Advertisement

அத்தியாயம் –13

 

 

வீட்டிற்குள் நுழைந்த பிரணவை எல்லோருமே வித்தியாசமாய் பார்த்தனர். பிரணவின் அன்னை மாலதி “என்ன தம்பி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்ட, உன் பிரண்டுக எல்லாரையும் கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு தானே எப்பவும் வருவ என்றார்.

 

 

“ஏம்மா சீக்கிரம் வந்தா கூட தப்பா என்று கேட்டுவிட்டு அவன் அறைக்கு செல்ல போக “சாப்பிட்டியாப்பா… என்றவருக்கு ஆம் என்பதாய் தலையாட்டிவிட்டு அவனறைக்கு சென்றான்.

 

 

அலுப்பு போக குளித்து வந்து கட்டிலில் விழுந்தவனை பாரதியின் நினைவுகளே ஆக்கிரமிக்க தொடங்கின. தன்னை திட்டிய அவமதித்த ஒரு பெண்ணை பற்றி தான் நினைக்கிறோம் என்பதெல்லாம் உணர்ந்தாலும் ஏனோ மனதில் ஒரு இனிமை சூழ்ந்தது.

 

 

பருவ வயதில் முதன் முதலாய் ஒரு பெண்ணை கண்டதும் ஏற்படும் குறுகுறுப்பு போன்று இன்று அவனுக்கு குறுகுறுத்தது.

 

 

இதுவரை அவர்களுக்கு நடைபெற்ற உரையாடல் எல்லாம் மனதில் தோன்றியது. கடைசியாக கணேஷ் பற்றி கேட்டதிற்கு அவள் கொடுத்த பதில் ஞாபகம் வர தனக்குள்ளாக அதற்கு பதில் கேட்டுக்கொண்டிருந்தான்.

 

 

‘அப்போ அவகிட்ட மென்மையாய் காதலை சொன்னா ஒத்துக்குவாளா!! என்ற எண்ணம் தோன்ற ‘என்னது லவ்வா அவகிட்ட மென்மையாய் லவ் சொல்றது பத்தி நான் ஏன் யோசிக்கறேன் என்று தோன்ற படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்.

 

 

ஒரு நேரம் நன்றாகவே யோசிக்கிறாள் ஒரு நேரம் அவள் பேசுவது குழந்தைத்தனமாக இருக்கிறது மொத்தத்தில் அவள் இம்மெச்சூராக தெரிந்தாள் அவனுக்கு.

 

 

அவளை நினைத்து கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. இது வெகுளித்தனம் போல் அவனுக்கு தெரியவில்லை.

அவளின் குணம் அவளை எங்காவது மாட்டி வைத்துவிடுமோ என்று லேசாய் ஒரு அச்சம் எழுந்தது. எனக்கு தேவையே இல்லாதது நான் ஏன் அவளை பற்றியே யோசிக்கிறேன் என்று அவன் தலையில் குட்டிக் கொள்ளும் போது அவன் அறைக்கதவு லேசாய் தட்டப்பட்டது.

 

 

இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என்று எண்ணியவாறே “கதவு திறந்து தான் இருக்கு என்று அவன் கூறவும் கதவை திறந்து கொண்டு அவனின் மூத்த சகோதரி ஹேமா உள்ளே நுழைந்தாள்.

 

 

“என்னக்கா இந்த நேரத்துல என்னைத் தேடி வந்திருக்க தூக்கம் வரலையா!! என்றான்.

 

 

“இல்லைடா பிரணவ் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன். அம்மா சொன்னாங்களா எதுவும்?? என்றாள்.

 

 

“ஹ்ம்ம் சொன்னாங்கக்கா எனக்கும் ரொம்ப சந்தோசம். உனக்காக வேண்டிக்கிட்டு தான் நான் பழனிக்கே போனேன். போயிட்டு வரவும் அம்மா நல்ல சேதி சொன்னாங்க எனக்கு எவ்வளோ சந்தோசமா இருக்கு தெரியுமாக்கா

 

 

“மாமாகிட்ட சொல்லிட்டியாக்கா உங்க வீட்டு ஆளுங்களுக்கு எல்லாம் சொல்லியாச்சா என்றான் தொடர்ந்து.

