Advertisement

அத்தியாயம்-8
“கவின் கிளாஸ்.. எங்கே மேடம்..”
பார்வையை சுழற்றிய யவ்வனா கேட்க,

“அதோ அந்த ப்ளாக் தான்..”
என்ற வித்யாவின் குரலிலோ மெல்லிய பதட்டம்..

அதை உணர்ந்த யவ்வனாவிற்கு புரியவில்லை எதற்கு இந்த பதட்டமென்று..
பள்ளிக்கு வந்ததில் இருந்தே வித்யா பதட்டத்தோடே இருப்பதை கண்டு அதை அவளிடமே கேட்டாள்.

“ஏன் ஒருமாதிரி இருக்கீங்க.. எதாவது பிரச்சனையா..”

“ம்ம்..எல்லாம் நான் பெத்து வச்சிருக்கேனே..அதை நினைச்சு தான்..இன்னைக்கு என்னென்ன சொல்லுவாங்களோனு நினைச்சாளே பக்கு பக்குங்குது..”

என்று அவள் சொல்ல ஒருவேளை கவின் படிப்பில் சற்று சுமாராக இருப்பானாக்கும்..அதை நினைத்து வருந்துகிறாள் என்றெண்ணி,

“ஏன் மேடம்..கவி செக்கேன்ட் ஸ்டாண்டர்ட் தானே படிக்கிறான்..எல்லாம் போக போக நல்லா படிப்பான்.. அதற்கெல்லாம் ஏன் கவலை படுறீங்க..”

என்று சொல்ல,

“அட..ஏன் யவ்வா நீ வேற..படிப்பு வரலைனா கூட எம்புள்ள என்ன மாதிரினு பெருமையா சொல்லிட்டு போயிட்டே இருப்பேனாக்கும்..அதொன்னும் பிரச்சனை இல்ல..ஆனா இந்த பைய உலகத்து சேஷ்ட்டையும் ஒன்னா வச்சிருக்கான்…பசங்கலேந்து மிஸ்ஸுங்க வரை எல்லாருட்டையும் தன் வாலுதனத்தை காட்ட வேண்டியது..யாரு பேச்சுக்கும் அடங்குறதே கிடையாது…படிக்கிறது ரெண்டாப்பு ஆனா பெரிய டானு மாதிரி இந்த நண்டு சிண்டெல்லாம் கூட்டு சேர்த்துக்கிட்டு இவன் செய்யுற அலப்பறை இருக்கே..ஷப்பா..மீட்டிங்க்கு மீட்டிங் இவனை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணவே அந்த மிஸ்ஸு ஒரு அரைமணி நேரம் எடுத்துப்பாங்க….”
என்று அவள் சொன்னதை கேட்டு சிரிப்பு பொங்கியது.

“சிரிக்காத யவ்வா..நான் சீரியஸா தான் சொல்றேன்..சின்னவளை பத்திகூட கவலையே இல்ல..அவ பாட்டுக்கு சமத்தா இருந்துப்பா..ஆனால் இவனை தான் சமாளிக்கவே பெரும்பாடாக இருக்கு..எப்பவும் இவுக அப்பா வருவாங்க..அவங்க முன்னாடி நிறுத்தி பேசவிட்டு நான் தப்புசிப்பேன்..இந்த தடவ மனுஷன் ஏதோ வேலைனு நைசா எஸ்ஸாகிட்டாரு..நான் என்ன சொல்ல போறேனே தெரியல..”
என்று புலம்பியவளை பார்க்க ஒரு பக்கம் பாவமாக தான் இருந்தது.

வித்யாவின் மூத்தமகன் கவினிற்கு இன்று பெற்றோர் – ஆசிரியர் கூட்டம்.
தேர்விற்கான மதிப்பீடினையும் அத்தோடு பிள்ளைகளின் பண்புநலன்களையும் கலந்தாயவே ஒவ்வொரு தேர்விற்கு பின்பும் நடத்தபடும்.

அதே போல் இன்று காலாண்டு தேர்வு முடிந்தபின் நடக்கும் மீட்டிங்கிற்கு தான் வந்திருந்தனர் வித்யாவும் யவ்வனாவும்.

கணவன் காலையிலே தனக்கு முக்கியமான வேலை இருப்பதால் இன்று வர இயலாது.மீட்டிங் முடிந்ததும் பிக்கப் செய்ய வருவதாக கூறியிருக்க தனியாக செல்ல வேண்டுமா என்று மலைப்பாக இருந்தது.

யாரை உடன் அழைத்து செல்லலாம் என்று யோசித்தவள் அனு மசக்கையின் சோர்வில் உறங்கி விட்டதால் யவ்வனாவை தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.

அவர்கள் கவினின் வகுப்பை வந்தடைய அங்கே ஏற்கனவே நிறைய பிள்ளைகளின் பெற்றோர்களும் அனைத்து பாட ஆசிரியர்களும் இருந்தனர்.

