Advertisement

அத்தியாயம்-27
சில வருடங்களுக்கு பிறகு…
அது ஒரு நர்சரி கார்டன் என்பது முதல் பார்வையிலே நமக்கு புரிகிறது.வரிசையாக பலவகை மரக்கன்றுகள், செடிகள் வகைவாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த தோட்டத்தை எத்தனை முறை சுற்றி பார்த்தாலும் நிச்சயம் நமக்கு சலிக்காது.
பசுமை குடில் போல் அமைக்கப்பட்டிருந்த அவ்விடத்தில் ஒரு பாதை மட்டும் ஒரு அலுவலக அறையில் சென்று முடிய அங்கே தான் நம் யவ்வனாவின் குரல் கேட்கிறது..!!
“அண்ணே…நாம திரும்ப திரும்ப அதே தப்பை தான் செய்யுறோம்..நம்ம முப்பாட்டன் அவரோடு முன்னால் தலைமுறை. எல்லாம் எந்த பூச்சி கொல்லி மருந்த உபயோகிச்சாங்க…. எல்லாரும் ஆரோக்கியமா வளரலையா…??பயிரை பாதுகாக்குறோம் பேர்வழின்னு பூச்சு கொல்ல மருந்து,களையெடுக்க மருந்து, சீக்கிரம் வளர மருந்துன்னு போட்டு போட்டு விவசாயத்தையே கெடுத்து வச்சிருக்கோம்… இயற்கையா கிடைக்கிற உரங்கள் போதாதா நமக்கு…”
என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட அரைமணி நேரமாய் இயற்கை உரங்களின் நன்மையை எடுத்து உரைத்துக் கொண்டிருந்த யவ்வனா திருச்சியில் புகழ்பெற்று விளங்கும் இயற்கை விவசாயிகளுள் ஒருவள்.
விளையாட்டு பிள்ளையாய் கல்லூரி போக மாட்டேன் என்று அடம்பிடித்த யவ்வனா இல்லை இவள்.பேச்சிலும் முகத்திலும் ஒரு தெளிவும் முதிர்ச்சியும் அவளுக்கு மிகவும் மரியாதையான தோற்றத்தை தந்தது.
இயற்கை  விவசாயம் ஒருபக்கம் செய்வதோடு எந்தெந்த நிலத்தில் என்ன உயிர்உரம் உபயோகிக்கலாம்,எந்த காலத்தில் என்ன விளைவிக்கலாம்,பண்ணைகளில் வளரும் கால்நடைகளுக்கு என்ன இயற்கை உணவு தரலாம் போனறவை குறித்தும் விளக்கம் அளிக்கும் ஆலோசகராகவும் சேவை செய்து வருகிறாள்.சிறுபெண் தானே என்று முதலில் அலட்சிய படுத்தியவர்களுக்கும் அவள் கையாலும் யுக்திகளை காணும்போது அதனை பின்பற்ற ஆர்வம் தோன்றியது.
மற்றோர்புறம் இந்த நர்ஸரி கார்டன் என்று நாள்முழுவதும் பிஸி தான்.ஆனால் ஒவ்வொன்றையும் செய்யும்போது ஒரு ஆத்மதிருப்தியை அடைந்தாள்.தமிழ் ஆசைப்பட்ட யவ்வனாவின் திறமைக்கான அடையாளத்தை அவள் சாதித்து விட்டாள்.
யவ்வனாவோடு பேசிக்கொண்டிருந்த அந்த நபர் சென்றதும் வெளியே ஒவ்வொரு இடமாய் பார்வையிட்டபடி வந்தவள்,
“அங்கிள்…நான் தான் வைப்பேன்..”
என்று பிடிவாதமாய் ஒலித்த குரலை கேட்டதும் சட்டென்று அவ்விடம் விரைந்தாள்.
அவள் நினைத்தது போலவே அங்கே நின்றது சாட்சாத் அவள் மகள் தன்யா தான்.
பள்ளி சீருடையில் இரட்டை சடையோடும் அங்கே வேலை செய்யும் குமரனின் கையில் இருந்த கன்றை வாங்கும் முயற்சியில் இருந்த மகளை கண்டதும்,
“தனு..என்ன பண்ற..”