 

 

“மூணு வருஷ தவம்டா இன்னைக்கு தான் வரம் கிடைச்சிருக்கு. குழந்தையில்லைன்னு எவ்வளோ பேரு எவ்வளோ பேசிட்டாங்க. இனி யாரும் பேச மாட்டாங்களாடா என்றவளின் கண்கள் லேசாய் கலங்கியிருந்தது.

 

 

“அக்கா ப்ளீஸ் எதுக்கு நீ கண்ணு கலங்குற… இது நீ சந்தோசமா இருக்க வேண்டிய நேரம். மாம்ஸ் எப்போ வருவார் அவர்கிட்ட ட்ரீட் கேட்கணுமே என்று பேச்சை மாற்றினான்.

 

 

“உங்க மாமா வர்றதுக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்டா… வந்ததும் ட்ரீட் கொடுப்பார் ஓகே வா…

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அறைக்கதவு மீண்டும் தட்டப்பட யாராய் இருக்குமென்று ஹேமாவும் பிரணவும் யோசிக்க கதவு திறந்து உள்ளே வந்தாள் ஹேமாவின் இளைய சகோதரியும் பிரணவின் இரண்டாவது சகோதரியுமான சசி.

 

 

‘இன்னைக்கு என்ன எல்லாரும் என் ரூமுக்கு படை எடுக்கறாங்க என்று எண்ணிக்கொண்டு “என்ன சசிக்கா இன்னும் தூங்கலையா!! என்றவனை முறைத்தாள் சசி.

 

 

“என்னை சசின்னு கூப்பிடுன்னு எத்தனை தரம்டா உனக்கு சொல்றது. உன்னைவிட நான் ஒரு ரெண்டு வருஷம் தானேடா பெரியவ. நீ அக்கான்னு கூப்பிடுறது பார்த்தா எனக்கு வயசாகிட்ட மாதிரி பீல் ஆகுது என்று சிணுங்கினாள் அவனுக்கு மூத்தவள்.

 

 

“அந்த கதை அப்புறம் பேசுவோம் நீ ஏன் இன்னும் தூங்கலை. மாமா உனக்கு போன் பண்ணலையா இல்லை லேட்டா பண்ணறேன்னு எதுவும் சொன்னாரா. அதுக்காக தான் நீ எங்களோட மொக்கை போட வந்தியா என்று அடுக்கினான் அவன்.

 

 

“அக்கா இவனை சும்மா இருக்க சொல்லு ரொம்ப ஓட்டுறான்க்கா என்று தமக்கையிடம் தஞ்சம் புகுந்தாள் சசி.

 

 

“டேய் பிரணவ் எதுக்குடா அவளை ஓட்டுற, அவங்க ஆளு இன்னைக்கு ஒரு மணிக்கு தான் போன் பண்ணுவாரு. அந்த கேப்ல ஏதோ பாவம்ன்னு பார்த்து அவ நம்மளை எல்லாம் பார்க்க வந்தா எதுக்குடா கிண்டல் பண்ணுற என்ற ஹேமாவும் தங்கையை ஓட்டினாள்.

 

 

“இரண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டீங்களா!! என்னை கலாட்டா பண்ணுறதுன்னா மட்டும் ரெண்டு பேரும் கூட்டணி போட்டிருவீங்களே!! என்று அங்கலாய்த்தாள் சசி.

 

 

“பிரணவ் அவரை பார்த்தியாடா!! நல்லாயிருக்காரா!! உனக்கு பிடிச்சிருக்கா!! என்று ஆர்வமாய் தம்பியை பார்த்து கேட்டாள் சசி. அவனின் இரண்டாம் சகோதரி சசிக்கு இப்போது தான் திருமணம் நிச்சயம் முடிந்திருக்கிறது.

பிரணவ் வெளிநாட்டில் இருந்ததால் அவனால் மாப்பிள்ளையை பார்க்க முடியவில்லை. மாப்பிள்ளை வீட்டினர் ஒரு வாரத்திலேயே நிச்சயம் வைக்கச் சொல்லி அவசரப்படுத்த பிரணவ் இல்லாமலே சசியின் திருமணம் உறுதி செய்யப்பட்டது.

 

 

அப்போதே பத்து முறைக்கு மேல் பிரணவை கேட்டுவிட்டு தான் அவள் சரி என்றே சொன்னாள். நிச்சியத்தின் போது பிரணவ் ஸ்கைப்பில் தொடர்பு கொண்டு நேரடியாக அதெல்லாம் பார்த்தான்.

