Advertisement

அத்தியாயம்-16
தனக்கு நேராக அதிவேதமாய் சுழன்றுக் கொண்டிருந்த மின்விசிறியை கண்சிமிட்டாமல் கட்டிலில் படுத்திருந்த யவ்வனா பார்த்துக் கொண்டிருந்தாள்.அதன் வேகத்திற்கு ஈடாக அவள் சிந்தனை சுழன்றுக் கொண்டிருந்தது.

ஆனால் என்ன யோசித்தும் அவளுக்கு எதுவும் தோன்றவில்லை.பிச்சு போட்டதுப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நினைவு வர அப்படி வரும் நினைவுகளையும் இன்னது என்று புரிந்துக் கொள்ள முடியாமல் மண்டை காய்ந்தது.

அவளை மேலும் சிந்திக்க விடாமல் கதவு திறக்கும் சத்தம் கேட்க உள்ளே வந்தவனை கண்டு பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

வாட்ட சாட்டமான உடல்வாகும் கூர்மையான பார்வையோடும் நடிகர் ரானாவின் சாயலில் இருந்தான் அவன்.

அவன் பேசும்முன் அவளே,

“அவர்தான் முதலில் என்னை பேசுனாரு..அதுக்கு பதில் தான் நான் கொடுத்தேன்..”
என்று அவசரமாய் சொல்ல அவன் பதிலே சொல்லாமல் வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தான் அவளையே அழுத்தமாய் பார்த்தபடி..

“அவன் யாரு தெரியுமா..அவனுக்கு புடிக்காது யாராவது செஞ்சால் போதும் பட்டுனு கன் எடுத்து சுட்டுடு போயிட்டே இருப்பான்..எனக்காக தான் உன்னிடம் அடங்கி போறான்..அதுக்குனு அவனுட்ட நீ ரொம்ப சீண்டுறீயா.. நேரம் போல
நேரம் இருக்க மாட்டான்..அவனை எதுக்கு எரிச்சலாக்குற..”
என்று அவன் சொன்னது அவளுக்கு லேசாய் பயத்தை கொடுத்தாலும்,

“அவரு சும்மா என்னை ‘பைத்தியம்.. பைத்தியம்..’ னு திட்டினால் எனக்கு கோபம் வராதா…நான் ஒன்னும் பைத்தியம் இல்ல…”
என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்.. அதேசமயம் இவர்கள் யாரை பற்றி பேசிக் கொண்டிருந்தனரோ அவனே உள்ளே வந்தான் யவ்வனாவை முறைத்தபடி..பதிலுக்கு அவளும் அவனை விறைப்பாக பார்த்தாள்.

‘இவங்க இரண்டு பேரையும் ஒரே இடத்தில் வைப்பது கஷ்டம் போலவே..’
என்று யோசித்தவன் இரண்டு நாள் முன் இவளை இங்கு அழைத்து வந்ததை நினைத்து பார்த்தான்.
தண்டவாளத்தில் விழுந்து கிடந்த இவளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்தபின் அவளுக்கு முதல் முறை நினைவு திரும்பிய போது அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.

‘அந்த பசங்களை எதுவும் செய்யாதீங்க..விட்டுருங்க..’
என்பதையே திரும்ப திரும்ப சொல்லி அழுதவளை மயக்க மருந்தின் உதவியோடு தான் கட்டுப்படுத்த முடிந்தது.

மருத்துவரோ இப்பெண் நெடு நாளாக ஒரு மன அழுத்ததில் இருந்துள்ளாள் என்றும் அது சிறுக சிறுக அதிகரித்து இன்று அது வெடித்து வெளி வந்ததன் விளைவு தான் இந்த ஆர்பாட்டம் என்றும் இதன் பாதிப்பாக அவள் பழைய நினைவுகளை இழந்து விட்டாள் என்றும் கூறியவர்,

‘எப்பொழுது நினைவு திரும்பும்..’
என்று அவன் கேட்டதற்கு,

“அவங்களுக்கு இப்பொழுது தேவை மன அமைதி தான்..எதையோ நினைத்து மிகவும் மனதை வருத்திக் கொண்டதன் விளைவு தான் இது.. மீண்டும் எதையும் பற்றி கவலை கொள்ளாமல் இருந்தால் தானாக எப்பொழுது வேண்டும் சரியாகி விடுவார்கள்.இதனை தவிர உடம்பிற்கு எந்த பிரச்சனையும் இல்ல.. மயக்கம் தெளிந்ததும் கூட டிஸ்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்..”

