Advertisement

அத்தியாயம்-15
அனைத்தையும் சொல்லிவிடவில்லை என்றாலும் சொல்ல வேண்டியவையை  நடராஜன் சொல்ல அனைவருக்குமே அதிர்ச்சி தான்.பூங்கொடி கண்கள் குளமாக கணவனை பார்க்க அவர் ஆதரவாய் தலையை தடவிக் கொடுத்தார்.

அனுவோ தந்தையின் மறுபக்கத்தை அறிந்ததில் அதிர்ந்தவள் ஒரு மகளாய் தன் தாயை நினைத்து வருந்தினாள்.அவர் வாழ்கின்ற வாழ்க்கைக்கு தான் என்ன அர்த்தம் என்று மனம் வெதும்பியது.

அனைவரின் சிந்தையிலும் ஏதேதோ ஓடிக் கொண்டிருந்தாலும் யாரும் வாய் திறந்து பேசும் மனநிலையில் இல்லை.

அனைத்தையும் ஒரு பார்வையாளராக தூணின் அருகில் அமைதியாய் நின்றுக் கொண்டிருந்த தமிழின் அலைபேசி சிணுங்க அதில் வந்த தகவலை கண்டு அவன் இதழ்களில் லேசாய் புன்முறுவல் பூத்தது.

எதார்த்தமாய் அவனை கவனித்த மனோ ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்த ‘பொறு..’ என்பது போல் கையை உயர்த்தியவன் கையின் கடிகாரத்தில் பார்வையை வைத்து சரியாக ஐந்து நிமிடம் கழித்து வாசல் பக்கம் கையை காட்டினான்.

என்னவென்று புரியவில்லை எனினும் வாசல் பக்கம் திரும்பிய மனோ அதே  சமயம் அங்கே,

“அம்மா..”

என்ற கூவளோடு கவினும் மதுவும் ஓடிவர அந்த குரல் அவன் உயிர் வரை சிலிர்த்தது.

பிள்ளைகளின் குரலில் சட்டென்று அனைவரும் வாசல் பக்கம் திரும்ப நம்ப முடியாத ஆச்சரியத்தில் திகைத்தனர்.

வரண்டு போயிருந்த பூமி மழையை கண்டது போல் எல்லார் மனமும் குளிர்ந்து போக வித்யாவும் பிரகாஷும் நொடி பொழுதில் பிள்ளைகளை அணுகி தூக்கி இருந்தனர்.

மிகுந்த பயத்தில் இருந்த பிள்ளைகள் பெற்றோரிடம் ஆறுதலை தேடி ஒளிய அவர்களை விட அச்சத்தில் இருந்த வித்யாவும் பிரகாஷும் பிள்ளைகளை தழுவி நிகழ்வதை கனவில்லை நிஜம் என்று உணர முயல அந்த குடும்பத்தின் அழகான சங்கமத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் கண்களும் ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தது.

எல்லோரும் அவர்களை சூழ்ந்துக் கொண்டு பிள்ளைகளை மாறி மாறி கொஞ்ச மனோ மட்டும் தமிழிடம் சென்றவன்,

“என்ன செஞ்ச தமிழ்.. எ..எப்படி..”
சந்தோஷத்தில் வார்த்தை தடுமாற மிகுந்த உற்சாகத்துடன் கேட்கவும் மேலும் இதழ்கள் புன்னகையில் மலர,

“நமக்கு என்ன செய்ய அந்த எம்.எல்.ஏ நினைச்சானோ அதை நான் திருப்பி செஞ்சிட்டேன்..”
என்று தோளை குலுங்கி அசால்ட்டாக சொல்ல அப்பொழுதும் மனோவிற்கு புரியவில்லை.

