Advertisement

அத்தியாயம் –11

 

 

“என்னம்மா பாரதி யார் மேல உனக்கு கோபம் இப்படி வீட்டில இருக்கற எல்லாத்தையும் உருட்டுற என்றவாறே அருகில் வந்தார் மனோவின் தாய். அவளின் செயலில் வித்தியாசம் கண்ட தந்தையும் அவளை கேள்வியாய் நோக்கினார்.

 

 

“ஒண்ணுமில்லைம்மா… என்றுவிட்டு அவள் அறையை நோக்கிச் சென்றுவிட்டாள். முகம் கழுவி வேறு உடைமாற்றி அவள் வரவும் மகளின் கையில் காபியை கொடுத்தார் அவளின் அன்னை ஜானகி.

 

 

“என்னம்மா என்ன பிரச்சனை?? என்று அவளருகே வந்தமர்ந்து பரிவாய் கேட்ட அன்னையிடம் அலுவலகத்தில் நடந்த கதையை கூற அவர் பதிலுக்கு மகளை முறைத்தார்.

 

 

அவள் தந்தை குமாரசாமி அருகே வந்தவர் “உனக்கு என்ன ஆச்சு பாப்பு?? நீ ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கற… உன்னைவிட பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசணும் அப்படிங்கற பண்பு கூட சொல்லிக் கொடுக்காமையா நாங்க உன்னை வளர்த்தோம்

 

 

“உன் மேலதிகாரிக்கு நிகரான ஒருத்தர் அவரை எப்படி முகத்துக்கு நேரே நீ பிடிக்கலைன்னு சொன்ன!! ஒரே பொண்ணாச்சேன்னு நாங்க உனக்கு அதிகம் இடம் கொடுத்திட்டமோன்னு நினைக்கிறேன்

 

 

“உனக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கி போகணுமே தவிர அவங்களை அவமானப்படுத்தவோ அவமதிப்பா பேசவோ உனக்கென்ன உரிமை இருக்கு. அந்த தம்பி நல்லவரா இருக்க போய் உன்கிட்ட இவ்வளவு தன்மையா நடந்திருக்காரு

 

 

“அப்பா நீங்க அந்தாளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க அவன் எவ்வளவு பிராடு தெரியுமா!! இன்னைக்கு அந்த பையனோட அப்பா வந்திருந்தாரு இவன் சொல்றான் அவன் பிரண்டு பார்த்தே நாளாச்சாம்

 

 

“எவ்வளவு பொய் பேசுறான்ப்பா நீங்க எப்படிப்பா அவனுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க என்று கேட்ட மகளை எரிக்கும் பார்வை பார்த்தார் அவர்.

“உனக்கென்ன வந்துச்சு!! இந்த விஷயத்துக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லை. இப்படி தேவையில்லாத விஷயத்துல நீ ஏன் தலையை கொடுக்கற. என் பொண்ணு மரியாதை தெரிஞ்சவ நாகரீகம் அறிஞ்சவ உலகம் புரிஞ்சவன்னு நினைச்சதுக்கு நீ நல்ல பதில் கொடுக்கறம்மா

 

 

“உன் நடவடிக்கை எனக்கு சுத்தமா பிடிக்கலை. அன்னைக்கு ஏதோ புரியாம சொல்றேன்னு நினைச்சேன். நீ இன்னைக்கும் அதே தொடர்றது எனக்கு சரியா படலை

 

 

“நல்லதும்கெட்டதும் பார்த்ததும் தெரியாது பழகினா தான் தெரியும் பாம்பெது பழுதெதுன்னு என்று அவர் நீளமாய் மகளுக்கு அறிவுரை சொல்லவும் மளுக்கென்று அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

 

 

இதுவரை தன்னை அதட்டிக்கூட பேசியிராத தன் தந்தை தன்னை கடிந்து பேசியதிற்கும் பிரணவையே குற்றம் சாட்டிக்கொண்டவளுக்கு அவன் மேல் இன்னமும் கோபமும் வெறுப்பும் அதிகமானது.

