Advertisement

அத்தியாயம்-6
நுழைவாயிலை தாண்டி சில அடிகள் வைத்ததும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள்.
“யப்பா..சாமி..வீடாய்யா இது..எத்தனை செக்போஸ்ட்..வெளியே வரதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்திடுச்சு..தேவையா எனக்கிதுலாம்…இதுல புதுசா வேற ஒரு என்ரீ..அந்த தாடிகாரனும் அவன் பார்வையும்..இருக்குற வில்லனுங்களோட மல்லுகட்டவே எனக்கு நேரம் இல்ல..இதுல நியூ என்ரீ வேற….கடவுளே..”
என்று தலையிலே தட்டிக்கொள்ள அருகில் சைக்கிளில் வந்த நபரோ அவளை விநோதமாய் பார்க்கவும்,
“அய்யோ..உணர்ச்சி வசப்பட்டோமோ..”
என்று கைகளை இறக்கி அமைதியாய் சாலையில் நடந்தவளுக்கு சில நிமிடங்களில் தெரிந்த வயல்வெளியை கண்டதும் முகம் பிரகாசமானது.
சிலுசிலுவென்று வீசிய காற்று இதமாய் அவளை வருடிச் செல்ல அதில் லயித்து நின்றுவிட்டாள்.
மனதில் வீட்டின் நியாபகம் அலைமோதியது.
‘இப்படி வரப்புல ஓடி திரிஞ்சிக்கிட்டு எவ்வளவு நிம்மதியா இருந்தேன்…பணம் இல்லேன்னாலும் சந்தோஷத்துக்கு குறையில்லாம இருந்தேனே..ஆனா..இப்போ..!!?!?நிம்மதினு ஒன்னு இல்லாமலே போயிடுச்சு…நான் செய்யுற பாவத்துக்கு அந்த ஆண்டவனே  நிச்சயம் என்ன மன்னிக்க மாட்டான்…”
விரக்தியாய் அவள் பெருமூச்சுவிட அதே நேரம் அவள் அலைபேசி சத்தமின்றி அதிர்ந்தது.
இடுப்பில் மறைத்து வைத்திருந்ததை எடுத்து பார்த்தவள் திரையில் மின்னிய எண்ணை பார்த்ததும் எரிச்சலானாள்.
“சாத்தான் நினைச்சதும் வரும்பாங்க..சரியா தான் இருக்கு…கொஞ்ச நிம்மதியா இருக்க விடுறானா…எடுக்கலேனாலும் பிரச்சனை..ச்சை கொடுமை…”
என்று முணுமுணுப்போடு அழைப்பை ஏற்றவள்,
“சொல்லுங்க சார்..”
என்றாள் அமைதியான குரலில்..
“________”
“யாருக்கும் இதுவரை என்மேல சந்தேகம் வரலை சார்..நீங்க இப்படி சும்மா கால் பண்ணிட்டே இருந்தா தான் நிச்சயம் நான் மாட்டுவேன்..”
“________”
“ திமிர் காட்டுற நிலைமையிலா நான் இருக்கேன்…?உள்ளதை சொன்னேன் சார்…யாராவது வர்ரதுக்குள்ள சீக்கிரம் விசயத்தை சொல்லுங்க..”
“_______’’
மறுமுனையில் கூறியவற்றை கேட்டு கோபம் பொங்கினாலும் அங்கும் இங்கும் நடந்தபடி வேண்டா வெறுப்பாய் ‘உம்..’ கொட்டியவள் அழைப்பை வைத்ததும்,
“இந்த நாய் சொல்றதை எல்லாம் கேட்கணும்னு தலையெழுத்து…”
என்று கடுப்பில் தரையை ஓங்கி உதைத்தாள்.
அவ்விடம் சற்று வழவழப்பாய் இருந்திருக்க இவள் உதைத்த வேகத்தில் இடறிவிட்டு சரியாக அருகில் இருந்த சேற்றில் பொத்தென்று விழுந்தாள்.
நொடியில் நடந்த நிகழ்வை உணரும்முன் அவளை சுற்றி பூச்சு பறப்பதுபோல் தலை சுற்றியது.
சற்று சுதாரித்தவள் முகத்தை அஷ்டக்கோனலாய் சுருக்கி தரையில் கையூன்றி எழ முயல வழவழப்பான தரையொ மீண்டும் சதி செய்தது.
“அய்யோ.. இதுவும் சதி பண்ணூதே..”
என்று அந்நிலையிலே தலையை பிடித்தபடி சோர்ந்துவிட்டாள்.
அச்சமயம் அருகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்க,
“எவன்டா அவன்..”
என்று ஸ்லோ மோசனில் தலையை திருப்பியவள் தாடிக்காரனை அதாவது தமிழை கண்டதும் விழித்தாள்.
பைக்கில் அமர்ந்தபடி அவளை பார்த்து சிரித்தவன் அவள் திரும்பி பார்க்கவும்,
“என்னம்மா..காத்தாட நடந்துட்டு வரேன்னு இங்க ஹாயா படுத்திருக்கீங்க..என்ன எக்சசைஸா..”
