Advertisement

அத்தியாயம்-18
“ஏய்..நில்லு..இங்க என்ன பண்ற நீ…”

மாடி படிக்கட்டில் சாவகாசமாய் இறங்கி வந்த யவ்வனாவை பார்த்த கணபதி கேட்டுக்கொண்டே அருகில் சென்றான்.

“ஒரே இடத்துல இருக்க போர் அடிக்குது ப்பா..அதான் சுத்தி பார்க்கலாம்னு..”

“சுத்தி பார்க்க இதென்ன டூரிஸ்ட் ஸ்பார்ட்டா.. இங்கெல்லாம் வராத எட்டனா..வெளியேந்து நாலு பேரு வந்து போற இடம்…வா முதல்ல..”

என்றபடி அவளை அங்கேந்து வேகமாய் அப்புறப்படுத்த
அவளும் பெருசாக அலட்டிக்காமல் அவனோடு நடந்தபடி,

“ஆமா..எனக்கு இந்த ட்ரெஸ்ஸ எடுத்தது யாரு..”
என்றாள்.

“ஏன் நான் தான்..”
என்று அவன் கூறவும் நின்று அவனை முறைத்தவள்,

“என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது..டிரெஸ் வாங்கிட்டு வர சொன்னால் கோனிப்பை மாதிரி ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கீங்க..இதுக்குள்ள ஒரு ஊரையே அடைக்கலாம் போல..இவ்வளோ….பெரிசு..இதை போட்டுடு இறங்கி வருவதுக்குள்ள எத்தனை இடத்துல தடுமாறிட்டேன் தெரியுமா..”

என்றாள் கண்களை உருட்டி..

“ஏன் பேச மாட்டே..உனக்கு டிரெஸ் வாங்கி கொடுத்ததே பெரிசு..இதில ஆயிரம் நொட்டம் வேற சொல்ற..உன்னை எல்லாம் நீ போட்டு இருந்த அந்த ஒரு டிரெஸ்ஸோடையே இருனு உட்ருக்கனும்..”

“ஹலோ..ஹலோ..என்ன…பத்ரி அண்ணா என்ன சொன்னாங்க..’யவ்வனாக்கு தேவையானதை செஞ்சிக் கொடுனு சொன்னாங்களா இல்லையா..’ ஆனால் ஒரு டிரெஸ் கேட்டதுக்கு இப்படி பேசுறீங்க…வேண்டா வெறுப்பா ஒரு டிரெஸ்ஸு வேற….”

“உஃப்..இப்ப என்ன டிரெஸ் தானே வேணும்.. ஈவ்னிங் உன்னையே அழைச்சிட்டு போறேன்..என்ன வேண்டுமோ வாங்கிக்க…என்னை தொல்லை பண்ணாத..”
என்று அவன் கூறவும் முழு பற்களையும் காட்டி சிரித்து,

“இதை தான் எதிர்பார்த்தேன்..நன்றி.. நன்றி..”

என்று கூறிவிட்டு பின்பு சுற்றும் முற்றும் பார்த்தபடி,

“இங்க என்ன ஒரே பசங்களா இருக்காங்க..ஒரு பொண்ணு கூட இல்லையா..”

என்றாள் ஆச்சரியமாக..
“இல்ல..”

“அப்போ சமையல்..??”

என்று அவள் கேட்கும் போதே அவர்கள் சமையலறையை அடைந்திருக்க அவள் கேள்விக்கு பதிலாய் அவன் அறையை காட்டினான்.

அங்கே ஒரு பெரியவர் மட்டுமே இருக்க இவர்களை கண்டதும் முழித்தவர்,

“எதாவது வேண்டுமா தம்பி..”

என்று கேட்க அவனிற்கு முன்,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் தாத்தா..நீங்க தான் இங்க எப்பவும் சமைப்பீங்களா….”

என்று ஆர்வமாய் கேட்க அவர் தயங்கினாலும்,

“ஆமாம்மா..”

என்றார்.ஒரு பெண்ணை இங்கே பத்ரி தங்க வைத்திருப்பதை அங்குள்ள அனைவரும் அறிவர் தான்.ஆனால் யாரும் பார்த்ததில்லை.

