Advertisement

அத்தியாயம்- 10
அந்தி சாயும் வேளையில் மாடியில் காய வைந்திருந்த துணிகளை வித்யா எடுத்துக் கொண்டிருக்க அருகில் பந்தலால் சிறு குடில் போல் அமைக்கப் பட்டிருந்த இடத்தில் அனு தலையை தாங்கியபடி அமர்ந்திருக்க அவளுக்கு பின்புறம் இருந்த குட்டிச்சுவரை பிடித்தபடி வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்றாள் யவ்வனா.

துணிகளை கையில் ஏந்தி வந்த வித்யா அனுவின் அருகில் இருந்த மேசைமீது போட்டு ஒன்றொன்றாக மடிக்க துவங்கியவள் சோர்ந்திருந்த அனுவை கண்டு,

“மயக்கமா வருதா அனு..போய் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்ல..இந்த மாதிரி நேரத்துல உடம்பு ரொம்ப அசதியா தான் இருக்கும்..கவி வயித்துல இருந்தப்போ முத நாலு மாசம் கிட்ட என்னால படுக்கைய விட்டு எழகூட முடியல..”
என்றவள்
” டாக்டரம்மா..உங்களுக்கு தெரியாததா..எடுத்து சொல்லலாம்ல..”
என்றாள் நக்கலாக..

யவ்வனாவை பற்றிய உண்மை வித்யாவிற்கு தெரிந்துவிட்டது.அதாவது அனுவிற்கு சொல்லப்பட்ட அதே விசயம் வரை..! அனு-யவ்வனாவின் உரையாடலை தற்செயலாய் கேட்டுவிட்டபடியால் அதன்பின் அவளிடம் மறைக்க முடியவில்லை.

ஆனால் விசயம் அறிந்ததும் வித்யா,

“மாமாவிடம் மறைப்பது சரியல்ல.. அவரிடம் சொன்னாலே போதும்..அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார்..’
என்று கூறி நடராஜனிடம் செல்ல துடித்தவளை சமாளித்து தடுத்து நிறுத்தி வைப்பதற்குள் போதும் போதுமென்றானது யவ்வனாவிற்கு..

“ஏன் மேடம்..நீங்க வேற..”
என்றாள் அசடு வழிந்தாலும்,

“அவங்க உடம்புக்கு ஒன்னுமில்லங்க..எதையோ நினைச்சி கவலை படுறாங்க”
என்றாள் சரியாக..
அப்போதிலிருந்து அவளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.ஆனால் கேட்க தான் சற்று தயக்கமாக இருந்தது.இந்த சில நாட்களிலே அனுவின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு அத்துப்படி..
காரணமின்றி அவள் தன்மீது காட்டும் அக்கறையில் யவ்வனாவின் மனம் உருகி தான் போனது.அது அவளையும் அறியாமல் ஒரு ஆழமான நேசத்தை அவள் மீது கொள்ள வைத்தது.

“ஏன் தலைவனை காணாம பசலை நோய்யா..”
என்று விளையாட்டாய் கேட்டாலும் பின் அவள் தலைக்கோதி,

“அப்படியா அனு..”

என்றாள் பரிவோடு.. நிமிர்ந்து அமர்ந்த அனு,

“அவரோட கொஞ்சம் சண்ட..”
என்றாள் தயக்கமாக..

“ஏன்டா..”

“நீங்களே சொல்லுங்க க்கா..அவர் எப்போ வரதாய் சொன்னாரு..இன்னும் வேல வேலனு ஒருவாரம் ஆச்சு வந்தப்பாடில்ல…கல்யாணத்திற்கு அப்புறம் அவரை பிரிந்து இருந்ததே இல்ல..இங்க நம்ம வீட்டை பத்தியும் உங்க எல்லாரை பத்தியும் நிறைய சொல்லியிருக்காரு..எல்லாரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணாரு..ஆனால் இப்போ நானே இங்க வந்திட்டேன்..அவர் அங்க என்ன கலட்டுறாருனு ஒரு கோவம்..அதான் ஃபோன் பண்ணினப்போ கொஞ்சம் ரொம்பவே கோபமா அவரை பேசக்கூட விடாம திட்டிடேன்..

“அவன் தான் நாளைக்கு வரானே அப்புறம் ஏன்..”

