Advertisement

அத்தியாயம்-20

அந்த மதிய வேளையில் காலில் சக்கரம் கட்டியது போல பரபரப்பாய் வேலை செய்துக்கொண்டிருந்தாள் யவ்வனா..அடுப்பில் சரியான சூட்டில் இருந்த எண்ணெயில் அப்பளங்களை பொரித்து எடுத்தவள் அவ்வற்றை ஒரு பாத்திரத்தில் அடுக்கி வெளியே எடுத்துவர அங்கே பந்திப் பறிமாறுவதற்காக காத்திருப்பது போல வரிசையாய் அமர்திருந்தனர்.அவர்களது தோற்றத்திக்கும் அமர்ந்திருந்த தோரணைக்கும் சம்மந்தமே இல்லை.

எந்த சூழலிலும் துவண்டு போகாமல் அந்த சூழலில் தன்னை பொருத்திக் கொண்டு தனக்கு ஏற்றார்போல் அதனை மாற்றி அமைத்துக்கொள்ளும் பக்குவம் சிலருக்கு மட்டுமே இருக்கும்.அதற்கு தக்க உதாரணம்  நம் யவ்வனாவே…
தேன்சோலையில் இருந்த பொழுதும் சரி தற்போதும் பத்ரி வீட்டில் இருக்கும் போதும் சரி இருக்கும் சூழலை பழகிக் கொண்டதோடு இருக்கும் மனிதர்களையும் பழகிக்கொண்டாள்.அதுதான் அவள் இயல்பே என்றும் கூறலாம்.பேச்சு தான் அவள் மூச்சு..எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் தனக்குள் ஒடுங்கி பேசாமல் இருப்பது மௌனங்காப்பது எல்லாம் அவள் அகராதிலே இல்லை.உலகின் எந்த மூலையில் கொண்டுபோய் விட்டாலும் சரி வாயை வைத்தே பொழைத்துக் கொள்ளும் அசாத்திய திறமைசாலி.

இப்படி மொழித்தெரியாத மனிதகளையே சமாளித்து விடுவாள் என்னும் போது பத்ரி வீட்டில் இருப்பவர்கள் எம்மாத்திரம்..அன்று சமையல் செய்யும் பெரியவரிடம் ஆரம்பித்தது.அதன்பின் அங்கே வேலை செய்யும் எல்லாருடனும் இயல்பாய் பேசினாள்.பத்ரியின் அடியாட்களிடம் கூட சென்று அண்ணா என்று ஆரம்பித்து விடுவாள். அங்கே அவள் பொழுது போவதே அப்படி தான்.

பத்ரி கூட்டி வந்து தங்க வைத்து இருக்கிறார் என்ற ஒன்றே அவளுக்கு மதிப்பை தர அவளிடம்  மரியாதையோடே நடந்துக்கொண்டனர்.ஆனால் நாளடைவில் அவள் மீது அவர்களுக்கு  ஒரு பாசம்வர காரணம் அவள் குணமேயாகும்.

அன்பும் பரிவும் மனிதனாய் பிறந்த எவருக்கும் மனதில் ஒரு மூளையிலாவது நிச்சயம் இருக்கும்.அது இல்லையேல் அவர்கள் மனித உருவில் இருக்கும் வேறு ஜந்து தான்.அவ்வகையில் பத்ரி வீட்டில் இருக்கும் அனைவரும் மனிதர்கள் தான்.யவ்வனாவின் குறும்பிலும் பேச்சிலும் அவள் மீது ஒரு பாசம் இயல்பாய் ஒட்டிகொண்டது.

