Advertisement

அத்தியாயம்-19
“இந்த வீடு தாங்க..”

என்று அடையாளங்காட்டிய சிறுவனுக்கு நன்றிக் கூறியவன் தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்தினான்.

சிறிய வீடு தான்.ஆனாலும் அழகாக இருந்தது.அவன் வாசலை நெருங்கிய சமயம் உள்ளே ஒரே சத்தமாய் இருக்க ஏதோ சண்டை போல என்பதை உணர்ந்தவன் மேற்கொண்டு செல்ல தயங்கினான்.

‘எப்படி நீங்க இவ்வளவு பெரிய விசயத்தை மறைக்கலாம்..நாங்களும் இந்த வீட்டு பொண்ணுங்க தானே..எங்களை எப்படி தள்ளி வைத்து பார்த்தீங்க..’

என்று ஒரு பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தது.இங்கேயே நின்று அவர்கள் பேசுவதை கேட்பது இங்கிதம் அல்ல என்று எண்ணியவன் தயக்கத்தை விடுத்து அழைப்பு மணியை சொடுக்கினான்.

சட்டென்று அமைதி நிலவ சில நொடிகளில் கதவும் திறக்கபட,

“யாருங்க..”

என்று கேட்டபடி வந்து நின்றான் ஒருவன்.சற்று ஒல்லியாய் உயரமாய் புட்டிக்கண்ணாடியில் வந்து நின்றவனை கண்டு,

‘யாரா இருக்கும்.. ஒருவேளை யவ்வனாவோட அண்ணா இருக்குமோ..அவளுக்கு அண்ணன் இருக்கா..”
என்று அவனை பார்த்தபடி தமிழ் யோசனை செய்ய,

“ஹலோ..உங்களை தான்..என்ன பார்க்குறீங்க..என்ன வேணும்..”

தற்போது சற்று அதட்டலாய் கண்ணாடிகாரன்  கேட்க சுதாரித்தான்.

“யவ்வனா இருக்காங்களா….”

“நீங்க யாரு….”

“அவங்களுக்கு என்னை தெரியும்…கூப்பிடுங்களேன்..”

“இல்லை..அவ இப்போ இங்க இல்லை..வெளியே போயிருக்கா..”

“ஓ…இப்போ வந்திடுவங்களா..”

“ஆங்…அது..வெளியேனா.. வெளியூருக்கு போயிருக்கா..”

“வெளியூரா..எப்போ…எந்த ஊருக்கு போயிருக்காங்க..”

“என்ன நீங்க பாட்டுக்கு கேள்விக்கேட்டுடே இருக்கீங்க..அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு.. இப்ப பார்க்க முடியாது அவ்வளவு தான்..கிளம்புங்க..”

என்று அடித்தார்போல் சொன்னவன் கதவை சாத்த முயல சட்டென்று சாற்றமுடியாதபடி தடுத்த தமிழ்,

” என்ன பேசிட்டு இருக்கும் போதே கதவை சாத்துறீங்க.. முதல்ல நீங்க யாரு யவ்வனாவிற்கு..”
என்றான் சற்று குரல் உயர்த்தி..

“உனக்கெதுக்கு அதெல்லாம்.கிளம்புறீயா…இல்ல…போலீஸை கூப்பிடவா…”
என்று அவன் எகிற
அதற்குள் வீட்டில் இருந்து இன்னும் இரண்டு பேர் வந்துவிட்டனர்.பருத்த உடல்வாகுடன் ஒருவனும் அவரைவிட வயதான தோற்றத்தில் மற்றவரும் இருக்க பெரியவர் முகத்தில் தெரிந்து யவ்வனாவின் சாயல் அவர் அவளின் தந்தையாக இருக்க கூடும் என்பதை கணித்தவன்,

“சர்..நீங்க யவ்வனா அப்பா தானே..உங்களுட்ட கொஞ்சம் பேசணும்..இல்லை போலீஸை கூப்பிவேன் அடம்பிடித்தால் கூப்பிடுங்க..உங்க பொண்ணு பண்ணின காரியத்திற்கு உங்களை தான் புடிச்சிட்டு போவான்..”