என்று கூறி அவர் சென்றுவிட அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிடலாம் என்று தான் நினைத்திருந்தான்.ஆனால் இப்பொழுதையே அப்பெண்ணின் நிலையை காணும்போது அப்படி விட்டு செல்ல தோன்றவில்லை.
ஏற்கெனவே அவன் இங்கே வந்து நிற்பதை பல கண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தே இருந்தான்.எனவே தான் ரொம்ப நேரம் இங்கே இருப்பது சரி வராது என்று நினைத்தான்.இப்படியாக பல சிந்தனைகள் மனதில் ஓடினாலும் முகமோ மிகவும் இயல்பாய் இருந்தது.

எதார்த்தமாய் திரும்பி பார்த்தவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த கணபதியை கண்டு சிரிப்பு வர அதை மறைத்துக் கொண்டு,

“என்ன கணபதி செய்யலாம்..”
என்று அறையை சுட்டிக் காட்டி கேட்க அவன் இன்னும் வாய் பிளந்தான்.

‘இந்த அண்ணனை காலத்துக்கும் என்னால புரிஞ்சிக்கவே முடியாது போலவே..ரோட்டில் எவனோ எப்படியோ போகட்டும்னு தலையை கூட திருப்பாமல் தன் வேலையே குறினு போயிட்டு இருக்கும்..இன்னைக்கு என்னானா தண்டவாளத்தில் மயங்கி கிடந்த ஒரு புள்ளைய கொண்டு வந்து ஹாஸ்பிடலில் சேர்த்ததே அதிசயத்திலும் அதிசயம்..இதிலே டாக்டர் வந்து பேசுறத பொறுமையாய் கேட்டதோடு நில்லாமல் அடுத்து என்ன செய்றதுனு என்னுட்ட வேற கேட்குறாரு…எனக்கு போட்டு தள்ள சொன்னால் அசால்ட்டா செய்வேன்.. இதெல்லாம் எனக்கு என்ன தெரியும்..பதில் சொல்லலேனாலும் திட்டுவாரே…”
என்று கணபதியின் மனமோ புலம்பி தீர்க அவனோ,

“பதில் சொல்லுடா..”
என்று அதட்டவும்,

“அது அண்ணே.. நாம என்ன செய்யமுடியும்..பார்க்கவும் பாவமா தான் இருக்கு..வேணும்னா ஒரு மென்டல் ஹாஸ்பிடலில் கொண்டு போய் விட்ருவோம்..அதுக்கா பைத்தியம் தெளிந்ததும் தன் வழியை பார்த்துக்கும்…”
என்று நல்ல தீர்வு சொன்ன பாவனையில் கணபதி நிற்க அவனை முறைத்தவன்,

“ஏன்டா கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா..ஆளு மட்டும் எருமை மாதிரி வளர்ந்திருக்க..அது பழசை எல்லாம் மறந்திடுச்சுனு தானே டாக்டர் சொன்னாரு..அதுக்குனு பைத்தியமுனே முடிவு பண்ணிட்டியா..நல்லா இருக்கிற பொண்ணை பைத்தியகார ஹாஸ்பிடலில் சேர்த்து அந்த பொண்ணு முழு பைத்தியம் ஆகவா..”
என்று கோபமாய் அவன் திட்ட,

“அந்த பொண்ணு என்னவான நமக்கு என்னாண்ணே..”
என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே முழுங்கிவிட்டு அவனை பாவமாக பார்த்தான்.

அப்பொழுது அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த தாழ்வாரத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் இவனை கணடதும் அதிர்ந்து ஒருவன் மற்றவன் காதில்,

“இது பத்ரி தானே..”
என்று கிசுகிசுக்க அவனோ,

“ஆமாடா…அவரேதான்…”
என்று பதிலுக்கு கிசுகிசுத்தான்.
அது சற்று குறுகிய வழித்தான்.அதில் இவர்கள் இருவரும் எதிரெதிரே நிற்பதால் அந்த இளைஞர்கள் அவர்களை கடந்து செல்ல யோசித்துக் கொண்டே நிற்க முன்னாடி ஒரு அடி வைப்பதும் பின் வாங்குவதுமாய் தடுமாறிய அவர்களை கண்டு பத்ரி,

“என்ன டா..”
என்று அதட்டலாய் கேட்க பதறி விட்டனர்.