 

 

அப்போதும் தன் தவறை அவள் உணரவேயில்லை. மகளின் முகம் பார்த்த ஜானகி கணவருக்கு ஜாடை காட்ட அப்போது தான் மகளை பார்த்தார் அவர்.

 

 

“பாப்பு அப்பா சொன்னது எல்லாம் உன் நல்லதுக்கு தான்டா… பலா பார்க்க கரடுமுரடா இருக்கலாம் ஆனா உள்ள அவ்வளவு இனிப்பு. சில மனுஷங்களும் அப்படி கரடுமுரடானவங்க தான் ஆனா பழக இனிமையா இருப்பாங்க

 

 

“நல்லதும் கெட்டதும் நாம பார்க்கற பார்வையில தான்டா இருக்கு. அப்பா சொன்னேன்னு வருத்தப்படாம இனி புத்தியோட நடக்கப் பாரு என்று முடித்தார் அவர்.

 

 

“அப்பா நல்லதுக்கு தான் சொல்லுவாங்க பாரதி. அவங்க சொல்றதை கேட்டு நட என்று சின்னதாய் முடித்துவிட்டார் அவள் அன்னை.மனோபாரதி சோர்ந்த முகத்துடன் அவளறைக்கு சென்றுவிட்டாள்.அவளுக்கு தந்தை பேசிவிட்டார் என்பதை விட பிரணவின் மேல் தான் தீராத கோபம் எழுந்தது.

மறுநாள் எப்போதும் போல் அலுவலகம் கிளம்பிச் சென்றவள் பிரணவ் இருக்கும் பக்கம் கூட திரும்பி பார்க்கவேயில்லை. அவனை பார்த்தால் தானே தான் இப்படி வித்தியாசமாய் நடக்கிறோம். எதற்கு வம்பென்று அவள் வேலையை மட்டும் பார்த்தாள்.

 

 

பிரணவும் அதை எல்லாம் பெரிதாய் கண்டுகொண்டானில்லை. அவன் தானுண்டு தன் வேலையுண்டு தன் நண்பர்கள் உண்டு என்று அவனுக்கான உலகத்தில் எப்போதும் போல் இருந்தான்.

 

 

ஒரு வாரம் சென்றிருக்கும் மனோபாரதி தன் வேலையை பார்த்தாலும் பிரணவ் நண்பர்களுடன் கலாட்டா செய்யும் சத்தம் அவ்வப்போது அவள் காதில் விழுந்து எரிச்சலை கிளம்பிக் கொண்டு தானிருந்தது.

 

 

அந்த எரிச்சலின் உச்சத்தை முகத்தில் அவள் காட்டிவிட அதை தற்செயலாய் கண்டுகொண்ட பிரணவ் யோசனையானான்.

 

 

நடந்தது இது தான் பிரணவ் இடைவேளையின் போது பேன்ட்ரி பக்கம் நண்பர்களுடன் சென்றிருந்தான். அதில் ஆண் நண்பர்கள் மட்டுமல்லாது பெண் நண்பிகளும் அடக்கம்.

 

 

மனோ அவளுக்கு காபி கலப்பதற்காக அங்கு வர பிரணவ் ஒரு பெண்ணை நோக்கி அடிப்பது போல் கையை நீட்டியிருக்க அப்பெண் ஓரடி பின்னால் சென்றாள். அவர்கள் அதை சிரித்துக்கொண்டே விளையாட்டாய் தான் செய்தனர்.

 

 

ஆனால் மனோவிற்கு தான் பிரணவை பிடிக்காதே!! அதனால் அவள் வந்த எரிச்சலையும் முகச்சுளிப்புடன் வெளிப்படுத்தினாள். அதை மற்றவர்கள் பார்க்கும் முன்னே அவள் மறைக்க பிரணவ் மட்டும் கண்டுகொண்டிருந்தான்.

 

 

அவள் தனக்கான காபி கலந்து எடுத்துச் செல்லவும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு அவளை நோக்கிச் சென்றான்.

 

 

“ஹேய் ஒரு நிமிஷம் நில்லு என்று பின்னால்கேட்ட குரலில் திரும்பி பார்த்தவள் முகம் இறுகியது.

