Advertisement

“ஆளே மாறிட்ட தமிழு…வாட்ட சாட்டமா நல்லா ஹீரோ மாதிரி இருக்க போ..”
“நான் மாறினது இருக்கட்டும்..நீ தான் ஆள் அடையாளமே தெரியாம மாறியிருக்க..உன் வாய்ஸை வச்சு தான் கணபதினே தெரிஞ்சிது..ஏன்டா இந்த கோலம்..உலக உருண்டையாட்டும் ஆகிட்ட..இதென்ன இந்த வயசுலே  தொப்ப…”
என்று குறுஞ்சிரிப்போடு சொல்லி அவன் வயிற்றில் இடிக்க,
“நானா வச்சிக்கிட்டேன்..?தானா வந்திடுச்சு..”
என்று கணபதியும் சிரிக்க ஆங்காங்கே நின்ற ஆட்கள் எல்லாம் இருவரையும் ஆச்சரியமாய் பார்த்தனர்.
அவர்களுக்கெல்லாம் தமிழை தெரியாது.எப்பொழுதும் கடுவன் பூனையாக உர்ரென்றே திரியும் கணபதியே இப்படி விளையாட்டாக பேசி சிரிப்பதை பார்த்ததால் வந்த ஆச்சரியமே இது..!!!
“நீ ஒருநாள் நிச்சயம் வருவேன்னு தெரியும்..ஆனால் இப்படி திடுதிப்புனு வந்து நிற்பேனு நினைக்கல தமிழு..அண்ணா பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவாரு..”
என்று உள்ளார்ந்து சொன்னவன்,
“உட்காரு..அவரை கூப்பிடுறேன்..”
என்று சொல்லி செல்ல தமிழும் பத்ரிக்காக காத்திருந்தான்.
சில நொடிகளில் அங்கே வந்த பத்ரியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..
“வா தமிழ்…”
என்று அதே மகிழ்ச்சியோடு வரவேற்றவன் அவன் அருகில் வந்து தோளோடு அணைத்து விலக தமிழின் முகத்திலும் அத்தனை மலர்ச்சி..
” நேத்தி தான் உன்னை பற்றி பேசிட்டு இருந்தேன் தெரியுமா..இன்னைக்கு நீ வந்து நிற்கிற…ஆச்சரியமா இருக்குடா..”
என்று வியந்தவன்,
“எப்படி இருக்க தமிழ்..அம்மா எப்படி இருக்காங்க..”
என்று விசாரிக்க தமிழ் பதிலளித்தான். நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் சந்தித்தாலும் இருவருக்குமே பேச்சு தடையின்றி வந்தது.
நட்பின் இலக்கணத்தில் ஒரு அழகான பண்பே இது தான்.எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வெவ்வேறு திசைகளில் இருந்தாலும் நட்பு என்றும் மாறாமல் அதே போல் தான் இருக்கும்..நம் வயதிற்கு தான் முதுமை உண்டே தவிர நட்பு என்றும் இளமையோடும் அதே தன்மையோடும் தான் விளங்கும்.அதற்கு தற்போதைய சான்று இவர்கள் நட்பு தான்.
தான் இங்கே வந்த விஷயத்தை மறந்து ஏதேதோ பேசியபடி அவர்கள் இருக்க அப்பொழுது,
“பத்ரி அண்ணா..”
என்று அழைத்தபடி அங்கே வந்தவள் உறைந்து நின்றாள்.இதயம் தடதடக்க கை கால் எல்லாம் சில்லிட்டு போய் அவள் நிற்க தமிழின் நிலையை சொல்லவும் வேண்டுமோ..!!! மூச்சு விடவேண்டும் என்பதனை மறந்தவனாய் ஏன் இந்த உலகத்தையே மறந்தவனாய்  கண்சிமிட்டாமல் அவளை மட்டுமே விழி எடுக்காமல் பார்த்தான்.
