Advertisement

அத்தியாயம்-13
ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த மூவரின் முகமும் இறுக்கத்தை தழுவி இருக்க அவர்களை வாசலிலே நிறுத்தினார் பல்லவி.

வித்யா சிரிப்போடு ஆரத்தி தட்டை கரைத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து,

“அனு..போய் மனோ பக்கத்தில் நில்லுமா..”

என்று சொல்ல கணவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் சிறு வெட்க புன்னகையோடு அவன் அருகில் சென்று நின்றாள்.

திருமணத்திற்கு பிறகு ஒருவழியாக ஜோடியாய் இருவரையும் கண்டுவிட்ட அவர் மனம் குளிர சற்று தள்ளி நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நடராஜன் மக்களின் முக பாவனையிலே ஏதோ நடந்திருப்பதை யூகித்து இருந்தார்.

பிரகாஷின் பின்னால் நின்ற தமிழின் கண்கள் வழக்கம்போல் அவளை தேடியது ஆனால் இம்முறை கோபத்தோடு..

அவளை தவிர அனைவரும் இருக்க யோசனையில் அவன் புருவருங்கள் முடிச்சிட்டன.

உள்ளே வந்தவர்களிடம் ஆளாளுக்கு ஏதேதோ பேச,

“ஒரு நிமிஷம்.. இதெல்லாம் அப்புறம் பேசிப்போம்..அந்த பொண்ணு யவ்வனா எங்கே..”
என்று  பிரகாஷ் கேட்டான்.

“ஏங்க…இதோ இங்க தான் இருப்பா…”
என்ற வித்யாவை,

“ம்ச்..சொல்றேன்..கூப்பிடு அந்த புள்ளைய..”
என்று அவன் சொல்லவும் குழப்பமாய் அவனை பார்த்தபடி உள்ளே செல்ல அவள் அறையில் யவ்வனா இல்லை.

‘எங்க போனா..’
என்று யோசித்த வித்யாவுக்கு அப்பொழுதும் எந்த சந்தேகமும் இல்லை.

‘இங்கே தான் எங்கயாவது இருப்பாள்..’
என்று நம்பியவள் அவளை வீடு முழுவதும் தேடினாள்.ஆனால் எங்கேயும் அவளை காணாததால் மனம் லேசாக உறுத்த அவசரமாய் கூடத்திற்கு வந்தவள்,

“வீட்டில் எங்கேயும் இல்லை..அனு எங்கேயாவது போறேனு சொன்னாலா..”

என்று கேட்க,

“இல்லையே க்கா..”
என்று அவள் முழித்தாள்.

“ஃபோன் பண்ணி பாருங்க அண்ணி..”

“அவளுட்ட ஃபோன் இல்லை தமிழ்..”

என்று வித்யா சொல்லவும் சுறுசுறுவென கோபம் இன்னும் ஏறியது.அவன் தான் முதல் சந்திப்பிலே அவள் அலைபேசி வைத்திருந்ததை கண்டவன் ஆகிற்றே..!!

அனு மனம் ஏதோ பெரியதாக வரப்போவதை உணர்ந்து படபடவென்று அடித்துக் கொள்ள,

“என்னாச்சுங்க..”
என்று மனோவிடம் அவள் கேட்டது தான் தாமதம்,

“இன்னும் என்னாக வேண்டும்..அதான் எல்லாம் ஆகிடுச்சே..நான் அப்போவே சொன்னேன்ல தேவையில்லாம எதையும் நம்ம தலையில கட்டிக்க வேண்டாம்னு..கேட்டியா நீ..இப்ப எங்க கொண்டுவந்து நிறுத்திருக்கு பார்..”
என்று அவன் பாய அவள் திடீரென்று கத்தவும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

அவன் கோபத்தில் ஆளாளுக்கு என்ன என்னவென்று ஆர்பரிக்க அனைவரையும் மீறி,

“என்ன நடக்குது இங்க..”
என்று நடராஜன் போட்ட அதட்டலில் சட்டென்று இடமே அமைதி ஆனாது.

அவர் அழுத்தமாய் மனோகரை நோக்க அவர் பார்வையில் சிரம் தாழ்த்தியவன்,

“என்னை மன்னிச்சிடுங்க ப்பா..நான் பொய் சொல்லிடேன்..”
என்றவன் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் ஒப்புவிக்க வீட்டினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவித உணர்ச்சியில் இருந்தனர்.

ஆனால் அனைவரையும் காட்டிலும் அதிக அதிர்ச்சியில் தாக்க பட்டது அனுஷ்யா தான்.

ஒருபக்கம் தந்தையின் செயலும் மறுபக்கம் யவ்வனாவின் துரோகமும் அவளை  ஸ்தம்பிக்க வைக்க பேச்சற்று நின்றாள்.