என்று அருகில் சென்றாள்.
யவ்வனாவை பார்த்ததும் தான் நிம்மதி அடைந்த குமரன்,
“பாருங்க ம்மா..ரோஜா செடி ஸ்டாக் இல்லாமல் இருந்தததும் இன்றைக்கு தான் வந்து இறங்கியிருக்கு..அதை அடுக்கி வைச்சிட்டு இருந்தால் பாப்பா வந்து நான் தான் அடுக்குவேன்னு அடம்பிடிக்குது..”
என்று பாவமாய் கூறினான்.
“ஏன்டி அவருட்ட வம்பு பண்ற..ரோஜா செடில முள்ளு இருக்கும்..எடுக்குறேன்னு குத்திப்பேன்னு தானே சொல்றாங்க..”
“நான் என்ன செடியை பிடிச்சா தூக்க போறேன்..கீழே கவரை பிடிச்சு தானே தூக்குவேன்… பின்ன எப்படி குத்தும்..என்னம்மா நீ..”
இதுகூட தெரியாதா ஹைய்யோ..ஹைய்யோ என்ற பாவனையில் அவளது ஆறுவயது மகள் சொல்ல குமரனிற்கும் சிரிப்பு வந்தது.
“தெய்வமே..நீ ரொம்ப அறிவாளி தான் ஒத்துக்கறேன்..அவரை தொந்தரவு செய்யாமல் வா…”
என்று அவள் கூறவும்,
“போனால் போகுது..நம்ம அம்மாவோட நர்ஸரியாச்சே எதாவது ஹெல்ப் பண்ணுவோமன்னு நினைச்சேன்..உங்களுக்கு கொடுத்து வைக்கல..”
என்று அசால்ட்டாக தோளை குலுக்கி தான் யவ்வனாவின் மினியேசர் தான் என்பதையும் நமக்கு உணர்த்திவிட்டு தன்யா நகர இம்முறை சிரிப்பை மறைக்க செடி எடுப்பது போல குமரன் குனிந்துவிட யவ்வனா,
“இவ வாய் இருக்கே..”
என்று தலையில் கைவைத்தவள் மகளை தொடர்ந்து சென்றாள்.
“வீட்டுக்கு போகாமல் இங்க என்னடி பண்ற..அப்பாவோட வந்தியா..எங்கே அவரு..”என்றவள் கணவனை பார்வையால் தேட,
“அப்பா வெளியே ஃபோன் பேசிட்டு நிற்கிறார்..உங்களையும் அழைத்துக் கொண்டு போகலாமுனு இங்கே வந்தோம்..”
என்றாள் தன்யா.அதேசமயம் அவள் பார்வை வட்டத்தில் விழுந்து விட்டான் தமிழ்.
வெள்ளை வேட்டி சட்டையில் தன் அசத்தும் சிரிப்போடும் அதே கம்பீரத்தோடும் நடந்து வந்த தமிழை கண்டு என்றும் போல் இன்றும் அவள் மனம் மயங்கவே செய்தது.சும்மாவா தேன்சோலை ஊரின் தலைவராகிற்றே..!!
தமிழ் தன் திறமையால் ஏகப்பட்ட தொழிலில்களில் கால் பதித்தான்.தங்கள் ஊரிற்கு என்னென்ன தேவையோ என்னென்ன கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதை எல்லாம் திட்டமிட்டு அவன் நிதானமாய் முன்னேற தமிழின் திறமையை கண்டு பலரும் வியந்து போனர்.அவனது குரு, முன்னுதாரணம் எல்லாம் நடராஜன் ஐயா தான்.
 அவனது முதிர்ச்சியையும் பக்குவத்தையும் கண்டு ஊர்த்தலைவரின் பதிவிக்காக அவனை பஞ்சாயத்து சபையோர் பரிந்துரைக்க அவன் முதலில் மறுத்தாலும் நடராஜரும் சொல்லவும் அந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டு அதில் இன்று வரை சிறப்பாக வகித்து வருகிறான்.