உண்மையில் அவளே தானா..’ என்று வியந்து ‘இல்லை வழக்கம் போல் தன் பிரம்மையா..’ என்று தயங்கி ‘பிரம்மையாக இருந்தால் மறைந்து விடுவாளே..’ என்று பயந்து கண்கள் சிமிட்டாமல் அவனது பார்வை அழுத்தமாய் அவள்மீதே இருக்க அதில் அவள் கண்களோ அலைபாய சில நொடிகளில் பார்வையாலே ஒர் யுத்தம் சத்தமின்றி அரங்கேறியது.
“ஹப்பா..ஒருவழியா முழிச்சிட்டியா…சாப்பிட கூட  இல்லாமல் இப்படியா அடிச்சிப்போட்டா மாதிரி தூங்குவ..”
என்ற பத்ரி குரலில் யவ்வனா சுதாரித்தாள்.
அப்பொழுதும் நம்பமுடியாமல் ஸ்தம்பித்து தமிழ் இருக்க பத்ரியோ,
“நான் சொன்னேன்ல…என் ஃப்ரெண்ட் தமிழ்..இவன் தான்..”
என்று சந்தோஷமாய் அறிமுகப்படுத்த அதற்குள் தன்னை மீட்டிருந்த யவ்வனா,
“வணக்கமுங்க..”
என்று அந்நிய குரலில் கூறியவள் மேற்கொண்டு எந்த பேச்சும் வராமல் உள்ளே ஓடிவிட அவள் பார்வையில் இருந்து மறையவும் தான் சுதாரித்தான்.
“யவ்வனா…நில்லு..”
என்று அழைத்தபடி வேகமாய் தமிழ் எழும்ப பத்ரி- கணபதி இருவருமே வியப்பாய் அவனை நோக்கினர்.
“தமிழ்..உனக்கு யவ்வனாவை தெரியுமா..”
என்று பத்ரி ஆச்சரியமாய் கேட்க தமிழுக்கு சிரிப்பதா..இல்லை அழுவதா என்று இருந்தது.
என்னவென்று சொல்லுவான்..!! இத்தனை நாட்களாய் வேறெதிலும் சிந்தனையை செலுத்த முடியாமல் உயிரை தொலைத்த வெறும் உடல்போல் தன் உயிரைக் தேடி திரிந்த கதையை எங்கனம் புரிய வைப்பான்.
“தெரியுமாவா..பைத்தியகாரனாட்டும் இவளை தேடி தான் நான் அலைஞ்சிட்டு இருக்கேன்..யாரோ மாதிரி பார்த்துட்டு போறா..இவளை..”
என்றவனுக்கு நின்று பேசக்கூட பொறுமையில்லை அவள் சென்ற திசையில் செல்ல,
“இருடா..அவ பழைய நினைவெல்லாம் இழந்துட்டா..அதான் உன்னை தெரியல போல..”
என்று பத்ரி கூற தமிழின் நடை தடைப்பட்டது.
*
*
*
அங்கிருந்து நழுவி தோட்டத்தில் தஞ்சம் புகுந்த யவ்வனாவிற்கு இன்னும் நடுக்கம் குறையவில்லை.வேகவேகமாய் மூச்சுவிட்டபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
நேற்று ஏற்பட்ட அதீத சிந்தனையில் அவள் மயக்க நிலைக்கே சென்றிருக்க அவள் சில நேரங்களில் இப்படி தான் அறையிலேயே இருப்பாள் என்பதால் அவள் அதன்பின் வெளியே வராததை இவர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
கிட்ட தட்ட பதினைந்து மணி நேரத்திற்கு பின்பு தான் அவளுக்கு மயக்கமே தெளிந்தது.கண்களை சிரமப்பட்டு பிரித்தவள் மெத்தையில் கையூண்றி எழுந்து அமர்ந்தாள்.
மனக்கண்ணில் திரைப்படம் போல் அவள் வாழ்க்கையின் ஆதியில் தொடங்கி அந்தம் வரை அனைத்தும் ஓட அவற்றை கிரகிக்கவே சில நிமிடங்கள் ஆனது.
