சித்தார்த்தன் உள்ளே சென்றதும் சாரதா, “என்ன டா இதெல்லாம்?”
அவன் மென்னகையுடன் அவர் தோளை பற்றி, “நோ வொர்ரீஸ்.. அதான் நல்லபடியா முடிஞ்சிரிச்சே!” என்றான்.
சுதர்சன், “முன்னாடியே தெரியும்னா ஏன் இவ்வளவு தூரம் போக விட்ட?”
“ஒரேடியா முற்றுப்புள்ளி வச்சிரலாம் னு தான்” என்றவன், “கெளதம் தான் சரியான நேரத்திற்கு எல்லாத்தையும் செய்தான்” என்று கூறி நண்பனை பார்த்தான்.
கௌதமன், “நான் பெருசா எதுவும் செய்யலை டா”
சித்தார்த்தன், “சரி விடு.. விக்னேஷ் வைஃப் எப்படி இங்கே சரியான நேரத்திற்கு வந்தாங்க?”
“முந்தாநேத்து அவங்களை அவங்க அப்பா வீட்டில் போய் பார்த்து நம் கல்யாணத்தை பத்தி சொல்லி விக்னேஷ் செய்யும் காரியத்தை பத்தியும் சொன்னேன்.. ஆனா அவங்க நம்பலை.. நமக்கு வந்த தகவல் தப்புனும் அவன் இவ்வளவு தூரம் பண்ணமாட்டான்னும் சொன்னாங்க.. சரின்னு நான் கிளம்பிட்டேன்.. இன்னைக்கு வசந்த் வீட்டில் இருந்து கிளம்பிய போதே அவங்களுக்கு போன் பண்ணி விக்னேஷ் செயலை பற்றி சொன்னேன்.. அப்பறம் நான் இங்கே வந்ததும் அவங்களுக்கு திரும்ப போன் பண்ணிட்டேன்.. எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருந்தாங்க.. விக்னேஷ் குரலை கேட்டதும் கிளம்பி வந்திருப்பாங்க.. அவங்க அப்பா வீடு வசந்த் வீட்டிற்கு பக்கத்தில் தானே இருக்குது.. அதான் உடனே வந்திருப்பாங்க”
“நேரில் வந்து பார்த்துட்டு போனியா?”
“ஹ்ம்ம்”
“வசந்த்தை போக சொல்லியிருக்கலாமே! இதுக்குன்னு வந்துட்டு போனியா?”
“வசந்த் போனால் விக்னேஷ் சந்தேகம் வந்து சுதாரிச்சிட்டா! அதான் நானே வந்துட்டு போனேன்.. என்னை அவன் ஆட்களுக்கு தெரியாதே!”
கௌதமன் மென்னகைக்கவும், “உன்னை திருத்த முடியாது டா..” என்ற சித்தார்த்தன் பின், “குரங்கு கையில் கொடுத்த பூமாலை மாதிரி அவனுக்கு போய் இப்படி ஒரு அருமையான மனைவி” என்று கூறியதும்,
ஊர்மிளா, “அவங்களுக்கு நல்ல கணவனா இருக்கலாமே!” என்றாள்.
அவளை மெளனமாக ஒரு பார்வை பார்த்தவன், “சரி நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றுவிட்டு மாடியில் இருக்கும் தன் அறைக்கு சென்றான்.
முகத்தை அலம்பி ஈரத்துடன் வெளியே வந்தவன் அவள் கொடுத்த துண்டை வாங்காமல் அவளது புடவை முந்தானையில் முகத்தை துடைத்தான்.
முகத்தை துடைத்து முடித்தவன் அவளது முந்தானையை கையில் சுற்றி இழுத்தான். அவனது செய்கையை ரசித்துக் கொண்டிருந்தவள் அவனது இந்த தாக்குதலில் சிறு அதிர்ச்சியுடன் அவனது நெஞ்சில் தஞ்சமடைந்தாள்.
அவளை தனது அணைப்பில் வைத்தபடி, “எப்படி டி இவ்ளோ நல்லவளா இருக்கிற?”
