Advertisement

அத்தியாயம்-23
நாட்கள் அமைதியாய் நகர யவ்வனாவின் வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பியிருந்தது.
சில நாட்களுக்கு மேல் அவளுக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் மீண்டும் வேலைக்கு முயற்சிப்பதாக கூறவும் அவள் தந்தை ஒரேயடியாக மறுத்துவிட்டார்.ஏற்கெனவே அதனால் வந்த வினை தான்  என்ற எண்ணம் பதிந்துவிட்டதால் அவருக்கு அவளை அனுப்புவதில் விருப்பம் இல்லை.
எனவே யவ்வனாவும் தாய் தந்தையோடு வயலிற்கு செல்ல தொடங்கி விட்டாள்.சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்த வேலை என்பதால் அவளுக்கு சிரமம் இல்லை.ஏன் இன்னும் சிரத்தையுடன் மகசூல் பெருக என்ன செய்யலாம் என்பதலில் முழு ஈடுபாட்டோடு இறங்கி இருந்தாள்.
இதன் நடுவே ‘தமிழ் அன்று பிறகு நம்மை எந்த விதத்திலும் தொடர்ப்புக் கொள்ளவே இல்லையே..’ என்ற கவலை  மனதின் ஒருவோரத்தில் அரித்துக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் ஒருநாள் அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் நடராஜனும்-பல்லவியும்  அனுவின் வளைகாப்பிற்கு அழைக்க வந்திருந்தனர்.
அத்தனை பிரச்சனைகளுக்கு பின் அவர்கள் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்க தோன்றினாலும் குற்றவுணர்ச்சியில் அவர்களை சந்திக்கவே அவளுக்கு மிகவும் தயக்கமாய் இருந்தது.ஆனால் அதனை எதுவும் மனதில் வைத்துக் கொள்ளாது  நடராஜன் ஐயாவே நேரில் வந்து அழைத்த அவர்கள் பெருந்தன்மையை எண்ணி அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
கட்டாயம் குடும்பத்தோடு வரவேண்டும் என்ற அன்புக்கட்டளை இட்டே அவர்கள் செல்ல கூட தமிழ் வந்திருப்பானோ என்றெண்ணி ஏமாந்தாள் யவ்வனா.அந்த ஏமாற்றம் கோபத்தை கொடுக்க,
‘நேரில் சிக்குவல அப்போ இருக்கு..’ என்று எண்ணிக் கொண்டாள்.
அவர் அவ்வளவு தூரம் வருந்தி அழைத்ததால் விஷேச நாள் அன்று யவ்வனா தன் அன்னையோடு கிளம்பி வந்தாள்.
சாதாரண நாளிலே அழகாய் இருக்கும் வீடு அன்றைய வளைகாப்பு நிகழ்ச்சிக்காக அலங்கரிக்கப்பட்டு மிக ஆர்பாட்டமாய் இருக்க அதனை இரசித்து வீட்டை பற்றி அம்மாவிடம் பகிர்ந்தபடி வந்தவள் வித்யாவை கண்டு தயங்கினாள்.
வித்யாவும் அவளை பார்ததும் அவர்களை மரியாதையாக வரவேற்றாலும் அவளிடம் பேசும்போது எப்பொழுதும்  இருக்கும் கலகலப்பு இல்லை.அதுவே சொன்னது அவள் மனநிலையை சொல்ல,
“ம்மா…நீங்க உள்ள போங்க நான் பின்னாடியே வரேன்..”
என்று அவரை உள்ளே அனுப்பிவிட்டு வித்யாவிடம் வந்தவள்,
“என்னை மன்னிச்சிடுங்க அக்கா..நீங்க என்மேல எவ்வளவு பாசம் வைத்தீங்கன்னு தெரிந்தும் அதுக்கு துரோகம் செஞ்ச என்னை நீங்க வெறுத்திருப்பீஙகன்னு புரியுது..நான் செஞ்ச எதையும் நியாயப்படுத்த விரும்பல.. ஆனாலும் மன்னிச்சிடுங்க க்கா ப்ளீஸ்..”