அனைத்தையும் உள்வாங்கிய யவ்வனாவிற்கு தன் உயிர் இத்தனையையும் தாண்டி இப்பூவுலகில் நீடிக்கும் விந்தையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஆர்பரிக்கும் கடலில் சிக்கியவன் சிறு துடுப்பின் பிடிமானத்தில் அலையோடு சண்டையிட்டு முட்டி மோதி தத்தி தடுமாறி இறுதியில் உயிரோடு கரை சேர்ந்திருந்தால் அவன் உள்ளம் எத்தகைய உவகையை அடைந்திருக்குமோ அதற்கு ஈடான உணர்ச்சியில் தான் யவ்வனாவும் இருந்தாள்.
இனி எந்த ஓட்டத்தையும் எதிர்கொள்ள சக்தியற்று தோய்ந்து போன அவளது உடலும் மனமும் ஒருங்கே அன்னை மடியை நாட தனக்கு அனைத்தும் நினைவு வந்துவிட்டதை சொல்லவே அவள் பத்ரியை தேடிவர அங்கே அவள் கண்ணில் முதலில் பட்டது தமிழ் தான்.
எதிர்பாராததை எதிர்பாராத நேரத்தில் எதிர்க்கொள்ளும் சம்பவங்கள் விலைமதிப்பற்றவை..அவனை கண்டு ஒரு நொடி அதிர்ந்தாலும் மறு நொடி அவன் மார்பில் விழுந்து ஆறுதல் தேட சொல்லி உள்ளம் சிறுபிள்ளையாய் அடம்பிடித்தது.
அதனை தாண்டி தான் செய்து வைத்துவிட்டு வந்த துரோகத்தை நினைத்து பார்த்தவளுக்கு அவன் கோபத்தை எண்ணி அச்சமும் ஒவ்வொரு செல்லிலும் பரவ தனக்கு நினைவுகள் மீண்டதை மறைக்க முடிவு செய்தவள் அவனை தெரியாதது போல ஒரு பாவனை செய்துவிட்டு அதற்குமேல் நிற்க பயந்தவளாய் குடுகுடுவென ஓடி வந்து இங்கே நின்றுக்கொண்டாள்.
‘கடவுளே..இப்போ தான் எத்தனை பிரச்சனையிலும் என் உயிரை காப்பாத்திட்டேன்னு உன்னை பற்றி பெருமையா நினைச்சேன்.. ஆனால் இப்போ தானே உன் மாஸ்டர் ப்ளான் புரியிது..என்னை இவ்வளவு தூரம் காப்பாத்தினது என் தமிழ் கையாலேயே என்னை போட்டு தள்ள தானே..எனக்கு நல்ல புரிஞ்சி போச்சு…அவரு என்னை நல்ல பார்த்திட்டாரு..நான் பண்ணி வைச்சிட்டு வந்த வேலைக்கு என் மேல கொலை காண்டுல இருப்பாரு செத்தேன்..’
குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி தனக்கு தானே அவள் புலம்பி தவிக்க அப்பொழுது,
“யவ்வனா…”
என்று தனக்கு பின்னால் கேட்ட குரலில் ‘பாஸ்..’ செய்தாற் போல் ஃப்ரீசாகி நின்றுவிட்டாள்.
இதயம் தடதடவென துடிக்க ஸ்லோ மோஷனில் திரும்பி அவனை பார்த்தவள் கண்களில் பயம்!பயம்!பயம் மட்டுமே!
“உனக்கு பழசெல்லாம் மறந்திடுச்சுன்னு பத்ரி சொன்னான்..உனக்கு என்னை தெரியலையா யவ்வனா..”
என்றவன் குரலில் இருந்த வேறுப்பாட்டை உணராத யவ்வனா தலையாட்டி பொம்மைப்போல் டிங்..டிங் என்று மண்டையை உருட்டினாள்.
“எப்படி யவ்வனா..எப்படி உன்னால என்னையும் நாம வாழ்ந்த வாழ்க்கையையும் மறக்க முடிந்தது..சொல்லு யவ்வனா..”