“அதை சொல்ல அவர் ஃபோன் பண்ணின போது தான்..இப்படி பேசிட்டேன்..அவரும் ஃபோனை கோபமாய் வச்சிட்டாரு..அப்புறம் அழைக்கவே இல்லை..அதான் மனசு கஸ்டமா இருக்கு..”
என்று அவள் வருத்தமாய் சொல்ல,

“இவ்வளவு தான் மேட்ரா.. நான் கூட என்னவோனு பயந்துட்டேன்..இதுக்கெல்லாம் கவலை பட ஆரம்பிச்சா வருசம் முழுக்க பட்டுடே இருக்க வேண்டி தான்..புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்து ஒருத்தரை ஒருத்தர் வாயிக்கு வந்தபடி திட்டுவதும் அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே ரொம்ப பேசிட்டோமோனு ஒருதருக்காக மற்றவர் வருத்தப்படுவதும் இந்த கல்யாண வாழ்க்கையில சகஜமப்பா…”
என்று அனுபவ இஸ்திரியாக புத்திமதி சொன்னாள்.

“இருந்தாலும்..அவரே வொர்க் டென்ஷனில் இருப்பாரு..இதுல நான் வேற …”
என்று அவள் மீண்டும் முதலில் இருந்து துவங்க,

“அடடடா.. அதெல்லாம் உன்ற வீட்டுகாரரு அடுத்த நிமிடமே மறந்திருப்பாரு..நீ போட்டு மாஞ்சிக்காத..”
என்றவள்,

“ஆனாலும் நீ ரொம்ப அப்பாவி அனு.. எப்படி இந்த மனோட்ட வந்து மாட்டினே…”
என்று சிரிப்போடு கேட்க,

“ம்ம்ம்…உங்களுட்ட பிரகாஷ் சர் மட்டினா மாதிரி..”
என்று சட்டென்று கவுண்டர் கொடுத்த யவ்வனா வித்யா முறைக்கவும்,

“ஈஈஈ..ப்லோவுல வந்திடுச்சு..”
என்று இளிக்க அனுவும் சிரித்துவிட்டாள்.

“ஓய்..என்ன நீயும் அவளோட சேர்ந்து சிரிக்கிற..உன் புருஷனோட சேர்ந்து தான் எனக்கு வாய் ஜாஸ்தியாச்சுனு இப்ப வரை அத்தை சொல்லுவாங்க.. தெரியுமா..”
என்ற வித்யாவை பார்த்து,

“ஏங்க இதெல்லாம் நம்புறா மாதிரியா இருக்கு..”
என்று மீண்டும் யவ்வனா கிண்டலாய் சிரிக்க,

“நிஜமா சின்ன வயசுல அவனோட எவ்வளவு ரகளை பண்ணிருக்கேன் தெரியுமா… அதுக்கெல்லாம் சேர்த்து தான் இப்போ நான் பெத்ததுட்ட அனுபவிக்கிறேன்…”
என்று போலியாக சலித்துக்கொள்ள மனோ இவர்களது சேட்டையை பற்றி கூறி நிறைய கேட்டிருந்ததால் வித்யா சொன்னதை கேட்டு சிரித்தாள் அனு.

ஆனால் யவ்வனாவோ,
“சின்ன வயசுலயா..அப்போலேந்தே உங்களுக்கு இவங்களை தெரியுமா…”
என்று குழப்பமாய் கேட்க,

“ஹேய்..என் சொந்த தாய்மாமா பசங்கல எனக்கு தெரியாதா..”
என்று கூற யவ்வனாவிற்கு இது புதிய தகவல்.’ஹோ..’ என்று கேட்டுக்கொண்டாள்.

“ஆமா..சின்ன வயசுல லீவ் விட்டா போதும் அப்பா,அம்மா வாராங்களோ இல்லையோ நானும் என் தம்பி விஷாலும் இங்க வந்திடுவோம்..நாங்க அப்புறம் மனோ மூன்னு பேரும் சேர்ந்து வீட்டையே ரெண்டாக்கிடுவோம்..அத்தை தான் எங்களை சமாளிக்க முடியாம திணறுவாங்க..”
என்று அன்றைய நினைவில் அவள் சிரிக்க,

“அப்போ பிரகாஷ் அத்தான்..உங்க கூட்டனில இல்லையா…”
என்று அனு கேட்டாள்.