 

 

அவனின் குடும்பத்திற்கே ஒரு சாபம் போல் முதலில் ஹேமாவின் திருமண பேச்சு ஆரம்பித்து சில வருடங்களுக்கு பின் தான் அவருக்கு திருமணம் முடிந்தது.

 

 

அடுத்த பிரச்சனையாக ஹேமாவிற்கு திருமணம் முடிந்து மூன்று வருடமாக குழந்தை வேறு இல்லாமல் கிட்டத்தட்ட எல்லோருமாக அவள் ராசியை குறை கூற ஓரிருவர் அவள் உடல்நிலையை குறை கூறி வெகுவாய் காயப்படுத்தினர்.

 

 

சசிக்கும் அதே போல் திருமண பேச்சு ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி இதோ இப்போது தான் திருமண நிச்சயமும் முடிந்திருக்கிறது. எல்லோருக்குமே எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும் என்ற வேண்டுதல் இருந்தது. பிரணவ் அவன் இரு சகோதரிகளின் நலன் பொருட்டே வேண்டிக்கொண்டு பழனிக்கு சென்று வந்தான்.

 

 

“அதான் சொல்லிட்டேன்ல மாப்பிள்ளை நல்லா இருக்கார். உனக்கு பொருத்தமா இருப்பார். நீ சூப்பரா இருக்கப் போற பாரு…. என்றான் மனதார.

 

 

“அவர்கிட்ட நீ பேசவேயில்லையேடா… நாளைக்கு நேர்ல போய் ஒரு தரம் அவரை பார்த்திட்டு வந்திடேன்… என்றாள் சசி.

 

 

“உனக்காக கண்டிப்பா போய் பார்த்திட்டு வரேன் போதுமா என்று பிரணவ் சொல்லி முடிக்க மறுபடியும் அவன் அறைக்கதவு தட்டப்பட்டது.

‘இன்னைக்கு என்னை யாருமே நிம்மதியாக தூங்கவிட மாட்டாங்க போல என்று எண்ணிக் கொண்டு அவன் அறைக்கதவை பார்க்க அவன் அன்னை மாலதி உள்ளே நுழைந்தார்.

 

 

“உன் ரூம்ல பேச்சு சத்தம் கேட்குதேன்னு தான் உள்ள வந்தேன். அக்காக்களும் தம்பியும் இந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்கீங்க என்றார்.

 

 

“நீ ஏம்மா ஹேமா இன்னும் இங்க இருக்க, போம்மா போய் நேரத்துக்கு தூங்குடா என்று பெரிய மகளை வாஞ்சையுடன் கூறினார்.

 

 

“சும்மா பேசிட்டு போலாம்ன்னு வந்தேன்ம்மா… போய் தூங்க தான் போறேன் என்றவாறே எழுந்தாள் ஹேமா.

 

 

“ஒரு அஞ்சு நிமிஷம் உட்காரும்மா உன் தம்பி கல்யாணம் பத்தி பேசிருவோம் என்ற மாலதியை மக்கள் மூவருமே பார்த்தனர்.

 

 

“ஆமாடா உனக்கு தான் கல்யாணம். சசி கல்யாணத்துக்கு நாள் பார்க்க போனப்ப உன்னோட ஜாதகமும் எடுத்துட்டு போயிருந்தேன். உனக்கு இப்போ தான் குருபலன் கூடி வந்திருக்காம். இந்த வருஷம் உனக்கு கண்டிப்பா கல்யாணம் முடிஞ்சுரும் சொல்றாங்கடா…

 

 

“இப்போ முடியலைன்னா இதோட உனக்கு முப்பதைஞ்சு வயசாகுமாம் கல்யாணம் முடிக்க… அதான் உன்கிட்ட பேசிட்டு நம்ம இந்துவையே உனக்கு பார்க்கலாம்ன்னு இருக்கோம்

 

 

“சசி கல்யாணம் முடிஞ்சு ஒரு ரெண்டு மாசத்துல உனக்கும் கல்யாணம் வைச்சிறலாம்ன்னு நானும் அப்பாவும் பேசி வைச்சிருக்கோம் என்று முடித்தார்.

