Advertisement

அத்தியாயம் – 1

 

 

கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்

 

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலாகாந்தா த்ரிலோக்யம் மங்களம் குரு

 

என்ற வெங்கடேச சுப்ரபாதம் அதிகாலை நேரத்தில் திருப்பள்ளியெழுச்சியாய் பக்தி மணம் பரப்ப பொங்கி வந்த பாலை கண்டு அடுப்பை மெல்ல அணைத்தாள் மனோ.

 

 

அவளின் குழந்தை அபராஜித் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான். காய்ச்சிய பாலை தம்ளர்களில் ஊற்றி கொண்டு அங்கிருந்த இருவருக்கும் கொடுத்துவிட்டு வெளியில் சென்றாள்.

 

 

“ஹேய் கௌசி பாரேன் யாரோ உன்னை கூப்பிடுறாங்க… என்றான் கௌசல்யாவின் கணவன் ராமசந்திரன்.

 

 

வேலையாய் இருந்த கௌசல்யா “ஆமா உங்களையும் தான் ராமான்னு கூப்பிடுறாங்க போக வேண்டியது தானே!! என்று கழுத்தை வெட்டினாள்.

 

 

“என் பேரு சந்துருடி… என்றான் அவன்.

 

 

“ராமசந்திரன்… என்று முழுப்பெயர் கூறினாள் அவன் மனையாள்.

 

 

“சரி சரி விடு… பக்கத்து வீட்டுக்கு யாரோ புதுசா குடி வந்திருக்காங்க போல… பரவாயில்லை காலையில பக்தி பாட்டெல்லாம் போடுறாங்க. வந்திருக்கவங்க கொஞ்சம் வயசானவங்களோ என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு மணி சத்தம் கேட்டது.

 

 

“ஹேய் இந்த நேரத்துல யாருடி வர்றாங்க… நீ போய் பாரு… என்று அங்கிருந்து நழுவப் பார்த்தான் அவள் கணவன்.

 

 

“என்ன விளையாடுறீங்களா!! நீங்களே போய் பாருங்க, நான் அடுப்புல வேலையா இருக்கேன் என்றாள் கௌசல்யா.

 

 

“ரொம்ப தான்ம்மா வேலை பார்க்குறேன்னு வேலை பார்க்குறேன்னு சொல்லி ஓவரா பண்ணிக்குற என்று முனகியவாறே கதவை திறக்க சென்றான் அவள் கணவன்.

 

 

வாசலில் இளம்பெண் ஒருத்தி கையில் தம்ளருடன் நிற்க ‘என்ன என்பது போல் அவன் அப்பெண்ணை ஏறிட்டான். “வீட்டில என்றவள் “அண்ணா வீட்டில யாருமில்லையா என்றாள்.

 

 

‘என்னை பார்த்தா இவளுக்கு மனுஷனா தெரியலியா என்று யோசித்துக் கொண்டே “கௌசி இங்க வா என்றழைத்தான்.

 

 

‘இந்த மனுஷனுக்கு நொடிக்கொரு தரம் என்னைய கூப்பிடாம இருக்கவே முடியாது போல என்று நினைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள் கௌசல்யா.

 

 

“நான் பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கேன். நீங்க மட்டும் தான் சீக்கிரம் எழுந்துட்டீங்க போல. பால் காய்ச்சியாச்சு அதான் கொடுத்திட்டு போகலாம்ன்னு வந்தேன் என்றாள் அப்பெண் மனோ.

 

 

“வாங்க உள்ள வந்து உட்காருங்க என்றாள் கௌசல்யா வரவேற்கும் விதமாய்.

 

 

“இல்லை வீட்டில இன்னும் திங்க்ஸ் எல்லாம் அடுக்காம இருக்கு. நான் தான் போய் பார்க்கணும், டைம் கிடைக்கும் போது வர்றேன் என்றவள் பால் தம்ளரை நீட்டினாள்.

 

 

“தேங்க்ஸ்மா… உங்க பேரு என்றாள் கௌசல்யா.

 

 

“மனோ… என்றாள் அவள்.