என்று நக்கலாய் வினவ அவனை முறைத்தவள்,
“இல்ல அங்கபிரதட்சணம் பண்றதா வேண்டுதல்..”
என்று சொல்ல,
“ஓஹோ..அப்படி..ம்ம்ம்..ஆனால் அது கோயில் வாசல்லில் தானே பண்ணுவாங்க…ம்ம்.. ஆகட்டும்.. ஆகட்டும்…”
என்று கூறி மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்ய,
“ஹே..ஹே..நில்லுய்யா…விழுந்துகிடக்குறது தெரியுதுல..அப்புறம் என்ன நெக்கலு..ஹெல்ப் பண்ணுய்யா..”
என்று அவள் கத்தவும் நிறுத்தியவன்,
“ய்யா வா..அடிங்க..”
என்று முணுமுணுத்தபடி இறங்கி வந்தான் தமிழ்.
“என்ன உன் பாட்டிற்கு வாய்யா..போய்யானு பேசுற..நான் யார் தெரியுமா…ஐயா வீட்டுக்கு வந்த விருந்தாளி போனா போதுனு விடுறேன்..இல்ல..”
என்று அவன் அதட்டவும்
வலித்த இடுப்பை ஒருக்கையால் பிடித்துவிட்டபடி,
“தெய்வமே.. தெரியாமல் சொல்லிட்டேன்..செத்த தூக்கி விடுறீங்களா..”
என்று பல்லை கடித்தபடி சொல்ல,
“ம்ம்..அது..”
என்ற அவனும் அவளை கைபிடித்து தூக்கி நிறுத்தினான்.
“ஆமா..ஏன் வீட்டில என்னை பார்த்ததும் பயந்து ஒலியப்பார்த்தீங்க….”
தட்டு தடுமாறி நின்றவளை பார்த்து தமிழ் கேட்டான்.
அய்யோ.. கவனிச்சிருக்கானே..’
“பயமா…?எனக்கா..?.நான் சிங்கம்-புலியெல்லாம் பார்த்தே பயப்பட மாட்டேன்…உங்களை பார்த்து ஏங்க பயப்படனும்…”
என்று கையை உதறிக்கொண்டு அவனை தாண்டி நடந்தவளை ஒரே எட்டில் அடைந்தவன்,
“சரி நம்பிட்டேன்..இந்தாங்க உங்க போன்..எடுக்காம போறீங்க..”
என்று கீழ கிடந்ததை எடுத்து நீட்டினான்.
நாக்கை கடித்து வேகமாய் அதனை பெற்றவள்
‘அடியேய்..இப்ப தான் யாருக்கும் சந்தேகம் வரலைன்னு சொன்ன..அதுக்குள்ள இப்படி சொதப்புறீயே..’
என்று மானசீகமாய் தலையில் கொட்டிக்கொண்டு  அங்கிருந்து ஓட பார்க்க ஆனால் அவனோ விடுவதாய் தெரியவில்லை.
“ஏங்க..இப்படியேவா போக போறீங்க..”
என்றான் சேறு படிந்திருந்த அவள் உடையை சுட்டிக் காட்டி
“எப்படியோ போய் சேர்றேன்..விடுங்க பாஸ்..”
“இல்ல..நாய் கீய் தொறத்தும்மேனு சொன்னேன்..நீங்க தான் சிங்கம்-புலிய பார்த்தே பயப்பட மாட்டீங்களே.. அப்புறம் என்ன..”
என்று போற போக்கில் சொல்லிவிட்டு திரும்பி பைக்கை நோக்கி தமிழ் நடக்க அவன் கூறியதை கேட்டு தேங்கியவள்,
“நாயா..??!!?”
என்று அதிர அவன்  இதழ்களில் லேசாய் ஒரு நெளிவு.
யவ்வனா,
“வேறென்ன பண்ண முடியும்..”
என்று சத்தமாய் அவனிடம் கேட்க நின்று நிதானமாய் திரும்பியவன்,
“என்னையா கேட்டீங்க..”
என்று கேட்க,
“உஙகள தான்.. சொல்லுங்க..”
என்றாள் பாவமாய்.
“ம்ம்ம்… பக்கத்துல தான் பம்பு செட் இருக்கு..நானே கூட்டிட்டு போவேன்….ஆனால் எனக்கு மில்லுக்கு போகனும்..நிறைய வேலை இருக்கு.. நேரம் இல்ல..”
’தாடிக்காரன் ரொம்ப பில்டப் கொடுக்குறானே..பேசாம இவனையும் இந்த சேத்துல தள்ளிவிட்டா  என்ன..’
என்ற யோசனையோடு அவனை நோக்கி அவள் மெல்ல வர,
“ம்ச்..உங்களை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு..சரி வாங்க..”
என்று அவன் கூறவும்
‘தப்புச்சிட்டான்..பொழச்சு போ..’
