Advertisement

அத்தியாயம்-11
“சரிங்க தலைவரே..கண்டிப்பா தலைவரே…ஹாஹா.. அதெல்லாம் இந்த தேர்தலிலும் வெற்றி நம்ம பக்கம் தான்…என்ன பேசினா எங்க அடிச்சா மக்கள் மனச தொடும்னு எனக்கு தெரியாதா..ஹிஹி.எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டது தான் தலைவரே.. “

வாயெல்லாம் பல்லாக மிகுந்த பவ்யத்தோடு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் எம்.எல்.ஏ. சிவபாலன்.

கிட்டதட்ட அரைமணி நேரமாய் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அத்தனை பணிவோடு பேசிக் கொண்டிருந்த சிவபாலனை காண்கையில் வியப்பாக இருந்தது அவருடைய காரியதரிசிக்கு..

அந்த எம்.எல்.ஏ சீட்டிற்கு  அவர்கள் கட்சிக்குள் தான்  எத்தனை போட்டிகள்.எத்தனை சண்டைகள்.ஆனால் அனைத்தையும் தன் தந்திரத்தால் வென்று இம்முறையும் அதனை தானே தக்க வைத்துக் கொண்டார்.தற்போது இத்தனை நேரம் கட்சி தலைவரிடம் போடும் சோப்பும் அமைச்சர் பதிவிக்காக தான் என்பது அவனிற்கு புரிந்தது.
தன் காரியம் ஆக என்ன வேணாலும் செய்வாரே என்று எண்ணிக் கொண்டான்.
இன்னும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்த சிவபாலன் அவனிடம் திரும்பி,

“நாளைக்கு கட்சி மீட்டிங் ஏற்பாடு எல்லாம் எப்படிய்யா போது..”
என்று கேட்டபடி சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

“எல்லாம் ஓகே சர்…வண்டி வண்டியா நாளைக்கு மக்கள் கூட்டம் வந்து சேர்ந்திடும்…நீங்க இந்த ஐந்து வருஷத்துல மக்களுக்கு செஞ்சதா நாம காட்டிய நலத்திட்டங்கள் எல்லாம் இந்த ஃபைல கம்பைல் பண்ணிட்டேன்..அத்தோட எதிர்க்கட்சியை தாக்கி சொல்ல வேண்டிய முக்கியமான பாய்ண்ஸூம் எடுத்தாச்சு சர்..”
என்று கூறிக் கொண்டே அந்த கோப்பினை நீட்டினான்.

அதனை வாங்கி பார்வையிட்டு கொண்டிருந்தவரிடம்,

“சர்.. அப்புறம் உங்களை பார்க்க ஒருத்தர் வந்திருக்காங்க..”
என்று சொன்னதற்கு,

“யாருய்யா.. அதுவும் இந்த நேரத்துல வீடு தேடி வரது..”
என்று அலட்சியமாய் கேட்டார்.

“அதான் நானும் சொல்லி அனுப்ப நினைச்சேன் சர்.. ஆனால் அவர் பிடிவாதமா உட்கார்ந்து இருக்கார்..நடராஜன் வந்திருக்கேனு சொல்ல சொன்னார்..”
என்று அவன் சொல்ல பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்த சிவபாலனின் கை நின்றது.

“என்ன பேரு சொன்ன..”
என்று கேட்க அவன் மீண்டும் சொல்லவும் அவர் புருவம் ஏறி  இறங்க நக்கலாய் உதட்டை சுளித்தவர் அவரை வரச்சொல்லி அனுமதி அளித்தார்.

வீட்டின் வெளியே காத்திருந்த நடராஜனை உள்ளே செல்லுமாறு காவலாளி சொல்லவும் நுழைந்தார்.

யாரோ என்று எதார்த்தமாய் வந்து பார்த்த சிவபாலனின் மனைவி கலைவாணி நடராஜனை கண்டதும் வியந்தார்.அவரை இங்கே சற்று எதிர்பாராததால் தடுமாற்றத்தோடு,

“வாங்க…”
என்றவர் என்ன முறை சொல்வது என்ற தயக்கத்தோடு நிறுத்த அவரோ ஒரு தலையசைப்போடு விட்டுவிட்டார்.

