கொஞ்சல் 20
சித்தார்த்தனின் அனல் கக்கும் பார்வையை பொருட்படுத்தாமல் விக்னேஷின் ஆள் அலட்சியத்துடன், “இப்படி முறைத்தால் உண்மை பொய் ஆகிவிடாது மிஸ்டர் சித்தார்த்தன்” என்றான்.
சித்தார்த்தன் பதில் சொல்லும் முன், “நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் நீங்கள் சொல்லும் பொய் உண்மை ஆகிவிடாது” என்ற கோபக் குரல் அவன் பின்னால் இருந்து கேட்டது.
“நீங்க யாரு சார்? நான் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை” என்றவன் சித்தார்த்தனை ஏளனமாக பார்த்து, “என்ன பதில் சொல்ல முடியலையா! உங்களுக்கு இவர் மௌத் பீஸ்ஸா?” என்றான்.
அந்த கோபக் குரலுக்கு சொந்தக்காரனான கௌதமன் ஏதோ பேச வாயை திறக்கும் முன் அவன் கையை பற்றிய சித்தார்த்தனின் கண்களை மூடி திறந்து ‘நான் பேசிக்கிறேன்’ என்று சொல்லாமல் சொன்னான்.
தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருந்த சித்தார்த்தன் நிதான குரலில், “நீங்க யார் சார்?” என்று வினவினான்.
“என்னை அவமானப் படுத்துறீங்க?”
“அப்படி என்ன அவமானப் படுத்திட்டேன்?”
“என்னை பார்த்து எப்படி ‘யார் நீ?’ னு கேட்கலாம்? நீங்க……………”
“இவரை நீங்க கேட்ட கேள்வியை தானே நான் உங்களிடம் கேட்டேன்.. அது உங்களை அவமானப் படுத்துகிறது என்றால் நீங்க தான் முதலில் இவரை அவமானப் படுத்தியிருக்கிறீங்க”
“அது..” என்று அரை நொடி திணறியவன், “அவர் யாரு னு தெரியாததால் தான் அப்படி கேட்டேன்.. ஆனால் உங்களுக்கு நான் யாரு னு தெரியுமே! ஸோ உங்கள் கேள்வியின் அர்த்தம் ‘நீ யாரு டா என்னை கேள்வி கேட்க?’ என்பது தான்”
“நான் அப்படி கேட்கவில்லை.. நீங்க உண்மையிலேயே ஒரு பத்திரிக்கையாளர் தானா என்ற சந்தேகம் எனக்கு வந்ததால் தான் அப்படி கேட்டேன்”
“பாத்தீங்களா உங்கள் வாயில் இருந்தே உண்மை வந்து விட்டது” என்று கூறியவன் மற்றவர்களை பார்த்து, “பார்த்தீங்களா எப்படி பேசுகிறார்! அவர் என்னை மட்டும் அவமானப் படுத்தலை.. என்னை கேட்பது நம் துறையை கேட்பது போல் தான்” 
“அதானே!” 
“நீங்க எப்படி சார் இப்படி கேட்கலாம்?”
“கேள்வி கேட்பது எங்கள் உரிமை சார்”
“கேள்வி கேட்காமல் உண்மை எப்படி வெளியே வரும்?” என்று சிலர் கொந்தளித்தனர்.
சுதர்சன் முகத்தில் பதற்றம் வந்தது. கௌதமன் மனதினுள் ‘அவசரப் பட்டுட்டேனோ!’ என்ற வருத்தம் எழுந்தது. அவன் அருகே இருந்த வசந்தன் முகத்திலும் பதற்றம் நிலவியது. வீட்டின் உள்ளே இருந்த சாரதா மற்றும் ஊர்மிளா வெகுவாக கலங்கினர்.
ஆனால் சித்தார்த்தனோ, “பிரெண்ட்ஸ்.. கேள்வி கேட்பது எப்படி உங்கள் உரிமையோ அதை போல் தானே என் தரத்து நியாத்தை சொல்வது என் உரிமை?” என்றான் நிதான குரலில்.
“ஆனா நீங்க………………”
சித்தார்த்தன், “ப்ளீஸ் வெயிட்.. நான் இன்னும் முடிக்கலை.. என் தரத்து நியாயத்தை கூற சில கேள்விகளை நான் கேட்கலாம் தானே! உங்களை கேள்வி கேட்க கூடாது னு நான் சொல்லவில்லை.. உங்கள் அனைவரின் கேள்விகளை கேட்டு நான் கோபப்படாமல் பொறுமையாக தானே நிற்கிறேன்.. உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் எங்கேயும் நான் போகப் போறதில்லை.. கொஞ்சம் பொறுமையாக இருங்க.. நான் தவறான அர்த்தத்தில் கேட்கவில்லை என்று உங்களுக்கே புரியும்” என்றான்.