“என்ன?? என்றாள் மொட்டையாய். சட்டென்று அவள் தந்தை பேசியது ஞாபகத்திற்கு வர அவன் தன் மேலதிகாரிக்கு இணையான அதிகாரத்தில் இருப்பவன் என்ற நினைவு வர குரலை தணித்து “என்ன சொல்லுங்க?? என்றாள்.

 

 

பிரணவிற்கு அவளின் இருவேறு என்ன என்பதிற்கு அர்த்தம் விளங்காவிட்டாலும் அதன் தொனி புரிந்தே தான் இருந்தது.

 

 

“நீ என்ன குஷி ஜோதிகாவா??

 

 

“என்ன?? என்றாள் அவள் புரியாமல். ‘இவன்புகழ்ச்சியாய் சொல்கிறானா!! இல்லை கிண்டல் செய்கிறானா!! என்று குழம்பி அவனை பார்த்தாள்.

 

 

“அவங்க அந்த படத்துல ஓவரா ஆக்ட் தான் பண்ணாங்க. ஆனா நீ ஏன் ஓவரா ரியாக்ட் பண்ணுற?? உனக்கென்ன பிரச்சனை?? நான் உன்னை என்ன செஞ்சேன்??

 

 

“உன் பின்னாடியே எதுவும் சுத்தி உனக்கு தொந்திரவு கொடுத்தேனா!! இல்லை உன் கையை பிடிச்சி இழுத்தனா!! எப்போ பார்த்தாலும் என்னைய என்னமோ வில்லன் ரேஞ்சுக்கு பார்த்து வைக்குற??

 

 

“தெரியாம தான் கேட்குறேன் உன் பிரச்சனைக்கு நான் வந்தேனே. என்னால உங்க குடும்பத்துல யாருக்கும் பிரச்சனையா!!அப்புறம் எதுக்கு இப்படி லுக் விட்டு போற…

 

 

“அப்படி என்ன பண்ணிட்டேன் நான் உன்னை… உனக்கு பிடிக்கலைன்னா பார்க்காத, பேசாத… யாரும் உன்கிட்ட வந்து ஏன் பார்க்கலை ஏன் பேசலைன்னு கேட்க போறதில்லை

 

 

“நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை. உன்கிட்ட வந்து இவ்வளவு நேரம் பேசணும்ன்னு எனக்கு தலையெழுத்தும் இல்லை. பேசாம தான் போயிருப்பேன். ஆனா என்னை நீ இப்படி வில்லன் மாதிரி பார்க்கறது எனக்கு கடுப்பாகுது

“அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன். இதுக்கு மேலே நீ இப்படி லுக் விட்டுட்டு திரிஞ்ச நடக்கறதே வேற… என்று எச்சரித்து நகர்ந்தான்.

 

 

“ஹலோ நீங்க சொன்ன மாதிரி நடக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?? என்று கேட்டவளை பார்த்து முறைத்தான் அவன். ‘இவளை என்ன செஞ்சா பேசாம இருப்பா என்று தோன்றியது.

 

 

“என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. நடந்து பாரு அப்போ என்ன தோணுதோ அதை செஞ்சுட்டு போயிட்டே இருப்பேன் என்றுவிட்டு அதற்குமேல் அங்கு நில்லாமல் நடந்து சென்றுவிட்டான்.

 

 

அவள் இருக்கும் பக்கம் கூட அவன் வருவதேயில்லை. அவளை மின்தூக்கியில் பார்த்தால் கூட அவன் அடுத்த வந்த ப்ளோரில் இறங்கி கொண்டு நடந்தே சென்றுவிடுவான்.

 

 

பெரிதாய் எந்த மாறுதலுமில்லாமல் நாட்கள் செல்ல அந்த வாரயிறுதியில் கம்பெனி கெட்டுகெதர் நடப்பதாக இருந்தது.

