Advertisement

அத்தியாயம்-24
“யவ்வனாவிற்கு வரன் பார்க்குறீங்களா..”
என்று திடீரென்று அவர் கேட்கவும் யவ்வனாவிற்கு பக்கென்று ஆக,
“ஆஹா…அவர் சொன்ன மாதிரியே கேட்டாங்களே..”
என்று தவித்தவள் ஓரவிழியில் தமிழை தேட அப்பொழுது தான் அவன் பிரகாஷோடு ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.
‘ம்க்கும்..இப்போதிக்கு இவர் திரும்புகிறா மாதிரி தெரியல..’
என்று நொந்தவள் மீண்டும் தன் அன்னை அத்தையின் பேச்சில் கவனமானாள்.
“ம்ம்..ஆமாங்க..யவ்வா அப்பா தரகரிடம் சொல்லியிருக்கார்..நல்ல சம்பந்தமாக பார்த்துட்டு தான் இருக்கோம்..என் கண்ணு குடும்பத்துக்காக நிறையவே கஷ்டபட்டுட்டாள்.. தனக்காகனு எதுவுமே யோசிக்காது… இவளை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தால் தான் எங்களுக்கு நிம்மதியே…”
என்று வெள்ளை சிரிப்போடு பாசமாய் அவர் சொல்ல வசுமதியும் புரிதலாக புன்னகைத்தார்.
“நான் சுத்தி வளைத்து கேட்க விரும்பல..என் மகன் தமிழை உங்களுக்கு தெரியும்..என் மகனுக்கு உங்க மகளை தரீங்களா..”
என்று பளீச்சென்று வசுமதி கேட்டுவிட இதை சற்றும் எதிர்பாராத முல்லை திகைத்தார்.
தமிழ் மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் இந்த கோணத்தில் சிந்திக்காததால் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார்.அவர் நிலை உணர்ந்தவராய் வசுமதியும்,
“ஒன்னும் அவசரமில்லை..நான் என் விருப்பத்தை தான் சொன்னேன்..நீங்க உங்க வீட்டில் கலந்துப்பேசிட்டு சொல்லுங்க..”
என்று கூறியவர் முல்லையை சாதாரணமாக்க வேறு பேச்சிற்கு தாவினார்.
பேச்சு அவருடன் இருந்தாலும் மகளை கவனித்த முல்லை அவளிடம் வெளிப்பட்ட தவிப்பையும் கண்களில் தெரிந்த கள்ளதனத்தையும் காணும்போது விசயம் புரிப்பட்டது.
“ஐஐஐ…யவ்வா அக்கா..”
என்று உற்சாகக்கூவலோடு அவளிடம் ஓடிவந்த கவினை கண்டதும் அவள் முகமும் சிரிப்பில் விரிந்தது.
“கவின் செல்லம்..”
என்று எழுந்து அவன் இருக்கன்னத்தையும் கிள்ளி முத்தமிட,
” அக்கா….இத்தனை நான் ஏன் வரவே இல்லை..அன்னைக்கு உங்களுக்கு என்னாச்சுனு நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா..சித்தப்பா தான் நீங்க உங்க அம்மா- அப்பாவை மிஸ் பண்ணீங்களாம்..அதனால் உங்க வீட்டுக்கே போயிட்டீங்கனு சொன்னாங்க..”
என்றான் வெளேந்தியாக..
குழந்தைகளின் தூய்மையான அன்பிற்கு ஈடு இவ்வையகத்தில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை..
அவர்கள் உலகில் மட்டும் தான் எதிர்பார்ப்புகள் இல்லாமல் அன்புக்கும் இடமுண்டு..எத்தகைய தவறு செய்தவர்களுக்கு எளிமையான சிரிப்போடு மன்னிப்பும் உண்டு..
“சாரி கண்ணா..இனி உன்னை பார்க்க அடிக்கடி வரேன்..சரியா…எங்கே மது..”
