Advertisement

அத்தியாயம்-14
ஆகிற்று..கவினும் மதுவும் தொலைந்து இத்துடன் ஒரு நாள் பொழுது கழிந்து விட்டது.ஆனால் அவர்களை பற்றிச் சிறுத் தகவலும் கிடைக்கவில்லை.அவன் கொடுத்த கெடு முடிய இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்க வீடே துக்க வீடாய் பொழிவிழந்து போனது.

தன் தாயின் மடியில் கவிழ்ந்திருந்த வித்யா அழுதே கரைந்திருந்தாள்.

‘போமாட்டேனு சொன்ன பிள்ளைய கட்டாயப்படுத்தி போக வச்சேனே…என்னால தான்..அவன் பேச்சை கேட்டிருக்கனும்..’

விடாமல் புலம்பிய மகளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் பூங்கொடியும் ஜெயகாந்தும் தவித்தனர்.

வெளியே சென்றிருந்த ஆண்கள் வீட்டுக்கு வரவும் வேகமாய் அவர்களை அணுகிய வித்யா தன் கணவனின் கையை பற்றிக் கொண்டு,

“எங்கங்க பிள்ளைங்க.. கிடைச்சிட்டாங்கல..இப்ப வந்திடுவாங்கல்ல..”

என்று அவன் ஆம் சொல்ல மாட்டானா என்ற நப்பாசையோடு கேட்க பதிலற்று பிரகாஷின் தோள்கள் குலுங்கியது.ஒரே நாளில் அரைமனிதனாக இளைத்து விட்டான் அவன்.எல்லா விஷயங்களையும் நிதானமாய் அணுகும் அவனால் இதனையும் அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியவில்லை.

எல்லா வழிகளிலும் முயற்சி செய்தாகி விட்டது ஆனால் ஒரு துரும்புகூட கிடைக்கவில்லை.
காவல் துறையிலும் புகார் கொடுத்துவிட்டனர்.அவர்களும் தேடலில் தான் உள்ளனர்.நடராஜனே நேரில் சென்று கமிஷ்னரிடம் சிவபாலன் மீது புகார் செய்ய  அவரோ இவருக்கு உதவவும் முடியாமல் சிவபாலனை எதிர்க்கவும் முடியாத சூழலில் இருந்தார்.

தற்போதிய எம்.எல்.ஏ என்பதால் தகுந்த ஆதாரங்கள் இன்றி அவர்மேல் விசாரணை மேற்கொண்டால் தேவை இல்லாத பிரச்சனைகள் கிளம்பும் என்பதை விளக்கியவர் கூடிய விரைவில் குழந்தைகளை மீட்போம் என்று உறுதியளித்தார்.

ஆனாலும் மகனும் மருமகளும் உடைந்து அழுவதை அவரால் தாங்க முடியவில்லை.தளர்வாய் அமர்ந்துவிட்டார்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அனுவிற்கு ஒவ்வொரு நிமிடமும் நரகமாய் இருந்தது.நேரம் ஆக ஆக தன்னால் தான் தன்னால் மட்டும் தான் என்ற எண்ணம் மேலொங்க மனோவின் வெறுத்த பார்வையில் அவள் வாழ்க்கையே கசந்து போனது.

மிகுந்த தயக்கத்தோடு வித்யாவின் அருகில் சென்ற அனு,

“அக்கா..எனக்கு இதை சொல்ல கூட அருகதையில்லை.ஆனாலும் என்னை மன்னிச்சிருங்க க்கா..என்னால தான் எல்லாமே எங்கப்பாவில் தொடங்கி யவ்வனா வரைக்கும் எல்லாம் என் ஒருத்தியாள் தான். .எங்கப்பா போல ஒருத்தரோட பொண்ணு இந்த வீட்டில் இருக்க தகுதியே இல்லாதவள் தான்..நான் இங்கே வரபோய் தானே எல்லா பிரச்சனையும்..நான் போறேன்…”

என்று தளுதளுத்த குரலில் அவள் கூற அதிர்ந்து தன் மனைவியை நோக்கினான் மனோ.

அவளோ மேலும்,
“மனோ சொன்ன மாதிரி எல்லாம் என்னால் தானே.. நான் திரும்ப போனால் ஒருவேளை குழந்தைகளை அவர் விட்டுடுவாரில்லையா..”
என்றவள் மீது கோபம் பொங்கியது.

