Advertisement

அத்தியாயம்-12
“ம்ஹூம்..ம்ஹூம்..ம்மா…”
என்று சிணுங்கிய மகனை உறுத்து விழித்த வித்யா,
“மூச்…வாயை தொறந்த பிச்சிடுவேன்..”
என்று மிரட்டி அவனுக்கு பள்ளி சீருடையை அணிவித்தாள்.
“நேத்து நான் கேட்டதற்கு சரின்னு சொன்னீங்கள்ல.. அப்புறம் ஏன் அப்பா விட்டுடு போனாரு..”
என்று அழுகைக்கு பிதுங்கிய உதட்டோடு கவின் கேட்க,
“நீ தான்டா..எழுப்ப எழுப்ப நல்லா தூங் இப்போ என்னை கேட்குறீயா..”
என்றாள்.
மனோகரை விமான நிலையத்தில் இருந்து ரிசிவ் செய்ய பிரகாஷூம் உடன் தமிழையும் போக சொல்லி நடராஜன் சொல்ல இருவரும் காலையே புறப்பட்டு இருந்தனர்.ஆனால் கவினை விட்டுவிட்டு சென்றதால் காலையிலிருந்து அவன் பண்ணும் அலும்பை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் புன்னகை அரும்பியது.
“போ..நீ எழுப்பவே இல்ல..நான் ஸ்கூல் போக மாட்டேன்…”
“அடி வாங்குவ கவின்…அதான் அப்பா கூட போகலைல..வீட்டில உட்கார்ந்து என்ன பண்ண போற..”
“சித்தப்பா இன்னைக்கு வராங்களம்மா.. அதனால லீவ் போட போறேனு ஸ்கூல எல்லாருட்டையும் சொல்லிட்டேன்…இப்போ போனால் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க..போ நான் போக மாட்டேன்..”
“உன்னை யாரு ஊருக்கே டமாரம் அடிக்க சொன்னா… அதெல்லாம் யாரும் கிண்டல் பண்ண மாட்டாங்க..பாரு மது ரெடியாகிட்டா..”
என்று வித்யா சொல்லிவிட தன் பாட்டியை பாவமாய் பார்த்தான்.
“ஒருநாள் தானே வித்யா..விடேன்..ஏன் புள்ளைய அழ வைக்கிற..”
என்று பல்லவி உதவிக்குவர,
“வேணாம் அத்தை…இப்போ மனோ வந்ததும் ‘சித்தப்பாவோட அங்க போறேன்..இங்க போறேன்னு..’ வரிசைக் கட்டி லீவ் போடுவான்..இன்னைக்கு ஸ்கூல் போகட்டும்..”
என்று உறுதியாக சொல்ல அவன் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டான்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நடராஜன்,
“கண்ணா இங்க வா..”
என்று அழைக்க ஓடிச் சென்று அவரோடு ஒட்டிக் கொண்டான்.
“அடம் பண்ணாமல் போயிட்டு வா ராஜா..தாத்தா சாயுங்காலம் உனக்கு பிடித்த ஐஸ்கிரீம் நிறைய வாங்கி தரேன்..”
“ஆனால் அம்மா ஐஸ்கிரீம் சாப்பிட்டா திட்டுவாங்க..”
“திட்டமாட்டா நான் பார்த்துக்குறேன்..சரியா..”
என்று கன்னம் வலித்து செல்லம் கொஞ்ச கவின் முகம் மலர்ந்தது.
“மை ஸ்வீட் தாத்தா..”
என்று சிட்டாய் பறந்து செல்ல அவர் உதடுகள் சிரித்தாலும் ஏனோ காலையில் இருந்து அவருக்கு மனமே சரியில்லை.
நேற்று சிவபாலன் அவ்வாறு சொன்னதில் இருந்தே மனோவிற்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என்று மனம் பதைபதைக்க அதே சிந்தனையிலே உழன்று கொண்டிருந்தார்.
இதனை அறியாது மனம் முழுக்க மகிழ்ச்சியோடு தாய் மண்ணை அடைந்திருந்தான் மனோ.