 

 

“பிரணவ் இந்த ஞாயிற்றுக்கிழமை நம்ம ஆபீஸ் கெட்டுகெதர்டா மெயில் வந்துச்சுல உனக்கு. இதே சாமியார் கோலத்துல வந்து நிக்காத ஓகேவா டா என்றான் கணேஷ்.

 

 

“எனக்கு மெயில் வரலையே!! என்றவன் “என்னது சண்டேவா ரொம்ப கஷ்டம்டா என்னால வரமுடியாது. நான் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு கிளம்பறேன் தெரியும்ல உனக்கு என்றான் மற்றவன்.

 

 

“அதான் நீ சண்டே வந்திடுவல ப்ளீஸ்டா கண்டிப்பா வாடா… வெள்ளிக்கிழமை காலையில நடந்தே கோவிலுக்கு போறவங்க சனிக்கிழமை சாமியை பார்த்திடுவீங்க தானே

 

 

“அன்னைக்கு நைட் பஸ் பிடிச்சா சண்டே இங்க இருக்க போற… வேணா ஒண்ணு செய் கொஞ்சம் லேட்டா வேணா வா… ஆனா ப்ளீஸ் வந்திடுடா நீ இல்லனா அங்க கச்சேரி களைக்கட்டாதுடா என்றான் கணேஷ் கெஞ்சலாக.

“எனக்கு ரெஸ்ட் வேணாமாடா, நான் நடந்தே போறேன்டா பழனிக்கு என்றான் பிரணவ்.

 

 

“அதான் சண்டே லேட்டா வான்னு சொல்லிட்டனேடா. திங்கள்கிழமை பப்ளிக் ஹாலிடே வேற வருது. அப்புறம் என்னடா!! ஒழுங்கா மரியாதையா வந்து சேரு என்றான் கணேஷ் இப்போது கெஞ்சுதலை விட்டு.

 

 

“சரி பார்ப்போம்…. நீ முதல்லஎன்லீவ் அப்ரூவ் பண்ணு என்றவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

 

 

மனோபாரதியின் வீட்டில கெட்டுகெதருக்கு எல்லாம் அனுப்ப முடியாது என்றுவிட அவள் உடன் பணிபுரியும் அவள் தோழி அவளின் வீட்டில் வந்து கேட்க அதன் பின்னே தான் மனோவிற்கு அனுமதி கிடைத்தது.

 

 

ஞாயிறு ஒருவித உற்சாகத்துடனே மனோபாரதி அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றாள். அலுவலகத்தில் இருந்து கம்பெனி வண்டியில் அவர்கள் ஈசிஆரில் இருக்கும் ரிசார்ட்டுக்கு செல்வதாக இருந்தது.

 

 

ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று குதூகத்துடனே அவர்கள் பயணம் இனிமையாய் துவங்கியது. முதலில் தயங்கினாலும் மனோவும் மற்றவர்களுடன் சேர்ந்து கைத்தட்டினாள்.

 

 

ஒரேடியாய் ஒட்டி உறவாடவில்லை ஆனால் உற்சாகம் காட்டினாள். அவளுக்கு தான் யாரோ அவளை பார்த்துக் கொண்டிருப்பதாக அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருந்தது.

 

 

பிரணவ் அந்த பயணத்தில் இல்லாதது அவளுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது. அவனிருந்தால் அவன் சத்தம் தான் அதிகம் அங்கு கேட்டிருக்கும். அவளாலும் இயல்பாய் இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!!

 

 

கடைசியாய் அவன் அவளுடன் பேசிய பிறகு அவனை அவள் அதிகம் சந்திக்க நேர்ந்ததில்லை. அப்படியே சந்தித்தாலும் அவள் தலைகுனிந்து சென்றுவிடுவாள். இரண்டு நாளாய் அவனை ஆளையே காணோம். அவனை நேருக்கு நேராய் சந்திக்காமல் போனாலும் அவன் குரல் ஓங்கி உரத்து ஒலிப்பது அவள் காதில் விழத்தான் செய்யும்.

 

 

இரண்டு நாளாய் சத்தம் இல்லாததால் அவன் விடுப்பில் இருக்கிறான் என்று அவளே முடிவு செய்து கொண்டாள்.