“ஏன்?”
“நம்மளை இவ்வளவு படுத்தியவனிற்கு செர்டிபிகேட் கொடுக்கிற!” என்றான் சிறு முறைப்புடன்.
“நீங்க தானே அவர் காதல் கல்யாணம் செய்தவர் னு சொன்னீங்க! இன்னைக்கு கோபமும் வெறியுமாக அவர் இருந்த நிலை என்ன! ஆனா அவர் வைஃப் சொன்னதும் மன்னிப்பு கேட்டுட்டு போனதில் இருந்தே தெரியலையா!” என்றவள் சிறு முறைப்புடன், “ஒரு வாரம் கழிச்சு பார்க்கும் காதல் மனைவியிடம் பேசும் பேச்சா இது?” என்று அவனை திசை திருப்பும் நோக்கத்துடன் அவள் பேச, அது சரியாக வேலை செய்தது.
வசீகரமாக சிரித்தவன், “பார் டா! வேற என்ன பேசணும்?” என்றபடி அவள் நெற்றியில் முட்டினான்.
“எல்லாம் வெறும் பேச்சு தான்.. செயலை ஒன்………………….” என்று முறுக்கிக் கொண்டவளின் செவ்விதழ்கள் அவனது இதழ்களால் மூடப்பட்டது.
நீண்ட முத்தத்தை கொடுத்தவன், “இந்த பேச்சு ஓகே வா?” என்றபடி கண்சிமிட்டினான்.
அவள் செல்ல முறைப்புடன், “நான் பேச்சுன்னு சொன்னேன்” என்று அழுத்திக் கூறினாள்.
அவன் கண்ணில் குறும்புடன், “இதுவும் பேச்சு தான்.. உன் வாயும் என் வாயும் தானே பேசுச்சு!”
“நான் எதை சொன்னேன் னு உங்களுக்கு தெரியாதா?” என்று அவள் கண்ணை உருட்டவும்,
உல்லாசாமாக சிரித்தவன் அவள் கண்களை முத்தமிட்டு, “உன்னை வந்து கவனிக்கிறேன்டி என் செல்ல அம்லு” என்றுவிட்டு கிளம்பி கீழே சென்றான்.
அவள் இதழில் உறைந்த புன்னகையுடன் கீழே சென்றாள்.
அதன் பிறகுபத்திரிக்கையாளர்களை அனுப்பி இரவு உணவை முடித்து அறைக்கு வரும் வரை சித்தார்த்தன் மற்றும் ஊர்மிளாவிற்கு தனிமை கிடைக்கவில்லை என்று சொல்வதை விட அவன் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஊர்மிளா அறைக்கு செல்லும் முன் அவள் கையில் ஒரு பையை கொடுத்தவன், “கெஸ்ட் ரூம் போய் இதில் இருப்பதை போட்டு ரெடியாகிட்டு வா” என்றான்.
விருந்தினர் அறைக்கு சென்று பையில் இருந்ததை வெளியே எடுத்தவள் அசந்துப் போனாள். அதில் மிகவும் அழகான சிறு சிறு வெள்ளை கற்களால் வேலைபாடு செய்யப்பட்ட வெண்பட்டு டிஸைனர் புடவையும், அதற்கு பொருத்தமான வைர அட்டிகையும் தோடும் வளையலும் இருந்தது. கூடவே சிறிய பையில் மல்லிகை பூவும் இருந்தது.
புடவை கட்டி தயாராகியவள் இதயம் ஏனோ படபடக்கத் தொடங்கியது. இத்தனை நாட்கள் அவனை சீண்டியும் அவனை ஒத்தும் பல பேசியிருக்கிறாள் தான் ஆனால் இன்று அவனை தனிமையில் சந்திக்க முடியாமல் நாணமும் சிறு பயமும் சேர்ந்து படுத்த அவளது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. எவ்வளவு தான் அவள் மெதுவாக நடந்தாலும் அவர்கள் அறை வந்துவிட்டது.