என்று இறைஞ்சுதலாய் அவள் பேச,
“இல்ல யவ்வனா..உன் சூழ்நிலை தெரியவந்தபோது எனக்கு கோபமெல்லாம் போயிடுச்சு..ஆனால் வருத்தம் இன்னும் மனசுல அப்படியே தான் இருக்கு..என்னால சட்டுன்னு மாற முடியல… இருந்தாலும் முயற்சி பண்றேன்..”
என்று மனதில் இருந்ததை உண்மையாய் சொல்லிவிட்டு நகர யவ்வனாவிற்கு கஷ்டமாக தான் இருந்தது.
வித்யா நிலையில் இருந்து பார்த்தால் அவள் சொல்வது சரி என்றே தோன்ற அடுத்து அனுவை குறித்து மனம் அடித்துக் கொண்டது.
வித்யாவை போல் அனுவும் விலகி நடந்தால் நிச்சயம் அவளால் தாங்க முடியாது.ஏனெனில் அனு மீது யவ்வனாவிற்கு உள்ள அன்பை வார்த்தையில் விவரிக்க இயலாது.
நிகழ்ச்சி தொடங்க சர்வ அலங்காரத்தோடு தாய்மையின் பூரிப்பில் இருந்த அனுஷ்யாவை மனையில் அமர வைத்து முதலில் பல்லவி அவளுக்கு நலங்கு பூசி வளையல் அணிவிக்க சற்று தள்ளி நின்று மனைவியை இரசித்துக் கொண்டிருந்தான் மனோ.
அதன்பின் ஒவ்வொருவரும் வரிசையாய் வந்து சடங்கை செய்ய அப்பொழுது யவ்வனாவை பார்த்ததும் முகம்மலர அவளை அருகில் அழைக்கவும் அனுவை விட இருமடங்கு பிரகாசமானாள் யவ்வனா.
அருகில் சென்று நலுங்கை எடுத்து கன்னத்தில் பூசியவள் வளையலை அணிவிக்கும் போது கண்கலங்க,
“நீங்களும் என்னை வெறுத்திருப்பீங்களோன்னு பயந்துட்டேன் மேடம்..”
என்று உடைந்த குரலில் கூறியவளை அணைத்துக் கொண்ட அனு,
“ச்சீ லூசு..அப்படிலாம் இல்ல..உன் இடத்தில் யாரு இருந்தாலும் அப்படி தான் செஞ்சிருப்பாங்க..எனக்கு தெரியும் யவ்வனா உனக்கு என்மேல எவ்வளவு பாசம்னு.. உன்னை நான் தப்பாவே நினைக்கல..”
என்றளின் புரிதலில் அவள் நெகிழ்ந்து போனாள்.
“தேங்க்ஸ் மேடம்..”
“தேங்க்ஸ் எல்லாம் ஏன் யவ்வனா..இந்த மேடம்ன்னு சொல்றதை விட்டாலே போது.. அப்புறம் புடவையில ரொம்ப அழகா இருக்க யவ்வா..”
என்று அவள் சிரிப்புடன் கூற வெட்கபுன்னகையோடு நன்றி தெரிவித்தவள் அடுத்தவருக்கு வழிவிட்டு நகர்ந்தாள்.
மனம் நிறைய தன் அம்மாவோடு வந்து அமர்ந்துக் கொண்டாள்.
அதே சமயம் வீட்டிற்கு மற்றொரு முக்கியமான நபரும் வருகை தந்திருந்தார்.அவர் தான் கலைவாணி அனுவின் அன்னை.
அவரை வரவேற்று அழைத்துச் சென்ற பல்லவி மருமகன் அருகில் வந்து,
“அனு..யாரு வந்திருக்காங்க பாரு..”
என்று அவள் கவனத்தை அவர்புறம் திருப்ப அன்னையை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தாள்.