என்று பேசியபடி அவனோடு நடக்க மற்ற சிறுவர்கள் இருந்த இடத்திற்கு அவளை அழைத்து சென்றிருந்தான் கவின்.
பட்டு பாவாடை சட்டையில் இருந்த குட்டி தேவதை மதுவை தூக்கி கொஞ்சியவள் மற்றவர்களின் விளையாட்டையும் சேட்டையையும் பார்த்து சிரித்தபடி அவர்களோடே அவள் அமர்ந்துவிட்டாள்.
“தக்காளி…உன்னை அங்கே விட்டுவிட்டு வந்தால் இங்க என்னடி பண்ற..”
என்றபடி எங்கிருந்தோ வந்து தமிழ் நிற்க,
“தக்காளியா…”
என்று அவள் முறைக்க சிரித்தவன்,
“ஹாஹா..இன்னைக்கு தளதளவென்று தக்காளி மாதிரி இருக்க..அதான் புது பெயர்..”
என்று அவன் கண்சிமிட்ட தலையில் தட்டிக்கொண்ட யவ்வனா,
“கடவுளே..இந்த மனுஷனை மறுபடியும் விறைப்பாவே மாத்திடு..தாங்கல்ல..”
என்று போலியாய் அலுத்துக்கொண்டாள்.
“வேணாட்டி போடி..நான் மதுவை கொஞ்சிக்கிறேன்..”
என்று அவள் மடியில் இருந்த மதுவை தூக்கிக் கொண்டவன்,
“சரி….ஏன் அங்கேர்ந்து எஸ்கேப்பாகிட்டே..அம்மா என்ன சொன்னாங்க..”
என்று கேட்க அப்பொழுது தான் நினைவு வந்தவளாய்,
“அய்யோ..சொல்ல மறந்துட்டேன்..அத்தை நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டாங்க..”
என்று அவர்கள் சம்பாஷணையை சொன்னாள்.
“செம்ம..நல்ல விஷயம் தானே…இதுக்கு ஏன் பயப்படுற..”
“பயப்படல..ஆனால் ஒருமாதிரி தவிப்பா, படபடப்பாய் இருக்கு…”
என்று அலைப்பாயும் விழிகளோடு சொன்னவளின் கையை பற்றிக் கொண்டவன்,
“நான் இருக்கேன்ல..ரிலாக்ஸ்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..”
என்று கையை ஆறுதலாய் அழுத்தி கூற அது அவளுக்கும் தெம்பாய் இருந்தது.
அதன்பின் விழா முடிந்து அன்னையோடு கிளம்பிய யவ்வனா வரும்வழி எங்கும் அமைதியையே கடைப்பிடிக்க முல்லை தான் முதலில் ஆரம்பித்தார்.
“வசுமதியம்மா கேட்டாங்களே…நீ என்ன சொல்ற யவ்வா..”
என்று பார்வையை கூர்மையாக்கி அவர் கேட்டதற்கு திருதிருவென விழித்தாள்.இதுவரை எதையும் பெற்றோரிடம் சொல்ல தயங்கியது இல்லை.ஆனால் இன்று   ‘எனக்கும் பிடிக்கும்.. விரும்புகிறேன்..’ என்று சொல்ல பெரும்கூச்சம் வந்து தாக்க,
“உங்க இஷ்டம் ம்மா..”
என்றாள் எங்கோ பார்த்தபடி..
வீட்டிற்கு வந்ததும் கணவர் காதில் அவர் விஷயத்தை போட அவரும் யோசனையில் ஆழ யவ்வனாவிற்கு திக்..திக்கென்று இருந்தது.ஏனெனில் அதன்பின் அந்த பேச்சை யாரும் அவள் காதுப்பட எடுக்கவே இல்லை.
‘என்ன தான் முடிவு பண்ணிருக்கீங்க..’ என்று கேட்கவும் முடியாமல் அவள் தவிப்போடு நாட்களை கடந்த அந்த வார இறுதியில் யவ்வனாவின் இரண்டு தமக்கையரும் குடும்பத்தோடு வந்திருக்க மகிழ்ச்சியில் வீடே இரகளையானது.