மூச்சை இழுத்துவிட்டு மெல்ல கதவை திறந்து உள்ளே சென்றவள் இன்னொரு முறை அசந்துப் போய் கண்களை விரித்தாள். அறை முழுவதும் வர்ண ரோஜாக்களால் அலங்கரித்திருக்க, மெத்தையின் மீது ரோஜா இதழ்கள் தூவியிருக்க அறை மெழுவர்த்திகளின் ஒளியில் ஜொலித்தது.
அவளது முகத்தில் தெரிந்த ரசனையை மென்னகையுடன் ரசித்த சித்தார்த்தன் பின்னால் இருந்து அவளை அணைத்தபடி அவளது காதில் இதழ்கள் உரசியபடி, “பிடிச்சிருக்கா?” என்று கிசுகிசுத்தான்.
சட்டென்று அவன் புறம் திரும்பியவள் பேச்சின்றி அவனை நோக்கினாள்.
அவன் புன்னகையுடன் புருவம் உயர்த்த, அவள் காதலுடன் நோக்கினாள்.
அவன், “ஒரு நிமிஷம் கண்ணை மூடு” என்றான்.
அவள் கண்ணை மூடிய சில நொடிகளில், “ஹ்ம்ம்.. இப்போ திற” என்றான்.
அவள் கண்களை திறந்ததும், ஒற்றை காலில் மண்டியிட்டு இதழில் வசீகர புன்னகையுடனும் விழிகளில் காதலுடனும் சிகப்பு ரோஜா பூங்கொத்தை நீட்டி,
“இமைக்குள் பனித்துளியாய்..
செவிக்குள் தேனிசையாய்..
இதழில் ரோஜாவாய்..
இதயம் தீண்டும் தென்றலாய்..
எனை கொஞ்சும் சாரலே!!
உனை நேசிப்பதோடு சுவாசிக்கிறேன்..
என் இதயத்துடிப்பே நீயடி” என்று கவிதை பேசினான்.
இதழில் மென்னகையுடனும் விழிகளில் தேங்கிய கண்ணீருடனும் பூங்கொத்தை வாங்கினாள்.
அவன் மீண்டும், “பிடிச்சிருக்கா?” என்று வினவினான்.
மெல்லிய கரகரத்த குரலில், “ரொம்ப” என்றாள்.
அவன், “எது?”
“எல்லாமே” என்றவள், “எல்லாத்தையும் விட உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குது.. லவ் யூ சித்” என்றபடி அவன் நெஞ்சில் சரணடைந்தாள்.
விரிந்த புன்னகையுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, “மீ டூ லவ் யூ ஸோ மச் அம்லு” என்றவன் அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்.
அவளது இதழ்களின் மென்மையில் தன்னை தொலைக்கத் தொடங்கியவன் மீண்டும் மீண்டும் அவள் இதழ்களை நாடினான்.
அறையின் உள்ளே நுழையும் போது அவளுள் இருந்த பயம் அவனது அருகாமையில் மாயமாய் மறைந்திருந்தது.
மெல்ல அவளை கைகளில் ஏந்தியபடி மஞ்சமடைந்தவன், அதன் பிறகு பேச்சிற்கு இடமில்லா அழகிய காவியத்தை படைத்தான். இருவருக்கும் அந்த இரவு மறக்க முடியாத இனிமையான இரவாக மாறியது.
அடுத்த நாள் காலையில் எழுந்தவள் வெக்கத்துடன் குளித்துக் கிளம்பி கீழே சென்று தான் காபி அருந்திவிட்டு அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்த போது இதழில் உறைந்த மென்னகையுடன் சித்தார்த்தன் உப்பரிகையில் நின்றுக் கொண்டிருந்தான்.
அவன் முகம் பார்க்க நாணியவள் பார்வையை காபி குவளையில் பதித்தபடி அதை அவனிடம் நீட்டினாள்.
அந்த கள்வனோ, ‘நீ என்னை பார்க்காமல் வாங்க மாட்டேன்’ என்பது போல் அவள் நாணத்தை ரசித்தபடி அமைதியாக நின்றிருந்தான்.
