Advertisement

அத்தியாயம் –14

 

 

“ரதிம்மா ப்ளீஸ்டா அழாதேடா ஒண்ணுமில்லை…

 

 

“எங்கப்பா… அப்பா… அம்மாஆஆ…. என்று கதறி அழுதவளை அணைத்திருக்கிறோம் என்ற உணர்வெல்லாம் பிரணவிற்கு தோன்றவேயில்லை.

 

 

மனோவை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதே அவன் எண்ணமாய் இருந்தது. தன்னையுமறியாமல் அவள் நெற்றில் முத்தமிட்டு ஆறுதல்படுத்த முனைய அவளோ அவனைக்கட்டிக் கொண்டு இன்னும் இன்னும் அழ ஆரம்பித்தாள்.

 

 

அவளின் அழுகுரல் கேட்டு ஓரிருவர் எட்டிப்பார்த்ததை அப்போது தான் உணர்ந்த பிரணவ் அவளை பிரித்து அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தான்.அப்படி எட்டி பார்த்து போனவர்களில் கணேஷும் ஒருவன்.

 

 

பிரணவிடம் முக்கியமாய் பேச அவனிருப்பிடம் வந்தவன் அங்கு மனோ அவனை கட்டிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு முகம் கன்ற அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

 

 

மனோவோ பிரணவைவிடாமல் அவன் வயிற்றில் முகம் பதித்து அழுது கொண்டிருந்தாள். தனக்கென்று யாருமில்லை என்ற துக்கம் ஏக்கம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஆறுதல்படுத்த வந்தவனை விடாமல் கெட்டியாய் பிடித்துக் கொண்டாள். வேறு யாரிடமும் இப்படி அவள் ஒன்றியிருப்பாளோ!! என்பதை அவளே அறியாள்…

 

 

பிரணவ் அவனின் இண்டர்காமை எடுத்து கணேஷுக்கு அழைத்தான். “நான் தான் கணேஷ்… எனவும் எதிர்முனையில் இருந்தவன் “என்னாச்சுடா என்ன நடக்குது ஆபீஸ்ல என்று குரலுயர்த்தி பேசினான்.

 

 

“கணேஷ் நான் சொல்றதை கொஞ்சம் கேளு… என்றவனை “நீயும் பாரதியும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க அங்க… இது ஆபீஸ் தெரியுமா!! தெரியாதா!! என்று பொரிந்தான்.

“ஷட்அப் கணேஷ்… என்ற அவனின் கோபக்குரலில் மனோபாரதி தன்னிச்சையாய் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

 

‘ஒண்ணுமில்லை… என்று அவளுக்கு வாயசைத்தவன் அவளைவிட்டு சற்று தள்ளி சென்றான் இன்டர்காமுடன்.

 

 

“வாய்க்கு வந்தது எல்லாம் பேச வேண்டாம் கணேஷ். மனோவோட பேரண்ட்ஸ் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. இப்போ தான் தகவல் வந்துச்சு. அதான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன் என்றான் தன்னிலை விளக்கமாய்.

 

 

‘கட்டிப்பிடிச்சு தான் சொல்லுவாங்களோ… என்ற எண்ணத்தை மனதிலேயே வைத்துக்கொண்டான் கணேஷ். நண்பர்கள் இருவருக்கும் முதல் பிணக்கு அங்கு தான் ஆரம்பித்தது.

 

 

பிரணவ் அடுத்து அழைத்தது ஷாலினிக்கு “ஷாலினி உடனே என்னோட கேபின்க்கு வாங்க… என்றான்.

 

 

“சார் நான் இப்போ… என்று அவள் இழுக்கவுமே புரிந்தது யாரோ எதையோ அவளிடம் சொல்லியிருக்கிறார்கள் என்று.

 

 

“மனோவோட பேரண்ட்ஸ் தவறிட்டாங்க… கொ என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே வேகமாய் அவனறைக்குள் நுழைந்திருந்தாள் அவள்.

