Advertisement

அத்தியாயம்-21
தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களாகியும் அதன் பரபரப்பு இன்னும் தமிழகம் எங்கும் குறையவில்லை.
சென்ற முறை ஆட்சியில் இருந்த அதே கட்சியே இம்முறையும் பெரும்பாலான விழுக்காடுகளில் வெற்றி வாகையை சூடியிருந்தது.
கட்சி தொண்டர்களின் ஆர்பட்டமும் கொண்டாட்டமும் எல்லா ஊடகங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நேரெதிராய் கொதித்து போயிருந்தார் சிவபாலன்.
ஆம்..அவர் தொகுதியில் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்க நிச்சயம் இம்முறையும் தனக்கு தான் வெற்றி என்று தலைகணத்தோடு இருந்தவருக்கு அவரது அரசியல் வாழ்வில் வந்த முதல் தோல்வி பெரிய அடியாக தான் அமைந்தது.அவரால் இன்னுமே அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.கண் எதிரே வருவோரை எல்லாம் கடித்து குதறாத குறையாக கோபத்தில் திளைத்திருந்தார்.அவரது வெறிப்பிடித்த நிலையை கண்டு திருப்தியானார் இந்திரன்.இதே போல் தானே இருந்திருக்கும் அவருக்கும்..மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ள தமிழை அலைபேசியில் அழைத்தார்.
“தமிழு..நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.. எல்லாம் உன்னால தான்ய்யா..”
என்றார் எடுத்ததும்..
“நான் என்னங்க பண்ணேன்..”
“என்ன பண்ணியா..எல்லாமே நீதான் பண்ண தமிழு..நீ போட்டு கொடுத்த ப்ளான் தான்ய்யா..இன்னைக்கு அவன் நான் நினைச்சதைவிட கேவலமா தோத்து போனான்..நான் தான் ஜெய்பேன்னு எவ்வளவு ஆணவமாய் அலைஞ்சான் தெரியுமா..இப்போ அந்த மூஞ்ச கொண்டு போய் எங்க வச்சுப்பான்..எப்பா..டேய்..நீ மட்டும் அரசியல் வந்திடாதே..நாங்க பொழப்பு நடத்த முடியாது..அப்படியை வந்தாலும் என் கட்சில தான் இருக்கணும் சொல்லிட்டேன்..”
மகிழ்ச்சியில் அவர் ஆர்பாட்டமாய் பேச,
“எனக்கு இருக்குற தலவலியே போதுமுங்க.. அரசியல் எல்லாம் வேணாம்..உங்களுக்கான பாதைய போட்டு கொடுத்தாச்சு..வழியை அமைச்சிக்கிறது உங்க சாமர்த்தியம்…”
என்று அழைப்பேசியை வைத்தவனுக்கு எதிலும் முழு மனதாக ஈடுபட முடியவில்லை.மனமெல்லாம் யவ்வனாவை தேடுவதில் தான் இருந்தது.மிகவும் சிரமப்பட்டே பிற விஷயங்களிலும் கவனத்தை கொண்டு வந்தான்.
தற்போது நடராஜன் தமிழை ஃபாக்டரியிற்கு வர சொல்லியிருந்ததால் அங்கு தான் அவருக்காக காத்திருந்தான்.
“வா தமிழு..”
என்றபடி வந்த நடராஜனை கண்டு அவன் எழவும் ‘உட்காருடா..”
என்று அவன் தோளில் தட்டி அமர வைத்தவர் தானும் அவன் அருகில் அமர்ந்தார்.
“என்னங்க ஐயா..ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னீங்க..”
“ஆமா..முக்கியமான விஷயம் தான்..”
என்றவர் அவரோட வந்திருந்த அவர்கள் லீகல் அட்வைஸரை பார்க்க அவர் ஒரு பத்திரத்தை நீட்டினார். அதனை வாங்கி தமிழின் கையில் திணித்த நடராஜன்,
“வெள்ளிக்கிழமை ரெஜிஸ்டரெஷன் சரியா..இப்போ படிச்சு பார்த்து கையெழுத்து போடு..”
என்று கூற புரியாமல் அவரை பார்த்தவனுக்கு பத்திரத்தை பார்த்ததும் புரிந்தது.அவரது ரயிஸ் மில்லை அவனது பெயருக்கு மாற்றுவதற்கான பத்திரம் தான்.
“என்னங்க ஐயா…எனக்கு இதெல்லாம் வேண்டாம்..”
என்று உடனே மறுத்தவனிடம்,
“வேணுமா..வேணாமானு கேட்டேனா..இது உனக்கு தான்…”
என்று அழுத்தமாய் சொல்ல,
“என்னங்கய்யா..இதுக்கு ஆசைப்பட்ட நான் எல்லாம் செஞ்சேன்..வேலை முடிஞ்சிது இந்த உன் கூலிங்குறா மாதிரி கொடுக்கறீங்க..நான் இதெல்லாம் எதிர்பார்த்து எதுவும் செய்யலங்கய்யா..”