அவள் எப்படி தன்னை விட்டு போவேன் என்று சாதாரணமாய் சொல்லலாம்.நான் அவ்வளவு தானா அவளுக்கு..ஒரு கோபத்தில் சொன்னால் அதையே பிடித்துக் கொண்டு இப்படி சொல்வாயா என்று ஆத்திரம் வர எதுவும் பேசாமல் அவளையே வெறித்தான்.

“என்னம்மா பேசுற நீ..”
யாரும் பேசும் முன் நடராஜன் கண்டிப்புடன் கேட்டவர்,

“நீ இந்த வீட்டு பொண்ணு.. நீ எதுக்கும்மா உன்னை பிரிச்சு பார்க்கிற..வீட்டை விட்டு போறேங்கிற வார்த்தையெல்லாம் இங்க வரவே கூடாது..எனக்கு சுத்தமாக பிடிக்காது..”
என்று அழுத்தமாய் நடராஜன் கூற பார்வையை தாழ்த்தி அமைதியானாள் அனு.

மேலும் அவரே,

“அத்தோட இது இப்ப வந்த பிரச்சனை இல்லை..பல வருஷத்திற்கு முன்னாலே ஆரம்பிச்சது..அனுவோட அப்பா யாரு தெரியுமா கொடி..”
என்று தன் தங்கையை பார்த்துக்கேட்ட நடராஜன்,

“சிவபாலன்..” என்று கூற அதிர்ந்து நோக்கினார் பூங்கொடி.

(சுத்தி சுத்தி ஒரே விசயத்திலே நிக்கிறியே என்ன தான் அப்படி நடந்தது சொல்லி தான் தொலையேம்மா என்று கோபமாய் நீங்கள் முறைப்பது என்னால் உணரமுடிகிறது ஆதலால் நானே அதனை கூறுகிறேன்.)

சில வருடங்களுக்கு பின்னோக்கி செல்வோம்..

அன்றைய காலக்கட்டத்தில் இப்பொழுதைக் காட்டிலும் ஊர் திருவிழாக்கள் இன்னும் சிறப்பாகவும் கொண்டாட்டமாகவும் நிகழும்..அந்தந்த ஊர் மக்கள் மட்டுமின்றி வண்டிக்கட்டி பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் திடலாய் கிளம்பி வருவார்கள்.
அப்படி ஓராண்டு தேன்சோலையில் நடந்த திருவிழாவில் கலந்துக் கொள்ள தன் தோழர்களோடு வந்தவன் தான் சிவபாலன்.

சாமி கும்பிட்டானோ இல்லையோ கலர் கலர் தாவணியில் மிளிர்ந்த கன்னியர்களை கண்களால் கொல்லை கொள்வதே முதல் பணியாய் செய்துக் கொண்டிருக்க பல பெண்களில் முக சுளிப்பிற்கும் பல பெண்களில் பொறுக்கி என்ற திட்டல்களுக்கும் மத்தியில் ஒரே ஒரு பெண் மட்டும் அவன் பார்வையில் வெட்கம் கொண்டு பார்வையை தாழ்த்தினாள்.
அவள் தான் பூங்கொடி.நடராஜனின் தங்கை.
புத்தம் புதிதாய் பூத்த அந்த பதினாறு வயது மங்கைக்கு காமப்பார்வைக்கும் காதல் பார்வைக்கும் வித்தியாசம் தெரியாதது தான் பரிதாபம்.ஊரின் இளவட்டங்களுக்கு நடராஜனின் தங்கை என்ற ஒன்றே அவள் மீது மரியாதையை மட்டுமே தர இதுவரை யாரும் அவளை வேறு பார்வை பார்த்ததில்லை.அதனால் முதல் முறையாக ஒரு ஆடவனின் இத்தகைய பார்வை அவளை வெட்கம் கொள்ள வைத்தது.

எதார்த்தமாய் நூல் விட்டு பார்த்ததில் ஒரு பச்சை தாவணிப் போட்ட கிளி தானே வந்து சிக்கவும் ஏக குஷியான சிவபாலன் தனது பார்வை கனைகளை அவள் போகும் இடமெல்லாம் தொடரவிட்டான்.

