Advertisement

அத்தியாயம் –10

 

 

ராகவின் திருமணம் முடிந்த அன்றிலிருந்து விடுப்பு எடுத்திருந்தான் பிரணவ். திங்கள் அன்று தான் வேலைக்கே சென்றான். எப்போதும் அலுவலகத்தில் முதல் ஆளாய் உள்ளே நுழைபவன் அவனாய் தானிருப்பான்.

 

 

இன்று அவனுக்கும் முன்னதாய் வந்திருந்த கணேஷை புருவமுயர்த்தி ஆச்சரியமாய் பார்த்தான் பிரணவ். அவன் இருப்பிடம் சென்று அமர்ந்தவன் “என்னடா புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்கு போல என்றான் கணேஷை பார்த்து.

 

 

“டேய் நீ தான் ஒரு வாரமா ஆபீஸ்க்கே வரலையே அப்புறம் எப்படிடா சரியா கண்டுப்பிடிச்ச!! என்றான் கணேஷ் ஆச்சரியமாய்.

 

 

“அந்த பொண்ணு நீ தேடிகிட்டு இருக்கற பொண்ணு போல இருக்கா சரி தானே!! என்று அடுத்த அதிர்ச்சியை கொடுத்தான் பிரணவ்.

 

 

“அடேய் நீ என்ன இப்படி நான் நினைக்கிறது எல்லாம் சொல்லுற என்று மேலும் கண்களை விரித்தான் கணேஷ்.

 

 

“அதான் நீ டிரஸ் பண்ணியிருக்க லட்சணத்துலயே தெரியுதே!! எப்பவும் இவ்வளோ ஸ்மார்ட்டா நீ வந்ததில்லையே!! உன் ட்ரிம் செய்த தாடியை தியாகம் செஞ்சிருக்கன்னா அன்னைக்கு உனக்கு பிடிச்ச பொண்ண நீ பார்த்ததா அர்த்தம்ன்னு நீ தானேடா சொன்ன என்றான் பிரணவ்.

 

 

“அடப்பாவி அதை ஞாபகம் வைச்சு சொல்றியா!! என்று வியந்தான் கணேஷ்.

 

 

“அதெல்லாம் இருக்கட்டும் பொண்ணு யாரு எந்த டீம்!!

 

 

“நான் டிரஸ் பண்ணியிருக்கறது பார்த்தா தெரியலையா, அவ என் கண்ட்ரோல்ல இருக்க டீம் தான்டா என்றான் கணேஷ் வெட்கமாய்.

 

 

“கணேஷ் தயவு செஞ்சு ஒண்ணு சொல்றேன் தப்பா நினைக்காத… நீ வெட்கப்படுறேன்னு இப்படி எல்லாம் சிரிச்சு வைக்காதடா என்னால உன்னை பார்க்க முடியலை கொடுமையா இருக்கு என்ற பிரணவின் தோளில் இரண்டு அடியை வைத்தான் கணேஷ்.

 

 

கணேஷ் பிரணவின் ப்ராஜெக்ட் மானேஜர் அவனின் கீழ் யூஎஸ் மற்றும் ஆஸ்திரேலியா டீம் இயங்குகிறது. பிரணவ் அவனுக்கு ரிபோர்ட் செய்யும் டீம் லீடர். “ஆமா நீ லீவ் போட்டு போனீயே என்னாச்சு உன் நாடோடிகள் கதை என்றான் கணேஷ்.

 

 

“உனக்கு ரொம்ப தான் கொழுப்புடா நாங்க என்ன நாடோடிகள் படத்துல வர்ற மாதிரி அடிவாங்கிட்டா வந்திருக்கோம். கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது

 

 

“இனி விழற அடி எல்லாம் அவன் தான் வாங்கணும். எங்க கடமை முடிஞ்சு போச்சுப்பா என்றான் பிரணவ்.