இந்நிலையில் இன்று அனைவருக்கும் அவளே ஸ்பெஷலாக தாத்தாவின் உதவியோடு சமைத்த உணவினை அனைவருக்கும் ஆர்வமாய் பறிமாறிக்கொண்டிருந்தாள்.
“சாப்பாடு பிரமாதம் பாப்பா..திருப்தியாய் சாப்பிட்டேன்…”
என்று ஒருவர் பைனல் டச்சான பாயசத்தை சுவைத்தபடி கூற,

“சும்மாவா நம்ம கைப்பக்குவம்..”
என்று இல்லாத காலரை தூக்கி விட்டவள்

“இன்னும் கொஞ்சம் பாயாசம்..”
என்றபடி அவரை கவனிக்க,

“இவனுங்களை சாப்பிட விட்டால் ஒரு பருக்கை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுருவானுங்க.. நீயும் சாப்பிடு போ..”
என்றான் மற்றொருவன்.

“அதனால் என்ணணே..வயிறாற சாப்பிடடும்..செட்டில் நீங்க காரோட மல்லுக்கட்டி வேலை பார்ப்பதை தான் பார்த்திருக்கேனே..வயிறு நிரம்ப சாப்பிட்டால் தானே தெம்பா வேலை செய்ய முடியும்..”
என்று இயல்பாய் கூறவும்,

“ஆனாலும் நீ எங்களை அநியாயத்திற்கு நம்புற பாப்பா.. நீ பாசம் வைக்கிற அளவு நாங்க  நல்லவங்க இல்ல.. நாங்க என்ன தொழில் செய்றோம் தெரியுமா..”
என்று ஒருவன் சொல்ல அவள் உதட்டில் மெல்லியே புன்னகை..

“சொல்லாதீங்க ண்ணே.. நாம எப்படி யோசித்து பார்க்கிறோமோ..அப்படி தான் எதுவும் நமக்கு தெரியும்… நான் உங்க எல்லாரையும் நல்லவங்களா தான் பார்க்கிறேன்..எனக்கு அப்படி தான் தெரியிறீங்க..நான் இங்க இன்னும் எத்தனை நாள் இருக்க போறேன் தெரியலை..இருக்கிற வரை அப்படியே நினைச்சிட்டு போறேனே…”
என்றவள் அப்பேச்சை தொடர விரும்பாமல் வேறு பேச்சிற்கு தாவினாள்.

அவர்கள் எல்லாம் சாப்பிட்டு சென்ற சற்று நேரத்திற்கு பின் தான் வந்து சேர்ந்தனர் பத்ரியும் கணபதியும்..
சாப்பிட அழைத்தவள் அவர்களுக்கும் தானே பறிமாற,

“இதெல்லாம் எதுக்கு நீ பண்ற..உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்திட்டு இருக்க மாட்டியா..”
வழக்கம்போல் கடுகடுத்த கணபதியிடம்,

“எனக்கு இங்க ஒரு வேலையும் இல்ல பாஸ்..அதான் நானா ஒரு வேலை எடுத்துக்கிட்டேன்..அப்புறம்..”
என்றவள்,
“ நான் விஷம் எதுவும் கலக்கல்லை..”
என்றாள் மேடை ரகசியம்போல்..

அவளை முறைத்தாலும் அவள் கைபக்குவம் சுவைக்கவே செய்தது.அவர்கள் சம்பாஷணை கேட்டு புன்னகைத்தபடி பத்ரி உண்ண,
“என்ன பத்ரி அண்ணே..ஒன்னுமே சொல்லாம சாப்பிடுறீங்க.. நல்லாயிருக்கா..”
என்று அவள் கேட்கவும்,

“சான்சே இல்ல போ..சூப்பர்..”
என்று சொல்ல அவள் முகம் பிரகாசம் ஆனது.

“தேங்க்ஸ்ண்ணே…எனக்கு தெரியும் உங்களுக்கு பிடிக்குமுனு..”
என்று அவள் சொல்ல கணபதியோ,

“ஏன்-ண்ணே பொய் சொல்றே..இந்தம்மா சமைச்சு ட்ரைனிங் எடுக்க நாம தான் சோதனை எலி போல…வாய்ல வைக்க முடியல..”
என்று வேண்டுமென்றே முகம் சுளித்தான்.