“தெளிவா தான் சொல்லேன்டா…”

“நாம நரசிம்மனை கண்டுக்கொண்ட விசயம் சிவபாலனுக்கு தெரியாதுல.. நரசிம்மன் சிவபாலன் மாதிரி கிடையாது.பிள்ளை பாசம் ரொம்ப அவனுக்கு..அவன் பொண்ணு தான் அவன் உலகம்..ஸோ சிம்பிள்..அவன் பொண்ணை தூக்க வைச்சிட்டேன்..அவன் ஸ்டைல்லையே பொண்ணு வேணுனா பசங்க ரெண்டு பேரும் இன்னும் ஒரு மணி நேரத்திலே வீட்டில் இருக்கணும்னு நரசிம்மனை மிரட்ட வைத்தேன்.. எல்லாம் தானா நடந்துச்சு..”
என்றவனை வாய் அடைத்து போய் தான் நோக்கினான் மனோ.எவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டான்.

“எப்படி தமிழ்..எங்க கூடவே தானே இருந்தே..”

“அதெல்லாம் அப்படி தான்..ஐயாக்கு நான் இந்த மாதிரி ரௌடி வேலைலா பார்த்தா பிடிக்காது..அதான் செஞ்சிட்டு சொல்லிக்கலாம்னு சொல்லல..”
என்றான் கண்சிமிட்டி.

சற்று அனைவரும் நிதானித்தபின் எப்படி வந்தார்கள் என்ற கேள்வி வர தமிழே சொன்னான்.

கேட்ட பிரகாஷ் கண்கலங்க வார்த்தைகள் இன்றி அவனை அணைத்துக் கொள்ள அவன் தோளில் ஆறுதலை தட்டினான் தமிழ்.

பெரிய கண்டத்தில் இருந்து தப்பி வந்ததால் பிள்ளைகளை உட்கார வைத்து முதல் வேளையாக பல்லவி திருஷ்டி சுத்திப்போடார். பயம் சற்றும் குறையாமல் அன்னையின்  தோளிலே முகம் புதைத்து தேம்பும் மதுவை காணும் போது,

“ச்சே.. இவரெல்லாம் மனுஷனா..”

என்று தன் தந்தை குறித்தே ஆற்றாமையோடு எண்ணினாள் அனு.தள்ளி நின்றே அனைத்தையும் பார்த்தாளே ஒளிய அருகில் நெருங்கி யாருடனும் பேசவே அவளுக்கு தயக்கமாய் இருக்க ஏதோ தான் மட்டும் அந்நியப்பட்டது போல் தோன்றியது.அவள் நிலை அறிந்த பல்லவி தங்களைவிட மனோவின் ஆறுதல் தான் அவளுக்கு இப்போது அவசியம் என்பதை உணர்ந்து வித்யாவின் அருகில் அமர்ந்து மதுவின் தலையை வருடிக் கொண்டிருந்த மனோவை,

“மதுவை உன் அண்ணனும் அண்ணியும் பார்த்துப்பாங்க…நீ போய் பொண்டாட்டிய பாருடா..”
என்று முணுமுணுத்துவிட்டு சென்றார்.

திரும்பி அவளை பார்த்தவன் பச்சை மண்ணாய் திருதிருவென பாவமாய் நின்ற மனைவியை கண்டு மனம் இலக எழுந்து,

“என் பேக் எங்க வச்சே அனு..”
என்று இயல்பாய் கேட்டபடி அருகில் வர நேற்று திட்டிய பின் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் இருந்தவன் திடீரென்று கேட்கவும்,

“ஆங்..” என்று தடுமாறினாள்.

அதை பொருட்படுத்தாது,

“வா..வந்து எடுத்துக் கொடு..”
என்று கூறி அறைக்கு செல்ல அவளும் அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

உள்ளே வந்ததும் நேராய் கபோர்ட்டில் இருந்து அவன் உடைகள் இருந்த பையை எடுத்து நீட்ட அதை வாங்கி வைத்தவன்,

“அப்புறம்..கிளம்புறேன்னு சொன்னீயே…மூட்ட முடிச்செல்லாம் கட்டியாச்சா..”
என்று கேட்டான்.