“எங்க..!!அவங்க வயசு பசங்களோட தான் இருப்பாங்க..அதுவும் அவர் முறைச்சு முறைச்சு பாப்பாரா எனக்கு பயமா இருக்கும்..அதான் அவரை முன்வாசல பார்த்தா நான் பின் வாசல்ல போய் ஒளிந்துபேன்..”
என்றவளை இருவரும் சுவாரஸ்யமாய் பார்க்க,

“முறைச்சு..முறைச்சா…?”

“ஹம்ம்..அந்த மனுஷன் என்னை சைட் அடிச்சிருப்பாருனு நான் என்னத்த கண்டேன்..”
என்று அலுத்துக் கொள்வது போல் சொன்னாலும் அவள் முகத்தில் வெட்க புன்னகை.

“சரியான அப்பா கோண்டு..மாமா என்ன சொன்னாலும் ஆமா சாமி போடுவாரு..ஆனால் இந்த மனோ இருக்கான் பாரு எதுக்கெடுத்தாலும் எதிர்த்துக்கிட்டு தான் இருப்பான்..படிப்பு..வேலைனு எல்லாவற்றிலும்..!

நான் அப்போவே சொல்வேன்..இந்த பய கண்டிப்பா லவ் மேரேஜ் தான்னு..அப்போ பெருசா அம்மா காட்டுற பொண்ணுக்கு தான் தாலி கட்டுவேன்..வீடு கட்டுவேன் னு பீலா விட்டான்..ஆனால் நான் சொன்னது தான் உண்மையாச்சு..”
என்று குறும்பாக கூறியவள் பின் சற்று சீரியஸாக,

“இது மாமாக்கும் தெரியும்..அவர் எப்போமே மனோ விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிச்சதே இல்லை..ஆனால் உங்க விசயத்துல ஏன் அவ்வளவு கோபப்பட்டாருனு புரியலை..அவன் சொல்லாம கொல்லாம மாலையும் கழுத்துமாய் வந்து நின்னது தப்பு தான்…அதுக்குனு வீட்டுலே சேர்க்க மாட்டேன் சொன்னப்போ நாங்க துடிச்சு போயிட்டோம்..எதிர்த்து யாரும் ஒன்றும் பேசுவும் முடியல.. ரொம்ப செல்லமா வளர்ந்த பிள்ளையா தனியா என்ன கஷ்டம் படுறானோனு ரொம்ப வருத்தமா இருந்தது..”
என்று கூற அனுவிற்கும் சங்கடமாய் இருந்தது.

“என்னால தான்..விசயம் தெரிந்ததும் அப்பா ரொம்ப ஆத்திரப்பட்டாரு..அம்மா எனக்காக பேசி அவங்களுக்கும்…அவங்களும் பாவம்..நிறைய பட்டுடாங்க..உடனே எவனையோ புடிச்சு அவன் தான் மாப்பிள்ளைனு சொல்லவும்..அந்த நேரத்துல மேரேஜ் பண்ணிக்கிறதை தவிர வேற எதுவுமே தோணல..”
என்று வருத்தமாய் அனுவும் சொல்ல அவளது வருந்திய முகத்தை காண பொறுக்காது யவ்வனா,

“உங்களுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் தப்பே இல்ல..”
என்றவள் வித்யாபுறம் திரும்பி

“நீங்களே தேடினாலும் எங்க அனு மேடம் மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பாங்களா மேடம்..அவங்க கிடைக்க உங்க கொழுந்தனார் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்…”
என்று அவளுக்காக போர் கொடி தூக்க அவள் கேட்ட பாவனையில் சிரித்த வித்யா,

“ஆமா..ஆமா…கிடைக்காது தான்..ஒத்துக்குறேன்..”
என்றவள்,

“ப்பா..உன் தீவிர பக்தையாவே ஆகிட்டா அனு..”
என்று சிரித்தாள்.

“திக்கத்து நின்னவள தெய்வ மாதிரி இருந்து அடைக்கலம் கொடுத்த அவங்களுக்கு பக்த்தையா இருந்தாலும் தப்பில்ல மேடம்…”
என்று உணர்ச்சிகரமாய் யவ்வனா கூற,

“ஹே..என்னப்பா..பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற..உன்னோட எனக்கு ஒரு சிஸ்டர் ஃபீல் தான் எப்பவும் இருக்கும்..”