 

 

“என்னால ரொம்ப நேரம் டேக் கேர் பண்ண முடியலை. பார்க்கறவங்க தப்பா மீன் பண்ணுறாங்க… ப்ளீஸ் டேக் கேர் ஆப் ஹர்… என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு சற்று தள்ளிச் சென்றான்.

 

 

மனோ இப்போது ஷாலினியை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். ‘ச்சே ஒரு நிமிஷம் நாமும் சாரை தப்பா நினைச்சுட்டமோ… எல்லாம் இந்த ராகேஷ் பண்ண வேலை தப்பு தப்பா வந்து சொல்லி… என்று எண்ணிக்கொண்டு மனோவை ஆறுதல்படுத்த முனைந்தாள்.

 

இடைப்பட்ட நேரத்தில் மனோவின் கைபேசிக்கு வந்த அழைப்பை எல்லாம் ஏற்று உரிய பதிலை அளித்துக் கொண்டிருந்தான் பிரணவ்.

 

 

கணேஷும் அதற்குள் அவர்கள் அறைக்கு வந்திருக்க சுற்றி இருந்தவர்கள் கண்டதும் அவளின் இழப்பு இன்னும் பெரிதாய் தோன்ற அவளின் அழுகை நிற்காமல் போனது.

 

 

பிரணவ் மனோவிற்கு தேவையான விடுப்பை கோரி கணேஷுக்கு மெயில் அனுப்பிவிட்டு அவனுக்கும் ஷாலினிக்கும் சேர்த்து ஓரிருநாள் விடுப்பை சொல்லிவிட்டு ஷாலினியையும் தன்னோடு அழைத்துச் சென்றான்.

 

 

கணேஷிற்கு தான் பிரணவின் மேல் காழ்ப்புணர்ச்சி தோன்றியது. ‘இவன் பாட்டுக்கு ஆளாளுக்கு விடுப்பை அள்ளிக்கொடுக்கிறான் அப்புறம் இங்கு எனக்கென்ன மரியாதை என்று கனன்ற ஆரம்பித்தது அவன் மனது.

 

 

எதையும் வெளிக்காட்டவும் முடியவில்லை. மனோவை பார்த்து அவனுக்கும் வலித்தது. அவள் அழுவதை தடுக்கவும் முடியவில்லை அவளிடம் சென்று பேசவும் தெம்பில்லை என்று தன்னையே நொந்துக் கொண்டான் அவன்.

 

 

பிரணவ் மனோவை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு காரில் செல்ல உடன் ஷாலினியும் சென்றாள். அவ்வளவு நேரமும் ஒருவர் மாற்றி ஒருவராக அவளுக்கு ஆறுதல் சொல்லியவண்ணம் இருந்தனர்.

 

 

பிரணவ் அவளிடம் கேட்டு அவள் சொந்தங்களுக்கு தகவல் தெரிவித்தான். உண்மையிலேயே அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவளுக்கு பிரணவ் ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்வது ஏனோ அவள் தந்தையை ஞாபகம் செய்தது அவளுக்கு.

 

 

தன்னை இப்படி தானே கஷ்டப்படாமல் பார்த்துக் கொண்டார் கடைசிவரை என்ற எண்ணம் தோன்றி அவள் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அழுது அழுது ஓய்ந்தவளுக்கு மயக்கம் வந்துவிட அவளை இருக்கையில் படுக்க வைத்தனர் ஷாலினியும் பிரணவும்.

 

 

“இவங்க காலையில சாப்பிட்டாங்களான்னு தெரியலையே ஷாலினி

 

 

“எதுவும் சாப்பிடலை பிரணவ். அவங்க அம்மா அப்பா பழனிக்கு போய் இருந்தாங்க போல. வீட்டில யாருமில்லை சாப்பிட பிடிக்கலைன்னு சொன்னா… நான் கூட போய் எதுவும் சாப்பிட்டு வரச் சொன்னேன் கேட்கலை

 

 

“வண்டியை ஒரு ஹோட்டல் பார்த்து நிறுத்துங்க என்று டிரைவர்க்கு பணித்தான்.

 

 

“சாரி பிரணவ் என்றாள் ஷாலினி சம்மந்தமில்லாமல்.