 

 

“நல்ல நண்பன்டா உன்னை எல்லாம் நம்பி அவன் எப்படி கல்யாணம் பண்ணி ஊரைவிட்டு ஓடினான்னு எனக்கு தெரியலை

 

 

“அடேய் சத்தமா பேசாத நான் உடம்பு சரியில்லாம தான் லீவு போட்டிருந்தேன்னு எல்லாருக்கும் சொல்லி வைச்சிருக்கேன். நீ வேற போட்டு கொடுத்திறாத

 

 

“ஆமா ராகவோட அப்பா வந்து என்னை பத்தி விசாரிச்சாரா?? என்றான் கேள்வியாய்.

 

 

“இல்லைடா யாரும் வரலை

 

 

“இந்நேரம் வந்திருக்கணுமே அவரு. எங்க வீட்டுக்கே வந்து எங்கம்மாகிட்ட என்னை பத்தி கேட்டுட்டு போயிருக்கார். எனக்கு உடம்பு சரியில்லைன்னு எங்கம்மா என்னை பார்க்க விடாம அனுப்பிட்டேன்னு சொன்னாங்க

 

 

“இதுவரை வரலைன்னா இனிமே வருவார் என்று தன் போக்கில் சொல்லிக்கொண்டவன் அவன் மடிக்கணினியில் பார்வையை திருப்பி மெயில் பாக்ஸை செக் செய்ய ஆரம்பித்தான்.

 

 

“குட் மார்னிங் சார்… என்ற இனிமையான பெண் குரல் அருகே கேட்க நிமிர்ந்தவனின் முகம் அங்கு நின்றிருந்தவளை கண்டதும் சுருங்கியது. அவன் மனமோ ‘இவளா இவ பெரிய ரதி இல்லை என்று நக்கலடித்துக் கொண்டிருந்தது.

 

 

‘இந்த கணேஷ் இவளை பார்த்தா மயங்கி போய் நிக்குறான். அவ்வளோ வொர்த் இல்லையே என்று நினைத்துக்கொண்டு தன் உணர்வுகளை வெளியில் பிரதிபலிக்காமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

 

 

“பிரணவ் என்று கணேஷ் அழைக்க “எஸ் என்று சொல்லி அவனை நோக்கி திரும்பினான்.

 

 

“நான் சொன்னேன்ல புதுசா சேர்ந்திருக்காங்கன்னு. பேரு மனோ பாரதி யூஎஸ் டீம்ல இருக்காங்க என்று சொல்லி பிரணவிற்கு அறிமுகம் கொடுத்தவன் “மனோ இவர் தான் பிரணவ் நம்ம ஆஸ்திரேலியா டீம் லீட் பண்ணுறவர் என்று அறிமுகம் கொடுத்தான்.

 

 

“ஹலோ… என்றவள் கணேஷின் முகம் பார்த்தே அதை சொன்னாள்.

 

 

‘நான் என்ன பண்ணேன் இவளை ரொம்ப ஓவரா தான் பண்ணுறா என்று நினைத்துக்கொண்டவன் பதிலுக்கு ஒன்றுமே சொல்லாமல் அங்கிருந்து எழுந்து போனான்.

 

 

மனோவிற்கு அவன் அப்படி சென்றது முகத்தில் அடித்தது போல் இருந்தது. முதலில் அவள் தான் அவனை கண்டுகொள்ளாமல் இருந்தாள் என்பதை மறந்து தனக்கு பதில் சொல்லாமல் எழுந்து சென்றவனை முறைத்தாள்.

 

 

“ரொம்பவும் திமிர் பிடிச்சவரா இருக்கார்… என்று கணேஷிடம் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

 

கணேஷ் “நீங்க நினைக்கிற மாதிரி… என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் நகர்ந்திருந்தாள்.

 

 

‘நம்ம பிரணவை பார்த்து திமிர் பிடிச்சவன்னு சொன்ன முதல் பொண்ணு இவளா தான் இருப்பா போல என்று எண்ணிக்கொண்டவன் அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

 

 

அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் மனோவிற்கு கணேஷிடம் இருந்து சர்குலர் மெயில் வந்திருந்தது. புதிதாய் சேர்ந்திருந்தவர்களுக்கு அன்று டிரைனிங் செஷன் இருப்பதாகவும் மூன்றாவது மாடியில் உள்ள மீட்டிங் ஹாயில் அசம்பிள் ஆகவேண்டும் என்ற மெயிலே அது.