 

 

தமக்கைகள் இருவருக்கும் உடன்பிறந்தானின் திருமணப்பேச்சு மகிழ்வை கொடுக்க அதற்கு முக்கிய காரணமானவனோ “என்னம்மா விளையாடுறீங்களா!! அதெல்லாம் முடியாது எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்

 

“நீங்களும் உங்க ஜாதகமும் போங்கம்மா உங்களுக்கும் வேலையில்லை அந்த ஜோசியக்காரனுக்கும் வேலையில்லை. எனக்கு வயசு இப்போதான் இருபத்தைஞ்சு நடக்குது அதுக்குள்ள யாராச்சும் கல்யாணம் பண்ணுவாங்களா

 

 

“நான் இன்னும் செட்டில் ஆகவே இல்லை. அதுக்கெல்லாம் எப்படியும் ஒரு மூணு வருஷம் ஆகும்மா… அதுவரைக்கும் நீங்க பேசாம இருங்க. என் கல்யாணப்பேச்சை நானா எடுக்கறவரை நீங்க எடுக்கக் கூடாது என்றான்.

 

 

“டேய் சொன்னா கேளுடா இப்போ விட்டா இன்னும் பத்து வருஷமாகுமாம்டா ப்ளீஸ்டா அம்மா சொல்றது கேளு என்றார். பிரணவோ பிடிக்கொடுக்காமல் பேசி பேச்சை மாற்றிவிட்டான். அவனுமே அறியவில்லை அவன் ஜாதகம் பலிக்கப் போகிறது என்பதை.

 

 

மறுநாள் விடுமுறை தினமென்பதால் கணேஷை அழைத்து மனோவை பற்றி பேசிவிட வேண்டும் என்று கணேஷை வரவழைத்தான். இருவருமாக ஒரு மாலுக்கு சென்றனர்.

 

 

எதிரும்புதிருமாக இருவரும் அமர்ந்திருக்க கணேஷோ பிரணவின் முகம் பார்க்க முடியாமல் குனிந்து அமர்ந்திருந்தான். “கணேஷ்… என்று பிரணவ் அழைக்கவும் “ஹ்ம்ம்… என்றவாறே நிமிர்ந்தான்.

 

 

“என்ன முடிவு பண்ணியிருக்க பாரதி விஷயத்தை பத்தி?? என்று நேரடியாக விஷயத்திற்கே வந்துவிட்டான் பிரணவ்.

 

 

“ஏன்டா அவளுக்கு என்னை பிடிக்கலை என்றான் கணேஷ்.

 

 

“நீ பண்ணது எல்லாம் கரெக்ட்டா!! அவ இந்த ஆபீஸ்ல சேர்ந்து இன்னும் ஒரு மாசம் முடியலை அதுக்குள்ள அவ கையை பிடிச்சு லவ்வை சொல்லி நீ கலாட்டா பண்ணியிருக்கே. எப்படி அவளுக்கு பிடிக்கும்

 

 

“ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேளு. உனக்கும் அவளுக்கும் செட்டே ஆகாதுடா. அவ தொட்டதுக்கு எல்லாம் சிணுங்கற ரகம். உன் குணமே வேறே…

 

 

“அதுவும் இல்லாம அவ அவங்கப்பாம்மா பார்க்கற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டா…உனக்கும் அவளுக்கும் சரியா வராதுன்னு தான் எனக்கும் தோணுது

 

 

“என்னைவிட உனக்கு அவளை நல்லா தெரியுமா… எதை வைச்சுடா செட் ஆகாதுன்னு சொல்ற?? என்றான் கணேஷ்.

 

 

“உன்னை எனக்கு நல்லா தெரியும் அதை வைச்சு தான் சொல்றேன். உனக்கும் அவளுக்கு சரியா வராதுன்னு. அவளை எனக்கு முதல்லயே தெரியும். ராகவ்க்கு கல்யாணம் பண்ணிவைக்க ரிஜிஸ்தர் ஆபீஸ் போனோம்ல

 

 

“அங்க அவளை பார்த்தேன். நான் லவ் மேரேஜ் பண்ணி வைக்கறதையே கொலைக்குற்றம் பண்ணா போல பார்த்தவ அன்னைக்கு ராகவ் அப்பா என்னை விசாரிக்க வந்தப்போ என்னென்ன கலாட்டா பண்ணா தெரியுமா என்றவன் அந்த நிகழ்வுகளை கூறினான் நண்பனுக்கு.

 

 

“இதெல்லாம் ஏன்டா எனக்கு நீ முன்னமே சொல்லலை….