“இல்ல..அங்க..போக..வழி..இல்ல இங்க..”
என்று ஒருவன் தந்தியடிக்க மற்றவனோ அவன் பின்னால் பதுங்கினான்.அதற்குள்

“அடிங்க..நீ போகுறதுக்கு எங்கண்ணே வழி விட்டு நிற்கணுமா…பொடிப்பசங்க மாதிரி இருந்துகிட்டு…என்ன தெனாவெட்டு இருக்கும் உனக்கு..வந்து பாரேன்..முடிஞ்சா வந்து பாருடா..”
என்று கணபதி எகிறி அடிக்க வர,

“அய்யோ இல்லங்க..நான்..நான் இன்னோரு நாளு வந்து பார்த்துக்குறேன்..”
என்று அடித்து பிடித்து வந்தவழியே திரும்பி ஓடிவிட்டனர்.

“டேய்..டேய்..ஏன்டா இப்படி அலம்பல் பண்ற..மாடிக்கு போக இது மட்டும் தான் வழி..அவன் வேற எப்படி போவான்..”

“எப்படியோ போகட்டும்..அதுக்குனு உன்னையே தள்ளி நிக்க சொல்வானா…”

என்று நியாயம் கேட்க,
‘இவனை..’ என்று தலையில் அடித்துக்கொள்ளதான் முடிந்தது.

இப்படியே இருந்தால் இந்த பக்கமே யாரையும் வரவிட மாட்டான் என்பதை உணர்ந்து ஒரு முடிவிற்கு வந்தவனாய் பத்ரி,

“சரி..சாயுங்காலம் வந்து டிஸ்சார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடுவோம்..”
என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியை கணபதியின் தலையில் இறக்கினான்.

“அண்ணே.. வீட்டுக்குளாம் எதுக்கு..”

என்று விழிக்க, “சொன்னால் கேட்டுகனும் எதிர்த்து கேட்ககூடாது..”

என்று அவன் அழுத்தமாய் சொல்லவும் ‘இந்த அண்ணனுக்கு என்னவோ ஆகிடுச்சு..’ என்று புலம்பிய படி முன்னால் சென்றான்.

அப்போழுது இருந்தே யவ்வனாவின் மீது அவனுக்கு ஒரு எரிச்சல் தான்.

பத்ரி இதுவரை யார்மீதும் இரக்கமோ கருணையோ காட்டியது இல்லை.அகத்திலும் சரி முகத்திலும் சரி உடன் பிறந்த ஒன்றாய் இறுக்கம் இருக்கும்.. அப்படிப்பட்ட பத்ரிக்கு முதல் முறையாக ஒரு கனிவு ஏனோ யவ்வனாவிடம் தோன்றியது.அதற்கு ஒரு காரணமும் இருந்தது.(அது என்னவென்று பின்னொரு நாளில் அறிவோம்)
எனவே அவளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தவன் அவளுக்கு உடையவர்களை கண்டுபிடித்து அவளை சேர்க்கும் வரை அவள் தன் வீட்டிலே வைத்திருக்க முடிவு செய்ய அது கணபதியின் கோபத்திற்கு தூபம் போட்டது.இருந்தும் பத்ரியை எதிர்த்து பழக்கமே இல்லாததால் அவன் கோபம் எல்லாம் யவ்வனா மீதே இருக்க அவளை பார்க்கும் போதெல்லாம் கடுகடுத்தான்.