 

 

“எதுக்கு??

 

 

“நானும் உங்களையும் பாரதியும் தப்பா…

 

 

“இட்ஸ் ஓகே… ஆனா அந்த நிலைமையில அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும்ன்னு மட்டும் தான் தோணிச்சு ஷாலினி. வேற எதுவும் தோணலை, பட் இந்த கணேஷ் கூட என்னை புரிஞ்சுக்காம தப்பா நினைச்சுட்டான்

 

 

“எனக்கு இப்போ புரியுது பிரணவ்… விட்டுத் தள்ளுங்க அவங்களை… இப்போ அடுத்து என்ன செய்யணும்…

 

 

“இவளுக்கு என்ன பண்ணணும்ன்னு கூட தெரியாதுன்னு நினைக்கிறேன் ஷாலினி. நாம யாராச்சும் இவ கூட இருக்கணும். அவளோட சொந்தபந்தம் எல்லாம் வர்ற வரைக்கும்… அப்புறம் என்ன பண்றதுன்னு பின்னாடி யோசிக்கலாம் என்றான்.

 

 

அதற்குள் டிரைவர் வண்டியை ஒரு மோட்டலின் அருகே நிறுத்த மனோவை எழுப்பி கைத்தாங்கலாக இருவரும் உள்ளே அழைத்துச் சென்றனர். மனோ எவ்வளவோ மறுத்தும் அவளை அதட்டி உருட்டி கொஞ்சம் சாப்பிட வைத்தனர்.

 

 

“இதோட நீ எப்போ சாப்பிடுவேன்னு தெரியாது பாரதி. நீ அழறதுக்கு கூட உனக்கு தெம்பு வேணாமா… என்று சொன்ன போதும் “இனிமே எனக்கு யாரிருக்கா!! நான் உயிரோட இருந்து என்ன பண்ணப்போறேன் அவள் சொல்லவும் பிரணவிற்கு ‘நான் இருக்கேன் என்று மட்டுமே சொல்லத் தோன்றியது.

 

 

மனதில் தோன்றியதை வாய்விட்டு சொல்லவில்லை என்றாலும் அந்த எண்ணம் அவன் மனதார தோன்றியிருந்ததை உணர்ந்தே தான் இருந்தான்.

 

 

அவளைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய நேரம் இதுவல்ல என்று மூளை அறிவுறுத்த சம்பவ இடத்தை நெருங்கும் நேரம் அவனுக்குமே அடிவயிறு பிசைய ஆரம்பித்தது.

 

 

மனோவின் முகத்தை இருவராலும் பார்க்கவே முடியவில்லை. சம்பவம் திருச்சிக்கும் அரியலூருக்கும் இடையில் நடந்திருந்தது. சாலை ஓரத்தில் நின்றிருந்த காவல்துறை வாகனம் மற்றும் காவல்துறையினரை பார்க்க பார்க்க மனோவிற்கு அழுகை பொங்கியது.

 

 

‘இங்க தானாப்பா இங்க தான் நடந்திச்சா… என்னை இப்படி பாதியில விட்டு போயிட்டீங்களே… என்று மனம் கூப்பாடு போட்டது. முதலில் இறங்கிய பிரணவ் காவலர் ஒருவரிடம் விசாரிக்க அவர்கள் பாடியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டதாக தகவல் கூறினார்.

 

 

பின்னர் மனோவை அழைத்து அவர் விசாரிக்கவும் தவறவில்லை. ஒருவழியாக அங்கு எல்லாம் முடித்து அவர்கள் பாடியை வாங்கிக்கொண்டு சென்னை திரும்ப இரவானது.

 

 

மருத்துவமனையில் மனோவை சமாதானப்படுத்துவது தான் பெரும் கஷ்டமாகி போயிற்று பிரணவிற்கும் ஷாலினிக்கும். அவள் கதறிய கதறல் கேட்டு அவர்கள் இருவருக்குமே கூட கண்ணீர் பெருக ஆரம்பித்தது.