 

 

கணேஷ் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தான் பேருந்தில். மனோபாரதியிடம் இன்று எப்படியாவது தன் விருப்பத்தை தெரிவித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான்.

 

 

அலுவலகத்தில் அவளிடம் சொல்லலாம் என்றால் அவனுக்கு அவளை பார்த்தால் பேசவே வரவில்லை, ஒரு வேளை அலுவலகம் என்பதால் இருக்குமோ என்று எண்ணியவன் இந்த கெட்டுகெதரை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான்.

 

 

அவன் பார்வை தான் அவ்வப்போது மனோபாரதியின் மேல் விழுந்துக் கொண்டிருந்தது. எல்லோரிடமும் பேசினாலும் சிரித்தாலும் அவன் பார்வை அவள் மேலேயே இருந்தது.

 

 

ரிசார்ட்டுக்கு சென்றதும் வேறு கிளையில் இருந்து வந்திருந்தவர்கள் புதிதாய் சேர்ந்தவர்கள் என்று ஒரு மணி நேரம் சிறிய அறிமுகப்படலம் நடந்து முடிந்தது.

 

 

அதன் பின்னர் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து விளையாடும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. அன்று முன் மாலை பொழுது வரை சந்தோசமாகவே கழிந்தது மனோவிற்கு.

 

 

மூன்று மணியளவில் தான் பிரணவ் வந்து சேர்ந்திருந்தான். அவன் வந்து சேர்ந்து பின்னே கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்க கூட்டம் அங்கு சென்றது. மனோவிற்கு கிரிக்கெட் பிடிக்காது என்பதால் அவள் அங்கு செல்லவில்லை.

 

 

பிரணவை பார்த்தாலே கூட சென்றிருக்க மாட்டாள் தான். போட்டி எல்லாம் முடிந்து களைப்பாய் இருந்தவர்கள் சற்று ஓய்வெடுத்தனர்.

ஆறு மணிக்கு மேல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு ஆண் மகனைக் கூட பெண்கள் இருக்கும் பக்கமே காணவில்லை. ‘என்னாச்சு எல்லாருக்கும் எங்க போயிருப்பாங்க என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட மனோ அவள் தோழியிடம் கேட்டாள்.

 

 

“எல்லாம் எங்க போயிருப்பாங்க தண்ணி பார்ட்டிக்கு தான். தண்ணின்னு சொன்னா போதுமே களைப்பு எல்லாம் அவங்களுக்கு பறந்தே போயிருக்கும் என்றாள் அவள்.

 

 

“என்ன தண்ணி அடிப்பாங்களா!!அப்போ நாம கிளம்புவோமா!! நாம இங்க எதுக்கு இருந்துகிட்டு என்றாள் மனோ.

 

 

“இன்னும் ரெண்டு மணி நேரம் இதெல்லாம் முடிஞ்சுரும். அப்புறம் நாம எல்லாரும் ஒண்ணா நாம வந்த பஸ்லேயே கிளம்பி போய்டலாம் சரியா என்று தோழிக்கு சொல்லிவிட்டு அப்பெண் நகர்ந்து சென்றுவிட்டாள்.

 

 

அந்த ரிசார்ட்டின் ஒரு மூலையில் மெல்லிய இசை தவழ்ந்துக் கொண்டிருக்க அங்கிருந்த இருக்கைகளில் பெண்கள் எல்லாம் சென்று அமர்ந்தனர்.

 

 

தண்ணி பார்ட்டியில் கலந்து கொள்ளாத சில ஆண் மக்களும் அவர்களுடன் அமர்ந்திருந்தனர். மனோ பக்கவாட்டில் திரும்பி பார்க்க பிரணவ் கையில் ஒரு பியர் பாட்டிலை வைத்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருந்தான்.

 

 

“ச்சே இவனுக்கெல்லாம் நல்ல புத்தியே வராதா!! என்று மெதுவாய் முணுமுணுத்துக் கொண்டாள் அவள். ஏதோ தோன்ற திரும்பி பார்த்த பிரணவ் அவளின் பார்வையை கண்டுகொண்டான்.