என்று தன்மையாய் தொடங்கி கண்ணாடிகாரனை பார்த்து சற்று மிரட்டலாகவே முடிக்க  அவள் தந்தையின் முகம் வெளிறியது.

“மாப்ள.. கொஞ்சம் பொறுமையா பேசலாம் மாப்ள..கோவப்படாதீங்க..”
என்று அவர் கண்ணாடிகாரனை சமாதானம் படுத்த தமிழை முறைத்து பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

“ஏது.. மாப்பிள்ளையா..”

என்று தமிழ் யோசித்தாலும் முகத்தில் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.அதற்குள் மற்றவன்,

“உள்ள போய் பேசிக்கலாம்..வாங்க சர்..”

என்று தமிழை அழைக்க அவனும் உடன் வந்தான்.

கூடத்தில் மூன்று பெண்களும் ஒரு
டீன்ஏஜ் பையனும் இருக்க அவர்களை பார்த்துவிட்டு தமிழ்,

“விருந்தாளி வந்திருக்காங்களா..நாம வேணும்னா தனியா போய் பேசலாமா..”
என்று யோசனையாய் தன்னை உள்ளே அழைத்தவனிடம் கேட்க,

“எல்லாம் வீட்டு ஆளுங்க தான்..வாங்க..”
என்று சொல்ல,

‘இவ்வளவு பெரிய குடும்பம் இருக்குனு அவ சொன்னதே இல்லையே..”
ஆச்சரியமாய் அவன் நினைக்கும் போதே,

“ஆமா..மத்த எல்லாம் பேசிட்டீங்க..இது ஒன்னு தான் பாக்கி….”
என்று அவன் மனமே நக்கலடித்தது.

அதனை புறந்தள்ளிவிட்டு யவ்வனா தந்தையை நோக்கி,

“சர்..இந்த சில மாசமா உங்க பொண்ணு எங்க இருந்தது என்ன பண்ணுச்சு தெரியுமா..ரௌடி பசங்களோட சகவாசம் வச்சிக்கிட்டு ஒரு வீட்டில் பொய் சொல்லி நுழைந்து திருட்டு வேளை எல்லாம் செஞ்சதும் இல்லாம அந்த வீட்டு பிள்ளைங்கள கடத்துற அளவிற்கு போயிருக்கா..பொண்ணு என்ன செய்கிறாள்னு கூட கவனிக்க மாட்டீங்களா…”

அந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் அவன் முகம் கடுமையை தத்தெடுக்க காட்டமாகவே கேட்டவன் குறைந்த பட்சம் ஒரு அதிர்ச்சியையாவது எதிர்பாத்தான்.ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாய் நிற்க,
“ஹோ..அப்போ உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் அப்படி தானே..”

என்று கேட்டபோதும் அவர் அமைதி அதுதான் உண்மை என்பதை காட்ட அவனுக்கு கோபம் தலைக்கேறியது.

“ஏங்க..பார்க்க நல்ல குடும்பம் மாதிரி தானே இருக்கீங்க.. இதெல்லாம் ஒரு பொழப்பா..கண்டிக்க வேண்டிய நீங்களே இப்படி இருக்கும் போது உங்க மவளை சொல்லி என்னாக போகுது..உங்க வீட்டிலும் தானே குழந்தைங்க இருக்காங்க…அவங்களை யாராவது இப்படி கடத்தினால் அப்போ தெரியும்..இப்போ எந்த வீட்டுல நுழைந்து ஏமாற்றிக்கொண்டு இருக்கிறாள் உங்க பொண்ணு..பொண்ண இந்த பக்கம் இப்படி அனுப்பிட்டு ஊரு முன்னாடி நல்லவங்க மாதிரி வேஷம் போட்டு இருப்பீங்க…அப்படி தானே..இப்பவே போலீஸை கூப்பிட்டு உங்க எல்லாரையும் உள்ள தள்ளினால் தான் புரியும்…”

அவன் வந்தது வேறு விசயமாக  தான்.ஆனால் இப்படி மொத்த குடும்பமும் தெரிந்தே அவளை இப்படி ஒரு வேலைக்கு அனுப்பி வேடிக்கை பார்க்கிறது என்று நினைக்கும் போது கண்மண் தெரியாமல் ஆத்திரம் வர  வார்த்தைகளை விட்டான். பதில் பேசாமல் நின்ற அவள் தந்தையின் கண்கள் கலங்கி முகமே கசங்கியிருந்தது.

