Advertisement

அத்தியாயம்-17
தமிழின் வீட்டில்…

நாம் இங்கு வராத சில நாட்களில் அவன் வீட்டின் முன்புறமிருந்த செடிகளில் அப்பொழுது புதியாய் மொட்டு விட்டிருந்த பூக்கள் தற்சமயம் வண்ண வண்ண பூக்களாய் மாறியுள்ளது.மரம் செடிகள் வளர்பதில் வசுமதிக்கு ஆர்வம் அதிகம்.முன்பைவிட தற்போது புதிதாய் இரண்டு மரக்கன்றுகளை  நட்டிருக்கிறார்.மேலும்  வீட்டிற்கு புதிதாய் பெய்ன்ட் அடித்திருப்பார்கள் போலும் வீட்டின் வண்ணமும்  மாறியிருக்க ஆனால் அப்பொழுதில் இருந்து இன்றும் மாறாத ஒன்று வசுமதியின் வசவு மட்டும் தான்.

சமையலறையில் அடுப்பில் எதையோ தாளித்துக் கொண்டே வாயில் தன் மகனையும் சேர்த்து தாளித்துக் கொண்டிருந்தார் வசுமதி.

“ஊரு உலகத்துல அவ அவ எண்ணென்னமோ கேட்குற..ஆனால் நான் என்ன பெருசா கேட்டுபோட்டேன்..பட்டும் நகையுமா வந்து கொட்ட சொன்னேன்..இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி என் பேரக்குழந்தைகள ஆசையா வளர்க்க தானே கேட்டேன்..அதுக்கு எனக்கு கொடுப்பினை இல்லாமல் செய்யுறானே..”

என்று பல்லை கடித்தபடி சத்தமாகவே புலம்பியவர் ஒவ்வொரு பொருளையும் எடுக்கும் போதும் வைக்கும் போதும் ‘டொம்..டொம்..’ என்று அதிர்வோடு வைத்தார்.

“முன்னாமாச்சும்…ஏதோ கல்யாணத்தை தள்ளி தான் போடுறானு நினைச்சா..இப்போ சட்டமா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேனு சொல்றானே…இவன் வயசு பசங்க என்ன.. இவனோட சின்ன பசங்க கூட பிள்ளை குட்டினு ஆகிடானுங்க…ஆனால் இவன் மட்டும் இப்படி புத்திக் கெட்ட தனமா இருக்கான்..அப்பா இல்லாம வளர்ந்ததால தான் யார் பேச்சுக்கும் அடங்காமா திரியுறான்.. அம்மா தானேனு இளக்காரம்..இதே அவன் அப்பா இருந்திருந்தால் இப்படி தான்தோண்றியா இருப்பானா..நான் கேட்டதை செய்ய எனக்குனு யாரு இருக்கா..”

என்று ஃபுல் ஸ்டாப் வைக்கும் எண்ணமே இல்லாமல் கமா போட்டு வசுமதி அவனை வதைத்துக் கொண்டிருக்க எங்கோ வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருந்த தமிழ் அன்னையின் பேச்சை தாங்க முடியாமல் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.சில நாட்களாக தினமும் இதே வாடிக்கை தான்.குறிப்பாக பெண் பார்த்துவிட்டு வந்ததில் இருந்து.

வசுமதி தீடீரென்று ஒரு நாள் ஒரு சம்மந்தம் தகைந்து வருவதாகவும் பெண் பார்த்துவிட்டு வரலாம் என்று அழைக்க யவ்வனாவிடம் தொலைத்திருந்த மனதிற்கும் அன்னைக்கும் இடையில் தவித்தான்.அவன் தான் வசுமதியை முதலில் பெண் பார்க்க சொன்னது இடையில் யவ்வனா புகுந்து அனைத்தையும் குழப்பிவிட்டபின் தற்போது அம்மாவிடம் என்ன சொல்லி சமாளிப்பான்.அத்தோடு தன்னை ஏமாற்றியவள் என்று வண்டி வண்டியாய் கோபம் இருக்க,
“அவளுக்காக என் வாழ்க்கையை நான் வீணாக்க வேண்டுமா என்று வீம்பாக வசுமதியிடம் பெண் பார்க்க செல்ல சம்மதம் சொன்னான்.