 

 

கணேஷின் மெயிலுக்கு அக்சப்டன்ஸ் கொடுத்துவிட்டு அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். உணவு இடைவேளை முடிந்து அவள் மூன்றாவது தளத்திற்கு செல்ல லிப்ட் அருகே செல்லும் போது அங்கு பிரணவ் நின்றிருந்தான்.

 

 

அவனை பார்த்ததும் அவள் முகம் சுருக்கி படிகளில் ஏறப் போக “ஹலோ… என்றான் அவன்.

 

 

‘என்ன என்பது போல் அவனை திரும்பி பார்த்தாள். “என்ன பிரச்சனை உனக்கு?? எதுக்கு இப்படி முகத்தை திருப்பற நீ?? என்று நேரடியாகவே அவளை கேட்டுவிட்டான்.

 

 

‘கொழுப்பு பிடிச்சவன் கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காம நீ வான்னு பேசுறான் என்று எண்ணிக்கொண்டவள் “தெரியலை எனக்கு உன்னைக் கண்டா பிடிக்கலை என்று அவன் முகத்தில் அடித்தது போலவே திருப்பிச் சொன்னாள்.

 

 

பிரணவிற்கு உள்ளே சுருசுருவென்று வந்தது. அவனை யாரும் பிடிக்கவில்லை என்று முகத்திற்கு எதிரே சொன்னதில்லை. அவன் கோபத்தை அடக்கியவன் அவள் பிடித்தமின்மைக்கான காரணம் அறிய விழைந்தான்.

 

 

“காரணம்?? என்று கேள்வியாக்க “பிடிக்கலை காரணமெல்லாம் சொல்லணும்ன்னு எனக்கு அவசியமில்லை என்றவள் லிப்ட் திறக்கவும் உள்ளே நுழைந்து மூன்றாம் தளம் செல்ல வேண்டிய எண்ணை அழுத்தி கதவை மூடும் பொத்தானையும் அமுக்கினாள்.

 

 

ஒரு கர்டசிக்காக கூட அவனை உள்ளே அழைக்கவில்லை. பிரணவிற்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறியவன் மூன்றாம் தளத்தை வந்தடைந்தான்.

 

 

நேரே கணேஷை நோக்கிச் சென்றவன் “கணேஷ் இன்னைக்கு டிரைனிங் நான் எடுக்கலை நீயே பார்த்துக்கோ. எனக்கு தலைவலிக்குது என்றான்.

 

 

“டேய் என்னடா கடைசி நேரத்துல சொதப்புற நீ வந்த பிறகு டிரைனிங் செஷன் வைக்கணும்ன்னு தான் இவ்வளோ நாள் பேசாம இருந்தேன். இப்போ வந்து இப்படி சொல்றியேடா

 

 

“நீ எடுக்கப் போறேன்னு தான் நம்ம டீம் மெம்பர்ஸ் கூட செஷன் வரேன்னு சொன்னாங்க. ஏன்டா இப்படி லாஸ்ட் மினிட்ல சொதப்புற என்று பல்லைக் கடித்தான் கணேஷ்.

 

 

“நீ வேணா ஒரு மணி நேரம் செஷன் எடு. நான் அப்புறம் வந்து எடுக்கறேன் அதுக்குள்ள தலைவலி சரியாகிடுதா பார்ப்போம் என்றுவிட்டு பிரணவ் அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

கணேஷ் மீட்டிங் அறைக்கு செல்ல அங்கு மயான அமைதியாக இருந்தது. அவன் தான் டிரைனிங் எடுக்கப் போவதாக சொன்னதும் “சார் நீங்களா ஏன் சார் பிரணவ் தான் எடுப்பார்ன்னு சொன்னாங்க என்று ஆங்காங்கே குரல்கள் கேட்டது.

 

 

“ஹி இஸ் நாட் வெல், சோ ஐ ஹேவ் டேக் ஓவர் திஸ் டிரைனிங்… ப்ளீஸ் கோஆப்பரேட் மீ என்றுவிட்டு அவன் டிரைனிங் எடுக்க ஆரம்பிக்க சில மணித்துளியிலேயே எல்லாரும் சொக்கி விழ ஆரம்பித்தனர்.