“நீ விளையாட்டு தனமா இருந்தாலும் விபரமான பிள்ளைனு நம்பினேன்..ஆனால் இல்லைனு நிரூபிச்சிட்டே மனோ…”
என்று நடராஜன் சொல்லும் போது அவனால் தலையை உயர்த்தவே முடியவில்லை.

“அந்த பொண்ணே போயிடுச்சுனா..அது செய்ய நினைத்ததை செஞ்சிட்டு தான் போயிருக்கும்…என்ன பண்ணிட்டு போயிருக்குனு தெரியலை..ஊரை தாண்டுவதுக்குள் அந்த பொண்ணை பிடிக்க பாருங்க..நேரத்தை வீணாக்காதீங்க..”
என்று அவர் கட்டளையிட அதை உணர்ந்து மூவரும் அவளை தேட விரைந்தனர்.

‘என்ன செய்துவிடுவான்..’
என்று அலட்சியமாய் அவனை எண்ணியதற்கு வீட்டிலே என் கண்முன் அவன் ஆள் வைத்திருக்கிறான் ஆனால் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கோமே என்றெண்ணி தலையை தாங்கி பிடித்து அவர் அமர்ந்துவிட்டார்.

“என்னங்க..என்னென்னவோ சொல்றான்..எனக்கு பயமா இருக்கு..நம்ம பிள்ளைக்கு எதுவும் ஆகாதுல..”
தாயாய் பதறிய பல்லவி நடராஜனின் அருகில் வந்து பயத்தோடு கேட்க உடனே தான் சுதாரித்தவர்,

“இதுவரை நாம பார்க்காத பிரச்சனையா பல்லவி..நம்ம கிட்ட  யாரும் சீண்ட முடியாது…அந்த பொண்ணு விசயத்துல  கொஞ்சம் தவறிட்டோம்..அவ்வளவு தான்..மனசை குழப்பிக்காதே..”
என்று மனைவியை ஆறுதல் படுத்தியவர் திகைத்து நின்ற மருமகள்களிடம்,

“உங்களுக்கும் தான்…இனிமேயாவது யாரு என்னானு பார்த்து பழகுங்க…”
என்று பொதுவாக கூறினாரே அன்றி அனு யவ்வனாவை குறித்து மறைத்தை பற்றியோ இல்லை அவள் தந்தை பற்றியோ ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

ஆனால் அவளால் தான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.
தன்னை கொண்டு தன் கணவனை கொல்ல துணிந்த தந்தையின் செயலில் துணுக்குற்ற மனம் யவ்வனாவின் துரோகத்தில் வெறுத்தே போனது.

‘எப்படி.. எப்படி.. இவ்வாறு செய்ய அவளுக்கு மனம் வந்தது.ஒரு தங்கை போல் அல்லவா நடத்தினேன்.என் உண்மையான அன்பை எப்படி சுயநலமாக சுபயோகிக்க முடிந்தது அவளால்..’
என்று மனம் வருந்த கணவன் போகும் போது பார்த்த பார்வையில் இருந்த ஆத்திரம் வேறு அவளை வெகுவாய் தாக்கியது.

யவ்வனாவை தேடி அலைந்த மூவருக்குமே அவள் என்ன செய்துவிட்டு தப்பித்திருப்பாள் என்ற கேள்வியே மண்டையை குடைய அதற்கான பதில் மாலை குழந்தைகளை அழைக்க சென்ற போது தெரியவர அன்றைய நாளின் அடுத்த இடி சத்தமில்லாமல் அவர்கள் தலையில் இறங்கியது.

ஏதேதோ யோசித்த அவர்கள் அவள் கவின்,மதுவின் பள்ளியை அணுகி குழந்தைகளை கடத்தியிருக்க கூடும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை.

அதன் பின் சரியாக ஒரு மணி நேரம் சென்று பிரகாஷின் எண்ணில்,

‘உங்க அப்பா பெரிசா கிழிச்சிடுவோம்னு வீர வசனம் பேசினார்…முடிந்தால் 48 மணி நேரத்திற்குள் உன் பிள்ளைகளை கண்டுபிடித்து  காப்பாற்றிக் கொள்..இல்லை அத்தோடு அவர்களை மறந்துவிடு..’
என்ற செய்தியை தாங்கி குறுஞ்செய்தி வர மொத்த வீடும் நிலைகுலைந்து போனது.

*
*
*
*
“புது கார்..யாருடையது க்கா..அப்பா வாங்கி இருக்காங்களா..”
கையில் ஒழுகிய ஐஸ்கிரீமை சுவைத்தபடி கவின் கேட்க ஏதோ யோசனையில் இருந்த யவ்வனா,

“ஹான்..ம்ம்…ஆமாம்மா..அதான் முதல்ல உன்னை ஏற்ற அனுப்பி வைத்தார்…”
என்று வாயிற்கு வந்ததை சொல்ல அவனோ,

“ஓஓஓஓ.. சூப்பர்..ஆனால் ஏன் ரொம்ப நேரம் போயிட்டேஏஏஏஏ இருக்கோம்.. பாருங்க மது தூங்குயே போயிட்டாள்…அப்படி எங்கே போறோம்..”
என்று மீண்டும் ஒரு கேள்வியை வைக்க ஏதோ சொல்லி சமாளித்த யவ்வனாவிற்கு இந்த பிஞ்சு முகங்களை காண்கையில் மனம் துடித்தது.