முதல் நாள் தன்னை குறித்தே குழப்பத்திலும் அறியாமையிலும் துவண்டதால் கணபதியின் பேச்சுக்களை அமைதியாய் ஏற்றுக் கொண்டாலும் மறுநாள் அவளது பிறவி குணம் தலைதூக்க பதிலுக்குப் பதில் வாயாடினாள்.
இப்பொழுதும் இதே தான்.உள்ளே வந்த கணபதி,

“அண்ணா..இந்த எட்டனாவை பத்தி ஒரு தகவலும் கிடைக்கல..பேரை தவிர வேற ஒன்னும் தெரியலேனு சொல்லுது..ஊரு எதுனு விசாரிச்சா வயலு இருக்கும் வாய்க்கால் இருக்கும்னு சொல்லுது…இதை வைத்து என்ன அண்ணா கண்டுபிடிப்பது…இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்..”
என்று அவன் சொல்லி முடிக்கவில்லை,

“என் பேரு யவ்வனா..இந்த எட்டனா.அஞ்சுகாசுனுலாம் கூப்பிட்டீங்க எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்..”
என்று அவள் சிலிர்க்க,

“ஏ..எனக்கு எப்படி தோனுதோ அப்படி தான் சொல்லுவேன்…என்ன கிழிச்சுடுவே நீ….அரைலூசு…”
என்றான் அவனும் கோபமாய்..

“நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்கு தான் தெரியும்..கேள்வியே தெரியாமல் பதில் தேடுறா மாதிரி மண்டையே வெடிக்குது..இதுல உங்களுக்கு நான் என்ன பண்ணினேன்..லூசு..லூசுனு சொல்றீங்க..நான் இல்ல நீங்க தான் லூசு..லூசு மாதிரி கத்திட்டே இருக்கீங்க…”

“யாரை பார்த்து லூசுங்குற..அடிச்சு பல்லெல்லாம் பேத்துடுவேன்..அண்ணா..நீ கொடுக்குற எடம் தான்..அது இப்படி திமிரா பேசுது..”
என்று அவன் சொல்ல கோபத்தில் புஸுபுஸு என்று மூச்சுவிட்டவள் பத்ரியிடம்,

“இப்படி பேச்சு வாங்கிட்டு என்னால இருக்க முடியல அண்ணா…நான் போறேன்..நல்லதோ கெட்டதோ என்னை நான் பார்த்துக்குவேன்..”
என்றாள்.

“ஹப்பாடா..அதை முதலில் செய்.. போய் தொல…”
என்று கணபதி கூற தான் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைத்துக் கொண்டு கோபமாய் பத்ரி எழவும் பட்டென்று இருவர் வாயும் மூடிக்கக்கொண்டன.

கணபதியை பார்த்தவன்,

“நான் சொன்னால் சொன்னதை செஞ்சி முடிக்கிற கணபதியை தான் எனக்கு தெரியும்.. இப்படி காரணம் சொல்லி தட்டிகழிக்கிற கணபதி எனக்கே புதுசா இருக்கே..எப்போலேந்து கணபதி இப்படி….”

அதட்டல் இல்லாமல் ஓர் ஆளுமை நிறைந்த அவன் தொனியில் கணபதிபார்வை தாழ்த்தினான்.
யவ்வனாவின் புறம் திரும்பி,

“அப்புறம் நீ..உன்னை நான் தானே இங்கே அழைத்து வந்தேன்..நான் நினைத்தால் மட்டும் தான் நீ இங்கிருந்து போக முடியும்…அத்தோட என் முன்னால் குரல் உயர்த்தி பேசாதே..எனக்கு பிடிக்காது..”

என்று சொல்ல அவளையும் அறியாமல் தலையை சரியென அசைத்தாள்.கணபதியிடம் சரிக்கு சரி பேசியவளால் பத்ரியிடம் அவ்வாறு பேச இயலவில்லை.அதன்பின்
அவன் அங்கிருந்து வெளியேற அவனை தொடர்ந்து கணபதியும் சென்றுவிட்டான்.

கால்களை மடக்கி தன்னோடு அணைத்து பிடித்தவள் அதில் தலை சாய்த்துக் கொண்டாள்.

தனக்கு என்னதான் நேர்ந்தது… நினைவுகள் இழந்து தானே யாரென்று அறியாத இந்நிலையை அவள் அறவே வெறுத்தாள்.முழுவதும் மறந்திருந்தால் கூட பரவாயில்லை.நிறைய முகங்கள்.. சின்ன சின்ன சம்பவங்கள் என்று ஏதேதோ நினைவில் வருகிறது ஆனால் அதை புரிந்துக் கொள்ள முடியாமல் தவித்தாள்.இதில் கணபதி வேறு.