அன்றைய பொழுது அருமையாய் கழிய மாலையில் கொல்லைவாசலில் தொங்கிய உலர்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த யவ்வனாவை தேடி வந்த தம்பி வாசு,
“யக்காவ்…இங்க என்ன பண்ற..உள்ளே உன் கல்யாண விசயம் தான் போயிட்டு இருக்கு.. சீக்கிரம் வா..”
என்று அவன் படபடத்தான்.
லதாவும் மஞ்சுளாவும் ஒன்று சேர வருகை தந்திருக்கும்போதே அவள் இதை யூகித்து இருந்ததால்,
“பேசட்டும்..அதுக்கேன்டா நீ இப்படி பதறுற..”
என்று அவள் அசால்ட்டாய் சொன்னபடி தன் வேலையை தொடர,
“ம்ம்..நான் ஏன் பதறுறேனா..அங்க தமிழ் அத்தானை லதாக்கா ,மஞ்சுக்காவோட சேர்ந்துக்கிட்டு இது  சரிவராது அது சரிவராதுனு சொல்லிட்டு இருக்குங்க..இப்படியே விட்டேனா அப்பா அம்மா மனசை முழுக்க கலைச்சி விட்டுரூங்க..பார்த்துக்க..”
என்று அவன் எச்சரிக்க, 
‘அடிப்பாவிங்களா..அக்காவாய் லட்சனமாய் தங்கச்சி கல்யாணத்திற்கு ஹெல்ப் பண்ணுவாளுங்கனு நினைத்தால் ஆட்டத்தையே தலைகீழா ஆக்குறாளுங்க..’
என்று மனதில் சாடியவள்,
‘ஆமா..இவனுக்கு எப்படி தெரியும்..எனக்கு மேல கவலை  படுறான்…’
என்றெண்ணி,
“தமிழ் அத்தானா…??இதென்னடா புதுசா..?”
என்று அவள் அறியா பிள்ளைப்போல் கேட்டாள்.
“ம்க்கும்..இந்த பச்ச மண்ணு ஆக்ட் எல்லாம் என்னுட்ட விடாதக்கா…அன்னைக்கு அவர் கிளம்பினபோது ‘டாட்டா..’ சொல்லாமேன்னு வெளியே வந்தால் மேடம் தனியா படம் ஓட்டிட்டு இருக்கீங்க…”
என்று அவன் கைகளை கட்டிக் கொண்டு முறைக்க மாட்டிக்கொண்டதால்,
“ரொம்ப பேசாதடா..”
என்று அவன் தலையில் தட்டி சமாளித்து துணிகளை அள்ளிக்கொண்டு வீட்டில் உள்ளே ஓடினாள்.
சமையலறையில்  முல்லை சூடாக பஜ்ஜி சுட்டு எடுக்க அவருக்கு உதவியபடி லதாவும் மஞ்சுளாவும்  பேசிக்கொண்டிருக்க கூடத்தில் தங்கை ஷிவாணி பாடம் எழுதிக் கொண்டும் அக்கா பிள்ளைகள் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.
நடையில் நிதானித்து துணிகளை ஷவாணி அருகில் போட்டு அதனை மடித்துக் கொண்டே சமையலறையில் ஒரு காது வைத்தபடி நின்றாள்.
அதேசமயம் முல்லை,
“அந்தம்மா ரொம்ப நல்ல மாதிரியா தெரிஞ்சாங்கடி..அதான் யோசிக்கிறேன்..”
என்று சொல்ல,
“இருக்கட்டும்மா..ஆனால் அவங்க ஊரு, குடும்பம் எதுவுமே நமக்கு தெரியாது.. அவ்வளவு தொலைவுல யவ்வனாவை கட்டிக் கொடுக்கனுமா..”