“ஆஹா..ஆஹா.. ஆயிரம் சொல்லு இப்போ தான் சுவாசிக்கிறா மாதிரியே இருக்கு..”
மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த காரின் வின்டோ புறம் தலையை சாய்ந்து இரசித்து சொன்னான் மனோ.
“ஏன்டா அப்படி..”
“பின்னே..ஹிந்தியா கேட்டு கேட்டு காதெல்லாம் புளிச்சு போயிருச்சு ண்ணே.. அதுவும் சாப்பாடு மூணு வேளையும் சப்பாத்தி தான்.. அரவிந்த் மாதிரி காண்டுல ‘சப்பாத்தி..சப்பாத்தி..’னு பாடாத ஒன்னு தான் குறை..நாக்கு செத்து போச்சு..விட்டால் போதும்னு ஒடியாந்திருக்கேன்…”
என்றான் பெருமூச்சோடு..
“உன்னை யாரு அப்படி போய் வேலை பார்க்க சொன்னா..நம்ம சொந்த தொழிலே பார்த்துக் கொண்டு நம்ம ஊரிலேயே ராஜா மாதிரி இருப்பதற்கென்ன..”
என்று பிரகாஷ் சொல்ல,
“அக்ஷுவலி அண்ணா.. நானும் அந்த முடிவில் தான் இருக்கேன்..இந்த ப்ராஜெக்ட் ஓட நான் ரெசிக்னேஷன் எழுதிக் கொண்டுத்துட்டேன்..வீட்டை விட்டு நாங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும்…”
என்று மனோ கூறியதைக் கேட்டு பிரகாஷ், தமிழ் இருவருக்குமே இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
“என்னடா..சொல்லவே இல்லை..என்ன திடீர் மாற்றம்..”
என்று பிரகாஷும்,
“ஒரு மும்பை பயணத்திலே இத்தனை நாள் பிடிவாதத்தை விட்டுடீங்க…என்ன ஆச்சரியம்..”
என்று தமிழும் கூற,
“இப்போ இல்லை..கொஞ்ச நாளாவே அதான் என் மனசுல ஓடிட்டு இருக்கு..ஒண்டிக்கட்டையா ஊரு சுத்தும் போது ஒன்னும் தெரியல..ஆனால் பொண்டாட்டி குடும்பம்னு ஆனதும் தான் தனியா இருக்கறதோடு கஷ்டம் புரிஞ்சிது..என் ஊரு…என் குடும்பம் இருக்கும் போது நாங்க ஏன் இப்படி இருக்கணும்னு அடிக்கடி யோசிப்பேன்..அதோட விளைவு தான்..”
என்றான் உணர்ந்து..
“ரொம்ப சந்தோஷமா இருக்குடா..இதை தான் ஒரு கால் கட்டு போட்டால் எல்லாம் சரியாகிடும்னு சொல்றதா..என் தம்பிக்கே ஞானம் வந்துடுச்சே..”
என்று மகிழ்ச்சியாய் கூறிய பிரகாஷ் பின் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் குளறுபடிகளை பற்றி சொல்ல,
“என்ன அண்ணா.. இவ்வளவு நடந்திருக்கு..என்னிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லல..”
என்றான் வருத்தமாய்..
“நேரில் சொல்லிக் கொள்ளலாம் என்று தான் விடடு்டேன்..”
“மாமாவே சாப்ட் கேரக்டர்..அவரு உண்டு அவர் வேலை உண்டுனு இருப்பாரு..அவருக்கு யாரு கொடைச்சல் தருவது..மச். விஷால் தனியா என்ன பண்றானோ தெரியலையே..”
என்றான் கலவையாய்..
அதே சமயம் தமிழின் அலைபேசி சிணுங்க எடுத்து பார்த்தவன் அந்த டிடெக்டிவின் எண்ணை கண்டு பரபரப்பானான்.
“சொல்லுங்க ஜி..”