அதனை பொறுக்க முடியாமல்,

“இங்க பாருங்க.. புரியாமல் பேசாதீங்க..அதிகாரமும் ஆட்சியும் இருக்க திமிறுல எங்களை மாதிரி சாதாரண குடும்பத்தையே சிதைச்சு இப்படி நிலைக்குலைந்து போக வச்சீட்டாங்க..யவ்வனா அப்படி செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் இங்க ஒரு உயிர் கூட மிஞ்சியிருக்காது..நீங்க சொல்றீங்களே போலீஸு அவங்ககூட எங்களுக்காக  முன் வர  மாட்டாங்க.. அவங்களை எல்லாம் விட்டுவிட்டு  புள்ளைய பறிக் கொடுத்துட்டு நிற்கிற இந்த  அப்பாவி மனுஷனை கேள்வி கேட்டால்…அவர் என்ன செய்வார்..”

தமிழுக்கு சற்றும் குறையாத ஆத்திரத்தோட கண்ணாடிகாரன் பேச அதிர்ச்சியில் உறைந்தான் தமிழ்.இப்படி ஒரு கோணத்தில் அவன் யோசிக்கவே இல்லையே..!!

“என்ன சொல்றீங்க..”

என்று கேட்டவனுக்கு ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அவன் கூற பேச்சற்று போனான் தமிழ்.சிவபாலன் இவ்வளவு தூரம் இறங்கி செய்திருப்பார் என்று அவன் நினைக்கவில்லை.கேட்கவே அவன் மனம் பதறியது.

“பிள்ளைகளை கடத்திட்டாள்னு அழுத்தமா சொல்றீங்கள்ல…அந்த பிள்ளைங்க கொண்டு வந்து விடுறீயா இல்ல உன் தங்கச்சி கழுத்தை அறுத்துப்போடவானு அந்த அர்த்த ஜாமத்துல வீடு புகுந்து அந்த சின்ன பிள்ளையோட கழுத்துல கத்தி வைத்து மிரட்டிருக்காங்க..யவ்வனாவும் வேற என்ன தான் சர் பண்ணுவா..இதே அவ இடத்திலே வேற பொண்ணு இருந்தால் என்னாகி இருக்குமோ.. எல்லாத்தையும் தாங்கிட்டு நின்னுடுக்கு யவ்வனா…”

என்று சொல்லும்போதே அவன் கண்கள் பனிக்க தமிழுக்கு தாள முடியவில்லை.

“இப்போ என்ன..அவளை போலிஸிடம் பிடித்துக் கொடுக்கனுமா….போங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணி  அப்படியாச்சு எங்க பொண்ணை கண்டுபிடிச்சு தாங்க..”

என்று அவன் உணர்ச்சிகரமாய் சொல்ல மூச்சு முட்டுவது போல் இருந்தது தமிழுக்கு..

“எங்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்..ம்ச்…”
தலையை அழுத்த கோதி தன்னை அவன் சமன்பாடுத்த முயன்ற,

“சொல்ல மாட்டாள்.. அவ பிரச்சனைய யாரிடமும் சொல்ல மாட்டாள்.சொந்த அக்கா குடும்பத்திற்கே சொல்லேங்க அவ..இவங்களும் மறைச்சிட்டாங்க..இப்போ தான் விசயம் தெரிந்து ஓடி வந்திருக்கோம்..”
என்றான் அவன் ஆதங்கத்தோடு..

அவன் சொல்வது உண்மை தான்.