என்று அவ்வெண்ணத்தை கைவிட்டு அவனை பின் தொடர்ந்து நடந்தாள்.
மௌனமாய் சில அடிகள் நடந்தாலும் இருவர் மனதிலும் மற்றவரை பற்றி சிந்தனையோடு வர முதலில் அதை கலைத்தது தமிழ் தான்.
“எங்க ஊரு எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்கல்ல..இந்த மாதிரி வயல்வெளிலாம் சினிமால மட்டும் தானே பார்த்திருப்பீங்க..”
என்றவனை ‘யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னாய்…’ என்ற பாவனையில் அவள் பார்க்கவும் இல்லை முறைக்கவும்,
“பொதுவா சிட்டிவாசிகள் எல்லாரும் அப்படி தானே அதான் சொன்னேன்..”
என்று அவன் விளக்கம் அளிக்க,
‘நான் சிட்டினு சொன்னேனா..’
என்று உள்ளே நொடித்துக் கொண்டாலும்,
“சிட்டினாலும் நாங்க திருச்சி தாங்க..அதனால மண்மனம் இன்னும் எங்கள விட்டு போகல..”
என்றாள் தோளை சிலுப்பிக் கொண்டு..
பம்பு செட்டை அடைந்ததும் உள்ளே தண்ணீரை திறந்துவிட்டு சற்று தள்ளி அவன் நின்றுக்கொள்ள பாய்ந்து வந்த தண்ணீரை கண்டதும் யவ்வனா மனம் குதூகலிக்க ஆடையை சுத்தப்படுத்திக்கொண்டவள் குளிக்க ஆசையாக இருந்தாலும் சூழ்நிலை கருதி  கை-கால்களை மட்டும் நனைத்து விளையாடினாள்.
“இன்னும் எவ்வளவு நேரமுங்க….”
பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்தும் அவள் நகர்வதாய் தெரியவில்லை எனபதால் தமிழ் கேட்க அவளோ
“ப்ளீஸ்..ப்ளீஸ்..ஒரு ரெண்டு நிமிஷம்…”
என்றவள் எதர்ச்சியாய் திரும்ப இவளுக்கு மறுபுறம் ஒரு கையை இடுப்பில் ஊன்றி மறுக்கையில் இருந்த கைகடிகாரத்தில் மணியை பார்த்தபடி நின்றான்.
அவனது அந்த தோரணை அவள் இதழ் கடையில் புன்னகையை தோற்றுவிக்க தாமதமானாலும் யாரென்றே  தெரியாத தன்னை எப்படியோ போ என்று விடாமல் அவளுக்காக பொறுமையாய் நிற்பது ஈரத்தில் நனைந்திருந்த கைகளின் குளுமையை போல் மனமும் சில்லென்று இருந்தது.
“யாருங்க நீங்க..”
திடீரென அவள் கேட்கவும் அவள் புறம் பார்வையை திருப்பியவன் ‘இதென்ன கேள்வி..’ என்பது போல் பார்க்க,
“இல்ல..கொஞ்ச நேரத்துக்கு முந்தி ‘நான் யார் தெரியுமா..’னு ஹை பிச்சில் கேட்டீங்கல்ல..எனக்கு நிஜமாகவே நீங்க யாருனு தெரியாது..அதான் கேட்டேன்..”
என்று அவள் கூறியபடி இறங்கி அவன் அருகில் வந்தாள்.
அவள் சொன்னதை கேட்டு மெல்லியதாய் ஒர் புன்னகை சிந்தி பெண்ணவள் மனதில் சத்தமின்றி பூகம்பத்தையே உருவாக்கினான்.
திராவிடரின் அக்மார்க் நிறத்தில் இருந்தாலும் மிகவும் வசீகரமான தோற்றம் தமிழுடையது. புன்னகை பூசிய அவன் முகத்தை காணும் கண்ணியரை நிச்சயம் மீண்டும் பார்க்க தூண்டும்.அவ்வகையில் தான் தற்போது யவ்வனாவும் இருக்க,
‘இவங்ககூட நின்னா நானெல்லாம் ரொம்ப சுமாரா தெரிவேனே..”
என்று சம்மந்தமே இல்லாமல் அவள் மனம் கவலைக்கொள்ள இதை எதையும் அறியாது அவள் கேள்விக்கு பதிலளித்தான் தமிழ்.
“என் பேரு தமிழ்..நடராஜன் ஐயாக்கு பாடிகார்ட்,பி.ஏ எல்லாம் அடியேன் நானே.. அப்புறம்….தேன்சோலையோட மோஸ்ட் எளிஜிபுல் பேச்சுலர்.. இதுக்குமேல நல்லவன்..வல்லவன் நாலும் தெரிஞ்சவன் இதெல்லாம் நீங்களே ஃபில் பண்ணிக்கோங்க.”
என்று அவன் சொல்ல ‘நடராஜன் ஐயா..’ என்றதும் சட்டென்று அவள் மனம் விழித்துக் கொண்டது.

Advertisement