“என்னங்க சர்..இன்னைக்கு மழையை எதிர்பார்க்கலாம் போலவே.. இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கீங்க… அதுவும் தனுவையும் கூட்டிகிட்டு..ஏன் அடுத்த ரெண்டு நாளுக்கு ஊருலே இருக்க மாட்டீங்களோ..”
என்று கணவனை உணர்ந்தவளாய் உதட்டில் தேங்கிய சிரிப்போடு கேட்க சிரித்தவன்,
“சங்கம் மீட்டிங் முடிச்சிட்டு மத்த வேளை எல்லாம் ஓரங்கட்டிட்டு குடும்பத்தோட நேரம் செலவழிக்க ஆசைப்பட்டு ஓடோடி வந்தேன் பார் எனக்கு தேவை தான்..”
என்றுவிட்டு தன்யாவை பார்த்து,
“நான் மறுபடியும் ஆஃபீஸ்கே போறேன் பாப்பா….”
என்று போலியாக அவன் திரும்ப,
“அப்பா…அப்பா…”என்று கையை பிடித்த தன்யா,
“இந்த அம்மாவை வேணா கலட்டிவிட்டு நாம போவோம் வாங்க..”
என்று கைகோர்த்துக் கொண்டாள்.
“ஆமா..கலட்டி விட்ருவோம்..”
மீசையை நீவியபடி மனைவியை கேலியாய் பார்க்க அவளோ, ‘பிச்சுடுவேன்..’ என்று கண்களாலே மிரட்டியவள்,
“அடியேய்..என்ன தைரியம் இருந்தால் என்ர புருஷனை என்னையே கலட்டிவிட சொல்லுவ…வாலு..”
என்று அவள் காதை திருகியவள் சிறுபிள்ளைபோல் இருவர் கையையும் பிரித்துவிட்டு இடையில் புகுந்து நின்றாள்.
“நான் தான் அவருக்கு ஃபர்ஸ்ட்..பார்த்துக்க…”
என்று மகளோடே வம்பிழுக்க,
“பாருங்க அப்பா..அம்மாவ..”
என்று சிணுங்கினாள் சின்னவள்.
“விடுடா..உன் அம்மா என் இதயம்-ன்னா நீ என் உசுருடா..”
என்று இருவருக்கும் சேர்த்து அழகாய் ஐஸ் வைக்க தனுவோ,
“அப்போ…அப்பத்தா…”
என்று சந்தேகம் எழுப்பவும்,
“அவங்க என்சாமி…”
என்று புன்னகைத்தான் தமிழ்.
அதன்பின் யவ்வனா தன் உடைமைகளை எடுத்துக் கொண்டதும் நர்ஸரியில் வழக்கமாய் இருந்து கவனிக்கும் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பினாள்.
“ப்ரகாஷ் அண்ணன் தான் கால் பண்ணாங்க..கவின் நீட் எக்ஸாமில் பாஸ்ஸாகிட்டானாம்..இந்த சுத்து வட்டாரத்திலே கவின் தான் தேர்வாகி இருக்கிறது..கேட்டதும் செம்ம சந்தோஷம்..பெருமையா இருக்கு..”
என்று உற்சாகமாய் தமிழ் சொல்ல அதனை கேட்டு யவ்வனாவிற்கும் சந்தோஷம் நிரம்பியது.
“வாவ்.. நிஜமாவா..சூப்பர் நியூஸ் தமிழ்..நேரில் போய் வாழ்த்து சொல்லிட்டு வரணுமுங்க..சின்ன வயசுல எவ்வளவு குறும்பு பண்ணுவான்…இப்போ ஆளே மாறி போயிட்டான்…”என்றுக் கூற,
“ஹாஹா..ஆமா..இப்போ அவனையே மிஞ்சுவது போல் அர்ஜூன் பண்ணும் வாலுத்தனம் தாங்கல..ஆதித் கூட அமைதி தான்..இந்த அர்ஜூன் தான் செம்ம சேட்டை..அவனுக்கு தோஸ்த் இந்த மேடம் வேற..”
என்று தமிழும் சிரித்தான்.