என்றான் அடிப்பட்ட பார்வையோடு..
“இதென்னடா கிறுக்கனாட்டும் பேசுற..இன்னைக்கு நேத்தி இல்ல நான் எப்பவோ முடிவு பண்ணது..நீ எனக்கு பிரகாஷ்,மனோ மாதிரினு சும்மா வார்த்தைக்கு சொன்னேனு நினைச்சியா..இங்கேந்து வந்ததுடா…”
என்று நெஞ்சில் கைவைத்து சொன்னவர்,
“அது முழுக்க உன் உழைப்பு தமிழு…உன்னை தான் சேரணும்..அத்தோட உன் திறமைக்கு நீ இன்னும் பெரிய பெரிய உயரத்தை அடையணும்..அது தான் என் ஆசை…சும்மா என் பின்னாடியே இருந்து காலத்தை ஓட்டிட நினைக்காத..இதை ஒரு தொடக்கமா வச்சு மேல போடா..”
என்று கட்டளையாகவே அவர் சொல்ல மறுத்து பேச முடியவில்லை.அவன் கையெழுத்து இட்ட பத்திரத்தை அட்வெய்சரிடம் கொடுக்கவும் அவர் வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றார்.
பின்,
“அப்புறம் காலகாலத்துல கல்யாணத்த பண்ணு..பார்க்க இளங்காளையாட்டும்  இருந்தாலும் வயசு உனக்கும் ஏறுதுடா..”
என்று நடராஜன் சிரிப்போடு சொல்ல புன்னகைக்க முயன்றானே அன்றி ‘சரி’ ‘இல்லை’ என்று எதுவும் சொல்லவில்லை.
“அந்த பொண்ணை விரும்பரியா தமிழ்..”
என்று திடீரென அவர் கேட்கவும் அவரை பார்த்து விழித்தவன்,
“என்னங்கய்யா..யாரு..”
என்று அவன் தடுமாற,
“நான் யாரை சொல்றேனு உனக்கா தெரியாது..சொல்லுடா..”
என்று அவர் நக்கலடிக்கவும்,
“ஆமா ஐயா…”
நெற்றியை விரலால் சுரண்டியபடி அசடு வழிய அவன் சொன்னதில் சிரித்து விட்டார்.
யவ்வனாவை பற்றி உண்மைகள் தெரிந்ததும்  முதல் வேலையாக நடராஜனின் வீட்டிற்கு வந்து தான் கூறினான்.
‘அவள் நல்லவள்:அவள் மீது எந்த தவறும் இல்லை..’ என்பதை எப்படியாவது எலலாருக்கும் உணர்த்திவிட வேண்டும் என்ற வேகம் அவன் குரலில் இருக்க அப்போவே அதனை உணர்ந்துக் கொண்டார் ஆனால் அதனை அவன் வாய்வழி கேட்க வேண்டிய தற்போது கேட்டது.
“சீக்கிரமே அந்த புள்ளைய தேடி கூட்டிட்டு வாடா..உன் கல்யாணத்தையும் பார்த்துட்டால் போதும்…”
என்று அவர் சொல்லவும்,
“கண்டிப்பா..” புன்னகைத்தவன் பின்,
“ஐயா.. அப்புறம் இன்னைக்கு  பத்ரியை பார்க்க போறேன்..”
என்று சொல்லும்போதே அவனிடம் ஒரு ஆர்வமும் தெரிய,
“ம்ஹூம்..’ நீ அவனை பார்க்கவே கூடாது..எனக்காக அவனோட எந்த நட்பும் வச்சிக்காதேனு’ நானே சொல்லிட்டு இப்போ எனக்காக வேண்டியே நீ அவனை தேடி போக வேண்டியது வந்துடுச்சு பார்.. ரொம்ப சுயநலவாதி ஆகிட்டேனோ தமிழு… இத்தனை வருஷத்துல வராதவன் இப்போ தேவைன்றதும் வந்து நிற்கிறான் பார்னு’ பத்ரி  உன்னை எதாவது பேசிட்டா…”
என்றார் நடராஜன் சற்று குற்றவுணர்வு தாங்கிய குரலில்..
சிவபாலனின் குற்றங்களுக்கு ஜெயிலில் போட்டாலும் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளில் ஏதேனும் ஒன்றின் வழியாக பணத்தை கொண்டு குதித்து ஒரே நாளில் வந்துவிடுவார் என்று நன்றாகவே தெரியும் என்பதால் அவருக்கு உதவி எவ்வழியிலும் கிடைக்காதபடி எப்படி லாக் செய்யலாம் என்று யோசித்தவனுக்கு தோன்றிய ஒரே முகம் பத்ரி தான்.