அவரவர் ரேங்க் கார்டை பெற்றோரிடம் ஒப்படைத்து அவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் பேசிவிட்டு கையெழுத்துட்டு அனுப்பி வைத்துக்கொண்டிருக்க வித்யாவை பார்த்ததும் பென்ச்சில் அமர்ந்திருந்த கவின்,

“அம்மா..”
என்று ஓடி வந்து அன்னையின் கையை பற்றிக் கொண்டவன் யவ்வனா புறம் திரும்பி,

“ஹாய் அக்கா..”என்றான்.

“இதான் எங்க கிளாஸ்..அதோ அந்த பென்ச்ல தான் நான் உட்கார்ந்திருப்பேன்..வாங்க க்கா..என் பிரண்ட்ஸ் எல்லாம் உங்களுக்கு காட்டுறேன்..”
சிறுபிள்ளைக்கே உரிதான ஆர்வத்தோடு பேச,

“டேய் நல்லவனே..பொறுடா.. அப்புறம் உன் ப்ரெண்டெல்லாம் காட்டலாம்..”
என்று பிடித்து நிறுத்தினாள் வித்யா.
அப்பொழுது,

“கவின் அம்மா தானே நீங்க..”
என்று அவர்களை அணுகிய வகுப்பு ஆசிரியர் அவர்களை அழைத்து சென்றவர் அவனது ரேங்க் கார்டினை எடுத்து வித்யாவிடம் கொடுத்தார்.

எல்லா பாடத்திலுமே மதிப்பெண் நன்றாக எடுத்திருக்க அதனை கவனித்த யவ்வனா கவினின் புறம் குனிந்து,

“நான் பார்த்த வரைக்கும் நீ தப்பி தவறிக் கூட புக்கை எடுக்க மாட்டீயே.. அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு மார்க்..”
என்று கிசுகிசுப்பாய் கேட்க,

“அக்கா..நான் சிட்டி ரோபோ மாதிரி..சங் சுவைங்னு ஒரு வாட்டி பார்த்தாலே போதும்..”
என்று தன் முகத்தின் முன் கையை ஆட்டி கூறினான் அவளை போல் கிசுகிசுப்பாவே..

தொண்டையை கனைத்துக் கொண்ட ஆசிரியர்,
“கவின் நல்லா படிக்கிறான்..அதில் எந்த பிரச்சனையும் இல்லை..ஆனால் படிப்பு மட்டும் இருந்தால் போதாதே மேடம்..டிஸிப்லீன் ரொம்ப முக்கியம் இல்லையா….”
என்று அவர் தொடங்கவும்

‘ஆஹா..ஆராம்பிச்சிடாங்களே..”
என்று வித்யாவுள் ஆபாய மணி அடித்தது.

யவ்வனா கவினை பார்க்க அவன் அப்பாவியாய் விழித்தான்.
“….. ஆனால் அது உங்க பையனுக்கு கொஞ்சம் கூட இருக்க மாட்டேங்குது..எப்போ பாரு நான்-ஸ்டாப் டாக்கிங்..கிளாஸ கவனிக்கிறதே இல்ல…லெசன் நடத்தும் போது கிளாஸை டிஸ்டர்ப் பண்றா மாதிரி எதாவது ஸ்டுப்பிட் கொஸினா கேட்கிறது…”

‘அப்படி என்னடா கேட்ப..”
மெதுவாய் யவ்வனா கேட்க,

“அவங்க சொல்றது புரியாம தான் கேப்பேன் க்கா..’
என்றான் பாவமாய்..

“…இவன் பண்றதோட கூட உள்ள பசங்களையும் கெடுக்குறான்..ஹோம் வொர்க் கொடுத்தால் வீட்டுல எழுதாம இங்க வந்து சப்மிட் செய்யும் போது அவசர அவசரமா எழுதுறது..கிளாஸ் ஹார்ஸ்லே சாப்பிடுறது..”

‘இப்போ இல்ல..அது போன வருஷம்..’

“பர்மிஸன் கேட்காம கிளாஸை விட்டு வெளியே போறது..”

‘ரொம்ப அர்சென்டா சுச்சு வந்துச்சு..பர்மிஸன் கேட்க லேட் ஆகுமுனு ஓடிட்டேன்..’

“பசங்களுட்ட வம்பு பண்றது..அடிக்கிறது.. டீச்சர்ஸுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்காமல் எதிர்த்து எதிர்த்து பேசுறது..”

என்று இன்னும் அவர் லிஸ்ட்டை நீட்டிக்கொண்டே போக ஒவ்வொன்றுக்கும் யவ்வனாவிடம் பதில் சொல்லிக்கொண்டே வந்தான் கவின்.