பெரிதாக சொல்லிவிட்டாலும் அங்கே சென்றதும் ஏதோ தவறு செய்பவன் போல் அவஸ்தையில் நெளிந்தான்.அந்த சூழ்நிலையில் அவனால் பொருந்தவே முடியவில்லை.அதுவும் சர்வ அலங்காரத்தோடு குனிந்த தலைநிமிராமல் வந்து நின்ற பெண்ணை துளியும் அவன் கவனிக்கவில்லை.மாறாக இதே போல் யவ்வனாவை பெண் பார்க்க சென்றால் அவளும் இப்படி தான் குனிந்த தலை நிமிராமல் நிற்பாள என்று தன்னையே கேட்டுக் கொண்டவன் பின்பு,

‘எங்கே..அவள் தான் மாப்பிள்ளை பார்க்க வந்தது போல் என்னை சைட் அடிப்பாள்..நான் தான் வெட்கி தலை குனியனும்..’
என்று தானே கற்பனை செய்து கேலியாக எண்ணி பின்பு அந்த நிகழ்வெல்லாம் நடக்காத என்று மனம் ஏங்க தன் எண்ணபோக்கை கண்டு திடுக்கிட்டு தான் போனான்.

முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போல் இருக்க இனி ஒரு நிமிடம் இங்கே இருக்க முடியாது என்பதை உணர்ந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு கிளம்பியவன் வீட்டிற்கு வந்ததும் வசுமதியிடம்,

‘இனி பெண் பார்ப்பதை எல்லாம் விட்டுவிடு..நான் திருமணமே செய்துக்கொள்ள போவதில்லை..”
என்று ஒரே போடாய் போட அப்பொழுது அதிர்ந்தவர் தான் இப்பொழுது வரை விடாமல் அவனை திட்டிக்கொண்டிருக்கிறார்.

அவனாலும் அவள் நினைப்பில் இருந்து மீள முடியவில்லை.அவள் இருக்கும் போது கூட அவ்வளவாக எதுவும் தோன்றியது இல்லை.ஆனால் தற்போது சிந்தனை முழுவதும் அவளே வலம்வர எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்தான்.

இன்றும் அதே போல் தளர்ந்து அமர்ந்தவனின் முன்னால் இருந்த டீப்பாயில் சிரிப்புடன் அவள் அமர்ந்திருப்பது போலொரு பிம்பம் அவன்முன் தோன்ற அவளை கண்டதும் ஆத்திரமானான்.

“ஏய்… எல்லாம் உன்னால தான்டி..நான் பாட்டு சிவனேனு இருந்தேன்.. இங்க வந்து என் மனசை கலச்சிட்டு எஸ்கேப் ஆகிட்ட…ஆனால் நான் தினம் தினம் உன் நினைப்புல சாகுறேன்..”

என்று அவன் வார்த்தைகளை கடித்து துப்ப அப்பொழுதும் அதே புன்னகை தான்.

‘சிரிக்காத…இப்படி சிரித்து சிரித்து தானே என்னை ஏமாற்றினே..இனியும் ஏமாறுவேன் நினைச்சியா..கொன்றுவேன் ராஸ்கல்..உன்னை ஒரு நாளு வாட்டி பார்த்திருப்பேனா..அதுக்குள்ள எப்படி இந்த அளவு மனசு பேதலிச்சு போச்சு..என்னவோ நீ தான் என் வாழ்க்கை என்கிறா மாதிரி எல்லாமே ஸ்தம்பித்து போச்சு..எப்படி இதெல்லாம் செஞ்ச..மனிஷியே இல்ல நீ..பிசாசுடி..பிசாசு..”

என்று கோபமாய் சொன்னபடி கழுத்தை நெறிக்க முயல அவள் பிம்பம் காற்றோடு மறைந்தது.

“எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும்
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி

கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும்
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி….”

சுற்றும் முற்றும் பார்த்தவன் தன் பைத்தியகார தனத்தை எண்ணி தலையிலே அடித்துக் கொண்டான்.சில நொடிகள் அவனிடம் ஒர் மௌனம்!!பின்பு மெதுவாக தலையை உயர்த்தியவன்,

“விடமாட்டேன் யவ்வா..உன்னை நிச்சயம் விடமாட்டேன்..எங்க நீ போயிருந்தாலும் சரி உன்னை தேடிக் கண்டுபிடித்தே தீருவேன்..நீ நல்லவளோ… கெட்டவளோ… என்னை பிடிக்குமோ பிடிக்காதோ…எனக்கு தெரியாது.. அதெல்லாம் எனக்கு தேவையும் இல்லை.எனக்கு நீ வேணும்..என்னை பைத்தியகாரன் மாதிரி ஆக்கிட்டு போயிட்டேல உன்னை தேடிக் கண்டுபிடித்து கல்யாணம் பண்ணி காலம் பூரா என்கூடவே வாழ வைத்துக் கொடுமை படுத்துறேன்டி…நான் எப்படி உன்மேல பைத்தியம் ஆனேனோ அதே மாதிரி உன்னையும் என்மேல பைத்தியம் ஆக வைக்கிறேன்…இதுதான் உனக்கான தண்டனை..”
ர்என்று வீர சபதம் எடுத்தான் தமிழ்..

(அடேய்ய்ய்.. இதெல்லாம் ஓரு தண்டனையாடா…நாலு எப்பிசோட் முன்னாடி தானே பெரிய வில்லன் மாதிரி நரகத்தை காட்டுறேன் நாசாவ காட்டுறேன்னு சபதமெடுத்த அதுக்குள்ள இப்படி அந்தர் பல்டி அடிக்கிறியே..இது ஒரு ஹீரோக்கு அழகா..ஹலோ..சர்..தமிழ் சர்…கேட்காதே..இனி நான் என்ன பேசினாலும் இவனுக்கு கேட்கவே கேட்காது….)

முடிவெடுத்த திருப்தியில் எழுத்து வந்தவன் இன்னும் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்த வசுமதியின் கையை பற்றி மறுகையால் அடுப்பை அணைத்துவிட்டு அவரை இழுத்துக்கொண்டு நகர,

“டேய்…டேய்..அது இன்னும் கொதிக்கலடா…”

என்றவரை, “அதான்..அதுக்கும் சேர்த்து நீ கொதிக்கிறியே..வா ம்மோவ்..”

என்று அழைத்து வந்து கூடத்தில் நாற்காலியில் அமரவைத்தவன் அவர்முன் மண்டியிட்டு அவர் கையை பிடித்துக் கொண்டான்.

“இங்க பாரும்மா…நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தானே..சரி பண்ணிக்கிறேன்..ஆனா பாரு..உன் மருமக இருக்காளே..சரியான எமகாதகி..எங்க இருக்கானு தெரியல..அவளை எப்படியாவது கூட்டிட்டு வரேன்.. அப்புறம் உன் ஆசைபடி கல்யாணம் பண்ணி வை..போதுமா..”

என்று சொன்னவனை உலக அதிசயத்தை பார்ப்பது போல் விழி விரித்து பார்த்த வசுமதி,

“லவ் ஆ..??நீயா..???”

என்று வாய் பிளக்க அவர் பாவனையில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,

“ஏம்மோவ்.. நானெல்லாம் லவ் பண்ண கூடாதா..”
என்றான்.

“நம்ப முடியலயே ராசா…எம்மவனுக்கு அந்த திறமைலாம் இருக்கா..”

என்று வியந்தவரை அவன் முறைக்கவும்,

“சரி..சரி..ஒத்துக்குறேன்…யாருடா பொண்ணு..நம்மூரா..”
என்றார் ஆர்வமாய்..