“ஆமா.. வாய்ல வைக்க முடியாமல் தான்..இவுக ரெண்டு ப்ளேட் உள்ள தள்ளினாக…”

“என் விதி..இன்னைக்கு இததான் திங்கணுமுனு..என்ன செய்ய முடியும்”
என்று சலித்துக் கொண்டு சொன்னாலும் உண்வை ஒருக்கை பார்த்துவிட்டு தான் எழுந்தான்.

“கணபதினு பேருக்கு பதிலா காண்டுபதினு வச்சிருக்கலாம்..எப்ப பாரு மூஞ்சில முள்ள கட்டிக்கிட்டி..”
என்று முகத்தை அஷ்டகோணலாய் சுளித்து முணுமுணுக்க அதை காதில் வாங்கிய பத்ரி வாய் விட்டு சிரித்தான்.

அவன் சிரிப்பு தன் முணுமுணுப்பை கேட்டுவிட்டான் என்பதை உணர்த்த அசடு வழிந்தாள்.அதே சமயம் கைகழுவி வந்த கணபதி,
“ஏன் சிரிக்கிறண்ணா…என்னாச்சு..”
என்று கேட்கவும் அவள் சொல்ல வேண்டாம் என்று கண்களால் கெஞ்சவும்,

“ஒன்னுமில்ல டா..”
என்று தோளை குலுக்க அவனும் மேலே எதுவும் கேட்காமல் சென்றுவிட்டான்.

மீதம் அங்கே பத்ரியும் யவ்வனாவும் மட்டுமே இருக்க அவன் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் தன் மண்டையில் சில நாளாய் ஓடிக்கொண்டிருந்த ஒன்றை கேட்க நினைத்து,

”அண்ணே.. நான் ஒன்னு கேட்கடுமா..”
என்றாள் தயக்கமாய்..

”கேளு..”

“ நீங்க முறைக்க மாட்டேன்..திட்ட மாட்டேன்..முக்கியமா கன் எடுக்க மாட்டேனு  சத்தியம் பண்ணுங்க..கேட்குறேன்..”

“கன்-ஆ…?”

“ஆமா.. நீங்க தான் கோபம் வந்தால் பட்டுனு எடுத்து பொட்டுனு சுட்டுடுவீங்களாமே..அதான் ஒரு சேஃப்டிக்கு..”

“ஹாஹா..அப்படி என்ன கேட்க போறீங்க..மேடம்”

“நீங்க சத்தியம் பண்ணுங்க சொல்றேன்…”

“சரி..சத்தியம்..சொல்லு..”

என்று சொன்னவன் இலையை மூடிவிட்டு எழ அவளும் உடன் எழுந்தபடி,
“அது வந்து…”
என்று இழுத்தவள்,

“நீங்க ஏன் அண்ணா என்னை காப்பாத்தினீங்க…”
என்று கேட்க கைகழுவி திரும்பியவன்,

“இதென்ன கேள்வி..அடிப்பட்டு ஒரு பொண்ணு மயங்கி கிடந்தால் கண்டுக்காமல் போனால் தான் தப்பு.. காப்பாத்தினது ஒரு தப்பா..”
என்றான்.

“அது சரி தான்..ஆனால் இவ்வளவு தூரம் கூட்டிவந்து அவளுக்கு தேவையானது எல்லாம் செய்துக் கொடுத்து..அவளை வீட்டில் சேர்க்க தன்னால முடிந்த மட்டும் முயற்சி செய்யுற அளவுலாம் யாராவது தெரியாத ஒரு பொண்ணுக்காக பண்ணுவாங்களா..”
என்றவள்,

“எவ்வளவோ ஆக்சிடெண்ட் பார்த்திருப்பீங்க.. உண்மைய சொல்லுங்க எல்லாரையும் இதே போல காப்பாத்திருப்பீங்களா..”
என்று மென்று முழுங்கி கேட்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.
அவளுக்கு தெரிந்துக் கொல்லவிடில் தலையே வெடித்துவிடும் போல் இருக்க மாடி வராண்டாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து தன் ஃபோனில் கவனமாய் இருந்தவனை தேடி வந்தவள்,
“ என்னண்ணா.. பதிலே சொல்லல..”
என்று கேட்டாள்.