என்வே தற்போது திடீரென்று அந்த பெண் வந்து பேசவும் தயங்கினார்.யவ்வனா அதை எல்லாம் கண்டுக் கொண்டாள் தானே..!!தன் போக்கில் பேசினாள்.

“உங்க சமையல் சூப்பர் தாத்தா..செம்ம டேஸ்ட்.. அதுவும் நேத்தி ஒரு வத்தக் குழம்பு வைச்சிருந்தீங்களே அருமையோ அருமை..நீங்க மட்டுமே எப்படி தாத்தா.. இத்தனை பேருக்கு சமைக்கீறீங்க.. அதுவும் இவ்வளவு சூப்பரா..”

என்ற அவளது பாராட்டில் அவர் மனம் குளிர்ந்தது.ஏனெனில் இதுவரை யாரும் அவர் சமையலை பாராட்டியது இல்லை.

“நிஜமாலுமா கண்ணு..”

“நிஜம்மா தான்..சரி..இன்னைக்கு என்ன செய்ய போறீங்க..இதை கொடுங்க நான் கட் பண்றேன்..”
என்றபடி அவர் கையில் இருந்த கத்தியை வாங்க,

“இல்லம்மா..நானே செய்யுறேன்.. உங்களுக்கு எதுக்கு சிரமம்..”
என்று அவர் மறுக்க,

“பரவாயில்ல கொடுங்க தாத்தா…”

என்று அவள் வற்புறுத்த கணபதி கொடு என்று ஜாடை காட்டவும் தான் தந்தார்.

அதை கவனித்த யவ்வனா,

“ஏன் அவர் பர்மிஸன் கொடுத்தால் தான் தருவீங்களா..”

என்று கேட்க அவர் பதில் சொல்லும் முன்,

“ஆமா… சாப்பாட்டு விஷயத்துல யாரையும் நம்பக்கூடாதுல..நீ பாட்டு விஷம் கிஷம் கலந்துட்டால்..”
என்று அவன் சொல்ல கத்தியால் கன்னத்தில் தட்டிக் கொண்டு,

“இந்த ஐடியா எனக்கு தோணாமல் போயிடுச்சே.. எதுக்கும் இன்னைக்கு மதியம் கொஞ்சம் உஷாரா இருங்க…சொல்லிட்டேன்..”
என்றாள் குறும்பாக..

கணபதியிடம் இவ்வளவு இலகுவாக இப்பெண் பேசுகிறதே என்று வியந்தார் அவர்.ஏனெனில் கணபதி ஒரு முரடன்.பேச்சும் சரி செயலும் சரி சற்று கரடு முரடாக தான் இருக்கும் என்பதால் தான்.

“வாய் கொழும்பு ஜாஸ்தி.. உன் பேச்சு தாங்காமல் தான் உன்னை கட்டி கொண்டு போய் தண்டவாளத்தில் வீசிரிப்பாங்க..”

என்று சொல்ல அவள் பழிப்பு காட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள்.மனக்கண்ணில் தான் காரில் இருந்து கீழே விழுந்தது.அதனை தொடர்ந்து கத்திக் கொண்டே அதன் பின்னால் ஓடி தண்டவாளத்தில் தடுமாறி விழுந்ததும் கலங்கலாய் நினைவு வந்தது.அதனையொட்டி மேலும் அவள் ஞாபகப்படுத்த முனைந்தாள்.இப்படி தான்.அப்பப்போ தீடீரென்று எதாவது பொருளை பார்த்தாலோ கேட்டாளோ அதனையொட்டிய நினைவு வந்து போகும்.அன்று அப்படி தான்.அவள் கட்டைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்து ‘இதென்ன ஜென்ஸ் மோதிரம் மாதிரி இருக்கு..’

என்று அவள் பார்க்க அதனை அவள் சுட்ட நிகழ்வு நினைவுப் வந்தது.அவள் தெளிவான மனநிலையில் இருப்பால் கொஞ்சம் கொஞ்சமாக அவளது பழைய நினைவுகள் எல்லாம் மீண்டது.