“உட்காருங்க…வீட்டில் எல்லாரும் சௌக்கியமா..”
என்றவருக்கு தொண்டை வரை ஒரு கேள்வி வந்தும் அதை கேட்க முடியவில்லை.கணவனிற்கு தெரிந்தால் அவ்வளவு தான் ஆனால் மனம் ஒரு வார்த்தையாவது கேட்க வேண்டும் என்று அடித்துக் கொள்ள தவிப்போடு நின்றவரை மேலும் சிந்திக்க விடாமல் சிவபாலன் குரல் ஒலித்தது.

“அடடடடே..வாங்க…வாங்க நடராஜன்..எப்படி இருக்கீங்க..என்ன ஒரு அதிசயம் என்னை தேடி வந்திருக்கீங்க.. எதாவது உதவி வேண்டுமா..ஹம்ம்.. எத்தனை வருடங்களாகிவிட்டது உங்களை சந்தித்து. “
என்று ஆர்பாட்டமாய் வரவேற்ற சிவபாலனை எந்த உணர்வும் அற்று பார்த்தார்.

“என்ன நிக்குறீங்க..உட்காருங்க நடராஜன்..கலை வந்தவங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்து வா…டீ சாப்பிடுறீங்களா..இல்ல காஃபியா…”
என்று பேசிக்  கொண்டே வந்தவரை,

“போதுமா நிறுத்து சிவபாலன்..நான் இங்க உறவு பாராட்ட வரலைனு உனக்கே தெரியும்..”
என்றார் கோபமாக..

“விருந்தோம்பல் செய்யுறது ஒரு குத்தமா..சரி விடு.. அப்புறம் என்ன இந்த பக்கம்..”
என்றார் ஆசுவாசமாய் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு..

“ஒரு பதவிக்கு வந்த பிறகும் உன்னோட சின்ன புத்தி மாறவே இல்லைல..நீ செய்யுறதெல்லாம் உனக்கே சில்லறை தனமா இல்ல..”

என்று நடராஜன் கேட்டதற்கு ,

“எப்படி..நீ உன் பையனை வச்சி சில்லறை தனமா நடந்துக்கிட்டியே அந்த மாதிரியா..”
மீண்டும் நிதானமாகவே பதில் வந்தது.

‘தெரியும்…இதுப்போல் ஒரு பேச்சு வரும் என்று நிச்சயம்
எதிர்பார்த்தார்.ஆனால் அனைத்தும் தற்செயல் என்று இவனுக்கு சொன்னால் புரியுமா..’
என்று யோசித்தவருக்கு மீண்டும் மனோ மீது தான் கோபம் வந்தது.

“என் பையனிற்கு நீ யாருனு கூட தெரியாது..தெரிந்திருந்தால் உன் பெண்ணை திரும்பியும் பார்த்திருக்க மாட்டான்.. நடந்தது எல்லாமே தற்செயல் தான்..”
என்று நடராஜன் சொல்ல சிரித்த சிவபாலன்,

“அப்படியா..இப்பவும் ஒன்னும் கெட்டு போகல..நான் யாருனு சொல்லி அனுவை  மறுபடியும் இங்கேயே விட்ருங்க…”
என்று கூற,

“அனு இப்போ உன் மகள் இல்ல..எங்க வீட்டு மருமகள்..எங்க வீட்டு பொண்ணை இப்பவும் எப்பவும் உன்னால நெருங்க முடியாது…”
என்றார் நடராஜன்.அதில் சிவபாலனின் தன்மானம் சீண்டப்பட,

“அதெப்படி நடராஜன்..இதே மாதிரி பல வருஷங்களுக்கு முன்னாடி நான் வந்து நின்னப்போ உன் குடும்பத்தின் தகுதிக்கு நான் ஏற்றவன் இல்லனு அசிங்கப்படுத்துனீங்க..இப்போ இதையே உன் பையன் பண்ணும் போது உனக்கு அசிங்கமா தெரியலையா..?நீங்க எனக்கு செய்ததை நான் திருப்பி செய்ய வேண்டாமா..?!”
என்று நக்கலாய் பேசினாலும் அதிலிருந்த குரோதத்தை அவரால் உணர முடிந்தது.

“அப்போ என்னை எத்தனை தூரம் அசிங்கப்படுத்தி துரத்துனீங்க..என்னைவிட உன் தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவேன்னு கம்பீரமா சொன்னாய்..இப்போ என் உயரமும் தகுதியும் என்னவென்று தெரியுமா…உன் தங்கச்சி புருஷன் அனார்ந்து பார்க்கும் உயரத்தில் நான் இருக்கேன்…”
என்றவர் கர்வமாய் சொல்ல பார்த்துக் கொண்டிருந்த கலைவாணிக்கு மனம் கசந்தது.