 

 

“நீங்க…

“கௌசல்யா… கௌசல்யா ராமசந்திரன், எங்களுக்கு ஒரு பொண்ணு மயூரி என்றாள்.

 

 

“சூப்பர் ரொம்ப அழகான பேரு உங்க பொண்ணுக்கு என்றுவிட்டு நகர்ந்தாள் மனோ.

 

 

‘அச்சோ அந்த பொண்ணை பத்தி நாம விசாரிக்கவே இல்லையே. இன்னொரு நாள் பார்த்துக்கலாம் என்று நினைத்துகொண்டு உள்ளே சென்றுவிட்டாள் கௌசல்யா.

 

 

மீண்டும் வீட்டிற்கு வந்த மனோவிற்கு செய்வதற்கு நெறைய வேலை இருந்தது. வீட்டை ஒதுங்க வைத்து இடம் பார்த்து ஒவ்வொன்றையும் அடுக்கி முடித்து எலக்ட்ரீஷியனை அழைத்து டியூப்லைட் மாட்டி பேனை மாட்டி என்று எல்லாம் முடிக்க மதியத்திற்கு மேல் சென்றுவிட்டது.

 

 

மனோவும் அவள் உடனிருந்தவளும் ஆளுக்கொரு வேலையாக பார்த்து பார்த்து செய்ததில் வேலை சற்று விரைவாகவே முடிந்து போனது.

 

 

உடன் வந்திருந்தவன் மனோவுக்கும் அவளுடன் இருந்த மற்றொரு பெண்ணுக்கும் உணவு வாங்கி கொடுத்து அவனும் சாப்பிட்டு அப்பெண்ணும் அவனும் மாலை மனோவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

 

 

உள்ளிருந்து அபராஜித் அழும் குரல் கேட்க மனோவின் கால்கள் உள்ளறையை நோக்கிச் சென்றது.

 

 

“அஜிகுட்டி என்னடா அம்மா தேடுனீங்களா நீங்க… அம்மா கொஞ்சம் பிசிடா செல்லம்… சாரி குட்டிப்பா… உங்களுக்கு என்ன வேணும் மம்மம் வேணுமா இல்லை சாச்சு வேணுமா… என்று குழந்தையுடன் கொஞ்சி கொண்டே அவனை கையில் தூக்கினாள் மனோ.

 

 

“ம்மா… ம்மா… என்ற குழந்தை அவள் தூக்கியதும் தன் பொக்கை வாய் கொண்டு அவளை பார்த்து கள்ளமில்லாமல் புன்னகை சிந்தியது.

“உன்னை பார்த்திட்டு இருந்தாலே போதும்டா அஜிக்குட்டி… அம்மாக்கு எல்லா கவலையும் மறந்திடும்டா… என்றவள் குழந்தையுடன் சமையலறைக்கு சென்றாள்.

 

 

“அஜிம்மா நீங்க வாக்கர்ல இருங்க… உங்களை தூக்கி வைச்சுட்டே அம்மா வேலை பார்க்க முடியாது என்றவள் குழந்தையை வாக்கரில் வைத்து அவளுடன் அழைத்து சென்றாள்.

 

 

குழந்தைக்கு கஞ்சி காய்ச்சி எடுத்துக் கொண்டவள் வாக்கரை தள்ளிக்கொண்டு வெளியில் வந்தாள். கஞ்சியை ஆறவைத்து குழந்தைக்கு ஊட்டிய பின்னர் தான் கொஞ்சம் அக்கடா என்றிருந்தது அவளுக்கு.

 

 

அவள் கைபேசி சிணுங்கவும் அதை எடுத்து வந்தவள் “ஹலோ… என்றவாறே காதில் வைத்தாள்.

 

 

“ஹ்ம்ம் வந்தாச்சு… எல்லாம் அடுக்கியாச்சு…

 

 

“அஜிகுட்டி இப்போ தான் சாப்பிட்டான்….