கிளப்பி விடுவது போல அவன் கேட்டது அவளுக்கு கோபம் வர,
“ஏன் நான் போகணும்னு அவ்வளவு ஆசையா..”
என்றாள் முறைப்போடு..

“எனக்கா ஆசை..நீ தானே பெரிய இவ மாதிரி நான் போயிடுடேன் அது இதுனு டையலாக் விட்டது..பேசுறதுக்கு முன்னாடி என்னை பற்றி யோசிச்சியாடி..நான் கோபப்பட்டால் பதிலுக்கு கோபப்படு..இல்ல சமாதானம் படுத்து..அதை விட்டு என்ன அசால்டா போறேங்கிற..உனக்கு அது அவ்வளவு ஈசியா…பிச்சிடுவேன்…விளையாடுக்கு கூட இனியோருதரம் அப்படி சொன்னேனா..”

என்று கடுமையாய் சொல்ல அதற்கும் பாவமாய் பார்த்தவளை,

“லூசு பொண்டாட்டி..” என்று இழுத்து அணைத்து இருந்தான்.

அவன் மார்போடு ஒன்றியவள்,

“எனக்கு கில்டியா இருக்கு மனோ.. எல்லாரும் என்னை பற்றி என்ன நினைப்பாங்க.வித்யாக்காட்ட எந்த முகத்தை வைச்சிக்கிட்டு போய் பேசுவேன்..”

அவனிலே புதைந்து விடுபவள் போல் அவனை அணைத்தபடி கலங்கமாய் கேட்டாள்.

“ஹே.. யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க..என் அனு பேபி சொக்க தங்கமுனு எல்லாருக்கும் தெரியும்…அப்பா சொன்னா மாதிரி உனக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. சரியா..”

என்றவன்,

“ஆனால் இனிமேலாவது உன்னை மாதிரியே எல்லாரும் வெகுளியா இருப்பாங்கனு கண்மூடி தனமா  நம்பாதே..”

என்று கூற அதற்கு தலை அசைத்தாலும் அவள் மனம் நம்பமறுத்தது.
‘யவ்வனாவை நான் மறுபடியும் பார்க்கணும்..அவ வாயாலே ஏன் அப்படி செஞ்சானு கேட்டே ஆகணும்…”
என்று எண்ணினாள்.

“ஹான்..ஒரு முக்கியமானவங்கள நான் வந்ததில் இருந்து கண்டுக்கவே இல்லை பாரு.. அப்புறம் கோவிச்சிக்க போறாங்க…”
என்று கூறியவன் அப்படியே மண்டியிட்டு லேசாக மேட்டிட்டு இருந்த அவள் வயிற்றின் அருகில் முகம் வைத்து,

“மை பேபி.. எப்படி இருக்கீங்க…நான் இல்லாதப்ப அம்மாவை சமர்த்தா பார்த்துக்கிட்டீங்களா..”
என்று கொஞ்சும் குரலில் அவன் பேச மற்ற அனைத்தும் மறந்து கணவனின் செய்கையில் இரசிப்புடன் லயித்து இருந்தாள்.

சரி இவர்களுக்கு சற்று தனிமை கொடுத்துவிட்டு நாம் நமது நாயகனை  தேடி செல்வோம்.

நடராஜனோடு ஏதோ தீவிர ஆலோசனையில் இருப்பது தெரிகிறது.இறுதியாய்,

“இத்தனை நாள் அவன் என்ன செய்தாலும் கண்டுக்காமல் விட்டோம்..ஆனால் இன்னைக்கு இவ்வளவு தூரம் வந்தபிறகு அவனை சும்மா விடக்கூடாது தமிழ்…பதிவி இருக்க போய் தானே இந்த ஆட்டம்..அதை முதலில் பறிக்கனும்..”
என்று அவர் வார்த்தைகளை கடித்து துப்ப,