 

 

“நீ இவ்வளவு சீரியசா இருப்பேன்னு நினைக்கலைடா… இவ்வளவு அவசரப்பட்டு லவ் சொல்லுவேன்னும் நான் நினைக்கலை…

 

 

“அவ வழிக்கு நீ வர மாட்டேன்னு சொல்லியிருக்கேன். விட்டுடுடா அவ வேணாம் உனக்கு… உன்னோட குணத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு உனக்கு கண்டிப்பா அமைவாடா என்று கல்யாண மாலையில் சொல்வது போல அவன் சொல்லவும் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்த கணேஷிற்கு லேசாய் சிரிப்பு அரும்பியது.

 

 

“சரிடா நீ சொல்றது புரியுது. நீ எனக்கு தப்பா கைடு பண்ண மாட்டே… தேங்க்ஸ்டா என்றான் கணேஷ்.

____________________

 

 

“அப்பா இன்னைக்கு எங்கயோ வெளிய போகலாம்ன்னு சொன்னீங்க

 

 

“ஆமாடா இன்னைக்கு உனக்கு லீவாச்சே!! நாம மூணு பேரும் சேர்ந்து எங்காச்சும் போயிட்டு வரலாம்ன்னு தோணுது. ஜாலிரைடு உனக்கு பிடிச்ச இடம் சொல்லு அங்கவே போலாம் என்றார் அவள் தந்தை குமாரசாமி.

 

 

“என்னப்பா ரொம்ப ஜாலி மூட்ல இருக்கீங்க போல…

 

 

“ஹ்ம்ம் ஆமாடா உன்னோட நேரம் செலவழிக்கணும் போல இருக்கு அதான்…

 

 

“நான் தான் தினமும் வீட்டில இருக்கேனேப்பா…

 

 

“நீ வீட்டில இருக்கடா ஆனா நாம சந்தோசமா வெளிய போய் நாளாச்சுல சொல்லு எங்க போகலாம்

 

 

“ஹ்ம்ம் என்று யோசித்தவள் “பாண்டிசேரி போகலாம்பா… மணக்குள விநாயகர் கோவில்க்கு போயிட்டு அரவிந்தர் ஆசிரமம் போயிட்டு ஆரோவில் பார்த்திட்டு கொஞ்ச நேரம் பீச்ல உட்கார்ந்திட்டு வந்திருவோம்ப்பா… கார் வேணா பேசிக்கலாம்ப்பா… என்றாள்.

 

 

“சரிம்மா அப்படியே செய்வோம்… என்றுவிட்டு மனைவி மகளுடன் அன்றைய நாளை செலவழிக்க தயாரானார் அவர். இனி மகளுடன் நேரமே செலவழிக்க முடியாதென்று எண்ணித்தான் அதை செய்தாரோ!! என்னவோ!!

 

 

அந்த வாரம் முழுதும் ஒரு வித இனிமையுடனே கழிந்தது அவளுக்கு. அந்த வார இறுதியில் அவளை பிரணவின் டீமிற்கு மாற்றியிருந்தனர். அதைப்பற்றிய விபரம் கேட்க அவளின் டீம் லீடர் அர்ஜுனை சந்திக்கச் சென்றாள்.“சொல்லுங்க பாரதி என்றான்.

 

 

“சார் என்னை ஏன் டீம் மாத்துறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?? என்னோட வொர்க் உங்களுக்கு திருப்திகரமா இல்லையா!! இல்லை வேற எதுவும் காரணமா!!

 

 

“உங்க வொர்க் திருப்தி இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்

 

 

“அப்புறம் ஏன் சார் டீம் மாத்துறீங்க??

 

 

“இந்த ப்ராஜெக்ட் முடிய போகுது பாரதி. இதுக்கு இப்போதைக்கு இருக்கற ஆளுங்களே போதும். நான் உங்களை மட்டும் மாத்தலை உங்களோட இருக்கற ஷாலினியையும் சேர்த்து தான் பிரணவ் டீம்க்கு மூவ் பண்ணுறேன்

 

 

“அங்க இப்போ புது ப்ராஜெக்ட் வந்திருக்கு. ஆளும் பத்தாம இருக்காங்க. அதனால தான் உங்களை அந்த டீம்க்கு நான் ரெகமண்ட் பண்ணேன் போதுங்களா விளக்கம் என்றான்.