 

 

சும்மாயில்லாமல் கையில் இருப்பதை காட்டி வேண்டுமா என்று சைகையில் கேட்க அவளுக்கு கோபம் எகிறியது. பிரணவோ லேசாய் சிரித்துக்கொண்டு வேறு புறம் சென்றுவிட்டான். அப்போது தான் மனோவிற்கு ஒன்று உரைத்தது அது பிரணவிடம் தெரிந்த மாறுதல்.

 

 

மீண்டும் திரும்பி அவன் இருக்கும் திசை பார்க்க அவன் அங்கில்லை. அவள் கவனத்தை மீண்டும் இசையின் பக்கம் திருப்பியவள் சற்று நேரத்தில் தோழியை அழைத்து பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறினாள்.

 

 

“ஹேய் என்னோட வாப்பா தனியா போக கொஞ்சம் பயமாயிருக்கு என்றவளுடன் அவள் தோழியும் எழுந்து நடக்க இருவருமாக சென்றனர்.

 

 

தோழி அவளை உள்ளேவிட்டு வெளியே தங்கிவிட மனோ மட்டுமாக உள்ளே சென்றுவிட்டு வெளியில் வர தோழியோ சற்று தொலைவில் வேறு யாருடனோ பேசச் சென்றுவிட்டாள்.

 

 

மனோ ஒரு பெருமூச்சை வெளியேற்றி அவள் முன்னிருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். “பாரதி என்ற குரல் கேட்டு அவள் திரும்ப அங்கே கணேஷ் நின்றிருந்தான் சற்றே தள்ளாட்டத்துடன்.

 

 

கணேஷை கண்டதும் ஒரு திடுக்கிடலுடன் “என்… என்ன சார்?? என்றாள்.

 

 

“கொஞ்சம் இங்க உட்காரேன் என்று அருகில் இருந்த இருக்கையை அவன் சுட்டிக்காட்ட “பரவாயில்லை சார் நீங்க சொல்லுங்க என்றாள்.

 

 

“எப்படி… எப்படி… சொல்றதுன்னே தெரியலை!! என்றவனின் குரல் குழறலாக வந்தது.

 

 

“அப்போ நீங்க யோசிச்சு நாளைக்கு சொல்லுங்க நான் இப்போ கிளம்பறேன் என்றவள் விட்டால் போதுமென்று அங்கிருந்து நகரப்போக கணேஷ் சட்டென்று அவள் கையை பிடித்துவிட்டான்.

 

 

“சார் ப்ளீஸ் கையை விடுங்க எல்லாரும் பார்க்கறாங்க… என்றவளுக்கு பயம் மொத்தமாய் சூழ்ந்து கொள்ள அடிவயிற்றில் பிசைய ஆரம்பித்தது. அவனிடமிருந்து அவள் கையை உருவிக்கொள்ள முயல அவன் பிடியோ இறுகியது.

 

“ப்ளீஸ் பாரு… நான் சொல்றது கேளு… ஒரு பைவ் மினிட்ஸ் இரேன். உன் கையை விட்டா நீ ஓடிருவ. அப்புறம் நான் சொல்ல வந்ததை இன்னைக்கும் சொல்ல முடியாமலே போய்டும்என்றுவிட்டு நிறுத்தினான்.

 

 

மனோவிற்கு அவன் பேசியது எல்லாம் காதில்விழவேயில்லை அவளை கையை விடுப்பதிலேயே குறியாய் இருந்தாள். “சார் ப்ளீஸ் விடுங்க சார் எல்லாரும் தப்பா நினைப்பாங்க என்றவளுக்கு கண்கள் குளம் கட்டத் தயாரானது.

 

 

“ப்ளீஸ் பாரு நான் சொல்றதை கேளேன். இன்னைக்கு தான் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்திருக்கு. நான் இப்போவே சொல்லிடறேன் பாரு…

 

 

“பாரு ஐ லவ் யூ என்று சொல்ல அவள் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். கை கால்கள் எல்லாம் பயத்தில் நடுங்க ஆரம்பித்துவிட்டது. ‘கடவுளே என்னை இவனிடம் இருந்து காப்பாற்றேன் என்று மனதிற்குள் அரற்றினாள்.