“அதெல்லாம் அவளை கூட்டிட்டு வந்து உன்னுட்ட நிறுத்துவேன்..அவளுட்டே விசாரிச்சுகோ..”
என்று சொல்ல அவனை சந்தேகமாய் பார்த்தபடி,

“உண்மைய தான் சொல்லுறீயா தமிழு..”

என்றவரின் தலையில் கையை வைத்து லேசாக அவர் தலையை ஆட்டியபடி,

“சத்தியம்மா..”

என்று சொல்லி எழுந்தவன் எங்கோ புறப்பட,

“சாப்பிட்டு போ தமிழு..”
என்றவரிடம்,

“முக்கியமான வேலை ம்மா..வந்து சாப்பிடுறேன்..”

என்று கூறிக்கொண்டே அவன் சென்றுவிட கொஞ்ச நாளாய் சோர்ந்து காணப்பட்ட மகனிடம் பழைய வேகத்தை கண்டதும் அத்தாயின் மனதில் நிம்மதி பிறந்தது.

அன்னையிடம் சொல்லிக்கொண்டு அவன் நேராக சென்றது அவர்கள் ஏரியாயின் எக்.ஸ் கவுன்சிலர்  இந்திரனை காண தான்.

ஐம்பதுகளின் பாதியில் இருந்த அவருக்கு தமிழை ஒரளவுக்கு தெரியும் என்பதால் அவனை நன்றாகவே வரவேற்றார்.

“வாங்க தம்பி..ஏதாவது உதவி வேணுமா..எதுவாக இருந்தாலும் சொல்லுப்பா..”

என்று அவர் விசாரிக்க அவர்களை சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“ஐயா..உங்களுட்ட கொஞ்சம் தனியா பேசனுமுங்க..”

என்று பணிவாய் கூற ஒரு நிமிடம் யோசித்துவிட்டு பின்பு அவனை உள்ளே தன்னோடு அழைத்துச் சென்றார்..

“ஏன் ப்பா..எதாவது பிரச்சனையா.. நடராஜன் ஐயா அனுப்பி வைத்தாரா..”
என்று தனியாக வந்ததும் இந்திரன் விசாரிக்க,

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லேங்க ஐயா..ஆனால் ஒரு விசயம் கேட்கனும்னு..”

என்று அவன் தயங்க அவர் சொல்லும்படி ஊக்குவிக்கவும்,

“அது வந்துங்கய்யா..இந்த எம்.எல்.ஏ தேர்தலில் நீங்க தான் நம்ம கட்சி சார்ப்பா நிப்பீங்கனு எல்லாரும் எதிர்பார்த்தோம்..ஆனால் நீங்க நிக்கலயே…ஏன் ஐயா..”

என்று தமிழ் கேட்க அவர் முகம் சுருங்கியது.

அவருக்கு மட்டும் என்ன வேண்டுதலா..தேர்தலில் நிற்ககூடாது என்று..ஆனால் சீட்டு கொடுக்கபடவில்லையே..சிறு வயதில் இருந்தே கட்சிக்காகவே ஓடாக உழைத்து அரும்பாடு பட்டவர் ஆனால் கவுன்சிலர் என்பதை தான்டி அவரால் வேறெதுவும் செய்ய இயலவில்லை.சிவபாலன் அவர்கள் கட்சிக்கு வந்தபின்பு இவரின் முக்கியதுவம் பறிப்போனது.அதுவும் அவர் எம்.எல்.ஏ ஆனா சமயம் இவருக்கு இருந்த கவுன்சிலர் பதவியும் பறிப்போக தற்போது கட்சி தொண்டர் என்பதை தாண்டி அவருக்கு எந்த பதவியும் இல்லை.ஆனாலும் இந்திரன் என்றால் அவர்கள் தொகுதி மக்களுக்கும் சரி தொண்டர்களுக்கும் சரி தனி செல்வாக்கு தான். இதெல்லாம் அவனிடம் சொல்ல விரும்பாமல்,

“கட்சி சூழ்நிலைப்பா..”

என்று சமாளித்தார்.