 

 

பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து மாலை ஆகிவிட பிரணவ் சென்னைக்கு செல்ல விமானத்தில் பதிவு செய்தான். அவர்கள் மனோவின் வீட்டை அடைய இரவு ஒன்பது மணி ஆகியது.

 

 

அவளின் சொந்த பந்தம் எல்லாம் அவர்கள் வீட்டின் முன் குழுமி இருக்க பிரணவும் அவளிடத்தில் இருந்து தள்ளிச் சென்றான். எக்காரணம் கொண்டும் மனோவை தனியே விட வேண்டாம் என்று ஷாலினியிடம் கூறியே சென்றிருந்தான்.

 

 

கணேஷும் மற்றும் அவளுடன் பணிபுரிபவர்கள் எல்லாரும் இரவே அங்கு வந்து சேர்ந்தனர். மனோபாரதியின் அழுகை மட்டும் மட்டுப்படவேயில்லை.

 

 

கணேஷ் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். பிரணவ் மற்றும் ஷாலினியிடம் அவள் பேசிய அளவு கூட தன்னிடம் பேசவேயில்லையே என்றிருந்தது அவனுக்கு.

 

 

எல்லாவற்றிருக்கும் பிரணவ் தான் காரணம் என்று அவன் மேல் குற்றம் சுமத்தி நண்பனை எதிரியாக்கிக் கொண்டிருந்தான்.

 

 

அவர்களின் உடலை எப்போது எடுப்பார்கள் என்று கூட்டத்தில் லேசாய் சலசலப்பு எழ மனோவிற்கு அத்தை முறை உடையவர் எழுந்து காலையில் ஒன்பது மணிக்கு மேல் எடுத்துவிடலாம் என்று கூறினார்.

 

 

அடுத்து மனோவிடம் வந்து நின்று “மனோ இப்படியே அழுதுட்டு இருந்தா என்ன செய்யறது பீரோ சாவி கொடு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ண வேண்டாமா… என்றார்.

 

 

மனோவோ அவரை பார்த்து திருதிருவென்று விழித்தாள். ‘பீரோ சாவியா அந்த சாவி அம்மாகிட்ட தானே இருக்கும் எப்பவும். என்னோட பீரோவை நான் பூட்டினதே இல்லையே. இப்போ இப்போ காசுக்கு என்ன செய்ய

‘நான் வேலைக்கு சேர்ந்து நாளையோட தான் ஒரு மாசம் ஆகப் போகுது. எனக்கும் இனிமே தானே சம்பளம் வரும். இப்போ என்ன செய்ய என்று முழிபிதுங்கி நின்றாள்.

 

 

அதைக்கண்டு விட்ட பிரணவ் ஷாலினியை அழைத்து கையில் இருந்த பணத்தை கொடுத்து தற்சமயம் அவர்களிடம் கொடுக்க சொன்னான். மேற்கொண்டு தேவைப்படுவதை பிறகு தானே எடுத்து வந்து தருவதாக கூறி வெளியேறினான்.

 

 

“இந்தாங்கம்மா இதை இப்போதைக்கு வைச்சுக்கோங்க. அப்புறம் என்ன கணக்குன்னு பார்த்து மிச்சம் மீதி பார்த்துக்கலாம் என்றுவிட்டு அவர் கையில் கொடுத்தாள் ஷாலினி.

 

 

“அவளே துக்கத்துல இருக்கா!! இப்போ போய் அவகிட்ட காசுகேட்டா என்ன பண்ணுவா… எதையும் யோசிக்கற மனநிலையில கூட அவ இல்லை என்று பக்குவமாய் அவள் பேச அந்த பெண்மணியோ “நீ என்ன பிச்சையா போடுற

 

 

“நீ காசு கொடுக்கறதுக்கு நீயே எல்லாம் பார்த்துக்கோ… என்று முகத்தில் அடித்தது போல் கூறவும் ஷாலினிக்கு முகம் கன்றிவிட்டது.