என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் அனு.யவ்வனாவின் மனமோ குற்றவுணர்வில் இன்னும் இன்னும் குறுக கண்கள் கலங்கினாள்.

சூழ்நிலையை இலகுவாக்க,

“ஹேய்..போதும் ப்பா…பின்னாடி லாலாலால பிஜியம் தான் மிஸ்ஸிங்..இப்படி சென்டிமென்ட் பிழியிறீங்க…யவ்வனா…பேசாமல் நீ எங்க ஊருலேயே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடு..உன் அனுவை பிரிய தேவையில்ல பாரு..”
என்று கண்ணடிக்க,

“ம்க்கும்..நான் இருக்க இருப்புக்கு..இப்போ கல்யாணம் ஒன்னு தான் குறை..போங்க மேடம்…”
என்றாள் அவளோ சலிப்பாக..

“நிஜமாதான் சொல்றேன்…ஹம்ம்ம்..வசுமதி அம்மா கூட அவங்க பையனுக்கு பொண்ணு பார்க்கிறதா அன்னைக்கு வந்து பேசிட்டு இருந்தாங்கல்ல அனு..”
என்று பொடிவைத்து வித்யா கேட்க அனுவோ எதுவும் அறியாமல்,

“தமிழ் அம்மாவை தானே சொல்றீங்க…ஆமாக்கா..பேசுவோமா…”
என்று சாதாரணமாய் அவளை வம்பிழுக்க விழுக்கென்று நிமிர்ந்து வித்யாவை பார்த்தாள்.

அவளோ கண்களை சிமிட்டி உதட்டில் குறும்போடு,

“என்ன யவ்வா..பேசட்டுமா..”
என்று புருவம் உயர்ந்த அகப்பட்டுக் கொண்ட பாவணையில் திருதிருத்தாள்.

வித்யாவின் கேலியிலும் அதற்கு யவ்வனாவின் முழியிலும் இதில் வேறெதோ இருக்கும் போலவே என்று யோசித்த அனு,

“என்ன அக்கா..எனக்கு தெரியாம எதாவது நடக்குதா..”
என்றாள்.

“நடக்குதாவா..படமே ஓடுச்சு..அனு..நீ தான் மிஸ் பண்ணிட்ட..டைடில் கூட வைக்கலாம்…கண்ணாலே காதல் சொன்னாலேனு.. எப்படி..”
என்று வித்யா விடாமல் வாரவும் அவள் முகம் சிவக்க,

“இந்த விளையாட்டுக்கு நான் வரலை..ஆள விடாங்க ப்பா..”
என்று துள்ளி ஓடிவிட அவர்கள் சிரிப்பு அவளை தொடர்ந்தது.

தலையில் தட்டிக்கொண்டே படிக்கட்டில் இறங்கிய யவ்வனாவிற்கு வெட்கமும் சங்கடமுமாய் இருந்தது.

‘அறிவே உனக்கு இல்ல..அஹ்ஹ்ஹ்…வித்யா மேடமும் கவனிச்சிருக்காங்க..அன்னைக்கு அவரும் சொன்னாரு..ஒரு சைட்டு கூட ஒழுங்கா அடிக்க தெரியலை.. நீயெல்லாம்..த்தூ..”

என்று இன்னும் சிலபல வார்த்தைகள் போட்டு தன்னை தானே கரித்துக் கொண்டே இறங்கியவள் கடைசி படி வந்தபோது,

“என்னாச்சு பிரகாஷ் அண்ணா..”
என்று கேட்ட அவன் குரலில் இதயம் ஒருமுறை எம்பி நின்றது.

‘இங்க எங்க..’
என்று சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு படிக்கட்டை ஒட்டி இருந்த அறையில் உள்ளனர் என்பது புரிய நகர மறுத்த கால்களால் அப்படியே நின்றுவிட்டாள்.

அங்கே பிரகாஷ் முகத்தில் கவலையும் சூழ,

“மாமா கால் பண்ணிருந்தாங்க.. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறானுங்களாம்..”
என்றான் நெற்றியை தேய்த்தபடி..