“ம்மா..ம்மா..பார்த்து..கைய வெட்டிக்க போறீங்க…”

என்று அந்த பெரியவர் கையை தடுக்கவும் தான் தற்போதிய நிலையை உணர்ந்தவள் தான் செய்ய இருந்த காரியத்தை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டாள்.

“தேங்க்ஸ் தாத்தா..ஏதோ ஞாபகத்துல..”

என்று அவள் இழுக்க,

“பரவாயில்ல..இங்க கொடு அதை..”

என்று அவர் வாங்கிக் கொள்ள நெற்றியை தடவியபடி வாசலை பார்த்தாள்.அங்கே கணபதி இல்லை.

“இவர் எங்க தாத்தா..??”

“கணபதி அப்போவே போயிடுச்சு ம்மா..”

என்றவர் பின்பு,

“எப்படிம்மா.. கணபதிட்ட இவ்வளவு சாதாரணமா வாயாடுறே..”

என்று சற்று முன் நினைத்தை கேட்டேவிட,

“ஏன் இதில் என்ன….நான் பத்ரி அண்ணாட்டே இப்படி தான் பேசுவேன்..”
என்று கண்சிமிட்டியவள் அங்கே இருந்த ஸ்டூலில் அமர வாய் பிளந்தார் அவர்.

“உனக்கு தைரியம் ரொம்ப தான்..”

“ஏன் அவங்க என்ன சிங்கமா…புலியா பயப்பட….பேசுறதை கேட்கும்போது ’தாதா’ கேங்னு புரியுது..ஆனால் பத்ரி அண்ணாவை பார்த்தால் அப்படி தெரியலயே…”
என்று சொன்னவள் அவர் மௌனமாய் புன்னகைக்கவும்,

“ஏன் தாத்தா அப்படி பார்க்குறீங்க.. உங்களுக்கு ரொம்ப பயமா… அவ்வளவு மோசமாவா உங்களுட்ட நடந்துப்பாங்க..”
என்றாள்.

“அய்யோ…எனக்கு படி அளக்கின்ற தெய்வம்மா…அப்படிலாம் எதுவும் இல்லை…ஆனால் பயம் எப்பவும் இருக்க தான் செய்யும்..ரொம்ப வருஷமா இங்க தான் இருக்கேன்…இங்க இருக்க பசங்க எல்லாரும் ஒவ்வொரு மாதிரி..நான் யாருட்டையும் பேசவே பயப்படுவேன்..எங்க எதாவது சொல்ல போய் கை வைச்சிருவாங்களோனு பயம்..அதுவும் பத்ரி அவ்வளவா பேசிக்கூட பார்த்தது இல்ல.எப்பவும் இறுக்கமாக தான் இருக்கும்.ஒரு வாட்டி என் கண்ணால ஒரு சம்பவத்தை பார்த்து நாலு நாள் ஜோரம் வந்து கிடந்தேன்..ஆனால் இங்கேந்து போகனும்னு நினைச்சதே இல்ல..அவுங்களுக்கும் என் சமையலே பழகி மாத்த நினைக்கல…”

என்று பேச ஆள்கிடைத்ததில் அவர் பாட்டிற்கு பேசினார்.அவளோ அவர் சொன்ன மற்றதை விட்டு,

“என்ன சம்பவம் தாத்தா..”
என்றாள் ஆர்வமாய்..

அவளை மேலும் கீழும் பார்த்தவர்,

“இதில் என்ன உனக்கு இவ்வளவு ஆர்வம்..”
என்றார்.

“நாலு நாள் ஜோரம் வந்து இருந்தேனு சொன்னீங்களே அப்படி என்ன நடந்து இருக்கும்னு தெரிஞ்சிக்க தான்..”

என்று கண்களை உருட்டி கேட்டவளை

‘இதென்னடா இப்படி ஒரு பொண்ணு..’

என்று வித்தியாசமாய் பார்த்தார்.(போக போக பழகிடும் தாத்தா..)