“சர்..விநாயகம் பத்தி டாப் டூ பாட்டம் கிடைச்சிருச்சு சர்..நாம சந்தேகப்பட்டது போல அவரு பிரின்டிங் பிரெஸ் வச்சிருந்தாலும் மறைமுகமாய் கடத்தல்,அடிதடி,கறுப்பு பணம்,போதை பொருள் பதுக்கி  வைக்கிறதுனு நிறைய இல்லீகல் வேலை எல்லாம் அவர் ப்ரதர் பரமனோட சேர்ந்து செய்கிறார்… இதுவரை எந்த பிரச்சனையிலும் சிக்காமல் தான் தொழில் செஞ்சிட்டு இருந்திருக்காங்க..பட்
கடைசியாக நரசிம்மன் என்றவருட்ட இரண்டு கோடி பணம் வாங்கி இருக்காங்க..அதை ஏமாத்திட்டாங்களா..இல்லை ஏமாந்துடாங்களா தெரியலை..அந்த பணத்தை திருப்ப சொல்லி அந்த ஆளு ரெண்டு பேரையும் சிவியரா டார்ச்சர் பண்றான்..அதனால பணத்திற்கு நாயா பேயா அலைறாங்க…”
என்ற போது அது எந்த பணம் என்று தமிழிற்கு புரிந்தது.
“ஹோ..யாரு அந்ந நரசிம்மன்..”
“நரசிம்மன் எம்.எல்.ஏ சிவபாலனோட கையாளு சர்..
எம்.எல்.ஏவோட ரைட் லெஃப்ட் எல்லாம் அவன் தான்..பக்கா ஃப்ராடு..சிவபாலனோட எல்லா ஃபோர்ஜரி வேலையும் அவர் பெயர் வெளியே வராமல் இவன் தான் செய்வான்..”
என்றவன்,
“அப்புறம் இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் விநாயகம் கடையில் வேலை செய்த எல்லாரையும் பற்றி டீட்டெய்ல் கொடுத்திருந்தேனே அதுல ஒரு பொண்ணை பற்றிய தகவல் மட்டும் இப்போ தான் கிடைத்தது.அந்த பெண்.. நரசிம்மன் இவர்களை வேவு பார்க்க ஏற்பாடு செய்த பொண்ணாக இருக்கும் மென்று நினைக்கிறேன்..ஏன்னா விநாயகமும் பரமனும் நரசிம்மனிடம் சிக்கிய அன்னைக்கே அந்த பொண்ணு மாயமாகிடுச்சு..அந்த பொண்ணை பற்றி எந்த தகவலும் கிடைக்கலனாலும் ஃபோட்டோ கிடைச்சிருக்கு சர்.. உங்களுக்கு ஒரு வேளை அது உபயோகமாய் இருக்கலாம்..நான் வாட்ஸ்அப் பண்றேன்..”
என்று கூறியவன்,
“அப்புறம்..ஜெ.கே ஸ்டீல்ஸ் மேல கேஸ்  போட்டவங்களை பற்றி  விசாரிக்க சொல்லிருந்தீங்கல்ல சர்..அந்த கன்ஸ்ரக்ஷன் கம்பெனியோட ஃபினான்சியல் பார்ட்னர் சிவபாலன் தான் சர்..ஸோ நீங்க தேடுற கேள்வி விடை இவராக மட்டும் தான் இருக்க முடியும்னு நினைக்கிறேன்..”
என்று தன் கருத்தை கூற அனைத்தையும் உள்வாங்கிய தமிழ் நன்றி கூறி அழைப்பை வைத்தான்.
‘சிவபாலன்….!!”
என்று யோசித்தவனுக்கு சட்டென்று பொரித்தட்டியது.
‘அனு அண்ணி அப்பா தானே.. அடப்பாவி…எலலாம் இவர் வேலை தானா… பொண்ணு கல்யாணம் செய்தது பிடிக்கலனு கொலை செய்யும் அளவு துணிச்சலா..??ஆனால் இதில் ஜெயகாந்த் சர் எங்கிருந்து  வந்தாரு..அவரோட பிஸ்னெஸில் ஏன் தலையிடனும்..”