சற்றும் இதை எதிர்பார்க்காததால் திகைத்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர் கொட்டியது.
சிவபாலன் கைது செய்யப்பட்டார் என்பதை அறிந்ததில் இருந்தே அவளுக்கு தாயை பற்றிய நினைப்பு தான்.ஒரு பாவமும் அறியாத தன் அன்னை என்ன கஷ்டப்படுகிறாரோ என்று என்நேரமும் அவள் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருக்கும்.இருந்தாலும் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலை அவள் மனோவிடம் கூட வெளிப்படுத்த வில்லை.இன்று நெடுநாளைக்கு பிறகு அன்னையை பார்த்த மகிழ்ச்சியில் அவள் அழுக அவளை அணைத்துக் கொண்டு கலைவாணியின் கண்களும் குளமாகியது.
“நீ..எப்படி மீ…”என்று நம்பமுடியாமல் அவள் கேட்க,
“மாப்பிள்ளை, உன் மாமனார், மாமியார் எல்லாம் வீட்டுக்கே வந்து அழைச்சாங்கடா..எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..உன்னை இப்படி பார்க்க..”
என்று அவர் சொல்லவும் பார்வை கணவனிடம் செல்ல அதே புன்னகையோடு இமைமூடி திறந்தான்.
“மீ..அப்பா..”
என்று அவள் தடுமாற அவளை புரிந்தவராய்,
“அவர் பண்ணின பாவத்திற்கு அனுபவிக்கிறார்..விடு அனு..கொஞ்சமாவது திருந்தி வருகிறாரான்னு பார்ப்போம்..என்னை நினைச்சு வருந்தாத..நீ இப்படி ஒரு தங்கமான குடும்பத்துல வாக்கப்பட்டு சந்தோஷ வாழுறியே அதுவே எனக்கு போதும்..”
என்று நெகிழ்வாய் கூறினார்.
அனைத்தையும் இரசித்து பார்த்தபடி இருந்த யவ்வனாவிற்கு
அவளை அத்தனை நேரமும் பார்வையாலே மொய்த்தவனை முதலில் கவனிக்கவே இல்லை.சற்று நேரத்தில் ஏதோ ஒரு உந்துதலில் திரும்பி பார்க்க அதற்காகவே காத்திருந்தார் போல் சற்று தள்ளி நின்ற தமிழ் ‘வா’ என்பது போல சைகை செய்தான்.
அவனை கண்டதும் மலர்ந்தவள் பின்பே அவன்மீதுள்ள கோபம் நினைவுவர விறைப்பாக திரும்பிக் கொண்டாள்.
பொறுத்து பொறுத்து பார்த்தவன் அவள் திரும்புவதாய் இல்லை என்பது புரிய அவர்களை நோக்கி வந்தான்.
அவன் அருகில் வருவது தெரிந்தாலும் கண்டுகாதது போல் யவ்வனா அமர்ந்திருக்க அவனோ நேராக முல்லையிடம்,
“நல்லா இருங்கீங்களா ம்மா..”
என்று பேச்சை தொடங்கி நலம் விசாரித்து பின்பு யவ்வனாவிடம்,
“யவ்வனா..உன்னை பார்த்தால் வித்யா அண்ணி வர சொன்னதாக சொல்ல சொன்னாங்க..”
என்றான் அப்பொழுது தான் நினைவு வந்தது போல்..பொய் என்று தெரிந்தாலும் வேறு வழியின்றி அவனை முறைத்தபடி அவரிடம் சொல்லிக் கொண்டு சென்றாள்.
அவனும் சில வார்த்தைகள் அவரோடு பேசிவிட்டு யதார்த்தமாய் செல்வதுபோல் அவள் பின்னே சென்றவன் சற்று தூரத்தில் சட்டென்று அவள் கையை பற்றி இழுத்து செல்லவும்,
‘வீடு ஃபுல்லா ஆளுங்க இருக்கும்போது இவன் என்ன இப்படி செய்யுறான்..’