“ஒரு வாட்டி.. விருந்தாளி வந்திருக்காங்க.காஃபி எடுத்துட்டு வர சொன்னாங்க..நானும் பதமா கலந்து கொண்டு போனேன்..நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க மாதிரி இருந்துச்சு.. ஆனால் பேசிட்டு இருக்கும்போதே திடீரெனு பத்ரி அவரை துப்பாக்கி எடுத்து பொட்டுனு சுட்டுடுச்சு..எனக்கா ஒரு நிமிஷம் இதயமே நின்னு போச்சு…விழுந்தவனை சுத்தி உள்ள உள்ளவனுங்க சாதாரண தூக்கி அப்புறப்படுத்துறானுங்க..அப்படியே நெஞ்சை புடிச்சிட்டு நின்னுடேன்.பத்ரி அதே துப்பாக்கிய என் பக்கம் நீட்டி, ‘இங்க என்ன வேடிக்கை..உள்ள போ ‘ அப்படினு சொல்லுச்சே ஓடிப்போனவன் தான்..நாலு நாளு படுத்த படுக்கை..”

என்று அவர் சொல்ல திறந்தவாய் மூடாமல் அதிர்ச்சியாய் பார்ப்பது அவள் முறையானது.கண்களில் லேசாய் பீதி..

“என்ன தாத்தா…அப்பளம் சுடுறா மாதிரி ஈஸியா சொல்றீங்க..அவருக்கு அப்புறம் என்னாச்சு…”

என்று படபடப்பாய் கேட்க,

“தோளில் தான் சுட்டாரு..அதனால் அந்தாளுக்கு ஒன்னுமில்ல..”
என்று கூறவும் தான் பெருமூச்சு விட்டாலும் இன்னும் படபடப்பு குறையவில்லை.

“ஆனால் எனக்கு அதெல்லாம் விட பெரிய அதிர்ச்சி உன்னை பற்றி கேள்விப்பட்டபோ தான் ஆனேன்..ஏன்னா ஏதோ ஒரு பொண்ணுக்காக இரக்கப்பட்டு காப்பாற்றி அதுவும் வீட்டிலே தங்க வைச்சிருக்குனுனா அது சாதாரணம் இல்லம்மா..”

என்று அவர் தன்போக்கில் பேசியபடி வேலை செய்ய ‘அதானே..நமக்கு இவ்வளவு செய்ய வேண்டிய அவசியம் என்ன..’ என்ற யோசனை அவள் மனதில் எழுந்தது.

இங்கே இப்படி இருக்க அங்கு தமிழோ இவளை தேடி அலையாத இடமே இல்லை எனலாம்.ஆனால் அவளை குறித்து ஒரு தகவலும் கிட்டவில்லை.ஒருபுறம் தேர்தல் பரபரப்பில் தமிழ்நாடே நியூஸ் சேனல்களிலும் பேப்பர்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆர்பரிக்க இந்திரனின் பின்னால் இருந்து அவரை டிரிக்கர் செய்து சிவபாலனிற்கு எதிராக அவரை இயக்கி கொண்டிருந்தான்.சிவபாலனின் கருப்பு பக்கமும் மக்களிடையே அதே சமூக வலைத்தளங்களின் வழியே உலாவிக் கொண்டிருக்க கடைசி நேரத்தில் கிளம்பும் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியாம திணறினார்.அதே சமயம் மனோகரும் பிரகாஷூம் விஷாலுடன் இணைந்து அவர்கள் ஜே.கே ஸ்டீல்ஸ் மீது இருந்த கேஸினை வென்று இருந்தனர்.

இவ்வாறான நிலையில் திசை தெரியாமல் தவித்தவனுக்கு கிட்டிய கலங்கரை விளக்கு போல் யவ்வனாவின் வீட்டு முகவரி தமிழுக்கு கிடைத்தது.

எங்கே அவள் இருந்தாலும் நிச்சயம் வீட்டினருடன் தொடர்பில் இருப்பாள் என்று நம்பிய தமிழ் உடனே அங்கு செல்ல முடிவெடுத்தான்.

Advertisement