இரண்டு நொடிகள் அனைவரும் அமைதியாக இருக்க சித்தார்த்தன் சின்ன புன்னகையுடன், “தேங்க்ஸ் பிரெண்ட்ஸ்” என்றுவிட்டு விக்னேஷின் ஆள் பக்கம் திரும்பினான். அவன் உதட்டில் சிறு புன்னகை இருந்தாலும் கண்களோ அவனை உறுத்து விழித்தது.  
“அதே கேள்வியை தான் கேட்கிறேன்.. நீங்க யார்?”
“உங்களுக்கு தெரியாதா?”
“இது பதில் இல்லையே!”
அவன் கோபத்துடனும் எரிச்சலுடனும், “சதீஷ்.. XXX நியூஸ்-பேப்பரில் ரிப்போர்டரா இருக்கிறேன்”
“உண்மையிலேயே நீங்க ரிப்போர்டர் தானா?”
“மிஸ்டர் சித்தார்த்தன் நீங்க என்னை ரொம்ப அவமானப்படுத்துறீங்க” 
“நீங்க என்னை கேவலப்படுத்தியதை விடவா?”
சதீஷ், “பார்த்தீங்களா!!! இவரோட முகத்திரையை கிழிக்க நான் கேட்ட கேள்வி இவரை கேவலப்படுதிருச்சு னு என்னை இப்படியெல்லாம் பேசுறார்” என்று உருக்கமான குரலில் கூற,
“எப்படி சார் இப்படி கேட்கலாம் நீங்க?”
“நீங்க எங்களை அவமானப்படுத்துறீங்க”
“நாங்க கேள்வியே கேட்கக் கூடாதா?” என்று சிலர் மீண்டும் கொந்தளிக்க,
சித்தார்த்தன், “தனக்கு கிடைக்கும் தகவலை அப்படியே ஏற்றுக்கொள்வது ஒரு சிறந்த ரிப்போர்டருக்கு அழகல்ல.. என்ன நடந்தது என்று அலசி ஆராய்ந்து அதன் உண்மையை அறிந்த பிறகே அதை பற்றிய கேள்விகளை சம்பந்தப்பட்டவர்களை கேட்க வேண்டும்……………….”
சதீஷ், “உண்மை தெரிந்ததால் தானே கேட்கிறேன்”
“அப்பறம் ஏன் இவரை உங்களுக்கு தெரியலை?”
“இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?”
“ஒருவரை பெரிய ஆள் என்று சொல்வது அவரின் செய்கையை வைத்து தான்.. இப்போது அதை பற்றிய விவாதம் தேவை இல்லைன்னு நினைக்கிறன்……………..”
சதீஷ், “ஆமா ஆமா இப்போ இவர் யார் என்பது தானே முக்கியம்” என்றான் நக்கலுடன்.
“நிச்சயமா”  என்ற சித்தார்த்தன் கூட்டத்தை பார்த்து, “உங்களில் எத்தனை பேருக்கு இவரை தெரியும்?” என்று கேட்டபடி கௌதமனை சுட்டி காட்டினான்.
கூட்டத்தில் இருவர் மட்டுமே கையை தூக்கினர்.
அவர்களில் நடுத்தர வயதில் இருந்தவரை பார்த்து, “நீங்க சொல்லுங்க சார்” என்றான்.
அவர் அமைதியான குரலில், “உங்கள் நெருங்கிய நண்பர் கௌதமன்”
சித்தார்த்தன் சதீஷை பார்க்க, அவனோ அலட்சியத்துடன், “உங்கள் நண்பரை எல்லோருக்கும் தெரிந்திருக்கனுமா என்ன?”
“இல்லை தான் ஆனால் நீங்கள் யாரை பற்றி பேசுறீங்களோ அவரை உங்களுக்கு தெரிந்திருக்கணும் தானே!”
“அது..”
“எது?” என்றவன் கூட்டத்தை பார்த்து, “யாராக இருந்தாலும் ஒருவரை குற்றம் சொல்லுமுன் அதன் உண்மை தன்மையை அறிந்த பிறகே பேசணும்.. அதுவும் மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்லும் நீங்கள் எதையும் பகுத்தறிந்த பிறகு தானே பேச வேண்டும்.. TRP ரேட்டிங்கிற்காகவோ இல்லை யாரேனும் தூண்டி விட்டோ ஒரு சிலர் கிளம்பினால் நீங்க எல்லோரும் அப்படியே கிளம்பிடுவீங்களா?”
“TRPக்காகவோ தூண்டலிலோ நாங்க வரவில்லை.. உண்மையை மறைக்க இப்படி பேசுறீங்க” என்று ஒருவர் கூற,
சித்தார்த்தன், “உங்கள் எல்லோரையும் நான் அபப்டி சொல்லவில்லை.. சிலரைத் தான் சொன்னேன்.. நான் சொன்னது உண்மை என்று உங்களுக்கும் தெரியும்..” 