“இப்போ என்னடா..”
என்று கவலையாய் நடராஜன் கேட்க,

“ப்ராடெக்ஸ் லோவ் குவாலிட்டி மெடீரியல்ஸ்ல புரோடியூஸ் பண்ணறதாவும் அதனால நிறைய கன்சியுமர்ஸ் பாதிக்கப்பட்ட மாதிரி சித்தரித்து கேஸ் கொடுத்துருக்காங்க..இதுல அரசியல் பின்னணி ஏதோ இருக்கிறதால மீடியாவும் இதுல சேர்ந்து பிரச்சனைய பெருசாக்குறாங்க.. ஏற்கெனவே விழுந்த அடியில் இருந்து பெரும்பாடு பட்டு எழுந்தாங்க இப்போ மறுபடியும்….பிஸ்னெஸ்ல இப்போ தான் கால் பதிச்சிருக்கான் விஷால்..இப்படி ஃபெயிலியர் மேல ஃபெயிலியரால அவன் ரொம்ப நொந்து போயிருக்கான் அப்பா..யாரு அவங்கள இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறதுனு தெரியல..”
என்றவன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சோர்ந்து அமர்ந்தான்.

மேலும் தமிழோ,

“ஆமா ஐயா..அத்தோட நம்மளோட முக்கியமான ஆர்டர்ஸூ வரிசையா எல்லாம் கேன்சல் ஆகிடுச்சு..முக்கியமான திட்டம் எல்லாம் வெளியே லீக் ஆகிருக்கு..அதனால எவ்வளவு நஷ்டம்னு உங்களுக்கே தெரியும்…யாரைனு சந்தேகப்பட..பேமிலியவே யாரோ குறி வைக்கிறாங்க.. எல்லாத்திற்கும் காரணம் ஒருத்தவங்க தான்னு நிச்சயம் சொல்லுவேன்..அது யாருனு உங்களுக்கு தான் தெரியும்..ஆனால் நீங்க சொல்ல விரும்பல..ஏன் ஐயா..”

என்று அவனது குரலில் பணிவை மீறி ஒரு கோபம் தெறித்தது.
அவனது கடுமையில் எச்சில் கூட்டி விழுங்கிய யவ்வனாவிற்கு சில நாட்களாய் நடுநிசியில் யாரும் அறியாமல் அவர்கள் அலுவலக அறையில் தான் செய்த தில்லு முல்லுகள் நினைவில் வந்து தொலைத்தது.

ஆழ்ந்த யோசனையில் இருந்தார் நடராஜன்.நடந்த விஷயங்களில் தன்னுடைய நஷ்டங்கள் கூட அவருக்கு பொருட்டாய் தெரியவில்லை.
ஆனால் தன் தங்கை குடும்பத்தில் அடுத்தடுத்து வரும் துன்பங்களையும் அதற்கான காரணங்களை ஓரளவு யூகித்து இருந்ததாலும் அவருக்கு வேதனையாய் இருந்தது.

தமிழ் சொல்வது சரி தான்.ஆனால் இவ்விசயத்தை ஆராய்ந்து பழைய சம்பவங்கள் தற்போது அனைவருக்கும் தெரிய வருவதை அவர் விரும்பவில்லை.ஆனால் எந்த உண்மையும் ஒரு நாள் வெளியே வந்து தான் ஆகும் அல்லவா..அது அவர் வாய்வழியே வெளிப்படும் தருணம் வெகு தொலைவில் இல்லை.

“தமிழ்..அப்போ சொன்னது தான் இப்பவும்..யாரென்று உறுதியாகாம யாரையும் வார்த்தைக்கு கூட சந்தேகப்பட்டு நான் சொல்ல விரும்பலை..ஆனால் ஒன்னு புரிஞ்சிக்கோங்க..பெயர் வெளிய வராமல் ஒளிந்து மறைந்து செய்யும் இவனை எதிர்ப்பது ஒரு விஷயமில்ல..ஏதோ நேத்து முளைத்த காலான் தான்..கிள்ளி எறிய வேண்டிய நேரத்தில் அதை செய்ய தான் போறோம்..”
என்றவர் பின்,

“நீ மாமா வீட்டுக்கே போ..விஷாலோட சேர்ந்து லீகலா என்ன செய்யலாம்னு பாரு.. எக்காரணம் கொண்டும் வித்யாவுக்கு தெரிய வேண்டாம்..”
என்று பிரகாஷிடம் கூறியவர்,

“எனக்கு ஒரு வேலை இருக்கு..அதை நான் இப்போவே முடித்தால் தான் சரி வரும்..”
என்று கூறிய உடன்,

“தனியா எங்கையும் போக வேண்டாம் ப்பா..”
என்று பிரகாஷும்

“நானும் வர்றேன் ஐயா..”
என்று தமிழும் ஒரே நேரத்தில் சொல்ல,

“டேய்..எனக்கு என்னை பார்த்துக்க தெரியும் டா..வயசாகிட்டா என்ன..நான் இப்பவும் அதே நடராஜன் தான்..”