“ என்ன சொல்லணும்னு நினைக்கிற..”

“அது..என்னை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா.. நான் தான் உங்களை மறந்துட்டேனா…இல்லை வேற எதாவது.”
என்று குழம்பியவளை கண்டு,

“ஹாஹாஹா..எம்மாடி உன்னை எனக்கு முன்னலாம் தெரியவே தெரியாது…இன்ஃபக்ட் உன்னை மாதிரி ஒரு பொண்ணை  நான் பார்த்தே இல்லை..”
என்று சிரித்தவன்,

“பெருசா ஒரு காரணமும் இல்ல…ஏன் இவ்வளவு யோசிக்கிற..”
என்றான் ஃபோனை வைத்துவிட்டு சோஃபாவில் சாய்ந்தமர்ந்தபடி..

“இல்ல ண்ணா..இதே போல எங்கயோ நடந்தா மாதிரி இருக்கு..எங்கயோ இருக்கேன்..யாரோ என்னை மிரட்டுறாங்க..என்னானு புரியலை..நைட் கண்ட கனவு விடிஞ்சதும் பாதி மறந்து பாதி நியாபகம் இருக்குமே..அப்படி தான் இப்போ  இருக்கு எனக்கு…அதான் என்னென்னவோ யோசனை..”
என்று சொன்னவளின் தோரணையில் சற்று பாவமாக தான் இருந்தது.

“நீ ரொம்பலாம் யோசிக்கிற அளவு ஒன்னும் இல்ல யவ்வனா..ஆனால் நீ சொன்னா மாதிரி உன்னை கூட்டிட்டு வந்த மாதிரி எல்லாரையுலாம் நான் காப்பாற்ற முன் வந்திருக்க மாட்டேன்..உண்மையை சொல்லணும்னா கண்டுக்ககூட மாட்டேன் தான்..பட் உன்னை பார்க்க காரணமும் என் ஃப்ரெண்ட் தான்..என் தளபதி..”
என்ற போது அவன் உதட்டில் ஒர் அழகிய புன்னகை..

“ஃப்ரெண்டாஆ…புரியலையே..”
என்று அவள் தலையை சொரிய பெருமூச்சு விட்டவன்,

“உனக்கு புரியுறா மாதிரியே சொல்றேன்..”
என்றான்.

“நீ அன்னைக்கு தண்டவாளத்தில் எப்படி இருந்தியோ அதே மாதிரி ஒரு சிச்சுவெஷனில் நானும் இருந்திருக்கேன்..ம்ம்ம்ம் ஒரு ஏழு எட்டு வருஷம் முன்னாடி இருக்கும்..இப்போ உள்ள பவர் எல்லாம் அப்போ எனக்கு இல்லை..என்னை முளையிலே கிள்ளிப்போட ஒரு கூட்டமே அலஞ்சுது..அதுல ஒருதனிடம் சிக்கிடேன்.. அந்த லூசு என்ன நினைச்சதோ பார்த்ததும் சுட்டுக்கொள்ளாமல் பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில் என்னை சேர்த்து கட்டி போட்டு போய்டான்..
அது சரியா ட்ரைன் வர்ர நேரம்…தூரமா ட்ரைன் வர்ரதை என்னால நல்லவே உணர முடிந்தது..ஆனால் என்னால இன்ச் கூட அசைய முடியல.. அப்போ மரண பயமில்லை..ஆனாலும் நான் நினைத்த எதையுமே செய்யாமல் போறேனேனு வருத்தமா இருந்தது.
சாவு தானு முடிவே பண்ணிட்டேன்..அப்போ வந்தான் அவன்..எங்கிருந்து வந்தானோ தெரியலை.பக்கத்தில வந்து படபடனு என் கட்டை அவிழ்த்தான்.ட்ரைன் என் கண்பார்வை தூரத்திற்கு வந்திடுச்சு..அவனை பார்த்தபோது,
‘இவன் என்ன பைத்தியமானு தான் தோணூச்சு..’.போடானு துரத்தினேன்.அப்பவும் அவன் எல்லா முடிச்சையும் அவிழ்கிறதுல தான் முனைப்பா இருந்தான்..ட்ரைன் கிட்டக்க வந்திடுச்சு..அந்த கடைசி நொடில என்னை இழுத்துக்கிட்டு அவனும் பக்கத்துல தாவிட்டான்..”
என்று அவன் சொன்னபோது “ஹப்பாடி..” என்று நெஞ்சில் கைவைத்தாள் ஏதோ நேரிலே பார்ப்பது போல்..
கடகடவென ஓடிய இரயிலுக்கு ஈடாய் இருவர் இதயமும் துடித்தது.