 

 

அவளருகே வந்த பிரணவ் “விடு ஷாலினி பீல் பண்ணாத, அந்தம்மா இப்போ கூட நான் பார்த்துக்கறேன்னு ஒரு வார்த்தை சொல்லலை. சரி விடு நானே தேவையானது எல்லாம் ஏற்பாடு பண்றேன்

 

 

“நீ அவங்க பழக்கம் என்னன்னு மட்டும் கேட்டு வைச்சுக்கோ… என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். ஒருவழியாய் எல்லா கடமையும் முடித்து அவளின் பெற்றோரை நல்லபடியாக அடக்கம் செய்து வீட்டிற்கு திரும்பினர்.

 

 

வீட்டிற்கு வந்தவன் மனோபாரதியிடம் பேச விரும்பினான். ஷாலினியிடம் சொல்லி அவளை அழைக்க இன்னமும் மிச்சம் மீதி கேவலுடன் எழுந்து வந்தாள் மனோ.

 

 

“பாரதி… என்று அழைத்தான்.

நிமிர்ந்து அவனை பார்த்தாள். “பார்த்துக்கோ உனக்கு யாருமில்லைன்னு பீல் பண்ண வேண்டாம். நாங்க எல்லாம் எப்பவும் உன்கூட இருப்போம் என்று அவன் கூற மெதுவாய் தலையசைத்தாள்.

 

 

“அப்புறம்… வந்து…

 

 

“எப்படி சொல்றதுன்னு தெரியலை… கொஞ்சம் எல்லார்கிட்டயும் கவனமா இரு. யாரு என்ன கேட்டாலும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை என்ன ஏதுன்னு கேளு

 

 

“வந்திருந்தவங்கள்ள உங்கப்பா யாருக்கோ காசு தரணும் வீடு எழுதி வாங்கணும் அப்படி இப்படின்னு ஏதோ பேசிட்டு இருந்தாங்க… எதையும் சரி பார்க்காம எதுலயும் கையெழுத்து மட்டும் போட்டிறாத. எப்பவும் கவனமா இரு… என்ன உதவினாலும் என்கிட்ட என்றவன் திருத்தி “எங்ககிட்ட கேளு… என்று முடித்தான்.

 

 

அவனை சற்று விநோதமாய் பார்த்தவள் அவன் பேச்சை உள்வாங்கி சரி என்பதாய் தலையசைத்தாள்.

 

 

பிரணவ் வீட்டிற்கு திரும்பியவன் குளித்து முடித்து அவன் அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தான். அதீத அலுப்பு அவனுக்கு இருந்தாலும் அதையும் மீறி அவனுக்கு மனோபாரதியின் நினைவு மட்டுமே இருந்தது.

 

 

“பிரணவ்… என்றவாறே அவன் அறைக்கதவை திறந்துக்கொண்டு அவன் அன்னை மாலதி உள்ளே வந்தார்.

 

 

“என்னப்பா எல்லாம் முடிஞ்சுதா

 

 

“ஹ்ம்ம் முடிஞ்சிருச்சும்மா… என்றவன் கட்டிலின் அமர்ந்திருந்த அவன் அன்னை மடி மீது தலை வைத்துக்கொண்டான்.

 

 

“பாவம்ல மா அவ… நான் உங்க மடி மேல படுத்திருக்கேன்… ஆனா பாவம்ல மா அவளுக்கு இப்போ யாருமே இல்லையே…

 

“அவங்க ரெண்டு பேருமே இப்படி ஒண்ணா அவளை விட்டு போயிருக்க வேணாம்மா… போன வாரம் கூட அந்த மனுஷனை ஆபீஸ்ல பார்த்தேன். வீட்டுக்கு வாப்பான்னு சந்தோசமா கூப்பிட்டார். ஆனா இந்த நிலைமையில தான் நான் அவரை பார்ப்பேன்னு நினைக்கலைம்மா என்று வருத்தமாய் அவன் அன்னையிடம் உரைத்தான்.