என்று பதற அவனோ அவளை ஆள் அரவமற்ற இடத்திற்கு தள்ளிக்கொண்டு சென்றான்.
“யோவ்..அறிவில்ல.. யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க..”
என்று எகிறியவளை கண்டுக்கொள்ளாது மெல்ல அவளை கட்டிக் கொண்டவன் செய்கையில் பட்டென்று அவள் பேச்சு தடைப்பெற்று அவனது முதல் அணைப்பில் தடுமாறினாள்.
“இப்படி புடவையில ஆளை அசர அடிக்கிறியே யவ்வா..ப்பாஆ..ஆயிரம் சொல்லு  நம்ம பாரம்பரிய டிரெஸுக்கு  தனி அழகு தான்..நீ வந்ததில் இருந்து உன்னை தவிர வேற எங்கேயும் பார்வைய திருப்ப முடியலடி…”
மெரூன் நிற காட்டன் புடவை பாந்தமாய் அவளை தழுவியிருக்க லேசான ஒப்பனையோடு இருதோள் புறமும் மல்லிகை சாரம் தொங்க தேவதையாய் காட்சியளித்தவளை கண்டு சொக்கியிருந்தான். அவளும் அவன் அணைப்பில் சுகமாய் நின்றாள்.
“யவ்வா..உன்னை இப்போவே தூக்கிட்டு போயிடலாமான்னு தோணுதுடி..”
என்று அவன் குழைய அப்பொழுது தான் சுதாரித்தவள் அவனிடம் திமிறியபடி,
“ஆமா..இப்படி தான் ஆசையா பேசுவீங்க.. அப்புறம் ஆளு அட்ரெஸ்ஸே இல்லாமல் காணா போயிடுவீங்க..நான் மட்டும் இவரை நினைச்சு உருகனும்..”
என்று நொடித்துக் கொள்ள அவளை சற்றும் விலகாது,
“ஹோ..அதான் மேடம் கோவத்துக்கு காரணமா..”
என்றவன் அவள் முகத்தின் வரிவடிவத்தை விரலால் அளந்தக்கொண்டே,
“நான் என்னடி பண்ணட்டும்…இத்தனை நாள் விட்டு வைத்த வேலை எல்லாம் சேர்ந்துடுச்சு..அத்தோட அண்ணியோட வளைகாப்பு.. எல்லாம் சேர்ந்து மாமா செம பிஸி தங்கம்… ஆனாலும் மனசுல உன்னை பார்க்க தான் தவிச்சிட்டு இருந்தேன் தெரியுமா..”
என்றவன் எவ்வளவு தவித்தான் என்பதை காட்டுவது போல் அவளை இறுக்கி கொள்ள,
“ஹையோ..தமிழ்.. எங்க இருக்கோம்ன்னு மறந்துடீங்களா..”
என்ற அவள் சிணுங்கல் அவன் காதிலே விழவில்லை.
“இப்ப உங்களுக்கு வேலை எதுவும் இல்லையா..உங்களை தேட போறாங்க..”
“ம்ச்..இப்போ இதான் என் முக்கிய வேலை..”
என்று கழுத்தில் முகம் புதைத்தவனை அவஸ்தையோடு பார்த்தவள்,
“உங்களை தேட மாட்டாங்க..ஆனால் என்னை என் அம்மா தேடுவாங்க..நான் போறேன்..”என்று விலக,
“அதெல்லாம் அவங்க மும்முரமா உன் மாமியாரிடம் பேசிட்டு இருப்பாங்க..”
என்று அவன் சொல்லவும் விழிவிரித்தவள்,
“அத்தைட்டையா..???”
என்று வாய் பிளந்தாள்.
லேசாக திறந்திருந்த இதழ்களை காணவும் அவன் கட்டுபடுத்த இயலாது அதனை சிறையெடுத்தான்.