“ஐயா நீங்க கவலையே படாதீங்க..சொல்லிட்டீங்கல இனி நான் பார்த்துக்கிறேன்..”
என்று உறுதியளித்தான்.அதே சமயம் அவர்களிடம் வந்த கவின் தமிழிடம்,

“சித்தப்பா..”
என்று அவன் கையை பிடித்துக்கொள்ள,

“என்னடா..”
என்றான் வாஞ்சையோடு…

“சித்தப்பா..நீங்க தானே எங்களை காப்பாத்துனீங்க..ஏன் யவ்வனா அக்காவை காப்பாத்தல..”
என்று பளீச்சென்று கேட்க யவ்வனா பெயரை கேட்டதுமே அவனுக்கு கோபம் ஏறியது.

“அவளை ஏன் காப்பாத்தனும்..அவ தானே நம்ம எல்லாரையும் ஏமாற்றி உங்களை கடத்திட்டு போனா….குழந்தைங்கனு கூட யோசிக்காமல் இப்படி செஞ்ச அவள் பொண்ணே கிடையாது..பிசாசு..”

அவனுக்கு புரியாது என்றபோதும் ஆத்திரத்தில் வார்த்தைகள் வந்து விழுந்தது.

“அக்கா பேட் கேர்ள் இல்ல சித்தப்பா..அவங்க எங்களை விட்டு போக மாட்டேன் தான் சொன்னாங்க தெரியுமா..அந்த அங்கிள் தான் அவங்களை கார்லேந்து தள்ளி விட்டுடாங்க..பாவம் தெரியுமா அக்கா..அழுதுக்கிட்டே கார் பின்னாடி ஓடிவந்து விழுந்துட்டாங்க…”

ஏதோ அவனுக்கு தெரிந்த அளவில் விளக்க ‘இதென்னடா புது கதை..’ என்று குழம்பினான் தமிழ்.நடராஜனிற்கும் பேரன் கூறியதை கேட்டு குழப்பமே..!!ஆனால் அதற்கும் மேல் சிறு பிள்ளையிடம் என்ன கேட்பது எனவே,

“சரி கண்ணா..நாம பார்த்துக்கலாம்.. இன்னும் நீ சாப்பிடல தானே.. எவ்வளவு நேரம் என் தங்கம் பசியோட இருக்கும்
.வா சாப்பிடலாம்..”
என்று பேசிக்கொண்டே அவனை தூக்கிய நடராஜன் தமிழை அர்த்ததோடு ஒரு பார்வை பார்த்து செல்ல அவனோ யோசனையில் ஆழ்ந்தான்.

********

நிமிர்ந்து சிவபாலனை பார்க்கவே அச்சப்பட்டவனாய் நரசிம்மன் தாழ்ந்த குரலில்,

“மன்னிச்சிடுங்க ஐயா..என் பொண்ணை தூக்கு வாணுங்கனு நான் சத்தியமா எதிர்பார்க்கவில்லை.அவ என் உயிர் ஐயா..அவ இல்லாமல் நான் இல்லை..அதான்…”
என்று அவன் பேசும் போதே ஆத்திரத்தோடு கையில் இருந்த கைப்பேசியை தூக்கி வீசிய சிவபாலன்,

“செத்துப்போ..”
என்று ஆங்காரமாய் கத்தியவர்,

“கொலைவெறில இருக்கேன் சிம்மா.. கோபத்தில் எதாவது செஞ்சிடும் முன்னால இங்கிருந்து போ..போடா….”
என்று உறுமினார் அடிப்பட்ட புலியாய்..நினைத்தது நடவாததால் அவருக்கு கண்மண் தெரியாமல் கோபம் பொங்கியது.நடராஜனை பற்றி அறிந்து கொணடவருக்கு அவரது  நிழலாய் அசைக்க முடியாத அரணாய் இருக்கும் தமிழை தெரியாததே பரிதாபம்.

Advertisement