 

 

“நடக்கணும்ன்னு இருக்கறதை மாத்த முடியாதுப்பா… கடவுள் அந்த பொண்ணுக்கு வேற ஒரு நல்ல வழியை வைச்சிருப்பாரு… காரணமில்லாம எந்த காரியமும் நடக்காது. நீ அதையே நினைச்சுட்டு இருக்காம கொஞ்சம் கண்ணை மூடி தூங்குப்பா… என்றுவிட்டு அவர் எழுந்து சென்றார்.

 

 

அவர் சென்றதும் மீண்டும் அவனுக்கு அவளை பற்றிய ஆராய்ச்சியே தன்னை பற்றியும் தான்!! இரண்டொரு நாளாய் அவன் மேல் அவனுக்கு இருந்த சந்தேகம் நேற்று தான் உறுதியானது.

 

 

ஆம்!! அவனுக்கு மனோபாரதியை பிடித்திருக்கிறது. அவளை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

 

 

அவள் அழுவது அவன் உயிரையே உருக்குவதாய் இருந்தது. மனோவிற்கு காதல் பிடிக்காது என்று தெரிந்தும் அவளை அந்த கனம் முதல் முழுதாய் நேசிக்க ஆரம்பித்தான்.

 

 

அவன் காதல் தோற்கும் என்று தெரிந்தாலும் கூட அவனால் அவன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. மாற்றிக் கொள்ளவும் அவன் எண்ணவில்லை.

 

 

அவளுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவளுக்கு தன்னால் ஆனதை செய்ய வேண்டும். அவள் விரும்பிய வாழ்வை அவள் தந்தை இருந்திருந்தால் எப்படி செய்திருப்பாரோ அப்படி செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டது.

 

 

உறக்கம் மெதுவாய் அவனை ஆட்கொள்ள கண்ணயர்ந்தவன் மாலை எழுந்ததும் முதல் வேலையாய் அவளை பார்க்கச் சென்றான்.

ஷாலினி அவள் வீட்டிற்கு சென்றிருந்தாள் போலும். மனோவின் வீட்டில் ஆங்காங்கே ஓரிருவர் தான் தென்பட்டனர். உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற பலத்த யோசனைக்கு பின் அவளின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.

 

 

அதுவோ மணியடித்து பின் ஓய்ந்தது. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய இம்முறை யாரோ போனை எடுத்து என்ன என்று கேட்க “மனோபாரதி இருக்காங்களா என்று தைரியமாய் கேட்டுவிட்டான்.

 

 

“ஒரு நிமிஷம்… என்ற குரல் கைபேசியுடன் மனோவிடம் சென்றது போலும். “இந்தாம்மா உனக்கு தான் போனு… என்று கொடுக்க அதை வாங்கியவள் “ஹலோ என்றாள்.

 

 

“ரதி… நான் தான்… எனவும் “என்ன ரதியா!! யார் நீங்க என்ன நம்பர் வேணும் உங்களுக்கு என்றவளின் குரலில் அவளை செல்லமாய் அழைத்தது நினைவிற்கு வர “சாரி பாரதி நான் பிரணவ் பேசறேன். நான் பாரதின்னு கூப்பிட்டது உனக்கு ரதின்னு கேட்டிருச்சு போல என்று சமாளித்தான்.

 

 

“சொல்லுங்க சார்…

 

 

“உங்க வீட்டு வெளிய தான் இருக்கேன். எதுவும் உதவி வேணும்னா சொல்லும்மா என்றான். தான் ஏன் இப்படி அவள் வீட்டு வாயில் காவல் காக்கிறோம் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கில்லை.

 

 

‘உனக்கென்று நானிருக்கிறேன் என்று அவளுக்கு உணர்த்தவே அங்கு காத்திருந்தான். “ஹ்ம்ம் சரி… ஆனா நீங்க ஏன் வெளிய உள்ள வாங்க… என்றாள்.

 

 

“வேணாம் ர… பாரதி… பார்க்கறவங்களுக்கு தப்பா தெரியும். எதுவானாலும் போன் பண்ணு இல்லை ஷாலினிகிட்ட சொல்லிவிடு. தயங்காம எதுவும் கேளு. உனக்கு நானிருக்கேன்… நான் ஷாலினி எல்லாம் எப்பவும் இருப்போம் என்று சேர்த்து சொன்னான்.