 

 

“அதுக்கென்ன பண்ண முடியும் எல்லாம் என் தலையெழுத்து…

 

 

“தப்பு பண்ணா அதுக்கான தண்டனையை அனுபவிச்சு தானே ஆகணும்

 

 

“வருத்தப்படாம எப்படி இருக்க முடியும். இந்த அளவுக்கு ஏத்துக்கிட்டதே பெரிசு. கூட வந்து அவங்க ரெண்டு பேரும் தான் உதவி பண்ணாங்க…

 

 

“என்னால தான் கஷ்டம்… அவருகாச்சும் எனக்கு செய்ய உரிமை இருக்கு, ஆனா அவங்க என்னைய ஏத்துக்கிட்டது எவ்வளவு பெரிய விஷயம்

 

 

“எதையும் நினைக்காம இருக்க முடியலை… அப்புறம் உங்க சுகம் எப்படி?? என்று எதிர்முனையிடம் அவள் விசாரித்து கொண்டிருந்தாள்.

 

பத்து நிமிடம் பேசிய பின்னே போனை வைத்தவளுக்கு சோர்வாக இருந்தது. இரவு உணவு செய்ய வேண்டுமே என்ற அலுப்பும் வெளியே சென்று வாங்க முடியா சோர்வும் என்று அவளுக்கு லேசாய் தலைவலி தொடங்க ஆரம்பித்தது.

 

 

தலைவலி மாத்திரை ஒன்றை எடுத்து விழுங்கியவள் பாலை சூடாக்கி குடிக்கலாமென நினைத்து அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டாள். மனதிற்குள் ஏதேதோ எண்ணக்கலவைகள் ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்தது.

 

 

எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ தெரியாது புதிதாய் வீட்டில் மாட்டியிருந்த அழைப்புமணி வீட்டிற்கு யாரோ வந்திருக்கிறார் என்று இசைத்தது.

 

 

அதுவரையில் கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த அபராஜித்தை கையில் தூக்கிக் கொண்டே யாராய் இருக்கும் என்று எண்ணியவாறே கதவின் கண்ணாடி வழியாய் பார்த்தாள்.

 

 

யாரோ சேல்ஸ் ரெப் போல தோன்ற கதவில் இருந்த சங்கிலியை எடுத்து மாட்டிவிட்ட பின்னே கதவை திறந்தாள். வெளில் பிட்சா விற்பவர் நின்றிருக்க “சொல்லுங்க… என்றாள்.

 

 

“பிட்சா மேடம்… என்றான் அவன்.

 

 

“நான் ஆர்டர் பண்ணலையே?? பக்கத்துல விசாரிங்க… என்றுவிட்டு கதவை அடைக்க போனாள்.

 

 

“மேடம் மனோ தானே நீங்க?? என்றவன் வீட்டு எண்ணை மீண்டும் ஒரு முறை சரி பார்த்து கொண்டான்.

 

 

“ஆமா… என்றாள்.

 

 

“உங்க பேருக்கு தான் ஆர்டர் டெலிவரி பண்ண சொல்லி இருக்காங்க… என்றவன் பிட்சாவை எடுத்து நீட்டினான்.

 

‘யார் ஆர்டர் பண்ணியிருப்பாங்க என்று யோசித்துக் கொண்டே “எவ்வளவு ஆச்சு?? என்றாள்.

 

 

“ஆல்ரெடி பேமென்ட் ஆகிடுச்சு மேடம் என்றவன் லேசாய் புன்னகைத்து சென்றுவிட்டான்.

 

 

மனோவோ மனதிற்குள் பொரும ஆரம்பித்தாள். ‘வந்தப்பவே வாங்கி கொடுத்திட்டு போயிருக்கலாமே என்று எண்ணிக்கொண்டு கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தாள்.

 

 

“நான் இப்போ பிட்சா கேட்டேனா??

 

 

“அப்புறம் எதுக்கு வாங்கி அனுப்புனீங்க!! அவ்வளவு அக்கறை இருந்தா போகும் போதே வாங்கி கொடுத்து இருக்க சொல்லணும் என்று பொரிந்தாள்.