“எப்படி சார் நீங்க இப்படி சொல்லலாம்? நாங்க என்ன ஆட்டு மந்தையா?”  என்று இன்னொருவர் சிறு கோபத்துடன் வினவ,
சித்தார்த்தன், “என்ன ஏது னு விசாரித்து இருந்தால் கௌதமை ஏன் உங்களுக்கு தெரியவில்லை”
“இவரை பற்றி கேள்விப் பட்டாலும் பார்த்தது இல்லை.. அவ்ளோ தான்”
சதீஷ், “நீங்க வேணும்னே பேச்சை திசை திருப்புறீங்க”
“நிச்சயமா இல்லை.. எதையும் தீர விசாரித்த பிறகு கேள்வி கேளுங்க னு தான் சொல்றேன்”
“அதை விசாரிக்க தானே கேள்வி கேட்கிறோம்” என்று சதீஷ் கூற,
இன்னொருவர், “அதானே! உங்கள் பேச்சு நங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வதை போல் தான் இருக்கிறது”  
“நீங்க கேள்வி கேட்கக் கூடாதுன்னு நான் சொல்லவே இல்லை.. கேள்வி கேட்க ஒரு நெறி இருக்கிறது தானே!”
“அப்படி என்ன நெறி தவறிட்டோம் நாங்க?” என்று இன்னொருவர் சிலிர்த்துகொள்ள,
இப்பொழுது சித்தார்த்தன் சிறு கோபத்துடன், “நீங்க கேட்ட கேள்விகள் அனைத்துமே நெறி தவறியவை தான்.. என்னை கேட்ட கேள்விகளில் நீங்க மறைமுகமா இரண்டு பெண்களை அவமானப்படுத்துறீங்க.. உங்கள் வீட்டு பெண்ணை இப்படி பேசினால் அமைதியா இருப்பீங்களா? அடுத்த வீட்டு பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா?” 
“கேள்வி கேட்காமல் எப்படி உண்மை வெளி வரும்?” என்று ஒருவர் வினவ,
சித்தார்த்தன், “நெறி தவறாத கேள்வியை கேளுங்க னு தான் சொல்கிறேன்.. இதே இதை ‘உங்கள் திருமணம் பற்றி கொஞ்சம் சொல்றீங்களா?’ என்றோ ‘உங்கள் திருமணம் பற்றி சில தகவல்கள் கிடைத்தது.. அவை உண்மையா?’ என்றோ கேட்டு இருக்கலாம் இல்லை ‘உங்கள் திருமணத்தை ஏன் இங்கே நடத்தாமல் அம்பாசமுத்திரத்தில் நடத்தினீங்க?’ என்று கூட கேட்டு இருக்கலாம்”
தங்கள் தவறு புரிந்து சிலர் தலை குனிய,
கௌதமனை தெரியும் என்று கூறிய இருவரும், “எங்கள் நண்பர்கள் சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் சார்” என்று கூற,
முதலில் பேசிய சிலர், “சாரி சார்” என்றனர்.
சதீஷும் சிலரும் மெளனமாக தான் இருந்தனர்.
சித்தார்த்தன், “நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியது எங்கள் வீட்டு பெண்களிடம் தான்……………………” 
சதீஷ் அடங்காமல், “நடந்ததை தானே சொன்னோம்” என்றான்.
“அப்படியா?”
“ஆமாம்”
“உங்கள் கூற்று படி கெளதம் என்னுடன் சண்டை போட்டு பிரிந்து சென்றுவிட்டான்.. அவன் எப்படி எனக்காக குரல் கொடுத்தபடி இங்கே நிற்கிறான்?”
“அவரை நீங்கள் மிரட்டி இருக்கலாம் இல்லை விலைக்கு வாங்கி இருக்கலாம்”
கௌதமன் கோபத்துடன் ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க அவனை தடுத்த சித்தார்த்தன், “எதை வைத்து விலைக்கு வாங்கியதா சொல்றீங்க?”
“ஊட்டியில் இருக்கும் உங்கள் ரிசார்ட்டும் வீடும் இப்பொழுது இவர் பெயரில் இருக்கிறது”
“வெல்கம் ரிசார்ட் நாங்கள் இருவரும் சேர்ந்து நடத்துவது.. நான் இவனுக்கு எதையும் பரிசாக தரவில்லை.. இவனது சேமிப்பை கொடுத்து இந்த தொழிலில் என்னுடன் இணைந்துள்ளான்.. வீடு இவனது திருமண பரிசாக என் அப்பா கொடுத்தது”
“இவ்வளவு தாமதமாவா திருமண பரிசு தருவீங்க!” என்று நக்கலாக சொன்ன சதீஷ்,உங்கள் திருமணத்திற்கு பிறகு தான் அந்த வீட்டை இவர் பெயருக்கு எழுதி கொடுத்து இருக்கிறீங்க” என்றான்.
“என் திருமணத்தன்று தான் இவனுக்கு திருமணம் ஆன விஷயமே எங்களுக்கு தெரியும்”
வாய்விட்டு சிரித்த சதீஷ், “நீங்க ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்!” என்றான்.