மனோவிற்கு பிரணவ் தன்னால் தான் வரவில்லையோ என்று குற்றவுணர்வு தோன்றினாலும் அந்த அகராதி பிடித்தவன் போனால் நான் என்ன செய்ய முடியும் என்று தன்னையே சமாதானமும் செய்துக் கொண்டாள்.

 

 

கணேஷ் சார் டிரைனிங் கொடுக்க மாட்டாரா என்ன என்று எண்ணிக் கொண்டு கவனிக்க ஆரம்பித்திருந்தவளுக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. ஆனால் அதை செய்ய விடாமல் இந்த கணேஷ் வேறு அவளை பார்த்தே டிரைனிங் செஷனை எடுத்துக் கொண்டிருந்ததில் விழிக்க முடியாமல் அவள் கண்கள் வலிக்க ஆரம்பித்தது.

 

 

மனோவின் அருகே அமர்ந்திருந்தவளோ “பிரணவ் வந்திருந்தா எவ்வளோ நல்லா இருந்திருக்கும் சிரிக்க சிரிக்க செஷன் போயிருக்கும். இவரு ரொம்ப சீரியஸா எடுக்கறாரு

 

 

“இவரு தான் எடுப்பாருன்னு தெரிஞ்சிருந்தா நான் வேலையே பார்க்க போயிருப்பேனே என்று அங்கலாய்த்தாள் அவள்.

 

 

கணேஷிற்கும் என்ன தோன்றியதோ “எல்லாரும் கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கோங்க. பிரேக்கு அப்புறம் பிரணவ் கண்டினியூ பண்ணுவாரு என்றுவிட்டு நகர்ந்தான் அவன்.

 

 

வெளியில் வந்தவன் உடனே பிரணவிற்கு போன் அடித்தான் “அடேய் ஏன்டா என்னை மாட்டிவிடுற. நீ நல்ல பேரு வாங்குறதுக்கு எப்போ பார்த்தாலும் என்னைய முதல்ல டிரைனிங் எடுக்க விட்டிற

 

 

“நான் காலேஜ்ல கிளாஸ் எடுக்கற பழக்கத்துல எடுக்கறேன். எல்லா பயலும் தூங்குறானுங்க. என் ஆளு கூட பாவம் தூங்குதுடா, ப்ளீஸ் ப்ளீஸ் நீயே வந்து கண்டினியூ பண்ணுடா என்றான் பாவமாய்.

 

 

“உன் ஆளா யாரைடா சொல்ற?? என்றான் பிரணவ்.

 

 

“எல்லாம் அந்த மஞ்சக்காட்டு மைனா மனோ தான்டா என்றான் கணேஷ் லேசான சிரிப்புடன்.

 

அவன் பதிலை கேட்டு பிரணவிற்கு தான் எரிந்தது. அவ மஞ்சக்காட்டு மைனாவா அவ ஆளும் பேச்சும் என்று திட்டிக்கொண்டவன் “சரி வர்றேன் என்றுவிட்டு மூன்றாம் தளம் நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

 

 

அவன் வந்ததுமே அந்த செஷன் களைக்கட்ட ஆரம்பித்தது. கணேஷ் சொன்னதையே தான் அவனும் சொன்னான். ஆனால் அதை இன்னும் சுலபமாய் எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அவன் சொன்னவிதம் உண்மையிலேயே அவளுக்கும் பிடித்தது.

 

 

‘எனக்கு ஏன் இவனை பிடிக்கலை என்ற சுய ஆராய்ச்சியில் ஈடுபட்டாள் அவள். ஏனோ அன்று அவனை பார்த்த போதே அவளுக்கு அவனை பிடிக்காமல் போனது.

 

 

காரணம் பத்தாவது வரை கிராமத்திலேயே படித்து வளர்ந்த அவளுக்கு சென்னையின் சில பழக்க வழக்கங்கள் இன்னமும் அத்துபடியாகவில்லை.