“டேய்..மகனே..என் வாத்தியாருட்ட கூட நான் இவ்வளவு பேச்சு வாங்குனது இல்லடா..”
என்று வித்யா கவலையாய் எண்ண பொறுக்க மாட்டாமல் ஆசிரியரின் பேச்சை யவ்வனா,

“குறுக்க பேசுறதுக்கு சாரி மிஸ்..ஆனால் நீங்க சொல்ற எல்லாத்தையும் நாங்க ஏத்துக்க முடியாது.. அதெப்படி எங்க புள்ள செய்யுற எல்லாமே தப்புனு சொல்வீங்க…கிளாஸை கவனிக்கலனு சொல்றீங்க…கவனிக்காம எப்படி கொஸின் கேட்பான்..கேள்வி கேட்க கேட்க தானே அறிவு வளரும்..அதை பற்றி மேலும் மேலும் யோசிக்க தோணும்…சின்ன பையன் அவனுக்கு தெரிஞ்சா மாதிரி தான் கேள்வி கேட்பான்..அதை நாம தான் புரிஞ்சிக்கிட்டு பக்குவமா அவனுக்கு விளக்கனும்..ஹோம் வொர்க் எங்க எழுதினாலும் சப்மிட் செய்யாமல் இருந்ததில்லைல.. அப்புறம் என்ன மிஸ்..? 

என்னைக்காவது ரொம்ப பசிச்சிருக்கும் சாப்பிட்டு இருப்பான்..சின்ன பசங்க அடிச்சிப்பாங்க உடனே சேர்ந்துப்பாங்க..நாம தன்மையா சொன்னா கேட்டுக்க மாட்டாங்களா என்ன..??கேப்பேல கவின்…”
என்று அவள் கேட்டதற்கு வேகமாய் மண்டையை உருட்டினான்.

“அப்புறம் என்ன மிஸ்.. இவ்வளவு கம்ப்ளைன்ட் சொல்றீங்களே..போன தடவையை விட இப்போ ரொம்ப நல்லா மார்க் எடுத்திருக்கான்.. அதுக்கு பாராட்ட வேண்டாமா…நாம ஊக்குவித்தால் தானே பிள்ளைங்களும் ஆர்வமா கத்துக்க தோன்றும்…நான் சொன்னதில்
தப்பேதும் இல்லையே மிஸ்..”
என்று அவள் முடிக்கும் போது அவர் கையெடுத்து கும்பிடாத குறை தான்..

அதன்பின் எதுவுமே பேசாமல் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அனுப்பிவிட வெளியே வந்ததும் அவளை கட்டிக் கொண்ட கவின்,

“சூப்பர் க்கா.. தேங்க்ஸ்… தேங்க்ஸ்..”
என்று குதித்தான்.

“அந்த மிஸ் எவ்வளவு பேசுவாங்க தெரியுமா..அவங்க வாயவே அடைச்சுப்புட்டியே..போற எடத்துல பொழச்சிப்ப போ..”
என்றாள் வித்யாவும் சிரிப்புடன்..

“பின்ன என்ன மேடம்..சின்ன பிள்ளைங்க விளையாட்டா தான் இருக்கும்..அதுக்கு போய் குற்ற பத்திரிக்க வாசிச்சா..”
என்று அவள் கூற,

“அதுக்குனு இவன் கேட்குற குண்டக்க மண்டக்க கேள்விக்கெல்லாம் எனக்கே சில நேரம் டென்ஷனாகிட்டும்..அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்..”
என்று வித்யா கூற அதே சமயம் அவள் அழைப்பேசியும் ஒலித்தது.
பிரகாஷ் தான்.

எடுத்த உடனே,

“சாரிம்மா..என்னால இப்பவும் வர முடியாது போல..வேலை நெட்டி முறிக்குது..தமிழ் வருவான் அவனோட வந்திடுங்க..”
என்று அவன் கூற அவளும் புரிந்துக் கொண்டவளாய்,

“சரி பரவால்லங்க..ஆனால் ஏன் தமிழ் தம்பிய சிரமப்படுத்தறீங்க…நாங்க ஆட்டோ பிடிச்சே வந்திடுவோமே..”
என்றாள் சங்கடமாய்.
தமிழ் எனவும் சட்டென்று நிமிர்ந்தாள் யவ்வனா.

“நானும் சொன்னேன்டி..அவன் தான் நான் ப்ரீயா தான் இருக்கேண்ணா..போயிட்டு வரேன்னு கிளம்பிட்டான்..”

“ஹோ..சரி…அப்புறம் இன்னைக்கு மீட்டிங் அமோகமா போச்சு…”

“ஏன்.. என்னாச்சு..”

“நீங்க வீட்டுக்கு வாங்க..சொல்றேன்..”
என்று கூறி வைத்தவள்,

“தமிழ் தான் அழைக்க வராராம்..”
என்று சொல்ல அவளுள் ஒரு இனிய படபடப்பு…

அன்றைக்கு பிறகு நிறைய முறை அவன் வீட்டிற்கு வந்திருந்தாலும் அவள் தூரமாய் நின்று பார்பாளே அன்றி அவன் முன் வரவில்லை.

ஏனோ அன்று அவன் அவ்வளவு விசுவாசமாய் பேசிய பின்னும் தான் செய்யும் வேலை எல்லாம் அவனுக்கு தெரிந்தால் என்ன செய்வான்..தன்னை பற்றி என்ன நினைப்பான் என்ற பயமே அவனிடம் விலகி நிற்க செய்தது.

ஆனால் இன்று அவனை நேரெதிரே பார்க்க தான் போகிறோம் என்னும் போது எழும் படபடப்பை மறைக்கவோ மறுக்கவோ முடியவில்லை.

Advertisement