ஆதித்தும் அர்ஜூனும் மனோ-அனுவின் புத்திரர்கள்.மூத்தவன் ஆதித் அனுவை போல் அமைதி என்றால் இளையவன் அர்ஜூன் மனோவை போல் அறுந்தவால்.ஆதித்,அர்ஜூன்,தன்யா மூவரும் ஒரே பள்ளி தான் என்பதால் வகுப்புகள் வித்யாசம் இருந்தாலும் ஒரே கேங்காக தான் சுற்றும்.
இவ்வாறு கவினின் குறும்புகளையும் அத்தோடு தொடர்பான தங்கள் நிலாக்கால நினைவுகளை பேசித்தபடி நடந்தனர்.
காரை நெருங்கியதும் குடுகுடுவென ஓடி சென்று முன்சீட்டில் ஏறிக்கொண்ட தன்யா அன்னையிடம் பழிப்பு காட்டினாள்.வழக்கமாய் தாய் – மகள் இருவருக்கும் வரும் போட்டி தான் இது.ஒவ்வொரு முறையும் தன்யா தான் முதலில் வந்து தமிழின் அருகில் அமர்வாள்.யவ்வனாவோடு போட்டிபோட்டு அமர்வதில் அவளுக்கு ஏக குஷி..அவளது அந்த சந்தோஷத்தை வழக்கம்போல் இருவரின் உள்ளமும் இரசிக்க வெளியே மட்டும் யவ்வனா மகளை முறைத்துக் கொண்டே பின்னால் ஏறினாள்.
“இருடி..ஒருநாள் உனக்கு முன்னாடி நான் வந்து ஏறிக் காட்றேன்..”
“நடக்கும் போது பார்த்துக்கலாம்..”
என்றவள்,
“அம்மா…என் பேக்கை ஓப்பன் பண்ணி பாரேன்..”
என்று பின்சிட்டில் இந்த பையை காட்டி சொன்னாள் தன்யா.
அவளும் திறந்து பார்க்க அதில் ஒரு பெரிய சைஸ் பார்பி பொம்மையும் அதன் உடமைகளும் இருந்தது.
“ஏன்டி இது..இருக்கிற பொம்மை போதாதா..தேவை இல்லாமல் எத்தனை வாங்குவ..நீங்களும் அவ என்ன கேட்டாலும் சரின்னு மண்டைய ஆட்டிடுவீங்களா..முதல்ல உங்களை சொல்லனும்..”
என்று கண்டிக்க மிரரில் மனைவியை பார்த்த தமிழ்,
“மூச்சு விடு யவ்வா…பாப்பா என்ன சொல்றான்னு கேட்டுடுட்டு திட்டு..நான் வாங்கி தரலை..”
என்று அவன் சொல்லவும் அவள் மகளை பார்க்க,
“லன்ச்ல கணபதி மாமா ஸ்கூல் வந்தாங்க..நான் சாப்பிட்டு முடிக்கிற வரை கூட இருந்து பேசிட்டு இருந்தாங்க..போகும் போது கொடுத்துட்டு போனாங்க…பத்ரி மாமா கிப்ட்..”
என்றாள் மகள் விளக்கமாக..
“இவரு கொடுக்குற செல்லம் பத்தாதுன்னு..இந்த அண்ணன்கள் வேற ஒருபக்கம் தாங்குறாங்க…அதான் ஓவர் கொழுப்பு இந்த வாலுக்கு..”
என்று சலித்துக் கொண்டாள்.
உண்மை தான்..!!தன்யா இருவீட்டிலும் அனைவருக்கும் செல்ல பிள்ளை.
மேலும் ஊர் தலைவரான தமிழின் ஒரே மகள் என்பதால் ஊருக்குள்ளும் மேடமிற்கு தனி கவனிப்பு தான்.
அனைவரும் சீராட்டி பாராட்டி செல்லம் கொடுத்து வைப்பதால் அவளை கண்டிக்கும் ஒரே ஆள் யவ்வனா தான்..தன்னைவிட இருமடங்கு சேட்டை செய்யும் மகளை ரசித்தாலும் வெளியே கண்டிக்கவும் தவறமாட்டாள்.
“அது அப்படி இல்லை அம்மா..லைக்க மதர் லைக்க டாட்டர்..”
என்று கண்சிமிட்டி சிரிக்க,
“அடி கழுத..வாயிலே போடுறேன்..இவளையே சமாளிக்க முடியல..அடுத்தது என்ன பாடு படுத்த போகுதோ..”