 

 

சில பல காரணங்களுக்காக மனோவின் குடும்பம் வேருடன் சென்னைக்கு குடிபெயர்ந்திருந்தது. ஆண்களிடம் பேசாமல் எல்லாம் அவர்கள் இருந்ததில்லை ஆனால் பெண்களின் தோளில் இயல்பாய் கைபோட்டு பேசும் வழக்கம் எல்லாம் அங்கில்லை என்பதாலேயே அவனை கண்ட மாத்திரத்தில் அவளுக்கு பிடிக்காமல் போனது.

 

 

கிரண் அவனை அண்ணா என்றழைத்தது காதில் விழுந்திருந்தாலும் அந்த இயல்பு ஏனோ அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் முதல் நாள் அவள் தந்தைக்கும் அவளுக்குமான உரையாடல் அவள் எண்ணத்தில் வந்து போனது.

 

____________________

 

 

“என்ன பாப்பு யாரை இப்படி கோவமா பார்க்குற?? என்ற தந்தையின் குரலில் கலைந்தவள் “அங்க இருக்கறவங்களை தான் பார்த்திட்டு இருந்தேன்ப்பா என்று அவர்களை சுட்டிக்காட்டி கூற அவள் தந்தைமகள் காட்டிய திசையை பார்த்தாள்.

 

 

“அங்க என்னம்மா இருக்கு விசேஷமா??

 

 

“ஒண்ணுமில்லைப்பா நீங்க ஆட்டோ பிடிங்க பேசிட்டே போவோம் என்று அவள் கூற இருவருமாக ஆட்டோ ஏறினர்.

 

 

“இப்போ சொல்லுடா என்றார் அவள் தந்தை.

 

 

“அவங்களுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கப்பா திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணி வைக்கறாங்க. அதுலயும் அந்த கல்யாணத்தை பண்ணி வைக்குறானே அவனை பார்த்தா ரவுடி போல இருக்கான்

 

 

“எவ்வளவு தைரியம் அவங்களுக்கு இதெல்லாம் எங்க போய் முடியுமோ!! என்று அங்கலாய்த்தாள் அவள்.

 

 

“ஏம்மா எய்தவன் இருக்க அம்பை நோவானேன்னு சொல்வாங்களே நீ கேள்விப்பட்டதில்லையா!!

 

 

“விரும்பினது அந்த பொண்ணும் பையனும், கல்யாணம் பண்ணி வைச்சவர் அவங்களுக்கு ஏதோ நட்பா இருக்கலாம். நட்புக்காக அவங்க செய்த உதவியை தப்பா எப்படிம்மா சொல்ல முடியும்

 

 

“அப்பா உங்களுக்கு தான் லவ் எல்லாம் பிடிக்காதே நீங்க எப்படி அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க என்று முகத்தை சுருக்கினாள் மகள்.

 

 

“நான் லவ்க்கு எல்லாம் எதிரி இல்லைம்மா. ஒண்ணா கைபிடிச்சி நடக்கறது, பைக்ல ஊர் சுத்துறது இதெல்லாம் தான் லவ்ன்னு நினைச்சு சுத்துறவங்களை தான் எனக்கு பிடிக்காது

 

 

“இவங்க என்ன இருந்தாலும் பெத்தவங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணியிருக்க கூடாது தான் ஒத்துக்கறேன். அதுக்காக நட்புக்கு உதவி செஞ்சவங்களை எப்படிம்மா தப்பா சொல்ல முடியும்

 

 

“உனக்கு அந்த பையனை பார்த்ததும் பிடிக்காம போச்சு போல அதான் எல்லாமே தப்பா தெரியுது. அந்த பையன் ஒண்ணும் அப்படி ரவுடி போல எல்லாம் இல்லையேம்மா என்றார் அவள் தந்தை.

 

 

“என்னப்பா நல்லா இருக்கான் அவன். அவன் ஆளும் முடியும் தாடியும் சகிக்கலை. அவனை பார்த்தா ரவுடி போல தான் இருக்கு என்று முகத்தை சுளித்தாள் அவள்.