தான் இருப்பது ஆபத்தான ஒரு இடம் தான் என்பதை அவள் இந்த இரண்டு நாட்களிலே உணர்ந்துக் கொண்டாள்.பத்ரியை பற்றியும் ஓரளவு தெரிந்து வைத்திருந்தாள்.இருந்தும் பத்ரி மீது பயம் வரவில்லை.மாறாக தன் உயிரைக் மீட்டு தனக்கு அடைக்கலம் கொடுக்கும் அவன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாள்.சற்று நேரத்தில் அமர்ந்த வாக்கிலே உறங்கியும் போனாள்.

அறையில் இருந்து வெளியே வந்த பத்ரியை தொடர்ந்து வந்த கணபதி,

“மன்னிச்சிடுங்க ண்ணா..”
என்று சின்ன குரலில் கூற அவன் மன்னிப்பை விடுத்து,

“உனக்கு ஏன் யவ்வனா மேல அப்படி ஒரு கோபம் கணபதி..அவ உனக்கு என்ன செஞ்சிட்டா..”
என்று கேட்டபடி முன்னால் நடந்தான் பத்ரி.

“இல்ல ண்ணா…அது யாரு என்னானே தெரியலை..அத எதுக்கு நாம பார்த்துக்கணும்…உண்மையாவே அது எல்லாத்தையும் மறந்திடுச்சா..இல்ல ஓசில இங்கே டேரா போட பார்க்குதானு எனக்கு டவுட்டா இருக்கு..அதுவும் எப்படி பேசுது நீங்களே பார்த்தீங்கல்ல..”

என்று அவன் சொல்லும்போது பத்ரி அலைபேசியை எடுத்து ஏதோ பார்த்துக் கொண்டே வந்தான்.அவன் முக பாவனை கணபதி சொன்னதை கவனித்தானா இல்லையா என்று நம்மை யோசிக்க வைக்கும்படி இருந்தது.

ஆனால் அவனோ அலைபேசியில் இருந்து கண்களையும் நகர்ந்தாமல் நடையையும் நிறுத்தாமல்,

“மறந்துட்டியா கணபதி..சில வருஷங்களுக்கு முன்னால நானும் இதே மாதிரி ஒரு நிலையில் இருந்தேன்..நீ சொன்னா மாதிரி அவனும் நினைத்திருந்தா இன்நேரம் என்னை புதைச்ச இடத்துல புல்லு முளைத்திருக்கும்..”
என்று வெகு சாதாரணமாய் சொல்ல,

“ண்ணா..பேச்சிற்கு கூட அப்படி சொல்லாதீங்க…”
என்று பதறினான் கணபதி.

“ஏன் பதறுற..நாம இருக்கும் தொழிலில் சாவு கழுத்து நுனில தான் இருக்கு…அதை கண்டு பயப்பட ஆரம்பிச்சா அதுவே நம்ம கழுத்தை அப்படியே நெறித்து போடுடும் தெரியும் தானே.. அப்புறம் அதைப்பற்றி பேசவே பயந்தால் எப்படி.. “
என்று பத்ரி சொன்னதற்கு கணபதியிடம் பதில் இல்லை.
மேலும் அவனே,

“நான் யாரு என்னானே தெரியாமல் தான் அவனும் என்னை காப்பாற்றினான் கணபதி அதுவும் அவன் உயிரை பணயம் வைத்து..

‘ஒரு செக்கென்ட் தவறி இருந்தால் என்னோட நீயும் செத்திருப்படா..’னு நான் சொன்னதற்கு என்ன சொன்னான் தெரியுமா,

‘கண்ணு முன்னால போற உசுர வேடிக்க பார்த்துக்கிட்டு என் உயிர் நிக்காது சார்..’
சிரிச்சிக்கிட்டே சொன்னான்.
எத்தனை பேருக்குடா இந்த மனசு வரும்..அந்த பொண்ணு பார்த்தப் போ எனக்கு அவன் சொன்னது தான் பொட்டுல அறைந்தா மாதிரி ஞாபகம் வந்துச்சு..நம்ம கேரக்டர் இது இல்ல தான்.ஆனால் அவன் இங்கிருந்தா என்ன செஞ்சிருப்பானோ அதை செய்தேன்…”

என்று கூறிவிட்டு கையில் லாக் ஆகியிருந்த அலைபேசியை பார்த்தபடி நின்றான்.