என்று லதா யோசனையாய் இழுக்க,
“ஆமாம்மா..அன்னைக்கு வந்தாங்களே அவங்க தானே..போலீஸு அது இதுனு எவ்வளவு கோபமா பேசீனாங்க..ரொம்ப கோபக்காரரோ என்னவோ..”
என்று மஞ்சுளாவும் தூபம் போட்டாள்.
“நீ சொல்றதும் சரிதான்டி மஞ்சு..பார்க்க அம்சமாய் இருந்தாலும் ரொம்ப சிடுசிடுனு இருப்பார் போல..நம்ம யவ்வனாவே கலகலப்பான புள்ள.. அதெல்லாம் ஒத்துவராது வேணாம் சொல்லிடலாம்..இதைவிட வேறு நல்ல சம்பந்தம் பார்க்கலாம்..”
என்று லதா தீர்மானமாய் சொல்லவும் சுர்ரென்று யவ்வனாவிற்கு கோபம் ஏற பொறுமை இழந்தவளாய் மடித்துக் கொண்டிருந்த துணியை போட்டுவிட்டு விடுவிடுவென்று அக்காளிடம் வந்தாள்.
“யக்காவ்..என்ன ரொம்ப பண்றீங்க..அவரு சிடுமூச்சினு நீ பார்த்துயா..ஒருநாள் கோபமாய் பேசினால் அவரு அப்படிதான்னு நீ எப்படி முடிவு பண்ணுவ…அம்மா.. நீ என்ன அன்னைக்கு ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துட்டு இன்னைக்கு அக்காங்க பேசுறதுக்கு ஊம் கொட்டிட்டு இருக்கீங்க..அவர் அப்படியே இருந்தால் தான் என்ன..நான் தானே கட்டிக்க போறேன் எனக்கு புடிச்சிருக்கு..எனக்கு கண்ணாலம்னு ஒன்னு நடந்தால் அது அவரோட மட்டும் தான்..இல்லேன்னால் எப்பவும் உங்க மகளாவே இருந்திடுறேன்…”
என்று வரிந்துக் கட்டிக்கொண்டு யவ்வனா பேச அவளையே அமைதியாய் ஒருநிமிடம் பார்த்தவர்கள் மறுநிமிடம் வெடித்து சிரிக்க,
‘அய்யையோ….அவசரப் பட்டோமோ..’
என்று விழித்தாள்.
“எம்மாடி…இதை உன் வாயிலிருந்து வர வைக்கிறதுக்குள்ள..என்ன பாடு..”
“எப்பவும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு தானடி பேசுவ..இப்போ விரும்புறேன்னு சொல்ல ஏன் உனக்கு இவ்வளவு தயக்கம்..உங்க இஷ்டமாம்..அப்போ நாங்க வேண்டாம்னு சொன்னால் கேட்டுபியா..
அம்மா அப்போவே எல்லாம் சொல்லீட்டாங்க..இப்போ நாங்க வந்ததே உங்க கல்யாணத்தை பேசி முடிக்க தான்..இன்னைக்கு தமிழ் ஊருக்கு தான் அப்பா,பெரியத்தான், சின்ன அத்தான் எல்லாரும் போயிருக்காங்க…”
என்று தமக்கையர் இருவரும் கிண்டலோடு சொல்ல இதனை எதிர்பார்க்காத யவ்வனாவை வெட்கம் பிடுங்கி திங்க ஒற்றை கைக்கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டாள்.
வாசுவும் ஷிவாணியும் அங்கே இணைந்துக்கொள்ள,
“என்ன ஆச்சரியம் என் அக்கா வெட்க படுறாளே…மழைத்தான் கொட்ட போகுது..”
என்று ஷிவாணியும் கேலி பேசியவள்,
“சரி..சரி..வாசு நான் தான் ஜெய்த்தேன்..ஒழுங்கா எண்பது ரூபாய் டைரி மில்க் வந்தாகனும்..”