 

 

எதிர்முனை என்ன சொல்லியதோ சிறிது நேரத்தில் போனை வைத்துவிட்டு பிட்சாவையே வெறித்தாள். பசி வேறு வயிற்றை கிள்ளியது.

 

 

குழந்தை பிட்சா பாக்ஸ் அடங்கிய பெட்டியை ஏதோ விளையாட்டு சாமான் என்று எண்ணி இழுத்தது.

 

 

“அஜிக்குட்டி அது உன் பொம்மை இல்லைடா கண்ணா. அம்மாக்கு சாப்பாடுடா… என்றவள் பிட்சாவை பிரித்து உண்ண ஆரம்பித்தாள்.

 

 

சாப்பிட்டு முடித்த பின்னே தான் அவளின் பசியே அவளுக்கு தெரிந்தது. இரண்டு மீடியம் பிட்சா மொத்தமும் அவளே உண்டிருக்கிறாள் என்பது.

 

 

சாப்பிட்டு முடித்த பின்னே தான் அவளுக்கு தலைவலியே விட்டிருந்தது. பசியினால் வந்த தலைவலி போலும் தேவையில்லாமல் ஒரு மாத்திரை விழுங்கி விட்டோம் என்று எண்ணிக்கொண்டாள்.

 

 

மறுநாளில் இருந்து அவளின் தினசரி வேலை மீண்டும் ஆரம்பம். அதைப்பற்றி எண்ணிக்கொண்டு மறுநாள் வேலைகளை பட்டியலிட்டு முடித்தவள் தேவையானவற்றை எடுத்து வைத்தாள்.

 

 

அஜிக்கு பால் கொடுத்த பின்னே குழந்தை உறங்கிவிட அவளுக்கு உறக்கம் வர மறுத்தது. புது இடம் என்பதாலும் பல்வேறு யோசனைகளாலும் உறக்கம் அவளை மெதுவாகவே ஆட்க்கொண்டது.

 

 

இரவு வெகு நேரம் கழித்து உறங்கினாலும் காலையிலேயே எழுந்துவிட்டாள் மனோ. உறங்கும் குழந்தையை தூக்கி வந்து ஹாலில் பாய் விரித்து தன் கண் பார்வையில் படுக்க வைத்தவள் சமையலறைக்குள் புகுந்தாள்.

 

 

அதற்குள் குழந்தை எழுந்துவிட்டான் போலும். தூக்கத்தில் எதையோ கண்டு பயந்து அழுதான். அடுப்பை குறைந்த தீயில் வைத்துவிட்டு அவசரமாய் வெளியில் ஓடி வந்து குழந்தையை தூக்கினாள்.

 

 

மனோவை கண்டதும் தான் குழந்தை அழுகையை நிறுத்தியது. “என்னடா அஜிம்மா எதுக்குடா அழுதீங்க… அம்மா தேடுறீங்களா… அம்மா இங்க தான்டா வேலை செஞ்சுட்டு இருக்கேன்

 

 

“இன்னைக்கு அம்மா வேலைக்கு போகணும்ல… இப்போ நீங்க பால் குடிப்பீங்களாம், அப்புறம் கஞ்சி சாப்பிடுங்க என்றவள் தன்னை சுத்தப்படுத்தி வந்த பின்னே குழந்தைக்கு பாலை கொடுத்தாள்.

 

 

அஜியின் அழுகை இப்போது மட்டுப்பட்டிருந்தது. குழந்தை தூக்கி தோளில் போட்டு தட்டிக்கொடுத்தாள். “அஜி கண்ணா வாக்கர்ல இருங்க என்று சொல்லி குழந்தையை வாக்கரில் வைத்து தன் கண்பார்வையில் விளையாட விட்டாள்.

 

 

அவள் சமையலும் முடிந்துவிட கதவை லேசாய் திறந்து வைத்து குழந்தையை பார்த்துக்கொண்டே குளித்து முடித்தவள் பின் குழந்தையையும் குளிக்க வைத்து தயாராக்கினாள்.