“அறிவிருக்கா உனக்கு..ஒரு செக்கெண்ட் லேட் ஆகியிருந்தால் என்னோட நீயும் பரலோகம் வரவேண்டியது தான்…”
மூச்சு வாங்க பத்ரி கேட்க எழுந்து தன்  கையில் ஏற்பட்டிருந்த சிராய்பை ஆராய்ந்தவன்,

“ம்ச்..அதுக்குனு ஒரு உசுரு கண்ணு முன்னால போறதை வேடிக்க பார்த்திட்டு என் உசுரு நிக்காது சர்..”
என்றான் தன் ஆடையில் ஒட்டியிருந்த தூசியை துடைத்தபடி..

அவன் சாதாரணமாய் கூறிவிட்டான்.ஆனால் கேட்ட பத்ரிக்கு தான் அந்த நொடி அவன்மீது ஒரு சுவாரசியத்தை உண்டாக்கியது. அவன் கழுத்தில் தொங்கிய டேக் அவன் கல்லூரி மாணவன் என்பதை சொல்ல இந்த வயதில் இவனுக்கு இத்தனை துணிவா என்று வியந்தவன் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

“ நீ உசுர கொடுத்து நல்லவனை எல்லாம் காப்பத்துல..ஒரு ரௌடிய தான் காப்பத்திருக்க.. நான் பத்ரி..கேள்விப்படிருக்கியா..”
என்று கேட்டபோது அவன் முகத்தில் ஒரு சின்ன அதிர்ச்சி அவ்வளவே..

“ஓ.. நீங்களா அது..ம்ம்ம் நிறைய கேள்விப்பட்டிருகேன்..ஆனால் நீங்க சொன்னதில் ஒரு திருத்தம்.. நல்லவன் இல்ல தான்..பட் கெட்டவரும் இல்லையே..”
என்று  கூறியவன்,
“சரி ஓகே.. வாய்பிருந்தால் மீண்டும் சந்திபோம்..”
என்று சொல்லி அவன் போக்கில் அங்கிருந்து சென்றுவிட்டான்.

“நான் ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல முற்படல யவ்வனா…அவன் அதை எதிர்பார்க்கவும் இல்ல.. பேசிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான்…அவன் செஞ்சது பெரிய விசயம் தான்..ஆனால் அதை அவன் அலட்சியமா செஞ்சிட்டு போன தோரணை எனக்கு ரொம்ப பிடிச்சது..மறுநாளே அவனை பத்தி எல்லா டீட்டைலும் என் கைக்கு வந்துடுச்சு..
அவனோட நட்பு வச்சுக்க எனக்கு தோணுச்சு.. நானே தேடி போனேன்..எங்க நட்பு அப்படி தான் ஆரம்பிச்சுது..அவனுக்கு கொடுத்த முக்கியதுவம் நான் யாருக்கும் கொடுத்தது இல்ல யவ்வனா..அவனும் நான் யாரு என்னானு கவலையே படலை..என்னோட அவ்வளவு ஜெல் ஆகிட்டான்..இன்னும் சொல்லனும்னா என்னை மாதிரியே ஆகிட்டான்…அவனுக்கு என் தொழில் என்னவாக இருந்தாலும் என் நட்பு முன்னாடி அது பெருசா தெரியலை…ஆனால் அவனை சார்ந்தவங்களுக்கும் அப்படியே ஏத்துக்க மாட்டாங்க இல்லையா…