“என்னங்கயா சூழ்நிலை… இத்தனை வருஷமாக கட்சியில இருக்கீங்க..நேத்து வந்த அந்த சிவபாலனிற்கு என்ன தெரியும்.. நீங்க இருக்கும் போது எப்படிய்யா அவருக்கு சீட்டு தந்தாங்க..அத்தோட பதவியில் இருந்த போது அவரு எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார்..அவரால் நம்ம கட்சி பேருக்கே அத்தனை இழுக்கு..அந்த இடத்தில் நீங்க இருந்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்குமா.. இப்படி இருக்கும்போது  மறுபடியும் அவரே பதிவிக்கு வந்தால் எப்படிய்யா..”

என்ற பதிவிசான தமிழின் பேச்சில் அந்த மனுஷர் சிலிர்த்து போனார்.

“சின்ன பையன் உனக்கு தெரியுது..ஆனால் பெரிய மனுஷங்களுக்கு புரியலேயே…என்ன பண்றது…”

என்று தானே வலையில் சிக்க புன்னகைக்க முயன்ற உதட்டை கட்டுபடுத்தி மேலும் பேசினான்.

“இல்லய்யா..நீங்க இப்படி சாதாரண விடக்கூடாது..உங்க உரிமையை நீங்க தான் கைப்பற்றனும்..”

என்றவனை புரியாமல் பார்த்தார்.

“ஆமாங்க ஐயா..அவங்க முடிவு தப்புனு இந்த முறை சிவபாலனை தோற்கடித்து நீங்க நிரூபிக்கனும் ஐயா..”

என்று கூற,

“என்ன தம்பி சொல்ற..இந்த உட்பூசலுக்கு பயந்து நான் என் கட்சியை விட்டேல்லாம் விலக மாட்டேன்..”
என்று சொன்னார் இந்திரன்.

“நீங்க ஏன் ஐயா விலகனும்…சிவபாலனை விலக வைங்க..”

“புரியலையே தம்பி..”

“நான் புரிய வைக்கிறேன்..”

என்றபடி சற்று நகர்ந்து அவர்முன் வந்தவன்,

“இந்த ஒரு வாட்டி இந்த ஒரு தொகுதியில நம்ம கட்சி தோற்பதால் நாம ஆட்சி அமைக்கிறதுல ஒரு பிரச்சினையும் வராது அது உங்களுக்கே தெரியும்..அதே சமயம் சிவபாலனுக்கு எந்த பதவியும் இருக்காது..இந்த அஞ்சு வருஷ கேப்புல அவரை ஒன்னுமில்லாமல் ஆகிடலாம்.. அப்புறம் அடுத்த தேர்தலில் நீங்க தான் எம்.எல்.ஏ அது கன்பார்ம்..

ஆனால் இப்போ மட்டும் சிவபாலன் ஜெய்த்து விட்டார்னு வைங்க..எம்.எல்.ஏ மட்டும் இல்ல நிச்சயம் அமைச்சர் பதிவியையும் கைப்பற்றிடுவார்.. அப்புறம் அவரை கீழே இறக்குவது ரொம்பவே கஷ்டம்..கஷ்டம் என்ன அவரை எதிர்க்கவே முடியாது..இந்த நிலை வரணுமா..”

என்று சற்று அலுங்காமல் அவரை தூண்டிவிட சிந்தனை வயப்பட்டார்.

“ஆனால்…அது கஷ்டம் தம்பி..அவன் தந்திரகாரன்..ஜெய்கிறதுக்கு பல வழி வச்சிருப்பான்…”

என்று யோசனையாய் இழுக்க,

“அட.. நீங்களெல்லாம் ஒரே கட்சி.. பாம்பின் கால் பாம்பறியாதா..அத்தோட கட்சியில முக்கால்வாசி பேருக்கு சிவபாலன் தேர்தலில் நிற்பது பிடிக்கல.. எல்லாம் உங்க சப்போர்ட் தான்..மிச்ச சொச்சம் அவர் பக்கம் நிக்கிற வளங்களையும் காசு கொடுத்து சாச்சிடுங்க..
ஐயா… நீங்களெல்லாம் நினைத்தால் அவரை நிச்சயம் வீழ்த்திடுவீங்க..நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை..”