இரண்டு அக்காக்களின் புகுந்த வீட்டில் இந்த விசயத்தை பற்றி தெரிந்தால் அவர்களுக்கு எதாவது  பிரச்சனை வருமோ என்று நினைத்து தாய்-தந்தையை சொல்ல வேண்டாம் என்று சட்டமாய் சொல்லிவிட அவர்களும் மறைத்து விட்டனர்.
ஆனால் அன்று இரவு வந்து கத்தி வைத்து மிரட்டி சென்றபின் அவர்கள் யாரும் அந்த பக்கமே வரவில்லை.வழக்கமாக அவர்களை கண்காணிக்க அங்கே இருப்பவர்களும் இல்லை.இத்தோடு தொலைந்தது சனி என்று நினைத்தால் யவ்வனாவிடமும் தொடர்பற்று போனது.அவள் வழக்கமாக அழைக்கும் எண்ணும் செயலில் இல்லை என்று வர யவ்வனாவிடமும் எந்த தகவலும் இல்லை எனவும் பயந்து போனது அவள் குடும்பம்.யாரிடம் சென்று என்னவென்று கேட்பது என்றுகூட தெரியாமல் தவித்தனர்.

யவ்வனாவின் தந்தை முருகானந்தம் ஒரு உலகம் தெரியாத கிராமத்து வெளேந்தியான மனிதர் தான்.கணவனிற்கு ஏற்றார் போல் தான் மனைவி முல்லையும்..கடும் உழைப்பாளி தான் என்றாலும் உழைப்பை தவிர உலக சூது எதுவும் தெரியாமலே வாழ்ந்து விட்டனர்.ஆனால் அவர்களுக்கு சேர்த்து துணிவும் திறனும் யவ்வனாவிடம் கொட்டிக் கிடந்தது.மூத்த அக்காள் இருவரைவிட வீட்டின் சூழ்நிலை புரிந்து பக்குவமாய் நடந்துக் கொள்பவள் யவ்வனா தான்.ஒரு வயதிற்கு பின் அவளே அக்குடும்பத்தின் முதுகெலும்பு என்றானாள்.சின்ன பெண் என்றாலும் அவள் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்புவர்.அவள் தமக்கையர் இருவருக்குமும் அப்படி தான்.தம்பி,தங்கைக்கு அவள் தான் வழிக்காட்டி..

ஏன் தற்போது அவள் தான் ஆபத்தில் மாட்டி இருந்தாலும் யவ்வனா தன்னை குறித்து பயப்படவில்லை.இங்கிருந்து வீட்டினருக்கு தான் ஆறுதல் சொல்லி தேற்றி வந்தாள்.

இப்படி இருக்கும் போது யவ்வனாவிற்கு ஒன்று என்னும் போது அவர்கள் நிலையே ஆட்டம் கண்டது.பிள்ளையை கண்முன்னே பறிக்கொடுத்துவிட்டு அவளை காப்பாற்ற கூட முடியாமல் நானெல்லாம் என்ன தந்தை என்று தனக்குள்ளே மறுகினார்.

இறுதியில் வாசு தான் தனது பெரிய அக்காவிடம் அழைத்து அனைத்தையும் போட்டு உடைக்க இருவரும் பதறி வந்திருந்தனர்.எப்படி மறைப்பீர்கள் என்று சண்டை போட்டாலும் யவ்வனாவை எங்கே தேடுவது, அவளுக்கு எதுவும் நேர்ந்திருக்க கூடாதே என்ற பதட்டம் தான் எல்லார் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.

இந்நேரத்தில் தமிழ் வந்து சிக்கவும் தான் மொத்த ஆதங்கத்தையும் அவனிடம் கொட்டினான் இளைய மருமகன்.மேலும் மேலும் அவன் யவ்வனாவை பற்றி சொல்ல சொல்ல தமிழின் மனம் வேதனையில் ஆழ்ந்தது.அவர்களுக்கு ஆறுதல் கூறி நிச்சயம் அவளை கண்டுபிடித்து விடலாம் என்று உறுதியவளித்தவன் அங்கிருந்து புறப்பட்டு இயந்திரகதியில் வீடு வந்து சேர்ந்துவிட்டான்.வழியில் கண்ட எதுவுமே அவன் கருத்தில் பதியவில்லை.மூளையே ஸ்தம்பித்து தான் போனது.

தான் கூப்பிட கூப்பிட கவனிக்காமல் கூடத்தில் வெறும் தரையில் அமர்ந்திருந்த மகனின் தோள் தட்டி,

“என்னடா…”
என்று அவர் கேட்கவும் தாயின் முகம் பார்த்தவன் கண்கள் கலங்க பதறிவிட்டார் வசுமதி.