 

 

“ஏம்மா அவரை பார்த்தா படிச்ச பிள்ளையா தெரியறார். அந்த முடி தாடி எல்லாம் எதாச்சும் கோவிலுக்கு வேண்டி இருப்பாங்களா இருக்கும். வேண்டுதல் முடிஞ்சதும் எடுத்திருவாங்களா இருக்கும்

 

 

“அந்த தம்பிக்கு உண்மையாவே தைரியம் அதிகம் தான். தப்பே செஞ்சாலும் அதை சமாளிக்கற தைரியம் இருக்கணும். அவங்க பேசினது நானும் கேட்டேன் அந்த தைரியம் அவங்ககிட்ட இருக்குடா

 

 

“நீ கூட இப்படி தைரியமா எல்லாம் செய்ய கத்துக்கணும் எப்போ பார்த்தாலும் அப்பா பின்னாடி அம்மா பின்னாடி ஓடி ஒளியக்கூடாதுடா என்றார் மகளிடம்.

 

 

“போங்கப்பா இப்படி குருட்டு தைரியம் ஒண்ணும் எனக்கு தேவையில்லை. நான் என்ன கோழையான பொண்ணாவா இருக்கேன். அதெல்லாம் தனியா காலேஜ் போய் இதோ நாளையில இருந்து நானே தனியா வேலைக்கும் போக போறேன் என்றாள் கெத்தாக.

 

 

“நீ தனியா காலேஜ் போறதும் வேலைக்கு போறதும் தைரியம் இல்லைடா. எந்த பிரச்சனையும் தனியா சமாளிக்கற தைரியத்தை பத்தி நான் சொன்னேன்

 

 

“அட அதை விடுங்கப்பா சும்மா தேவையில்லாததை பத்தி பேசிட்டு வீடு வந்திருச்சு பாருங்க என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

 

____________________

 

 

அவள் நினைவு கலைந்து பிரணவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். வெகு நேரமாய் அவன் அவளை அழைப்பதை கூட உணரவில்லை. அவளருகில் இருந்த பெண்ணொருத்தி அவள் தோளைத் தட்டவும் என்ன என்பது போல் அவளை திரும்பி பார்த்தாள்.

 

 

“பிரணவ் சார் ரொம்ப நேரமா உங்களை கூப்பிட்டார் நீங்க எங்க வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க?? எனவும் குற்றவுணர்ச்சியாக அவனை நிமிர்ந்து நோக்கினாள்.“சார் எனவும் அவன் “இட்ஸ் ஓகே என்றுவிட்டு மற்றவர்களை பார்த்து பேச ஆரம்பித்துவிட்டான்.

 

 

‘அச்சோ இவன் திட்டியிருந்தா கூட பரவாயில்லையே. ஒண்ணுமேயில்லைங்கற மாதிரி பார்த்தா என்ன அர்த்தம். நமக்கு வேற ஆப்பு எதுவும் ரெடியா வைச்சிருப்பானோ என்று எண்ணிக் கொண்டே கவனிக்க ஆரம்பித்தாள்.

 

 

பிரணவிற்கு அவள் மேல் இருந்த கடுப்பில் கண்டிப்பாக திட்டியிருப்பான். அவனுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு யாரை திட்டுவதாக இருந்தாலும் தனியாக கூப்பிட்டு திட்டுவதோ அறிவுரை சொல்வதோ வைத்துக் கொள்வான்.

 

 

மற்றவர் முன்னிலையில் அதை சொல்ல மாட்டான். அதனாலேயே அவள் கவனிக்காமல் விட்டதை கண்டுகொள்ளாமல் இருந்தான். ‘இந்த கணேஷ்கிட்ட சொல்லி அவளை திட்டச் சொல்லணும் என்று நினைத்துக் கொண்டான்.‘என்னை பார்த்து பிடிக்கலைன்னு சொன்னவகிட்ட நான் ஏன் பேசணும் என்று எண்ணிக் கொண்டான்.