மேலும் அவளை பற்றி நண்பர்களிடம் விசாரிக்கையில் கிடைத்த தகவல் படி அவளது செல்வாக்கை அறிந்தவன் மனதால் இன்னும் சில கணக்குகளை போட்டான்.

அவன் பார்வையின் பேதத்தை உணர்ந்த நண்பர்கள்,

“வேண்டாம் டா.. அதெல்லாம் ரொம்ப பெரிய இடம்..உன் பட்டணத்து பழக்கத்தெல்லாம் இங்கே காட்டாதே..”

என்று எச்சரித்தும்,

“போடா.. எத்தனை நாளைக்கு தான் ஒன்னு மாற்றி ஒன்னு தாவிக் கொண்டே இருப்பது..ஒரு இடத்தில் செட்டில் ஆக வேண்டாமா..”
என்பான் கோணல்சிரிப்போடு..

அதன்படி திருவிழா முடிந்தும் தேன்சோலைக்கு அவனது வருகை அதிகமாக ஏற்கெனவே அவனிடம் லேசாக சாய்ந்திருந்த பூங்கொடியை காதல் வலையில் விழ வைப்பது கஷ்டமாகயில்லை.

நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாய் அவன் காதலை வளர்க்க தங்கையின் போக்கை கண்டுக்கொண்ட நடராஜன் முதலில் சிவபாலனை பற்றி தான் விசாரித்தான்.அதில் கிடைத்த பதில்கள் எல்லாம் மோசமாக இருக்க கோபம் கொண்டு தங்கையை கண்டித்து வைத்தார்.

காதல் கண்ணை மறைக்க அண்ணனின் பாசம் கூட அடக்குமுறையாய் தோன்ற தன் காதலுக்கு ஒப்புக்கொள்ளாத அண்ணனையே எதிர்க்க துணிந்தாள் பூங்கொடி.

அவள் சிவபாலனிடம் சொல்லி அழுத பொழுது அவனும் நல்ல பிள்ளையாய் வேடமிட்டு முறைப்படி பொண்ணு கேட்டு அவள் வீட்டிற்கே வந்துவிட உக்கிரமானான் நடராஜன்.

தன் தந்தையையும் மீறி சிவபாலனை கண்ட மேனிக்கு சாடிய நடராஜன் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வீட்டை விட்டு துரத்தினார்.

அந்த சம்பவம் சிவபாலனை பெரிதும் பாதிக்க நடராஜனை பழி வாங்கவேண்டும் என்ற வஞ்சகம் மனதில் துளிர்விட்டது.
அதன் முதல் கட்டமாக பூங்கொடியை கைப்பிடித்து அவள் மூலம் ஆட்டிவைக்க திட்டமிட்டவன் அவளை தனிமையில் சந்தித்து அவள் அண்ணன் செய்ததற்கு அனுதாபம் தேடி அவளை தன்னோடு ஓடிப்போய் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தான்.

சிவபாலனின் திட்டத்தின் படியே எல்லாம் செயல்பட கடைசி நேரத்தில் எப்படியோ இதனை கண்டுபிடித்த நடராஜன் தன் நண்பன் ஜெயகாந்தை மட்டும் உடன் வைத்துக் கொண்டு யாரும் அறியும் முன் ஊர் எல்லையிலே அவர்களை பிடித்துவிட்டான்.

அங்கேயே அவன் உயிர் மட்டும் மிச்சம் இருக்கும் அளவு வெளுத்து வாங்கியவன் தன் தங்கையை இழுத்து சென்றுவிட்டான்.

இனி பூங்கொடியை இப்படியே விட மனம் இன்றி அவளை சீக்கிரம் திருமணம் முடிக்க நினைத்த நடராஜன் தன் தந்தையிடம் இதனை குறித்து பேச அவளை திருமணம் செய்துக் கொள்ள தானே முன் வந்தான் ஜெயகாந்த்.

அதன்பின் சிலபல மிரட்டல்களுக்கு மத்தியில் பூங்கொடியை ஜெயகாந்த் கையில் பிடித்துக் கொடுத்ததும் தான் நடராஜன் மனம் அமைதியடைந்தது.இனி தங்கை குறித்து பயமில்லை என்று.