 

 

முதல் நாளை குழந்தைக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்திருக்க இப்போ கஞ்சி மற்றும் பால் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அவளும் அவசரமாய் உடைமாற்றி வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு மற்றவற்றையும் தூக்கிக்கொண்டே வெளியில் வந்தாள்.

 

 

கதவை பூட்டிவிட்டு குழந்தையை முன் பக்கம் வைத்து கட்டிக்கொண்டவள் அவள் வண்டியில் கொண்டு வந்த பையை எல்லாம் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

 

 

முதலில் காப்பகத்திற்கு சென்று குழந்தையை அங்கே விட்டுவிட்டு குழந்தைக்கு தேவையானதை கொடுத்தாள். அவளின் செல்ல மகனுக்கு அன்னையை புரிந்தது போலும்.

 

 

அவளுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று அவன் கொஞ்சம் கூட அழவேயில்லை போலும். மனோவிற்கு தான் குழந்தையை விட்டு செல்வது அழுகையை கொடுத்தது.

 

 

தன்னை பார்த்து பொக்கைவாய் காட்டி சிரிக்கும் குழந்தையை தூக்கி ஒரு முறை முத்தம் வைத்தவள் அங்கிருந்து கிளம்பினாள். வேலை செய்யும் இடத்திற்கு வந்து சேரவும் வண்டியை அதனிடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.

 

 

அவள் வேலை செய்வது ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியையாக. இதற்கு முன் பார்த்த வேலைக்கும் இதற்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லை என்றாலும் இந்த வேலை அவளுக்கு பிடித்தே தான் இருந்தது.

 

 

யாருமற்று தனித்திருப்பதற்கு பதில் இவ்வளவு பேரை பார்த்துக் கொண்டிருப்பது அவள் மனதிற்கு இதமாக இருந்தது. அதனாலேயே இந்த வேலை அவளுக்கு பிடித்தமானதாக ஆனது.

 

 

உள்ளே சென்று ஸ்டாப் ரூமுக்கு சென்றவள் வகுப்பிற்கு தேவையான குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தாள்.

 

 

என்றென்றும் புன்னகை! முடிவிலா புன்னகை!

இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார் உயிரே!
தீம் தீம் தனன தீம் தனனன
காதலே எல்லையோ!!

 

என்ற பாடலுடன் பைக்கை ஒட்டி வந்தது நம் கதையின் நாயகன் அல்ல. மணிரத்தினத்தின் நாயகன் மாதவன் தான் தொலைக்காட்சியில் ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

 

 

வாட்சை திருப்பி மணி பார்த்தவன் பாடல் முடிந்த பின்னே தான் கிளம்ப வேண்டும் என்று அமர்ந்திருந்தார் போன்று சோபாவில் நன்றாக சாய்ந்து கொண்டு பாட்டை கேட்டு முடித்த பின்னே தான் எழுந்தான் அவன்.

 

 

வெளியில் வந்து அவன் நிறுத்தி வைத்திருந்த அப்பாச்சியை எடுத்துக்கொண்டே ‘எங்கே இன்னும் ராகவை காணோம் என்று நினைக்க அவன் உடனே வந்து கண் முன் நின்றான்.

 

 

“சாத்தானை நினைச்சா உடனே வருமாம் என்றான் அவன்.

 

 

“யாரைடா சாத்தான்னு சொல்லிட்டு இருக்க என்றான் ராகவ்.

 

 

“அடப்பாவி இன்னுமாடா உனக்கு புரியலை. சரியான டியூப்லைட்டா நீ!! என்றான் அவன்.

 

 

“டேய் பிரணவ் அப்போ நீ என்னை தான் சாத்தான்னு சொன்னியா!!

 

 

“அது தெரியாமலாடா இருந்தே. உன்னையலாம் எப்படிடா இந்த வேலைக்கு சேர்த்தாங்க. ரொம்ப கஷ்டம்டா என்றான் பிரணவ்.

 

 

“அதெல்லாம் அய்யா வேலையில கெட்டி, நீ வெட்டி பேச்சு பேசாம வா போவோம் என்ற ராகவ் வண்டியில் அவன் பின்னே ஏறி அமர்ந்தான்.