 

 

டிரைனிங் செஷன் முடிந்ததும் கணேஷிடம் சொல்ல அவன் திட்டிய லட்சணத்திற்கு சொல்லாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது பிரணவிற்கு. திட்டச் சொன்னால் அவளிடம் பேச சாக்கு கிடைத்தது என்று எண்ணி அவன் பேச ஆரம்பித்ததை பார்த்த பிரணவிற்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.

 

 

ஒரு இரண்டு நாள் சென்றிருக்கும் ரிஷப்ஷனில் இருந்து அவனுக்கு போன் வந்தது அவனை பார்க்க யாரோ வந்திருப்பதாக, வந்தவரின் பெயரை கேட்டதும் புரிந்து போனது அவர் ராகவின் தந்தை என்று.

 

ஐந்து நிமிடம் இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடி யோசித்தான் அவரிடம் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று யோசித்த பின் இருக்கையை விட்டு எழுந்து வரவேற்ப்பை நோக்கிச் சென்றான்.

 

 

கதவை திறந்ததும் அவரை பார்த்து சினேக புன்னகை சிந்தியவாறே நடக்க அங்கு மனோவும் வந்து சேர்ந்தாள். “ஹலோ அங்கிள் என்று சொல்லி அவரருகே சென்றவளை பார்த்து பிரணவிற்கு தான் மூச்சடைத்தது.

 

 

‘அடடா இவளுக்கு இவரை தெரியுமா முன்னாடியே அப்போ ராகவ் மேட்டர் இவ போட்டு கொடுத்திருப்பாளோ… என்ன செய்ய… என்று யோசித்தவன் ‘எதுவா இருந்தாலும் அவர் என்ன பேசுறாருன்னு கேட்டுட்டு அப்புறம் பதில் சொல்லுவோம் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

 

 

அவரருகில் நின்றிருந்த மனோவை ‘உனக்கிங்கே என்ன வேலை என்பது போல் ஏற இறங்க பார்த்து வைத்தான். அவன் பார்வை குற்றம் சாட்டுவதாய் இருக்க தன்னையுமறியாமல் அவனுக்கு பதில் கொடுத்தாள்.

 

 

“அங்கிள் போன வாரம் இங்க வந்திருந்தாரு என்கிட்ட தான் உங்களை பத்தி கேட்டாரு. நீங்க உடம்பு சரியில்லாம லீவ்ல இருக்கீங்கன்னு கணேஷ் சார் சொன்னாரு நான் தான் அங்கிள்கிட்ட சொல்லி இந்த வாரம் வரச் சொன்னன் என்று விளக்கம் கொடுத்தாள்.

 

 

‘அப்பாடா இவளுக்கு வேற எதுவும் தெரியலை என்று யோசித்துக் கொண்டவன் “சரி நீங்க போய் வேலையை பாருங்க நான் பார்த்துக்கறேன் என்று அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த பார்த்தான்.

 

 

அவளும் அங்கிருந்து நகர்ந்து செல்ல ஆரம்பித்தாள். “என்ன அங்கிள் என்னை தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க. ராகவ்கிட்ட சொல்லி ஒரு போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே

 

 

“என்னப்பா நீ தெரிஞ்சு கேட்கறியா!! இல்லை தெரியாம நடிக்கறியா!! என்றுவிட்டு அவனை ஆழம் பார்த்தார் எதிரிலிருந்தவர்.

 

 

“என்ன சொல்றீங்க அங்கிள் எனக்கு புரியவேயில்லை என்று உலகமகா நடிப்பை அரங்கேற்றிக் கொண்டிருந்தான் பிரணவ்.

 

 

“அப்போ உன் பிரண்டு ஒரு பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இழுத்திட்டு ஓடின விஷயம் உனக்கு தெரியாதுங்கற அப்படி தானே!! என்றவரின் குரலில் லேசாய் சோகம் எட்டிப்பார்த்ததோ என்று தோன்றியது அவனுக்கு.