 

“தேங்க்ஸ் சார்… என்றுவிட்டு நகர்ந்தவள் பிரணவை தேடிச் சென்றாள்.

 

 

செல்லும் வழியில் கணேஷை பார்க்க அவளுக்கு அன்றைய நிகழ்விற்கு பின் அவனை பார்த்த நினைவு வந்தது. விடுமுறை முடிந்து அவள் வேலைக்கு வந்த அன்று கணேஷ் அவளை பார்க்க வேண்டும் என்று சொல்ல அவனைத் தேடிச் சென்றாள்.

 

 

அவளிடம் அவன் செயலுக்காய் மன்னிப்பு கேட்டவன் தன்னால் இனி அவளுக்கு எந்தவிதத்திலும் தொந்திரவு நேராது என்று உறுதி கூறினான்.

 

 

‘பரவாயில்லையே இந்த பிரணவ் சொன்னதை செய்துவிட்டானே என்று பிரணவின் மீது லேசாய் ஒரு நல்ல அபிப்பிராயம் அவளுக்கு விழுந்தது.

 

 

யோசித்துக்கொண்டே அவள் பிரணவின் அறையை வந்தடைந்திருந்தாள். அன்றே அவனின் டீமுக்கு மாறியவளுக்கு உரிய ட்ரைனிங் கொடுத்து வேலையை பற்றி விளக்கினான் அவன்.

ஷாலினியும் உடனிருந்ததால் அவளுக்கு சற்று தெம்பாகவும் புது வேலை ஒரு உற்சாகத்தையும் கொடுத்தது.

 

 

மனோவின் பெற்றோர் அந்த சனிக்கிழமை இரவு பழனிக்கு கிளம்பிச் சென்றிருந்தனர். இரண்டு நாள் முன்னர் தான் மகளுக்கு ஒரு மாப்பிள்ளையை மனதில் நினைத்திருப்பதாகவும் நல்லபடியாக பேச்சு வார்த்தை முடிய அந்த முருகனிடம் வேண்டுதல் வைக்கப் போவதாக கூறி கணவன் மனைவி இருவரும் கிளம்பிச் சென்றிருந்தனர்.

 

 

மனோவிற்கு அவர்களுடன் செல்ல முடியாத சூழல் என்பதால் அவள் மட்டும் வீட்டில் தனியே இருந்தாள். மறுநாள் தரிசனம் முடிந்து இரவே கிளம்பிவிடுவதாக அவர்கள் கூறியிருந்ததால் மனோ வீட்டில் தனியே இருந்து கொள்வதாக கூறிவிட்டாள்.

 

 

ஞாயிறு இரவு அவள் அன்னையும் தந்தையும் தரிசனம் முடிந்து வர சற்று நேரம் பிடித்ததால் இரவு அங்கேயே தங்கிவிட்டு அதிகாலையில் சென்னை கிளம்புவதாக கூற முதலில் முகம் வாடிய மனோ பின்னர் எப்படியும் நாளை வந்துவிடுவார்கள் என்று எண்ணி அமைதியானாள்.

 

 

ஏனோ காலையில் எழுந்ததில் இருந்தே மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஏனென்று புரியாத ஒரு பயம் ஆட்டுவிக்க வீட்டில் தனியாக இருப்பது தான் கண்ட சிந்தனையும் கிளப்புகிறது என்று எண்ணியவள் துரிதமாய் கிளம்பி அலுவலகம் வந்தடைந்தாள்.

 

 

அவளுக்கு முன்னதாகவே பிரணவ் அவனிருக்கையில் அமர்ந்திருக்க உள்ளே வந்தவளை ஆச்சரியமாய் ஏறிட்டவன் பின் அவன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

 

 

வேலையில் ஏதோ சந்தேகம் தோன்ற மனோவை இண்டர்காமில் அழைத்தான். “கொஞ்சம் என்னோட கேபின் வாங்க… என்றுவிட்டு வைத்துவிட மனோ எழுந்து சென்றாள்.

 

 

பிரணவ் வேலை விஷயமாக அவளிடம் ஏதோ கேட்க பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். “சார் அதெல்லாம் நேத்தே ரெடி பண்ணிட்டேன். இருங்க என்னோட பென்டிரைவ்ல காபி பண்ணி எடுத்திட்டு வரேன்என்றுவிட்டு எழுந்து சென்றவள் அவள் கைபேசியை அவன் மேஜையிலேயே விட்டுச் சென்றிருந்தாள்.