அவன் இதில் நுழைந்தால் அவனை எதிர்த்து யாரும் சிவபாலனிற்காக முன் வரமாட்டார்கள் என்று தோன்ற அதனை நடராஜனிடம் சொல்லியதில் இருந்தே அவருக்கு இதே தான் உறுத்தியது.
“என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.. அம்மா உங்களை ரொம்ப கெஞ்சி கேட்டு கிட்டதால தான் நீங்கள் அப்போ கடுமையா நடந்துக்கிட்டீங்கனு எனக்கு தெரியாதா…கூடவே இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி எத்தனை வருஷமானலும் சரி எங்க நட்பு அப்படியே தான் இருக்கும்…அப்படியே மீறி அவன் என்னை திட்டினால் கூட எனக்கு சந்தோஷம் தான் ஐயா….நீங்க அதெல்லாம் நினைக்காதீங்க..”
என்று அவன் சொல்லும் போது அவர் வேறென்ன சொல்வார்.அவனும் அத்தோடு விடைப்பெற்று கிளம்பி விட்டாலும் செல்லும் வழியெல்லாம் பத்ரியை பற்றிய சிந்தனை தான்.
முன்பைவிட தற்போதிய பத்ரியின் பலமும் உயரமும் அவனும் அறிந்தே தான் இருந்தான். இன்னும் தன்மீது அதே பிரியம் இருக்குமா..தன்னை பார்த்ததும் எப்படி நடந்துக் கொள்வான்.முதலில் அவன் அங்கு இருப்பானா..?
என்ற யோசனைகளோடு தனது பைக்கில் வந்தவன் ஒரு மணி நேரத்தில் அவன் பத்ரியின் பங்களாவை அடைந்திருந்தான்.
இத்தனை வருட இடைவெளியில் அந்த இடம் பெரிதும் மாறியிருக்க அவற்றை பார்வையிட்டபடி மெதுவாக தன் பைக்கை உருட்டிக்கொண்டு அவன் கேட்டை நெருங்க அப்படியே அவனை தடுத்து நிறுத்தினான் காவலாளி.
“யோவ்..என்ன உன் பாட்டுக்கு உள்ள போற..யாரு நீ..”
இருசக்கர வாகனத்தில் சாதாரணமாய் இருந்தவன் யாராக இருக்ககூடும் என்ற அலட்சியத்தில் அவன் தோரணையாய் விசாரிக்க தமிழும்,
“பத்ரியை பார்க்கனும்..நான் தமிழ் வந்திருக்கேனு சொல்லுங்க…”
என்று தமிழும் நல்லவிதமாகவே சொன்னான்.ஆனால் அவனோ,
“ஆமா..நீ பெரிய கலெக்டரு..பேரை சொன்னதும் தெரிய..!என்ன விசயமா வந்திருக்கேன்னு சொல்லுய்யா முதல்ல…உள்ள விடலாமா வேணாமானு நான் முடிவு பண்றேன்..”
என்றான் அலட்சியமாய்.. இந்நேரம் அவன் இடத்தில் வேறு எவரும் இருந்து தமிழிடம் இவ்வாறு பேசியிருந்தால் ஒரே அரையில் அவன் பற்களை தெறிக்க விட்டிருப்பான்.பத்ரியின் இடம் என்பதால் சற்று பொறுமை காத்தான்.இருந்தாலும் அவன் பேச்சுக்கு பதில் சொல்லாமல் அவன் பார்த்த பார்வையே அந்த காவலாளியை அச்சுறுத்த மேலே எதுவும் அவன் பேசியிருந்தால் நிச்சயம் தமிழிடம் மொத்து வாங்கிருப்பான் அதற்குள் தமிழை சிசிடிவி கேமராவில் பார்த்துவிட்ட கணபதி வேகமாய் வெளியே வந்திருந்தான்.
“தமிழ்…”
என்று ஆர்வமாய் அழைத்தபடி வந்த கணபதியை கண்டதும்,
‘தேவயில்லாம வாய் விட்டோமோ..’
என்று காவலாளி பயந்தோடு நோக்க அவனது நல்ல காலம் இருவருமே அவனை பொருட்படுத்தவில்லை.
“நிஜமாவே நீ தானா தமிழ்..”
என்று ஆச்சரியம் விலகாமல் கணபதி கேட்க,
“யாருனு கேட்பியோன்னு நினைச்சேன்.. பரவாயில்ல நியாபகம் வச்சிருக்க..”
என்றான் தமிழும் விரிந்த சிரிப்போடு..
“இதெல்லாம் மறக்க கூடிய மூஞ்சா..சரி..ஏன் இங்கேயே நிற்கிற..வா..வா”
என்று கணபதி அழைக்க அவனும் தன் பைக்கை உருட்டிக்கொண்டு வந்து உள்ளே நிறுத்தினான்.வரும் போது இருந்த சிந்தனைகள் தயக்கங்கள் எல்லாம் கணபதியின் இயல்பான பேச்சில் மறைந்தே போனது.

Advertisement