என்று வேதனை நிரம்பிய குரலில் கேட்டபடி அவள் அருகில் வர,
“வாழ்ந்த வாழ்க்கையா…”
என்று ‘ஞெ’ என விழித்தாள்.அவனோ அவள் தோளை பற்றியவன்,
“என்ன முழிக்கிற..ஒன்னா ரெண்டா பத்து வருஷம் உன் கூட குடும்பம் நடத்திய உன் புருஷனையே உனக்கு நியாபகம் இல்லையாஆஆ…சொல்லு யவ்வனா சொல்லு”
என்றானே பார்க்கலாம். ‘அடப்பாவி.. !!!!!’ என்று அவள் வாய் பிளக்க சிரித்துவிடாமல் அதே சோக முகத்தை கடைப்பிடிக்க பெரும்பாடு பட்டான் தமிழ்.
“என்ன முழிக்கிற.. உன்னை எங்கெல்லாம் தேடினேன்..தெரியுமா….புருஷன், பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் சண்டை வரும் தான்..அதுக்குனு கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனால் கூட பரவாயில்லை..தண்டவாளத்திலா தலையை கொடுப்ப…என் ஃப்ரெண்டு மட்டும் உன்னை பார்க்கலைனா என்னாகி இருக்கும்.. நீ இல்லாமல் நானும் நம்ம மூணு பசங்களும் அனாதை ஆகிருப்போம் யவ்வனா..அனாதை ஆகியிருப்போம்..”
என்று நடிகர் திலகத்திற்கே டஃப் கொடுப்பது போல் தமிழ் கொடுத்த பாவனையில் ஒரு நிமிடம் தானே அவன் சொல்வது தான் உண்மையோ என்று குழம்பினாள்.
“இனியும் உன்னை பிரிந்து என்னால இருக்க முடியாது..வா யவ்வனா.. நம்ம வீட்டுக்கு போகலாம் நான் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணி மருத்துவ முத்தம் கொடுத்தாலே போதும்..உனக்கு எல்லாம் நியாபகம் வந்திடும்…வா..”
என்று அவன் கையை பிடித்து இழுக்க சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு கோபமாய் அவனை ஏறிட்டாள்.
“அடப்பாவி மனுஷா…எனக்கு எல்லாம் மறந்திடுச்சுன்னு சொன்னால் இதான் சாக்குனு உன் இஷ்டத்துக்கு கத விடுவியா.. எப்படி எப்படி நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகுதா?பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் ஸ்கூல் படிக்கிற பாப்பாய்யா..இதுல மூணு குழந்தை வேற… பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாம்.. நமக்குள்ள சண்டை வந்தால் நான் போய் ட்ரைன் முன்னாடி விழணும்மா எவ்வளவு பொய்..எவ்வளவு நடிப்பு..ஃபராடு..ஃப்ராடு…”
பழைய யவ்வனாவாய் மாறி தாம்தூம் என்று குதித்தவளை,
“அடிங்க..”
என்று அவள் கையை முறுக்கி அவள் முதுக்கு பின்னால் மடக்கியவன்,
“யாரை பார்த்து ஃப்ராடுங்கிற..நான் ஃப்ராடா..இல்லை நீ ஃப்ராடா.. மேடமுக்கு பழசெல்லாம் மறந்திருச்சாமாம்..இப்போ மட்டும் எப்படி உண்மையெல்லாம் வருது…நீங்க மறந்திடுச்சுனு சொன்னால் நாங்க அப்படியே நம்பிடுவோமா.. வாயை தொறந்தாலே பொய்.. எப்ப பாரு பொய் சொல்ற இந்த வாயிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..”
என்று மிரட்டுவது போல் அவன் பேசினாலும் இவன் மிரட்டுக்கிறானா இல்லை கொஞ்சுகிறானா என்று நமக்கு சந்தேகம் எழுவதை மறுக்க முடியவில்லை.

Advertisement