என்று அவள் போலியாய் பெருமூச்சுவிட அவள் வார்த்தையில் இருந்த மறைப்பொருள் மகளுக்கு புரியவில்லை என்றாலும் காதல் கணவனிற்கு புரியாதா..!!
சட்டென்று வண்டியை நிறுத்தியவன் ஆசையும் எதிர்பார்ப்பும் போட்டியிட,
“நிஜமாவாடி..”
என்று அவளை ஊடுருவி கேட்க வெட்கப்புன்னகை முகத்தில் தவழ,
“காலைலேந்து தோணுது..அப்படி தான்  நினைக்கிறேன்…டெஸ்ட் பண்ணினால் தான் உறுதியா தெரியும்..”
என்றாள் யவ்வனா..
“என்னப்பா..”
அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வது புரியாமல் தன்யா இடைப்புக சந்தோஷ மிகுதியில் மகளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்ட தமிழ்,
“உனக்கு தம்பியோ தங்கச்சியோ வரப்போராங்க ராஜாத்தி..”
என்று சந்தோஷ கூவலிட,
“ஐஐஐஐ…பாப்பாவா..”
என்று அவளும் ஆர்பரித்தாள்.
“போதுமுங்க..வீட்டில் போய் பேசிக்கலாம்..வண்டியை எடுங்க..”
என்று அவள் கூச்சத்தோடு சிரித்துக்கொண்டே சொல்லும் மனைவியை கண்களாலே களவாடிய கள்வன் அதே சந்தோஷத்தோடு காரை கிளப்பினான்.
வீட்டை அடைந்ததும் முதல் வேளையாக துள்ளி குதித்து,
“அப்பத்தா..” 
என்ற கூவலோடு உள்ளே  தன்யா ஓடிவிட,
“இன்னும் உறுதியே ஆகலை..அதுக்குள்ள ஏனுங்க இவளுட்ட சொன்னீங்க..இனி எல்லாருட்டையும் தம்பட்டம் அடிக்காமல் ஓயமாட்டா…”
என்று யவ்வனா சிணுங்க,
“விடு யவ்வா..எல்லாம் கண்டிப்பா நல்ல செய்தியா தான் இருக்கும்..”
என்றான் அவள் தலையை கோதி… சந்தோஷத்தில் அவளை தூக்கி சுத்தி முத்தமழையில் நனைக்க பேராவல் எழுந்தாலும் இருக்கும் இடம் உணர்ந்து அமைதியானான்.
அவர்கள் வீட்டில் நுழைய பேத்தி வழி விசயம் அறிந்த வசுமதி,
“யவ்வா..”
என்று மருமகளை தேடி வந்தவர்,
“புள்ள சொல்றது உண்மையா..”
என்று கேட்கவும் அவள் முகம் இன்னும் சிவக்க,
“அப்படி தான் நினைக்கிறேன் த்தை..”
என்று அவள் கூறினாள்.
அவள் கையை பிடித்து பார்த்த வசுமதியின் முகம் மகிழ்ச்சியில் திளைக்க,
“நெசம் தான் என் கண்ணு..”
என்று திருஷ்டி கழித்தவர் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கியது.
தன்யாவிற்கு பின் ஆறு வருடங்களாக பிள்ளை எதுவும் இல்லையே என்று அவருக்கு மனதில் ஓரத்தில் கவலையிருக்க அதை பூர்த்தி செய்வதுபோல் அவர்கள் குடும்பத்தின் அடுத்த வாரிசு அவள் மணிவயிற்றில் ஜனிக்க வீ்டே சந்தோஷத்தில் நிறைந்தது.
சிறிது நேரத்தில் அப்பத்தாவும் பேத்தியும் ஒன்றிவிட மனைவியை மட்டும் தனியாக அறைக்கு தள்ளிக் கொண்டு போன தமிழ் வெளியே செய்ய நினைத்தை செய்து முடித்தான்.அதாவது அவளை முத்தமழையில் மூழ்க செய்தான்.
“போதும்ப்பா..”
என்று அவள் சிணுங்க, “எனக்கு போதாதுப்பா..”