நடராஜனோ,

“நான் எந்த தகுதியை பற்றி பேசினேனோ அது இப்பவும் உன்னிடம் இல்ல..அது என்னவென்றும் உனக்கு புரியவும் புரியாது..உன்னால எப்பவுமே என்னை ஒன்னும் செய்ய முடியாது..ஆனால் உன்னை ஒன்னுமில்லாம ஆக்க எனக்கு ஒரு நிமிஷம் போதும்.. தேவையில்லாமல் என் வழியில் வராதே..விளைவு மோசமா இருக்கும்…”
அழுந்தந் திருத்தமாய் எச்சரித்தார்.

“என்னால ஒன்னும் செய்ய முடியாதா..என்னால என்ன செய்ய முடியும்னு நாளைக்கு பார்பீங்க நடராஜன்..”

என்றவர், “உங்க பையன் வேற மும்பையில் இருந்து வருகிறார் இல்லையா..என்ன வேணாலும் நடக்கலாம்..”
என்று புருவங்களை உயர்த்தி கேலியாக சொன்னவர் மீது ஆத்திரம் பொங்க,

“டேய்…உன்னை கொன்னுடுவேன்..”
என்றார் ஆக்ரோஷமாய்..

“ஏன் கத்துறீங்க…போங்க..உங்களால என்ன செய்ய முடியுமா செய்யுங்க..”
என்றவனை கொலைவெறியோடு நோக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் நடராஜன்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கலைவாணிக்கு பகீரென்றது.

“என்னங்க.. எதுவும் பண்ணீடாதீங்க….நம்ம பொண்ணு வாழ்க்கை..”
என்று சொல்ல அவரை தீப்பார்வை பார்த்தார்.

“என்னைக்கு என் பேச்ச மீறி ஓடிப்போனாலோ அப்போவே அவளை கொன்னுப்  போடுருப்பேன்.. எலெக்ஷன்  டைம்..தேவையில்லாம என் பேருக்கு கலங்கம் வரக்கூடாதுனு பொறுமையா இருக்கேன்..எலக்ஷென் முடிந்ததும் அவளுக்கு இருக்கு..நீ மகள்னு உறவு பாராட்ட நினைத்தால் உனக்கும் அதே நிலை தான்..”
என்று கர்ஜித்துவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட கண்ணீர் மல்க,

“கடவுளே..என் புள்ளைய நீதான் காப்பாற்ற வேண்டும்..”

என்று இறைவனிடம் வேண்டினார்.

               ********************

“முடியாது…நான் அப்படி செய்யவே மாட்டேன்..”

அந்த இரவு நேரத்தில் தன் குரல் யாருக்கும் கேட்டிவிடாதபடி மெதுவாக கூறினாள் யவ்வனா.

“ஹேய்..இங்க பாரு..உன்னுட்ட எத்தனை தடவ சொல்றது..உன்னை செய்யுனு தான் சொனேன்..செய்யுறீயானு கேட்கவில்லை..உனக்கு வேற வழியும் இல்ல.”

“இதை ஒன்னை சொல்லியே இன்னும் என்னை எவ்வளவு படுத்துவீங்க.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா… தைரியம் இருந்தால் நேருக்கு நேரு மோதுங்களேன்.. இப்படி கோழைத்தனமான ச்சை ..”

என்று அவள் பெண்புலியாய் உறுமினாள்.
‘இந்த வாய் செவடால ஒரு விஷயம் செய்ய வைக்கிறதுக்குள்ள..’
என்று எரிச்சலாய் எண்ணியவன்

“ஏய்..அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்..மூடிட்டு சொன்னதை செய்..இல்லை அவ்வளவு திமிரு இருந்தால் உன் குடும்பத்தை அப்படியே மறந்திடு..”
என்ற உடனே அவனது அழைப்பும் துண்டிக்கப்பட்டது.

ஆத்திரம் மிகுதியில் அழுகையாய் வர,

“நான் எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செஞ்சேன். என்னை இப்படி ஒரு சூழ்நிலை கைதியாக்கிட்டியே…கடவுளே..”

என்று குற்றவுணர்ச்சியில் வெதும்பினாள்.

யோசித்து யோசித்து தலையில் ஆணியடிப்பது போல் வலியெடுக்க அப்படியே மடங்கி அமர்ந்தாள்.

Advertisement