சில நொடிகள் கழித்து அவள் பார்வையை மெல்ல நிமிர்த்தவும் அதற்காகவே காத்திருந்தவன் உதட்டசைவில் முத்தம் கொடுத்தபடி குவளையை வாங்கினான்.
அவனது இதழ் தீண்டா முத்தத்தில் கூட அவளுள் சிலிர்ப்பு ஓடியது. அவள் பார்வையை தாழ்த்தியபடி நின்றாள்.
சிகப்பு நிற சாதாரண புடவையில் சிகப்பு ரோஜாவை போல் அழகாக இருந்தவளை அணுஅணுவாக ரசித்தபடி காபியை பருகத் தொடங்கினான்.
அவனது பார்வை மேலும் அவளுள் சிலிர்ப்பூட்ட அவள் இனம் புரியா இன்ப அவஸ்த்தையுடன் நின்றிருந்தாள்.
அவள் கையை பிடித்து இழுத்து தனது கைவளையத்திற்குள் நிறுத்தியவன் காபி குவளையை அவள் இதழ் அருகே கொண்டு சென்றான்.
அவள் ‘குடிச்சிட்டேன்’ என்று சொல்ல வாய் திறக்க காபி அவள் வாயினுள் சென்றது.
அவள் ஒரு வாய் அருந்தியதும் அவன் ஒரு வாய் அருந்திவிட்டு, “இப்போ தான் ஸ்வீட்டா இருக்குது” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டபடி, “ஸ்வீட் அண்ட் லவ்லி மார்னிங் அம்லு” என்றான்.
அவள் நெளிந்தபடி, “ஸ்வீட் அண்ட் லவ்லி மார்னிங்” என்றாள்.
“நைட் பிடிச்சிருந்ததா?” என்று அவன் அவள் காதில் கிசுகிசுக்கவும், சட்டென்று விலகியவள், “நான் கீழே போறேன்” என்று எழும்பாத குரலில் கூறிவிட்டு ஓடினாள்.
வாய்விட்டு சிரித்தவன், “வாயில் அடி போடுவ னு நினைத்தேன்.. இப்படி ஒரே நாளில் மாறிட்டியே அம்லு” என்று சீண்டினான்.
அவளோ உதட்டோர ரகசிய புன்னகையுடன் கீழே ஓடினாள்.
அதன் பிறகு அவன் கண்ணில் படாமல் அவள் கண்ணாமூச்சி ஆட்டமாட, அதில் சிறிது கடுப்பானவன் அறையில் இருந்து “ஊர்மி” என்று கத்தி அழைத்தான்.
அவள் மேலே போகாமல் சமயலறையில் இல்லாத வேலையை செய்துக் கொண்டிருக்கவும் சாரதா, “ஊர்மி சித்து கூப்பிடுறான்” என்றார்.
அவள் அவர் முகத்தை பார்க்காமல், “இப்போ தான் அத்தை மேலே போயிட்டு வந்தேன்” என்றாள்.
ஒரு மணி நேரமாக அவள் இங்கே இருந்ததை அறிந்தவர் அவள் முகத்தை கூர்ந்து நோக்கினார். அவருக்கு எதுவோ புரிவது போல் இருக்கவும் மென்னகையுடன் அவள் தோளை தட்டி, “மேலே போ” என்றார்.
வேறு வழி இல்லாமல் மேலே சென்றவளை வெற்று அறையே வரவேற்றது. அவள் அவனை ஒவ்வொரு இடமாக தேட பின்னால் இருந்து அவளை அணைத்தவன், “என்னடி ரொம்ப ஆட்டம் காட்டுற!” என்றான்.
“ப்ளீஸ் சித்”
“எதுக்கு ப்ளீஸ்?” என்று வினவியவனின் உதடு அவள் கன்னத்தில் ஓவியம் வரைந்தது.
அவனது தீண்டல் அவளுள் ஏதேதோ செய்ய அவள், “காலையில் என்ன சித் சேட்டை” என்று தெளிவில்லாத குரலில் கூறினாள்.