என்று குழைந்து முத்த ஊர்வலத்தை தொடர்ந்த தமிழ்,
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி என் பொண்டாட்டி… எதாவது உனக்கு இப்ப நான் செஞ்சே ஆகணும்..என்ன வேணும் சொல்லு..”
என்று கொஞ்ச,
“என்ன கேட்டாலும் செய்யணும்..”
என்று அவள் பூடகமாக கேட்டாள்.
“ம்ம் கேளுடி..”
“அப்புறம் மறுக்க கூடாது..”
“அப்படி என்னடி கேட்க போற..”
“மறுக்க மாட்டேன்னு சொல்லுங்க..சொல்றேன்..”
என்று அவள் பிடிவாதம் பிடிக்க,
“சரி சொல்லு..”
என்றான்.
“உங்க பைக்ல நாம ஒரு ரைட் போகலாம்..அன்னைக்கு மாதிரி நான் ஓட்றேன்..நீங்க பின்னாடி உட்கார்ந்துக்கோங்க…போலாமா..”
என்று ஆர்வமாய் அவள் கூற,
“ஏய்..இந்த நிலைமையிலா.. அதெல்லாம் வேண்டாம்..”
என்று அவன் ஓரேடியாய் தடா போட்டான்.
“மறுக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல..இந்த ஒரே வாட்டி ப்ளீஸ்…ப்ளீஸ்..ஆசையாக இருக்கு தமிழ்..”
என்று அவள் கொஞ்சலாய் கெஞ்ச,
“புள்ளதாச்சிக்கு அது ஸேஃப்டி கிடையாது கண்ணம்மா…அத்தோட ஊருக்குள்ள பெரிய மனுஷன்னு பந்தாக் காட்டிக்கிட்டு இப்படி உன்னோட பைக்கில் டூயட் பாடுறதை எவனாவது பார்த்தான்..வெட்கமா பேயிடும்டி..”
என்று அவன் விளக்கம் கொடுத்தாலும் அவள் முகம் சுணங்க,
“ம்ஹூம்..உங்களுக்கு என்மேல பாசமேயில்ல போங்க… பொண்டாட்டியோட சின்ன ஆசையை கூட நிறவேற்றல..இனி கண்ணே மணியேன்னு கிட்டக்க வாங்க..அப்போ இருக்கு..”
என்று ஊடலாய் நொடித்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.
அதன்பின் தமிழ் அவளை சீண்டி வம்பிழுக்க எதற்கும் மசியவில்லை அவனவள்.
நள்ளிரவில் தூங்கி  கொண்டிருந்த மனைவியை மெல்ல எழுப்பவும்  விழித்துக் கொண்டவள்,
“போங்க தமிழ்..நான் கோபமா இருக்கேன்..”
என்று அவன் எழுப்ப காரணத்தை தானாய் யூகித்துக் சொல்ல வாய்விட்டு சிரித்தவன்,
“ஹாஹா…கோபமா இருக்கும் போதும் ஆசையை பாரு..”
என்று அவள் தாடையில் தட்டியவன்,
“எழுந்து வாடி..”
என்று கூப்பிட்டான்.
“எங்க….”
என்று தூக்கத்தில் கண்ணை கசக்கினாள்.
“வா..சொல்றேன்..”
தன்யா வசுமதியின் அறையில் உறங்க வீட்டை வெளியே பூட்டிவிட்டு யவ்வனாவோடு வெளியே வந்தான் தமிழ். வாசலில் நின்ற அவன் என்ஃபீல்டை கண்டவள் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தது.
“பார்த்துட்டே நின்னா எப்படி…வா..”
என்று கைப்பிடித்து சென்றவன் வீடுகள் அதிகம் இல்லாத குண்டு குழியற்ற சீரான  சாலை வந்ததும் அவளை முன்னால் அமர சொல்லி ஓட்ட சொன்னான்.
உள்ளம் சந்தோஷத்திலும் கணவனின் அன்பில் பெருமிததிலும் நிறைய இரவின் நாயகி அந்த நிலவை காட்டிலும் யவ்வனாவின் முகம் தங்கம்போல் மிளிர்ந்தது.

Advertisement