 

 

“ரொம்ப நன்றி சார் எல்லா உதவிக்கும் என்றாள் உடைந்த குரலில்.

பிரணவ் வேலைக்கு திரும்பிய அன்று அவனின் மெயிலுக்கு வார்னிங் மெயில் ஒன்று வந்திருந்தது. பார்த்ததுமே தெரிந்தது அது கணேஷின் வேலை என்று.

 

 

ஆனால் கணேஷ் ஏன் இப்படி வித்தியாசமாய் நடந்து கொள்கிறான் என்பது மட்டும் அவனுக்கு புரியவில்லை. கணேஷிற்கு தன் மேல் ஏன் இவ்வளவு கோபம் என்ற கேள்வி எழுந்தது.

 

 

அவனுக்கு வந்திருந்த வார்னிங் மெயில் அவனின் ப்ராஜெக்ட் எப்போது முடியும் என்று கேட்டு வந்திருந்தது. ப்ராஜெக்ட் முடித்து கொடுக்க இன்னும் ஒரு நாள் மீதமிருந்த போதும் கணேஷ் எப்போது முடியும் என்று கேட்டு வார்னிங் மெயில் அனுப்பியிருந்தான்.

 

 

நெறைய விடுப்பு எடுப்பதால் வேலை எல்லாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியாது என்பது போல் உருவகப்படுத்தி பிரணவை கேள்விகேட்டு அவனின் மேலிடத்திற்கும் காபி வைத்து அனுப்பியிருந்தான்.

 

 

அந்த ஈமெயிலிற்கு பதில் அனுப்பும்முன் அவன் டீமை அழைத்து பேசினான். மனோவும் ஷாலினியும் இருந்திருந்தால் வேலை இரண்டு நாட்கள் முன்னதாகவே முடிந்திருக்கும்.

 

 

அவர்கள் இல்லாததால் வேலை அதிகப்பட்சம் இன்றுக்குள் முடிந்து விடும் என்பது நிச்சயம். அதுவும் இல்லாமல் ஷாலினியும் இன்று வேலைக்கு திரும்பியிருந்தாள்.

 

 

கூடிப்போனால் இன்னும் சில மணி நேரத்தில் வேலை முடிந்துவிடும் என்பது புரிய கணேஷிற்கு பதில் கொடுத்தான். வேலை எப்போதும் போல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடித்து கொடுப்பதாக கூறி பதில் கொடுத்தான்.

 

 

கணேஷை நேரில் சந்தித்து என்ன பிரச்சனை என்று கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவனிருப்பிடம் நோக்கிச் சென்றான். அவனோ அர்ஜுன் என்பவனுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.

 

 

“கணேஷ்…

 

 

“எஸ் சொல்லுங்க பிரணவ் என்றவனின் வார்த்தையே அவன் தன்னை விலக்கி வைத்துவிட்டான் என்பதை சொல்லாமல் சொன்னது.

 

 

“கொஞ்சம் பர்சனலா பேசணும்…

 

 

“அப்படியா என்றவாறே அசுவாரசியமாய் எழுந்து வந்தான் கணேஷ்.

 

 

“ஹ்ம்ம் சொல்லு…

 

 

“உனக்கு என்ன பிரச்சனை??

 

 

“புரியலை

 

 

“புரியாத மாதிரி நீ தான் கணேஷ் நடிக்கிற??

 

 

“உனக்கு என்ன தெரியணும்

 

 

“நீ ஏன் இப்படி நடந்துக்கறன்னு எனக்கு புரியலை. எனக்கு காரணம் வேணும், இப்படி எல்லார்கிட்டயும் போய் நான் காரணம் கேட்டதில்லை. ஆனா நீ என் நண்பன்னு நான் இன்னமும் நினைக்கிறதால தான் காரணம் கேட்டுட்டு இருக்கேன் என்று சேர்த்து சொன்னான் பிரணவ்.