 

 

அவள் எழுந்து செல்லவுமே அவள் கைபேசிக்கு அழைப்பு வந்தது. அதை சைலென்ட் மோடுக்கு வைத்துவிட்டு அவன் மடிகணினியை பார்வை இட மீண்டும் அழைப்பு வந்தது.

 

 

எடுக்கலாமா வேண்டாமா என்ற எண்ணத்திலேயே அவள் கைபேசியை வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தொடர்ந்த அழைப்பு எடுக்கச் சொல்லி தூண்ட யாராய் இருந்தாலு எடுத்து பத்து நிமிடம் கழித்து பேச சொல்ல வேண்டும் என்று எண்ணி போனை எடுத்தான்.

 

 

பொத்தானை அழுத்தி அவன் பேசப் போக எதிர்முனை கொடுத்த தகவல் அவனை அப்பட்டமான அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனோவின் தந்தையும் அன்னையும் வந்து கொண்டிருந்த கார் பைபாஸில் ஓரமாய் நின்றுக்கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாய் மோதி  விபத்துக்குள்ளாகியிருந்தது.

 

 

அந்த மோதலில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் அவளின் பெற்றோர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க டிரைவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்ற தகவல் தான் அவனுக்கு கிடைத்தது.

 

 

முதல் முறை ரிஜிஸ்தர் அலுவலகத்தில் அவரை அரைகுறையாய் பார்த்ததும்  பின்னர் சென்ற வாரம் தான் அவரை சிரித்த முகத்துடன் பார்த்ததும் நினைவுக்கு வர அவரின் இழப்பு தனக்கே ஏற்பட்டதாய் உணர்ந்தான் அவன்.

 

 

சட்டென்று மனோவின் நினைப்பு வர இவள் எப்படி இதை தாங்கப் போகிறாள். எப்படி அவளிடம் இதை சொல்லப் போகிறோம் என்ற பதைப்பு தோன்ற முதல் முறையாய் என்ன பேச என்ற எண்ணம் கூட தோன்றாமல் அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தான்.

 

 

மனோ அவன் அறைக்கதவை லேசாய் தட்டிவிட்டு உள்ளே வந்தாள். “சார் பென் டிரைவ்… என்று அவனிடம் நீட்ட அதை வாங்கத் தோன்றாமல் அமர்ந்திருந்தவனை “சார்… சார்… என்று கையை ஆட்டி அழைத்தாள்.

 

 

“சாரி ர… ரதி… என்றவன் எழுந்து நின்றான்.

 

 

‘என்ன ரதியா!!யாரைச் சொல்றான் இவன் என்று எண்ணிக்கொண்டு “சார்… என்றுவிட்டு அவனிடம் பென் டிரைவை நீட்ட “இருக்கட்டும் ரதி… உ… உங்க போன்… அப்… அம்… வண்டி… என்று திக்கி திக்கி அவளிடம் சொல்ல முயன்றான்.

 

 

“என்னாச்சு சார்?? ஒண்ணும் புரியலை… என்று அவள் விழித்துக் கொண்டிருக்கும் போதே அவள் கைபேசி மீண்டும் அழைக்க அவளுக்கு பதில் சொல்லத் தோன்றாமல் அவள் கைபேசியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

 

 

எதிரில் நின்றவனை குழப்பமாய் பார்த்துக் கொண்டே போனை எடுத்து காதில் வைத்தவள் அதில் கேட்ட சேதியில் கையிலிருந்த கைபேசி நழுவி விழுவதை கூட உணராமல் கண்கள் நிலைக்குத்த கால்கள் துவள சரிய ஆரம்பிக்கவும் அருகில் இருந்தவன் அவளை தாங்கிப் பிடித்தான்.

 

 

“ரதி… ஒண்ணுமில்லை ப்ளீஸ் டென்ஷன் ஆகாதம்மா… என்றவன் அவளை தன் மீது சாய்த்துக் கொள்ள முயல “அப்பாஆஆஆ…… என்னை தனியா விட்டு நீங்க மட்டும் போயிட்டீங்களாப்பா… என்று அவள் கதறிய கதறல் அந்த அலுவலகம் அறை முழுக்க எதிரொலித்தது….

 

Advertisement