 

 

பிரணவ் அப்போது தான் அந்த புறம் பார்க்க கணேஷ் பாரதியின் கையை பற்றி இருந்தது கண்ணில் விழுந்தது. ‘முட்டாள் இவன் என்ன லூசா இப்படி தான் கையை பிடிப்பானா. ஒரு வேளை லவ்வை சொல்றானோ

 

 

‘நல்ல நேரம் பார்த்தான் லவ்வை சொல்ல, இப்படி தான் தண்ணி அடிச்சிட்டு போய் ஒரு பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்லுவாங்களா என்று நினைத்தவன் ‘இவ சும்மா இருக்க மாட்டாளே லெப்ட் அன்ட் ரைட் வாங்குவாளே என்று அவளை நோக்க அவள் முகம் பயத்தில் வெளிறி போயிருந்தது.

 

 

அங்கு செல்லலாமா வேண்டாமா இவளுக்கு உதவி செய்தால் கூட திட்டுவாளோ என்று ஒரு கணம் தோன்றினாலும் இயல்பாகவே உதவும் குணம் கொண்ட அவன் மனம் அதை எல்லாம் தள்ளிவிட்டு அவர்களை நோக்கி செல்ல சொல்ல மனதின் குரலுக்கு படிந்து அவன் கால்கள் எட்டி நடைப்போட்டது அவர்களை நோக்கி.

 

கணேஷின் அருகில் வந்தவன் “கணேஷ் என்ன இது முட்டாள்த்தனம் பண்ணிட்டு இருக்க… அவங்க கையை விடு என்றான் அதட்டலாய்.

 

 

மனோவிற்கு ஆபத்பாந்தவனாய் அவன் வந்தது பெரும் நிம்மதியை கொடுக்க அவனை நோக்கி “அவரை என் கையை விட சொல்லுங்க… என்னென்னமோ பேசிட்டு இருக்காரு… என்றவளின் குரல் உடைந்திருப்பது பிரணவினால் உணர முடிந்தது.

 

 

கணேஷை பார்த்து முறைத்தவன் “விடு கணேஷ்…என்றுக்கொண்டே கணேஷ் பற்றியிருந்த அவள் கரத்தை மெதுவாய் விடுவித்தான். அவன் பற்றியிருந்ததில் அவள் கை கன்றி சிவந்து போயிருந்தது.

 

 

“டேய் இப்போ தான் என் லவ்வை அவகிட்ட சொன்னேன்டா. இருடா அவ என்ன சொல்றான்னு கேட்குறதுக்குள்ள ஏன்டா… என்று குழறலாய் பிரணவை பார்த்துக் கேட்டான்.

 

 

“உனக்கு தெரியும்ல நான் அவளை எவ்வளோ லவ் பண்ணறேன்னு. சொல்லுடா எனக்காக அவகிட்ட பேசு… என்று கணேஷ் சொன்னது தான் தாமதம் மனோ பிரணவை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.

 

 

‘அடேய்!! இவன் வேற சும்மா இல்லாம என்னைய கோர்த்துவிடுறான். இவளுக்கு நல்லது பண்ண வந்தா இவ என்னைய முறைக்கிறா!! என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டான் பிரணவ்.

 

 

“நீங்க லேடிஸ் எல்லாம் இருக்க இடத்துக்கு போங்க. இவனை நான் பார்த்துக்கறேன் என்ற பிரணவை மீண்டும் ஒரு முறை முறைத்துவிட்டு அங்கிருந்து வேகமாய் நகர்ந்தாள் அவள்.

 

 

கணேஷை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவனை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு அவன் திரும்பி வரும்போது மனோபாரதி அவள் கைப்பையுடன் அழுது வடிந்த முகத்துடன் எதிரில் வருவதையும் பின்னால் அவள் தோழி அவளை பின்தொடர்ந்து வருவதையும் கண்டு அருகில் சென்றான்…..

 

 

Advertisement