அவளது கழுத்து வளைவில் இதழோவியம் தீட்டியபடி அவன், “நீ சொல்லி கொடுத்த பாடத்தை கத்துகிட்டு நான் டிஸ்டிங்ஷன் வாங்கின மாதிரி நான் சொல்லிக் கொடுத்த பாடத்தில் நீ Phd பண்ண வேணாமா?” என்றான் கிறக்கத்துடன்.
அவனுக்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை என்பதை புரிந்துக் கொண்டவன் மென்னகையுடன் தனக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டே அவளை விட்டான்.
அவள் செல்ல முறைப்புடன், “அத்தை என்ன நினைப்பாங்க?” என்றாள்.
“கேட்டு சொல்லவா?” என்று அவன் குறும்புடன் வினவ,
“இப்போ குளித்து வேறு புடவை கட்டிட்டு கீழே போய் எப்படி அவங்களை பேஸ் பண்ணுவேன்” என்று அவள் சிணுங்க,
“இந்த சிணுங்கல் தனி போதை தருதுடி” என்றபடி அவன் மீண்டும் இழைய,அவனை தள்ளிவிட்டவள், “உதை” என்று மிரட்டிவிட்டு குளியலறையினுள் நுழைந்தாள்.
அதன் பிறகு சிறு சிறு சேட்டைகளுடன் அலுவலகம் கிளம்பியவன் அவளை மென்மையாக அணைத்து, “உன்னை விட்டு போகவே மனசில்லைடி ஆனா இன்னைக்கு ஆபீஸ் போய் தான் ஆகணும்.. ஈவ்னிங் உனக்கொரு சப்ரைஸ் இருக்குது” என்றான்.
அவள், ‘என்ன?’ என்பது போல் பார்க்க,
“வந்து தரேன்” என்றவன் அவள் இதழில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்.
மாலை சீக்கிரமாக வீடு திரும்ப நினைத்தவன் வேலை பழு காரணமாக இரவு சற்று தாமதமாகத் தான் வீட்டிற்கு வந்தான்.
சுதர்சன் அவனிடம், “இவ்வளவு கடுமையா தண்டிக்கனுமா?” என்றார்.
அவரை ஆழ்ந்து நோக்கியவன் பதில் பேசவில்லை.
ஊர்மிளா, “என்னாச்சு மாமா?”
சிறு பெருமூச்சை வெளியிட்டவர், “விக்னேஷ் கஸ்டமர்ஸ் டீலர்ஸ் எல்லோரையும் ஒரே நாளில் நம் பக்கம் இழுத்துட்டான்” என்று முடிக்கவும்,
சித்தார்த்தன் சற்று இறுகிய குரலில், “அவன் வைஃப்-காக தான் அவனோட ரிசார்ட்டை விட்டு வச்சிருக்கிறேன்” என்றான்.
ஊர்மிளா தவிப்புடன்,“ஏன்…………” என்று ஆரம்பிக்க,
அவனோ, “அவன் செய்ததுக்கு அவனை சும்மா விட சொல்றியா?” என்றான் கோபத்துடன்.
சுதர்சன், “அதுக்காக இவ்வளவு கடுமையா……………”
“இதை விட கடுமையா செயல் பட்டு அவனை உருத்தெரியாமல் ஆக்கிவிடுவேன் னு எச்சரிக்கை செய்திருந்தேன்.. அதையும் மீறி அவன் செய்த காரியத்திற்கு நான் கொடுத்த தண்டனை குறைவு தான்..” என்றவன் ஊர்மிளா மற்றும் அன்னை பக்கம் திரும்பி, “இனி அவன் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டான்.. அவனே நினைத்தாலும் முடியாது என்பது ஒருபக்கம் இருக்க அவன் வைஃப் விட மாட்டாங்க.. ஸோ நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாமல் நிம்மதியா இருங்க” என்றான்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய சாரதா தான், “சரி இந்த பேச்சை இத்தோடு விடுங்க.. சாப்பிடலாம் வாங்க” என்று அழைத்து சென்றார்.