 

 

“காரணம் தெரியுணும் அவ்வளவு தானே… கேட்டுக்கோ… உனக்கு நான் என்ன கெடுதல் செஞ்சேன் பிரணவ்… நீ ஏன் என்னோட காதலை பிரிச்ச என்றான்.

 

 

“என்ன நான் உன்னோட காதலை பிரிச்சேனா!! என்ன முட்டாள்த்தனம் இது!!

 

 

“ஓ!! உனக்கு நான் சொல்றது முட்டாள்த்தனமா தெரியுதா!! நான் பாரதியை விரும்பினது உனக்கு நல்லா தெரியும். என்கிட்டே அவ உனக்கு செட் ஆகமாட்டான்னு சொல்லிட்டு அன்னைக்கு நீ அவளை கட்டிபிடிச்சுட்டு நிக்கல என்றான் கணேஷ் ஒட்டுமொத்த வன்மத்தையும் மனதில் தேக்கி….

 

 

“அப்போ அது தான் உன்னோட பிரச்சனையா!! என்ற பிரணவின் கேள்விக்கு கோபத்தை தாங்கிய தன் முகமே பதிலாய் நின்றிருந்தான் கணேஷ்.

 

 

“நீ பேசுறது சுத்த பைத்தியக்காரத்தனம் கணேஷ். பாரதி எப்போ உன்னை லவ் பண்றேன்னு சொன்னாங்க. ச்சே எனக்கு இப்படி பேசுறது கூட கூச்சமா இருக்கு

 

 

“கொஞ்சம் கூட எதையும் யோசிக்காம என்னவெல்லாம் பேசுற கணேஷ்… நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை. இப்பவும் சொல்றேன் மனோ உன்னை விரும்பலை

 

 

“அவங்க அப்பா பார்க்கற பையனை தான் கட்டிக்குவேன்னு அன்னைக்கு அவங்க சொன்னது நிஜம்

 

 

“அதான் அவங்கப்பாவே போயிட்டாரே இனி யார் பார்க்கற மாப்பிள்ளையை கட்டிக்குவாங்க… சும்மா காதில பூ சுத்த வேணாம் என்று தனக்கு அவள் கிடைக்கவில்லை தன்னை அவள் திரும்பியும் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தை வார்த்தையில் பிரயோகித்தான்.

 

 

“போதும் கணேஷ்… எனக்கு இதுக்கு மேல உனக்கு விளக்கம் சொல்ல பிடிக்கலை. சொன்னாலும் நீ புரிஞ்சுக்க போறதில்லை. நீயா புரிஞ்சுக்கற அன்னைக்கு நீ நெறைய இழந்திருப்ப… பை… குட் பை பார் யூ அண்ட் யூவர் பிரண்ட்ஷிப் என்றுவிட்டு அவனை திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.

 

____________________

 

“வீட்டில யாருமில்லையா… என்றவாறே உள்ளே நுழைந்தவனை யாரென்ற ரீதியில் பார்த்தாள் மனோ.

“குமாரசாமி… என்று அவனிழுக்க தந்தையின் பெயரை கேட்டதும் குரல் லேசாய் உடைய தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு “நீங்க என்றாள்.

 

 

“நான் சரவணன்…என்னை பத்தி உங்கப்பா சொல்லியிருப்பாரே…

 

 

“நீங்க… முருக பக்தர்… ச்சே… நீங்க சரவணன்… அப்போ எங்கப்பா சொல்லிட்டு இருந்த மாப்… உங்க முழு பேரு… என்று தயங்கி இழுத்தாள்.

 

 

“சரவண குமார்… என்றவன் “உங்கப்பா என்ன சொன்னாரு என்னை பத்தி என்றான் தொடர்ந்து.

 

 

“நீங்க தான்… உங்களை உங்க போட்டோ கூட இருந்துச்சு அப்பா வைச்சிருந்தார்…எங்கப்பா பார்த்த மாப்பிள்ளை சரவணன் தானே நீங்க!!

 

 

அந்த சரவணனும் முதலில் தயங்கி பின் ஆமென்பதாய் தலையசைத்தான்….

 

 

 

 

 

 

 

Advertisement