என்று சிந்தனையில் அவன் இருக்க வாட்ஸ்அப் கூவியது.
அவனுக்கு வேண்டிய விஷயம் தெரிந்துவிட்டதால் இந்த பெண் யாராக இருந்தால் என்ன என்ற அலட்சியதோடு மெசேஜை திருந்தவன் அதிர்ச்சியில் உறைந்தான்.
‘இல்லை..இல்லை..இருக்காது..’
என்று மனம் முரண்ட
கண்களை ஒருமுறைக்கு இருமுறை சிமிட்டியும் பார்த்தான் புகைப்படத்தில் இருந்தது யவ்வனாவே தான்.
முதலில் வெளிப்பட்ட உண்மையைவிட இது தான் அவனை ஸ்தம்பிக்க செய்தது.அவனுக்கு உண்மையை யூகிக்கவே சில நிமிடங்கள் ஆனாது.
‘என்னை..இந்த தமிழையே ஏமாற்றி இருக்காளே..எப்படி.. எப்படி நான் கவனிக்காமல் போனேன்… முதல் பார்வையில் அவள் மேல் கொண்ட சந்தேகம் அதன்பின் ஏன் இருந்த இடம் தெரியாமல் போனது..’
தன்னையே கேட்டுக் கொண்டவனுக்கு விடையாய் மனம்,
‘நீ அவள் மேல் கொண்ட காதல்..’
என்று சொல்ல  திடுக்கிட்டான்.
“உண்மை தானே..அவளின் துடுக்கான குணத்தில் தன் மனம்  வசியப்பட்டு தானே கிடந்தது.அவள் விழி பார்வையின் அழகில் மனம் சொக்கித் தானே போனது.நேரில் அவளை கண்டதைவிட தினம் தினம் கனவில் அவள் செய்யும் தொல்லைகளை சுகமாய் தானே இரசித்தேன்..ஆனால் அனைத்தும்..போலிதானா..”
இதயத்தை யாரோ வாள் கொண்டு வீசியது போல் இருந்தது.
“அவளிடம் சந்தேகம் வராமல் இருக்க தன்னை அவள் திசை திருப்ப முயன்று இருக்கிறாள்..அதைகூட புரிந்துக் கொள்ளாமல் தானும் அவளிடம் மயங்கி இருந்திருக்கோமே..”
என்பது புரிந்த போது தன்னை குறித்தே அவமானமாய் உணர்ந்தவன் மேலும் சிந்திக்க சிந்திக்க ஏமாற்றம்  போய் ரௌத்திரம் தலைகேறியது.
‘நான் யாருனு தெரியாமல் என் ஃப்லீங்ஸோட விளையாண்டு இருக்க யவ்வனா..இதற்கு நீ நிச்சயம் அனுபவிப்ப..ரொம்ப கோரமாய் அனுபவிப்ப..இந்த தமிழ் எவ்வளவு மோசமானவன்னு உனக்கு தெரியல ..ஏன்டா உயிர் வாழ்கிறோம்னு நீ நினைக்கிற நிலையில் உன்னை நிறுத்துவேன்..’
என்று மூர்க்கத்தனமாக எண்ணியவனுக்கு அவள் ஏற்கெனவே அப்படியோர் நிலையில் தான் உள்ளாள் என்பதை யார் புரியவைப்பது.
“தமிழ்..தமிழ்…”
என்று  அருகில் அமர்ந்திருந்த பிரகாஷ் உலுக்கியதும் தான் சுயநினைவையே அடைந்தான்.
“ஏன் இங்க வண்டியை நிறுத்தி வைத்திருக்க..ஃபோனில யாரு என்ன சொன்னா..உன் முகமே சரியில்லையே..”
கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்
இருந்தனிடம் கேட்க எதுவும் சொல்லாமல் பின் சீட்டில் இருந்த மனோவின் புறம் திரும்பி,
“அந்த டயடீசியனை பற்றி நல்லா விசாரித்தீங்களா மனோ..அந்த பொண்ணு உங்களுக்கு எப்படி அறிமுகம் ஆச்சு..”
என்று கேட்க அவன் முகத்தில் இருந்த கடுமையில் இதில் ஏதோ இருப்பது புரிய இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் என்று எண்ணியவன் அனைத்தையும் சொன்னான்.
“என்னது…!!!!! இந்த விசயத்தை ஏன்டா மறைச்ச..அறிவில்லையா உனக்கு..”
என்று பிரகாஷ் கத்த,
“இல்ல அண்ணா..அனு தான் உண்மையை சொல்ல பயந்தால் அதான் நானும்..”
என்று அவன் தயங்கினான்.
“அவங்க தான் புரியாமல் சொன்னால் நீங்க யோசிக்க வேண்டாமா மனோ..நீங்க இப்படி அலட்சியமா விட்டது எங்க கொண்டு வந்து விட்ருக்கு தெரியுமா..”
என்றான் தமிழ் காட்டமாக…
கோபம் கண்மண் தெரியாமல் எல்லோர் மீதும் வந்தது.
“ஏன்..என்னாச்சு தமிழ்…”
“இன்னும் என்னாக இருக்கு..அந்த பொண்ணு திட்டமிட்டு தான்  வீட்டில் நுழைந்திருக்கா…அதுக்காக ஏதோ ஒரு கதையை சொல்லி உங்களை ஏமாத்திருக்கு….என்ன நோக்கத்தோட வந்தானு தெரியலை..ஆனால் யாரு அனுப்பினா தெரியுமா..உங்க மாமனாரு தான்…”
“அவர் எதுக்கு தமிழ் இதெல்லாம் செய்ய போராரு..நீ எதாவது தப்பா புரிந்திருக்க போற..”
“நல்லா தெரிஞ்சிக்கிட்டு தான் சொல்றேன்.. ஏற்கெனவே ஒருவாட்டி உங்க மேல கொலை முயற்சி நடந்திருக்கு தெரியுமா…”
என்று கூறி சகோதரர்கள் இருவரையும் அதிர வைத்தான்.
“என்ன தமிழ் சொல்ற..”
“உள்ளதை தான் சொல்றேன்..உங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிட கூடாதுனு நானும் ஐயாவும் இங்க ஏதேதோ பண்ணிட்டு இருந்தால் நீங்க அப்படியே கூட்டிட்டு வந்து நடு வீட்டுல விட்டுடீங்க..”
என்றான் கோபமாகவே..அவன் கோபம் நியாயமானது என்பதால் மனோவால் எதுவும் சொல்ல முடியவில்லை.
பிரகாஷ் தான்,
“சரிடா..இப்போ தான் தெரிந்துடுச்சுல..விபரீதமா எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி அந்த புள்ளைய புடிச்சு விசாரிப்போம்..வண்டியை எடு..”
என்று சொல்ல தலையசைத்தவன் காரை ஸ்டார்ட் செய்து வேகமாய் ஓட்டினான்.அவன் கோபமெல்லாம் வண்டியின் வேகத்தில் காட்ட கார் பறந்தது.
‘இவன் ஏன் இப்படி ஓட்டுறான்..சொன்னாலும் கேட்க மாட்டானே..அடெய் இவன் வண்டி ஓட்டும் போது தான் கால் பண்ணி கலவரத்தை தூண்டுவீங்களாடா..கருப்பசாமி உன் புள்ளைய காப்பாத்து ப்பா..’
என்று மனதுக்குள் இறைவனை துதித்தானே தவிர வெளியே ஒன்றும் கூறவில்லை.தமிழ் கோபமாய் இருக்கும் பொழுது அவனிடம் வாய் கொடுக்க முடியாது என்று இருவருக்குமே தெரியும்.
ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை அரைமணி நேரத்திலேயே எட்டிவிட்டனர்.

Advertisement