 

 

“ஏன்டா உன்கிட்ட கூட பைக் இருக்குடா

“ஆமா இருக்கு அதுக்கு யாரு பெட்ரோல் போடுறது

 

 

“என்னை பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது. மவனே உனக்கு இரு வைக்குறேன் ஆப்பு என்ற பிரணவ் “நீ நல்லா வருவே?? என்றுவிட்டு வண்டியை ஊசுப்பினான்.

 

 

அலுவலகம் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பிக்க பிரணவின் கைபேசி அழைத்தது.

 

 

காலங்களில் அவள் வசந்தம்..கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி..மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்..கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி..மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்..

 

என்ற பாடல் அடித்து முடிக்கவும் அவனருகே வந்தான் அவனுடன் வேலை செய்யும் அந்த வெள்ளைக்காரன்.

 

 

“ஹேய் வாட் சாங்இஸ் திஸ் மேன், சவுன்ட் இஸ் குட், வெரி பிளசன்ட். வை யுவர் நாட் அட்டென்ட்டிங் திஸ் கால் என்றான்.

 

 

“ஐ லைக் திஸ் சாங். சோஐ ஹேவ் நாட் அட்டென்ட் தி கால்

 

 

“தே வில் வெயிட் பார் யூ, ப்ளீஸ் கால் தெம்

 

 

“எஸ் யுவர் கரெக்ட் தே வில் வெயிட் பார் மி

 

 

“இப் யூ கெட்டிங் திஸ் கால் யுவர் பேஸ் சோ பிரைட் எனிதிங் ஸ்பெஷல் ஆர் தி பர்சன் இஸ் ஸ்பெஷல் என்று கண்ணடித்தான் அவன்.

 

 

‘டேய் இன்னைக்கு உங்களுக்கு நான் தானாடா கிடைச்சேன் என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டவன் லேசாய் ஒரு புன்னகை சிந்திவிட்டு போனை காண்பித்து பேச வேண்டும் என்பது போல் சைகை செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

போன் பேசிவிட்டு வந்தவன் முகம் மலர்ந்திருந்தது. ராகவ் அருகில் வந்தான். “என்னடா அந்த ஆட்டா என்ன கேட்டுட்டு போகுது உன்கிட்ட என்றான்.

 

 

“என்ன ஆட்டாவா?? என்று விழித்தான் பிரணவ்.

 

 

“அதான்டா அந்த மைதா மாவு என்றான்.

 

 

“வேறென்ன என்னோட ரிங்டோன் பத்தி விசாரிச்சுட்டு போறான்

 

 

“காலையிலேயே போனா!! கொடுத்து வைச்சவன்டா!! லவ் பண்ணிட்டே இருக்க ஜாலி தான் என்று பெருமூச்சுவிட்டான் ராகவ்.

 

 

“அடேய் ஏன்டா கண்ணு வைக்குற

 

 

“ரொம்ப கொடுத்து வைச்சவன்டா நீ எவ்வளவு வேலையா களைச்சு போய் இருந்தாலும் அந்த ரிங்டோன் கேட்ட மாத்திரத்துல உன் முகமே அப்படியே சாப்ட் ஆகிடுது

 

 

“அது ஏன்னு உனக்கு தெரியாதா!!”

 

 

“அப்படி ஒரு லவ்வான்னு தான் ஆச்சரியமா இருக்கு

 

 

“அதிலென்ன ஆச்சரியம் ராகவ். என்னை எப்பவும் மீட்டுற வீணை அந்த காதல் தான்.… அந்த வீணைக்கு தெரியாது அதை செய்தவன் யாரென்று…என்று கண்களில் காதல் வழிய பாடல் படித்தான் பிரணவ்.

 

 

‘எவ்வளவு சிக்கலான வேலையை பார்க்க வந்திருக்கான். இந்த ரணகளத்துலயும் இவன் குதூகலமா இருக்கானே என்று லேசாக புகைவிட்டான் அவன் நண்பன் ராகவ்.

Advertisement