அதிர்ச்சியில் உறைந்திருந்தவளின் இடையை பற்றி ஆதுரியமாய் தடவிக் கொடுக்க பெண்ணவள் அவன் சில்மிஷங்களில் திணறித்தான் போனாள்.
சில நொடிகள் கழித்து மெல்ல விலகியவன் நெற்றியோடு நெற்றி மோதி புன்னகையோடு நிற்க போலியாய் முறைத்தவள்,
“ஷப்பா..நீங்க பொல்லாதவர் தமிழ்…ஊருக்குள்ள அப்படியே நல்ல பிள்ளை மாதிரி கெத்த காட்டிக்கிட்டு இங்க இல்லாத சேட்டை எல்லாம் செயுறீங்க..”
என்று அவள் முனங்க அவன் புன்னகை மேலும் விரிந்தது.
“இதுக்கேன்னா.. இன்னும்…”என்று அவன் ஏதோ சொல்லும்முன் வாயை மூடியவள்,
“பேச்சை மாத்தாதீங்க..!!அத்தைக்கு தெரியுமா..”
என்று கேட்க அவள் கையை வாயிலிருந்து எடுத்துவிட்டு கையோடு கோர்த்துக் கொண்டவன்,
“தெரியுமே..இப்ப கூட உங்க அம்மாட்ட நம்ப விஷயமா கூட பேசிட்டு இருக்கலாம்..”
என்றான் சாதாரணமாக..
“நான் இன்னும் வீட்டில் பேசவே இல்லை..இப்படி திடீர்னு சொன்னால் அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ”
என்று அவள் கவலைப்படவும்,
“ஹே..அம்மாவிடம் உங்க அம்மாவை நான் காட்டினேன்..அவங்க போய் பேசுவாங்கன்னு ஒரு கெஸ்ஸிங்ல தான் சொன்னேன்…வா… எதுக்கும் போய் பார்ப்போம்..”
என்று அவளை அழைத்துக் கொண்டு மீண்டும்வர அங்கே அவன் சொன்னதுபோல் வசுமதி முல்லையோடு தான் பேசிக் கொண்டிருந்தார்.
அதனை கண்டு அவள் தவிக்கவும்
“பயப்படாதே யவ்வனா.. அம்மா அப்படி பட்டுன்னு எல்லாம் உடைக்க மாட்டாங்க..”என்று அவன் ஆறுதல் சொல்ல,
“அப்போ நானும் போய் பேசுறேன்..நீங்க என் அப்பா- அம்மாட்ட நல்ல பேரு வாங்குனீங்கல்ல..இப்போ என்னோடு முறை..”
என்றவள் அவர்களை நோக்கி சென்றாள்.
அடக்கத்தின் மறுவுருவாய் சாந்தமான முகபாவனையோடு அவர்கள் முன் வர,
“இதோ..இவ தான் என் பொண்ணு..யவ்வனா..”
என்று முல்லை வசுமதிக்கு அறிமுகம் படுத்த,
“வணக்கம் அத்..அம்மா..”
அத்தை என்று வந்ததை சட்டென்று அம்மா என்று மாற்றிக் கொண்டு கைக்கூப்பி சொல்ல வசுமதிக்கு புகைப்படத்தில் பார்த்ததைவிட நேரில் மிகவும் பிடித்திருந்தது.
“உட்காரு ம்மா…”
என்று தன்னருகில் அமர்த்திக் கொண்டு அவர் அவளோடு பேச அவளும் பொறுப்பாய் பதில் சொன்னாள்.
தமிழுக்கு தூரத்தில் இருந்து பார்க்கும்போது என்ன பேசுகிறார்கள் என்பது கேட்கவில்லை என்றாலும் அவளது சாத்வீக பாவனையில்,
“அடிப்பாவி..என்ன ஒரு தன்னடக்கம்..அநியாயத்திற்கு ஐஸ் வைக்கிறாளே..”
என்றெண்ணி சிரித்தாலும் தாயோடு அவளை சேர்த்து பார்க்கும்போது அவன் மனம் நிறைந்தது.

Advertisement