என்று வாசுவை மிரட்ட,
“அக்கா புத்திசாலி..உங்க ஆக்டிஙை கண்டுபிடித்து பதிலுக்கு பல்ப் கொடுத்துடுவான்னு கெத்தாய் சொன்னேன்..நீ என்னான்னா பெரிய ட்யூப்லைட்டா நிக்கிற..உன்னால எனக்கு எண்பது ரூபாய் நஷ்டம்..போக்கா..”
என்று அவன் அலுத்துக்கொள்ள,
“ஹிஹி..விட்றா..விட்றா..அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..”
என்று இளித்தாள் யவ்வனா.அப்பொழுது விடாமல் உடன்பிறப்புகள் கேலி செய்து அவளை ஒருவழியாக்க மக்களின் விளையாட்டை ரசித்து பார்த்தபடி இருந்தார் முல்லை.
இரவு வீடு திரும்பி ஆண்களை ஆர்வத்தோடு அனைவரும் பார்த்து, ‘என்ன..ஏதென்று..’ விசாரிக்க, “எல்லாம் நல்ல செய்தி தான் என்றார் முருகானந்தம் மனம் நிறைவோடு..
“ஊருக்குள்ள விசாரிச்சோம்.. எல்லாருக்கும் அவரை நல்லா தெரிந்திருக்கு.. எல்லாம் அப்படி தூக்கி வைத்துக் பேசுறாங்க..கேட்கவே சந்தோஷமா இருந்தது.மாப்பிள்ளையை பார்த்தும் பேசிட்டு வந்தோம்…ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்க..பேச்சிலேயே அத்தனை தெளிவும் நிமிர்வும் தெரிந்தது..நம்ம பிள்ளைக்கு ஏற்ற ஜோடி தான்..அவங்க அம்மாவிடமும் பேசிட்டோம்..நாளை கழித்து மறுநாள் நல்ல நாளாக இருக்கு…அப்போ பொண்ணு பார்க்க வருகிறோம்..அன்னைக்கே தாம்பூலமும் மாத்திக்கலாம்னு சொல்றாங்க..”
என்று பெரிய மருமகன் விளக்க கேட்டுக் கொண்டிருந்த எல்லாருக்கும் மகிழ்ச்சியே..
திருமணம் உறுதியாகி விட்டதால் மற்ற விசயங்களையும் அடுத்தடுத்து செய்ய வேண்டியவையும் பற்றி பரபரப்பாய் பேச்சு ஓட உள் அறையில் இருந்த யவ்வனாவிற்கோ நடப்பது கனவா..நினைவா..என்ற மயக்க நிலைத்தான்.
கனவிலே மிதந்தவளாய் நேரங்கள் ஓடினாலும் அப்படியே அமர்ந்திருந்தவளை,
“யவ்வா..”
என்ற சின்ன அத்தானின் குரல் கலைக்க,
“ஆங்..வரேன் அத்தான்..”
என்று எழுந்து அவனை தேடிச்செல்ல தனியாய் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தவன் இவளை கண்டதும்,
“இதோ வந்திட்டாள் சகல…”
என்று அலைபேசியில் கூறி அவளிடம் கொடுத்துவிட்டு செல்ல,
யாரென்று புரிந்ததால் படபடக்கும் இதயத்தோடு காதில் வைத்தவள்,
“தமிழ்..”
என்றாள் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி..
“சந்தோஷமாடி…”
என்று கிசுகிசுப்பாய் அவன் குரல் அவளை தீண்டவே,
“என் காலு தரையிலே படல.. அவ்வ்வ்வ்வளவு சந்தோஷம்..”
என்று பூரிப்போடு சொல்ல இதனை சொல்லும்போது குவியும் அவள் உதட்டின் அபிநயம் அவன் கண்முன்னே விரிய கற்பனையிலே இரசித்தான் காதல் கொண்ட பித்தனாய் தமிழ்.
அதன் பின்னான பேச்சு அவர்களை வேறு லோகம் இட்டு செல்ல காதலின் அடுத்த அத்தியாயத்தில் அழகாய் நுழைந்தனர் அறியாமலே..

Advertisement