அவன் ஒரு ’தாதா’வோட பழக்கம் வச்சிட்டு அவன்கூடவே சுத்துறான்னு விசயம் அவன் அம்மாவிடம் போயிருக்கும் போல பதறி துடிச்சு வந்திடாங்க..அவங்க வந்து அவ்னோட சண்டை போட்டப்போ நானும் அங்க தான் இருந்தேன்..ஆனால் அவங்களுக்கு அது தெரியாது..எனக்காக அவ்வளவு பேசினான்..அவனே சரியான கோவக்காரன்..அவங்கம்மா என்னை பேசவும் பெரிய சண்டை…என் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தான்னு அப்போ தான் தெரிஞ்சிக்கிட்டேன்..கடைசியா அவனோட கார்டியன் அவர் வந்து பேசவும் தான் தணிஞ்சான்.. 
அவர் வார்த்தைக்கு அவன் ரொம்பவே கட்டுபடுவான்..அவர் என்னோட எந்த பழக்கமும் வச்சிக்க வேண்டாம்னு அவருக்காகனு சொல்லிக் கேட்கும்போது அவனால மறுக்க முடியல..
எனக்கும் படிக்கிற பையனை கெடுகிறோமோனு தோணுச்சு..அவன் நல்லதுக்காக அவனை தவிர்த்துடேன்..அப்புறமும் என்னை பார்க்க ரெண்டோரு முறை முயற்சி பண்ணான்.. நான்  அனுமதிக்கல..ம்ஹும்..அப்புறம் அவன் படிப்பு முடிந்து ஊருக்கே போயிட்டானு செய்தி மட்டும் வந்தது…விட்டுடேன்..”
என்று சொன்ன பத்ரி சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருக்க அவன்மீது பத்ரிக்கு இருந்த ஆழமான பிரியத்தை அவன் பாவனையிலே அவளால் உணர முடிந்தது.

ஒருவாறு தன்னை மீட்டவன்,
“உன்னை அன்னைக்கு அப்படி பார்த்தபோது அவன் முதல்ல ‘ஒரு உசுரு கண்ணு முன்னால போறதை வேடிக்க பார்த்திட்டு என் உசுரு நிக்காது சர்.” னு சொன்னது தான் நியாபகம் வந்துச்சு..அவன் இருந்தால் என்ன பண்ணிருப்பானோ அதை நான் செஞ்சேன்..”

என்று சொல்லி, “அவ்வளவு தான்..கதை முடிஞ்சிது..போதுமா…எழுந்து போ..”
என்று போகும்மாறு கையை நீட்ட,
“போறேண்ணா…பட்..இன்னும் ஒரே ஒரு கேள்வி..இவ்வளவு சொன்னீங்களே..உங்க நண்பனோட பேரை சொன்னீங்களா..”

என்றாள் விளையாட்டாய்..
“பேரென்ன ஃபோடோவே காட்றேன் இரு..”
என்று தன் அலைபேசியில் இருந்த அவன் புகைப்படத்தை எடுத்து காட்ட அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

“இவன் தான் தமிழு..என் தோஸ்த்..”

கல்லூரி படிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் என்பதால் தற்போதைய கம்பீரமும் முதிர்ச்சியும் இல்லை என்றாலும் அந்த புன்னகை..அதே வசிகரிக்கும் புன்னகை அவளை என்னவோ செய்தது.பார்வை நிலைகுத்தி அதிலேயே நின்றது.

கடந்த காலத்தில் தொடர்புடைய ஒருவரை பார்த்ததாலோ இல்லை விதியின் செயலோ அவளது நினைவலைகள் பின்னோக்கி செல்ல தலை பாராமானது.நிற்க முடியாமல் பத்ரியிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்து அமர தலைவலி இன்னும் இன்னும் அதிகமாக சில நொடிகளில் அப்படியே மயங்கி சரிந்தாள்.

Advertisement