இதனை செய்யவே கூடாது என்று உறுதியாய் இருந்தவளை காலையில் அலைபேசியில் வந்த புகைப்படம் கலைத்தது.

அவள் தங்கையின் கழுத்தில் கத்தியை வைத்து இருப்பதுபோல் ஒரு புகைப்படத்தை எடுத்து கீழே உன் தங்கச்சி உயிரோட இருக்க வேண்டுமா..வேண்டாமா..?
என்றதை படித்தபின்பு மனதை கல்லாகி கொண்டு செய்தாள்.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் பிள்ளைகளை என்ன செய்ய காத்திருக்கின்றனரோ என்று சிந்திக்கும் போது செத்து செத்து பிழைத்தாள்.

தற்போதும் துக்கத்தில் கண்ணீர் வழிய சத்தமில்லாமல் அதனை துடைத்துக் கொண்டவளின் கட்டை விரலில் இருந்த மோதிரம் அவள் கன்னத்தை கீற அடுத்த நொடி மனம் தமிழ் பால் தாவியது.

‘கண்டிப்பாக இந்நேரம் என்னை பற்றி கண்டு பிடித்திருப்பார்…என்னை ரொம்ப கேவலமா நினைத்திருப்பார்ல..’
என்று விரக்தியாய் எண்ணியவள்,

“ம்ஹூம்.. பரவாயில்லை.. அவருக்கும் என்மேல் ஒரு விருப்பம் இருந்தது புரிய தான் செய்தது..ஆனால் அவருக்கு ஏற்றவள் நானில்லை..என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பாள்..”
என்று மனம் வலித்தாலும் அவன் நலனுக்காக நினைத்தவள்,

“ஆனால் நீங்க எப்படியும் பசங்களை காப்பாற்றி விடுவீங்கனு நம்புறேன் தமிழ்..அந்த ஒரே நம்பிக்கை தான் எனக்கு ஆறுதல்..”
என்று மனதால் அவனோடு உரையாடியப்படி மோதிரத்தின் மேல் அழுத்தமாய் ஒரு முத்தத்தை வைத்தாள்.

சற்று நேரத்தில் கார் ஒரு இடத்தில் திடீரென நிற்க பட்டென்று அவள் புறம் கதவு திறக்கப்பட்டது.

“ஹேய்..இறங்கு..”

அக்கூட்டத்தில் வந்து நின்ற தடியன் அவளை அதட்டினான். அவனை கண்டு பிள்ளைகள் அவள் பின்னால் பயத்தில் பதுங்க அவர்களை விட்டு இம்மியளவும் நகர அவளுக்கு தோன்றவில்லை.

“ஏ..ஏன்..”

“உன் வேலை இத்தோட முடிஞ்சிருச்சு..அதுங்கள இனி நாங்க பார்த்துப்போம்..நீ இறங்கு”

“இல்லை..ப்ளீஸ்..பசங்களை எதுவும் செஞ்சிடாதீங்க…”

“எங்களுக்கு தெரியும்..நைநைங்காம இறங்கும்மே..”
என்று அவன் எரிச்சலாய் கூற அவள் கால்கள் நகர மறந்தது.

“அடடடடே..இத்தோட பெரிய ரோதனையா போச்சு..”
என்று சலித்தவன் திடீரென்று யவ்வனா கையை பிடித்து இழுத்துப்போட பொத்தென்று வண்டியிலிருந்து கீழே விழுந்தாள்.

“அக்கா…அக்கா…”
என்று கவினும் மதுவும் பயத்தில் அலற அவளை கீழே தள்ளியவனோடு இன்னும் இருவரும் காரில் ஏறிக் கொண்டதும் புறப்பட்டது.

வேகமாய் எழுந்த யவ்வனா ஓடும் காரின் பின்னால்,

“ப்ளீஸ்..விட்டுருங்க…”

என்று பைத்தியகாரியை போல் கத்திக் கொண்டே ஓட அந்த ஆள் அரவம் அற்ற அவ்விடத்தில் அவள் குரலை கேட்க யாருமில்லை.

காரை துரத்திக் கொண்டே வந்தவள் அங்கே இருந்த இரயில்வே ட்ராக்கில் தடுமாறி விழுந்தாள்.

இரும்பில் தாக்கப்பட்ட கால்கள் வலியெடுக்க அவளால் துளியும் அசைய முடியவில்லை.காதில் இரயில் தூரத்தில் வரும் ஓசை கேட்டாலும் நகர முடியவில்லை.தனது இயலாமை நினைத்து கதறி அழுதாள்.

Advertisement