ரொம்ப நாட்களுக்கு பின்பு இன்று தான் ‘அவனை’ பற்றி பேசுகிறான்.உணர்ச்சிகள் எதுவும் அவன் முகத்தில் பிரதிபலிக்வில்லை என்றாலும் அவன் உள்ள போராட்டத்தை கணபதியால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

“நீ சொல்லிட்டேல ண்ணா.. விடு இனி அந்த எட்டனா என் பொறுப்பு…”
என்று உறுதியாக சொல்லவும் சரி என்று தலையசைத்துவிட்டு எதுவும் பேசாமல் தன்னறைக்கு செல்ல,

‘இரும்பு மனிதனாக காட்டிக்கொண்டாலும் இவருக்குள்ளும் எத்தனை பாசம்.. எத்தனை அன்பு அவன்மேல்..’

என்று எண்ணி பெருமூச்சு விட்டான் கணபதி..

ஆம் இரும்பு மனிதன் தான் பத்ரி..!!!!
வாழ்க்கையின் கடைநிலையில் தொடங்கிய அவன் பயணம் இன்று யாவரும் அன்னார்ந்து பார்க்கும் உயரத்தை அடைந்தான் என்றால் அது அவனிற்கு இருந்த வெறியால் மட்டுமே சாத்தியமானது.

ஆம் கனவல்ல வெறி தான்.அவன் கடந்துவந்த உதாசினங்கள் புகழின் உயர்த்தில் இருக்க வேண்டும் என்ற வெறியை கொடுக்க அதற்கு எந்த வழியில் செல்லவும் தயங்கவில்லை.சிறு சிறு வேலைகள் செய்தான் பணம் சம்பாதிக்க அல்ல. பலம் சம்பாதிப்பதற்கு. .அவன் நினைத்த உயரத்தை அடைய பணம் மட்டும் போதாது பலமும் தேவை என்பதை உணர்ந்தவன் நிறைய பேரிடம் பழக்கம் வைத்துக் கொண்டான்.

படிபடியாக நடந்து முதலில் அவன் ஆரம்பித்த தொழில் பழுதடைந்த பழைய கார்களை பழுது பார்த்து செக்கென்ட் ஹன்டில் விற்பதே..ஆனால் அவன் செட்டில் உள்ள பல கார்களுக்கு பல கதைகள் உண்டு.திருட்டு காரில் தொடங்கி பேங்கில் சீஸ் செய்த கார்வரை அனைத்திற்கும் அவன் ஷோருமில் இடமுண்டு.

அதில் தொடங்கி நிழலுலக பயணம் கடத்தல்,நிலம் அபகரித்தல், என்று எதையும் அவன் விட்டு வைக்கவில்லை.அனைத்தையும் தன் கைவசம் வைத்திருந்தான்.தொழில் எதிரிகள் என்று யாரையும் அவன் வளரவிட்டது இல்லை.
அவனை எதிர்க்க நினைத்தால்கூட கூண்டோடு அழித்து விடுவான்.ஒரு கட்டத்தில் அவன் வழியில் யாவரும் வரவே அஞ்சி நடுங்கினர்.அங்கே அவன் கை மட்டுமே ஓங்க ஆரம்பித்தது.
‘வேண்டும்..’ என்று நினைத்துவிட்டால் கடைசி சொட்டு இரத்தம் வரை உறிஞ்சாமல் விடமாட்டான் என்ற அப்பிராயம் அனைவரின் மனதிலும் ஆழ பதிந்தது.ஆனால் அவனால் ஒரு அப்பாவி பதிக்கப்பட்டான் என்று கைநீட்டி சொல்ல முடியாது. அவன் என்றுமே புரியாத புதிர் தான்.அந்த புதிரை விளங்கிக் கொள்ள இது அவனுக்கான கதைக்களம் இல்லை என்பதால் பத்ரியை விடுத்து நாம் நம் நாயகனை தேடி செல்வோம்..!!

Advertisement