 

 

‘ச்சே இவருக்கு தெரியாம செஞ்சிருக்க கூடாதோ சொல்லிருவோமா நாம தான் செஞ்சு வைச்சோம்ன்னு என்று ஒரு கணம் ஒரே ஒரு கணம் அவனுக்கு தோன்ற மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

 

 

“என்ன!! என்ன சொல்றீங்க அங்கிள் எனக்கு ஒண்ணுமே தெரியாதே. அவன் ஏதோ வேலை விஷயமா அலைஞ்சுட்டு இருந்தான் அங்கிள். கவர்மென்ட் எக்ஸாம் எல்லாம் எழுதிட்டு இருந்தான். அந்த பிஸில அவன் எங்ககிட்ட சரியாவே பேசலையே அங்கிள்

 

 

“கடைசியா நான் அவன் கிட்ட பேசி ஒரு மூணு மாசம் இருக்கும் அங்கிள். அவன் எக்ஸாம்க்காக மதுரை போயிருந்தான்ல அப்போ தான் என்கிட்ட பேசினான்

 

 

“நானும் ஆன்சைட்க்காக ஆஸ்திரேலியா போயிருந்தேன் அங்கிள் வந்து ஒரு பதினைஞ்சு இருபது நாள் தான் ஆகுது. அங்க போயிட்டு வந்தது உடம்புக்கு ஒத்துக்காம இந்த ஒரு வாரமா லீவ் போட்டு வீட்டில தான் இருந்தேன் அங்கிள் என்றான்.

 

 

அவன் பதிலில் அமைதியானவர் “ஏன்பா அவனுக்கு இப்படி எல்லாம் புத்தி போகுது. இதெல்லாம் குடும்பத்துல பழக்கமில்லைன்னு தெரியாதா எதுக்கு இப்படி செஞ்சான்

“எங்களை அவமானப்படுத்திட்டு போய்ட்டான்ல. அவனை நேர்ல பார்த்தேன் அவன் கையை காலை வெட்டிப் போடாம இருக்க மாட்டேன் என்றவரின் குரல் ஆவேசமாய் ஒலித்தது.

 

 

‘இப்படி எல்லாம் வெட்டுவேன் குத்துவேன்னு நீங்க சொல்றதுனால தானே அவன் இப்படி செஞ்சிட்டான் என்று எண்ணிக் கொண்டு அமைதியாய் இருந்தான்.

 

 

“சரிப்பா அவன் உன்னை காண்டக்ட் பண்ணா என்கிட்ட சொல்லு. உன் பிரண்டாச்சேன்னு அவனுக்கு சப்போர்ட் பண்ணிடாதே. ஆமா அந்த பையன் முகுந்தனுக்கு தெரிஞ்சிருக்குமா என்றார்.

 

 

“முகுந்தன் எங்களோட காண்டக்ட்லையே இல்லையே அங்கிள். அவனுக்கு தெரிஞ்சிருக்குமான்னு எனக்கு தெரியலை அங்கிள் என்றான்.

 

 

“சரிப்பா நான் கிளம்பறேன் என்றுவிட்டு அவர் கிளம்பி செல்லவும் தான் அவன் ஆசுவாசமானான்.

 

 

உள்ளே திரும்பி நடக்கச் செல்ல “எதுக்கு அவர்கிட்ட பொய் சொன்னீங்க?? என்று அவன் முன் வந்து நின்றாள் மனோ.“அவர் கேட்டது அன்னைக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைச்சவர் தானே என்று அடுத்து பேச ஆரம்பித்தாள்.

 

 

“உன் வேலையை மட்டும் நீ பாரு. என்கிட்ட கேள்வி கேட்கற வேலை எல்லாம் வைச்சுக்காத என்றுவிட்டு நகர்ந்தவனை வழி மறித்து “நான் அவரை நிறுத்தி உண்மையை சொல்லிருவேன் என்றாள் மிரட்டலாய்.

 

 

“போய் சொல்லிக்கோ அவரை எப்படி சமாளிக்கணும்ன்னு எனக்கு தெரியும் நான் பார்த்துக்கறேன் என்று அவளுக்கு திமிராய் பதில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

 

 

“எவ்வளவு அகம்பாவம் இவனுக்கு, அகராதி பிடிச்சவன்… என்று சத்தமாகவே முணுமுணுத்தாள் அவள்.

 

Advertisement