“அய்யா..ராசா..என்னாச்சுய்யா..”

என்று அவனிடம் மண்டியிட்டு அவர் பதற அப்படியே  அவர் மடியில் சாய்ந்தவன்,

“தப்பு பண்ணிடேன்..அவளை போய் தப்பா நினைச்சுட்டேன் ம்மா..”

என்று புலம்பியவனை கண்டு அவர் கண்களும் கலங்கிவிட்டது.தமிழ் கோபமெல்லாம் அவர் அசால்ட்டாக கடந்துவிடுவார்.ஆனால் அவன் கண்ணீர் அவரை வெகுவாக அசைத்தது.

“யார ராசா..”
என்று அவர் கேட்டதை அவன் கவனிக்கவே இல்லை.தன் போக்கில் பேசினான்.

“அவ என்னுட்ட சொல்லி இருக்கனும்ல ம்மா..என் மேல நம்பிக்கை வைக்கனும் தானே.. கிறுக்கி.. எல்லாத்தையும் மனசுக்குள்ளவே வச்சு புழுங்கி இருக்காள்..அப்பவும் எப்படி விளையாட்டா இருப்பா தெரியுமாம்மா..அவ கஷ்டம் எதுவும் அவ முகத்துல கூட தெரியாது..லூசு ம்மா அவ..”
என்று உடைந்த குரலில் கூற,

“தமிழ்..இங்க பாரு..முதல்ல என்னானு சொல்லு…”

என்று முகம் தாங்கி கேட்டவரிடம் அனைத்தையும் சொன்னான்.இதுவரை பெரிதாக அவன் அன்னையிடம் எதுவும் அவன் பகிர்ந்ததில்லை.ஆனால் இன்று காயப்பட்டு வந்த மனம் அன்னை மடியை மட்டுமே தான் தேடியது.எல்லாத்தையும் கொட்டி தீர்த்தான்.

“இத்தனை நாள் அவ எங்கேயோ தலைமறைவா இருக்கானு தான் நினைச்சேன் ம்மா..ஆனால் இப்போ…இப்போ அவளுக்கு எதாவது ஆகிருக்குமோனு நினைச்சாலே பதறுது..அவள் பத்திரமா தானே ம்மா இருப்பா..கிடைச்சிடுவா தானே ம்மா..”

சிறுபிள்ளையாய் தன் முகம் பார்க்கும் மகனை காணும் போது அவருக்கு துக்கம் பெருகியது.

அவள்மீது தான் தவறு என்று நினைத்தபோதே அவனால் அவளை விட்டுக் கொடுக்க முடியவில்லை.அவள் தான வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தான்.இப்பொழுது உண்மை தெரிந்தபின் அவன் நிலையை சொல்லவும் வேண்டுமோ..?

“தமிழு..இதென்ன சினன புள்ள மாதிரி..நீயே தானே சொல்ற..அவளுக்கு ரொம்ப தைரியமுனு..அப்போ எங்கே இருந்தாலும் அவ தன்னை காத்துப்பாடா…நான் சொல்றேன் உனக்காகவே அவள் பத்திரமா தான் இருப்பாள்.நீ நம்பிக்கையை விட்டுறாமல் தேடுடா..என் தமிழு ஒன்னு நினைத்தால் அதை செய்யாம விடமாட்டானு ஊருக்கே தெரியும்..நீயே இப்படி இடிஞ்சு போனால் எப்படி..”

என்று தோள் வருடி கூறிய வசுமதி அவன் புலம்பல்கள் அனைத்திற்கும் பொறுமையாய் பதில்கூறி தேற்றினார்.

“மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
மழை மட்டும் தராது வானவில்லை
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை

அருகில் இருந்தும் காதல்
பிரிவில் பெருகிடுமே

ஒரு முறை தெரியிது மறு முறை மறையிது
தொலையிது உன் பிம்பம்

கனவுகள் வருவது காலையில் களைவது
காதலில் பேரின்பம்

இது வரை இது வரை இடைவெளி தொடர்ந்திடும்
கேட்க்குது என் நெஞ்சம்
அருகே வா உயிரே

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்”

Advertisement