சித்தார்த்தனின் மனநிலையை மாற்றும் நோக்கத்துடன் உணவின் போது சாரதா, “கெளதம் கிளம்பிட்டானா?” என்று வினவினார்.
“இல்லை நாலு நாள் கழிச்சு தான் கிளம்புறான்.. வீட்டிற்கு கூப்பிட்டேன்.. நாளைக்கு சவிதாவை கூட்டிட்டு வரேன் னு சொன்னான்”
சாரதா, “ஹ்ம்ம்.. நாளைக்கு அவங்களுக்கு விருந்து வச்சிரலாம்” என்றவர், “மகி போன் பண்ணாளா?”
“ஆமா” என்று ஆரம்பித்தவன் அவளுடன் நிகழ்ந்த உரையாடலை பற்றி பேசினான்.
சாரதா எதிர்பார்த்தது போல், நண்பர்களை பற்றி பேசியதில் இறுக்கம் தளர்ந்து இயல்பிற்கு திரும்பியிருந்தான்.
உணவிற்கு பின் சிறிது நேரம் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தவன் அவர்கள் உறங்க சென்றதும் ஊர்மிளாவை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே சென்றவன் தென்னை ஓலைகளின் மறைவில் தரையில் அமர்ந்து அவளை மடியில் அமர்த்திக் கொண்டான்.
அவள் எழ முயல, “இப்படியே இரு அம்லு” என்று அதட்டினான்.
அவனது பிடிவாதம் உணர்ந்து அவள் அமைதியாக இருக்கவும் அவன் வண்ண உறைத்தாளால் மூடப்பட்ட ஒரு பொருளை அவளிடம் தந்தான்.
ஆர்வத்துடன் அதை பிரித்தாள். அதில் ஐந்து ஓவியங்கள் இருந்தது. அவளை வித விதமாக பல வண்ணத்தில் நான்கு ஓவியங்கள் வரைந்திருந்தான். மற்றொன்றில் தங்கள் இருவரையும் சேர்த்து பென்சில் ஸ்கெட்ச் செய்திருந்தான்.
ஒவ்வொரு ஓவியத்தையும் பிரம்மிப்புடன் ரசித்தவள் இன்ப அதிர்ச்சில் சிலையை அமர்ந்திருந்தாள்.
அவளது முக பாவங்களை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவர்கள் இருவரும் இருந்த ஓவியத்தை திருப்பி காட்டினான். அதில் ஒரு கவிதை எழுதி இருந்தான்.
“இசை மேகமாய் நின்
மௌன புன்னகையில்
மனதை கொய்தாயடி..
ஈரக் காற்றாய் நின்
காதல் விழிக்குள் சிறையிட்டாய்..
நாளும் அதனுள் தொலைவேனடி!
மகரந்த தென்றலாய் நின்
மாசில்லா அன்பில்
என்னுள் காதல்
மகரந்தத்தை தூவினாயடி..
உயிரில் கலந்து
என்னுள் நிறைந்தவளே!
இனி வரும் பொற்காலம்
இன்பச் சாரலே!!”
அவனது காதலில்கரைந்தவள்அவனது நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
சில நொடிகள் அவளை அழ விட்டவன் பின், “என் கவிதை அவ்ளோ கேவலமாவா இருக்குது?” என்றான்.
அழுகையை நிறுத்தியபடி அவன் தோளில் அடித்தவள், “நான் சொல்லலை! காதலை உணர்ந்ததும் நீங்க தான் என்னை விட அதிகமா காதலிப்பீங்க னு” என்றாள்.
அவளை மென்மையாக அணைத்தவன், “காதலில் உன்னது என்னது னு என்னடி இருக்குது? காதல் புறாக்களை போல் நம்மால் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இருக்க முடியாது என்பது தான் நிஜம்.. நமக்கு பேரன் பேத்தி வந்த பிறகு கூட இதே காதலுடன் கடைசிவரை இருப்போம்” என்றான்.
அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டியவள் காதல் தந்த நிறைவுடன் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.