என்றான்.இருந்தும் அவர் முகத்தில் குழப்பம் குறையவில்லை.

“இப்போ தோற்றாலும் அவன் முண்டி அடிச்சு அடுத்த தடவையும் வருவான்..வாட்டிக்கு வாட்டி அவனோட போட்டி போடுடே இருக்க முடியுமா.. அத்தோடு பணம் கொடுத்தா எல்லாரும் உதவுவானுங்க தான்… ஆனால் அந்த பணத்திற்கு நான் எங்க போவேன்.. சிவபாலன் மாதிரி நான் முன்ன பின்ன கொள்ளையடிச்சு சொத்து சேர்த்தது இல்லையே..”

என்று அவர் இன்னமும் தயங்க பெரூமூச்சு விட்டவன்,

“ஏனுங்க ஐயா…நான் எவ்வளவு பாஸிட்டிவ்ஆ பேசுறேன்..நீங்க மறுத்து மறுத்து பேசுறீங்க..”

என்றவன்,

“சரி..நீங்க கடைசியா சொன்ன இரண்டுக்கும் நான் வழிப்பண்றேன்..அதாவது..அவரை எப்படியாவது ஜெய்க்க விடாமல் பண்ணிடுங்க..அவர் செய்த ஊழலை வைத்து அவரை உள்ள தள்ளி நீங்க பதிவிக்கி வரவரைக்கும் ஜெயிலேயே வைப்பது என் பொறுப்பு.. அப்புறம் பணம்..”

என்று நிறுத்தியவன் தன்னோடு கொண்டு வந்திருந்த ட்ராவல் பேக் (!) எடுத்து முன்னால் வைத்து திறந்து வைத்தான்.உள்ளே கட்டு கட்டாய் பணம்!!!

“இதுல…இரண்டு கோடி இருக்கு..இப்போதிக்கு இதை வைச்சுகோங்க…மேலே தேவை பட்டாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்…”

என்று கூற மனுஷன், ‘யாரு சாமி இவன்..’ என்பது போல் வாய் பிளந்து பார்த்தார்.

“அவனை காப்பாற்ற நிறைய பேரு வருவாங்க.. அவ்வளவு ஈஸியா உள்ளே வைக்க முடியாதேப்பா..”

என்று அவர் இன்னமும் பின் வாங்க,

“அய்யோ…அதெல்லாம் யாரும் அவருக்காக முன் வராதபடி ஏற்பாடெல்லாம் நான் பார்த்துப்பேன்..நீங்க அவரை எப்படி கவுக்கிறதுனு மட்டும் யோசிங்க…”

என்றுவிட்டு, “அப்போ நான் கிளம்புறேன்..”
என்று எழுந்திருக்க அவரும் கூடவே எழுந்தார்.நடப்பதெல்லாம் ஆச்சரியமாய் இருக்க,

“உனக்கு இதனால என்ன லாபம் தம்பி..நீ இவ்வளவு மெனகிடுறதை பார்த்தால் ஏதோ இருக்கும் போலவே..”
என்றவரை பார்த்து புன்னகைத்தவன்,

“எல்லாம் ஒரு சோஷியல் சர்விஸ் தான்…நாடு நல்லா இருந்தால் தானே நாம நல்லா இருக்க முடியும்..”
என்று கண்சிமிட்டி கூறிவிட்டு வெளியே வந்து தன் பைக்கை எடுத்தவன்,

“உன்னை சுற்றி குழி தோண்ட ஏற்பாடு பண்ணியாச்சுடி மாப்பிள்ளே..நீ விழுந்தால் மட்டும் போதும்..அப்படியே மண்ணு போட்டு மூடிட வேண்டியது தான்..”

என்று நக்கலாய் எண்ணியபடி புறப்பட்டான்.

Advertisement