காலமும் அனுபவமும் உண்மையான அன்பையும் காதலையும் பூங்கொடிக்கு கற்று தர தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார் இனிதாக.

இங்கே இவ்வாறாக இவர்கள் வாழ்க்கை இனி எல்லாம் வசந்தமே என்று இருக்க சிவபாலனோ மனதில் கடும் வெறியோடு முன்னேற பலவழிகளை கையாண்டான்.வாழ்க்கையில் தான் கொண்ட அவமானங்களுக்கு எல்லாம் அறுவடை செய்ய அடிப்பட்ட புலியாய் காத்திருந்தார்.

தான் நினைத்தை அடைய அவருக்கு தேவைப்பட்ட உயரத்தை அடையவே வாழ்க்கையில் பல வருடங்கள் கழிந்திருக்க மனைவி,மகள் என்று வந்தபின்பும் அவர் வன்மம் குறையவில்லை.

முதல் கட்டமாய் ஜெயகாந்தின் தொழிலில் தொடர்ந்து இடர்பாடுகளை ஏற்படுத்தினார்.
ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று தொடர்ந்து அவர் கொடுத்த இன்னலில் ஜெயகாந்த் திணறுவதை காண்கையில் ஒரு சேடிஸ்ட்டாக மகிழ்ந்து தான் போவார்.ஆனால் அதற்கு எதிரொலியால் தன் மகளை நடராஜனின் மகன் காதலிப்பது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து மகள் அவனோடு சென்று திருமணம் முடித்துக் கொண்டதும் இன்னுமே அவர் கோபம் அதிகரித்தது.

தன்னை பழிவாங்கவே இவ்வாறு நடராஜன் செய்வதாக நினைத்தவருக்கு கொலை செய்யும் வெறி வர அதனை அமல்படுத்தவும் விழைந்தார்.ஆனால் அதில் பணம் குழப்படி என்று பிரச்சனைகள் நுழைய இறுதியாக யவ்வனாவின் மூலம் நடராஜனின் வீட்டில் புகுந்தே விளையாடினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியவர் தான் கையே வைக்காமல் நரசிம்மனை கொண்டே தான் நினைத்ததை நிறைவேற்றி கொண்டார்.

நடராஜனும் ஜெயகாந்தும் பிஸ்னெஸ்ஸில் கொடைச்சல் செய்வது சிவபாலன் தான் என்று  கண்டுபிடித்திருக்க இன்னும் வன்மம் பாராட்டுவதை கண்டு அதிர்ந்தனர்.

எப்படி இவனை சரிக்கட்டுவது என்று யோசித்தாலும் சிவபாலனை பற்றி தங்கள் மக்கள் அறிவதை இருவருமே விரும்பவில்லை.தங்கள் வாழ்கையின் கசங்கிய முடிந்து போன அத்தியாயங்களை பிள்ளைகளுக்கு தெரிய வேண்டாம் என்றே கருதினர்.

இவ்வாறு இவர்கள் நினைக்கையில் திடுதிப்பென்று மனோ மணக்கோலத்தில் அதுவும் சிவபாலனின் மகளையே திருமணம் முடித்து வந்து நிற்கவும் கடும் கோபம் கொண்டார் நடராஜன்.

தான் எப்படி வெளியே தெரியாமல் இதனை தீர்ப்பது என்று யோசிக்கும் போதும் இவன் மேலும் சிக்கலை ஏற்படுத்தி விட்டானே என்று ஆத்திரம் பொங்க அவனை வீட்டிலே சேர்க்க மாட்டேன் என்றார்.

அது கோபத்தில் சொன்னது தான் என்றாலும் நிதானித்த பின்பும் மகன் தன்னோடு இருப்பதைவிட தனியாக இருந்தால் அவனுக்கு எந்த ஆபத்தும் வராது என்று எண்ணினார்.ஆனால் அதை பொய்யாக்கி மனோகரை கொல்லும் அளவு துணிந்தபின் அவனை தனித்துவிட அவரால் முடியவில்லை.

இப்படி இலை மறை காயாக வீட்டினர் யாருக்கும் தெரியாமல் நடந்துக் கொண்டிருந்த அனைத்தும் இன்று குழந்தைகளை கடத்திய சம்பவத்தால் பகிரங்கமானது.

Advertisement