என்று அழுத்தமாய் கூறியவர்
தமிழிடம்,

“உன்னுட்ட ஒரு வேலை ஒப்படைத்து இருந்தேன்..அது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ..முடிக்க பாரு..”
என்று அந்த விநாயகம் பற்றிய விபரம் சேகரிக்க சொன்னதை சுட்டிக் காட்ட அவன் சரி என்று தலையசைத்து,

“அப்போ நான் வரேன்..”

என்று விடைப்பெற்று வெளியே வர அதுவரை அங்கேயே சாய்ந்து நின்று பிஸியாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யவ்வனா கதவு அருகில் தமிழை கண்டதும் வேகமாய் அங்கிருந்து ஓட எத்தனித்துப் படிக்கட்டில் வெற்றிகரமாய் சரிந்தாள்.

“அம்மாஆஆஆ..”
என்று இடுப்பை பிடித்துக் கொண்டு அவள் முனங்கினாள்.

வெளியே வந்தவன் அவளை அந்நிலையில் கண்டதும் அதுவரை இருந்த டென்ஷன் நீங்கி சிரித்தவன்,

“நான் பார்க்கிற வாசிக்கெல்லாம்..கீழ விழுந்து புதையல் எடுக்குறதே வேலையா…”
என்று நக்கலடிக்க முறைத்தவள்,

“கீழே விழுந்தவங்களுக்கு உதவாம எப்பவும் பார்த்து கெக்கே பெக்கேனு சிரிக்கிறது தான் உங்க வேலையா..”

என்றவள், “விழறதுக்கு முன்னால தான் பிடிக்க தெரியல..பாவம் விழுந்து கஷ்டப்படுறளே தூக்கி விடுவோமேனு தோணுதா..இவரை வச்சிக்கிட்டு…”
என்று முணுமுணுத்தது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

“ஆமா..இங்க படம் ஓட்றாங்க..ஹீரோயின் விழும் முன்னால ஹீரோ பாய்ந்து வந்து காப்பாற்ற..”
என்றபடி அவள் கையை பிடித்து தூக்கிவிட அவன் விரலில் சற்று இலகுவாய் இருந்த மோதிரத்தை நைசாக உருவிக் கொண்டாள்.

‘படம் ஓட்றாங்க..’ என்றதும் வித்யா கூறியது நினைவு வர முகம் சிவந்தவள் யாராவது வந்திட போகிறார்கள் என்று அவசரமாய் ஒரு நன்றியை உதிர்த்து அறைக்கு ஓடிவிட்டாள்.

செல்லும் அவளை கண்டு,

“என் விரலில் உள்ள மோதிரத்தை கழட்டுறது கூடவா எனக்கு தெரியாது.. ரொம்ப அறிவு தான்..”
என்று எண்ணியவனுக்கு புன்னகை விரிய,

“என்னவோ என்னை செய்யுறாடா..”
என்று தலையை கோதிக் கொண்டான்.

அறைக்கு வந்தவளுக்கும் இதயம் படபடக்க அவன் பிடித்த கையை ஆசையாய் பார்த்தவள் அதில் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து இதழ் பதித்து தன் விரலில் அணிந்து பார்க்க அவள் கட்டை விரலிற்கு தான் அது பொருந்தியது.அதை இரசித்து சிரித்தவளை,

‘வர..வர..உன் திருட்டுதனம் ரொம்ப அதிகமாச்சு யவ்வா..”
என்று உள்ளம் இடித்துரைக்க தோளை குலுக்கி,

” எவனுக்காகவோ செய்யும் போது..எனக்காக இந்த சின்ன திருட்டு தானே..தப்பில்ல..”
என்று சொல்லிக் கொண்டாள்.

Advertisement