய் புடவை மாத்திட்டு வா… உனக்கு யோசிக்க அவ்வளவு நேரம் தான் இருக்கு. வெளிய வரும் போது நீ என்ன சொல்றியோ அதான்…”

 

 

“உனக்கு சம்மதம்ன்னா இங்க இப்போவே நம்ம கல்யாணம் நடக்கும்…” என்றான்.

 

 

மனோவிற்கு அதுவரையிலும் தான் ஞாபகம் இருந்தது. அதன்பின் நடந்தது கனவு போலவே தோன்றியது. இதோ இந்த நிமிடம் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று தொட்டு நிற்க பிரணவ் அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்துவிட்டான்….

Advertisement